இதயம் முரளி’யரின் காலாதி காலம் : இசை

ஓவியம் : வான்கோ

‘வரைவு கடாவுதல்’ அதாவது காதல் இன்பத்தில் திளைத்துக் கொண்டிருக்கும் தலைவனை திருமணத்திற்கு வற்புறுத்தும் வகையான பாடல்கள் சங்கத்தில் அதிகம். கல்யாணம் வந்தால் காதல் போய் விடும் என்று அவன் அஞ்சினானா என்பதறியேன். நள்ளிரவில் புலி வாயில் புகுந்து வந்து கூட தலைவியைச் சந்தித்து விட்டு செல்பவர்கள், திருமணத்திற்கு நாள் கடத்தியிருக்கிறார்கள். திருமணம் புலியினும் புலியோ? அப்படியான தலைவர்களை இடித்துரைத்து தலைவியின் துயரும், ஊரின் அலரும் சொல்லி திருமணத்திற்கு வற்புறுத்துவாள் தோழி.

காதலி காதலனை கடியலாம். ஆனால் இன்னொருவர் வசை பாடப் பொறுப்பாளா என்ன?

தன் எவ்வம் கூரினும் , நீ செய்த அருளின்மை
என்னையும் மறைத்தாள் என் தோழி; அது கேட்டு
நின்னை யான் பிறர் முன்னர்ப் பழிகூறல் நாணி

கூரும்நோய் சிறப்பவும், நீ செய்த அருளின்மை
சேரியும் மறைத்தாள் என் தோழி; அது கேட்டாங்கு
‘ ஓரும் நீ நிலையலை’ எனக்கூறல் தான் நாணி

நோய் அட வருந்தியும் , நீ செய்த அருளின்மை
ஆயமும் மறைத்தாள் என் தோழி; அதுகேட்டு
மாய! நின் பண்பின்மை பிறர் கூறல் தான் நாணி
( கலி; 44)

( எவ்வம்- துயரம், கூர்தல்- மிகுதல்)

தலைவி உன் பிரிவால் துயருற்று வருந்தினாலும் அத்துயரை ஊருக்குச் சொல்லவில்லை, சுற்றத்திற்குச் சொல்லவில்லை. எனக்கும் கூடச் சொல்லவில்லை. பிறர் உன்னைப் பழிப்பதை அவள் ஒரு போதும் பொறுப்பதில்லை.

திருமகள் தாமரையில் வீற்றிருக்க , யானைகள் அவள் இருபுறமிருந்தும் பூக்கள் மிதக்கும் கலசநீரைப் பொழியும் படத்தை நீங்கள் பார்த்திருக்கிறீர்களா? நான் பார்த்துள்ளேன். அந்தக் காட்சி வருகிறது இப்பாடலில். இருபுறமிருந்தும் அருவிகள் வீழ வேங்கைமரம் திருமகள் போல் வீற்றிருக்கிறதாம் தலைவனின் மலையில். இந்தக் காட்சிக்கு நிறைய ‘உள்ளுறைகள் ‘ சொல்லப்படுகின்றன. எனக்கு இந்தக் காட்சி போதும்.( கலி; 44)

வீழ்பெயல் கங்குல் நின் விளி ஓர்த்த ஒடுக்கத்தால்
வாழுநாள் சிறந்தவள் வருந்துதோள் தவறுண்டோ?
தாழ்செறி கடுங்காப்பின் தாய்முன்னர் நின் சாரல்
ஊழ்உறு கோடல் போல் எல்வளை உகுபவால்
( கலி;48)

( பெயல்- மழை, கங்குல்- இரவு , ஓர்த்தல்- கூர்ந்து கேட்டல், ஊழ் உறுதல்- உதிர்தல், கோடல்- காந்தல் மலர்)

விடாது மழை பொழியும் இரவுகளில் உன் ஒலிக் குறிப்புகளுக்கு காது கொடுத்து எப்படியும் நீ வந்து விடுவாய் என்று ஏங்கிக்கிடப்பவளின் தோள்கள் உன் பிரிவால் மெலிகின்றன. தாழிட்டு வீட்டைக் காப்பது போல் அவளைக் காத்து வரும் அவளது தாயின் கண் முன்னேயே, உன் மலையில் காந்தட் பூ உதிர்வது போலே அவள் கைவளை கழன்று விழுகிறது.

‘இனையள்’ என்று எடுத்தரற்றும் அயல்முன்னர்
நின் சுனைக்
கனைபெயல் நீலம்போல் கண்பனி கலுழ்பவால்
( கலி; 48)
( கலுழுதல்- அழுதல்)


இவள் இப்படிப்பவள் என்று அலர் தூற்றும் ஊரார் முன் உன் மலைச்சுனை அருகில் மலர்ந்த நீலமலர் போல் அவள் கண்கள் கலங்குகின்றன. தலைவன் தினமும் காண்கிற அந்த நனைமலர் தலைவியின் துன்பத்தை நினைவூட்டி அவனைத் திருமணத்திற்கு வற்புறுத்தும் என்றும் நம்புகிறாள் தோழி.

தலைவன் தலைவியைக் காண நள்ளிரவில் வருகிறான். அப்படி பதுங்கிப் பதுங்கி வருபனின் கள்ளச் சத்தம் கேட்டு அணங்கென்று அஞ்சுகின்றனர் ஊரார். யானை என்று கொதிக்கின்றனர் தினைப்புனக் காவலர். புலியென்றும் நடுங்குகிறது ஊர்.

தாமரைக் கண்ணியை, தண்நறுஞ் சாந்தினை
நேர்இதழ்க் கோதையாள் செய்குறி நீவரின்
மணங்கமழ் நாற்றத்த மலைநின்று பலி பெறூஉம்
அணங்கென அஞ்சுவர் சிறுகுடியோரே;

ஈர்ந்தண் ஆடையை, எல்லி மாலையை
சோர்ந்துவீழ் கதுப்பினாள் செய்குறி நீவரின்
ஒளி திகழ் ஞெகிழியர், கவணையர், வில்லர்
களிறு என ஆர்ப்பவர் ஏனல் காவலரே!

( ஈர்ந்தண் ஆடை- இரவுமழையில் நனைந்த ஆடை, சோர்ந்து வீழ் கதுப்பு- தாழ்குழல், செய்குறி- காதலர் குறிப்பு
ஞெகிழியர்- வெளிச்சம் வேண்டி தீ மூட்டி வைத்திருப்பவர்கள், கவணையர்-
கவண் கல் எறிபவர்)

ஆரமார்பினை, அண்ணலை, அளியை
ஐது அகல் அல்குலாள் செய்குறி நீவரின்
கறிவளர் சிலம்பில் வழங்கல் ஆனாப்
புலியென்று ஓர்க்கும் இக்கலிகேழ் ஊரே
( கலி; 52)

( ஐது- அழகு, கறிவளர் சிலம்பு- மிளகு வளரும் மலை, கலி- ஒலி)

ஒருநாள் அவையெல்லாம் அல்ல, நீதான் அக்கள்வன் என்று ஊர் கண்டுபிடித்துவிடும். அது கண்டு அவள் வாழாள். அவளின்றி நானும் வாழ்வதறியேன் என்று வருந்துகிறாள் தோழி.

கிராமத்தில் இதுபோன்ற கதைகள் அடிக்கடி நடக்கும். செல்வி அக்காவுக்கு திருமணம் நடக்கும் வரை எங்கள் தெருவில் நடுச்சாமங்களில் ஒரு திருடன் நடமாடிக் கொண்டிருந்தான். கடைசி வரை அவனைப் பிடிக்கவும் முடியவில்லை.

வேட்டைக் காட்சி ஒன்று.. ஒரு யானையின் காது வளர்ந்து வளர்ந்து முறம் போல் ஆகி அதன் கண்ணை மறைத்து விடுகிறது. இதைப் பயன்படுத்தி அதன் மேல் பாய்கிறது ஒரு புலி.

“ முறஞ்செவி மறைப் பாய்பு முரண் செய்த புலி செற்று……
முரண் தீர்ந்த நீள் மருப்பு எழில் யானை”
(கலி; 52)

வைகறையை “ பொதியவிழ் வைகறை” என்கிறார் கபிலர். இரவின் பொட்டலம் அவிழ்ந்து ஒளி பரவுகிறது.

விளியாநோய் உழந்து ஆனா என் தோழி, நின் மலை
முளிவுற வருந்திய முளைமுதிர் சிறுதினை
தளி பெறத் தகை பெற்றாங்கு நின்
அளி பெற நந்தும் இவள் ஆய் நுதற் கவினே
( கலி; 53)

உன் மலையில் காய்ந்து கிடக்கும் தினைப்பயிர் மழை பெற்றுச் செழிப்பது போல உன் காதலைப் பெற்றால் தலைவியின் அழகு மேலும் பெருகும்.

இப்பாடல்களில் கைவளை நெகிழ்தல், கண் கலங்கி அழுதல், அழகு அழிதல், மெலிந்து வருந்துதல் ஆகியவை திரும்பத் திரும்ப வருகின்றன. ஒரு நவீன மனத்திற்கு இவை சற்று சலிப்பூட்டவே செய்யும். ஆனால் நாம் இவற்றை கவிதையாக அல்லாமல் , பாடலாகப் படித்தால் இன்புற முடியும் என்றே நம்புகிறேன். கூறியது கூறலிலும் ‘சத்தத்தின் சத்தில்’ குறையொன்றுமில்லை.

உன் மலையில் உள்ள சுனை மலர்தான் உலகிலேயே அழகிய மலராக இருக்க வேண்டுமா? அதைவிடவும் அழகு என்பதால்தான் இப்படி தலைவியின் கண்ணழகைச் சிதைக்கிறாயா நீ?

உன் மலையில் ஜொலிக்கும் வேங்கைமரம்தான் உலகிலேயே அழகானதாக இருக்க வேண்டுமா? அதைவிடவும் அழகென்றுதான் தலைவியின் அழகை அழிக்கிறாயா நீ?

“ …. ………… நின்
மால்வரை மலிசுனை மலர் ஏய்க்கும் என்பதோ?
புல் ஆராப் புணர்ச்சியால் புலம்பிய என் தோழி
பல்இதழ் மலர் உண்கண் பசப்ப நீ சிதைத்ததை”

“சுடர்உற உறநீண்ட, சுரும்புஇமிர் அடுக்கத்த
விடர்வரை எரிவேங்கை இணர்ஏய்க்கும் என்பதோ?
யாமத்தும் துயிலலள், அலமரும் என் தோழி
காமரு நல்லெழில் கவின்வாடச் சிதைத்ததை”
(கலி; 45)

அவள் உன் பிரிவை ஆற்றவே நினைக்கிறாள், ஆனால் அவளது கண்களும், அழகும் சொல் பேச்சு கேளாமல் தன்னிச்சையாக இயங்குகின்றன. அவை நீயின்றித் தவிக்கின்றன.

மறையினில் மணந்து ஆங்கே மருவு அறத் துறந்தபின்
இறைவளை நெகிழ்பு ஓட ஏற்பவும் ஒல்லும் மன்;
அயல் அலர் தூற்றலின் ஆய்நலன் இழந்தகண்
கயல்உமிழ் நீர் போலக் கண்பனி கலுழாக்கால்;

இனிய செய்து அகன்று நீ இன்னாதாத் துறத்தலின்
பனி இவள் படர் எனப் பரவாமை ஒல்லும்மன்
ஊர் அலர் தூற்றலின் ஒளியோடி நறுநுதல்
பீர்அலர் அணிகொண்டு பிறைவனப்பு
இழவாக்கால்
( கலி; 53)

( பீர்- பீர்க்கம்பூ, பிறைவனப்பு- நுதலழகு, பனி- தெய்வகுற்றத்தால் ஏற்படும் நடுக்கம், பரவுதல்- தொழுதல்)

உன் பிரிவால் கைவளை நெகிழ்ந்து ஓடுவதை அவள் ஏற்கவே விரும்புகிறாள்
ஆனாலும் மீன் உமிழும் நீர் போல அவள் கண்கள் கலங்கி விடுகின்றன.

ஊர் அலர் தூற்ற, பிறை போல பொலிவுற்ற இவள் நுதலழகு, பீர்க்கம்பூவைப் போல் வாடிவிட்டது. அப்படி இல்லையெனில் அவள் வீட்டார் நேர்த்திக் கடன்களில் ஈடுபடாதிருந்திருப்பர்.

இந்தப்பாடலில் கண்கள் பாவப்பட்ட ஜீவன்கள் போல் காட்டப்படுகிறது. ஆனால் காமத்துப்பாலில் ஒரு தலைவி தன் கண்களை தானே வசை மொழிகிறாள். பழிக்குப் பழி இரத்ததிற்கு இரத்தம் என்கிற பாவனையில் பாடுகிறாள் அவள்.

ஓஓ இனிதே எமக்கிந்நோய் செய்தகண்
தாஅம் இதற் பட்டது
(குறள்; 1176)

மகிழ்ச்சி! மகிழ்ச்சி! அன்று நீ தானே எனக்குக் காதல் நோயைத் தருவித்தாய். இன்றும் நீ தானே அக்காதலைக் காணாது கண்ணீர் வடிக்கிறாய் . மகிழ்ச்சி! மகிழ்ச்சி!

மதமுற்றிய யானையை நாம் கண்டதுண்டு. ஆனால் நாணப்பட்ட யானையை கண்டதுண்டா? சண்டையில் புலியைக் கொன்று விட்டு அதே நினைவோடு தூங்குகிறது ஒரு யானை. அதன் கோபம் இன்னும் அடங்கியபாடில்லை. தூங்கும் யானை, கனவில் ஒரு வேங்கை மரத்தைக் காண்கிறது அதையும் புலியென்றே கருதி குத்திச் சாய்க்கிறது. பின்னாட்களில் வேங்கை மரத்தை காணும் போதெல்லாம் , நாணிய படியே அதைக் கடந்து செல்கிறது.

“ கொடுவரி தாக்கி வென்ற வருத்தமொடு
நெடுவரை மருங்கின் துஞ்சும் யானை
நனவில்தான் செய்தது மனத்தது ஆகலின்
கனவில் கண்டு கதுமென வெரீஇப்
புதுவதாக மலர்ந்த வேங்கையை
அதுஎன உணர்ந்து அதன் அணிநலம் முருக்கிப்
பேணாமுன் பின் தன்சினம் தணிந்து, அம்மரம்
காணும் பொழுதின் நோக்கல் செல்லாது
நாணி இறைஞ்சும்…”
(கலி; 49)

( கொடுவரி- புலி, நோக்கல் செல்லாது – கண் கொண்டு காண நாணி)

இரவுக்குறி வருகிற தலைவனை இரவின் பயங்கரங்களைச் சொல்லி நீ பகலிலேயே வந்து செல் என்கிறாள் ஒரு தோழி.

நீ தலைவியின் மேல் இவ்வளவு ப்ரியம் கொண்டிருக்கிறாய் என்பது இனியது தான். இன்னாததோ, மின்னலையே கண் என வரித்து, இடி பாராது, மழை பாராது இத்தனை இடர்களுக்கும் மத்தியில் இரவில் நீ வருவது.

போதுஎழில் மலர் உண்கண் இவள்மாட்டு நீ இன்ன
காதலை என்பதோ இனிது மற்று இன்னாதே
மின்ஓரும் கண்ணாக, இடி என்னாய், பெயல் என்னாய்
இன்னது ஓர் ஆரிடை ஈங்கு நீ வருவதை
(கலி; 49)

( பெயல்- மழை, ஆரிடை- இடர் மிகு வழித்தடம்)

‘ அல்லகுறிப்படுதல்’ என்பது சந்திப்பிற்கு குறிக்கப் பெற்ற காலம், இடம் ஆகியவைகளின் குழப்பத்தால் சந்திப்பு நிகழாமல் போவது. இப்படி ஒரு முறை அல்லகுறிப்படுகிறது. அப்போது தலைவி,’ நான் பிழை செய்துவிட்டதாக, என் அன்பு குறைந்து விட்டதாக அல்லவா தலைவன் கருதிக் கொள்வான் ‘ என்று சொல்லி வருந்தினாள். அது கேட்ட தோழி தலைவனிடம் சொல்கிறாள். ‘நீ பழியைத் தூக்கி என் மீது போட்டுவிடு, நானே பிழைத்ததாக இருக்கட்டும். அப்போது தலைவி கொஞ்சம் ஆறுதல் அடைவாள். சொல்வதையே திருப்பிச் சொல்லும் உன் மலை போலத்தான் அவளும். நீ என்ன சொன்னாலும் அதையே நம்புவாள்.

“ கலந்த நோய் கைம்மிகக் கண்படா என் வயின்
புலந்தாயும் நீயாயின் பொய்யானே வெல்குவை;
இலங்குதாழ் அருவியோடு அணி கொண்ட நின் மலைச்
சிலம்புபோல் கூறுவ கூறும்
இலங்கு ஏர் எல்வளை இவளுடை நோயே”
( கலி; 46)

நொச்சிப்பூ உதிர்ந்து விழும் ஓசையைக் கூட கவனமாக கேட்டபடி நான் நள்ளிரவிலும் அவனுக்காக காத்திருக்கிறேன். ஆனால் அவனோ நான் மனம் மாறிவிட்டேன் என்றல்லவா நினைத்துக் கொண்டிருப்பான்

“ ஏறுஇரங்கு இருளிடை இரவினில் பதம்பெறாஅன்
“ மாறினென்” எனக்கூறி மனம் கொள்ளும்தான் என்ப:
கூடுதல் வேட்கையால் குறிபார்த்துக் குரல் நொச்சிப்
பாடு ஓர்க்கும் செவியோடு பைதலேன் யானாக”
( கலி: 46)

( ஏறு – இடி, இரங்குல்- முழங்குதல், பாடு ஓர்தல்- விழும் ஓசையைக் கூர்ந்து கேட்டல், பைதல்- துன்பம்)

உண்மையில்’ இதயம் முரளியர்’ ‘இதயத்’தில் பிறக்கவில்லை. மூவாயிரம் ஆண்டுகளாகவே வாழ்ந்து வரும் ஜீவன் அது. பெண் முன் தயங்கித் தயங்கி, மருகி , மருகி அழியும் உயிரது. ‘இரண்டாம் உலகம் ‘ படத்தில் எனக்கு மிகவும் பிடித்த காட்சி ஒன்றுண்டு. மனித இனத்தில் முதன் முதலாக காதல் பிறக்கும் காட்சி. மிருகத்திலிருந்து மனிதன் எழுந்தருளும் தருணம். பெண் பண்டம் என்பதிலிருந்து உயிர் என்றாகும் உன்னதம். ஆனால் உயிர் ஆன உடனே அவள் ஒருவனுக்கு தெய்வமும் ஆகிவிடுகிறாள்.அவன் அவளைத் தொழுது கொண்டே பின்னால் திரிகிறான். ‘ நீ ஆம்பள தான, உனக்கு வேனும்னா எடுத்துக்க வேண்டியது தான? எதுக்கு கொழந்த மாதிரி பார்த்துட்டே நிக்கற’ என்று இன்னொரு ஆண் அவனுக்கு அறிவுரை சொல்கிறான். அவனுக்கு அவள் கட்டாயம் வேண்டும். ஆனால் அவனால் அப்படி எடுத்துவிட முடியாது. வெறும் ஆம்பளைத்தனத்தால் எடுத்து விட முடிவதுமில்லை அது. அவன் அவளைக் காதலிக்கிறான்.

கலித்தொகையிலும் இப்படிச் சில ஆண்கள் உண்டு. ஒருவன் பெரிய வீரன். அறிவன். மாபெரும் வள்ளல். ஆனால் காதலின் முன் கையேந்தி நிற்கிறான்.

ஒன்று இரப்பான்போல் எளிவந்தும் சொல்லும் உலகம்
புரப்பான் போல்வதோர் மதுகையும் உடையன்

வல்லாரை வழிபட்டு ஒன்று அறிந்தான் போல்
நல்லார்கண் தோன்றும் அடக்கமும் உடையன்

இல்லோர் புன்கண் ஈகையின் தணிக்க
வல்லான் போல்வதோர் வன்மையும் உடையன்:

அன்னான் ஒருவன் ஆண்தகை விட்டு என்னைச்
சொல்லும் சொல் கேட்டீ, சுடரிழாய்!

(மதுகை- வலிமை, வீரம், வல்லாரை வழி பட்டறிதல்- ஞானவான்களை வழிபட்டு நின்று ஞானம் கற்றறிந்தவன், புன்கண்- வறுமை)

இவ்வளவு சிறப்புகள் கொண்டவன் கலங்கி கண்ணீர் வடிக்கிறான். ‘ நின் அன்றி அமையலேன் யான்” என்கிறான். ‘ நீ நீப்பின் வாழலேன் யான்’ என்கிறான்.

இன்னொருவன் காதலையே சொல்ல முடியாமல், காதலைத் தவிர மற்றதெல்லாம் பேசுகிறான்.

நோய் உரைக் கல்லான் பெயரும்மன் பன்னாளும் ( கலி: 37)

பல நாளும் ஏதேதோ காரணம் சொல்லி வந்து வந்து போகிறான். ஆனால் ஒரு போதும் காதலைச் சொல்வதில்லை. இப்படியே விட்டால் அவன் அழுந்தி அழுந்தி செத்து விடுவான் என்று பயந்து ஒருநாள் நானே என் பெண்தன்மையை விட்டு அவனிடம் பேசினேன் என்கிறாள் ஒருத்தி.

“……… …….. ஆயிடைக்
கண்நின்று கூறுதல் ஆற்றான் அவனாயின்
பெண் அன்று உரைத்தல் நமக்காயின், இன்னாதூஉம்
காணான் கழிதலும் உண்டு
( கலி; 37)

( கழிதல் – இறத்தல்)

இன்றைய’ GEN Z’ தலைமுறையில் இதயம் முரளியரே இல்லை என்கிறார்கள். கொஞ்சம் உருமாறியிருக்கலாம், மற்றபடி ஒரு உயிரினம் ஒரு தலைமுறையோடு அப்படி பூண்டோடு அழிந்துவிடாது என்றே நான் நம்புகிறேன்.

000

இசை

கவிஞர் இசை தமிழில் நவீனக்கவிதைகளை எழுதி வரும் கவிஞர். மென்மையான நகையுணர்வு கொண்டவை இவருடைய கவிதைகள். உறவுகளின் சிக்கல்களையும் சமகாலத்தின் அரசியலையும் கேலி இல்லாமல் புன்னகையுடன் கூறுபவை.

நன்றி : தமிழ் விக்கி


Discover more from

Subscribe to get the latest posts sent to your email.

உரையாடலுக்கு

Your email address will not be published.

திரட்டு

சேகரம்

Latest Posts

Go toTop

Don't Miss