/

குமிழி நாவல் மீதான உள்ளடக்க உரையாடல்: அசுரா நாதன்

ஆயுதப் போராட்ட அனுபவங்களை சுமந்து வரும் இலக்கியப் பிரதிகளின் தொடர்ச்சியாக ‘குமிழி’ எனும் நாவல் வெளிவந்திருக்கிறது. 1985ம் ஆண்டில் வெளிவந்த கோவிந்தனின் ‘புதியதோர் உலகம்’ எனும் நாவலின் உரையாடல்  பகுதியாகவும், தனித்துவமாகவும் ரவியின் ‘குமிழி’ நாவலின் சித்தரிப்பு அமைந்திருக்கிறது.

கோவிந்தனும், ரவியும்

இருப்பினும் ‘புளட்’ இயக்க தோழர்களான இரண்டு படைப்பாளிகளின் காலமும், தேர்வும் வெவ்வேறானவை. கோவிந்தன் இலட்சிய வேட்கையுடன் புரட்சிகரமான  ஒரு ‘மாளிகையை’ கட்டியெழுப்பியவர். தாம் மேற்கொள்ளும் விடுதலைப் போராட்டமே சர்வதேசப் புரட்சிக்கும் சாதகமாக         அமையப்போகிறது, அதற்காகக் கட்டப்பட்ட ‘மாளிகையே’ புளட் எனும் அமைப்பாக நினைத்திருந்தார். நம்பியிருந்தார்.  அந்த மாளிகையின் சுவர்களும், தூண்களும் இடிந்து நொருங்கிப்போன பின்பும் புதிதான ஒரு மாளிகையை அதே இலட்சிய நோக்குடன் மீளவும் புதுப்பிக்கும்  நம்பிக்கையும் அவருக்கு இருந்தது. எனவேதான் ‘புதியதோர் உலகம்’ நாவல் எதிர்கால நம்பிக்கையுடன் இவ்வாறு நிறைவடைந்தது:

“அடக்கு முறைக்கும் ஒடுக்கு முறைக்கும் அப்பாற்பட்ட புதியதோர் உலகம் படைக்கும் வரை எமது போராட்டம் ஓயாது!

அவர்கள் தீர்க்கமான முடிவுடன் படகில் ஏறி அமர்ந்தார்கள். அந்தப் பயணம் ஒரு கடலைத் தாண்டுவதாக மட்டும் அவர்கள் கருதவில்லை. ஒரு யுகத்தைத் தாண்டுவதான பிரமிப்பில் பூரித்து மகிழ்ந்தார்கள்” என நம்பியதே ‘புதியதோர் உலகம்’.

‘குமிழி’ நாவலின் படைப்பூக்கச் சூழல் அதிலிருந்து மாறுபட்டது. 1985ல் புளட் இயக்கத்திலிருந்து தப்பித்து நாட்டை விட்டு வெளியேறி, புகலிடம் வழங்கிய கால இடைவெளிகளின் அனுபவங்களோடு, கடந்த காலத்தின் மீள் உருவாக்கத்திற்கான நெருக்கடிகளும், அதன் படைப்பிற்குள் நிகழ்ந்திருக்கிறது. 

பல ‘வர்ணங்களுடன்-மினுமினுப்பாக’ திகழ்ந்த ‘குமிழி’ (புளட்) உடைந்து போனதன் நிமித்தமாகவே  அதன் படைப்புலகம்  இவ்வாறு நிறைவடைகிறது:

“மனிதர்கள் எறும்புகள் போலாகி பின் மறைந்து போயினர். ஊர்கள் மறைந்து போயின. நாடுகளின் எல்லைகள் அழிந்து போயின. காடுகளின் பசுமையிலும், கடலின் நீலமையிலும் பூமி அழகாகத் தெரிந்தது. அண்ணார்ந்து பார்த்த நிலைபோய், கவிஞர்கள் கற்பனையில் கவியெறியும் முகில்திரள்களுக்கு மேலாக பறந்து கொண்டிருந்தோம். புகைப்பாலைவனத்தில் குன்றுகளாய் திரட்சியுற்றிருந்தன, இளஞ் சாம்பல்நிற முகில் கூட்டங்கள்! அவைகளின் பின்னாலும் தேடிப் பார்க்கிறேன். ஏந்திய கனவுகளைக் காணவில்லை. மாலியையும் காணவில்லை. காற்றின் இரகசிய மூச்சொலியில் கலைந்துவிடக்கூடிய மென்மைகொள் முகில்திரள்மேல் ஓர் இறகாய்க் கிடக்க ஏங்கினேன்” என ‘குமிழி’யை பார்த்துத் தொலைத்த கனவுகளின் ஏக்கமாக நாவலின் முடிவு அமைந்திருக்கிறது.  கோவிந்தனைப்போன்று மீளவும் ‘மாளிகை’ கட்டுவதற்கான நம்பிக்கையும் இப்படைப்பாளிக்கு  இருந்ததில்லை.

கதைசொல்லியின் இறுதியான விபரிப்புக் காலமானது 1985ன் பிற்பகுதியாக புரிந்துகொள்ள முடியும். அக்காலகட்டத்தில் புகலிடத்தில் இருந்தவர்கள்  தளத்திலுள்ள இயக்கங்களின் அங்கத்தவர்களாகவும், ஆதரவாளர்களாகவும், ஆயுதப்போராட்டத்தில் தொடர்ந்தும் கோவிந்தனைப் போன்று நம்பிக்கையுடையவர்களாகவே இருந்தவர்கள். புகலிடத்தில் விடுதலைப் புலிகள் தவிர்ந்த பிற இயக்கத்தவர்களின்  ஆயுதப்போராட்டத்திற்கான ஆதரவு நிலை என்பது பெரும்பாலும் 1990ம் ஆண்டுவரை செல்வாக்குப் பெற்றிருந்தது. கால இடைவெளியின் மீள் உருவாக்கமே ‘குமிழி’ நாவலின் முடிவுச் சித்தரிப்பாக அமைந்திருக்கிறது. ‘குமிழி’ நாவலின் இறுதிப்பகுதியானது 1985 இன் பிற்பகுதியாக நாம் புரிந்துகொண்டாலும், நாவலில் காணும் அனுபவப் பகிர்வுகள் என்பது ஆயுதப்போராட்டம் மீதான படைப்பாளியின் 2020 ம் ஆண்டு வரையிலான அனுபவங்களோடு, 1984-1985 ம் ஆண்டுகளின் கால நினைவுகளை மீட்கிறது. 1985ம் ஆண்டிற்கு பின்பாக நடந்த பல சம்பவங்கள் ஆயுதப்போராட்டத்தின் மீதான விமர்சனங்களாக, பாத்திரங்களுக்கிடையிலான உரையாடலாக முன்வைக்கப்படுகிறது.

எனவே புதியதோர் உலகம் நாவலின் உள்ளடக்க ஒற்றுமைகள், பாத்திர ஒற்றுமைகள் (புதியதோர் உலகம்-சங்கர், குமிழி-பாலன்) என பல இருப்பினும், அதன் முடிவில் காணும் கருத்தியல் சித்தரிப்பை வாசகர்கள் அவதானிக்கும் தருணத்தில், ‘புதியதோர் உலகம்’ முன்வைப்பது போன்ற  ஒரு ஆவணச் சான்றாக ‘குமிழி’ நாவலை கருதிவிட முடியாது.

2020ல் எழுதப்பட்ட ‘குமிழி’ நாவலில் துலங்கும் ‘இளவயது வாழ்க்கையின் அலைக்கழிவென்பதும்’ அதன் உள்ளடக்க உரையாடலின் கருத்துக்களமும் இலக்கியப் புனைவுச் சித்திரமாக வரையப்பட்டிருக்கிறது.

இலக்கியம் சமூகத்தை மாற்றும் கருத்தைக் கொண்டிருக்கவேண்டும் என்பதாக  இலக்கியப்படைப்பில் பிரதிபலிக்கும் கருத்தியலை ஊன்றி அவதானிக்கும் வாசக மனநிலையும் இருக்கவே செய்கின்றது. அம் மன நிலையானது ‘புதியதோர் உலகம்’ நாவலோடு ‘குமிழி’ நாவலை ஒப்பிடுமாயின் ‘குமிழி’ நாவலில் துலங்கும் படைப்பாற்றல் கொண்ட உணர்வெளிச்சியின் வெளிப்பாட்டு அம்சங்கள் முக்கியத்தும் அற்றுப் போகலாம்.

கோவிந்தனின் ‘புதியதோர் உலகம்’ நாவல் வெளிவந்த போராட்டக் கால அனுபங்களோடு நெருக்கமான வாசகர்களுக்கும், வெவ்வேறு இயக்கங்களின் ஆயுதப்போராட்ட அனுபவங்களை விமர்சனங்களோடு எதிர்கொள்ளும் வாசகர்களுக்கும், ‘புதியதோர் உலகம்’ எனும் நாவல் ஒரு ஆவணமாகவே உள்வாங்கும் தன்மையைக் கொண்டிருந்தது.

‘புதியதோர் உலகம்’ நாவலை புளட் அமைப்பின் உட்படுகொலைகளுக்கும் அதன் ஜனநாயக விரோத செயலுக்குமான ஒரு வரலாற்று ஆதாரமாகவே அக்காலத்தில் பலராலும் கையாளப்பட்டு வந்தது. அதை ஒரு இலக்கியப் பிரதியெனும் தன்மையில் பேசப்பட்டு, விமர்சிக்கப்பட்டதாக நான் அறியவில்லை.

எனவே இலக்கியத்தின் ஊடாக உண்மையைத் தேடுவதையும், உகந்த கருத்துநிலைத் தேடலையும் வாசிப்பின் நேசிப்பாக கருதும் வாசக மனநிலைக்கு ‘புதியதோர் உலகம்’ நாவலில் இருந்து புதிதாக எதையும்,  ‘குமிழி’ நாவலில் கண்டுகொள்ள முடியாது போகலாம். 

படைப்பாளியின் உணர்வெழுச்சியின் ஊடகமாகத் திகழ்வதே இலக்கியம். இதில் படைப்பாளியின் பரிபூரணத்தை தேடுவதாக வாசிப்பின் இலக்கு அமைந்து விடக்கூடாது.  மன விரிவாக்கத்தில் ஆற்றும் செல்வாக்கை படைப்பின் அழகியல் சித்தரிப்பின் ஊடாக புரிந்துகொள்ளும்போதே ஒரு இலக்கிய பிரதி எவ்வகையில் வாசகனின் சுய-உணர்வெழுச்சியை தூண்டுகிறதென்பதை அவதானிக்க முடியும். இலக்கியப் படைப்புலகில் நிகழ்ந்து வரும் மாற்றங்களின் கூறுகளை தேடி அவதானித்து வரும் வாசகர்களுக்கு இந்த இரு நாவல்களுக்கும் இடையிலான ‘வடிவ-உள்ளடக்க-கருத்தியல்’ வேறுபாடுகளை புரிந்துகொள்ள முடியும். 

புதியதோர் உலகம் வெளிவந்து முப்பத்தைந்து வருடங்களுக்கு பின்பாக அதன் உரையாடல் பகுதியாக  வெளிவந்திருப்பினும், ‘குமிழி’ நாவலின் படைப்பாளிக்கு புனைவுச் சாத்தியங்களே அதிகம் வாய்த்திருக்கிறது.

அறிமுகமும், அறியும் ஆவலோடும்’

கனவில் அதிர்ந்தெழுந்து, சுவிஸ் நாட்டில் வாழ்ந்து கழிந்த காலங்களை மீட்டெடுத்து, 83 யூலை கலவரத்தின் பாதிப்பை நேரில் அனுபவித்த ஒரு  பல்கலைக்கழக மாணவன் தன் கதையை சொல்ல ஆரம்பித்தான். இடையில் அவனது கதையை வளர்த்தது ‘வேம்பு’. அவனது பால்ய வாழ்வையும் அவனது குடும்ப உறவுகளையும் எமக்கு சொல்லிக் கொண்டிருந்தது  அந்த வேப்ப மரம். இயக்கத்தில் இணைய இருக்கும் செய்தி அறிந்து தகித்து நோக்கிய தாயின்  நூலிழைப் பார்வையை அறுத்தெறிந்த வன்மன் அவன் என்பதை அந்த வேப்ப மரமே அறிந்திருந்தது. அவன் குடும்பத்தின் அங்கமான அந்த வேப்ப மரம் தான் மட்டுமே அறிந்த அச்சோகத்தை அவனைச் சார்ந்த உறவுகளுடன் பகிர்ந்து கொள்ளாது, அந்த இரகசியத்தை தனது வேருடன் இறுக அணைத்து வைத்திருந்தது.

மினு மினுக்கும் ‘குமிழி’யை நோக்கி கடல் கடந்து கால் பதித்த அவனது கனவுப்-‘பின்தளம்’

வந்தடைந்த செய்தியை அந்த வேப்ப மரத்திடமே தெரிவிக்கவும் விரும்புகிறான்.

தொடரும் அவனது கதையை வேப்ப மரம் ஒரு கதைசொல்லியிடம் ஒப்படைப்பதாக எமது ஊகத்தையும் அதனோடு இணைக்கலாம். அந்த கதைசொல்லி அவனை ரகுவாகவும், ஜோனாகவும் பெயர் மாற்றி கதையைத் தொடர்கிறது. தமது-சமூகத்தின் விடுதலைக்காக போராட்டப் பயிற்சிபெறும் கனவுகளோடு ‘பின்தளம்’ சென்றவர்களுக்கிடையில் அரசியல் பிரிவுகளாகவும், இராணுவப் பிரிவுகளாகவும் கருத்து மோதல்கள்-படுகொலைகள் தொடர்கிறது.  போராட்டக் கனவோடு இணைந்தவர்களுக்கிடையில் சாதியப் பாகுபாடுகளும், கொலைகளும், நட்புகளும், துரோகங்களும், விரோதங்களும், காதலுமாக கலந்திருந்த கதைகள் சொல்லப்படுகிறது. அந்த பல்கலைக்கழக மாணவன்  மீண்டும் தன் கதையை தானே தொடருகின்றான். தளம் திரும்பி தனது இரகசியத்தை புதைத்துப் பாதுகாத்து வைத்திருந்த வேப்ப மரத்தை தேடுகிறான். இரகசியத்தை காத்துவந்த வேப்ப மரம் தன்னை அழித்து அவனது குடும்பத்தின் பசியையும் தணித்திருந்த செய்தி அறிந்து நிலைகுலைந்து போகிறான். தோழர்களே எதிரிகளாகி  கொலையாளிகளானபோது தனது உயிர்காக்க புகலிடம் நாடுகிறான்.

இவ்வாறு நாவலின் பாத்திரங்களை, இயற்கையை  அழகியல் சித்தரிப்புகளுடன் பிணைத்துச் செல்லும்  மொழி ஆளுமையில்,  ‘குமிழி’ நாவலின் படைப்பாளியான ரவி அதிக கவனம் செலுத்தியுள்ளதையும் அவதானிக்கக்கூடியதாக உள்ளது.

‘குமிழி’ நாவலில் பேசப்படும் பிரதான அம்சமான புளட் இயக்கத்தின் உட்படுகொலைகள் சித்திரவதைகள் என்பன புதியதோர் உலகம் நாவலூடாக நாம் ஏற்கனவே அறிந்தவைதான். தொலைத் தொடர்பு பிரிவினர் குறித்த சம்பவமே அதிலிருந்து புதிதாக அறிந்து கொள்ளும் தகவலாக இருக்கலாம்.

2020ல் எழுதப்பட்ட இந்த நாவலின் ஊடாக புளட் எனும் இயக்கத்தின் உட்படுகொலைகள் அதன் இராணுவ அராஜகப் போக்குகள் பற்றிய தகவல்கள், அக்காலகட்டத்தவர்களுக்கும் ‘புதியதோர் உலகம்’ நாவலை வாசித்தவர்களுக்கும் புதிதாக தோன்றாது போகலாம். ஆயினும் ‘குமிழி’ நாவலின் ஆளுமை என்பது எமக்கு தெரிந்த அக்கதையை இலக்கிய புனைவுச் செறிவுடன் சொல்ல முனைகிறது.

ஒரு படைப்பாளி சொல்லும் கதையினூடாக தேர்ந்த இலக்கிய வாசகனால் அக்கதையை பிறிதொரு எல்லைக்குள் கொண்டு செல்ல முடியும். இவ்வாறான முயற்சியும் புரிதலும் வாசகர்களுக்கிடையில் வேறுபட்டும் இயங்கக்கூடியது. ‘குமிழி’ நாவலும் அதற்குரிய ‘பிரதித்’ தன்மை கொண்டிருக்கிறது. ஆயினும் வாசக மனவிரிவாக்கத்திற்கு இடையூறாக நாவலின் வடிவச் சீரமைப்பு சிதைந்திருப்பதாகவே தோன்றுகிறது. 

தாம் வாழும் காலத்திலிருந்து கடந்த நூற்றாண்டுகளையும், தாம் காணத உலகத்தையும் நுட்பமாக தம் இலக்;கிய படைப்பாற்றலூடாக சித்தரித்தவர்களின் நாவல்களை வாசித்த அனுபத்தில் இவ்வாறு கருதத்தோன்றுகிறது.  ஒரு நாவலின் வடிவமைப்பே வாசகனின் அக உணர்வை தீண்டி அவனுக்குள்ளும்  படைப்பாற்றலை தோற்றுவிக்கும். அது பாடைப்பாளியின் நோக்கத்திலிருந்து மாறுபட்டதாகவும், வாசகனின் சுய-கற்பனை உருவாக்கமாகவும் அமையும். அதற்கு இலக்கிய படைப்பின் வடிவமைப்பே பிரதான காரணமாக இருக்கும்.

2020ல் வாழ்ந்துவரும் படைப்பாளி 1984-1985ம் ஆண்டு காலத்து கதையை சொல்வதாக ஆரம்பித்து இறுதியில் 1985ன் பிற்பகுதியிலேயே கதை முடிவடைகிறது. அக்கதைக்குள்  1985ம் ஆண்டிற்கு பிற்பட்ட காலத்து சம்பவங்கள் மீதான விமர்சனங்களும், 2009 ம் ஆண்டு ‘தோற்கடிக்கப்பட்ட போராட்ட காலம்’ வரையான உரையாடல்களும் நிகழ்வதை அவதானிக்க முடிகிறது. இதில்தான் இலக்கிய வடிவம் சிதைகிறதாக தோன்றுகிறது. வாசகனின் சுய-கற்பனை உலகையும் முடக்குகின்றது.

2009ம் ஆண்டு காலத்து சம்பங்களோடும் கதை நகர்ந்து வருவதால் (“… போராட்டம் இப்போ தோற்றாலும்கூட, கடந்த காலத்தில் இந்த போராட்டத்தினை ஆதரித்தபடியே அதன் பார்வையாளர்களாக இருந்தவர்களிலிருந்து தான் வேறுபட்டிருந்த புள்ளியை அவர்கள் இலகுவில் கடந்து சென்றுவிடுவார்கள் என எதிர்பார்க்கவும் முடியாது” -பக்கம் 178)  அக்காலத்தோடு அல்லது தாம் வாழும் சம காலத்து இணைப்போடு நாவலின் முடிவு அமைந்திருக்க வேண்டும். அல்லது 1984ல் இருந்து 1985 காலம் வரையான சம்பவங்களை உள்ளடக்கியதாக இருந்தால் ‘குமிழி’ நாவலின் முடிவும் அதற்கு பொருத்தமாக இருந்திருக்கும்.

படைப்பாளியான ரவியின் மொழி ஆளுமையும் கதையின் சித்தரிப்பு முறையும் வாசகனின் உணர்வெளிச்சியை தூண்டும் வகையில் அமைந்திருக்கிறது.  ஆயுதப்போராட்டத்தை மேற்கொண்ட அனைத்து இயக்கங்களிலும் இணைந்து தமது வாழ்வை, நம்பிக்கையை தொலைத்த பல்கலைக்கழக மாணவர்களின் அவல நிலையையும், போராட்டத்தின் விளைவாக நிகழ்ந்த அனைத்துப் பேரழிவுகளையும் நினைவில் பதியும் வகையில்  வடிவத்தை அமைத்திருக்கலாம். தொடங்கிய எமது ஆயுதப்போராட்டத்தின் ஆரம்பத்தில் பிரதானமான பங்கு வகித்தவர்கள் பல்கலைக்கழக மாணவர்கள். ‘குமிழி’ நாவலின் படைப்பாளியும் பல்கலைக்கழக மாணவராக இருந்ததையும் அறியமுடிகிறது. இந்த நாவலின் சித்தரிப்பின் பலமானது ஆயுதப்போராட்டத்தை நம்பி தமது இளமையை, வாழ்வை, உயிரை, உறவுகளை இழந்த பல்கலைக்கழ மாணவர்களின் தொலைந்துபோன நம்பிக்கைகளையும் சிந்திக்க தூண்டும் வகையில் அமையக்கூடியது. கச்சிதமாக அமைந்திருக்கும் முடிவிலிருந்தே நாவலின் கருத்தியல் உள்ளடக்கத்தை வாசகனால் வளர்த்துச் செல்லமுடியும். ஆனால் இந்நாவலின் முடிவானது உள்ளடக்க விமர்சன உரையாடல்களை பலவீனமாக்கி கதையின்  பிரதான பத்திரத்தின் மீதே முடிவு.. ‘மையம்’ கொள்கிறது.

தாம் அறிந்த உலகத்தையும், தாம் அறியாத உலகத்தையும் நாவலாக தமது புனைவுச் சித்தரிப்பில் பலர் சாதித்திருக்கிறார்கள்.  அவ்வாறான நாவல்களின் இலக்கிய வடிவத்தை புரிந்துகெண்டதன் அனுபவத்தில் சில நாவல்களை அறிமுகப்படுத்தலாம்;.

அழகிய பெரியவன் 2016ல் எழுதிய ‘வல்லிசை’ எனும் நாவலூடாக தான் அறிந்த காலத்தை மிக அழகாக சித்தரித்துள்ளாளார். எஸ்.ராமகிருஷ்ணன் 2017ல் எழுதிய ‘இடக்கை’ எனும் நாவலூடாக தான் காணாத உலகை காட்டியிருக்கிறார். ஜெயமோகன் 2013ல் எழுதிய ‘வெள்ளையானை’ 1870ல் பஞ்சத்தில் செத்து மடிந்த இலட்சக்கணக்கான தலித் மக்களின் வாழ்க்கையோடு இணைந்த ஒரு காலத்தைக் காட்டுகிறது. சோ. தர்மன் 2019ல் எழுதிய ‘சூல்’ நாவலூடாக தான் காணாத உலகை எம் முன்னால் காண்பிக்கின்றார். சோபாசக்தி 2004ல் எழுதிய ‘ம்’ நாவலூடாக தான் அறிந்ததை, வாழ்ந்ததாக நம்பவைக்கின்றார். ஒன்றில் தமது கற்பனையின் காலத்தை பிரதிபலித்து அக்காலத்துடனேயே நாவல் நிறைவுபெறுவதாக அமைந்திருக்கும். அல்லது தாம் காணாத உலகத்தை சித்தரித்து தாம் வாழும் காலத்தோடு நிறைவு பெறுவதாக நாவல்கள் அமைந்திருக்கும். இவ்வாறான இலக்கியப் படைப்பின் வடிவமே வாசகனின் அகவயத் தூண்டலை உருவாக்கும். அவை கண்ணுக்கு புலப்படாதது. வாசகனால் உருவாக்கப்பட்டு வளர்வது. தொடர்ச்சியானது. வாசகர்களுக்கிடையில் மாறுபட்டது. உதாரணத்துக்கு ‘சூல்’ நாவலின் இலக்கிய சித்தரிப்பு வடிவம் அவ்வாறே எனக்குள் ‘நிகழ்ந்தது’.

அந்நாவலானது  தமிழகத்தில் 19ம் நூற்றாண்டு காலத்து மக்களையும் அதன் மீது செல்வாக்கு செலுத்தும் அரசியலையும் பேசுகிறது. அக்கால கட்டத்தில் வாழ்ந்த சமூகத்தின் கடவுள் உருவாக்கங்களும்,  அச்சமூகம் பேணிவரும்  பண்பாட்டு மரபுகளும் தெரியவருகிறது. வாசிப்பின் ஊடாக இயற்கை மீதும்  உயிரினங்கள் மீதும் அவர்கள் கொண்டுள்ள உறவுகள் எமக்குள் விரிகிறது. இவ்வாறு மரபுவழி பேணப்பட்டு வரும் விவசாய-நீர்ப்பாசன முறைகளின் காலத்தையும் உரையடல்களாக்கொண்டு, நவீன காலத்து இயந்திர வளர்ச்சிக்குள் எம்மை அழைத்து வந்து காட்டியதோடு  ஓய்ந்து போகிறது நாவல். ஆனால் வாசகனால் ஓய்ந்து தணிந்துவிட முடியாது. இவ்வாறான நாவல்கள் வாசகனை ஓய்வாக இருக்க விடுவதில்லை. வாசகன் தான் படித்த நாவலை தனக்குள் புதிதாக உருவாக்கிக் கொள்வான்.   ‘சூல்’ நாவலானது நவீன காலத்து வளர்ச்சியினால் இயற்கை, உயிரினங்கள், விவசாயம், மனித பண்பாட்டு உறவுகள் என அனைத்தும் சீரழிந்து போவதை இன்றைய நவீன இயந்திர மயமாக்கலின் சமகாலத்தோடு பொருத்திவிடுகிறது.  இந்த நவீன உருவாக்கத்தின் குறியீடாக சோ.தர்மன் பெரியார், அண்ணாத்துரை போன்றோரை குறியீட்டுப் பாத்திரங்களாக முன்வைப்பதையும் வாசகர்கள் இலகுவாக புரிந்து கொள்ளலாம். இலக்கியப் பிரதியில் ‘அரசியல் கருத்தியலையே’ முதன்மையாக எதிர்பார்க்கும் வாசகர்களுக்கு சோ.தர்மன் பெரியாரை, அண்ணாத்துரையை அவமதிக்கின்றார்  என அவர் மீது சீற்றமும் கோபமும் வரலாம். ஆனால் ‘சூல்’ நாவலின் இலக்கிய வடிவச் சித்தரிப்புக்கான ஒரு கருவியாகவே பெரியாரும் அண்ணாத்துரையும் சோ.தர்மனால் பயன்படுத்தப் பட்டிருக்கிறது. (சோ.தர்மனின் நோக்கம் எதுவாக இருப்பினும்) தேர்ந்த வாசகர்களால் அதனைப் புரிந்துகொள்ள முடியும் என்றே நம்புகின்றேன்.

அவ்வாறான வாசக மனம் ‘சூல்’ நாவலை தனக்குள் வளர்த்துக்கொண்டே இருக்கும்.  வாசிப்பின் ஊடாக அதன் இலக்கிய வடிவத்தை அர்த்தப்படுத்துவது வாசகனின் தகைமையை பொறுத்தது. எனவேதான் இலக்கிய வடிவம் என்பது அகவயமானது. வாசிப்பில் சுயமாக உருவாகி வருவது. அதற்கு படைப்பின் வடிவமைப்பே துணைபுரிகிறது.

‘குமிழி’ நாவலின் படைப்பாற்றல் மீதான நம்பிக்கையே மேற்குறிப்பிட்ட நாவல்களை உதாரணமாக முன்வைக்கும் அவசியத்தை  ஏற்படுத்தியிருக்கிறது.

இலக்கியம் என்பதாகவும், இலக்கியவாதிகளாகவும் கருதிக்கொண்டு தகவல்களாக எழுதிக் குவித்துகொண்டிருக்கும் எழுத்தாளர்களையும், பிரதிகளையும் நாம் வாசித்தும் சகித்தும்  வருகின்றோம். அவர்களுக்கு மத்தியில் தனது முதலாவது நாவலை இலக்கியப் புனைவுச் சித்தரிப்புடன் மேற்கொண்ட ரவியின் முயற்சி பாராட்டக்கூடியதே.

அசுரா நாதன்

தலித்தியச் செயற்பாடுகளில் இயங்கி வருபவர். தனிமனித அனுபவத்தைக் கடந்து இலக்கியம், வரலாறு வழியாக சமூக முரணியக்கத்தை பேருணர்வுடன் புரிந்துகொள்ள முற்படுபவர். பிரான்ஸ் தலித் சமூக மேம்பாட்டு முன்னனியின் பிரதான செயற்பாட்டாளர்களில் ஒருவர்.

1 Comment

  1. நல்லதொரு கோணத்தில் தங்கள் பார்வை இருக்கிறது. வாழ்த்துக்கள் அனைவருக்கும். கன்னி முயற்சி அல்லவா. அடுத்தடுத்த படைப்புகளில் சரிசெய்து விடுவார் என நம்பலாம்.

உரையாடலுக்கு

Your email address will not be published.