
அன்று இரவுப்பணி முடிந்து காலை ஐந்து மணிக்கு மிதிவண்டியில் வீட்டுக்கு வந்து கொண்டிருந்தான் சங்கர். புலரத் தயாரான கருக்கிருட்டின் மென்வெளிச்சத்தில் ஒருவித ஏகாந்தம் மனதில்கூட மெதுவாக மிதித்து ஓட்டினான். கட்டடங்கள் இல்லாத திறந்தவெளியாக அந்தப் பகுதி இருந்தது. இவன் வந்து கொண்டிருந்த சாலையில் இணையும் இடது பக்கத்து சாலையில் லாரி ஒன்று வந்தது. லாரி இவன் செல்கின்ற சாலைக்கு வரும்முன் கடந்துவிடலாம் என்ற எண்ணத்தில் நிறுத்தாமல் சென்றான்.
முகப்பு விளக்கு வெளிச்சத்தைக் கொண்டு சங்கர் லாரியை அறிந்தான். ஆனால், தூக்க கலக்கத்திலிருந்த லாரி ஓட்டுனர் மிதிவண்டியையும் அதை ஓட்டிவந்த இவனையும் கவனிக்கவில்லை.
லாரி மோதியதும் மிதிவண்டி முன்பக்கமாக சாய்ந்தது. அதன் இடது கைப்பிடி பேனட்டில் மாட்டிக் கொள்ள, நூறு மீட்டர் தூரம் லாரியின் சக்கரத்திற்கு முன் இழுபட்டான் சங்கர்.
“டேய் டேய் டேய்ய்ய்…” என சங்கர் கத்தியபடி இரண்டு சக்கரங்களுக்கு மத்தியிலுள்ள பேனெட்டை ஓங்கி தட்டியவுடன் திடுக்கிட்டு பிரேக்கை அழுத்திய ஓட்டுனர் என்னவென்று புரியாமல் திகைத்தான்.
சங்கர் கத்திய சத்தம் கேட்டு சுதாரித்து வேகமாக இறங்கி வந்து சங்கரை தூக்கியபோது, சங்கர் மிதிவண்டியிலிருந்து கையை எடுத்தான். மிதிவண்டி லாரியில் எந்தப் பிடிப்புமின்றி தனியாக கீழே விழுந்தது. சங்கர் அதை திகைப்புடன் பார்த்தபோது சிறு ஒளிப்பந்தொன்று துள்ளி மறைந்ததைக் கண்டான்.
000
காலையில் விழித்ததிலிருந்தே சங்கரின் மனதினுள் ஒரு நிலைகொள்ளாமை சுழன்று கொண்டிருந்தது. அவன் முகத்தில் தெரிந்த ஏனென்று புரியாத தவிப்பைக் கண்டு ரமாவிற்கும் பதட்டம் தோன்றியது. கிளம்பும் நேரத்தில் கேட்கவேண்டாமென்ற முடிவுடன் வழியனுப்ப உடன் வந்தாள்.
வாசலில் நின்ற இருசக்கர வாகனத்தில் அமர்ந்து அதை உதைத்து உயிர்ப்பித்தவன் ஆக்ஸிரேட்டரை முடுக்கினான். அதிகப்பட்ச வேகத்துடன் செல்வதற்கான முடுக்கத்தில் இவன் கை நிலை கொண்டுவிட்டது. வேகத்தை குறைப்பதற்கான முயற்சியாக கைகளை இயக்க முடியவில்லை. சில கணங்களில் வண்டி தன் உச்சபட்ச வேகத்துடன் கிளம்பி முப்பதடி தூரத்தில் நின்ற தென்னை மரத்தின்மீது மோதி சாய்ந்தது. வண்டியிலிருந்து சரிந்து விழுந்த சங்கர் ஒளிக்கீற்றொன்று நகர்ந்து செல்வதைக் கண்டான்.
ஆட்டோ பிடித்து இருபத்திநான்கு மணிநேர மருத்துவமனைக்கு சென்றார்கள்.
“நல்லவேளை வீட்டிற்கு பக்கத்திலேயே நடந்தது. மெயின்ரோட்டில் நடந்திருந்தால் என்னவேனா நடந்திருக்கும்” என சிராய்ப்புகளுக்கு மருந்திட்டு கட்டிய செவிலி சொன்னபோது திகைத்த இருவரின் விழிகளும் சந்தித்துக் கொண்டன.
000
சங்கரின் வீட்டை விரிவாக்கிக் கட்ட பணம் தேவைப்பட்டது. கையில் இருந்த பழைய நகைகளை அடகுவைத்து வட்டி கட்டிக் கொண்டிருப்பதைவிட விற்றுவிடலாம் என அம்மா கூறினார். மறுநாள் காலை மேஸ்திரிக்கு பணம் கொடுக்கவேண்டும் என்பதால் அம்மாவை வண்டியில் கூட்டிச் சென்றான்.
எதிரில் வந்த வண்டியின் ஹெட்லைட் வெளிச்சத்தால் கண்கள் கூச சாலையில் கிடந்த கல்லைக் கவனிக்காமல் வண்டியை அதன்மீது ஏற்றிவிட்டான். சமமற்ற கல்லாக இருந்ததால் வண்டியை வலதுபுறத்தில் சாய்த்துவிட்டது. வண்டி கீழே சாய இவன் கால்களை ஊன்றி நின்றுவிட்டான். பின்னால் அமர்ந்திருந்த அம்மா சாலையில் தலைபட அப்படியே பின்னால் விழுந்தார். அதே கணம் இவனுக்கு மிக நெருக்கமாக இடதுபுறம் ஒரு கண்டெய்னர் லாரி கட்டுப்பாடிழந்து இரண்டு இருசக்கர வாகனங்களையும் ஒரு காரையும் இடித்தபடி சென்று பருத்து நின்ற வாகை மரத்தில் மோதி நின்றது. பலரின் வீறிட்ட குரல்கள் எழுந்தன. சில கணங்கள் திகைத்து நின்ற சங்கர் அம்மாவைத் தூக்க குனிந்தபோது அம்மாவே எழுந்தார். பயத்துடன் அம்மாவின் பின்தலையைப் பார்த்தான். அம்மாவின் நீண்ட முடியை சுழற்றி போடப்பட்ட கொண்டை சற்று நெகிழ்ந்திருந்தது. “ஒன்னுமில்ல பயப்படாதே” என்று அம்மா சொன்னபோது வண்டியை சாய்த்த கல்லை நோக்கி இவன் பார்வை சென்றது. அது ஒளிக் கீற்றென மாறி மேல்நோக்கிச் செல்வதைக் கண்டான்.
000
பறந்த பாவாடையை தன் கால்களுக்கிடையே இறுக்கியபடி புளியமரத்தின் கிளைகளை சிறிய கைகளால் பற்றிக்கொண்டு மென் பாதங்களை சிறு கணுக்களில் வைத்து மேலே ஏறினாள் ரேஷ்மா. வாட்டமான பெரிய கிளையில் அமர்ந்திருந்த செல்வி “ஏன் இப்படி கஷ்டப்படுற..” என்று சலிப்புடன் கேட்டாள்.
“இப்படி ஏறுறதுதான் எனக்குப் பிடிச்சிருக்கு” என்றபடி செல்வியின் அருகில் அமர்ந்தாள். செல்வியின் பார்வை எதிர் வீட்டின் மீது பதிந்திருந்தது. அவள் முகத்தில் எப்போதும் இல்லாத ஆசுவாசம் தெரிந்தது. அது அவள் முகத்தின் ஒளியைக் கூட்டியிருந்தது.
நாளையிலிருந்து தனியாகத் திரியவேண்டுமே என்று எண்ணியபோதே ரேஷ்மாவிற்கு வருத்தமாக இருந்தது. ஆனால் எப்படியாயினும் ஒருநாள் பிரிந்துதானே ஆகவேண்டும் என்று சமாதானமாக முயன்றாள்.
இருவரும் சந்தித்து பத்து ஆண்டுகளாகிவிட்டன என்று செல்வி சொன்னபோது இவளுக்கு வியப்பாக இருந்தது. ஆமாம் அப்போது இவள் அண்ணனிற்கு எட்டு வயதானது. இப்போது கல்லூரிக்கு செல்கிறானே என்று எண்ணம் சென்றபோது முகம் பூரிப்படைவதை உணர்ந்தாள். இவள் முகம் கவலையில் கூம்பியதைக் கண்டே செல்வி ஆண்டுக்கணக்கை சொல்லியிருக்கிறாள்.
செல்வி இங்கிருந்து சென்றுவிட்டால் சங்கரின் குடும்பத்தின் நிலை என்னாகுமோ என்ற பதட்டம் ரேஷ்மாவிற்கு வந்தது. அந்தக் குடும்பத்திற்கும் இவளுக்கும் தொடர்பு இல்லை என்றாலும் பத்து ஆண்டுகளாகப் பார்த்துப் பார்த்து அவர்கள்மேல் பிரியம் தோன்றியிருந்தது.
சங்கரின் மகன் இப்போது வேலை தேடிக் கொண்டிருக்கிறான். பெண் கல்லூரியில் இரண்டாமாண்டு படிக்கிறாள். சங்கரின் மனைவி ரமாவிற்கு மாமனார் மாமியாரை கவனித்துத் கொள்வதிலேயே பொழுது போயிற்று. ரேஷ்மா முதலில் பார்த்தபோது ரமாவின் முகம் எப்போதும் வெடித்து வெளிவரத் தயாராய் இருக்கும் வார்த்தைகளை தடுத்து வைத்திருப்பது போன்று இறுக்கமாக இருந்தது. ஆனால் பிறகு, ஏதோவொரு கணத்தில் எல்லாமே யாரோவொருவரின் விளையாட்டு என்பதை உணர்ந்து கொண்டதுபோல பிள்ளைகளின் விளையாட்டை ரசிப்பது போன்ற முகபாவத்தை சூடிக் கொண்டாள். அது அவள் முகத்திற்கு தனியழகை அளித்தது.
ரேஷ்மாவை மனதளவில் ஏற்க செல்விக்கு ஒருமாதம் பிடித்தது. முதல்நாள், இவள் என்ன நிகழ்ந்தது என்று ஒன்றும் புரியாத நிலையில் இருந்தபோது, தன்னைப் போன்ற செல்வியைப் பார்த்ததும் சற்று ஆசுவாசமடைந்தாள். ஆனால், செல்வி இவளை தன் தனிமையின்பத்தைக் குலைக்க வந்தவள் என்ற ரீதியில் பார்த்து வேறு மரத்திற்கு செல்லுமாறு சத்தமாகக் கூறினாள். செல்வி ஏற்றுக் கொள்ளாதபோது என்ன செய்வது என இவளுக்குப் புரியவில்லை. மரத்தின்மேல் ஏறாமல் கீழேயே இருந்து கொண்டாள். அவ்வப்போது வீட்டிற்கு சென்று கவனித்துவிட்டு வந்து மரத்தினடியிலேயே இருந்தாள். ஒரு மாதத்திற்கு பிறகுதான் செல்வி மனமிரங்கினாள்.
சில நாட்களுக்குப் பின் புளிய மரத்தின் உச்சிக் கிளையில் நின்று அக்கிளை காற்றில் ஆடுவதுபோலவே ஆடிக் கொண்டிருந்த செல்வி உற்சாக மனநிலையில் தன்னைப் பற்றி சொல்லத் தொடங்கினாள். அவளுக்கு ஒரு அக்கா ஒரு அண்ணன் இருந்தார்கள். வீட்டில் யார் சொல்வதையும் கேட்காத அடாவடியானவளாக இவள் இருந்தாள். வீட்டில் என்ன சொன்னாலும் அதற்கு ஏறுக்குமாறாகத்தான் செய்வாள். அண்ணன் எதையுமே நேர்த்தியாகச் செய்பவர். சட்டையில் சிறு கசங்களோ மெல்லிய அழுக்கோ ஏற்படாமல் பார்த்துக் கொள்வார். புத்தகங்களை மடிக்காமல் கிழிக்காமல் ஆண்டு முடியும்போதும் புதிதுபோலவே காட்சியளிக்கும் வண்ணம் வைத்திருப்பார். அடுத்த வகுப்பில் இவள் படித்ததால் அதே புத்தகங்கள் இவளுக்கு அளிக்கப்பட்டன. புதுப் புத்தகத்தின் வாசனையை உணர ஆசையாக இருக்கும். அண்ணன் தன் புத்தகத்தை நுகர விடமாட்டார். செல்வி, உடன் படிக்கும் பெண்களிடம் கெஞ்சி அவர்களின் புத்தகத்தை வாங்கி முகர்ந்து பார்ப்பாள். புது வாசனை வந்தாலும் தான் முதலில் நுகரவில்லையே என்ற எண்ணம் தோன்றி ஒரு நிறைவின்மையை அளிக்கும்.
அண்ணன் கொடுத்த புதிது போன்ற புத்தகங்களின் அட்டை இவளிடம் வந்த ஒரே வாரத்தில் கசங்கி உதிரத் தொடங்கிவிடும். ஒரு மாதத்திற்குள் அட்டை கிழிந்துவிடும். அப்பா இவள் முதுகில் ஒரு அறை வைப்பார். அப்பாவின் கைகள் மிகச் சிறியவை என்பதால் சுளீர் என வலிக்கும்.
“கிழிஞ்சாலும் புதுசு கிடைக்காது. வாத்தியார் அடிச்சா நீதான் வாங்கிக்கனும் நினைவு வச்சுக்க” என்பார்.
அப்பா இப்படிச் சொல்லிவிட்டால் புத்தகம் கிழியாமல் இருக்குமாயென்ன. முன்பக்கம் கிழிவதுபோலவே பின்பக்கமும் கிழியும். வாத்தியார்கள் பார்க்கும் முன்பாக தன்னிடம் முகம் கொடுத்து பேசாத வசதியான வீட்டுப் பெண்ணான சித்ராவின் புத்தகத்தை எடுத்து அட்டையையும் பெயர் எழுதியிருக்கும் பக்கத்தையும் கிழித்துவிட்டு வைத்துக் கொள்வாள். புத்தகத்தைக் காணவில்லை என வாத்தியாரிடம் புகார் சொன்னாலும் “பொறுப்பில்லாமல் தொலைத்ததற்காக” பிரம்படி வாங்கவேண்டியதிருக்கும் என்பதால் தன் அப்பாவிடமே திட்டையும் புதுப்புத்தகத்தையும் வாங்கிக் கொண்டு வந்துவிட்டாள் சித்ரா.
000
அப்போதெல்லாம் ஓட்டு வீடுகள்தான். செல்வி வீட்டைச் சுற்றி இருந்தவர்களெல்லாம் இவள் அப்பாவின் நண்பர்கள்தான். அவர்களை மாமா என்றும் அவர்களின் மனைவியை அத்தை என்றும் அழைத்தபடி எல்லோர் வீட்டிற்கும் சென்று விளையாடுவாள். இவள் விளையாடும் நாளன்று, அவர்கள் பிள்ளைகளின் விளையாட்டுப் பொருள்களில் இவளுக்குப் பிடித்த பொருள்கள் அங்கே காணாமல் போய்விடும். இவர்கள் வீட்டிற்கு அந்தப் பிள்ளைகளை அழைக்கமாட்டாள். அழைக்காமலேயே அவர்கள் வந்தாலும் வீட்டிற்குள் விடாமல் வெளியில் நிற்கும் மரங்களுக்கு அடியில் விளையாட அழைத்துச் சென்றுவிடுவாள்.
விளையாட்டுப் பொருள்களோடு விளையாட சலித்த ஒருநாள் புதுவித விளையாட்டொன்றை கண்டறிந்தாள். மிக யதேச்சையாக நடந்தது அது. அன்று காலையில் அம்மா செய்த வடையை வீட்டுக்கு வெளியில் நின்று தின்றாள். அந்த நேரத்தில் ஒரு காக்கை வடையை கௌவிக் கொண்டு பறக்க, கீழே கிடந்த சிறு கல்லை எடுத்து காக்கையை நோக்கி வீசினாள். அந்தக்கல் காக்கைமீது படாமல் எதிர்வீட்டின் ஓட்டின்மீது டங் என்ற சத்தத்துடன் விழுந்து டப டப என்று ஒலியெழுப்பியபடி கீழே விழுந்தது. அன்று அவர்கள் வீட்டில் ஆளில்லை என்பதால் யாருக்கும் தெரியாது. அந்த கல் எழுப்பிய ஒலி இவளுக்கு கிளர்ச்சியூட்டுவதாக இருந்தது. யாரும் அறியாதவாறு ஒன்றைச் செய்வதன் கிளர்ச்சியது. இந்த உணர்வை அவ்வப்போது அடைய மனம் விரும்பியது. பகலென்றால் யாரும் பார்த்துவிடக்கூடும். இரவென்றால் இவளுக்குப் பயம் என்பதால் பகலுமில்லாமல் இரவுமில்லாமல் மாலை மயங்கும் நேரத்தில் சுற்றியுள்ள ஏதோவொரு வீட்டின் மீது கல்லெறிய ஆரம்பித்தாள். கல்லின் அளவைப் பொருத்தும் அது எந்த வடிவமைப்பில் உள்ளது என்பதைப் பொருத்தும் ஒவ்வொரு கல்லிற்கும் அந்த ஒலி மாறுபட்டதை அறிந்தாள்.
ஒவ்வொரு கல்லும் சிறிய விலங்குபோல் தோன்றியது . அது தாவும், அமரும், நகரும் உருளும், தத்தி ஓடும், குரலெழுப்பும். கல்லை ஓட்டின் மேல் வீசிவிட்டு மறைந்து நின்று கொள்வாள். எம்மாதிரியான விலங்கு என்பதை எழும் ஓசையிலிருந்து உருவகித்துக் கொள்வது பரவசமாக இருக்கும். முதல் சில நாட்கள் யாரும் அதை பெரிதாகக் கருதவில்லை. தொடர்ந்தபோது அவர்களுடைய பொறுமை வற்றிவிட்டது. கல் விழும் வீட்டுக்காரர்கள் வெளியே வந்து சத்தம் போடுவது இவளுக்கு மேலும் சுவாரசியமாக இருந்தது. எப்போதும் சாந்தமான முகத்துடன் இருப்பவர், கொதித்து கெட்ட வார்த்தையுடன் வசை மொழிந்தார். பெரும் வீரர்போல தன்னைக் காட்டிக் கொண்டு திரிந்தவர் “ஏண்டா இப்டி பண்றீங்க” என அழுவது போன்ற முகபாவத்துடன் பொருமினார். இவளுக்கு பிடிக்காத பலரை இவள் பழிதீர்த்துக் கொண்டாள்.
000
செல்விக்கு சரியாக படிப்பு வரவில்லை அல்லது இவள் படிக்கவில்லை. எட்டாவதில் இரண்டு முறை தோல்வியடைந்ததால் பள்ளிக்கு அனுப்ப அப்பா மறுத்துவிட்டார். உடலும் நன்றாக வளர்ந்துவிட்டதால் இவளைவிட சின்னப்பிள்ளைகளுடன் ஒரே வகுப்பில் படிப்பது கூச்சத்தை ஏற்படுத்தியது. எனவே அப்பாவின் முடிவு இவளுக்கு மகிழ்ச்சியளித்தது.
இவளுடைய அக்கா புரசைவாக்கத்திலிருந்த ஒரு பெண்கள் உள்ளாடைக் கடையில் வேலை பார்த்துக் கொண்டிருந்தாள். அதே கடையில் இவளையும் சேர்த்துவிட்டாள். நல்ல விரிவான கடை. நாள் முழுவதும் நிற்கவேண்டும் என்பதுதான் கடினமான ஒன்றாக இருந்தது. அப்போதுவரை இவள் மட்டுமல்ல வீட்டில் யாருமே உள்ளாடை அணிந்ததில்லை. கிராமத்திலிருந்து சில ஆண்டுகளுக்குமுன் வந்தவர்கள் என்பதால் இன்னும் பழகவில்லை. இவர்கள் வீட்டு ஆண்கள் பெண்களிடம் அதை வலியுறுத்தவும் இல்லை.
கடைக்கு வரும் பெண்கள் விதவிதமான வண்ணங்களிலும் வடிவங்களிலும் உள்ளாடைகள் வாங்குவதை வியப்பாக பார்த்துக் கொண்டிருந்தாள். இப்படியொன்று இருப்பதை இதுவரை அறியாமல் தான் இருந்ததே ஒரு தன்னிரக்கத்தை தோற்றுவித்தது. எனவே அவற்றை அணிந்து பார்க்கும் ஆசை தோன்றியது. ஆசை ஆவலாக மாறி தீவிரமடைந்தது. அவற்றின் விலை இவளால் வாங்கமுடியாத உயரத்தில் இருந்தது. மனதின் குறுகுறுப்பே இவளுக்கு அந்த மாற்று வழியைக் காட்டியது.
வேலை நேரத்திலேயே தனக்கு பிடித்த வண்ணத்தில் ஓர் உள்ளாடையை தேர்ந்தெடுத்து வைப்பாள். கடையிலிருந்து கிளம்புவதற்கு முன் கழிவறைக்குச் சென்று அதை அணிந்து கொள்வாள். அப்படியே வந்து அக்காவுடன் சேர்ந்து கொண்டுவந்த உணவுப் பையை வாசலில் நிற்கும் காவலரிடம் சோதிக்கக் காட்டிவிட்டு பேருந்தேறி வீட்டுக்கு வந்துவிடுவார்கள். முதல்முறை அணிந்தபோது யாரோவொருவர் இறுக்கி அணைத்துக்கொண்டது போன்ற உணர்வு ஏற்படவும் திடுக்கிட்டாள். சில கணங்களில் அந்த மென்மையான அணைப்பு இதமானதாக மாறியது. தன்னையே தான் கட்டிக்கொண்டது போன்ற அணுக்கமான ஓர் அணைப்பு மிகவும் பிடித்திருந்தது. என்னவென்று வகுக்கமுடியாத உணர்வெழுச்சியில் கண்கள் கசிந்தன. வேறு வேறு வண்ணங்களில் வாரத்திற்கொன்றாக அணிந்துகொண்டு வந்தாள்.
000
“அதுவொரு வண்ணமயமான காலம்…” என்று செல்வி சொல்லி முடித்தபோது எல்லாக் கதைகளுமே முடிவின்றி இருப்பதை ரேஷ்மா உணர்ந்தாள். அதை திரும்ப எண்ண அவள் விரும்பவில்லை என்றும் அதோடு தன்னிடம் சொல்ல முடிந்தவற்றை மட்டுமே சொல்லியிருப்பதாகவும் தோன்றியது. இன்னும் பல கதைகள் இருக்கக்கூடும் ஆனால், அவள் முடித்தவிதம் சொன்னவற்றை தொடர விரும்பாததையும் உணர்த்தியது.
சில நாட்கள் கழித்து, செல்வி ஒரு புன்னகையுடன் இருந்த சமயத்தில் “நீங்க இப்படி மாறினதப் பத்தி சொல்லுங்களேன்” என ரேஷ்மா கேட்டாள்.
“நீ முதல்ல சொல்லு, அப்புறம் நான் சொல்றேன்” என்றாள்.
இப்போது ரேஷ்மாவின் முறை. ஆனால் பெரியதாக இவளிடம் கதையில்லை. மறைத்து குறைத்துச் சொல்லவும் அவசியமில்லை.
“அன்னக்கி முதல் முதலா பர்ஸ்ட் ஸ்டான்டர்டுக்கு போறதுக்கு நான் கெளம்புனேன். இல்லையில்ல என்னைய கெளப்புனாங்க. எல்கேஜி யுகேஜிலாம் போயிருந்தாலும் பர்ஸ்ட் ஸ்டான்டர்டுன்னு சொன்னதும் ஒரு மாதிரி பரபரப்பாதான் இருந்துச்சு. அண்ணனை வேன்ல ஏத்தி அனுப்பிட்டாங்க. ஸ்கூட்டர்ல நான் முன்னாடி நிக்கிறேன். அப்பா வண்டிய ஓட்டினார். அம்மா பின்னாடி ஒக்காந்திருந்தாங்க. நான் என்னென்னவோ வேணும்னு கேட்டுக்கிட்டு வர்றேன். அப்பாவும் அம்மாவும் சாயந்திரம் வாங்கித் தர்றோம்னு சொல்லிக்கிட்டு வர்றாங்க. ஸ்கூலு இருக்கிற ரோட்ல திரும்பறப்ப எதிர்ல ஸ்கூல் வேன் ரொம்ப வேகமா வந்துச்சு. என் அண்ணன் இருக்குற அதே வேன்தான். வேறவேற எடத்திலேர்ந்து புள்ளைங்கள ஏத்திக்கிட்டு வந்திருக்கும்போல. வேன் மேல வண்டி மோதுனது வேன் வேகமா வந்ததனாலயா இல்லை அப்பா என்கிட்ட பேசிகிட்டே கவனமில்லாம ஓட்டினதாலயான்னு என்னால சரியா சொல்லமுடியல. லேசா பறக்குற மாதிரியிருந்துச்சு. பார்த்தா என் ஒடம்ப கட்டிப் பிடிச்சு அம்மாவும் அப்பாவும் அழறாங்க. அண்ணனும் வேன்லேர்ந்து எறங்கி வந்து நின்னு அழுவறான். எனக்கு எந்த வலியும் தெரியல. ஆனா இதையெல்லாம் பாக்கறப்ப அழுகையா வந்துச்சு. நான் பாத்துக்கிட்டிருக்கேனே அப்ப கீழே கெடக்குற ஒடம்பு யாரோடதுன்னுதான் அப்ப எனக்கு திகைப்பா இருந்துச்சு. கொஞ்ச நேரத்துக்கு அப்புறம்தான் எனக்கு ஒருமாதிரி புரிஞ்சது…”
செல்வியின் முகம் போதும் என்ற பாவனையைக் காட்டியது. “மூனு பேரோட கண்ணு முன்னாடியே நடந்ததுன்னா அந்த வேதனை அதிகமாத்தான் இருந்திருக்கும். ஒன்னய அவங்களால எப்பவும் மறக்க முடியாது. அவங்க வாழ்ற காலம் வரைக்கும் ஒனக்கு விடுதலை இல்லை” என்று செல்வி சொன்னாள்.
அருகில் பிரமாண்ட மாமரம் இருக்கும்போது அதைத் தவிர்த்து புளிய மரத்தை செல்வி தேர்ந்தெடுத்த காரணத்தை ரேஷ்மா பலமுறை யோசித்திருக்கிறாள். அறிய முடிந்ததில்லை. அவளும் சொல்லிவிடமாட்டாள். அன்று தள்ளி நின்று பார்த்தபோது சட்டென்று பிடிபட்டது. அடித்த மெல்லிய காற்றிற்கே அதன் கிளைகள் யாரோ ஏறுவதுபோல உலுக்கிக் கொண்டதைக் கண்டாள். மாமரத்தின் கிளைகள் ஆள் ஏறும்போதுதான் அசையும். இவர்கள் ஏறும்போது கிளை அசைவதைப் பார்ப்பவர்கள் யாருமில்லாததைக் கண்டு திடுக்கிட்டு விடுவார்கள். புளிய மரம் எப்போதும் அசைந்து கொண்டிருப்பதால் எந்தப் பிரச்சனையும் இல்லை. இல்லையென்றால் யாருக்காவது சந்தேகம் வந்து ஏதாவது மந்திரவாதியை கூட்டிவந்தால் தேவையில்லாத பிரச்சனை.
பின்னொருநாள் கீழே தாழ்ந்திருந்த கிளையில் அமர்ந்து ஏகாந்தமாய் ஊஞ்சலாடிக் கொண்டே தன் கதையைத் தொடர்ந்தாள் செல்வி.
“நான் மனசுக்குள்ள ஏதோ குறுகுறுன்னு இருக்கிறதாலதான் என்னென்னவோ செஞ்சேன்னு நெனச்சேன். அப்புறம்தான் தெரிஞ்சது அது மூளைக்குள்ள இருந்த குறுகுறுப்புன்னு. தலைக்குள்ள ஏதோ நகர்ற மாதிரியும் மண்டையோட்டத் தட்ற மாதிரியும் இருந்திச்சு. அப்போ இப்ப மாதிரி புதுசு புதுசான சோதனை பண்ற வசதியெல்லாம் இல்லை. டாக்டருங்க சும்மா கையப் பிடிச்சுப் பாத்துட்டு ஏதாவது மாத்திரை எழுதிக் கொடுப்பாங்க. ரெண்டு நாளைக்கு நல்லா தூக்கம் வரும். தூங்கறப்ப அந்தக் குறுகுறுப்பு இருக்காது. அந்த தூக்கம் போனதும் மெதுமெதுவா ஆரம்பிக்கும். பின்னந்தலையில மெதுவா நகர ஆரம்பிச்சு உச்சந்தலை வரைக்கும் போகும். கொஞ்சம் நேரம் அமைதியா இருந்திட்டு டக்குன்னு தட்ட ஆரம்பிக்கும். மெலிசான சத்தத்துல ஆரம்பிச்சு கொஞ்சங்கொஞ்சமா அதிகமாகும். இல்லை அதையே கூர்ந்து கவனிக்கிறதால அப்படித் தோனுமோ என்னவோ.
முடிய அவுத்து விட்டுட்டு தலையை ரெண்டு கையாலையும் சொறிவேன். கொஞ்சம் அடங்குற மாதிரியிருக்கும் மறுபடி ஆரம்பிக்கும். ஒரு கட்டத்துல என்னால எதுவுமே பண்ண முடியாதுன்னு உணர்ந்துகிட்டேன்.
எனக்கு மட்டும்தான் இந்தப் பிரச்சனை. எங்க வீட்ல எல்லோரும் அவங்கவங்க வாழ்க்கைய சரியா நடத்திக்கிட்டு இருந்தாங்க. அக்காவுக்கு கல்யாணம் பண்ணி திருச்சிக்கு அனுப்புனாங்க. ஊரில பொண்ணு பாத்து அண்ணனுக்கு கல்யாணம் பண்ணினாங்க. ரெண்டு பேருக்கும் புள்ளைங்க பொறந்துச்சுங்க.
என்னையக் கவனிக்காம எல்லோரும் சந்தோசமா இருக்காங்களேன்னு யோசிக்கல, காலம் யாருக்காகவும் காத்திருக்காதுன்னு புரிஞ்சுக்கிட்டேன். என் இம்சையை தவிர்க்க முடியாதுன்னு உணர்ந்ததும் அதோட சேர்ந்து எப்படி வாழ்றதுன்னு கத்துக்கிட்டேன். மண்டைக்குள்ள நகர்றத ஒரு பெரிய நத்தை மாதிரி நெனச்சுக்கிட்டேன். அதோட ஒவ்வொரு அடியையும் துல்லியமா கவனிச்சேன். அதுகூட பேச ஆரம்பிச்சேன். மனசுக்குள்ளதான். ஏன் இன்னைக்கு வேகமா போற, என்ன அவசரம், முக்கியமா பாக்க வேண்டிய வேலை எதுவும் இருக்கா என்பதாகவும், இன்னைக்கு ஏன் மெதுவா நடக்குற சாப்பாடு சரியில்லையா, ஒடம்புக்கு சுகமில்லையா என்பது போலவும்.
கொஞ்ச நாட்களிலேயே உள் பேச்சோடு வெளியிலயும் சரளமாக புழங்கத் தொடங்குனேன். வீட்டிலிருந்தவங்ககிட்ட வேடிக்கையாகவும் பிரியமாகவும் பேசி பழகுனதும் என்மேல அவர்கள் வச்சிருந்த அடாவடியானவங்கற பார்வை மாறத் தொடங்குச்சு. அவங்க பார்வையில அதுவரைக்கும் இல்லாத கனிவும் பிரியமும் தெரிஞ்சது.
ஊர்ல இருக்குற எல்லாச் சொந்தக்காரங்களையும் பாக்கனும்னு தோனுச்சு. அத வேற மாதிரி சொல்லனும்னா என்னோட வாழ்நாள் கொஞ்சந்தான் இருக்கும்னு உள்ளுக்குள்ள தோனுனதால அப்படியொரு ஆசை வந்துச்சுன்னு நெனைக்கிறேன்.
அந்த ஒருமாசந்தான் நான் ரொம்ப சந்தோசமா இருந்தேன். அப்பதான் புரிஞ்சது நாம அன்பக் கொடுத்தா மத்தவங்களும் அன்பக் கொடுப்பாங்கன்னு. இது எல்லோருக்கும் பொருந்துமான்னு தெரியல. நான் என் வாழ்க்கையோட கடைசி கட்டத்துல இருக்கேன்னு தெரிஞ்சதனாலகூட அவங்க என் மேல அன்பக் காட்டியிருக்கலாம்.
கடைசியா சங்கர் வீட்டுக்கு வந்தேன். இது என் சித்தப்பா வீடுதான். தம்பி சங்கருக்கு என்மேல எப்பவுமே பிரியம். ரெண்டு நாளு இங்க எல்லாக் கதைகளையும் பேசிக்கிட்டு ரொம்ப சந்தோசமா இருந்தேன். குளிச்சிட்டு சாப்பிட்டு எங்க வீட்டுக்கு போறதா முடிவு பண்ணினேன். பாத்ரூம்ல குளிச்சிட்டிருக்கும்போது தலையே வெடிக்கிற மாதிரி படீர்னு உள்ள சத்தம் கேட்டுச்சு. பாத்தா நான் கீழே கெடக்குறேன். என்ன சத்தம்… என்ன சத்தம்னு எல்லாரும் பாத்ரூம் கதவ தட்றாங்க. உள்ள எதுவும் சத்தங் கேட்காததால கதவ ஒடச்சிக்கிட்டு உள்ள வந்து என்னய தூக்குனாங்க. இதை எல்லாம் யாருக்கோ நடக்குற மாதிரி பாத்துக்கிட்டு நின்னேன்.
ஆட்டோ பிடிச்சு ஆஸ்பத்ரிக்கு தூக்கிக்கிட்டு போனாங்க. ஆட்டோவுல சங்கர் என் மொகத்தையே பாத்துக்கிட்டு இருந்தான். உயிர் முன்னாடியே போயிடுச்சுன்னு டாக்டர் சொல்லிட்டாரு. என் வீட்டாளுங்க ஏற்கனவே எதிர்பார்த்திருந்ததுதான் என்பதால் என் சாவு அவங்ளை பெருசா பாதிக்கலை. வருத்தம் மட்டும் இருந்தது.
ஆனால், சங்கர் ரெண்டு நாளா சாப்பிடாம பித்து பிடிச்ச மாதிரி இருந்தான். எல்லாரும் வற்புறுத்தி அவன சாப்பிட வச்சாலும் ஒரு வாரத்துக்கு யார் மொகத்தையும் நிமுந்து பாக்கல. அக்கா அக்கான்னு அவன் ஒதடு துடிச்சத என்னாலாலேயே பாக்கமுடியல.
“ஊருக்குப் போயி எல்லார்கிட்டேயும் போயிட்டு வாரேன்னு சந்தோசமா சொல்லிட்டு வந்தியே. எங்ககிட்ட சொல்லாம போயிட்டியே. எங்க பாவந்தான் ஒனக்கு எமனா வந்துச்சா. ஒங்க ஆத்தா அப்பன் மொகத்த கண்ணெடுத்து பாக்க என்னால முடியலையே” என்று சின்னம்மா நான் எதிரில் நிற்பதாக எண்ணிச் சொன்னார். உண்மையில் அப்போது நான் அங்குதான் நின்றேன்.
சித்தப்பாவிற்கு என்மீது தனிப்பிரியம் இல்லையென்றாலும் தன் பிள்ளைகளில் ஒன்றாகவே என்னையும் கருதினார். பொங்கி வரும் அழுகையை அடக்கிக் கொண்டு நடக்க வேண்டியவைகளை கவனித்துக் கொண்டிருந்தார்.
நான் எங்கே போறதுன்னு தெரியாம சுத்திக்கிட்டிருந்தேன். பதினைஞ்சு நாளைக்கப்புறம் எனக்கு சாப்பிடப் புடிச்சதா அவங்க நெனச்ச பலகாரங்களையும் இந்த ஊதாக்கலர் புடவையும் படைச்சி தொணையா கூடவே இருக்கனும்னு வேண்டிக்கிட்டாங்க. அதிலேர்ந்து இவங்களப் பாத்துக்கிட்டு இங்கதான் இருக்கேன்” என்று செல்வி சொல்லி முடித்தாள்.
பார்த்துக் கொண்டிருப்பதென்றால் எல்லா வசதிகளையும் உருவாக்கிக் கொடுப்பதும் வரும் கெட்டதையெல்லாம் தடுத்து நிறுத்துவதுமல்ல என்று ரேஷ்மாவிற்கு தெரியும். செல்வி செய்ததை அல்லது செய்ய முடிந்ததை ரேஷ்மாவும் பார்த்துக் கொண்டிருந்தாள். இவள் வீட்டிற்கு செய்வதற்கான காரியங்களாக மனதில் பதித்துக் கொண்டாள்.
இதுபோல தலைக்கு வருவதை தலைப்பாகை நோக்கித் திருப்புவதே இவளின் பணி. ரத்த காயம் ஏற்படும் என்றிருந்தால் கால்கட்டை விரலை டேபிளில் இடிக்க வைத்து ரத்தம் துளிர்க்க வைப்பதும், தலையில் கட்டுப் போடப்படும் என்றிருந்தால் வாசல் நிலையில் தலை இடிக்க வைத்து கட்டுப்போட வைப்பதும் இவளின் கைங்கரியம். பண விரயம் என்றிருக்கும்போது பாக்கெட்டில் இருந்து இரண்டு ரூபாய் வில்லை நழுவி கால்வாய்க்குள் சென்றுவிடும்.
செல்வத்தை சேர்த்துக் கொடுப்பது இவளால் இயலாது. ஏற்படவிருக்கும் தீயவற்றை மடைமாற்றி நீர்க்கச் செய்வது மட்டுமே இவளால் முடியும்.
செல்வி செய்வது போலவே தன் குடும்பத்திற்கு ரேஷ்மா செய்து வந்தாள். ஆனால், செல்வி யோசிப்பதுபோல விடுதலை பற்றி எண்ணியதில்லை. செல்வி திடீரென இப்படி யோசிப்பதன் காரணம் ரேஷ்மாவிற்கு தெரியவில்லை. ஒரு முறை கேட்க முயன்றபோது அதை கவனிக்காததுபோல அவள் வேறொன்றைப் பற்றி கேட்டாள். அதன்பிறகு இவள் கேட்கவில்லை.
ஆனாலும், ஆவல் பதிலை தெரிந்துகொள்ள உந்தியது.
“நீங்க ஏன் இவங்கள விட்டுட்டு போகனும்னு நெனைக்கிறீங்க”
“முப்பது வருசங்கிறது ஒரு தலைமுறை காலம். நான் இப்படி இருக்கத் தொடங்கி நாளையோட முப்பது வருசமாகுது. நாளைக்கும் எனக்கு படைப்பு வச்சு கும்பிட்டுட்டாங்கன்னா எப்பவுமே மீட்பு கிடையாது. அதோட இன்னொன்னும் இருக்குது. இப்போ நாம அவங்கள பெரிய பாதிப்புலேர்ந்து காப்பத்துறது ஒரு தள்ளி வைப்புதான். விதிக்கப்பட்ட எதுவுமே நிகழ்ந்துதான் ஆகும். அதை எந்த சக்தியாலயும் தடுக்க முடியாது. அடுத்து வர்ற பிறவிகள்ல அனுபவிச்சுதான் ஆகனும். அதிகமா தடுத்துக்கிட்டு இருந்தா அடுத்தடுத்த பிறவிகள்ல அனுபவிக்க வேண்டியது அதிகமாகுமில்ல. அதான் போதுமின்னு முடிவு பண்ணினேன்…” என்றாள் செல்வி. ரேஷ்மாவிற்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை.
மறுநாள். சங்கர் வீட்டில் ஏக களேபரம். அம்மா பழைய நிகழ்வொன்றைக் கூறி சங்கரின் மாமனாரைப் பற்றி குறை கூறினார். பலமுறை பேசப்பட்டு முடிவு பெறாத விவகாரம் அது. இப்போது மறுபடி ஏன் நினைவிற்கு வந்தது என குழம்பி சங்கர் திகைத்தான். சங்கருக்கு உதவுவதாக எண்ணி “சரி விடு, எப்பவோ நடந்ததை இப்ப ஏன் பேசற..” என அப்பா கேட்கவும், கனலை விசிறிவிட்டதுபோல் ஆனது. அதன் பிறகு அம்மா வீட்டில் இருந்த அனைவரின் குறைகளையும் பட்டியலிடத் தொடங்கினார். நரி புகுந்த ஆட்டுக்கிடைபோல பெரும் சலசலப்புடன் வீடு திகழ்ந்ததை ரேஷ்மா கண்டாள். செல்வி நினைத்தது உறுதியாக நடக்கப்போகிறது என்று தோன்றியது.
காலையும் மதியமும் யாரும் சாப்பிடவில்லை. அம்மா பேசியே களைத்து தூங்கிவிட்டார். “சாப்பிட ஏதாவது வாங்கிட்டு வர்றேன்” என்று கூறியபடி நான்கு மணிக்கு சங்கர் தன் மகனுடன் வெளியே கிளம்பினான்.
ஐந்து மணிக்கு சங்கர் பெரிய கட்டைப் பையில் பொருட்களை வாங்கி வந்தான். அதில் கருநீலப் புடவையும் செல்விக்குப் பிடித்தமான திண்பண்டங்களும் இருந்தன. அதைப் பார்த்தவுடனேயே ரமாவிற்கு புரிந்துவிட்டது. “இன்னைக்குத்தானா அத்தாச்சி நினைவு நாளு… எப்படிங்க ஞாபகம் வந்துச்சு..”
“காய் வாங்கறப்ப அம்மன் கோவில் பூசாரி பக்கத்துல நின்னாரு. காய்க்காரம்மாக்கிட்ட அவங்க வீட்டு தெய்வத்துக்கு படையல் போடறதப் பத்தி சொல்லிக்கிட்டிருந்தார். சட்டுன்னு எனக்கு செல்வியக்கா ஞாபகம் வந்திடுச்சு..” என்றான்.
ரேஷ்மா விழைந்தது நடக்கப் போகிறது என்றாலும் இவள் மனதினுள் ஓர் அதிர்வு தோன்ற திரும்பி செல்வியைப் பார்த்தாள். அவள் முகத்தில் இளநகை பூத்திருந்தது.
“ஒனக்கு சந்தோசம்தானே. யோசிச்சு பாத்தேன். இவங்கள விட்டுட்டு போய் அடையிற எதுவும் இங்கே இவங்கள பாத்துக்குற நிறைவவிட கூடுதலா இருக்காதுன்னு தோனுச்சு. அதனாலதான்…” என்று செல்வி சொன்னபோது இவள் முகத்திலும் புன்னகை தோன்றியது.
ஆறுமணி ஆனபோது வெண்தாளில் தீப்பற்றுவதுபோல செல்வியின் கால்கள் ஒளி கொள்ளத் தொடங்கியதை ஏனென்று புரியாமல் ரேஷ்மா பார்த்தாள். முழுநிலா ஒளிபோல தண்மையான ஒளி. அப்படியே அவள் உடலின்மேல் மெதுவாக பரவத் தொடங்கியது. தொடை இடுப்பு வயிறு என உயர்ந்து உடல் முழுவதும் ஒளிப்பிழம்பாக மாறி பிரகாசித்தது. இப்போதும் முகத்தின் புன்னகை மாறாமல் சங்கரின் வீட்டை நோக்கினாள். மரமே பிரகாசமடைந்தது. ரேஷ்மாவைப் பார்த்து விடைபெறல்போல கண்ணில் மெல்லிய சிமிட்டல் தோன்ற சில கணங்களில் சட்டென அவள் உருவம் மறைய சட்டென பெரும் இருள் சூழ்ந்தது. ரேஷ்மா திகைப்பும் பாரமும் கூடிய மனதுடன் சங்கரின் வீட்டினருகில் சென்றாள்.
“ஏங்க, பொருள்களெல்லாம் வாங்கி வந்துட்டு படையல் போடாம இருந்திட்டீங்க” என்று ரமா சங்கரிடம் கேட்டாள்.
“அந்தப் பூசாரி, வீட்டுச் சாமி படையல் போடலைன்னா கட்டுலேர்ந்து விடுவிச்சுக்கிட்டு அதோட எடத்துக்குப் போயிடும்னு சொன்னாரு. சட்டுன்னு செல்வி அக்கா நெனப்பு வந்து எல்லாப் பொருளுங்களையும் வாங்கிட்டு வந்தேன். ஆனா அவர் சொன்னத திரும்ப யோசிச்சப்பதான் அக்காவ நாம கட்டிப் போடுறோம்னு புரிஞ்சது. படையல்ங்கிற பேர்ல வருசாவருசம் அந்தக் கயித்த புதுசா மாத்றோம். அக்கா இன்னொரு நிறைவான எடத்துக்குப் போறத நம்ம சுயநலத்துக்காக தடுத்து வைக்கிறது தப்புன்னு தோனிச்சும்மா..” என்று கூறியபோது அவன் கைகளைப் பற்றியிருந்த ரமாவின் கைகளில் இரண்டு சொட்டு கண்ணீர் விழுந்து தெறித்தது.
000

கா. சிவா
விரிசல், மீச்சிறுதுளி, கரவுப்பழி ஆகிய மூன்று சிறுகதை தொகுப்புகளும் "கலைடாஸ்கோப்பினுள் ஓர் எறும்பு" எனும் கவிதைத் தொகுப்பும் "தண்தழல்" எனும் நாவலும் எழுதி வெளியிட்டுள்ளார்.
Discover more from
Subscribe to get the latest posts sent to your email.
