/

சாபம், நீதியின் இன்னொரு வடிவம் – ‘பாங்சு’ கலைஞர்களுடன் ஒரு சந்திப்பு: ரேகா நிலுக்ஷி ஹேரத்

தமிழில் பிரியதர்ஷினி சிவராஜா

1988-89 காலப்பகுதியில் இலங்கையில் தென்பகுதியில் இடதுசாரி ஆயுதப்புரட்சியில் ஈடுபட்டு , அரச பாதுகாப்புப் படையினரால் கடத்தப்பட்டுக் காணாமல்போன தன்னுடைய மகனைத் தேடியும், அவனுக்கு நீதி தேடியும் பொலிஸ் நிலையங்கள், நீதிமன்றங்கள், மருத்துவமனைகள், சிறைச்சாலைகள் என   அலையும் ஒரு தாயின் கதைதான் பாங்சு (පාංශු) என்ற சிங்கள மொழியிலான திரைப்படம். இப்பொழுது இலங்கைத் திரையரங்குகளில் வெளியாகியிருக்கிறது. ஏற்கனவே 2018இல் மொன்றியல் திரைப்படவிழாவிலும் 2019இல் ஆசிய திரைப்பட விழாவிலும் பார்வையாளர்களின் கவனத்தினை இத்திரைப்படம் ஈர்த்திருந்தது.

இத்திரைப்படத்தின் இயக்குனரான விசாகேச சந்திரசேகரத்துடனும், படத்தில் முன்னணிப் பாத்திரத்தில் நடித்த நீட்டா பெர்ணாந்துடனும் ரேகா நிலுக்‌ஷி ஹெராத் நடத்திய உரையாடலின் தமிழ் வடிவம் இது.

89 பயங்கர வன்செயல் காலப்பகுதியில் காணாமற்போன தனது மகனை ஐந்தாண்டுகளாக தேடும், அதற்காக பொலிஸ் நிலையங்களிலும், நீதிமன்றங்களிலும் அலைந்து திரியும் பபா நோனா என்ற பெண்ணை கதைக்கருவாகக் கொண்டது பாங்சு திரைப்படம். திரைப்படத்தில் பாபா நோனாவுக்கு நீதி கிட்டியிருக்கின்றது என்று நீங்கள் கருதுகின்றீர்களா?

விசாகேச சந்திரசேகரம் (இயக்குனர்): பபா நோனாவின் யதார்த்தம் என்னவென்பதனை நாங்கள் எங்கள் நம்பிக்கைகள் மற்றும் கற்பனைகளை மறந்துவிட்டு பார்க்க வேண்டும். தன்னிடம் இருக்கின்ற ஒரே ஒரு  சேலையை உடுத்திக் கொண்டு நீதிமன்றங்களில் அலைந்து திரிவதுதான் அவரது யதார்த்த நிலை. அவரைப் பொறுத்தவரையில் இந்த திரைப்படத்தின் முடிவில் அவருக்கான நீதி நிலைநாட்டப்படவில்லை என்று கருதப்படவே முடியும்.

காலனித்துவ ஆட்சியில் எமக்கு  வழங்கப்பட்ட நீதி என்ற எண்ணக்கருவினையே நாமும் நீதி என்று ஏற்றுக் கொள்கின்றோம். ஆனால் நீதி என்பது அது மட்டும் தானா என்று நாங்கள் ஆராய்ந்து பார்க்க வேண்டும். அந்த நீதி போதுமான அளவுக்கு, திருப்தி தரக் கூடியவாறு கிடைக்கின்றதா என்றும் பார்க்க வேண்டும். அதன் தரம் என்ன? நீதி என்பது அது மட்டும் அல்லவெனின் நீதியின் வேறு வடிவங்கள் என்ன? பபா நோனா அந்த கேள்வியைத்தான் கேட்கின்றார். அவர் முதலில் நீதியின் தரம் என்று கேட்கின்றார். அத்துடன் அவர் இது தான் நீதியா என்றும் கேட்கின்றார்.

அத்துடன் அவர் வேறு ஒரு இடத்திற்கும் செல்கின்றார். அங்கு அவர் சபிக்கின்றார். என்னைப் பொறுத்தவரையில்  சாபமிடல் என்பது நீதியின் மற்றொரு வடிவம். நீதி என்பது இந்த வாழ்க்கைக்கு மட்டும் உரியதா என்பது மற்றொரு கேள்வியாகும். இன்னொரு வாழ்வில் நீதி என்பது உள்ளதா? போன்ற  பல கேள்விகள் பபா நோனாவிடம் காணப்படுகின்றன. காணாமற்போன தனது பிள்ளையை எங்கேயாவது மறைத்து வைத்திருப்பார்கள் என்ற சிந்தனையில் தான் அவர் தனது பணிகளை தொடங்குகின்றார். எனினும் அவர் பின்பு பிள்ளையின் ஆன்மா பற்றியும் சிந்திக்கின்றார். 

நாம் நவீன உளவியலின் அடிப்படையில் பார்த்தாலும், அந்த பிரச்சினைகளை எதிர்கொள்பவர்களின் எண்ண ஓட்டம் என்பது மிகவும் வேறுப்பட்டதாக இருக்கின்றது. நான் எனது தாயாருடனும், அம்மம்மாவுடனும் மிகவும் நெருங்கிப் பழகுகின்றேன். ஒருவேளை நான் காணாமற்போனால், நான் இன்னொரு கருவினை தேடிக் கொள்ள முடியாமல் கருவற்ற ஆன்மாவாக இருப்பேன் என்று எனது தாயார் கருதினால், அவரின் பிரதான இலக்கு  தான தர்மங்களை செய்து எனது ஆன்மாவைப் பலப்படுத்துவதாகவே   இருக்கும். தெற்காசிய உரிமைப் போராட்டங்களில்  மறக்க  முடியாத ஓர் முக்கிய அம்சமாக இவ்விடயம் உள்ளது.

அந்த மனநிலையை அடைவதற்கு மத பின்னணி தான் காரணமாக உள்ளதா?

விசாகேச சந்திரசேகரம் (இயக்குனர்): நான் அவதானிக்கும் மற்றுமொரு விடயம் எமது ஆக்கிரமிப்பு மனோபாவம். பிறப்பிலேயே எமக்கு கிடைக்கும் சில உரிமைகள் உள்ளன. பிறப்பிலேயே கிடைக்காத சில உரிமைகள் உள்ளன. முன் பிறப்பில் செய்த வினைகள் காரணமாக பிறப்பிலேயே சில உரிமைகள் எமக்கு கிடைக்காமல் போகின்றன. இதன்படி பிறப்பில் சில உரிமைகள் கிடைக்காத ஒருவர் நீதியை அடைவதற்கு வேறு இடத்தினை நாடிச் செல்ல வேண்டியிருக்கும். அதனையே நான் காண்கின்றேன்.

நீட்டா பெர்ணாந்து: நான் இது பற்றி பபா நோனா என்ற ஒரு அன்னையின் கதாப்பாத்திரத்தின் அடிப்படையில் பேச விரும்புகின்றேன். அன்னையின் வேதனையும், சோகமும் இந்த கதையின் கருவாக உள்ளது. பொதுவாக இவ்வாறான ஒரு சம்பவம் நடைபெற்றவுடன் அவரைச் சூழவுள்ள உற்றார் உறவினர்கள்   அவரை பொலிஸ் நிலையம் செல்லுமாறே அறிவுரை கூறுவர். அதன் பின்னர் அந்த அன்னை  பலவிதமான நிறுவனங்களுக்கு  செல்ல நேரிடும்.  அது முடிவில்லாத ஒரு பயணம். இறுதியில் தனது பிள்ளையும் இல்லாத நிலையில், நீதி கிடைத்தமைக்கான நிறைவான உணர்வும் கிடைக்காமல் போகலாம். பபா நோனா யாருக்காக போராடுகின்றார்? நாட்டுக்காகவா, இனத்திற்காகவா, தனக்காகவா என்று அவருக்கும் தோன்றக் கூடும். அவருக்கு இனியும் இந்த துன்பம் வேண்டாம் என்ற மனநிலை ஏற்பட்டிருக்கும்.

கிராமத்தில் வசிப்பவர்களும் பாதிக்கப்பட்ட அன்னையர் நீதியை தேடிச் செல்வதனை விரும்பவில்லை. வடக்கில் யுத்தம் செய்ய உள்ள படையினர் மீது வீண் பழி சுமத்தி, அவர்களை நீதிமன்றங்களை நோக்கி அலைய விடுகின்றார்கள் என்ற குற்றச்சாட்டும் பபா நோனா போன்ற அன்னையர் மீதும் சுமத்தப்பட்டிருக்கின்றது…

நீட்டா: அது தான். அது போன்று கிராமத்திற்குள் பல அழுத்தங்கள் வரும். இவை அனைத்துடனும் உள் மனப் போராட்டம் ஒன்றை பபா நோனா எதிர்கொள்வதாக இருக்கலாம். ஏன் நான் போராடுகின்றேன் என்று அவருக்கு தோன்றக் கூடும். காணாமற்போன புதல்வர் தனது உயிருக்கு உயிரானவர் எனின், அவரின் பாசம் அவருக்குரியது எனின்  அவரது நலனை மட்டுமே அவர் விரும்புவார். அவர் நாட்டுக்காகவும், இனத்திற்காவும் போராடுபவர் அல்ல. நீதிக்காக போராடுவது பற்றியும் அவருக்கு தெரியாது.

பபா நோனாவின் தீர்மானங்கள், முடிவுகள் தொடர்பில் பார்வையாளர்கள் இணங்காமல் இருக்கலாம். ஏனெனில் குற்றவாளிக்கு தண்டனை வழங்கி தான் நீதியை நிலைநாட்டப்பட வேண்டும் என்று பார்வையாளர்கள் கருதுகின்றனர். ஆனாலும் பபா நோனாவின் தேவை அதுவல்ல.

விசாகேச: 89ன் பின்னர் குற்றம் சுமத்தப்பட்ட மற்றும்  பாதிக்கப்பட்ட இரு தரப்பினரினதும் குடும்ப உறுப்பினர்களும் ஒரே இடத்தில் வாழ நேர்ந்தது. ஒருவருக்கு குற்றவாளியாக தென்படுபவர் மற்றவருக்கு பாதிக்கப்பட்டவராக தென்படுகின்றார். இந்த திரைப்படத்தின் கதாப்பாத்திரங்களும் அவ்வாறானவை தான். ஒரு கோணத்தில் பாதிக்கப்பட்டவர் மற்றொரு கோணத்தில் குற்றவாளி. லயனல் என்ற இராணுவத்தினனும் அவ்வாறு தான். அவர் இரவில் படுக்கையை நனைத்துக் கொள்பவர். இவை அனைத்துமே மனச்சாட்சியுடன் பிணைந்துப்போயுள்ளது. பபா நோனா, இராணுவத்தினன் ஆகிய இருவருமே மனச்சாட்சியினை எதிர்கொள்பவர்களாகவே உள்ளனர்.

நீட்டா: பபா நோனாவுக்கு தனது மகன் செய்த சில செயல்கள் தொடர்பிலும் பிரச்சினைகள் உள்ளன. அது பற்றியும் அவருக்கு கேள்விகள் உள்ளன அல்லவா?

இவ்வாறான குற்றச் செயல்கள் தொடர்பில் அரசாங்க தரப்பினரும், அதேபோன்று ஜே.வி.வி போன்ற புரட்சிகர போராட்டங்களில் ஈடுபட்ட குழுக்களும் பொறுப்பினை ஏற்க வேண்டும் என்று இந்த திரைப்படத்தி;ன் முடிவில் கூறப்படுகின்றது. முப்பத்தியொரு ஆண்டுகளுக்கு பின்பு ஜே.வி.பி அதற்கான பொறுப்பினை ஏற்க வேண்டும் என்று கூறப்படுவது ஏன்?

விசாகேச: இத்தனைக் காலம் கடந்த பின்னரும் அவ்வாறு கூறப்படுவதற்கு காரணம் உண்டு. நாம் 89 லும், அதன் பின்பும் பலவிதமான துன்புறுத்தல்களை பார்த்திருக்கின்றோம். எனக்கு 50 வயதாகின்றது. அக்காலகட்டத்தில் புலிச் சந்தேக நபர்கள் என்று அழைத்து வரப்படுபவர்களை ஓர் சட்டத்தரணியாக நான் சந்தித்திருக்கின்றேன். களுத்துறை சிறைச்சாலையில் ஒரு நாளில் மட்டும் இருபது பேருடன் உரையாடியிருக்கின்றேன். நாங்கள் கேட்கும் போது எல்லோரும் அடித்து துன்புறுத்தப்பட்டிருப்பார்கள். பொதுவாகவே செய்யக் கூடாத அனைத்தையும் செய்திருப்பார்கள். பிளேட்டால் சுரண்டியிருப்பார்கள். மேற் சட்டையை அகற்றிக் காட்டும் போது பல  காயங்கள் தென்படும். இன்றும் அவற்றை நினைத்துப் பார்க்கையில் நான் உணர்ச்சி வசப்படுகின்றேன். எனது கருத்தின்படி இவ்வாறான குற்றச்செயல்களுக்கு எந்தவிதமான வேறுபாடுகளும் இன்றி அரசாங்கமும் ஆயுதம் ஏந்திய குழுக்களும் கூட்டாக பொறுப்பு ஏற்க வேண்டும். விடுதலைப் புலிகளும், ஜே.வி.பியும் அவ்வாறான நிலைக்கு ஏன் தள்ளப்பட்டனர் என்பது குறித்து பரிசீலித்துப் பார்க்க வேண்டும் என்பது உண்மை தான். ஆனால் அந்த குழுக்களை பிரதிநிதித்துவம் செய்தவர்கள் சம அளவில் அதற்காக பொறுப்பு கூறியே ஆக வேண்டும்.

இந்த திரைப்படத்தின் கதையை நான் மேடை நாடகமாக சுமார் 11 ஆண்டுகளுக்கு முன்பு எழுதியிருந்தேன். யாரும் அக்கறைக் காட்டாததினாலும், வெளிநாட்டில் இருந்த என்னால் எதுவும் செய்ய முடியாததினாலும் அதனை ஒரு புறம் வைத்து விட்டேன். எனினும் 2009ல் நான் மீண்டும் அதிர்ச்சியடைந்தேன். அந்த ஆண்டில் முல்லைத்தீவில் சிறைப்பட்ட ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டனர். ஏன் இவ்வாறு மீண்டும் நடைபெறுகின்றது என்று நான் சிந்தித்துப் பார்த்தேன். 1989 பிரச்சினை சரியான முறையில் முடிவுக்கு வராமையினால் 2009ல் அதன் தொடர்ச்சியாக மீண்டும் அவ்வாறு நடைபெறுகின்றது.  89ல் எமது பிரச்சினை அநாகரிகமான முறையில் எவ்வாறு தீர்க்க முயற்சிக்கப்பட்டது என்பது பற்றி பகிரங்கமாக பேசியிருக்க வேண்டும். அதைப் பற்றி பேசுவது கடினமானது அல்லவே? அப்பொழுது தமிழர் சிங்களவர் என்ற பேதம் இருக்கவில்லையே? அங்கு ஒரே கிராமத்தில் இருந்த எமது மக்களே கொல்லப்பட்டனர். அந்த பிரச்சினையை தீர்க்க முடியாத நாம் இன ரீதியில் மற்றவர்களுடனான பிரச்சினையை தீர்ப்பது எப்படி? எமது அயல் வீட்டில் இருப்பவர்களுடன் நாம் எவ்வாறு இப்படி வன்முறையாக நடந்து கொண்டோம் என்ற கேள்விக்கு இன்னும் பதில் இல்லை. செய்த தவறுகளுக்கு மன்னிப்புக் கோரப்படவும் இல்லை. முதல் பிரச்சினைக்கு சரியான முறையில் தீர்வு காணப்படாததன் காரணமாக  மீண்டும் அது  அரசியல் சாபமாக தலைத்தூக்கி விடுமோ  என்ற அச்சம் எனக்கு உள்ளது.

பபா நோனா கதாப்பாத்திரத்தினை ஏற்பதில் நீட்டாவுக்கு சவால்கள் ஏதும் இருந்தனவா?

நீட்டா: விசாகேசவும் நானும் நேருக்கு நேர் சந்தித்திராத போதிலும் இவ்வாறான ஓர் கதாப்பாத்திரம் உண்டு என்பதனை அவர் தொலைபேசி உரையாடல்களின் போது என்னிடம் தெரிவித்திருந்தார். நான் 89களில் இலங்கையில் வசித்திராத போதிலும் அக்காலப்பகுதியில்  நடைபெற்ற விடயங்கள் பற்றி நன்கு அறிந்திருந்தேன்.  காணாமற்போன தனது மகனை  தேடி அலையும் ஒரு அன்னை என்ற பின்னணி விபரங்கள் பற்றி விளக்கிக் கூறியவுடன் நான் அந்த கதாப்பத்திரத்தில் நடிப்பதற்கு விருப்பம் தெரிவித்தேன். ஆனாலும் நான் நீந்த கற்றுக் கொள்ள  வேண்டும் என்று கூறப்பட்டது. எனக்கு நீச்சல் தெரியாது. ஆனால் எப்படியாவது கற்றுக்கொள்ளுமாறு அவர் கூறினார். எவ்வளவு தான் முயற்சி எடுத்தாலும்  என்னால்  கற்றுக்கொள்ள முடியவில்லை. ஆறு மாதங்களின் பின்பு நான் விசாகேசவிடம் என்னால் நீச்சல் கற்றுக் கொள்ள முடியவில்லை அதனால் கதாப்பாத்திரத்தினை ஏற்பது  கடினம்  என்று மிகவும் சோகத்துடன் கூறினேன். பிரச்சினையில்லை மேல்நோக்கி நீச்சலடிக்க தெரிந்தால் போதும் என்று விசா கூறினார். அதன்பின் எப்படியாவது அவ்வாறு நீந்துவதற்கு கற்றுக்கொண்டேன்.

அதன் பின்னர் அவர் ஸ்டோரிபோர்ட்டுடன் என்னை சந்தித்தார். சில மணித்தியாலங்களை செலவிட்டு பபா நோனாவின் கதாப்பாத்திரத்தினைப் பற்றி விளக்கமளித்தார். அதன் பின் திரைப்படத்தின் அனைத்து குழுவினரையும் ஒன்றிணைத்து செயலமர்வு ஒன்றினை நடத்தினார். அவர் தனது கருத்துக்களைக் கூறினார். அதன் பின்பு அந்தந்த கதாப்பாத்திரங்கள் தொடர்பில் எங்களின் கருத்துக்களைக் கேட்டறிந்தார். உதாரணமாக பபா நோனா சிறு வயதில் எவ்வாறானவர் என்று விசாகேச என்னிடம் கேட்டார். நான் எனது மனதில் பட்டதை சொன்னேன். அம்மா துணி துவைக்கும் வரை ஆற்றின் அருகில் கல்லின் மீது அமர்ந்துகொண்டு காலை ஆட்டிக்கொண்டு இருந்த சிறுமியாக இருக்கலாம் என்று பதில்  கூறினேன். அவர் அந்த பதில் தொடர்பில் திருப்தியடைந்திருப்பார் என்று நினைக்கின்றேன். திரைப்படத்தின் பிரதியில் உள்ள சில காட்சிகளை நடித்துக் காட்டுமாறு எம்மிடம் கூறினார். அதன்போது நடிக நடிகைகள் தமது சுயமான சிந்தனையுடன் நிகழ்வுகளை உருவாக்கியிருந்தனர்.

நடிப்பு கடினமாக இருந்ததா?

நீட்டா: எந்தவிதமான கஷ்டமும் இருக்கவில்லை. கல்கமுவ பிரதேசத்தில் காட்சிகளைப் படம் பிடிக்கும் போது கடுமையான வெயில், வசதி குறைவு போன்ற வெளிப்புற பிரச்சினைகள் இருந்தன. அங்குள்ள மக்களுக்கு தண்ணீர் வசதி கூட இல்லை. அதனைத் தவிர முன்பே நாங்கள் பயிற்சி செய்து கொண்டதால் நடிப்பு கடினமாக இருக்கவில்லை. இந்த கதாப்பாத்திரத்தினுள் ஒன்றித்து நடிப்பதற்கு எனது தனிப்பட்ட வாழ்க்கை அனுபவமும் ஓரளவுக்கு உதவியது. 71 ல் எனது இளைய சகோதரனை இந்த திரைப்படத்தில் சித்திரிப்பது போன்று கடத்திச் சென்றனர். வீட்டுக்கு வந்து அழைத்துச் செல்லும் போது எனது அம்மா ஜீப் வண்டியின் பின்னாலேயே நீண்ட தூரம் ஓடிச் சென்றார். ஆனால் எனது சகோதரர் உயிரிழக்கவில்லை. ஆனால் அந்த காலப்பகுதியில் அம்மாவின் செயற்பாடுகள் எனக்கு நினைவுக்கு வந்தன.

விசாகேசவின் முதல் திரைப்படமான ‘சயபெத்தி குசும’ திரைப்படத்தை விட சினிமா மொழியில் பாங்சு திரைப்படம் மிகவும் முன்னேற்றகரமானது என்று கூறின்…

விசாகேச: எனக்கும் அவ்வாறு தான் தோன்றுகின்றது. அதற்கான ஒரு காரணமாக வளங்கள் அதிகளவு உள்ளமையைக் குறிப்பிடலாம். முதலாவது திரைப்படம் மிகவும் குறைந்த செலவில் எடுக்கப்பட்டது. அதில் இருந்தவர்கள் பெரும்பாலானவர்கள் புதியவர்கள். நான் உட்பட  தொகுப்பாளர், கெமரா இயக்குநர் அனைவருமே புதியவர்கள். ஒப்பனைக் கலைஞருக்கு மட்டுமே அனுபவம் இருந்தது. பாங்சு திரைப்படத்தினைப் போன்று நாம் சயபெத்தி குசும திரைப்படத்திற்கும் முன்னரேயே காட்சிகளைத் திட்டமிட்டு, செயலமர்வு நடத்தியே வேலையில் இறங்கினோம். எனினும் அதில் பெரும்பாலான விடயங்கள் எனது ஆதிக்கத்திற்குட்பட்டிருந்தது. நான் அதிகம் தலையிட்டு படத்தை நீண்ட தூரம் இழுத்துச் சென்று விட்டேன் என்றே நினைக்கின்றேன்.  பாங்சு திரைப்படத்தில் நான் அடிப்படை விடயங்களை திட்டமிட்டாலும்  மற்றவர்களின் பங்குபற்றல் அதிகமாக இருந்தது. நான் காட்சித் தளத்தில் இருந்தாலும், சில காட்சிகளை எடுக்கும் போது நான் சற்று தொலைவில் அமர்ந்திருந்தேன். நாம் அனைத்தையும் முன்பே திட்டமிட்டிருந்த நிலையில் சும்மா குழம்பிக் கொண்டிருக்கும் தேவை இருக்கவில்லை. திரைப்படத்தின் முதல் பாகத்தில் இருந்து நானும், கெமரா இயக்குனர் திமுத்து காலிங்க தஹாநாயக்கவும், தொகுப்பாளர் சித்தும் சமரஜீவவும் வைட்போட்டில் காட்சிகளை வரைந்து அனைத்தையும் திட்டமிட்டுக் கொண்டோம். அதனால் அவர்களின் ஒவ்வொரு காட்சி தொடர்பிலும் சரியான கருத்துக்கள் வெளியாகின. தொகுப்பாளர் சித்தும் சமரஜீவ முதல் பாகத்திலும் காட்சிகளை படம் பிடிக்கும் போதும் அருகில் இருந்தார். அவருக்கு அங்கு செய்வதற்கு ஒன்றும் இல்லாத போதிலும் அவர் அங்கு பிரசன்னமாக இருந்தார். அவ்வாறு இருந்தமையினால் தொகுப்பு வேலைகளின் போது திரைப்படம் தரமாக இருந்தது.

நீட்டா, விசாகேச சந்திரசேகரம்

கெமரா இயக்குனர் திமுத்து காலிங்க தஹாநாயக்கவின் பங்களிப்பும் காட்சி மொழியின் செழுமைக்கு காரணமாகியது. திமுத்து ஓவியக் கலைஞர் என்பதும், அவர்  இசை ஞானம் உள்ளவர் என்பதும் பலரும் அறியாத விடயமாகும். கலைத்துறையில் முன்னேறிய ஒருவரிடம் கெமராவை வழங்கும் போது அவர் அனைத்தையும் சரியான ஓட்டத்தில் படம் பிடித்துக் கொள்வார். எல்லா காட்சிகளிலும் கலைத்துவத்தைக் காண்பார். கலை இயக்கத்திற்கென அனுபவம் வாய்ந்த ஐந்து கலை இயக்குனர்கள் பங்களிப்பு செய்தனர். அதனைத் தவிர திரைப்படத்தின் முக்கியமான காட்சிகள் அனைத்தையும் அவர்கள்  உருவாக்கியிருந்தனர். அதன் சிறப்பினை  திரைப்படத்திலும் காணக் கூடியதாக உள்ளது என்றே எனக்கும் தோன்றுகின்றது.

சிந்தக்க ஜயகொடியின் இசையமைப்பு திரைப்படத்தின்  காட்சிகளுடன் நன்கு பொருந்தியுள்ளது அல்லவா?

நீட்டா: திரைப்படத்தில் உள்ள தாலாட்டுப் பாடல்களைத் தழுவிய இசை மிகவும் அற்புதமாக இருந்தது. ஆடைகளை உலர வைக்கும் இடத்தின் காட்சிகளுடன் அந்த இசை இணையும் போது தான் அந்த காட்சி  முழுமையடைகின்றது.

விசாகேச: அவர் ஏனோதானோ என்று இசை அமைக்கவில்லை. நாம் நிறைய பேசியிருந்தோம். நானும் அவர் இசை பதிவு செயற்பாடுகளை சென்று பார்த்தேன். உண்மையில் சயபெத்தி குசும திரைப்படத்தின் இசையமைப்பில் எனது ஆதிக்கம் அதிகளவில் இருந்தது. அதில் சில மெட்டுக்களை  நான் அமைத்திருந்தேன். இசையை கற்றிராத போதிலும் நான் மெட்டுக்களை அமைத்திருந்தாமையினால் அச்சந்தர்ப்பங்களில் என் தலையீடு அதிகம் இருந்தது. எனினும் பாங்சு திரைப்படத்தின் போது இசை மெட்டுக்கள் தொடர்பில் எந்தவிதமான கருத்துக்களையும் தெரிவிக்காமல் இருக்க வேண்டும் என தீர்மானித்திருந்தேன்.

பாங்சு திரைப்படம் பொதுவாக மக்கள் மத்தியில் நீட்டாவின் திரைப்படம் என்றே அறியப்படுகின்றது. இந்தியாவில் அண்மைக் காலங்களில் பெண்கள் பிரதான பாத்திரங்களை ஏற்று நடிக்கும் திரைப்படங்கள் பலவற்றை காண முடிந்தது. ஓர் நடிகையாக உங்கள் முகத்துடன் கூடிய சுவரொட்டியுடன் வெளியாகும் திரைப்படம் குறித்தான உங்கள் உணர்வு என்ன?

நீட்டா: எனக்கென ரசிகர்கள் உள்ளனர். நான் நடித்த திரைப்படங்களில் முக்கியத்துவம் மிக்க படங்கள் பல உள்ளன. அவற்றுள் ‘துஹுலு மலக்’, ‘பவுரு வளளு’ மற்றும் ‘பாங்சு’ என்பன முக்கியமான மூன்று திரைப்படங்களாகும்.  கடந்த கால திரைப்படங்களில் எனது நடிப்பைப் பார்த்த ரசிகர்கள், நீட்டா அடுத்து என்ன செய்யப் போகின்றார் என்று  ஆவலாக எதிர்பார்த்திருப்பார்கள். இந்த திரைப்படத்திலும் முன்னைய திரைப்படங்களைப்  போன்று காதலும் அன்பும் தான் பிரதானமாக உள்ளது. துஹுலு மலக் திரைப்படத்தில் சமூகம் ஏற்காத காதல் இருந்தது. அந்த திரைப்படத்தில் காட்டுமிராண்டித்தனமான பாத்திரத்தினை நான் மிகவும் சிறப்பாக ஏற்று நடித்திருந்ததாக யாரோ ஒருவர் குறிப்பிட்டிருந்தது எனக்கு ஞாபகம் இருக்கின்றது. பவுரு வளளு திரைப்படத்திலும் முன்னாள் காதலனை மீண்டும் சந்தித்து காதல் வயப்பட்டு கருவுறும் கதாப்பாத்திரத்தை ஏற்றிருந்தேன். அதிலும் காதலே பிரதானமாக உள்ளது. அதேபோன்று பாங்சு திரைப்படத்திலும் பிள்ளை மீதான அன்பு பிரதானமாக  உள்ளது. ரசிகர்கள் எந்தவிதத்திலாவது என்னிடம் அன்பினை எதிர்பார்க்கின்றார்கள் என்றே இதனூடாகக் கருத முடியும்.

விசாகேச: நீட்டாவின் திறமையின் அளவுக்கு இலங்கையில் வேறு நடிகைகள் இருக்க முடியுமா என்று நான் சிந்தித்துப் பார்க்கின்றேன். அவர் சர்வதேச விருதுகளைப் பெற்றுள்ளார். மிகவும் சவால் மிக்க சர்ச்சைக்குரிய பாத்திரங்களை ஏற்று நடித்துள்ளார். அவ்வாறான நடிகைகள் மிகவும் அரிதாகவே உள்ளனர். இதன் காரணமாக  இத் திரைப்படம் நீட்டாவின் திரைப்படம் என்று கூறுவதற்கான தகுதி  அவருக்கு முழுமையாக உண்டு. திரைப்படத்தினை உருவாக்கும் செயற்பாடுகளில் நீட்டா மிகவும் முக்கிய பங்காற்றியுள்ளார். ஒரு  தாயாக, சகோதரியாக அவர் தலைமை  ஏற்றார். படப்பிடிப்புகளில் யாராக இருந்தாலும் முரண்பாடுகள் ஏற்படுவது சகஜமான விடயம் தான். அவற்றை சரியானமுறையில் நிர்வகித்துக்  கொள்வதே மிகவும் அவசியம்.  நீட்டாவின் நடுநிலைமையான செயற்பாடுகள் அவ்வாறான முரண்பாடுகளின் போது மிகவும் சாதகமாக அமைந்திருந்தது. அவருக்கு பதிலாக  தன் மீது கவனத்தினை ஈர்க்கும் செயற்பாடுகளில் மட்டும் ஈடுபடும் ஒருவர் இருந்திருப்பின் படப்பிடிப்புகள் முற்றிலும் வேறுப்பட்டிருக்கும்.  அனைத்து செயற்பாடுகளையும் சமப்படுத்தி நடுநிலையாக சிந்திக்கும் பாத்திரத்தினை நீட்டா வகித்தார். அவரின் ஒழுக்கம், இயக்குனர் உட்பட மற்ற அனைவரின் மீதான மரியாதை என்பன  திரைப்படத்தின் படப்பிடிப்புகளில் சாதகமான நிலைமையை ஏற்படுத்தியிருந்தது. நான் முதலில் பபா நோனா கதாப்பாத்திரத்திற்கு பொருத்தமானவர் என்று நீட்டா பற்றி சிந்தித்தாலும், அவருடன் பேச நினைத்திருக்கவில்லை. அவர் எங்களுக்கு வெகு தொலைவானவர் என்று நான் நினைத்திருந்தேன். எனினும் நடிகர் ஜெஹான் பெர்ணாந்து தான் நீட்டாவுடன் பேசிப் பார்க்குமாறு வலியுறுத்திக் கூறினார். அப்பொழுது பேச முடிந்தது குறித்து நான் இப்பொழுது மகிழ்ச்சி அடைகின்றேன். இப்பொழுது நீட்டாவும் நானும் நல்ல நண்பர்கள்.

பிரியதர்ஷினி சிவராஜா

சுயாதீன பத்திரிகையார். சரிநிகர், வீரகேசரி, சுடரொளி பத்திரிகைகளில் பணியாற்றியவர். பெண்கள் மற்றும் சிறுவர் உரிமைகள், மனித உரிமைகள், LGBTIQ சமூகம் சார்ந்த பிரச்சினைகள் தொடர்பில் பல்வேறு ஆக்கங்களை எழுதி வரும் இவர் சிங்கள மொழிப்பெயர்ப்புகள் மீதும் ஆர்வம் கொண்டவர்.

உரையாடலுக்கு

Your email address will not be published.