
“இலக்கியத்தைக் கற்றுக்கொடுக்க முடியுமா?”
இந்தக் கேள்வி புதிதல்ல. நீண்ட காலமாக இது தொடர்ந்து கேட்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. ஆனால் சிந்தித்துப் பார்த்தால், உலகிலுள்ள எந்தக் கலையும் பயிற்சி இல்லாமல் உருவாகவில்லை. நடனம் கற்றுக்கொள்ளப்படுகிறது. இசை கற்றுக்கொள்ளப்படுகிறது. ஓவியம் கற்றுக்கொள்ளப்படுகிறது. கிரிக்கெட் விளையாடுவதற்குப் பயிற்சியாளர் தேவைப்படுகிறார். இயல்பான திறமை இருக்கலாம்; ஆனால் அந்தத் திறமை செம்மைப்பட வேண்டுமெனில் பயிற்சி அவசியம்.
அப்படியிருக்க, இலக்கியத்தைப் பற்றிய விஷயத்தில் மட்டும் ஏன் “இதை கற்றுக்கொடுக்க முடியுமா?” என்ற சந்தேகம் மீண்டும் மீண்டும் எழுகிறது? இதற்குக் காரணம் நம் பண்பாட்டு மரபிலேயே உள்ளது. கவிதை என்பது சரஸ்வதியின் அருள், கடவுளின் அருள், தெய்வீகமான ஒரு வரம் எனும் கருத்தாக்கங்கள் நமக்குள் ஆழமாகப் பதியப்பட்டுள்ளன. அதனால் யாராவது “கவிதை எழுதக் கற்றுக்கொடுக்கிறேன்”, “நாவல் எழுதக் கற்றுக்கொடுக்கிறேன்” என்று சொன்னாலே, உடனடியாக ஒரு எதிர்மறை மனநிலை உருவாகிறது.
உண்மையில், ஒருவர் கற்றுக்கொள்ளாமலும் எழுதலாம். ஒருவர் தமக்குத்தாமே பாடிக் கொள்ளலாம்; தமக்குத்தாமே நடனமாடலாம். ஆனால் அதற்கும் முறையாகக் கற்றுக்கொண்ட கலைஞரின் வெளிப்பாட்டிற்கும் இடையில் இருக்கும் வேறுபாட்டை நாம் எளிதாக உணர முடியும். ஒரு இசைக்கருவியை யார் வேண்டுமானாலும் மீட்டிப் பார்க்கலாம். ஒலி வரும். ஆனால் இசையை அறிந்த ஒருவர் அதே கருவியை வாசிக்கும்போது உருவாகும் அனுபவம் முற்றிலும் வேறுபட்டதாக இருக்கும். கவிதையும் அதுபோலத்தான். சொற்கள் மட்டும் போதாது; அவை அனுபவமாக மாற வேண்டும்.
கவிதை எழுதும்போது உண்மையில் என்ன நடக்கிறது? ஒருவர் கவிதை எழுத முயற்சிக்கும்போது, அவருடைய மனத்தில் என்ன நிகழ்கிறது? ஒரு சிறுகதை, ஒரு நாவல் அல்லது ஒரு கவிதை உருவாகும் தருணத்தில் எழுத்தாளர் எதிர்கொள்ளும் சிக்கல்கள் என்ன? இவை மிகவும் முக்கியமான கேள்விகள்.
சிலர் அந்தச் சிரமங்களைத் தாண்டிச் செல்ல முயற்சிக்கிறார்கள். சிலர், “ஏன் என்னை இவ்வளவு விதிமுறைகளால் கட்டுப்படுத்துகிறீர்கள்?” என்று கேட்கிறார்கள். சமீபத்தில் ஒரு கவிஞருடன் பேசிக்கொண்டிருந்தேன். அவர் மிகவும் நேர்மையாக ஒரு அனுபவத்தைப் பகிர்ந்துகொண்டார். “நான் இயல்பாக எழுதிக்கொண்டிருந்தேன். சிலர், கவிதை இப்படித்தான் இருக்க வேண்டும், அப்படித்தான் எழுத வேண்டும் என்று தொடர்ந்து சொல்ல ஆரம்பித்தார்கள். அதன் பிறகு எழுதுவதற்கே தயக்கம் வந்துவிட்டது. என் இயல்பான படைப்பாற்றலே தடைப்பட்டுவிட்டது.” இந்தக் கேள்வியும் நியாயமானதே.
விமர்சனம், இலக்கியக் கோட்பாடு, அழகியல் ஆகியவற்றின் பெயரில், ஒருவருடைய இயல்பான படைப்புத் தூண்டுதலை நாமே தடுத்து நிறுத்துகிறோமா? ஆனால் அதற்குப் பின்னர் இன்னொரு கேள்வி எழுகிறது. “இயல்பு” என்று நாம் எதைக் குறிப்பிடுகிறோம்? ஒவ்வொருவருக்கும் அவர்கள் வளர்ந்த சூழல், வாசிப்பு, அனுபவம் ஆகியவற்றின் அடிப்படையில் ஒரு இயல்பு உருவாகிறது. அந்த இயல்பே இறுதியானதா?
மொழியைக் கற்றுக்கொள்ளும் போதே நாம் பல முன்னறிவுகளையும் வடிவங்களையும் உட்கொள்கிறோம். “கவிதை இப்படித்தான் இருக்க வேண்டும்”, “இந்த மாதிரியான உணர்ச்சிகள்தான் கவிதைக்கு ஏற்றவை” என்ற எண்ணங்கள் நமக்குள் மெதுவாக உருவாகின்றன. ஆனால் உலக இலக்கியத்தில் காலத்தைத் தாண்டி வாழும் கவிதைகளைப் பார்த்தால், அவை பெரும்பாலும் நாம் முன்கூட்டியே உருவாக்கி வைத்திருக்கும் அந்தச் சட்டகங்களை உடைத்துக் கொண்டே செல்கின்றன.
நாமும் அதே மொழியில்தான் எழுதுகிறோம். அதே மனித உணர்ச்சிகள்தான் நமக்கும் உள்ளன. அதே உலகத்தைத்தான் நாமும் பார்க்கிறோம். அப்படியிருக்க, ஏன் சில கவிதைகள் காலத்தைக் கடந்து நிற்கின்றன? ஏன் சில கவிதைகள் வாசித்தவுடன் மறந்துவிடப்படுகின்றன? ஏன் சில கவிதைகள் நம்மேல் ஆழமான தாக்கத்தைச் செலுத்துகின்றன; சில கவிதைகள் எந்தச் சுவடையும் விடாமல் மறைந்து போகின்றன? இந்த வேறுபாட்டை புரிந்துகொள்வதே இலக்கியப் பயிற்சி. இது கவிதைக்கு மட்டுமல்ல; சிறுகதைக்கும், நாவலுக்கும் பொருந்தும்.
கற்றல் என்பது மிக முக்கியமான ஒரு செயல்முறை. அது பல வழிகளில் நிகழ்கிறது. பல்வேறு வகையான படைப்புகளை தொடர்ந்து வாசிப்பதன் மூலம் கற்றல் நடைபெறுகிறது. ஆனால், படைப்புகளை வெறுமனே வாசிப்பதால் மட்டுமே முழுமையான கற்றல் நிகழ்ந்து விடாது. உதாரணமாக, ஒரு கவிதையைப் படிக்கும் போது, “இது மிகவும் நன்றாக இருக்கிறது” என்றோ “இதனுடன் எனக்கு ஒரு நெருக்கமான உணர்வு மேலிடுகிறது” என்றோ நாம் உணரலாம். ஆனால் அது உணர்ச்சி சார்ந்த ஒரு அனுபவம் மட்டுமே. அந்த உணர்வைத் தாண்டி, அந்தக் கவிதையின் உண்மையான இலக்கியத் தன்மையைப் புரிந்துகொள்ள வேண்டும். அந்த இடத்தில்தான் விமர்சகர்களின் பங்கு முக்கியமாகிறது. ஒரு கவிதை எந்த அம்சங்களால் வெற்றிகரமான படைப்பாகிறது என்பதை அவர்கள் பகுப்பாய்வு செய்து விளக்குகிறார்கள். “நான் இலக்கிய விமர்சனங்களைப் படிக்க மாட்டேன்; கவிதைகளை மட்டும் படிப்பேன்” என்று கூறுவது சரியான அணுகுமுறை அல்ல.
ஒரு கவிதையை வெறும் உணர்ச்சி அல்லது கருத்தாக மட்டுமே புரிந்துகொள்வது பலரிடமும் காணப்படும் ஒரு சிக்கல். பல வாசகர்கள் “இந்தக் கவிதை என் வாழ்க்கையையே எழுதியிருக்கிறது” என்றோ “இதைப் படிக்கும்போது என் கண்களில் கண்ணீர் வந்தது” என்றோ “என் மனதில் இருப்பது உங்களுக்கு எப்படித் தெரியும்?’’ என்றோ பாராட்டுவார்கள். ஒரு வாசகராக அது போதுமான அனுபவமாக இருக்கலாம். ஆனால், ஒரு படைப்பாளியாக நீங்கள் இருக்க வேண்டும் என்றால், வெறுமனே உணர்ச்சி வசப்படக் கூடாது. உங்களுக்கு மிகவும் பிடித்த ஒரு படைப்பாக இருந்தாலும், அதை உணர்ச்சியின் அடிப்படையில் மட்டும் அணுகக் கூடாது. மாறாக, அந்தக் கவிதை எவ்வாறு உருவாக்கப்பட்டுள்ளது என்பதை ஆராய வேண்டும்.
அந்தக் கவிதையை கவிஞர் எவ்வாறு தொடங்குகிறார்? காட்சிப் படிமங்களை (images) எப்படி உருவாக்குகிறார்? கவிதை எந்த விதத்தில் வளர்கிறது? சொற்கள் எவ்வாறு பயன்படுத்தப்படுகின்றன? அதன் முடிவில் கவிஞர் என்ன வகையான தீர்ப்பை அல்லது நிறைவை அளிக்கிறார், அல்லது கவிதையைத் திறந்த நிலையில் விட்டுச் செல்கிறாரா என்பது போன்ற அம்சங்களைக் கவனிக்க வேண்டும். சில கவிதைகள் தொடங்கிய இடத்திலேயே ஒரு கிடைமட்டமாகக் கிடக்கும் சக்கரம் போலச் சுற்றிக் கொண்டே இருக்கும். சில கவிதைகள், ஒவ்வொரு வரியிலும் வளர்ந்து கொண்டே சென்று, வாசகருக்குப் புதிய அனுபவங்களையும் பல்வேறு சிந்தனைத் திறப்புகளையும் உருவாக்கும். ஒரு கவிதை எவ்வாறு கட்டமைக்கப்பட்டுள்ளது என்பதைப் புரிந்துகொள்வதே மிகப் பெரிய வாசிப்பனுபவம். அதற்காக விமர்சகர்கள் தேவை; பயிற்றுநர்கள் தேவை; அதைவிட முக்கியமாக, தொடர்ச்சியான இலக்கிய உரையாடல்கள் தேவை.
“காலச்சுவடு” இதழ் பணிகளுக்காக சுந்தர ராமசாமி வீட்டின் மாடியில் வாரக்கணக்கில் தங்கியிருக்கிறேன். அங்கு “கசடதபற”, “கொல்லிப்பாவை” போன்ற பல பழைய சிற்றிதழ்கள் இருக்கும். அவற்றை நாள் முழுவதும் அமர்ந்து வாசிப்பேன். அந்த இதழ்களில் இலக்கிய விவாதங்கள் மிகவும் தீவிரமாக இடம்பெற்றிருக்கும். ஒருவர் ஒருவரைக் கொன்றுவிடும் அளவுக்கு கடுமையான வாதங்கள் நடந்ததுபோல் தோன்றும். ஆனால் அவை அனைத்தும் இலக்கியம், நாடகம், கவிதை, கோட்பாடுகள் போன்றவற்றை மையமாகக் கொண்ட அறிவார்ந்த விவாதங்கள். இரு எழுத்தாளர்களுக்கிடையேயான விவாதம் மட்டுமே ஒரு முழு இதழாக, இருபது அல்லது முப்பது பக்கங்கள் நீளத்தில் வெளியாகும். ஏராளமான கோட்பாடுகள், மேற்கோள்கள், சிந்தனைகள் அதில் இடம்பெறும். கிட்டத்தட்ட 1960 கள் முதல் 2000 வரை இப்படிப்பட்ட இலக்கிய உரையாடல்கள் மிகவும் தீவிரமாக நடைபெற்றன. அதன் பின்னர் தலித்தியம், பெண்ணியம், பின்-நவீனத்துவம், அமைப்பியல் போன்ற கோட்பாடுகளை மையமாகக் கொண்ட விவாதங்களையும் நாம் கண்டோம்.
ஆனால் 2010-க்குப் பிறகு சமூக ஊடகங்கள் வளர்ந்ததன் பின்னர், எழுத்தாளர்களுக்கிடையேயான சண்டைகளின் தன்மை மாறிவிட்டது. முன்பு, எழுத்தாளர்களுக்கு அரசியல் பார்வை வேண்டும் என்று நாங்கள் வலியுறுத்தினோம். ஆனால் இன்று அதைப் பற்றியே வருந்துகிறோம். ஏனெனில், அரசியல் என்றால் கட்சி அரசியல் மட்டுமே என்று பலர் புரிந்துகொண்டார்கள். உண்மையில், ஒரு கலைஞன் சமூக மற்றும் பண்பாட்டு ஆய்வுகளின் அடிப்படையில் தனது நிலைப்பாட்டை முன்வைக்க வேண்டும் என்பதுதான் அதன் பொருள். சமூகத்துடன் தொடர்புடையவராக இருக்க வேண்டும் என்பதே நோக்கம். ஆனால் இன்று, ஒரு அரசியல் தலைவரை ஆதரிப்பதோ அல்லது எதிர்ப்பதோ மட்டுமே எழுத்தாளர்களின் செயல்பாடாக மாறிவிட்டது. இன்று இரண்டு எழுத்தாளர்கள் ஒரு கவிதை, ஒரு நாவல் அல்லது ஒரு சிறுகதையைப் பற்றி சமீபத்தில் தீவிரமாக விவாதித்ததை எங்காவது பார்த்திருக்கிறோமா? முன்பு நடந்த அந்த இலக்கிய விவாதங்கள்தான் இலக்கிய வளர்ச்சிக்கு மிகவும் தேவையானவை.
ஒவ்வொரு ஆண்டும் சென்னை புத்தகக் கண்காட்சியிலும், ஏன் மதுரை கோயம்புத்தூர் புத்தகக் கண்காட்சிகளிலும்கூட ஆயிரக்கணக்கான புத்தகங்கள் வெளியாகின்றன. ஆனால் அவை வெளியானதை அறிவிக்கும் ஒரு விளம்பர அட்டையைத் தவிர, பின்னர் அவற்றைப் பற்றிய உரையாடல் அரிதாகவே நடைபெறுகிறது. சில நேரங்களில் ஒவ்வொரு ஆண்டு புத்தகக் கண்காட்சி வரும்போதும் கடந்த ஆண்டு வெளியான புத்தகங்களுக்கான சவப்பெட்டி போலவே புத்தகக் கண்காட்சி தோன்றுகிறது. புத்தகங்கள் வாங்கப்படுகின்றன; ஆனால் அவற்றைப் பற்றிய விமர்சனங்கள், குறிப்புகள், உரையாடல்கள் மிகக் குறைவு. “இந்தப் புத்தகம் எனக்குப் பிடித்தது” “பிடிக்கவில்லை”, “இதிலிருந்து நான் என்ன கற்றுக்கொண்டேன்” என்று பேசும் பண்பாடு குறைந்து வருகிறது. அதனால்தான் பயிற்சி முகாம்களும், பயிலரங்குகளும் முக்கியத்துவம் பெறுகின்றன. முழு இருளில் ஒரு சிறிய டார்ச் ஒளி ஒரு பகுதியை மட்டும் வெளிச்சமிடுவது போல, அவை இலக்கியத்தைப் புரிந்துகொள்ள வழிகாட்டுகின்றன.
இலக்கியம் அடிப்படையில் உவகை தரும் கலை. ஆனால் இன்று எழுத்தாளர்கள் அரசியல் மட்டுமல்ல, திரைப்படங்களையும் அதிகமாக விவாதிக்கிறார்கள். புதிய திரைப்படம் வெளியாகும் போதெல்லாம் முதலில் விமர்சனம் எழுதுபவர்களில் பலர் எழுத்தாளர்களே. ஆனால் ஒரு கவிதையில் இருக்கும் குறியீடுகளைப் பற்றி எழுதுபவர்கள் மிகக் குறைவு. சினிமாவில் இருக்கும் குறியீடுகளைப் பற்றி பக்கக்கணக்கில் எழுதும் எழுத்தாளர்கள், இலக்கியத்தின் உள் மடிப்புகளைப் பற்றி அதே அளவு ஆர்வம் காட்டுவதில்லை. எழுத்தாளர் சினிமாவைப் பற்றி எழுதக்கூடாது என்று நான் சொல்லவில்லை. ஆனால், அவர் செய்யும் முதன்மைத் தொழிலான இலக்கியத்தைப் பற்றிய ஆழமான அறிதலும் தொடர்ச்சியான சிந்தனையும் அவசியம்.
இன்று புத்தகம் படியுங்கள் என்று சொல்ல வேண்டிய அவசியமில்லை. அதற்கு பதிலாக, படித்ததைப் பற்றி யோசித்தீர்களா? என்று கேட்க வேண்டிய நிலை வந்துவிட்டது. பலர் வாசிக்கிறார்கள்; ஆனால் அதிலிருந்து தங்கள் சிந்தனையை வடிவமைக்கத் தெரியவில்லை. காரணம், வாசகர்களுக்கும் எழுத்தாளர்களுக்கும் இடையேயான தொடர்பும் உரையாடலும் குறைந்துவிட்டதே. முன்பு எழுத்தாளர்களுக்குள் பல குழுக்கள் இருந்தன. சிலர் அதை விமர்சித்தாலும், அந்தக் குழுக்களே இலக்கிய வளர்ச்சிக்கு முக்கியக் காரணமாக இருந்தன. அவர்களுக்கிடையேயான சண்டைகள் மொழி, இலக்கிய வடிவம், கோட்பாடு ஆகியவற்றை மையமாகக் கொண்டவை. ஆனால் இன்று நிலைமை மாறிவிட்டது. ஒரு எழுத்தாளர் தன்னுடைய புத்தக வெளியீட்டையும், அதற்கான நிகழ்ச்சிகளையும் தானே ஏற்பாடு செய்கிறார். இது அவலமானது. இதை தவிர வேறு எந்த வாய்ப்பும் இல்லை. விருதுகள் பற்றிய விவாதங்களும் பெரும்பாலும் தனிநபர் மையமாகவே இருக்கின்றன.
எனக்கு மிகுந்த வேதனையாக இருப்பது என்னவென்றால், எழுத்தாளர்களுக்குள் இருந்த பரஸ்பர அன்பும் அறிவார்ந்த தொடர்பும் குறைந்து விட்டது. சிறு சிறு குழுக்களாக இருந்தவர்கள் இன்று தனித்தனி தீவுகளாக மாறிவிட்டனர். அதனால் உண்மையான உரையாடல்கள் குறைந்து வருகின்றன. எழுத்தாளர்கள் பேசுகிறார்கள். ஆனால் அவர்கள் பெரும்பாலும் அரசியல் அல்லது வதந்திகளைப் பற்றியே பேசுகிறார்கள். இலக்கியம் குறித்த ஆழமான உரையாடல்கள் அரிதாகிவிட்டன. எனக்கு ஒரு மறக்க முடியாத நினைவு இருக்கிறது. ஒருமுறை சுந்தர ராமசாமி அவர்களுடன் திண்டுக்கல்லுக்குச் செல்லும் ரயில் பயணத்தில், “குழந்தைகள் பெண்கள் ஆண்கள்” நாவலைப் பற்றி அவருடன் விவாதித்தேன். பயணம் முழுக்க உரையாடினோம். என்னைவிட மிகப் பெரிய எழுத்தாளரான அவர், நான் கூறிய எதிர்மறை விமர்சங்களையும் கேள்விகளையும் அலட்சியப்படுத்தாமல் தொடர்ந்து விவாதித்தார். அது எனக்கு ஒரு மிகப் பெரிய கற்றல் அனுபவமாக இருந்தது.
இன்று ஒவ்வொரு எழுத்தாளரும் தங்களுடைய படைப்புகளை ஒரு சவப்பெட்டியைச் சுமப்பது போல தனித்தனியாகச் சுமந்து செல்கிறார்கள். அந்த நிலை மாற வேண்டும். மீண்டும் உரையாடல்களை உருவாக்க வேண்டும். அதிலிருந்துதான் இலக்கியத்தின் உயிர் மீண்டும் மலரும். இன்று கவிதையைப் பற்றிப் பேசுவதற்கு முன் நாம் பகிர்ந்துகொள்ள வேண்டிய பொதுவான லட்சியமாக இதை குறிப்பிடுவேன்.

கவிதை எழுத வேண்டும் என்று தோன்றுவது ஒரு இயல்பான உந்துதல். அது செயற்கையாக உருவாக்கப்படுவதல்ல; மனித மனத்தின் இயல்பிலிருந்து எழும் ஒரு தூண்டுதல். தமிழ்நாட்டில் கவிதையைப் பற்றிக் கிண்டலாக, ஒரு தெருவுக்கே நூறு கவிஞர்கள் இருக்கிறார்கள் என்று சொல்வார்கள். அது ஒரு வகையில் உண்மைதான். ஏனென்றால், தமிழ் மொழியே கவிதையை உருவாக்கும் ஆற்றல் கொண்ட ஒரு மொழி. ஆனால் எல்லோருக்கும் கவிதை எழுதும் விருப்பம் வருவதில்லை. ஒரே சமூகத்தில், ஒரே மொழியில் வாழும் ஆயிரம் பேரில் ஐம்பது பேர் மட்டுமே எழுதுகிறார்கள். அந்த ஐம்பது பேரில் கூட எல்லோருமே சிறந்த கவிஞர்களாக உருவாவதில்லை. இந்த வேறுபாட்டை எது உருவாக்கிறது எனும் கேள்வியை வாசகர்களிடம் முன்வைத்தேன்.
வாசகர்களிடமிருந்து வெவ்வேறு பதில்கள் வரத் தொடங்கின. “சூழ்நிலை…”, “ பார்வை…”
நான் கேட்டேன் “சரி, பார்வை என்று சொன்னீர்கள். ஆனால் அந்தப் பார்வையை உருவாக்குவது எது?”
வாசகர்: “அனுபவம்”
நான் சொன்னேன். நிச்சயமாக அனுபவம் ஒரு காரணம். உதாரணமாக, ஒரு குழந்தைக்கு அம்மா நிலாவைக் காட்டிச் சோறு ஊட்டுகிறாள். அந்தக் குழந்தையின் மனதில் நிலாவைப் பற்றிய முதல் கற்பனை, அம்மா சொல்லிக் கொடுத்ததையே அடிப்படையாகக் கொண்டிருக்கும். அது வளர வளர, தானாகவே நிலாவைப் பற்றி சிந்திக்கத் தொடங்கும்.
இப்போது ஒரே வீட்டில் வளர்ந்த இரண்டு குழந்தைகளை எடுத்துக்கொள்ளுங்கள். இருவருக்கும் ஒரே மாதிரியான அனுபவங்கள் கிடைக்கின்றன. ஒரே நிலாவைப் பார்க்கிறார்கள். ஆனால் ஒருவன் அதை ஒரு சாதாரண நிலாவாகப் பார்க்கிறான்; இன்னொருவன் அதில் கவிதையைக் காண்கிறான். அதேபோல், ஒரே குடும்பத்தில் வளர்ந்த குழந்தைகளில் ஒருவர் ஓவியம் வரைகிறார்; இன்னொருவர் கவிதை எழுதுகிறார்; வேறு ஒருவர் எந்தக் கலை வெளிப்பாட்டிலும் ஈடுபடுவதில்லை. இந்த வேறுபாட்டை உருவாக்குவது என்ன?
வாசகர்: “அனுபவத்தை வாங்கிக்கொள்ளும் விதம்…”
அனுபவம் எல்லோருக்கும் கிடைக்கிறது. ஆனால் ஏன் ஒருவரால் அதை படைப்பாக வெளிப்படுத்த முடிகிறது? இன்னொருவரால் முடியவில்லை? அந்தத் தடையை ஒருவர் எப்படிக் கடக்கிறார்?
வாசகர்: “மொழி…”
மொழி ஒரு காரணம். ஆனால் மொழி மட்டும் போதுமா? நீங்களும் நானும் ஒரே கவிதையை வாசிக்கிறோம். நான் எழுத முயற்சிக்கும்போது மொழி என்னைத் தடுக்கிறது; உங்களுக்கோ மொழி இயல்பாக ஓடுகிறது. அதனால் மொழி முக்கியம். ஆனால் அதுவே முழுக் காரணமா? மொழி எப்படி நிகழ்கிறதென்று தெரியாத ஒரு மாயாஜாலம் மட்டுமே என்றால், இலக்கிய உரையாடலே தேவையில்லை.
நான் இந்தக் கேள்வியை கேட்டதற்குக் காரணம் வேறு. நாம் அடிக்கடி, “கவிதையை கற்றுக்கொள்ள முடியுமா?” என்று கேட்கிறோம். பொதுவாக, கவிதை என்பது உணர்ச்சியும் மொழியும் சேர்ந்த ஒன்று என்று நினைக்கிறோம். ஆனால் ஒரு கவிதையை உருவாக்குவது அவை இரண்டு மட்டும்தானா? அல்லது இன்னும் பல கூறுகள் அதற்குள் செயல்படுகின்றனவா? அந்தக் கேள்வியை நோக்கித்தான் நாம் பயணிக்கிறோம். ஒரு கவிதையை எழுதும்போது, அதன் கட்டமைப்பை உருவாக்கும் கருவிகள் என்ன? அனுபவம், மனநிலை, மொழி, பார்வை, கற்பனை—இவை எப்படி ஒன்றோடொன்று இணைகின்றன? இதற்கெல்லாம் ஒரே பதில் இருக்காது. ஆனால் ஒவ்வொருவருடைய பதில்களும் சேர்ந்து, அந்தப் பதிலை நோக்கி நம்மை அழைத்துச் செல்லும். எந்த உரையாடலின் நோக்கமும் அதுதான்.
நான் மீண்டும் கேட்டேன். “கவிதை உருவாக்குவதற்கான வேறுபாட்டை உருவாக்குவது எது?
வாசகர்: “ஒரு சாதாரண மனிதன் காற்றில் ஓலை அசைவதைப் பார்ப்பான். ஆனால் கவிதை மனம் கொண்டவன், அந்த ஓலைகளை விரல்களாகவும், காற்றை அவற்றை அசைக்கும் கைகளாகவும் கற்பனை செய்வான்.”
அதுதான் கவிதை மனம் என்றேன் நான்.
அதேக் கூட்டத்தில் இன்னொரு பங்கேற்பாளர் தான் கவிதை எழுதிய அனுபவத்தை பகிர்ந்துக் கொண்டார். “நான் முதலில் எழுதிய கவிதை, ‘அம்மாவின் நெற்றியில் இருந்த சந்தனப் பொட்டு’ பற்றியது. அப்பா இறந்த பிறகு அம்மா பொட்டு இல்லாமல் இருந்ததைப் பார்த்தபோது, அந்த வேதனையை எப்படி வெளிப்படுத்துவது என்று தெரியவில்லை. அப்போது அந்த அனுபவம் கவிதையாக மாறியது.”
அப்படித்தான். ஒரு அனுபவம் எல்லோருக்கும் வருகிறது. ஆனால் அது ஒருவரிடம் கவிதையாக மாறுகிறது. அந்த மாற்றத்தை உருவாக்கும் தருணமே நமக்குப் புரிந்துகொள்ள வேண்டிய இடம். நான் இங்கே முன்வைக்கும் முக்கியமான கேள்வி இதுதான்: ஒரு சிறந்த கவிதை எப்படி உருவாகிறது? எந்தெந்தக் கூறுகள் ஒன்றாக இணைந்தால் அது காலத்தைக் கடந்து பேசப்படும் கவிதையாக மாறுகிறது? எந்தக் கூறுகள் குறைவாக இருக்கும்போது அது பலவீனமான கவிதையாகிறது? இதைப் புரிந்துகொள்ள ஒரு பாடலை எடுத்துக்கொள்ளலாம். உங்களுக்குப் பிடித்த ஒரு பாடலில் என்னென்ன இருக்கின்றன?
வாசகர்கள்: “வரிகள்…” “இசை…” ”உணர்வு…”
இசையை மட்டும் எடுத்துக்கொள்வோம். ஆனால் அது ஒரு தனிச் செயல் கிடையாது. உதாரணமாக, இளையராஜா ஒரு பாடலை இசையமைக்கிறார் என்று வைத்துக்கொள்ளுங்கள். அந்தப் பாடலுக்குள் எத்தனை இசைக்கருவிகள் ஒன்றோடொன்று இணைந்து செயல்படுகின்றன என்று யோசித்துப் பாருங்கள். நாம் அதை வெறுமனே இசை என்று சொல்லிவிடுகிறோம். ஆனால் அந்த இசை எப்படிச் சாத்தியமாகிறது?
மேடைக் கச்சேரிகளைப் பார்த்திருப்பீர்கள். ஒரு டியூன் உருவாக எத்தனை விதமான கருவிகள் ஒன்றாக இசைக்கப்படுகின்றன! வயலின், கித்தார், புல்லாங்குழல், தாளக்கருவிகள் என்று ஒவ்வொன்றும் தனித்தனி பங்களிப்பை வழங்குகின்றன. அதோடு பாடகரின் குரல், அவர் உருவாக்கும் பாவம், கவிஞரின் வரிகள்—இவை அனைத்தும் ஒன்றிணைந்த பிறகுதான் முழுமையான ஒரு இசை அனுபவம் உருவாகிறது. அந்த இணைப்பில்தான் ஒரு அற்புதமான இசைவு (fusion) நிகழ்கிறது; அதுவே நமக்குள் ஒரு ஆழமான அனுபவத்தை உருவாக்குகிறது. ஒரு பாடலைப் பகுதி பகுதியாகப் பிரித்துப் பார்த்தால், அதன் பின்னால் எத்தனை கூறுகள் செயல்படுகின்றன என்பதைப் புரிந்துகொள்ள முடியும். இசையைப் பற்றிய அறிவு உள்ளவர்களுக்கு, எந்த இடத்தில் வயலின் ஒலிக்கிறது, எங்கு கித்தார் இணைகிறது, எப்படித் தாளம் மாறுகிறது என்பதெல்லாம் தெளிவாகக் கேட்கும். ஆனால் இசையைப் பற்றி அறியாதவர்களுக்கு அது ஒரு முழுமையான அனுபவமாக மட்டுமே தோன்றும்.
கவிதையும் அப்படித்தான். ஒரு இசைப் பாடலைப் போலவே, கவிதையும் தானாக உருவாகிவிடுவதில்லை. ஒரு மெட்டைப் போல அதை வெறுமனே “ஹம்” செய்து உருவாக்க முடியாது. ஒரு கவிதைக்குள் ஏராளமான நுணுக்கமான கூறுகள் உள்ளன. உதாரணமாக, அதற்குள் ஒரு தத்துவப் பார்வை இருக்கலாம்; சொற்களைப் பயன்படுத்தும் தனித்துவம் இருக்கலாம். திடீரென்று ஒரு ஆங்கிலச் சொல் பயன்படுத்தப்படலாம்; அல்லது சங்க இலக்கியத்தில் இருந்து இன்று வழக்கில் இல்லாத ஒரு சொல் இடம் பெறலாம். அப்படிச் செய்தவுடன் கவிதையில் தோன்றும் மனநிலை விதவிதமாக மாறுகிறது. அதேபோல், ஒரு கவிதை ஒரு விஷயத்தைப் பற்றி பேசத் தொடங்கி, அதிலிருந்து தொடர்புடைய இன்னொரு அனுபவத்திற்கோ சிந்தனைக்கோ இயல்பாக நகர்கிறது. ஒரு உணர்வு நிலையை எவ்வாறு படிப்படியாக வளர்த்துக் கொண்டு செல்கிறது என்பதும் அதற்குள் இருக்கும் ஒரு முக்கியமான கலைநயம்.
நாம் பெரும்பாலும் ஒரு கவிதையை அதன் உணர்ச்சியாக மட்டுமே வாசிக்கிறோம். ஆனால் உண்மையில், கவிதை என்பது பல கூறுகள் ஒன்றோடொன்று இணைந்து இயங்கும் ஒரு படைப்புச் செயல்முறை. அந்தச் செயல்முறையைப் புரிந்துகொள்ளத் தொடங்கினால்தான், ஒரு கவிதையின் ஆழமும் அதன் கலைத்தன்மையும் நமக்குத் தெளிவாகப் புலப்படும்.

உதாரணமாக தேவதச்சனின் ஒரு கவிதையைப் பார்ப்போம். ஒரு கவிதையைத் தொடங்குவது பலருக்கும் ஒரு சிக்கலாக இருக்கும். எங்கிருந்து தொடங்குவது? நாம் பார்த்த ஒரு காட்சியிலிருந்து தொடங்கலாமா? நமக்குள் எழும் ஒரு உணர்ச்சியைத் தொடக்கப் புள்ளியாக வைக்கலாமா? ஒரு கருத்தையோ, ஒரு சம்பவத்தையோ எடுத்துக் கொள்ளலாமா? இவை எல்லாமே சாத்தியமான தொடக்கங்கள். ஆனால் இந்தக் கவிதை மிகவும் அந்தரமான ஒரு இடத்திலிருந்து தொடங்குகிறது.
“எனக்குப் பெருமைப்படத்தக்கதாய்
ஏதும் நடந்ததில்லை”
இந்தத் தொடக்கத்தை மட்டும் கவனியுங்கள். “எனக்குப் பெருமைப்படத்தக்கதாய் எதுவும் நடந்ததில்லை.” ஒவ்வொரு மனிதரும் ஒரு கட்டத்தில் நினைத்துப் பார்க்கக்கூடிய ஒரு வாக்கியம் இது. அடுத்த வரி:
“என் குழந்தைகள் சாதாரணமாய்த்தான்
படிக்கிறார்கள்”
அதற்குப் பிறகு:
“என்தந்தை வெற்றியடையவும் இல்லை
தோல்வியடையவும் இல்லை“
பின்னர்:
“நான் விலைகுறைந்த கடைகளில்தான்
பொருள்கள் வாங்குகிறேன்”
இங்கே வரை வந்திருக்கும் படிமங்களைப் பாருங்கள். அதன்பிறகு அவர் எழுதுகிறார்:
“ஆஸ்பத்திரி செலவுக்கு
பயந்து வலிகளைத் தாங்கிக்கொள்கிறேன்”
பிறகு:
“எப்போதும் எனக்காகக்
காத்திருக்கிறது
ஆளில்லாத
அரசாங்க மேஜைகள்”
இந்தப் படிமங்களுக்குள் பொதுவாக என்ன தன்மை இருக்கிறது என்று யோசியுங்கள். கவிதை இன்னும் முடியவில்லை.
“எனக்குப் பெருமைப்படத்தக்கதாய் எதுவும் நடந்ததில்லை” என்று தொடங்குகிறார். அதன் பிறகு அவர் வாழ்க்கையைப் பற்றிய பல சாதாரணமான தகவல்களைச் சொல்கிறார். “என் குழந்தைகள் சாதாரணமாகப் படிக்கிறார்கள்” என்பது ஒரு தகவல். “என் தந்தை வெற்றி அடையவும் இல்லை; தோல்வி அடையவும் இல்லை” என்பது இன்னொரு தகவல்.
அப்படியானால் அந்த நிலை என்ன? அது விரக்தியா? இல்லை. அது ஒரு வாழ் நிலை. வாழ்வு முன்னேறவும் இல்லை, பின்னோக்கிச் செல்லவும் இல்லை; உயரவும் இல்லை, தாழவும் இல்லை. நிறைய பேருடைய வாழ்க்கை அப்படித்தான் இருக்கிறது. ஆனால் இந்த ஒவ்வொரு வாக்கியத்துக்கும் முதல் வாக்கியத்துக்கும் என்ன தொடர்பு இருக்கிறது என்று யோசியுங்கள். ஒரு கவிதை எப்படி உருவாகிறது என்பதை இதன் மூலம் புரிந்துகொள்ளலாம்.
“நான் விலைகுறைந்த கடைகளில்தான் பொருள்கள் வாங்குகிறேன்.” இதற்கும் முந்தைய வாக்கியங்களுக்கும் என்ன தொடர்பு? இந்தப் படிமங்கள் எதைக் குறிக்கின்றன? “ஆஸ்பத்திரிச் செலவுக்குப் பயந்து வலிகளைத் தாங்கிக்கொள்கிறேன்.” “எப்போதும் எனக்காகக் காத்திருக்கின்றன ஆளில்லாத அரசாங்க மேஜைகள்.” இவை அனைத்தும் சேர்ந்து, ஒரு நடுத்தர வர்க்க மனிதனின் வாழ் நிலையைச் சொல்லுகின்றன. “நான் ஒரு நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்தவன்” என்று நேரடியாகச் சொல்லாமல், அந்த வாழ்க்கையின் இயல்பை இந்தக் கவிதை நமக்குக் காட்டுகிறது. இங்கே ஐந்து வெவ்வேறு நிகழ்வுகளை அவர் ஒன்றாக இணைக்கிறார். அவற்றுக்குள் நேரடியான தொடர்பு எதுவும் இல்லை. ஆனால் அவை அனைத்தும் சேர்ந்து ஒரு நடுத்தர வர்க்க வாழ்க்கையின் முழுமையான சித்திரத்தை உருவாக்குகின்றன. அதனால்தான் “எனக்குப் பெருமைப்படத்தக்கதாய் எதுவும் நடந்ததில்லை” என்ற முதல் வாக்கியத்திற்கு, அதன் பிறகு வரும் ஒவ்வொரு வாக்கியமும் ஒரு நியாயப்படுத்தலாக (justification) மாறுகிறது. வெவ்வேறு புள்ளிகளை ஒன்றன் பின் ஒன்றாக வைத்து, ஒரு மைய உணர்வை உருவாக்குவது எப்படி என்பதற்கு இது ஒரு சிறந்த உதாரணம்.
“எப்போதும் எனக்காகக் காத்திருக்கின்றன ஆளில்லாத அரசாங்க மேஜைகள்.” இது ஒரு அரசியல் கூற்றாகவும் வாசிக்கப்படலாம். ஆனால் அதைவிட முக்கியமாக, இது ஒரு சாதாரண மனிதனின் அனுபவம். “எங்கு சென்றாலும் என் வேலை நடக்காது” என்ற உணர்வை ஒரு வரியில் அவர் பதிவு செய்கிறார். அடுத்து கவிதை இன்னும் நகர்கிறது.
“தொலைவில்
நின்றபடி அவற்றைப்
பார்த்தபடி நின்றுகொண்டிருக்கிறேன்”
பிறகு ஒரு புதிய படிமம் வருகிறது:
“தோளில் புத்தகப்பையோடு
இரண்டு மாணவிகளும் நின்றுகொண்டிருக்கின்றனர்”
அங்கிருந்து அவர் கவிதையை நகர்த்துகிறார்.
“என்
பள்ளிப்பாடப் புத்தகங்கள்
சொன்னதுபோல்
எதுவும் இல்லை”
கவிதை இறுதி பகுதிக்கு முன் இரண்டு மாணவிகளின் படிமம் வருகிறது. அந்தப் படிமத்திலிருந்து திடீரென்று அவர் “என் பள்ளிப்பாடப் புத்தகங்கள் சொன்னது போல எதுவும் இல்லை” என்று முடிக்கிறார். அதாவது, வாழ்க்கை பாடப்புத்தகங்கள் கற்பித்ததுபோல் இல்லை. அந்த மாணவிகளின் எதிர்காலமும் அப்படியே இருக்கப் போவதில்லை என்ற மெல்லிய உணர்வு அந்த வரிக்குள் மறைந்திருக்கிறது. இப்போது இந்தக் கவிதை முழுவதையும் நினைத்துப் பார்த்தால் அதில் எத்தனை விதமான உணர்வுநிலைகள் இருக்கின்றன? ஒரு வாக்கியம் இன்னொரு வாக்கியத்தைத் திரும்பத் திரும்பச் சொல்லவில்லை. ஒரு வாக்கியத்தின் உணர்வு இன்னொரு வாக்கியத்தின் மீதான நிழலை விழச் செய்யவில்லை. மிகத் துல்லியமாகக் கட்டமைக்கப்பட்ட கவிதை இது.
நான் இங்கே பேசிக்கொண்டிருப்பது கவிதையின் செய்முறையைப் பற்றித்தான். அதனால்தான் ஒரு கவிதை ஒரே இடத்தைச் சுற்றிக்கொண்டே இருக்கக் கூடாது என்று சொன்னேன். அது தொடங்கிய இடத்திலேயே நின்றுவிடக் கூடாது. “எனக்குப் பெருமைப்படத்தக்கதாய் எதுவும் நடந்ததில்லை” என்று தொடங்கிய கவிதை, “என் பள்ளிப்பாடப் புத்தகங்கள் சொன்னது போல எதுவும் இல்லை” என்று முடிகிறது. இரண்டுக்கும் என்ன தொடர்பு? அதன் தொடர்பு நமதிந்த வாழ்க்கைதான். அந்தக் கையறுநிலை. நம்முடைய இயலாமைகள். அங்கிருந்து இந்தக் கவிதை ஒரு தனிமனித அனுபவத்தைத் தாண்டி, மானுடத்தின் பொதுவான அனுபவத்தை நோக்கி நகர்கிறது. ஒரு நல்ல கவிதை இப்படித்தான் தனிப்பட்ட அனுபவத்திலிருந்து பொதுமையை நோக்கிப் பயணிக்கிறது. அப்படியானால் இந்தப் புள்ளிகளை நாம்தான் வாழ்க்கையிலிருந்து உருவாக்க வேண்டும்.
ஒரு கவிதைக்கு அடித்தளமாக இருப்பது ஒரு மனநிலை என்று சொல்கிறோமே, அந்த மனநிலை என்பது வெறும் கோபமோ, மகிழ்ச்சியோ அல்ல. வாழ்க்கையில் நூறு அவமானங்களும் இருக்கின்றன; நூறு மகிழ்ச்சிகளும் இருக்கின்றன. மனிதனின் நினைவில் சிதறிக் கிடக்கும் அந்த அனுபவப் புள்ளிகளை நீங்கள் எப்படி இணைக்கிறீர்கள் என்பதுதான் ஒரு வெற்றிகரமான கவிதையை உருவாக்குகிறது. அந்த இடத்தில் தத்துவம் பக்கபலமாக இருக்கலாம். சொல்வன்மை பக்கபலமாக இருக்கலாம். ஆனால் தத்துவம் மட்டும் கவிதை அல்ல. ஆழமான கருத்துக்கள் மட்டும் கவிதை அல்ல. அவை பொதுச் சமூகத்துடனும், மனித வாழ்வியலுடனும் இணைந்து பயணிக்க வேண்டும். அதனால்தான் நான் சொல்கிறேன்: கவிதைகளை வெறுமனே படிக்காதீர்கள்; கவனியுங்கள்.
ஒரு மரத்தைப் பார்க்கும்போது “மரம் இருக்கிறது, காற்றில் இலை அசைகிறது” என்று மட்டும் பார்க்கக் கூடாது. அந்த மரத்தின் ஒவ்வொரு இலையும் தனித்த வடிவம் கொண்டது. அதில் வந்து அமரும் ஒவ்வொரு பறவைக்கும் தனித்த இயல்பும் அணுகுமுறையும் இருக்கிறது. அதேபோல், கவிதையிலும் எதுவும் தற்செயலாக வந்து சேர்வதில்லை. போகிற போக்கில் சேர்க்கப்பட்ட வரிகள் சிறந்த கவிதைகளில் இருப்பதில்லை.
தொடரும்…
000
(திருவண்ணாமலையில் ஜூலை 18, 2026 அன்று தென்பெண்ணை இலக்கியச் சமவெளி ஒருங்கிணைத்த இலக்கியப் பயிற்சி முகாமில் ஆற்றிய உரையின் முதல் பகுதி. எழுத்தாக்கம் : சா.விஜயகுமார்)

மனுஷ்ய புத்திரன்
நவீன தமிழ்க் கவிஞர்களில் முதன்மையானவராக அறியப்படுபவர் மனுஷ்ய புத்திரன். உயிர்மை இதழின் நிறுவனர். இலக்கியம், பதிப்பகம், இதழியல், அரசியல், திரைத்துறை எனப் பல தளங்களில் தொடர்ந்து இயங்குபவர்.
Discover more from
Subscribe to get the latest posts sent to your email.
