நியுயோர்க் நகரில் நடைபெற்ற விருந்துபசாரம் ஒன்றில் அனுக் அருட்பிரகாசத்தை சந்திக்கும் வாய்ப்பு கிட்டியது. இசையினால் அந்த மாடிவீடு தீவிரமாக சூழப்பட்டிருந்த போதிலும் எமது கருத்துப் பரிமாறல்கள் மென்மையான இசைத்துடிப்பாக அமைந்திருந்தது. நவீன கால நாவல்கள் பற்றியும், தமிழ் கற்பனைகள், தனிமை பற்றியும் நாம் பேசினோம். அந்த கலந்துரையாடலில் அவர் தத்துவவியல் தொடர்பான நவீன எல்லைகளைத் திறந்தார். அவர் வாசித்தவைகள், எழுதியவைகளினூடாக இழப்பும், அடிமையாதலும், மகிழ்வும் பாய்ந்தோடிக்கொண்டிருந்தன.
அருட்பிரகாசத்தின் முதலாவது நாவலில் (The Story of a Brief Marriage (2016) இலங்கையில் நடைபெற்ற உள்நாட்டுப் போரின் ஓர் இரவும் பகலும் சித்திரிக்கப்படுகின்றது. அதில் காலம் நழுவிச் செல்லும் தன்மை கொண்டதாகவும், திரவ ரூபமாகவும் உள்ளது. எமது வாழ்வில் மங்கிச் செல்கின்ற நிமிடங்கள், அவற்றுக்கு சமனாகாத கால எல்லைகளுடன் ஏதோவொரு இடத்தினைக் கையகப்படுத்திக் கொள்ளும் சிந்தனை நாவலில் கட்டியெழுப்பப்படுகின்றது. The Story of a Brief Marriage படைப்பில் வெடிப்புறும் மனித முரண்பாடுகளின் இயல்புநிலை என்னுள் தீவிரமான உணர்வினை ஏற்படுத்தியிருந்தது. மனித ஸ்பரிசம், உடலைக் கழுவிக் கொள்ளுதல், உறக்கம், உணவு உட்கொள்ளல், உரையாடுதல் ஆகிய பொதுவான செயல்கள் அனைத்தும் நடைபெற்றுக்கொண்டிருக்கும் போதே போரினால் இந்த ஒவ்வொரு கணமும் கால எல்லை அற்று அதன் பெறுமதியை நினைவுகூறுகின்றது.
அவரின் முதல் நாவலில் காலத்தின் சுருக்கநிலை பற்றிய அறிவுக்கு எதிராக, அதன் பாய்ந்தோடும் தன்மை குறித்து ஆய்வு செய்யப்படுகின்ற போதிலும், அவரின் புதிய நாவலான A Passage North (2021) இல் கால இடைவெளி மற்றும் தொலைவில் ஓடிக்கொண்டிருக்கும் காலப்பகுதியுடன் வாசகர்களை ஒன்றிணைக்கின்றார். படைப்பின் கதாநாயகனான கிரிஷன் தனது பாட்டியைப் பராமரித்த பெண்ணான ராணியின் இறுதிச்சடங்கில் கலந்துகொள்ள கொழும்பிலிருந்து வட பகுதியை நோக்கி பயணிக்கின்றார்.
வாழ்வில் அன்றாடம் நாம் காண்கின்ற பகல் கனவுகளுக்கு உயிர்ப்பு வந்தால் என்னவாகும் என்று நினைத்துக் கொண்டும், சொந்த வாழ்வினதும் நாட்டினதும் அண்மைக்கால வரலாற்றினை அவதானித்துக் கொண்டும் கிரிஷன், சலிப்புடன் தொலைதூரத்திலிருந்து விருப்பு கொள்வது பற்றி சிந்தித்துக்கொண்டிருக்கின்றான்.
இலங்கைத் தமிழரான அருட்பிரகாசம் இந்தியாவிலும் இலங்கையிலும் காலத்தைக் கடத்தியிக்கின்றார். The Story of a Brief Marriage நூல் தற்போது ஏழு மொழிகளில் மொழிப்பெயர்க்கப்பட்டுள்ளது. தெற்காசிய இலக்கிய விழாவில் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளதுடன், டிலான் தோமஸ் விருதுக்காக பட்டியலிடப்பட்டுள்ளது. இலக்கிய பக்கங்கள் அடிப்படையிலும், தனிநபராகவும் அவர் ஒரு பேச்சாளராக இருக்கின்றார். அதேபோன்று அவரின் தயாளக்குணத்தினால் அவரின் இருப்பு உறுதியாகின்றது.
கொலம்பியா பல்கலைக்கழகத்தில் தத்துவவியல் தொடர்பான கலாநிதி பட்டம் பெற தாயராகிக் கொண்டிருக்கும் பொழுது நீங்கள், 2011 முதல் 2014 வரையான காலப்பகுதியில் The Story of a Brief Marriage நாவலை எழுதினீர்கள். நினைவு தெரிந்த நாளிலிருந்து உங்களுக்கு எழுத்தாளராக வேண்டும் என்ற தேவை இருந்ததா?
எழுதுதல் என்பது சாத்தியப்படக் கூடிய விடயம் என்று நான் விளங்கிக் கொள்ள ஆரம்பிக்கும் போதே – அதாவது ஏனக்கு 19 அல்லது 20 வயதாகும் போது- எழுத வேண்டும் என்ற தெளிவான சிந்தனை எனக்குள் இருந்தது. புத்தகங்கள் வாசிக்கின்ற சூழலில் நான் பிறந்து வளர்ந்தவன் அல்ல. குறிப்பாக என் அன்னை, சிறுவயது முதலே வாசிப்பினை ஊக்குவித்திருந்தார் என்று எனக்கு நினைவு இருக்கின்றது. எனினும் இளம் பருவ வயதில் புத்தகங்கள் மீதான பரீட்ச்சயம் தற்செயலாக கிட்டிய ஒன்றாக அமைந்திருந்தது. அதுவும் புனைகதை இலக்கியம் அல்லாமல் தத்துவவியல் சம்பந்தமான புத்தகங்களின் ஊடாக. என்னை வாசிப்புக்கு அடிமைப்படுத்திய எனது முதலாவது விருப்பாக தத்துவவியல் அமைந்திருந்தது. பதினைந்து வயது தொடக்கம் நான் தத்துவம் சம்பந்தமான நூல்களை வாசிக்க ஆரம்பித்தேன். அதற்கு ஒரு காரணம், தொல்லை தருகின்ற பாடசாலைச் சூழலிலிருந்து விலகியிருக்க வேண்டும் என்று ஏற்பட்ட அவசியமாகும். மற்றைய காரணம், போர்க் காலத்தில் கொழும்பில் காலத்தைக் கழித்த அனைத்து தமிழ் ஆண் பிள்ளைகளும் தாம் கைது செய்யப்படுவோம், விசாரணைக்குட்படுத்தப்படுவோம் என்ற அச்சத்தின் காரணமாக தத்தம் இருப்பிடங்களில் முடங்கிக் கிடந்தது போன்று நானும் அதிகளவான நேரத்தினை வீட்டிற்குள்ளேயே முடங்கிக் கிடக்க நேரிட்டது. பல்கலைக்கழக மாணவனாக இருக்கும் போது தான் வாழ்க்கையைப் பற்றி கற்றுக் கொள்ளக் கூடிய இலக்கியங்களுடன் பழக ஆரம்பித்தேன்.
தத்துவவியலுக்கு செய்யும் பங்களிப்பாகவே நீங்கள் நாவலைப் பார்க்கின்றீர்கள். சில அனுபவங்கள் ஓர் ஆணின் முதன்முதலான பார்வையின் அடிப்படையில் மட்டுமே விரிவடைகின்றன என்று தெரிகின்றது. சுருக்கமாக காதலைப் பற்றியோ, போரைப் பற்றியோ பேசுவதை விட வேறுபட்ட நிலையில், அவர்களின் அறிவாற்றல் மற்றும் புலனுணர்வு கட்டுமானம் பற்றி விழிப்புணர்வு பெறுவதாக அமைகின்றது. நாவல் எழுதுவதும், தத்துவார்த்த ரீதியில் சிந்திப்பதும் ஆகிய இவ்விடயங்களில் காணப்படும் தொடர்பு நிலைப் பற்றி நீங்கள் கருதுவது என்ன?
பகுப்பாய்வு பாரம்பரியத்தின் கீழ் பயிற்சிப் பெற்றவன் நான். தத்துவவியலை விஞ்ஞானத்துடன் இணைந்து பயணிக்கும் ஒன்றாகக் கருதுகின்றேன். அதேவேளை தத்துவம் தொடர்பான பிரச்சினைகளை அவை தோன்றிய சமூக, வரலாற்று மற்றும் உயிர்மைச் சூழல்களிலிருந்து பிரித்து எடுத்து நோக்குகின்றேன். சிறுவயதில் நாம் தத்துவரீதியிலான பிரச்சினை ஒன்றை நோக்கும் முறையை விட இந்த முறை மிகவும் வித்தியாசமானது. அது நாம் வாழ்கின்ற, நிலவுகின்ற சூழல் சம்பந்தப்பட்ட ஒன்றாயின், ஏதோவொரு அவசர தன்மையுடன் எமது எல்லைகளையும், அதில் தென்படாத தடுப்புச் சுவர்களையும் தேடிச் செல்ல அது எம்மைத் தூண்டுகின்றது. நிகழ்காலம் தொடர்பான அக்கறை வாய்ந்த நிமிடங்கள் அவை. எனினும் அவை எப்பொழுதும் ஏதோ ஒருவகையில் வியப்பினை ஏற்படுத்தும் விடயத்தினால் அல்லது மர்மங்களினால் சூழ்ந்திருக்கின்றது. அந்த அனுபவங்களை வார்த்தைகளில்; வடிப்பதற்கும், அது எவ்வாறு எம்மை சிறைப்படுத்துகின்றது என்பதனையும் விபரிப்பதற்கும் இயலாததன் காரணமாக, நாம் தத்துவவியலுடன் சரியான முறையில் ஊடாடும் போது, நிலவுகின்ற கணமும், பிரமிப்பு பற்றிய உணர்வும் எம்மால் மறக்கப்பட்டு விடுகின்றது. இவ்வாறான எமது அனுபவங்களைத் தத்துவார்ந்த பிரச்சினைகளாக்கிக் கொள்ளும் போது தர்க்க ஆற்றலைப் பயன்படுத்தி நாம் அவற்றை தீர்க்க முயற்சிக்கின்றோம். நான் சந்தித்த பல கல்வியியல் தத்துவ அறிஞர்கள், அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளினால் மிகக் குறைந்தளவிலேயே அசைவுக்குள்ளாகின்றனர்.
உங்களின் புதிய நாவலான A Passage North நூலில் சித்திரிக்கப்படும் மனநிலையை எவ்வாறு விபரிப்பீர்கள்? மரணத்தின் நிகழ்வினூடாக படைப்பு நகர்ந்து செல்கின்றது. அதன் கதாநாயகன் கிரிஷன், கொழும்பில் வாழ்கின்ற தமிழர். கதையின் ஆரம்பத்திலேயே அவரது பாட்டியை பராமரிக்கும் ராணி என்பவர் இறந்துவிட்டார் என்ற தகவல் கிடைக்கின்றது. போர் முடிவுற்ற நிலையில் வட பகுதிக்கு செல்லும் பயணத்தை அவர் முதன்முறையாக ஆரம்பிக்கின்றார். மனிதர்களுடனும், இடங்களுடனும் இருந்த கிரிஷனின் தொடர்புகளுடன் ஒன்றுக்கலந்திருந்த மனப்பதிவுகள் இலக்கிய மற்றும் அரசியல் வரலாறாக A Passage North நூலில் உள்ளடக்கப்பட்டுள்ளது. இந்த காரணத்தை தொடர்புறுத்திக் கொண்டு நூலில் காமம் பற்றியும் நீங்கள் பேசுகின்றீர்கள்.
நூலின் இறுதியில் மிகுந்த காமம் பற்றியும் வேட்கை பற்றியும் நீண்டதொரு கலந்துரையாடல் ஏற்படுகின்றது. சலிப்பினை உணரும் திறனையும், வாழ்வில் ஏதோவொன்றை இழப்பதனால் அடையும் உணர்வையும் நாம் உணரும் விதத்தின் அடிப்படையில்; அதன் இயல்புகள் விபரிக்கப்படுகின்றன. இந்த இரண்டும் பிரிவது உண்மையில் வேட்கை என்ற விடயத்தில் தான். எம்மிடம் இல்லாதது எது, நாம் தேடிச்சொல்ல வேண்டியது எது ஆகியன தொடர்பில் தீவிர உணர்வுநிலை ஏற்படுகின்றது. எனினும் காமத்தில் ஏதோவொன்று இழக்கப்படுகின்றது என்று நாமறிவோம். ஆனால் அது என்னவென்று எமக்கு தெரிவதில்லை. காமம் கொள்தல் என்ற விடயத்தினைப் பயன்படுத்தியிருந்தாலும், அவ்வாறு காமம் கொள்ளும் விடயம் எது என்று நான் எங்கும் குறிப்பிடாததால் அது எந்தவொரு திசையை நோக்கியும் நகர்த்தப்படவில்லை.
வேட்கை கொள்வதனை விட காமம் கொள்வது நாவலின் பிரதான கதாப்பாத்திரம் செய்யும் விடயம். ஆனால் அதனை என்னவென்றோ அல்லது அதனை எவ்வாறு தேடிக்கொள்ள வேண்டும் என்றோ அவர்கள் அறியாதுள்ளனர். போரின் மிலேச்சத்தனத்திற்கு முன்னர் வடக்கு கிழக்குக்கு உரித்தாகியிருந்த உலகு மீது கிரிஷன் ஆசைப்படுகின்றார். எனினும் அவர் அது எவ்வாறானது என்று கூட அறியாதிருக்கின்றார். அதேபோன்று அங்கு பிறக்கவிருந்த எதிர்கால தமிழ் உலகை அவர் விரும்புகின்றார். ஆனால் அவர் ஆசைப்படும் உலகம் பற்றி அவரால் கற்பனை செய்து பார்க்கவும் அவருக்கு தெரியவில்லை.
நாளுக்கு நாள் மோசமாகிக் கொண்டு வருகின்ற அப்பம்மாவான அவரின் பாட்டியின் நடமாடும் ஆற்றலானது, அவரின் உலகம் உணர்திறன் பெறுவதனை அழித்து விடுகின்றது. அவரால் இழக்கப்பட்டது சிறப்பான ஒரு விடயமோ ஒரு நபரோ அல்ல அவரின் எதிர்காலமாகும். அதாவது ஒவ்வொரு நாளும் புதிதாகப் பிறக்கின்ற எதிர்காலமாகும். போரின் கடைசி இரண்டு மாதங்களில் அவரின் பராமரிப்பாளரான ராணி, தொடர்ச்சியாக தனது இரு மகன்களை இழந்துவிடுகின்றார். அவரின் கடந்த கால நினைவுப்பதிவுகளிலும், காண்கின்ற பயங்கரமான கனவுகளிலும், அன்றாட வாழ்விலும் அவர்கள் பற்றி சிந்திப்பதனை அவரால் தவிர்க்க முடியாதுள்ளது.
அவரால் இழக்கப்பட்டது எது என்று அப்பம்மாவுக்கு நன்றாக தெரியும். எனினும் அவர்கள் இல்லாத உலகில் அவர் தனிமைப்பட்டிருக்கின்றார். ஒவ்வொரு பாத்திரங்களும் ஏதோவொரு இழப்பினால் வேதனைப்படுகின்றன. எனினும் அந்த வேதனை உணர்வை சரியான முறையில் கையாளுவதற்கு அவர்களால் இயலவில்லை. இந்த நாவலில் இவ்வாறு பலதரப்பட்ட விருப்புகள், அவரவர் வாழ்க்கைப் பற்றிய நோக்குநிலை, கடந்தகாலம் மற்றும் எதிர்காலம் என்பன கிடைமட்டமாகவும், நிலைக்குத்தாகவும் இருக்கின்றது. அதேபோன்று இந்த விருப்புகளின் அடிப்படையில் ஒவ்வொரு பாத்திரங்களும், உலகத்துடன் பேணுகின்ற தொடர்புகளை எவ்வாறு வரையறுத்துக் கொள்வது என்பதனை கேள்விக்குட்படுத்துகின்றன.
உங்களின் முதல் நாவலை விட A Passage North படைப்பில் சித்திரிக்கப்படும், மரணத்தின் பின்னரான ஆன்ம வாழ்க்கை எதிர்பாரா நிலைகளில் மீண்டும் மீண்டும் வெளிப்படுவதனூடாக, ஏதோ ஒரு இயல்பான வழியில் எம்மை போருக்கு மத்தியில் அழைத்துச் செல்கின்றது. புத்தாண்டு பட்டாசு வெடிச்சத்தம் ஷெல் தாக்குதலை நினைவுப்படுத்த கூடும் என்பதால், ராணியினால் அது எவ்வாறு உணரப்படும் என்று கிரிஷன் சிந்திக்கும் விதத்தில் வெளிப்படுகிறது. அடிமட்டத்தில் நிகழ்ந்த அதிகளவான உயிர் இழப்பு பற்றி சிந்தித்துப் பார்க்கையில், போரினால் நிகழ்ந்த மாபெரும் அழிவு புறவய ரீதியில் நெருங்க முடியாது போனமை பற்றி எண்ணங்கள் எழுகின்றன…
நான் எனது முதல் நாவலை எழுதும் போது எனக்குள் நிகழ்ந்த விடயத்தை மீண்டும் ஒரு வகையில் நினைவுப்படுத்திக் கொள்ள எடுத்த A Passage North நூலாகும். எனது முதல் நாவல் கூட்டுப்படுகொலை தொடர்பிலான பேச்சுக்கள் மத்தியில் எழுதப்பட்டது. அந்த காலப்பகுதியில் இருந்த கடும்போக்கான சூழலும், எல்லா இடங்களிலும் பரவிக்கொண்டிருந்த மரண அச்சமும் என்னையும் நெருங்கியிருந்தன. நாவலை எழுதிக்கொண்டிருக்கும் போது அதிலிருந்து விலகிச் செல்லும் ஆற்றல் எனக்கு இருக்கவில்லை. அக்காலத்தில் நான் நியுயோர்க் நகரில் தத்துவவியலில் கலாநிதி பட்டத்தினைப் பெற கற்றுக்கொண்டிருக்கும் மாணவனாக இருந்தேன். நான் ஓர் இளைஞன். ஆரோக்கியமானவன், உடலளவில் எந்தவிதமான பாதிப்பும் இல்லாத ஒருவன். எனது சுற்றுச் சூழலிலும் எனது உடலிலும் நான் எழுதிக் கொண்டிருக்கும் விடயம் தொடர்பில் எந்தவிதமான பிரதிபலிப்பினையும் காணக் கிடைக்கவில்லை.
நாளாந்தம் சில மணித்தியாலங்கள் என்ற அடிப்படையில் சுமார் மூன்று ஆண்டுகள் நான் பிரவேசித்திருந்த உலகமாக அந்த நாவல் இருந்தது. அதிலிருந்து நான் பௌதீக ரீதியில் வசிக்கும் உலகுக்கு மீண்டும் வந்த போது என்னால் முழுமையாக அதனுடன் இணைய முடியாததனைப் போன்ற உணர்வு என்னுள் எழுந்தது. உதாரணமாக இரவு 10.30 முதல் 11 மணி வரை எழுதிவிட்டு, நண்பர்களுடன் நடனம் ஆடுவதற்கு செல்ல வருவேன் என்று ஒரு வெள்ளிக்கிழமை அன்று அவர்களுக்கு உறுதி அளித்திருந்தேன். நான் விரைவாக வேலையை முடித்துவிட்டு, எனது நண்பர்கள் இருக்கும் இடத்திற்கு மோட்டார்சைக்கிளை செலுத்திக் கொண்டு சென்றேன்.
45 நிமிடங்களுக்குள், அதுவரை மூழ்கியிருந்த கூட்டுப்படுகொலை சம்பவங்களிலிருந்து, உலக வரைபடத்தில் இலங்கையை தேடிக் கொள்ள தெரியாத நபர்கள் வாழும் நியுயோர்க் நகர கட்டிடம் வரை நான் பயணித்திருந்தேன். எனது அரைவாசி பகுதிக்கு அங்கிருந்து வெளியேறிச் செல்லும் தேவையிருந்தது, மற்ற அரைவாசிப் பகுதிக்கு நண்பர்களுடன் இணைந்து மகிழும் தேவையிருந்தது. சரியாக சொல்வதானால் நான் விட்டுவிட்டு வந்த உலகத்தை அழிக்காமல், அதனை அவமதிக்காமல், எனது நிகழ்கால இருப்பின் அர்த்தத்தினை தேடிக்கொள்ளும் அவசியம் ஏற்பட்டது போன்று எனக்கு தோன்றியது.
நான் அன்று நடனம் ஆடினேன். அது மற்ற நாட்களில் ஆடும் நடனத்தை விட வித்தியாசமானதாக அந்நடனம் அமைந்திருந்தது. யாருக்கும் முகம் காட்டாமல், கண்களை நேருக்கு நேர் பார்க்காமல் ஆடினேன். எனது முதல் நாவலை எழுதும் போது, அதனால் வினவப்பட்ட மனநிலையையும், அன்றாட வாழ்க்கையின் பழக்கவழக்கங்களுக்கிடையிலான மோதல்கள் பலவற்றையும் எதிர்கொள்ள நேர்ந்தது.
எதனையும் தொலைதூரம் நினைத்துப் பார்க்காமல் அன்றாட வாழ்வில் செய்த காரியங்கள், அதாவது பகிடி செய்தல், புறம் பேசுதல் அல்லது பலவிதமான மகிழ்ச்சியூட்டும் காரியங்களில் ஈடுபடும் எளிமையான இயல்பான செயற்பாடுகள் என்பன யாவும் திடீரென அர்த்தமற்றதாகவும், பொருந்தாத ஒன்றாகவும், ஒழுக்கமற்ற விடயங்களாகவும் இருப்பதாக உணரத் தொடங்கினேன். வாழ்க்கையின் எஞ்சிய காலத்தில் இனஅழிப்பு தொடர்பான எனது உணர்வுநிலையுடன் நான் எவ்வாறு ஒன்றுப்படப் போகின்றேன் மற்றும் முரண்படப்போகின்றேன் என்பது பற்றி இடைவிடாமல், மிகவும் கவனமாக ஆராய்வதும், கேள்வி எழுப்புவதும் தான் எனது முதல் நாவல் கடந்த மூன்று ஆண்டுகளாக எனது உள்ளார்ந்த வாழ்வின் மையமாக மாறியிருந்ததன் அர்த்தமாகும். எனது அன்றாட வாழ்வில் காணப்படும் அந்த பிரக்ஞைநிலையைக் கேள்வி எழுப்புவதனை பற்றியே இரண்டாவது நாவலில் சித்திரிக்கப்படுகின்றது.
பிரியதர்ஷினி சிவராஜா
சுயாதீன பத்திரிகையார். சரிநிகர், வீரகேசரி, சுடரொளி பத்திரிகைகளில் பணியாற்றியவர். பெண்கள் மற்றும் சிறுவர் உரிமைகள், மனித உரிமைகள், LGBTIQ சமூகம் சார்ந்த பிரச்சினைகள் தொடர்பில் பல்வேறு ஆக்கங்களை எழுதி வரும் இவர் சிங்கள மொழிப்பெயர்ப்புகள் மீதும் ஆர்வம் கொண்டவர்.