நாராயணன் இறந்து போனார். மாரடைப்பு; சாப்பிட்டு உட்கார்ந்தவர் அப்படியே சரிந்து விட்டாராம். துக்கத்துக்குத் தாத்தாவும், அப்பாவும் போய் வந்தனர். காரிய செலவுக்குத் தாத்தா பணம் கொடுத்ததாக, பேசிக் கொண்டதிலிருந்து தெரிந்தது.
தாத்தா ஒரு வாரம் யாருடனும் பேசவில்லை. மௌனமாகவே இருந்தார். அவர் சகஜநிலைக்குத் திரும்ப வெகுநாட்களானது. திண்ணைகள் நாராயணனை ஞாபகப்படுத்தின.
தாத்தாவுக்கு முடி, கால் நகம் வெட்ட நாராயணன் மாதம் தவறாமல் வந்துவிடுவார். கையோடு அவர் கொண்டுவரும் சிறு பெட்டியில் சவரம் செய்யத் தேவையான கத்தி, கத்தரி, படிகாரக்கல், சீப்பு, வட்ட வடிவ டப்பாவில் சோப்பு, பிரஷ் எல்லாம் இருக்கும். பெட்டியைத்திண்ணையில் வைத்துவிட்டு,
“நான் நாராயணன் வந்திருக்கம்மா..” என்று நிலையருகில் நின்று உளநோக்கி குரல் கொடுப்பார்.
ஒல்லியாக, வெடவெடவென்றிருக்கும் நாராயணன் கணுக்காலுக்கு மேலே வேட்டி கட்டியிருப்பார். மல் துணியில் தைத்த அரையளவு ஜிப்பா அணிந்திருப்பார். அதைத் தவிர்த்து வேறு உடையில் நான் அவரைப் பார்த்ததில்லை.
நாராயணனுக்கு வீடு, வீடாக சென்று தலை முடி திருத்தி,முகச்சவரம் செய்து விடுவதுதான் வேலை. சுழலும் நாற்காலியுள்ள சலூன்கள் இல்லாத காலமது. கிராமத்துக்கொரு நாராயணன் இருப்பார். அவரிடம் ஊர், உலகக் கதைகளைப் பேசியபடியே சவரம் செய்து கொள்வார்கள் ஆண்கள்.
தாத்தாவுக்கு கால் நகங்கள் கெட்டிப்பட்டுப் போயிருக்கும். அதிலும் பெருவிரல் நகங்கள் கிளிஞ்சல்கள் போல் தடித்திருக்கும். சற்றே நிறம் மங்கி பழுப்பாய் இருக்கும் நகங்களை நாராயணன் பதமாய் வெட்டிவிடுவார்.
முதலில் கிண்ணியில் இருக்கும் தண்ணீரையள்ளி நகங்களை நனைப்பார். இரண்டு முறை அப்படி விட்டுவிட்டு செய்துவிட்டு கொஞ்சநேரம் பொறுத்திருப்பார். கெட்டியான நகங்கள் தண்ணீர் பட்ட சிறிது நேரத்தில் ஊறிப்போகும். அதை உறுதிபடுத்திக்கொண்டு வேலையை ஆரம்பிப்பார்.
தாத்தா ஒயர் பின்னிய நாற்காலியில் அமர்ந்து கால்களை தரையில் அழுந்த பதிய வைத்திருப்பார்.
“அந்த நகவெட்டிய கொண்டா..”
உள்நோக்கி குரல் போகும். தாத்தாவின் மேசை இழுப்பறையில் நகவெட்டி பத்திரமாக இருக்கும். சிங்கப்பூர் நகவெட்டி. சற்றே பெரியது. இளஞ்சிவப்பு நிறத்தில் பூக்கள் வரையப்பட்டிருக்கும். தாத்தாவின் தம்பி மகன், என் சித்தப்பா சிங்கப்பூரிலிருந்து வாங்கிவந்துத் தந்தது. பாட்டி அதை மிக கவனமாக கொண்டுவந்து தருவாள்.
நாராயணனும் கை நீட்டி பொன்போல் வாங்கிக்கொள்வார். தாத்தா கேட்கும் கேள்விகளுக்கு பதில்களும், நகங்களும் வந்து விழும். நாராயணன் நகங்களை சேகரித்து குப்பையில் போட்டுவிட்டு நகவெட்டியை நன்றாக கழுவி வெயில் பட வைப்பார்.
காய்ந்ததும் பாட்டி எடுத்து சென்று மேசை இழுப்பறைக்குள் பத்திரப் படுத்துவாள். அடுத்தது முடிவெட்டும் படலம். தாத்தா சம்மணமிட்டு அமர்ந்து கொள்வார். நாராயணன் அவர் முன் கால்களை ஊன்றி குந்தாமல் அமர்ந்திருப்பார். தலையில் நீர் தெளித்து சீப்பால் வாரி கத்தரி கொண்டு வெட்டி முடியை சீராக்குவார்.
அவருடைய இரண்டு கைகளும் ஒத்திசைவோடு இயங்குவதைப் பார்க்க ஆச்சரியமாக இருக்கும். விறுவிறுவென்று சீப்பையும், கத்தரியையும் அடுத்தடுத்து பிரயோகிப்பது அவருக்கு கைவந்த கலையாக இருந்தது. அதில் ஒன்றிய தன்மையோடு அவர் ஈடுபட்டிருப்பதை நான் கண்ணிமைக்காது பார்த்திருப்பேன்.
வெளுத்த முடி வெள்ளிக் கம்பிகளாக மடியில் விழுவதைப் பார்க்க வேடிக்கையாக இருக்கும். தாத்தாவுக்கு எழுபது வயதிலும் முடி நிறைய இருந்தது. அது பரம்பரை வாகு என்றாள் பாட்டி.
பாட்டி கையால் காபி குடிக்க கொடுப்பினை வேண்டும் என்று நாராயணன் அவளிடமே சொல்வார்.
“சங்கரி, நாராயணன் வந்துட்டான்.”
தாத்தாவின் குரல் அடுக்களையை எட்டும் முன்னரே காபி வந்துவிடும்.
“அவன்தான் வந்தவுடனேயே குரல் குடுத்துட்டானே.”
பாட்டிக்கு யார் வந்தாலும் பாரபட்சம் கிடையாது. விருந்தோம்பல் அவ்வளவு பிடிக்கும். அவள் தரும் காபியை நாராயணன் துண்டை கைகளில் பிடித்து வாங்கிக்கொள்வார்.
பின் ஓர் ஓரமாகச் சென்று காபியை ரசித்து, ருசித்து குடிப்பார். அப்போது அவர் முகத்தில் மலர்ச்சி ஒளிர்ந்து கொண்டிருக்கும்.
திடீரென்று இருட்டிக்கொண்டு மழை கொட்டும்போது ஒரு விளக்கை ஏற்றிவைத்தால் முணுக்கென்று மெல்லிய வெளிச்சம் பரவி அறையில் ததும்பி வழியுமே. அப்படியும் தோன்றும். அதற்காகவே அவர் காபி குடிப்பதை நான் மறைந்திருந்து ரசிப்பேன்.
அவர், தன் வாழ்நாளில் அப்படியொரு காபியை வேறெங்கும் குடித்ததில்லை என்று பின்னொருநாள் என்னிடம் கூறி நெகிழ்ந்து போனார். பாலில் காபிப் பொடியை போட்டு கொதிக்கவிட்டு, வடிகட்டி, சீனிபோட்டு அவர் மனைவி தருவாராம். பில்டர்காபி பற்றி அவருக்கு எதுவும் தெரியாதாம். சிரித்தபடி சொன்னார்.
நாராயணனின் அப்பா, தாத்தாவின் அப்பாவுக்கு சவரம் செய்து விட்டவர். அவருடன் நாராயணன் சிறுவனாக வருவாராம். அப்போது தாத்தா வாலிபனாக இருந்திருக்கிறார். கொள்ளுத்தாத்தா, தாத்தாவை கட்க முடி மழித்துக் கொள்ள சொல்லி வற்புறுத்துவாராம். தாத்தாவுக்கு வெட்கமாக இருக்குமாம்.
“இதுல என்னடா வெக்கம். தலை, முகத்தோட சேர்த்து அக்குளையும் சுத்தம் செஞ்சிக்கோ”என்பவர் கண்சாடை காட்டிவிட்டுப்போவாராம்.
பின்னாளில் நாராயணன் அந்த வேலையை செய்தார். எனக்கும், அப்பாவுக்கும் முடிவெட்டுவது கூட நாராயணன்தான். அப்பாவிடம் மூச்சு இழையோடும் சத்தத்தைத் தவிர வேறெதுவும் கேட்காது. தாத்தாவுக்கு முடி திருத்தும்போது நேரம் இழுபடும். தாத்தா பேசிக்கொண்டேயிருப்பார்.
நாராயணன் ஒரு கையை அவரின் தலையில் வைத்து இன்னொரு கையை ஆட்டி, ஆட்டி பதில் சொல்லிக்கொண்டோ, மறுபேச்சு பேசிக்கொண்டோ இருப்பார். அப்போது கத்தரி காற்றைக் கிழித்து அப்படியும், இப்படியும் அலையும்.
அப்பாவுக்குப் பத்து நிமிடங்களில் வேலை முடிந்துவிடும். அவருக்கு முடி திருத்தும்போது நாராயணன் முகம் உணர்ச்சியற்ற தன்மையிலிருக்கும். செய்நேர்த்தியில் குறையிருக்காது. ஆனால் அதை எந்திரத்தனமாக செய்வார்.
தாத்தா என்றால் துள்ளியோடும் மான்குட்டிபோல் முகத்தில் உற்சாகம் துள்ளும். வாஞ்சையோடு காலை சுற்றும் நாய்க்குட்டி போல் குழைந்துபோய் அவர் அமர்ந்திருப்பார். தன் தேவனைக் கண்டுவிட்ட பரமானந்த பெருநிலையில் அவர் கண்கள் மின்னும்.
அவருக்குக் காசு கொடுக்க தாத்தா மறுமுறை பாட்டியை அழைப்பார். காபி கொடுக்க, நகவெட்டி எடுத்து கொடுக்க, பணம் தர என்று மூன்றுமுறை பாட்டி வாசலுக்கு வருவாள்.
“நாராயணன் வேலை முடிச்சிட்டான். பணம் எடுத்துட்டு வா சங்கரி..”
பாட்டி, தாத்தாவின் மேசை இழுப்பறையைத் திறந்து ஏற்கனவே தனியாக எடுத்து வைத்திருக்கும் பணத்தை எடுத்து தானும் ஒருமுறை எண்ணிப் பார்த்துவிட்டு மேசை இழுப்பறையை பூட்டி அடியில் கையைக் கொடுத்து தள்ளிப்பார்த்து திருப்திபட்டுக் கொண்டு வருவாள்.
கீழே விழுந்து கிடக்கும் முடிக்கற்றைகளைக் கூட்டி சுத்தம் செய்யும் நாராயணன் பாட்டியைக் கண்டதும் கையை வேட்டியில் துடைத்துக்கொண்டு குனிந்து இருகைகளையும் ஏந்தி பணத்தைப் பெற்றுக்கொள்வார்.
மேசைக்குள்ளிருக்கும் பணத்தை முன்னதாகவே வெளியில் எடுத்து வைக்கும் பழக்கம் தாத்தாவுக்கில்லை. பாட்டியும் அப்படி செய்யச்சொல்லி கேட்கமாட்டாள். நாராயணனைப் பார்த்து இரண்டு அதட்டல்கள் போடக்கூட அவளுக்குப் பிடிக்கும்.
“கல்யாண வயசாச்சு பொண்ணுக்கு. வரன் பாக்க ஆரம்பிக்கலியா..?”
ஒருமுறை அவளின் கேள்விக்கு நாராயணன் மையமாக தலையசைத்து வைத்தார்.
“இப்படின்னா என்ன அர்த்தம்?”
தலையை இடவலமாக அசைத்து புருவம் உயர்த்தி கேட்டாள். தாத்தா, அவளை ரசித்துப் பார்த்துக் கொண்டிருந்தார்.
“நேரங்காலம் கூடி வரணும் இல்லீங்களா.. நடக்குறப்ப தான எல்லாம் நடக்கும்.”
“ஆடி மாசம் பொறந்தா ஆத்துத்தண்ணி தன்னால ஓடிவரப்போவுதுன்னு சொல்ற மாதிரியில்ல இருக்கு. மண்வெட்டி எடுத்து வழி பண்ணி விடாம சளக், புளக்குன்னு மடைத்தண்ணி வரப்பு தாண்டி பாயுமா..?”
பாட்டி லேசில் விடமாட்டாள். படிமானம் வரும்வரையில் பிடிமானம் அவள் கையில்தான் இருக்கும். இது நாராயணனுக்கும் தெரியும். அதனால்,
“சரிம்மா. ஆக வேண்டியத செய்யிறேன்”என்று சரணாகதி அடைந்தார்.
ரெட் ஆக்ஸைடு பூசப்பட்ட திண்ணைகள் சற்று உயரமானவை. அதில் கீழிருந்து எம்பி குதித்து ஏறிக்கொண்டோ, எதிர்த்திண்ணையிலமர்ந்து கொண்டோ நான் அவர்களை வேடிக்கைப் பார்ப்பேன்.
தாத்தா எழுந்து சென்றபிறகு என்னிடம் கேள்வி கேட்டபடியே நாராயணன் பெட்டிக்குள் உபகரணங்களை வைத்து மூடுவார். முதலில் கத்தியை தண்ணீரில் கழுவி வேட்டியில் நன்றாக துடைத்துவிட்டு உள்ளே வைப்பார்.
கத்திரியின் இரண்டு இறகுகளையும் அகல விரித்து முடி எதுவும் சிக்கியிருக்கிறதா என்று பார்த்து, இருந்தால் எடுத்தெறிந்துவிட்டு அலம்பி துடைத்து வைப்பார். படிக்காரக்கல் நுங்கு போல் இருக்கும். கையில் வைத்துக்கொண்டால் ஜிலுஜிலுவென்று சில்லிடும். என் கண்களில் மிதக்கும் ஆவலைக் கண்டு,
“கைக்குள்ள வச்சி பாக்குறீங்களா தம்பி….?” என்பார்.
நான் ஆசையோடு வாங்கி இரண்டு கைகளிலும் மாற்றி, மாற்றி வைத்துப் பார்ப்பேன். பின் கன்னங்களில் பதித்துக்கொள்வேன். முகச்சவரம் செய்தபிறகு கத்தியில் இழுபட்டு எரியும் கன்னங்களில் அதை வைத்து தேய்த்துக்கொள்வார்களாம். குளுமையாக இருக்குமாம்.
அதோடு வெட்டுக்காயங்களால் ஏற்படும் கிருமி தொற்று உண்டாகாமல் படிகாரம் தடுக்குமாம். தாத்தா அவரிடம் முகச்சவரம் செய்து கொள்வதில்லை. அதனால் அது பெட்டிக்குள்ளேயே இருக்கும். அப்போதெல்லாம் ஆஃப்டர் ஷேவிங் லோஷன் இருந்ததா என்று தெரியவில்லை.
“தம்பி, தர்றீங்களா..?”
நாராயணன் கைநீட்டுவார். நான் மனமின்றி கொடுப்பேன். வாங்கி பத்திரப்படுத்தி பெட்டியைக் கட்கத்தில் வைத்துக்கொண்டு கிளம்பிவிடுவார். அவர் மகன் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தான்.
“நம்ம குலத்தொழில அவன் தலையில கட்ட வேணாம்னுதான்..”
ஒருமுறை தன் பக்க நியாயத்தை சொல்லிக் கொண்டிருந்தார். தாத்தா, அதுவும் சரிதான் என்பது போல கேட்டுக் கொண்டிருந்தார்.
“பி. ஏ பொருளாதாரம் படிக்கிறேன்னான். பாலிடெக்னிக் படிச்சா ஒடனே வேல கெடைக்கும்னு சொல்றாங்களேன்னேன். அதெல்லாம் முடியாதுன்னுட்டான். இந்த படிப்பு படிச்சா பெரிய, பெரிய வேலயெல்லாம் கெடைக்குமாம். என்னென்னமோ பேரு சொன்னாங்கய்யா. ஒண்ணும் புரில. சரின்னுட்டேன்.”
அவர் கையிலிருந்த கத்தரி அலைந்து சிக், சிக்கென்று காற்றை வெட்டியது.
“எங்கங்கய்யா.. இந்தப் பயலுவோ நம்ம பேச்ச எங்க கேக்குறானுவோ. பேண்டு, சட்ட போட்டதும் எல்லாந் தெரிஞ்சவன் மாதிரி தல கொழுப்பெடுத்து அலையிறானுவோ. “
“ஆமாமா.. நம்ம வைத்தியரு பேரன்கூட சொல்லா, கொள்ளாம மெட்ராஸ் கெளம்பிப் போயிட்டானாம். ஒசரமா, செவப்பா இருக்குறதுக்கு சினிமாவுல நல்ல சான்ஸ் கெடைக்கும்னு யாரோ சொன்னாங்களாம். அத கேட்டுக்கிட்டு இந்தப்பய இப்படி பண்ணியிருக்கான். வைத்தியரு சொல்லிட்டு ரொம்ப வருத்தப்பட்டாரு.”
தாத்தா மஞ்சள் வெயில் பழுத்துக்கிடந்த தெருவைப் பார்த்தபடி சொன்னார். அவர் சொல்லி முடித்ததும் நாராயணன் மடக்குக் கத்தியை விரித்து இடது உள்ளங்கை ஓரத்தில் இரண்டு, மூன்று முறை தேய்த்துவிட்டு தாத்தாவின் கிருதாவை மழிக்கத்தொடங்கினார்.
அவர் கிருதா அடர்த்தியாயிருக்கும். அதை நாராயணன் கவனமாகத் திருத்துவார். சிற்பி சிலை செதுக்குவதை விட கடினமாயிருக்குமோ என்று எண்ணவைப்பதுபோல அவர் முகபாவனை இருக்கும்.
நாராயணன் முதலில் கத்தியால் கிருதாவின் இருபக்கமும் மழிப்பார். ஒரு சாண் நீள கிருதா காதின் நடுமையத்தில் முடியும்படி கீழேயும் மழிப்பார். பின் பெரிதாக நீட்டிக்கொண்டிருக்கும் முடிகளை கத்தரியால் வெட்டி சீராக்குவார். வெகு ஜாக்கிரதையாக அவ்வேலையை அவர் செய்வார். அப்போது அவர் வாய் மூடியே கிடக்கும். வலது பக்கத்தை முடித்துவிட்டு இடப்பக்கம் வரும்போது கூடக்குறைய ஆகிவிடக்கூடாதே என்கிற ஜாக்கிரதையுணர்வு முகத்தில் தெரியும். அதையும் கவனத்துடன் மழிப்பார்.
அதன்பின் முடிச்சு அவிழ்வது போல அவர் முக இறுக்கம் மெதுமெதுவாக தளரும். விட்ட இடத்திலிருந்து பேச்சை தொடர்வார்.
இரண்டு கிருதாக்கள் எடுப்பாய் பளிச்சென்று மின்னும்போது தாத்தாவின் முகத்தில் ஒரு அகல்விளக்கை ஏற்றிவைத்ததுபோல் பிரகாசம் ஜொலிக்கும். ஒருமுறை முடிவெட்டி முடித்துவிட்டு நாராயணன் வெகுநேரம்வரை தாத்தாவை உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தார்.
“என் முகத்துல வித்தியாசமா ஏதாவது தெரியுதா நாராயணா.. ரொம்ப நேரமா பாத்துக்கிட்டிருக்கியே..”
தாத்தா எழுந்து நின்று வேட்டியை உதறிக் கொண்டார்.
“அப்புடியே நில்லுங்கய்யா…..”
நாராயணன் எழுந்து நெடுஞ்சாண்கிடையாக அவர் காலில் விழுந்தார்.
“அட, இதென்ன கூத்து. எந்திரி, எந்திரி.”
தாத்தாவுக்கு ஒன்றும் விளங்கவில்லை. நாராயணனுக்கு கண்கள் கசிந்துவிட்டன. துண்டை கட்கத்தில் சொருகிக்கொண்டு கைகட்டி நின்றிருந்தார்.
“நம்ம ஊரு கரைவீரநாதராட்டம் இருக்கீங்கய்யா. அதுக்குமேல சொல்லத் தெரில. “
“அது சாமியாச்சே. நான் அப்புடியா இருக்கேன்.”
“என்னவோ பாத்ததும் பட்டுன்னு அதுதான் தோணுச்சு. மனசுல களங்கமில்ல. ஒவ்வொரு முறையும் சொல்லணும்னு நெனப்பேன். சோடா பாட்டில ஒடைச்சாப்ல பட்டுன்னு பொங்கி வந்து சட்டுன்னு அடங்கிரும். ஏதோ ஒரு தடை சில்லு, சில்லா ஒடைச்சு போட்ரும். அதுவும் ஒரு காரணம். இன்னிக்கு மனசு பொங்குனது அடங்கவேயில்ல. சட்டுன்னு வுழுந்துட்டேன்.”
“சரி, சரி. நல்லாயிரு போ.”
தாத்தா இயல்பாய் விலகிவிட்டார். பார்த்துக் கொண்டிருந்த என்னைப் பார்த்து நாராயணன் கண்கள் பூக்க சிரித்தார்.
“தம்பிக்கு ஏதும் வெளங்குச்சா..?”
நான் மையமாக தலையாட்டினேன்.
“நல்லது. கல்லு வேணுமா….?”
படிக்காரக்கல்லை பெட்டியிலிருந்து எடுத்து நீட்டினார். நான் வாங்கி கன்னத்தில் வைத்துக்கொண்டேன். சில்லிட்டது. நாராயணன் கொட்டிக் கிடந்த முடியை சுத்தம் செய்ய ஆரம்பித்தார்.
2
அவருடைய மகளுக்குத் திருமணம் முடிவானபோது தாத்தா இரண்டு மூட்டை நெல்லும், நூறு ரூபாய் பணமும் தந்தார். நாராயணனுக்கு சந்தோஷம் பிடிபடவில்லை. எண்பதுகளில் நூறு ரூபாய் மிகப்பெரிய பணம். இரண்டு மூட்டை நெல்லும் சாதாரணமல்ல.
தாத்தாவுக்கு, நாராயணன்மேல் தனி வாஞ்சையுண்டு. வெளிப்படையாக அதைக் காண்பித்ததில்லை.கரிசனமான அந்தப் பார்வையிலிருந்து எளிதாக புரிந்து கொண்டு விடலாம்.
கல்யாணத்துக்குத் தாத்தா மட்டும் கிளம்பியபோது நான் பிடிவாதம் பிடித்து அவருடன் சென்றேன். அன்று நாராயணன் புதிய அரை ஜிப்பா, வேட்டி அணிந்திருந்தார். துண்டு கூட ஓரத்தில் பில் ஒட்டப்பட்டு புதிதாக இருந்தது.
எங்களைக் கண்டதும் வாசலுக்கே ஓடிவந்துவிட்டார். நெற்றியில் சுண்டுவிரல் அகலத்துக்கு விபூதியணிந்து பளிச்சென்று இருந்தார். தாத்தாவை எதிர்பார்க்கவில்லை என்று புரிந்தது.
வீட்டிற்கு, ஆசீர்வாதம் வாங்க அழைத்து வரலாமென்றிருந்ததாக சொன்னார். இரண்டு மடக்கு நாற்காலிகள் விரித்துப் போடப்பட்டு நாங்கள் அதில் அமரவைக்கப்பட்டோம். அவருடைய பிள்ளை சோடா உடைத்துக் கொண்டுவந்தான். நாராயணன் அருகிலேயே நின்றுகொண்டிருந்தார்.
“மாப்ள ஜோரா இருக்கான் நாராயணா..”
“சரிங்க…”
நாராயணன் குழைந்தார். கல்யாணம் முடிந்ததும் அவர்களை தாத்தா காலில் விழச்சொன்னார். தாத்தா ஆசீர்வாதம் செய்தபோது அவர் முகத்தில் அவ்வளவு பெருமிதம். விடைபெற்றுக்கொண்டு கிளம்பியபோது வாசல்வரை வந்து வழியனுப்பினார்.
“நல்லதுங்க. நீங்க வந்தது நிறைவா இருந்துச்சு. “
வலதுகையை நெஞ்சில் வைத்துப் பணிவாக சொன்னார்.
“சடங்கு, சாங்கியமெல்லாம் முடிச்சுப் பொண்ண அனுப்புனா பெரிய வேல முடிஞ்சிரும்.” மேற்கொண்டு அவரே சொன்னார்.
“பாத்துக்க…..”
தாத்தா அவர் தோளில் தட்டிக்கொடுத்தார். குடித்த கலர் நாக்கில் அசட்டுத் தித்திப்பாய் தித்தித்தது. அவர் எங்களை சாப்பிட சொல்லவில்லை. காரணம் என்னவென்று அப்போது விளங்கவில்லை. ஒரு வாரத்துக்குப் பிறகு நாராயணன் வழக்கம்போல பெட்டியோடு வந்துவிட்டார்.
“ஒருவழியா பொண்ண கரையேத்திட்ட.”
பாட்டி சொல்ல அவர் முகத்தில் வெட்கம் கலந்த புன்னகை இழையோடியது.
கொஞ்சநாட்களாக வலதுகாதில் இரைச்சல் சத்தம் கேட்டுக் கொண்டேயிருப்பதாக நாராயணன் ஒருமுறை சொன்னார்.
“திடீர்ன்னு காதுக்குள்ள உஸ்ஸுன்னு ஒரு சத்தம். வாயுவா இருக்கும்னு நெனச்சேன். ஆனா ஒரு வாரமாச்சு. சத்தம் நின்னபாடில்ல. இதோ, இப்பக்கூட கேட்டுக்கிட்டே இருக்குங்கய்யா. ரொம்ப தொந்தரவா இருக்கு. “
“திருவாரூர்ல அய்யாச்சாமின்னு ஒரு டாக்டர் இருக்காரு. நல்லாப் பாப்பாரு. அவருகிட்ட கொண்டுபோயி காட்டு. என்னா, ஏதுன்னு கண்டுபுடிச்சு அதுக்குத் தகுந்தாப்ல மருந்தெழுதி குடுத்துடுவாரு.”
தாத்தா பத்து ரூபாய் தந்து அட்ரஸ் குறித்துக் கொடுத்தார். நாராயணன் திருவாரூர் சென்று காண்பித்துவிட்டு நேராக இங்குதான் வந்தார். தாத்தா திண்ணையில் நாற்காலி போட்டு அமர்ந்திருந்தார். மரத்தாலான சாய்வு நாற்காலி அது.
நாற்காலியின் கை வழுவழுவென்று நீளமாக இருக்கும். உடலை கிடத்திக் கொள்ளும் பகுதியில் வரிசையாக துண்டுப்பலகைகள் பொருத்த ப்பட்டிருக்கும். மாலை நேரம் காபி குடிக்க, புத்தகம் படிக்க, ஆட்கள் வந்தால் பேசிக்கொண்டிருக்க தாத்தாவுக்கு அது வேண்டும்.
அவர் உட்காராத சமயங்களில் நான் அதை ஆக்கிரமித்திருப்பேன். என்னைப் போல் இருவர் படுத்துக்கொள்ளலாம். அவ்வளவு பெரிசு. நாராயணன் முகம் சோர்ந்து போயிருந்தது. வெயிலில் வந்த களைப்போடு தாத்தாவின் காலருகில் அமர்ந்துகொண்டார்.
“என்னா சொன்னாரு…..?”
“அவரு காதுக்கு பாக்குற டாக்டரு இல்லியாம். பொது டாக்டராம். இருந்தாலும், தனக்கு தெரிஞ்சவரைக்கும் இது குணப்படுத்த முடியாத வியாதிங்குறாரு.”
நாராயணன் குரல் மெலிதாக வந்தது. தாத்தா விரல்களைக் கோர்த்து, கோர்த்து பிரித்தார். கால் கட்டை விரல்கள் தானாக சொடக்கிட்டுக் கொண்டன.
“எதுக்கும் காது டாக்டரப் போயிப் பாக்க சொன்னாரு. இந்தோ பாருங்க.”
சட்டைப் பையிலிருந்து ஒரு காகிதத்தை எடுத்து நீட்டினார். பின் என்ன நினைத்தாரோ சடுதியில் கசக்கி எறிந்தார். முகத்தில் வியர்வை ஊறியிருந்தது. தலை முடி முன்நெற்றி வியர்வையில் படிந்து போயிருந்தது.
“அதையேன்டா கசக்கிப் போட்ட…. ஒரு எட்டு போயிப் பாத்துட்டு வந்துரலாமில்ல.”
“வேணாங்கய்யா. குணமாவாதுன்னு தெரிஞ்சும் எதுக்கு அலையணும். காசும் செலவாவும். கெளம்புறங்க..”
மெதுவாக எழுந்து போனார்.
3
அன்று மாலை நாராயணன் தன் மகனோடு தாத்தாவைப் பார்க்க வந்திருந்தார். எப்போதும் காலையில்தான் வருவார். அதுவும் பெட்டியோடு வருவார். இப்போது கையில் பெட்டியில்லை.
அவர் மகன் பெல் பாட்டம் பேண்ட்டும், பட்டை, பட்டையாக கோடுகள் போட்ட சட்டையும் அணிந்து சட்டைக் கைகளை முழங்கை வரை மடக்கி விட்டிருந்தது பார்க்க வேடிக்கையாக இருந்தது. கிருதா திமுசுக்கட்டை போன்ற வடிவத்தில் அடர்ந்திருந்தது. நாராயணன், மகனை தாத்தா காலில் விழச்சொன்னார்.
“மொத வகுப்புல பாஸ் பண்ணியிருக்காங்கய்யா. ஆசீர்வாதம் பண்ணுங்க. “
வலதுகையை கீழ்நோக்கி நீட்டி சொன்னார். சற்றே உள்ளடைந்திருக்கும் அவர் கண்களில் மின்னல் கீற்றொளி மின்னியது. தாத்தா சந்தோஷமாக தலையாட்டினார்.
“நல்லா இருடா.. கஷ்டப்பட்டு உங்கப்பா படிக்க வச்சிட்டான். வேலைக்குப் போயி அவன் கஷ்டத்த நீ போக்கணும். “
விபூதி மடலை எடுத்துவந்து நெற்றியில் இட்டுவிட்டார். பாட்டியைக் கூப்பிட்டு விபரம் சொன்னார்.
“நாராயணன் புள்ள டிகிரி வாங்கிட்டான்னா நமக்கெல்லாம் சந்தோஷந்தான். மனசுக்கு நிறைவா இருக்கு. அப்படியே ஒரு வேலைய தேடிக்கிட்டு அப்பனை உட்கார வச்சி சோறு போடணும். புரியுதா..?”
சிறு குழந்தைக்குச் சொல்வது போல சொல்ல நாராயணன் மகன் தலை மெல்ல அசைந்தது. தாத்தா இருபது ரூபாய் பணம் தந்தார். நாராயணனுக்கு இன்னும் ஏதோ தேவையாயிருந்தது போலத் தோன்றியது.
அவரது கண்களில் எதையோ எதிர்பார்த்த ஆவல் மிதந்தது. பாட்டி இருவரையும் இருக்க சொல்லிவிட்டு உள்ளே போனாள். தாத்தா, நாராயணன் மகனிடம் வேலை விபரம் பற்றி விசாரித்துக் கொண்டிருந்தார்.
நாராயணன் தூணில் சாய்ந்தமர்ந்தார். இடதுகால் பாதத்தை வலது குதிகால் பின்புறம் பொருத்தி தொடையிடுக்கில் வேட்டியை மன்னிக் கொண்டு பவ்வியமாய் அமர்ந்திருந்தது சிரிப்பை வரவழைத்தது. அவர் மகன் கைகள் கட்டி நின்றபடி தாத்தாவின் கேள்விகளுக்கு பதில் சொல்லிக் கொண்டிருக்க, பாட்டி காபியோடு வந்தாள்.
“குடிங்க..”
தாத்தா அகன்றார். பாட்டியும் உள்ளே சென்றுவிட, நாராயணன் கண்கள் விரிந்தன. நாசி விடைத்துக்கொள்ள கையிலிருந்த காபியைப் பார்த்து தலை பெரிதாக அசைந்தது.
“ஐயா வூட்டு காப்பி சுவையா இருக்கும். குடிடா..”
மகனிடம் சொன்னவர், என்னைப் பார்த்து சிரித்தார்.அப்போது கனிந்த பழம் போலிருந்தது அவர் முகம்.
“தம்பி காபி குடிச்சாச்சிங்களா..?”
நடுவில் திரும்பி கேட்டார். நான் தலையாட்டியதும் மறுபடியும் கொஞ்சம் கொஞ்சமாக காபியைக் குடித்தார். குடித்துவிட்டு மகனிடமிருந்த தம்ளரையும் வாங்கி தெருவிலிருந்த அடி பைப்பில் நான்கைந்து முறை அலம்பி கொண்டுவந்து நிலைப்படியருகில் வைத்தார்.
“வர்றங்கய்யா.. தம்பி வரட்டுங்களா.. ஐயாவோட பேரப்புள்ள. நல்ல சுதாரிப்பு.. தங்கமான புள்ள..” மகனுடன் பேசியபடியே நடந்தார்.
தெருமுனை சென்று திரும்பும் வரை நான் அவரைப் பார்த்துக் கொண்டிருந்தேன். ஒரு நேர்கோடு போலிருந்த அந்த உருவம் சற்று சாய்மானமாக நடைப் போட்டு நடந்து போனது.
அவரது நினைவுகள் எப்போதாவது வரும். அப்போது அவரின் மகனைப்பற்றி நினைத்துக் கொள்வேன். நாராயணன் இறந்து சில வருடங்கள் கழித்து ஊரில் சலூன் கடை திறக்கப்பட்டது. சுழலும் நாற்காலியுள்ள சலூன் கடை.
முகச்சவரம் செய்ய ஒருமுறை சென்றேன். நாராயணின் மகனும் இன்னும் இரண்டு பணியாளர்களும் பரபரப்பாக வேலையில் இருந்தார்கள். நாராயணின் மார்பளவு புகைப்படம் சட்டமிடப்பட்டு சுவரில் மாட்டப்பட்டிருந்ததைப் பார்த்தேன். மனம் வெற்றிடத்துக்குள் அமிழ்ந்து போனது.
ஐ. கிருத்திகா
தமிழ்நாடு, திருச்சிராப்பள்ளியில் வசிக்கிறார். இருபது வருடங்களாக சிறுகதைகள் எழுதிவரும் இவருடைய நூற்றுக்கும் மேற்பட்ட கதைகள் பல்வேறு இதழ்களில் வெளிவந்துள்ளன.
நல்ல கதை.
மிக்க நன்றி
அழகிய விவரிப்புகளோடும் சீரான வேகத்திலும் நகன்ற சிறப்பான கதை. கதை எதிர்பார்த்தபடியே முடிந்தது எனக்கு ஏமாற்றம். 👍👌💐