இப்பிடி ஆயிப்போச்சு பாத்துக்கோங்களேன்! : வா.மு. கோமு

காட்டுப்புதூர் கணேசமூர்த்தி வீட்டின் முன்பாக சாமியானா துணியை அவசரமாய் கட்டிக்கொண்டிருந்தார்கள். அப்போதே ஊருக்குள்ளிருக்கும் இருபது வீடுகளிலிருந்த சனம் முச்சூடும் கணேசமூர்த்தி வீட்டில்தான் நின்றிருந்தது. கணேசமூர்த்தியின் சம்சாரம் பூங்கொடியும், பையன் மணிகண்டனும் இன்னமும் மார்ச்சுவரியில் இருப்பதாய்த்தான் கணேசமூர்த்திக்கு தகவல் கொடுத்திருந்தார்கள். ஆனால் இன்னும் ஒருமணி நேரத்தில் ஆத்தாவின் பிணத்தை கொடுத்துவிடுவார்கள் என்றும் சொன்னார்கள்.

கணேசமூர்த்தியின் அம்மாவுக்கு வயது இருந்தால் எழுபதிற்கும் மேலிருக்கும். காட்டுப்புதூரிலிருந்து இரண்டு கிலோ மீட்டர் தள்ளியிருக்கும் இவர்களது ஒரு ஏக்கரா காட்டினுள் சாலை போட்டு தனியே தான் அது ஆடுகளை மேய்த்துக்கொண்டு பலகாலம் இருந்தது. கடந்த இரண்டு வருடமாய்த்தான் ஊருக்குள் இருக்கும் வீட்டுக்கு வந்து சேர்ந்திருந்தது. வீட்டுக்கு வந்து சேர்ந்திருந்தாலும் வீட்டின் பின்புறம் அதற்கு வசதியாய் ஒரு தென்னையோலைச்சாலை போட்டுக்கொண்டு அதனுள் தங்கிவிட்டது. 

அடிக்கடி உடம்புக்கு முடியாமல் போகிறதெனத்தான் ஆத்தாவும் காட்டிலிருந்து ஊருக்குள் வந்தது. வருகையில் கூடவே ஆடுகள் ஐந்து உருப்படியை கூட்டிவந்து சாலைக்கு அருகேயே அவைகளுக்குமொரு பட்டியைப்போட்டு அதனுள் நிற்கவைத்துவிட்டது. கணேசமூர்த்தியின் அம்மாவுக்கு தெரிந்த ஒரே வேலை ஆடுகளை மேய்ப்பதும் அதை விருத்தி செய்வதும் தான். ஆடுகளின் விற்பனை நிலவரம் கூட அதற்குத்தெரியாது. அதற்கெல்லாம் கணேசமூர்த்திதான் போக வேண்டும். 

கணேசமூர்த்தியின் அப்பா மாணிக்கம் உயிருடன் இருக்கும் காலம் வரை ஊருக்குள்ளிருக்கும் வீட்டில் தான் இருந்தது. மாணிக்கம் இறந்து இப்போது பத்து வருடங்கள் ஆகிவிட்டது. அவர் இறந்த ஆறாவது மாதம் அம்மா காட்டுக்கு சட்டி பானை, குடம் என்று  தூக்கிக்கொண்டு போய்விட்டது. வாரத்தில் ஒரு நாள் ஞாயிற்ர்க்கிழமையன்று பேரப்பிள்ளைகளைப்பார்க்க ஊருக்குள் வந்து போவதோடு சரி.

அம்மா அப்படி தனியே ஒத்தையாளாய் காட்டுச்சாலைக்கு போய்விட வீட்டில் ஏதாவது மருமகளுடன் பிரச்சனையா என்று பார்த்தால் அப்படியெதுவுமில்லை. அது ஊருக்கே தெரிந்த விஷயம் தான். ஆனாலும் எதற்காக அம்மா அப்படியொரு முடிவெடுத்து வனவாசம் போனதென்று கணேசமூர்த்திக்கு இன்றுவரை தெரியாது. கணேசமூர்த்தி குறுநகரில் தையல்கடை போட்டிருந்தான். இருபது வருட காலமாக ஒத்தையாளாய் கடையை கவனித்துக்கொண்டு வருகிறான். லேடீஸ் ஜாக்கெட் தைப்பதில் கில்லாடி என்று பெயர்பெற்றவன் கணேசமூர்த்தி. வெளியூரிலிருந்தெல்லாம் அளவு ஜாக்கெட்டுடன் பெண்கள் அவன் கடைக்கு வந்து போவார்கள். ஒத்தையாளாய் கடையை இருபது வருடங்களாக ஜமாளிக்கும் சாமார்த்தியம் அவனிடமிருந்தது. இன்னமுமிருக்கிறது.

கணேசமூர்த்திக்கு அலைபேசியில் முதலாக தகவல் வருகையில் ஜாக்கெட்டுக்கு ஊக்கு வைத்து தைத்துக்கொண்டிருந்தான். தகவலை முதலாக சரியாக உள்வாங்காமல் யாரோ அம்மா ஆடுகளை சாலையில் மேய்த்துக்கொண்டிருந்ததாகவும், கார் ஒன்று அம்மாவை உரசிவிட்டதாகவும் ‘உம்’ போட்டு கேட்டுக்கொண்டிருந்தவனுக்கு அவன் சம்சாரம் தான் போனில் பேசுகிறது என்று கூட முதலாக தெரியாமல் கவனத்தை தொழிலில் வைத்திருந்தான். ‘யோவ்! என்னய்யா உம் கொட்டிக்கிட்டிடுக்கே?’ என்று அலைபேசியில் குரலை அவள் உயர்த்தவும் தான் ‘என்ன? என்ன ஒளறீட்டு இருக்கே?’ என்று சுவரில் தொங்கும் கடிகாரத்தைப் பார்த்தான். அது மணி மதியம் ஒன்றைக்காட்டியது.

“நானும் பழனானும் 108 வேன் வந்ததீம் இப்ப ஆஸ்பத்திரிக்கி போறோம்! நீயி கடையை பூட்டிட்டு வா!” பூங்கொடி போனை வைத்துவிட்டாள். இவன் நிதானத்திற்கு வர ஐந்து நிமிடமாயிற்று. கடையை பூட்டி சாவியை எடுத்துக்கொண்டு தன் சைக்கிளை எடுத்தான். வீட்டில் எக்ஸெல் சூப்பர் இருந்தாலும் எரிபொருள் செலவீனம் கருத்தி கடைக்கு வருவதற்கெல்லாம் சைக்கிளையே உபயோகப்படுத்திக்கொண்டிருந்தான் கணேசமூர்த்தி. போக இவன் ஊருக்கும் குறுநகருக்கும் தொலைவு என்று பார்த்தால் ஏழு கிலோமீட்டர் வரும்.

அம்மா காருக்குக்குறுக்கே  பாய்ந்து தன் ஆட்டுக்குட்டியை காப்பாற்ற முயற்சியெடுப்பதாய் சைக்கிளில் வருகையில் ஸ்லோமோசனில் இவன் கண்களுக்கு தெரிந்துகொண்டேயிருந்தது. ஒரு கிலோமீட்டர் தாண்டியதும் தான் கார் பிரேக் சப்தமும், அம்மா ஆட்டுக்குட்டியை கட்டித்தாவியபடி டிச்சுக்குழியில் அப்படியே சோடா பல்டி ஒன்றை போடுவதையும் கண்டான். அந்தக்காட்சியும் ஒரு கிலோமீட்டருக்கு ரிபீட் ஆகிக்கொண்டேயிருந்தது. 

இவன் காட்டுப்புதூர் சாலையில் சைக்கிளைத்திருப்பி வந்துகொண்டிருக்கையில் சம்பவம் நடந்த இடத்தில் இன்னமும் கணிசமாக கூட்டமிருந்தது. ‘இதென்ன கணேசனே வந்துட்டான்!’ என்று இவனிடம் குழுமினார்கள். ‘ஆடுங்களை ஓட்டீட்டு ஊட்டுக்கு நம்மூரப்பாத்து வந்திருக்குது கணேசா.. இந்த ரூட்டுல எவனாச்சிம் காரை வேகமா ஓட்டீட்டு வருவானா? யாரு.. நம்ம குட்டக்காட்டு கோவிந்தன் இருந்தான்ல.. அவன் பையன் தான்! யார்றான்னு விசாரிச்சங்காட்டி சொன்னான். குட்டக்காட்டு கோவிந்தனை தான் ஊரு ஒலவத்துக்கே தெரியுமே! வேற எவனாச்சியுமா இருந்திருந்தா மாத்து போடாம உட்டுருவமா? பையன் காரோட அவத்திக்கி கோயக்கிட்ட நிக்கான்.’ பொன்னுச்சாமி விளக்கம் சொன்னான்.

“அத வுடு பொன்னுச்சாமி.. ஆத்தா பொழச்சிக்குமா?’ என்றான் கணேசமூர்த்தி.

“அதெங்கப்பா.. மண்டையில அடிபட்டிருக்கு.. ரத்தம் காதுல துளி வந்திருச்சு! கையி காலுல எல்லாம் ஒரு வின்னம் படல!! 

“கூட யாரு போயிருக்கா?”

“நம்ம ஆண்டிகாட்டு குமரேசனும் உன் பையனும் சம்சாரமும் போயிருக்காங்க! எல்லாம் குமரேசன் பார்த்துக்குவான்! இரு இரு போனு ஒன்னு வருது, என்னன்னு பேசீட்டு வர்றேன்!” பொன்னுச்சாமி ஓரமாய் ஒதுங்கினான்.

குட்டக்காட்டு கோவிந்தனை இவனுக்குத்தெரியும். பஞ்சாயத்து தேர்தலில் ஒருமுறை வெற்றிபெற்றிருக்கிறார். அதற்காக காட்டுப்புதூர் முழுக்கவுமே அவர் வெற்றிபெற ஒத்துழைப்பு கொடுத்தது அப்போது. கோவிந்தனுக்கு ஒரு காரோட்டும் பையன் இருக்கும் விஷயமெல்லாம் இப்போது தான் தெரிகிறது இவனுக்கு. இவன் அந்தப்பையனைப்பார்க்கையில் அவன் குட்டக்காட்டு கோவிந்தனைப்போன்ற தோற்றத்தில்தான் இருந்தான். ஜெராக்ஸ் மெஷினில் கோவிந்தனை விட்டு ரெண்டு ரூபாய்க்கு இன்னொரு கோவிந்தனை வாங்கிக்கொண்டதுபோல!

“அண்ணா, ஆத்தா திடீருன்னு வண்டிக்கும் குறுக்கால பூந்துடுச்சுங்கண்ணா! சடக்கெ போடறதுக்குள்ள டொம்முனு சத்தம் கேட்டுச்சு! இத்தனைக்கிம் நான் வேகமாக்கூட வரலைங்கண்ணா! இந்த ரோட்டுல எப்பிடிங்கண்ணா நான் வேகமா வரமுடியும்? வெள்ளாங்கோயில் போயிட்டு மெயின்ரோட்டுல போகாம ஏதோ ஞாவகத்துல இந்த ரூட்டுல உட்டுட்டேன். நேரம் பாருங்கண்ணா இதுல வந்து பாவத்தை தேடிக்கிட்டேன்னுங்கண்ணா!”

“அட உடப்பா நீயி. ஒன்னவே திரும்பத் திரும்பச் சொல்லீட்டு.. நேரங்காலம் வந்தா என்ன நடக்கணுமோ அது நடந்தேதான் தீரும் பாத்துக்க..ஏந்தம்பி உங்கப்பா என்ன வர்றன்னு சொன்னாரா?” என்று பொன்னுச்சாமி சொல்லிக்கொண்டே வந்து நின்றான். 

“கிளம்பிட்டாருங்க அப்பலையாவே.. சித்தங்கூரியத்துல வந்துடுவாரு!” சித்தங்கூரியத்தில் வந்தவர் பையனை சீக்கிரமாய் அங்கிருந்து தாட்டி அனுப்பிவிட்டு தான் மட்டும் காட்டுப்புதூரில் நின்றுகொண்டார். இதோ சாமியானா கட்டியவர்கள் அடுத்ததாக ஆட்டோவிலிருந்து சேர்களை எடுத்து வரிசையாகப்போடவும் அதிலொன்றில் போய் முதல் ஆளாக அமர்ந்துகொண்டார் குட்டக்காட்டு கோவிந்தன். 

அவர் இருந்ததும் நல்லதாய் போயிற்று. எக்ஸிடெண்ட் என்பதால் மருத்துவமனையில் போலீஸாருக்கு தகவல் கொடுத்து அவர்கள் கேஸ் எழுதிக்கொண்டார்கள். ஆத்தா 108-ல் மருத்துவமனை நோக்கி போகையிலேயே போய்விட்டது. இருந்தும் மருத்துவமனை சம்பிரதாயங்கள் முடியாமல் ஆத்தாவை கொடுத்துவிடுவார்களா? இருந்தும் இங்கிருந்து கொண்டே குட்டக்காட்டு கோவிந்தன் தன் அலைபேசி வாயிலாக காரியங்களை உடனே நிகழ்த்தினார். உடலெங்கும் வின்னம் படாமல் போன ஆத்தா வின்னம் படாமலேயே திரும்பவேண்டுமென சொல்லிவிட்டார். 

தகவலறிந்து பக்கத்து ஊர்களிலிருக்கும் சொந்த பந்தங்கள் கணேசமூர்த்தி வீட்டு வர ஆரம்பித்துவிட்டது. கணேசமூர்த்தியின் அக்கா சுந்தரவள்ளியும் தன் கணவனோடு பைக்கில் வந்து இறங்கிவிட்டாள். ஆட்கள் வரத்துவங்கும் நேரத்தில் சாமியானாக்காரர்கள் டியூப் லைட்டுகளையும் ஆங்காங்கே நாலஞ்சண்ணம் கட்டிமுடித்துவிட்டார்கள். இரவுச்சாப்பாட்டுக்கு குட்டியப்பன் கடையில் அறுபது எழுபதுபேருக்கு இட்லி சொல்லியிருந்தான் பொன்னுச்சாமி. உணவை தன் வீட்டில் கொண்டுவந்து இறக்கவும் சொல்லியிருந்தான். இழவு கண்ட வீட்டில் வந்தவர்கள் சாப்பிட சங்கடப்படுவார்கள் என்று தான் அந்த ஏற்பாடு.

மற்ற வேலைகளையும் கவனித்துக்கொண்டிருந்த பொன்னுச்சாமி அவ்வப்போது கண்ணில் படும் தெரிந்த தலைகளுக்கு வணக்கம் வைத்து ‘எப்படியாச்சுங்க?’ என்கிற அவர்களின் கேள்விகளுக்கு ‘இப்பியாயிப்போச்சுங்க!’ என்று விளக்கமும் சொல்லிக்கொண்டிருந்தான்.

“ஆஸ்பத்திரில இருந்து பாடி வந்துட்டு இருக்குதுங்களா?”

“ஆத்தாவெ பொட்டணம் கட்டி ஏத்தியாச்சுங்களாமா.. அரைமணி நேரத்துல ஆத்தா வந்துடும்”

“எப்பிடிங்க.. எரிக்கறதுன்னு முடிவு பண்ணியிருக்கீங்களா?”

“ஆத்தா என்ன ஒடம்புக்கு முடியாமயா படுத்திருந்துச்சு நீங்க சொல்றாப்ல எரிக்கிறதுக்கு? சுடுகாட்டுல குழி வெட்டீட்டு இருக்கறாங்க.. இருட்டு கட்டுறதுக்குள்ள ஆத்தாவை பொதைச்சுடலாம்னு இருக்கோம்! இருட்டாயிப்போச்சுன்னா வந்தவீங்களுக்கு சிரமம். சாமத்துல பூச்சி பொட்டுக சுத்தீட்டு இருந்து எதாச்சிம் ஆயிப்போச்சுன்னா அதை ஒருபக்கம் பார்க்கணும்ல!”

“சேரி நீங்க காரியத்தை பாருங்க.. சித்தெ சேர்ல போயி உக்கோரறோம்”

உள்ளூர் மணியம்மா அமர்ந்திருந்தவர்களுக்கு தட்டில் காபி டம்ளர்களை வைத்து  கொண்டுவந்து கொடுத்துக்கொண்டிருந்தது. சிலர் காபி டம்ளரை எடுத்துக்கொண்டார்கள். சிலர் வேண்டாமென மண்டையை ஆட்டினார்கள். கருப்பனை பந்தத்தை பற்றவைக்கச்சொல்லிக்கொண்டிருந்தார் ஒருவர். ‘இதா இப்ப பத்தவச்சிடறனுங்க’ என்று அவன் சொல்லிக்கொண்டிருந்தான். நாவிதன் நல்லசாமி பாட்டில் வீசிவிட்டான் போல! வந்ததிலிருந்து அவன் அதிகாரம் தான் அங்கே பெரிதாய் கேட்டுக்கொண்டிருந்தது.

“ஆத்தாவெ வந்ததீம் எடுக்கோணுமின்னு சொல்றீங்கெ.. மஞ்சக்கொட்டிப் போடுறவங்க யாருங்கெ? அவங்களை ரெடியா இருக்கச் சொல்லுங்கெ! அப்புறம் வந்து எறக்குன பொறகு நானு நீயின்னு சொல்லிட்டு இருக்காதீங்கெ!”

“அதுக்கெல்லாம் ஆளுங்க இருக்குது நல்லான்”

“ஆளுங்க இருக்குது சாமி.. அவசரத்துக்கு அண்டாக்குள்ள கூட கையி போகாதுன்னு சொல்றாங்கள்ள..”

சாமியானா பந்தலின் கீழ் இருந்த சேர்கள் அனைத்தும் நிரம்பிவிட்டன. சிலர் வாசலிலிலும் சாலையிலும் நின்றிருந்தனர். ஆஸ்பத்திரியிலிருந்து வண்டி ஊர்நோக்கி வந்துகொண்டிருக்கிறதென்ற தகவல் கிடைத்துவிட்டது. பெண்களின் அழுகைக்குரல் இழவு வீட்டினுள் கேட்டுக்கொண்டேயிருந்தது. 

கணேசமூர்த்தி வீட்டு நாய் டைகர் திடீரென அத்தனை சனத்தை தன் வாசலில் பார்த்து மிரண்டு அங்குமிங்குமாய் குறுக்கையும் முறுக்கையும் பிதுரு கெட்டு ஓடியது. ‘இதெங்கப்பா காலுக்குள்ளயும் கைக்குள்ளயும் பூந்துட்டு.. யாரு கணேசன் நாயா? யாராச்சிம் புடிச்சு அப்படி ஓரமா கட்டுங்கப்பா!’ என்றொருவர் குரல் எழுப்பினார். அவர் குரலை ஊருக்குள்ளிருந்து என்ன ஏதென பார்த்துப்போக வந்திருந்த இரண்டு நாய்களும் கூட கண்டுகொள்ளவில்லை.

அது கணேசமூர்த்தி எடுத்துவந்து வளர்த்திய நாயுமல்ல. ஆத்தா தான் ஒருவருடம் முன்பாக சாலையில் டிச்சுக்குழியில் கண்விழிக்காமல் கிடந்த குட்டியை தூக்கிவந்து வளர்த்தினாள். அது ஆத்தாவின் நாய். அதற்கு இன்னமும் விசயம் எதுவும் பிடிபடவில்லை. ஆத்தா இந்த நேரத்தில் சாலையில் வந்து படுத்துக்கிடக்குமே! காணோமே! என்றுதான் தென்னஞ்சாலைக்கும் ரோட்டுக்குமாக ஓடிகொண்டிருந்தது.

ஒருவழியாய் வேன் ஆஸ்பத்திரியிலிருந்து ஊர் வந்து சேர்ந்துவிட்டது. ஆத்தாவை தூக்கி வந்தவர்கள் வாசலிலேயே பாயை விரித்து அதில் கிடத்தினார்கள். டைகர் நாய்க்கு விஷயம் புரிந்துவிட்டது போல ஆஸ்பத்திரி வேனைப்பார்த்து ஊளையிட்டது! கருப்பன் பந்தத்தில் எண்ணெயை ஊற்றி நன்கு எரியும்படி செய்தான். ‘மஞ்சக்கொட்டிப்போடுறவங்க இப்படி முன்னாடி வாங்கெ!’ என்று நாவிதன் நல்லசாமி சப்தம் கேட்டது.

அடுத்த பத்து நிமிடத்தில் ஆத்தாவை பாடையில் கிடத்தி தூக்கிக்கொண்டு நான்குபேர் சுடுகாடு நோக்கி நடக்க ஆரம்பித்தபோது டைகர் நாய் ரோட்டில் நின்று கொண்டிருந்தது பாடைக்கும் குறுக்கே வந்து நின்றுகொண்டு குரைக்க ஆரம்பித்துவிட்டது! ’அட ஆத்தாளை கொண்டுபோயி பெதைக்கப்போறோம்.. சித்த வழியவுடு நீயி! நீயி குறுக்காட்டுனா மட்டும் ஆத்தா உசுரோட எந்திரிச்சு வந்துருவாளா?’ யாரோ குரலை உயர்த்தவும் நாய் ஒதுங்கி ஊளையிட்டது.

 ஆத்தாவின் வாழ்க்கைபற்றி பெரிதாக பலருக்கும் தெரிந்திருக்கவில்லை. அதைப்பற்றி பேசி இப்போது என்ன ஆகிவிடப்போகிறது? போன ஆத்தா திரும்பப்போவதில்லை. ஊரைத்தாண்டியதும் பாடையைத் திருப்பச்சொல்லி நாவிதன் நல்லசாமி குரல் கொடுத்தான். அவன் கையில் பொரிக்கூடையிருந்தது. பாடை திரும்ப ஆத்தா சுடுகாட்டைப் பார்த்தவாறு பாடையின்மேல் பயணித்தது. சுடுகாடு ஒன்னரைகிலோ மீட்டதூரத்தில் தான் இருந்தது. சில ஊர்களில் மூன்று கிலோ மீட்டருக்கும் மேலாக இருக்கும். சம்பிரதாயம் விட்டுப்போகாமல் இன்னமும் பாடையில் இடையிடையே ஆட்கள் மாற்றி தூக்கிப்போவார்கள். 

சுடுகாடு நிரம்ப திருகுகள்ளிக்கூட்டம் நின்றிருந்தது. ஆங்காங்கே வேப்பை மரங்களும் நின்றிருக்க மறைப்பான இடத்தில் குழி வெட்டியிருந்தார்கள். விசயம் தெரிந்த மாணிக்கன் தன் டீவி எஸ்சிலேயே நேராக சுடுகாடு வந்து இறங்கி விட்டான். மாணிக்கன் காரைவேலைக்கு போய்வந்து கொண்டிருப்பவன். ஊரில் நல்லவிசயம் கெட்டவிசயம் எல்லாவற்றிலும் முதல் ஆளாய் நிற்பவன். வயது இப்போது நாற்பத்தொன்று இருக்கும். மாணிக்கனுக்கு குடும்பமென்று எதுவுமில்லை. எல்லோரும் போய்விட்டார்கள். 

அவனுக்கு திருமணமும் ஆயிருக்கவில்லை. காலம் போன கடைசியிலும் சில்க் சுமிதாவின் ரசிகன். தனக்கு சில்க் போல பொண்ணு வேண்டுமென பார்ப்போரிடமெல்லாம் சொல்லிக்கொண்டிருந்தான். எந்தப்பெண்ணும் சில்க் போன்ற முகஜாடை இல்லாமல் போகவே திருமணத்தை தள்ளிப் போட்டுக்கொண்டே வந்தவன் வீட்டினுள் நுழைந்தால் கடவுளர் போட்டோக்களுக்குப் பதிலாக சில்க் போட்டோக்களே சுவற்றில் தொங்கிக்கொண்டிருக்கும். 

கொரனா சமயத்தில் உலகம் அழிந்துவிடுமென்று நம்பிய நாற்பதுபேரில் அவனும் ஒருவன். நாற்பது வயதைக்கடந்தவன் என்றாலும் பெண்ணின் அருகாமை கூட அவனுக்கு கிடையாது. பதிலாக வீச்சுப்போடும் பழக்கத்தை இருபத்தைந்து வருடங்களாக வைத்திருந்தான். அதை மற்றவர்களிடம் எளிதாகவும் சொல்வான். எதாவது கல்யாண விசேசத்திற்கு ஊருக்குள்ளிருந்து வேன் கிளம்புகிறது சீக்கிரமாய் வாடா! என்று யாரேனும் போய் அவனை கூப்பிட்டால் அவர்களிடமே பதிலைச்சொல்லி தாட்டி அனுப்பியிருப்பான். ‘அண்ணன் வீச்சு போட்டுட்டு இருக்குதாமா.. முடிச்சதீம் வந்துடறதா சொல்லியுட்டாருங்க!’ 

அவன் கையில் சின்னதாக சில்க் வாயைத்திறந்தாற்போல ஒரு போட்டோ ஒன்றிருக்கும்! மற்றவர்களிடம் எடுத்து சாதாரணமாக காண்பிப்பான்.  ‘இதுல பாரு, சில்க் வாயை திறந்தாப்லையே இருக்காப்லைல்ல.. இன்னும் வேணும் இன்னும் வேணும் பத்தலைன்னு கேக்குறாப்லையே இருக்கும்டா எனக்கு!’ என்பான். ‘சரி சரி நீ செத்தா உன்னை புதைக்கிறப்ப குழியில சில்க் போட்டாவையும் வச்சு பொதைச்சிடறோம்டா மாணிக்கா!’ என்றே ஊரார் சொல்வார்கள். 

தனியாக வேலைக்குப்போய் வந்து, தனியாகவே சமைத்து, தனியாகவே கட்டிலில் கிடக்கும் மாணிக்கனுக்கு இன்னமும் திருமண ஆசையானது அவனை விட்டுப்போகவேயில்லை. இன்னமும் ‘உங்க சொந்தத்துல பொண்ணு இருக்கா?’ என்று பார்ப்போரிடமெல்லாம் கூசாமல் கேட்பான். ‘உனக்குத்தான் சில்க் மாதிரி பொண்ணு வேணுமேடா.. அதுக்கு எங்க போறது?’ ‘சில்க் மாதிரி இல்லாட்டிப்போச்சாதுங்க.. ஓரளவுக்காச்சிம்.. அந்த கண்ணு மாதிரி கூட இல்லீன்னா அவளோட உதடு மாதிரிக்கூட இருந்தாப்போதுங்க!’ ‘டே இன்னிக்கு ட்ரெண்டு திரிசாடா! திரிசா மாதிரி ஒல்லிப்பிச்சான் ஒடம்புக்காரியை நீ கேட்டா சீக்கிரமா புடிச்சிடலாமடா!’ ’திரிசா மாதிரியெல்லாம் எனக்கு வேண்டாமுங்க.. நீங்க பொண்ணே எனக்கு பாக்காட்டியும் போச்சாது!’

அவன் வருகையில் நாவிதர் குழிக்குள் நின்று கொண்டு ‘ஆத்தாவுக்கு பணம் போடறவங்கெல்லாம் போடுங்க சாமிகளா!’ என்று கூவிக்கொண்டிருந்தார். எல்லோரும் வேட்டியைத்தூக்கி ஆத்தாவுக்கு  என்று பத்து, இருபது நோட்டுக்களை எடுத்து குழிக்குள் வீசி கும்பிட்டுவிட்டு வந்தார்கள். மாணிக்கன் தன் மேல்பாக்கெட்டிலிருந்து ஐம்பதுரூபாய் தாளை ஆத்தாவுக்கு வீசிவிட்டு வந்தவனை உள்ளூர் குட்டியப்பன் தன்பக்கமாக ’வாடா’ என்று அழைத்து நிப்பாட்டிக்கொண்டார்.

“ஏண்டா லேட்டு?”

“வேலைக்காட்டுல சிக்கீட்டனுங்கண்ணா.. கிளம்புறதுக்கு உடறாங்களா ஒன்னா.. உடனே போலாம் உடனே போலாம்னு எப்பவும் போல ஆறுமணிக்கித்தான் உட்டானுங்க!”

“சிவகாமி வந்திருக்காடா!”

“எந்தச் சிவகாமி?”

“அட எந்தூர்ல நீயி இருக்கே? பொன்னாம்புள்ளையத் தெரியாதா உனக்கு?”

“ஆமா, அவளத்தான் பொள்ளாச்சிக்கி கட்டிக்குடுத்தாச்சே..புருசன் செத்துக்கூட இப்ப நாலு வருசமிருக்குமே!”

“அதாண்டா சொல்றேன்.. அவ எழவுக்கு இப்பத்தான் வந்து சேர்ந்தாடா.. கனுக்கனுன்னு சில்க்காட்டமே இருக்கா..”

“நீங்க கம்முன்னே இருக்க மாண்டீங்கண்ணா.. என்னைய நோண்டீட்டே இருக்கலீன்னா தூக்கமே வராதாண்னா உங்களுக்கு?”

“என்னடா திருவாத்தானாட்ட பேசிட்டு இருக்கே? இருந்த ஒரு புள்ளையையும் ரெண்டு மாசத்திக்கிம் முன்னால் கட்டிக்குடுத்துட்டாடா.. உனக்கு வயசு நாற்பத்தொன்னுங்கறே.. அதுக்கு முப்பத்தொம்பது இருக்கும். அவளும் பொள்ளாச்சில தனியா உக்கோந்துட்டு சோத்தை ஆக்கி உன்னியாட்டமேதான தின்னுட்டு குக்கீருக்கா! வந்தவகிட்ட போயி சும்மா பேச்சுக்குடுத்துப்பாருடா.. “

“போங்கண்ணா.. பொள்ளாச்சில அவளுக்கு நிறைய தொடர்புக இருக்குன்னு டெல்லி வரைக்கிம் தகவல் போயி லீக்காயி கிடக்குதுண்ணா!”

“மறுபடியும் திருவாத்தானாட்டமே பேசக்கூடாது பாத்துக்க.. டெல்லி என்ன அமெரிக்கா வரைக்கிம் அவமேல குத்தம் பேசுனா பேச்சிச்சாட்டாறாங்கடா! நான் என்ன சொல்றேன்னா நீயி மொதல்ல போயி அவகிட்ட வா தனியாப்போயி அஞ்சி நிமுசம் பேசலாம்னு எங்கூட்டு திண்ணைக்கே கூட கூட்டிட்டு வந்துரு! எம்பட ஊட்டுக்காரிக்கித்தான் காது கேக்காதுன்னு கனடா வரைக்கிம் தெரியுமே.. நீங்க சத்தமா பேசுனாலும் அவளுக்கு கேக்காது!”

“அவகிட்ட என்னுங்கண்ணா பேசுறது?”

“சொல்றா! இந்த மாதிரி நானும் இங்க ஒத்தையாக்கிடக்கேன். நீயும் பொள்ளாச்சில ஒத்தையாக்கிடக்கே.. எத்தனை நாளைக்கி இது சரிப்பட்டு வரும்? அதனால நீ என்னை கட்டிக்கிட்டீன்னா ரெண்டுபேருமே ஒத்தையா கிடக்க வேண்டீதில்லீலன்னு பேசு!”

“அவ செருப்பைக்கழட்டி எனக்கு நாலு போடுவா!”

“அவ என்ன சின்னப்புள்ளையாடா.. கறுப்பு போச்சு கறுப்பு போச்சு,, அழிச்சிப்புட்டான் அழிச்சிப்புட்டான்னு.. கத்தீட்டு செருப்பத்தூக்க?  அட அவுளும் யோசிப்பாள்ல? எத்தன நாளைக்கி பொள்ளாச்சில இப்பிடி அங்கீம் இங்கீம் போயிட்டு கிடக்குறது? நமக்குன்னு ஒன்னு வேணும்னு நினைப்பாடா! அந்தப்பாயிண்ட்டை நாம் கெட்டியா புடிச்சிக்கணும்”

“என்ன ரெண்டுபேரும் தனி மீட்டிங்கி போட்டு கொளுத்துறீங்க? மாப்ளைக்கி பொண்ணு கிடைச்சிருச்சா? அன்னிக்கி நீங்க புரோக்கருன்னு புளியூருக்கு அனுப்பியுட்டீங்களே.. அந்த மாதிரி மாப்பிள்ளையை மானத்தை கெடுத்துறாதீங்க!” என்று பொன்னுச்சாமி அங்கு வந்து நின்றான். ‘ஆச்சா?’ ‘ஆச்சு ஆச்சு.. குழியை மூடுனதீம் போக வேண்டியது தான்’

“அன்னிக்கி மாப்ளெ நேரா புளியூரு போயிருவான்னு நான் சத்தீமா நினைக்கலைப்பா பொன்னுச்சாமி. புரோக்கரு நெம்பரைக்குடுத்தேன். நான் ஏன் குடுத்தேன்னா வீச்சுப்போட்டுட்டு திரியறானே எந்த நேரமும்முனு பாவப்பட்டு சொன்னேன். கலியாணம் கலியாணம்னு அலையோ அலையின்னு அலையிறான். அந்த புரோக்கரு பயலே போனை எடுக்கலீல்ல.. இவன் கம்முனு இருக்கோணுமுல்லொ! நேரா புளியூரு இவத்திக்கித்தானேன்னு போயி புரோக்கரு பேரைச்சொல்லி விசாரிச்சி வீட்டுக்கு போயிட்டான். அங்க நாலு பொம்பளைங்க இவனை சுத்தி உக்கோந்துட்டு, இவனென்னடா கலியாணம் கருமாதின்னு பேசுறானேன்னு ஒரு நைட்டுக்கு அஞ்சாயிரம் குடுன்னு கேட்டிருக்காளுங்க! இந்தக்கிறுக்கன் முட்டீட்டு ஓடியாந்துட்டான். புரோக்கருன்னா கலியாண புரோக்கருன்னு இவன் எப்பிடி நினைச்சிக்கலாம்? இவன் தப்பு அது!”

“சரி சரி நடங்க மாமா.. முன்னாடி போலாம். குழிக்கு சப்பாத்திக்கள்ளி போடறாங்க.. நாலு கல்லுப்போட்டாங்கன்னா முடிஞ்சுது!’ என்று பொன்னுச்சாமி முன்னால் செல்ல இவர்களும் வீடு நோக்கி நடந்தார்கள். இவர்களைப்பின்பற்றி மேலும் சனம் வீடு நோக்கி நடக்கத்துவங்கியிருந்தது. ஊர் பைப்படியில் தண்ணீரை திறந்து தலைக்கு ஊற்றிக்கொண்டு கால்களை நனைத்து வீடு சென்றார்கள். ஆத்தாவுக்காக சாலையில் ஒரு விளக்கு ஏற்றியிருக்க அதைப்பார்த்து கும்பிட்டுவிட்டு வாசலுக்கு அனைவரும் வருகையில் இருள் கவிழ்ந்து டியூப் லைட்டுகள் பிரகாசிக்கத் துவங்கியிருந்தன.

இன்று வெள்ளிக்கிழமை என்பதால் நாளை விட்டு நாளை மறுநாள் ஞாயிற்றுக்கிழமை மதியமாய் ஆத்தாவுக்கு கருப்புக்காரியங்கள் நடக்க இருப்பதாய் முன்று முறை நாவிதன் சப்தமிட்டு கூட்டத்தாருக்குச் சொன்னான். ’இங்க பாருங்கெ சாமிகளா.. ஆத்தாவுக்கு வர்ற ஞாயித்துகிழமெ மத்தியானமா காரியம் வச்சிருக்குதுங்கெ! உறவுச்சனமெல்லாம் வந்து சேருங்கெ நேரத்துலயே.!’ பின்பாக கிளம்புகிறவர்கள் கிளம்பினார்கள். 

குட்டக்காட்டு கோவிந்தன்  கணேசமூர்த்தியை தனியே அழைத்து இருளுக்குள் போனார். ‘செரி கணேசா, நானும் போயிட்டு காரியத்தன்னைக்கி வர்றேன். இதை இப்ப கையில வாங்கிக்க.. பத்தலீன்னா எனக்கு ஒரு போனைப்போடு.. என்ன?’ என்று இவன் கையில் இருபதாயிரத்தை திணித்தார். ‘இதெல்லாம் எதுக்குங்கண்ணா..’ என்று சொன்னாலும் அவர் விடுவதாயில்லை. இவன் பின்பாக வாங்கி டவுசர் பாக்கெட்டில் வைத்துக்கொண்டான். அவர் இவனுக்கு ஒரு வணக்கத்தை வைத்துவிட்டு கிளம்பினார்.

ஆத்தா சுடுகாடு போனதும் சாமியானா பந்தலுக்கும் கீழாக சொந்த பந்தங்கள் மட்டுமே குறைவாக இப்போது அமர்ந்திருந்தனர். அதில் பொட்டு பொடுசுகளுமிருந்தன. ‘எல்லாரும் நேரங்காலமா போயி சாப்டுட்டு படுத்து தூங்குங்கடா!’ பொடுசுகளை குட்டியப்பன் விரட்டிக்கொண்டிருந்தார். பொன்னுச்சாமி மாணிக்கனோடு நின்றிருந்தான். அவன் தான் கணேசமூர்த்தியை தனியே அழைத்தான்.’ஒரு பேப்பரும் பேனாவும் எடுத்தா.. கணக்கு போட்டு வச்சிக்குவோம் என்ன செலவெல்லாம் ஆச்சுன்னு! நாளைக்கி கருப்புகாரியத்துக்கு என்னென்ன வாங்கணும்.. இதையெல்லாம் இப்பவே கணக்கு போட்டு வச்சிக்கலாம்டா!’

“அட இன்னும் ஆளுங்க எழவு காங்க வந்துட்டும் போயிட்டும் இருக்காங்க..”

“இனி காலையில தாண்டா வருவாங்க.. ஒன்னு ரெண்டு வந்தா பாத்துக்கலாம் உடு!” என்று பொன்னுச்சாமி சொல்லவும் கணேசமூர்த்தி வீட்டினுள் சென்று பேப்பரும் தினத்தந்தி பேப்பரையும் கொண்டு வந்தான். கிழக்கோரத்தில் மூன்று சேர்களை திருப்பிப்போட்டு அமர்ந்தார்கள்.

“எழுதிக்கோ.. சாமியான செட்டு, சேரு, டேபிளு, லைட்டு இதுக்கெல்லாம் மூனு நாளைக்கி கணக்கு வரும்! குட்டியப்பன் கடையில எழுபது பேருக்கு நவ்வாலு இட்லி கணக்குல சொல்லி அதும் வந்து இறங்கிடுச்சு.. இனி ரெண்டு நாளைக்கி வெங்காயம், தக்காளி, அரிசி ஒரு மூடையின்னு  எடுத்து நாளைக்கே போட்டுடலாம். எப்பிடியும் கையில இருபது ரூவா வேணும்டா கணேசா!’” என்று பொன்னுச்சாமி சொல்லி முடித்தான். கணேசமூர்த்தி தன் பாக்கெட்டிலிருந்து குட்டக்காட்டு கோவிந்தன் கொடுத்த பணத்தை அப்படியே பொன்னுச்சாமி கையில் கொடுத்தான். ‘ஏப்பா என்ன பாக்கெட்டுலயே பணம் வச்சிருக்கே!’

“அட குட்டக்காட்டு கோவிந்தன் இப்பத்தான் கையில குடுத்துட்டு போனாரு!”

“அதான பார்த்தேன்! அந்தாளு பையனை ஊட்டுக்கு தாட்டி உட்டுட்டு இன்னாவரைக்கிம் ஏண்டா உக்கோந்துட்டே இருக்காப்லைன்னு!”

“இன்னும் பத்தலைன்னா என்னை கூப்பிடச்சொல்லியிருக்காரு!”

“ஞாயித்துக்கிழமெ கூப்புட்டு இன்னும் பத்து கேளு.. அந்தாளுகிட்ட என்ன பணமா இல்ல! நானே கேக்கலாம்னு தான் இருந்தேண்டா கணேசா அந்தாளுகிட்ட. நல்லவேள குடுத்துட்டு போயிட்டாப்ல! சரி ஆத்தா மூக்குல ஒரு மூக்குத்தி இருந்துச்சுல்ல.. அதை நாசுவன் கழட்டியிருப்பான்ல.. உன்கிட்ட குடுத்தானா?”

“அதைய யாரு எங்கிட்ட குடுத்தா? ஒருத்தரும் குடுக்கலியே!”

“ஏண்டா கருப்பன்னைக்கி ஆயாளுக்கு சாமி கும்புடுறப்ப அதோட பொருளுக நாலு வச்சி கும்பிடோணுமுல்லொ! அரைப்பவுனுன்னு எங்கிட்டயே ஆயா சொல்லீருகுதுடா! அது பேத்திக்கித்தான்னு சொல்லுச்சு! உங்கக்கா புள்ளைக்கா? உம்புள்ளைக்கான்னு தான் கேக்காம உட்டுட்டேன்! அரைப்பவுனுன்னாலும் அறுபது ரூவாடா இன்னிக்கி! போ, போயி நாசுவங்கிட்ட கேளு!”

”நான் போயி கேட்டுட்டு வர்றேன்.. நீங்க பேசிட்டு இருங்கண்ணா!’’ என்று மாணிக்கன் எழுந்து போனான். போன சித்தங்கூரியத்தில் திரும்பியன் ‘அதைய அவன் ஆத்தா மூக்குல பாக்கவே இல்லியாமா..’ ‘அட அவன் மப்புல உட்டடிச்சிருப்பாண்டா! இப்ப என்ன பண்றது?’

“அதுக்காக ஆத்தா மூக்குல இருக்குறதை அப்பிடியே உடமுடியாதுடா கணேசா! எதாச்சிம் ஏற்பாடு பண்ணலாம்.. போயி நல்லசாமிய சத்தமில்லாம கூட்டிட்டு வா மாணிக்கா!” என்றான் பொன்னுச்சாமி. 

”கருப்பன் இந்த நேரம் அவனும் குடிக்க போயிருப்பானேடா.. அவனை கூப்பிட்டா வருவானா?”

“இதென்ன பொன்னுச்சாமி அவன் பந்தமும் எண்ணெய் டப்பாவும் அந்த முக்குல கெடக்குது பாரு! அவன் வரலீன்னா என்ன.. அவசரத்துக்கு நாமளே பந்தத்தை தூக்கி புடிச்சுக்க வேண்டீதுதான்!”

“கணேசா, விசயம் யாருக்கு காதுக்கும் போவப்படாதுடா.. எல்லாரும் தெரிஞ்சிட்டாங்கன்னா கசமுச ஆயிரும்! அப்படியெல்லாம் பண்டக்கூடாதுன்னு நாலுபேரு குதிப்பாங்க! சொந்தக்காரனுங்களைப்பத்தி தெரியாதா நமக்கு! அதும் இந்த நேரம் எல்லாரும் சாராயக்கடையில இருப்பானுங்க! பட்டுனு யோசனை பண்ணீட்டு மளார்னு கெளம்பீடலாம்டா!” என்றான் பொன்னுச்சாமி.

“கெளம்புறது செரி.. குழியை போன உடனேயே பறைச்சுத்தள்ளீறமுடியுமாடா? சாங்கிதம் எதாச்சிம் இருக்கும்ல!”

“ஒரு சேவலைப்புடிச்சி அறுத்து ரத்தத்தை குழிமேட்டுல காட்டீட்டு ஆத்தா குழியை பறைப்போம்!” எல்லாம் தெரிந்தவன் போல பொன்னுச்சாமி பேசினான்.

“ஏண்டா பந்தத்தை எடுத்தே ஆகணுமா? எங்க தூக்கறீங்கன்னு பார்த்தவங்க கேப்பாங்களேடா!”

“பின்ன செல்போனு டார்ச்சுல அடிச்சுட்டு குழி பறைக்கிறதா? பேயி வந்திருமுடா! பந்தம் புடிச்சாத்தான் பேயி கிட்ட அண்டாது! இதா எடுத்துட்டு வர்றண்டா கருப்பான்னு சொல்லிட்டு நான் தூக்கீட்டு வந்துடறேன்!” என்றான் பொன்னுச்சாமி.

“போனதீம் அரைமணி நேரத்துக்குள்ள வந்துடலாம்லடா!”

“குழிக்குள்ள படுத்து தூங்குறதுக்காடா போறோம் நாம… இதா நல்லசாமி வந்துட்டான்.. மறுபடியும் குடிச்சிட்டானாட்டம் இருக்கே..”

“சாமி, இன்னாரத்துல என்ன பண்றதுங்க சாமி..”

“நாம நாலுபேரு மட்டும் போயி எடுத்துட்டு வந்துருவமடா! வெளிய தெரிஞ்சா பிரச்சனை ஆயிடும்!”

“நீங்க சொல்றது சரிதானுங்க சாமி.. ஆனா நானு புள்ளை குட்டிக்காரனுங்களே! காத்து கருப்பு அடிச்சிருச்சுன்னா எங்குடும்பத்தை யாருங்க சாமி காப்பாத்துவாங்க?”

“இங்க யார்றா மூத்தவன்? நீ தான் வயசுல பெரிய ஆளு.. நீ தான் எங்களுக்கு தைரியம் சொல்லி வாங்க பாத்துக்கலாம்னு கூட்டீட்டு போகணும்.. அதை உட்டுட்டு காத்தாம் கருப்பாம் ரேஸ்கெல்!”

“ஆனா சாமி.. ஆத்தாவை தரோவா செக் பண்டீட்டனுங்களே நானு!”

“நீ மப்புல இருக்கீடா.. மப்பு இல்லாம இருந்தாக்கூட நாங்க நம்புவோம்!”

“மப்பு என்னுங்க சாமி பெரிய மப்பு! மப்படிச்சுட்டா கண்ணுக்கூடவா தெரியாமப்போயிரும் இந்த சக்கரைக்கத்திக்கி?”

“செரி உடு இன்னொரு கோட்டரு குழிமேட்டுல நாங்க வாங்கித்தர்றோம்டா.. நாம போறோம்.. மறுபேச்சு பேசக்கூடாது பாத்துக்க! கணேசா எங்கூட்டுல கத்தி, கடப்பாறை, மம்பட்டி எடுத்துட்டு நான் நேரா சுடுகாடு வந்துடறேன். நீயி மாணிக்கன் கிட்ட நாலு கோட்டருக்கு பணம் குடுத்து கடைக்கி அனுப்பியுடு! அவன் நேரா சுடுகாடு வந்துறட்டும். டே கணேசா.. டம்ளரு,, தீனி, தண்ணிக்கேனு எல்லாம் வாங்கி வண்டிக்கவர்ல சொறுவிக்க! அப்புறம் பத்து ரூவா மட்டும் குடுத்துட்டு காலையில பணம் வாங்கிக்கன்னு சந்தோசுகிட்ட ஒரு நாட்டுச்சாவல் ஒன்னை புடிச்சுட்டு நேரா வந்துரு! இங்கெல்லாம் நிக்காதே! நல்லசாமி.. நீ முன்னால மெதுவா போ.. கணேசன் பந்தத்தையும் எண்ணெக்கேனையும் தூக்கிட்டு வரட்டும்!”

அடுத்த பதினைந்தாவது நிமிடத்தில் நால்வரும் சுடுகாட்டில் குழிமேட்டினருகில் நின்றிருந்தார்கள். மாணிக்கன் கொண்டு வந்திருந்த சேவலின் கழுத்தை கத்தியால் அறுத்து குழிமேட்டுக்கு ரத்தம் காட்டினான். ஆளாளுக்கு அரைக்கட்டிங் வீசிக்கொண்டு காரியத்தை ஆரம்பித்தார்கள். கல்லையும், சப்பத்திக்கள்ளி முள்ளையும் குச்சியால் தூக்கி பக்கத்திலேயே பத்திரமாய் வைத்தார்கள். பின்பாக பொன்னுச்சாமி ஆத்தாவின் நெஞ்சுப்பகுதியில் மண்வெட்டியை இறக்கினான். 

“கருப்பனாட்டமே பந்தம் புடிச்சுட்டு எண்ணெய ஊத்துறாம்பாரு கணேசன்!” என்றான் பொன்னுச்சாமி.

“சேரிச்சேரி நீ சீக்கிரமா காரியத்தைப்பாருடா!” என்றான் கணேசமூர்த்தி. சிரமப்பட்டு மண்ணை எடுத்து ஆயாவின் முகத்தை பந்த வெளிச்சத்தில் பார்க்கையில் மூக்கில் மூக்குத்தி இல்லை!  ‘ஏண்டா இனி மார்ச்சுவரியிலயே போயி ஆத்தா மூக்குத்தி எங்கேன்னு விசாரிக்க முடியும்?’ ‘நாந்தான் மொதல்லயே சொன்னேனுங்களே சாமி.. எம்பட கண்ணு குருடாப்போச்சோன்னு நானே பயந்து கெடந்தனுங்கொ! அதெப்பிடி இத்தனை காலத்துல பொணத்துல ஒரு பொட்டு தங்கம் உட்டடிச்சிருப்பனுங்களா நானு?’ நல்லசாமி அவன் பாட்டுக்கு புலம்பினான். ‘அந்த சேவலைக் குடுங்க சாமி நாங் கொண்டு போறேன்!’

இவர்கள் மீண்டும் குழியை மூடி கள்ளியைப்போட்டு கற்களை மேலே போட்டார்கள். பின்பாக மீண்டும் மீதச் சரக்கை குடித்துவிட்டு நிதானமாய் வீடு வந்தார்கள். பொன்னுச்சாமி சத்தமில்லாமல் தன் வீடு போய் கத்தி, கப்படாக்களை வீட்டில் போட்டுவிட்டு குளித்துவிட்டு இழவு வீடு வந்து சேர்ந்தான். நாவிதனை மட்டும் காணோம். மாணிக்கனும், கணேசமூர்த்தியும் ஏற்கனவே குளித்திருந்தார்கள் போல. வேறு துணியணிந்து கால்களுக்கு ஒரு சேர் போட்டு அதில் வைத்து நீட்டி அமர்ந்திருந்தார்கள்.

இவர்கள் மூவரும் இப்படி அமர்ந்து குசுகுசுவென பேசுவதைக்கவனித்த கணேசமூர்த்தியின் சம்சாரம் பூங்கொடி, ‘நீங்கெல்லாம் சாப்புட்டு வந்து உக்கோந்திருக்கீங்களா?’ என்றாள். ‘இன்னும் இல்லயம்மிணி.. மணி எட்டரை தான ஆச்சு.. இன்னும் சித்தநேரம் போகட்டும்!’ என்று பொன்னுச்சாமி சொன்னான். ‘நீங்க இங்க கொஞ்சம் வாங்க!’ என்று கணேசமூர்த்தியை அவள் கூப்பிட ‘என்ன’ வென  அவனும் எழுந்து சம்சாரத்திடம் சென்றான்.

“ஏனுங்க, ஆயாளோட மூக்குத்தி எங்கிட்ட இருக்குது.. அது உங்கக்காளுக்கா நமக்குங்களா?”

“அதெப்படி உன்கிட்ட வந்துச்சு?”

“அதை ஆயா போன மாசமே எங்கிட்ட கழட்டி குடுத்துருச்சுங்களே!”

000

வா.மு. கோமு

வா.மு. கோமு (ஜூன் 20, 1969). இயற்பெயர்: வா.மு.கோமகன். நாவல்கள், சிறுகதைகள், கவிதைகள், இலக்கிய விமர்சனங்கள் ஆகியவற்றை எழுதி வருகிறார். பகடி கலந்த எழுத்து முறைக்காகவும் புனிதங்களை கடந்த பாலியல் மீறல் எழுத்துக்காகவும் அறியப்படுபவர். தமிழ் விக்கியில்


Discover more from

Subscribe to get the latest posts sent to your email.

3 Comments உரையாடலுக்கு

உரையாடலுக்கு

Your email address will not be published.

திரட்டு

சேகரம்

Latest Posts

Go toTop

Don't Miss