
பறவை கோர்த்த விதைமணிகள்
“கவிதையின் வடிவத்தை நம்மால் திட்டமிட்டு உருவாக்கிட முடியாதுதான். அகவயமானதா புறவயமானதா என்பதைக் கொண்டே கவிதை தனக்கான வடிவத்தை உருவாக்கத்தில் உரு கொள்ளும்.” அப்படியானதொரு உருக்கொள்ளளோடு மிளிர்கிறது தாமரை பாரதியின் ” தனிமையோடு ஒரு உரையாடல்”. மலையாளத்தில் ” ஏகாந்ததயோடொரு சம்பாஷணம்” என ராஜன் ஆத்தியப்பன் அக்பருடன் இணைந்து மலையாளத்திற்கு மொழிமாற்று செய்துள்ளனர்.
காதல், வலி, ஏமாற்றம், அரசியல், ஏளனம், நிறைவு, தனிமை, நினைவேக்கம், காணாமலாகுதல், அழகுணர்ச்சி என கவிதையின் பாடுபொருள்கள் எல்லோருக்குமான பொதுத்தன்மையோடு இருந்தபோதும், கவிதையுள் செயல்படுத்தப்பட்டிருக்கும் தன்மை பிறவற்றிலிருந்து வேறுபட்டுக் காட்டும். தொகுப்பில் தனித்து தன்னை முன்னிறுத்தும் கவிதைகள் நிறைய இருப்பதால், இத்தொகுப்பு நெருக்கமானதாக இருக்கிறது.
படிமம், கவிதைக்குள் பிறந்திருக்கும் இசைமை, பாடுபொருளை மனம் கொள்ள கவிஞரின் முனைப்பு, திரும்ப ரசனையோடு வாசிக்க செய்யும் மொழிப்பிணைப்பு என வாசகர்களை வசீகரிக்கும் தன்மையோடு இத்தொகுப்பு உள்ளது.
மனிதன் மட்டரகத்தின் உச்சம். தன் தினவு தீர எதையும் பலி கொடுப்பது குறித்து குற்ற உணர்வில்லாத கீழ்மைகள். அது அது அதனதன் இடத்திலிருப்பதே அழகு. கிராமங்களை, நகரங்களை நாசமாக்கியது போதாதென காடுகளையும் விட்டுவைக்கவில்லை. ஏதேனுமொரு நகரமுக்கில் எதையாவது விற்று பிழைக்கும் ஆதிக்குடிகளை காண்கையில் குற்ற உணர்வுடன் கடந்து போவதை நினைவுகொள்ளச் செய்தது ” மலையும் மலைசார்ந்த” கவிதை.
கவிதைகளை சொல்லப்பட்ட தன்மையிலே அக்கவிதையை அர்த்தப்படுத்தி ரசித்து கடப்பது இயல்பு. சமயங்களில் அக்கவிதையை வேறு வடிவில் சொல்லிப் பார்த்தல் நம் வாசிப்பின் போக்கை சுவாரஸ்யம் கொள்ளச் செய்யும். ரிக்க்ஷாக்காரன் கவிதை அப்படியொரு அனுபவத்தை ஏற்படுத்தி தந்தது.
“ரிக்க்ஷாக்காரர்
கால்கள்
மேலும் கீழுமாக
முன்னும் பின்னுமாய்
சீரலைவு இயக்கத்தில் இயங்க
கைகளால் மணியடித்தவாறே
கூட்டத்தை விலக்கியபடி
கடக்கிறார் ரிக்ஷாக்காரர்.
ஆங்கில நாளிதழ் ஒன்றை
சாவகாசமாகப் படித்தவாறு
அமர்ந்திருப்பவருக்கு
கால்களிரண்டும் நன்றாக இருக்கின்றன.
சவாரி முடியும்
தருணத்தை எதிர்நோக்கியபடி
மூச்சிரைக்க இரைக்க
பெடல்களை மிதிக்கிறார்,
ரிக்க்ஷாக்காரர்.
தேசிய முக்கியத்துவம்மிக்க
கட்டுரை ஒன்றை
வாசித்து முடித்திருந்தார், பயணி.
மனித உழைப்புச்
சுரண்டலுக்கெதிரான
மாபெரும் இயக்கத்தின்
செயல்பாட்டாளர்
இறங்குவதற்கான
இடத்திலிருந்து வெகுதூரத்திலிருக்கிறது,
டாஸ்மாக்.
மீண்டும்
மிதிக்க வேண்டும்
மூச்சிரைக்க இரைக்க“
வாசித்து முடித்தபின் இக்கவிதையிலிருக்கும் இயல்பை கலைத்துப்போட்டேன்.
“பயனி ரிக்சா மிதிக்க, ரிக்சாக்காரர் அமர்ந்து கட்டுரை வாசிக்கிறார். குற்ற உணர்வு மேலிட பயனியை அமரச் செய்து ரிக்க்ஷாக்காரர் இழுத்து வருகிறார். வழியில் கண்ட டாஸ்மாக்கில் இருவரும் மது அருந்திய பின் சமூகக் கேடுகளை உரையாடி பிரிந்து செல்கிறார்கள்.”
கவிதையிலிருக்கும் ரிக்க்ஷாக்காரருக்கும், வாசித்த எனக்கும் இப்படியொரு சித்திரம் உருக்கொண்டது.
சொட்டு விஷம் போதும் மொத்த பாலையும் பாழாக்கிட, மதிப்புமிக்க காதல் கொண்ட தேசத்தில் மது என்பவனின் பசி ஏற்படுத்திய மாற்றத்தின் மாசு என்றும் மனம் விட்டு அகலாது. “உண்பது பாழி” கவிதை ஆறுதல்.
காதலிக்காக காலத்தை கிழடாக்குகிறார். கவிதையில் எல்லாமும் சாத்தியமாகும். குழந்தையால், கடவுளாதல், சாத்தானாகுதலும் மட்டுமின்றி பாலினமாறுபாடு கொள்வதும் நிகழும். வசீகரமிக்க அகத்தையும் புறத்தையும் கவிதை தந்தபடி இருக்கும். எதுவொன்றாகவும் உணரச் செய்யும் உயிர்நீர் வழியும் ஊற்றைக் கொண்டது கவிதைகள். இத்தொகுப்பும் அப்படியான உணர்தலை உருவாக்கும் கவிதைகளை கொண்டுள்ளது.
பிறவி
அப்பாவின்
முதல் திதிக்குக்
கல்லறைக்குச் சென்றபோது
கல்லறை விரிசலில்
குறுமரமாய்
வளர்ந்திருந்ததொரு
வேம்பு.
இருந்து இல்லாமல் ஆதலும், இல்லாததை இருப்பதாக்குதலும் வாழ்வில் தானாக உருக்கொள்ளும் பிணைப்பிடன் தொடர்புடையது. அப்பா உறவின் பெயர் மட்டுமல்ல. அப்பா என்பது உணர்வு. அந்த உணர்வை என்றும் ஜீவனோடு வைத்திருப்பதை தாமரைபாரதி கல்லறையில் வேம்பை குறுமரமாக நின்றிருக்கச் செய்திருப்பது கவித்துவமாகிறது.
நதியில் மிதக்கும் சருகுகள் கைவிடப்பட்ட காதலர்கள், நினைவுக் காம்பில் தொங்கும் உயிர், நிறைவேறாதவைகளின் நினைவேக்கம், எட்டாக்கனியாக ததும்பும் அழகு என நுட்பங்கள் மிகுந்த கவிதைகள் நம்மை உடன் பயணிக்கச் செய்கின்றன.
கொலை பழகிவிடக் கூடியது. மனதின் விளிப்புநிலை உணர்வு, வன்முறை, இயற்கையின் முரன்களை கூச்சலற்று மெளனமாக பகிர்தல், நிஜத்திற்கும் பிரம்மைக்கும் இடைப்பட்டு நம்மை நிறுத்தி வாசிப்பில் வியப்பை மேலிடச் செய்கிறது ‘பாப சங்கீர்த்தனம்’ கவிதை. நாய் குட்டிகள் எலிக்குஞ்சுகளாகும் விந்தை புதுமை.
அறுவடை முடிந்த நிலத்தில் சிதறிக்கிடக்கும் தானியங்களை பறவைகள் உற்று நோக்கி நல்லவைகளை அடையாளம் கண்டு சேகரிப்பதை போன்று சொற்களை பிணைவு கொள்ளச் செய்தலே காலத்தில் நீடிக்கும் கவிதையை உருவாக்கிடும். இத்தொகுப்பில் தாமரை பாரதி பறவையாகியுள்ளார்.
லோகோஸ் பதிப்பகம், இணையத்தில் வாங்க
ந.பெரியசாமி.
தோட்டாக்கள் பாயும் வெளி (2014), குட்டிமீன்கள் நெளிந்தோடும் நீலவானம் (2016) முதலிய நூல்களின் ஆசிரியர்.
000

ஈராக் போர்முனை அனுபவங்கள் : நாஞ்சில் ஹமீது
ஈராக் நாட்டின்மீது எனக்கு தனிப்பிரியம் உண்டு. என் தந்தை அவர் பணியாற்றிய இந்திய ரயில்வே துறை மூலமாக ஐந்தாண்டுகள் ஈராக்கில் பணியாற்றினார். அங்கு ரயில்பாதை அமைப்பதற்கு இந்திய ரயில்வே ஒப்பந்தம் மேற்கொண்டிருக்கக்கூடும். ஈராக்கில் பணியாற்றியபோது அவர் பெற்ற ஊதியத்தைக் கொண்டே எங்கள் ஊரான சிவலாங்குடியில் எங்களுக்கென ஒரு வீடு கட்டப்பட்டது. மேலும் அங்கிருந்து அவர் திரும்பியபோது சதாம் உசேன் படம் பதியப்பட்ட சிவப்பு டிசர்ட் ஒன்றை வாங்கி வந்தார். ஓராண்டு அதை போட்டுக்கொண்டு திரிந்தேன். அந்த வீடு தற்போது இல்லையாயினும் அப்போது ஈராக்கின் மேல் ஏற்பட்ட பிரியம் இன்றும் நீடிக்கிறது.
எனவே “ஈராக் போர்முனை அனுபவங்கள்” நூலை ஆர்வத்துடன் வாசிக்கத் தொடங்கினேன். எவ்வித தயக்கமுமின்றி மடைதிறந்தது போன்று பேசக்கூடிய ஷாகுல் ஹமீதுடன் பழகியவன் என்பதால் வாசிப்பதெல்லாம் அவரே நேரில் சொல்வது போன்றே தோன்றியது. கிடைத்த நேரங்களில் வாசித்து இரண்டு நாளில் வாசித்து முடித்தேன்.
ஆசிரியர் ஜெயமோகன், ஷௌகத். தி. ஜானகிராமன் – சிட்டி ஆகியோருடைய பயண நூல்களை வாசித்திருக்கிறேன். அந்நூல்கள் திட்டமிட்டு பயணம் செய்த அனுபவங்களை அங்கே கண்டவற்றின் முந்தைய இன்றைய நிலைகளை விவரிப்பதாக இருக்கும். அவை அநேகமாக பயணம் நிகழ்ந்த உடனேயே எழுதப்பட்டவை. இந்நூல் பணி நிமித்தமாக சென்றவர் அந்த சூழலையும் அங்கு ஏற்பட்ட அனுபவங்களையும் பனிரெண்டு ஆண்டுகளுக்குப் பின் தன் நினைவிலிருந்து மீட்டு எழுதியது. இத்தனை ஆண்டுகளுக்குப் பின்னும் நினைவில் நீடிப்பவற்றை மட்டுமே எழுதியிருக்கிறார் என எடுத்துக் கொள்கிறேன். இதுவே இந்நூலை சிறப்பு மிக்கதாக மாற்றுகிறது.
மும்பையில் வேலை தேடி அலைவதையும் உடன் இருந்த நண்பர்களையும் பற்றி முதல் இரு அத்தியாயங்களில் எழுதியுள்ளார். நேர்முகத் தேர்வில் கேட்கப்படும் கேள்விகள் பற்றிய விவரனை இவரது இலகுவான மொழிக்கு உதாரணம். குவைத்தில் உள்ள அமெரிக்க இராணுவத்திற்கு உணவு தயாரித்து வழங்கும் பணிகளுக்கு ஆட்களை தேர்வு செய்கிறார்கள். உணவகப் பணிக்கான உதவியாளராக பணி புரிய முடிவு செய்து நேர்முகத் தேர்வில் கலந்து கொண்டு தேர்வும் பெற்று விடுகிறார். இவரோடு இவரது சில நண்பர்களும் தேர்வாகிறார்கள் என்பது இவருக்கு மகிழ்ச்சியை அளிக்கிறது. குவைத்தில் பணிக்கான தேவை குறைந்ததும் ஈராக்கிற்கு செல்ல சம்மதிப்பவர்களைத் தவிர பிறரை ஊர்களுக்கு அனுப்ப முடிவு செய்கிறார்கள். ஷாகுல் ஈராக் செல்ல முடிவெடுக்கிறார். ஈராக் செல்லும் பயணம் திகில் நிறைந்ததாக உள்ளது. அந்தத் திகிலினை வாசிப்பவர்களையும் உணர வைக்கும் வகையில் ஷாகுல் எழுதியுள்ளார்.
இதுவரை காணாத நிலப்பரப்பு , நான் உணராத அந்த போர்ச்சூழல், இக்கட்டான சூழலில் வெளிப்படும் மனிதர்களின் குணங்கள் என நூலின் ஒவ்வொரு அத்தியாயத்திலும் ஆச்சர்யப்படுத்தும்படி ஏதோவொரு விசயம் இருக்கிறது.
ஒவ்வொரு அத்தியாயமும் ஒரு சிறுகதை போலவே உள்ளது. பொருத்தமான தலைப்புகளிட்டு ஒரு விசயத்தைத் தொடங்கி படிப்படியாக விவரித்து ஒரு உச்ச தருணத்தோடு முடிப்பதால் அவ்வாறு தோன்றுகிறது. மேலும் ஒவ்வொரு அத்தியாயத்தின் கடைசிப் பத்தி அந்த அத்தியாயத்திற்கான திரண்ட கருத்து போல ஆசிரியரால் கூறப்படுகிறது. நூலின் சிறப்பம்சம் என இதையே கருதுகிறேன். அதுவொரு தத்துவம் போலவும் மூத்தவரின் அனுபவ மொழி போலவும் மிளிர்கிறது. பயணம் சென்றபோதே எழுதியிருந்தால் இது இடம் பெற்றிருக்காது. இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகு அதனை அசைபோட்டுப் பார்க்கும்போது இவருக்குள் திரண்டெழுந்த கருத்துகள் இவை. இவை நூலின் மதிப்பை அதிகரிக்கிறது.
உதாரணமாக அமெரிக்க இரானுவ வீரர்களிடம் “ஒன் டாலர் ப்ளீஸ்” எனக் கேட்கும் தமிழர்களைப் பற்றிய “திரைகடலோடித் திரவியம் தேடிய தமிழர்களில் சிலர்…” என்ற அத்தியாத்தின் கடைசிப் பத்தி
//உள்ளூரில் இருப்பதைப் போலத்தான் அயல்மண்ணிலும் இருக்கும் தமிழர்கள். பொறுப்பானவர்களும், பொறுப்பற்றவர்களுமான கலவை. ஆனால் ஒருவனுக்கு பொறுப்பில்லாமல் தான் செய்யும் மோசமான செயல் மொத்த குழுவிற்கும் அவமதிப்பைத் தரும் என்ற எண்ணமே இல்லாமலிருப்பதைத்தான் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. பீகாரியை ‘பான்பராக் வாயன்’ என்று நக்கல் செய்து மகிழும் நம்மை அந்த முகாமில் என்ன சொல்லியிருப்பார்கள்? ஒரு டாலர் பிச்சைக்காரன் என்றுதானே. தனிமனிதனின் சுய ஒழுக்கமே சமூக ஒழுக்கமாக மாறுகிறது என்பதை உணர்ந்துகொள்ள முடிந்த நிகழ்வுகள் இவையெல்லாம்//
சதாம் கைது செய்யப்பட்டதைக் கூறும் அத்தியாயம் //வீரம் என்பது காப்பதற்குப் பயன்பட்டால்தான் மதிப்பு. பிறரை அழிக்கப் பயன்பட்டால் வீரம் பொருளிழந்து போகிறது. சதாமின் இறுதி வீரமும் அவர் பிற இனமக்களுக்குச் செய்த அழிவால் பொருளிழந்து போனது// என முடிகிறது. எத்தனை உள்ளார்ந்த கருத்து. எப்போதும் புன்னகையுடன் வெள்ளந்தியாக பேசிக்கொண்டிருக்கும் ஷாகுல் இவ்வாறெல்லாம் கருதுகிறாரே என ஆச்சர்யம் தோன்றியது.
பலவித பண்பாடுகளில் வளர்ந்தவர்கள் ஒன்றுகூடி வாழ்வது சற்று சிரமம்தான். ஆனால் போர் போன்ற ஒரு நெருக்கடி நிலையில் உயிர் வாழ்ந்தால் போதும் என்ற நிலையில் அத்தனை பண்பாடுகளுக்கும் அடிப்படையான மனதநேயம் அனைவரையும் ஒன்றிணைக்கும். இணைந்து போராடுவதற்கான மனவுறுதியையும் நம்பிக்கையையும் அளிக்கும் என்பதை பல அத்தியாயங்களில் விவரித்துள்ளார்.
அவளாகவே வந்து பழகி, பின் ஏனென்று தெரிவிக்காமல் பிரிந்து சென்ற பாயல் என்ற தோழியும், ஊரில் மனைவி இருப்பதால் வேறு பெண்ணுடன் நடனமாடுவதையும் தவிர்த்த ஒடிஸ் என்ற நண்பனும் மறக்கவியலாத மனிதர்களாகிவிட்டார்கள். ஒடிஸை சான்றாண்மை கொண்டவன் என ஷாகுல் விவரிப்பதன் காரணத்தை நூலைப் படித்து அறிந்து கொள்ள வேண்டும் எனக் கோருகிறேன்.
சேர்ந்து உண்பதைப் பற்றியும் அடுத்தவர்களுக்கு உணவளிப்பதைப் பற்றியும் அடுத்தவேளை உணவு நிச்சயம் இல்லாத நிலையில் உண்பதே கடைசி உணவாக இருக்கக்கூடும் எனக் கருதி உண்பதைப் பற்றியும் உள்ள அத்தியாயங்கள் மனதை நெகிழ வைக்கின்றன.
ஈராக்கில் பணிபுரிந்த அத்தனை நாட்களுமே இவர்கள் பணி புரிந்த இடத்தின்மேல் குண்டு விழுமோ என்ற பயத்துடனேயே இருந்துள்ளார்கள். மனம் அந்தப் பயத்திற்கு ஆட்பட்டிருந்த நிலையிலும் சுற்றி நடந்தவற்றை இந்த அளவு கூர்ந்து நோக்கியுள்ளாரே என வியப்பு ஏற்படுகிறது. அல்லது அந்த பயத்தினால்தான் இந்தளவு கூருணர்வுடன் இருந்துள்ளார் என்றும் தோன்றுகிறது.
இந்தக் கூருணர்வை தக்க வைத்துக் கொண்டு பயண அனுபவங்களோடு புனைவுகளையும் நாஞ்சில் ஹமீது எழுத வேண்டும் வாழ்த்துகிறேன்.
யாவரும் பதிப்பகம், இணையத்தில் வாங்க
கா. சிவா
கரவுப்பழி, அமிழ்தலும் மிதத்தலும் முதலிய நூல்களின் ஆசிரியர்.
Discover more from
Subscribe to get the latest posts sent to your email.
