அகழ் இதழில், போர் உலா நாவல் பற்றிய அனுபவக் குறிப்பை எழுத்தாளர் அகரன் எழுதி இருந்தார். இது சார்ந்து அகரனுக்கும், எழுத்தாளர் அசுரா நாதனுக்கும் இடையில் நிகழந்த உரையாடலின் மேன்படுத்தப்பட்ட வடிவம் இது.
‘போர் உலா’ பற்றிய அகரனின் கட்டுரைக்கான மறு-மொழி.
நட்புடன் அகரனுக்கு, அலைபேசி வழியாகவும், உன் அருகமர்ந்து உரைத்த போதும் உன் அகம் நிரம்ப மறுத்தது. சொன்னாய்: “என்னைப் போன்ற தலைமுறைகளுக்கும் எமது சமூகத்தின் வரும் புதிய தலைமுறையினருக்கும் அறிவதற்கான தீராத்தாகம் வேண்டி நிற்கிறது. அதனை நாம் இருவரும் சொற்களால் நிரப்புவோம். அவை காலத்தில் அருவியாக ஓடிக்கொண்டே இருக்கும். அதனால் சிலரின் தாகம் தீரவும் கூடலாம். எனேவே எனக்கான உங்கள் ‘மறு-மொழியை’ உங்கள் சொற்களால் பதிவிடுங்கள்” என.
எமது நிலத்தில் இன அரசியல் போராட்டமானது ஆயுதவடிவம் பெறும் முன்பான தலைமுறைப் பங்காளிகளில் ஒருவன் நான். நீயோ யுத்தத்தில் பிறந்து வளர்ந்த தலைமுறைகளில் ஒருவன். இருவரது அனுபவங்களும் வெவ்வேறானவை. ஒவ்வொருவரது அனுபவங்களும் அவர்-அவர்களுக்கானதே.
அகழ் இணையத்தில் வெளிவந்த ‘போர்உலா’ எனும் மலரவனின் நாவல் மீதான உனது அறிமுகப் பதிவுச் சித்தரிப்பை எனக்கு நீ அனுப்பிய அத்தருணமே நான் உனக்கு இவ்வாறு மறு-மொழிந்தேன்: “போரை…, அதன்மீதான எதிர்ப்புணர்வுகளை மனித இருப்போடும், அதற்கான அழுத்தம் கருதி, உனது மகளுக்கும், அவளது அன்புப் பிராணியான சேவலுக்கும் இடையிலான உறவின் சித்தரிப்பினூடாகவும் விபரித்திருந்தாய். உன்னில் யுத்த-எதிர்ப்புணர்வுக்கு நெருக்கமான அகச்சுடரின் வெளிச்சத்தையும் அதில் கண்ணுற்றேன்…, ஆயினும் விட்டகுறை-தொட்டகுறையாக உன்னிடம் எமக்கான யுத்தம் ஒரு புனிதம் என்பதன் நினைவும், அதன் பெருமையும் ஆங்காங்கே தலைகாட்டவே எத்தனிக்கிறது . ஆயினும் நான் நிச்சயமாக நம்புவேன் நீ என்றோ ஒருநாள் அதிலிருந்தும் மீழுவாய்…! உனது மகள் மேலும் வளர்ந்து ‘உனதுச்சியை’ தொடும் நிகழ்வாக அது இருக்கும். பின்னூட்டங்களால் உன்னை சிலிர்க்க வைப்பவர்களில் நானும் பத்தோடு பதினொன்றாக அல்லாது உனக்குள் அமிழ்ந்துள்ள உனது உள்ஒளியின் முழுமையை தரிசிப்பதற்கானதே எனது ஏக்கம். பி கு: போரைக்கொண்டாடும் மனம் முற்றாக உன்னிலிருந்து விலகவில்லை என்பதை உனது சொற்களில் புதைந்துள்ளதைக் கண்டதன் துயரப்பதிவே நான் மேலே சுட்டிக்காடியது.
அகரன், பகுத்தறிவால் கலையின் கழுத்தை நெரிப்பவன் அல்ல நான். உனது அகச்சொற்களின் கலைத்துவத்தை கண்டு மிரண்ட உனது முதன்மை வாசகர்களில் நானும் ஒருவனல்லவா?” எனும் எனது இந்தப்பதிவை அனுப்பியதும். ‘உண்மை’ எனும் ஒற்றைச்சொல் மட்டுமே உடனடியாக உன்னிடமிருந்து என்னை வந்தடைந்தது. பின்பு நீ நிதானித்தபோது அந்த ‘உண்மை’ எனும் ஒற்றைச்சொல் உன்னை அச்சுறுத்தியுள்ளது. “போரைக்கொண்டாடும் மனம் முற்றாக உன்னிலிருந்து விலகவில்லை என்பதை உனது சொற்களில் புதைந்துள்ளதைக் கண்டதன் துயரப்பதிவே நான் மேலே சுட்டிக்காடியது” என்பதற்கே உனது ‘உண்மை’ எனும் ஒற்றைச்சொல் பதிலை நான் புரிந்துகொண்டதாக நீ பதறிப்போனாய். ‘உனது முதன்மை வாசகர்களில் நானும் ஒருவனல்லவா’ என்பதற்கான பொருளாகவே அந்த ‘உண்மையை’ நான் புரிந்துகொண்டேன்.
நீ எனக்களித்த ‘உண்மை’ எனும் ஒற்றைச்சொல்லானது உன்னை அலைக்கழித்தது. அந்த ‘உண்மை’… உனதுள்ளத்தை சிதைத்து பெரும் இரத்தக் கசிவை ஏற்படுத்தியது. எனது சொல் துளைத்த விழுப்புண் வலியோடுதான் “போரை வெறுத்தல் பற்றிய மனப்போர்” எனும் தலைப்பில் எட்டுப்பக்கங்களால் நீ எனக்கு மறு-மொழிந்தாய். அதனை உள்வாங்கிய அத்தருணம் உன் கால் மிதிபட்டு நசிந்துபோன மண்புளுவாய் ஆனது எனதகம்.
அதற்கும் இவ்வாறு நான் பதில் மொழிந்தேன்:
“உத்தராயணம்” எனும் லா ச ரா வின் கதையின் சொற்களை மனதில் அடுக்குவதும் அள்ளிகுவிப்பதுமாக இருந்த விடியா இருளில் “போரை வெறுத்தல் பற்றிய மனப்போர்” எனும் உன் ஆழத்தில் நான் மூழ்கினேன்…, அவை உனது வீட்டையும் உனது குடும்பத்தையும் குளிரவைக்கும் ஆற்று நீரோடு கலந்த அலைகளாக என்னை நனைத்திருந்தால் நான் குதூகலமாக நீந்தி கரை சேர்ந்திருப்பேன்! கண்ணீர் கலந்த நதியாக என்னை மோதியதால் நான் அதில் மூழ்கிப்போனேன். உனது “உண்மை” என்ற பதிலில் ஏதோ நான் வென்றுவிட்டதாக நீ கருதியதால்தான் உன் மனம் அதிர்ந்து போனதாக கருதுகிறேன். ‘உனது முதன்மை வாசகர்களில் நானும் ஒருவனல்லவா’? என நான் இறுதியாக சொன்னதற்கே உனது “உண்மை” எனும் பதிலை புரிந்துகொண்டேனே தவிர, “போரைக்கொண்டாடும் மனம் முற்றாக உன்னிலிருந்து விலகவில்லை” என்பதை…, ‘உண்மை’ என நீ ஏற்றுக்கொண்டதாக நான் நிச்சயமாகக் கருதவில்லை அகரன்.
ஒரு கலைப்படைப்பானது கதை சொல்லியால் விபரிக்கப்படும்போது அந்த கதைசொல்லி படைப்பாளியின் சார்பாக இயங்குபவனாக தன்னை அடையாளப்படுத்தும் தருணங்கள் நிகழும். நுட்பமான வாசக மனதால் அதை இனங்காணமுடியும். அந்த வகையில் சில இடங்களில் உனது கதைசொல்லல் ஊடாக (‘போர்உலா’ அறிமுகப்பதிவில்) உன்னையும் அதில் இனம் கண்டேன். //நாவலைப் படிக்கிறபோது சக போராளிகளின் அனுபவங்களும், அவர்களை ஆயுதமேந்தத்தூண்டிய கதைகளும், வேறுபட்ட மன உணர்வுகளோடு ஒன்றுசேர்ந்து ஓர்மமாகி நிற்கும் இளைஞர்களும் சுதந்திரத்திற்காக தாம் புன்னகையோடு தோளில் சுமந்தபாரத்தை இனிய மொழியில் பதிவு செய்கிறது.// எனும் உனது இந்த வாக்கியத்தில் ‘சுதந்திரத்திற்காக புன்னகையோடு தோளில் சுமந்த பாரத்தை இனிய மொழியில் பதிவு செய்கிறது’ என்பது போருக்கான- அதன்தொடர்ச்சிக்கான அதிகார மையங்களை விட்டு விலகிய உணர்வு நிலையாகுமா…? ஆனால் அதே நேரம் உன் இளகிய மனம் அடுத்த பந்தியில் இவ்வாறு பதைபதைக்கிறது: //வாசகனை தாக்குதல் நடைபெறும் பகுதியில் நிறுத்தி வைத்திருக்கிறது. போர் எத்தனை கொடியது? எத்தனை மானுட வலி நிறைந்தது? மனிதனை மனிதன் கொல்லும் அபந்தத்தின் சந்தியில் நிறுத்தி சிந்திக்கத் செய்கிறது// என.
உன்னுடன் சில காலமே பழகினாலும் நான் உன்னை முழுமையாக புரிந்துகொண்டேன் எனவும் நம்புகிறேன். போரின் விளைவுகளுக்கான அதிகார மையங்கள் மீதான பார்வையை உற்று நோக்குவதற்கு நாம் தூர விலகி நின்று பார்ப்பதும் சிந்திப்பதுமே பயனுள்ளதாகும் என்பது எனது அனுபவம். அருகிலிருந்து பார்த்த அனுபவங்களையும் அவரவர் நிலையில் பார்ப்பதையும், அவர்களின் புரிதல்களையும் என்னால் மதிப்பிடவும் முடியும். உன் மனதை சஞ்சலப்படுத்தியதற்காக மன்னிப்பை வேண்டுவதோடு எனக்காகவே எழுதிய “போரை வெறுத்தல் பற்றிய மனப்போர்” எனும் அழகான கட்டுரை ஒன்றை எழுதியதற்கு எனது பாராட்டையும் ஏற்றுக்கொள். பொதுவாசிப்பிற்காக இதையும் அகழ் இணையத்திற்கே அனுப்பு” என்பதாகவே உனக்கும் எனக்குமான சொற்போர் உலாவியது.
மலரவனின் ‘போர்உலா’ வாசித்த அனுபவம் ஏதுமின்றி அதன் மீதான உனது அறிமுகப் பார்வையை நான் குருடாக்கிவிட்டதாக நீ கருதினாய். ‘போர்உலா’ வை நீங்கள் வாசித்தபின்பு எனது பார்வைக்கு உங்களால் ஒளியூட்ட முடிகிறதா என முயற்சியுங்கள் என அந்த புத்தகத்தை தருவதற்காக எனது வீடடைய இரண்டு மணித்தியாலங்கள் தேவைப்படும் தொலைவை கடந்துவந்து அப்புத்தகத்தை என்னிடம் ஒப்படைத்தாய். வாசித்த பின்பும் ‘போர்உலா’ நாவல் மீதான எனது சமநிலைப் பார்வையை உன்னோடு பகிர்ந்துகொண்டேன். நீயோ தொடர்ந்தும் பிடிவாதமாக ஒற்றைக்கால் தவம் புரிந்தாய்… எதுவாக இருப்பினும் எழுதுங்க… எழுதுங்க… எமக்கிடையிலான சொற்போர் பொதுவெளியிலும் உலாவட்டும் என. எழுதுவதன் மீதான எனது ஆர்வமின்மையைச் சொல்லி நானும் அடம்பிடித்து ஒற்றைக்காலில்தான் நின்றேன். ஆயினும் உனக்கே வரம் கிடைத்தது.
அச்சத்தோடுதான் ஆரம்பிக்கின்றேன். இதற்கான சொல் ஊற்று பெருகி அருவியாக பல்வேறு மேடு பள்ளங்களையும் தாண்டிக் கடலை தழுவும் தொலைவையே (பக்கங்கள்) அஞ்சுகிறேன்.
என்தலைமுறை சார்ந்த அதிகமானோர் தங்கள் கடந்தகால அறிதல் முறைமைகளாலும் (சித்தாந்தம்-கோட்பாடு), அதன் வழிகாட்டும் அனுபவங்களுமே எக்காலத்திற்குமான அறிதல் முறையாகக்கொண்டு அனைத்தையும் எதிர்கொள்பவர்களாக உள்ளனர். அவ்வாறான தலைமுறையினருடன் புதிதாக அறிபவைகளை பகிர்ந்து விமர்சித்து உரையாடும் வாய்ப்புக்களை இழந்தவன் நான். தொடர்ந்து வாசிப்பதும் எழுதுவதுமாகிய உன்போன்ற புதிய தலைமுறைகளோடு நட்போடு நெருங்கும்போதே என்னை நானே உரசிப்பார்க்கவும் முடிகிறது. அவ்வாறு உரைகற்களாக எனக்கு கிடைத்த புதியதலைமுறைகளில் நீ உட்பட தர்முபிரசாத், நெற்கொழுதாசன், அனோஜன் போன்றவர்களை எப்போதும் நினைவேந்தியே நகர்கின்றேன்.
நீங்கள் வாசித்த, எழுதுகின்ற படைப்புக்களை என்னோடு பகிர்ந்து கொள்வதனூடாக நான் எனது ஆழத்தையும் பெருக்கிக்கொள்ள முடிகிறது. அதன்பொருட்டு எனக்கு அடுத்த தலைமுறையினராகிய மேற்குறிப்பிட்ட அனைவருக்கும் மிகவும் நன்றிக் கடன் பட்டவனாகவும் உணர்கின்றேன்.
இலக்கிய வாசிப்பு முறைமையானது ஒரு தனித்துவமானது என்பது எனது பிடிவாதம். பாடசாலைக் கல்விமுறையினாலான வாசிப்பு அனுபவமும், பயிற்சியும் இலக்கிய வாசிப்பு முறைமைக்கு விரோதமானது. தத்துவ சித்தாந்த-கோட்பாட்டு வாசிப்பும்கூட, இலக்கிய வாசிப்பு முறைமைக்கு மிகவும் சிக்கலானதே. இவைகள் எம்மை வாசித்துக் கற்றுகொள்ளத் தூண்டுவதோடு அந்த முறைமையைக் கொண்டே இலக்கிய வாசிப்புக்குமான ஆதாரமாகப் ‘பற்றிக்கொள்ளும்’ நிர்ப்பந்தத்தை ஏற்படுத்துபவை.
இலக்கிய வாசிப்பை மேற்கொள்ளும்போது அதனை ‘பற்றிக்கொள்ளும்’ முறைமையிலிருந்து எம்மை விடுவித்து அதிலிருந்து வாசகனாகிய நான் வேறானவன் எனும் சுயத்தை தேடும் முறைமையை மேற்கொள்ள வேண்டும் என்பேன். உதாரணத்திற்கு தற்போது வாசித்துக்கொண்டிருக்கும் ‘வெண்முரசு’ நாவலின் ஆறாவது தொகுப்பான ‘வெண்முகில் நகரம்’ நாவலில் வரும் ஒரு உரையாடலை அதில் உள்ளவாறே பற்றிக்கொள்ளாமல் எனது சுயத்தை எவ்வாறு வளர்க்கிறது என்பதையும் உன்னோடு பகிர்ந்து கொள்கிறேன். அந்த உரையாடல் பகுதியிலிருந்து மேற்கொண்டு ‘வெண்முகில் நகரத்தின் வாசிப்பை நான் தொடர்வதற்கு இரண்டு நாட்கள் தாமதித்தது. காரணம் அதிலுள்ள வாக்கிய உரையாடலானது இரண்டு நாட்களாக எனக்குள் ‘நிகழ்ந்து கொண்டிருந்ததன்’ ஆச்சரியம்அது அகரன்.
பாண்டவர்களுக்கான அரச அதிகாரம் வேண்டி கிருஷ்ணன் கௌரவர் சபை சென்று உரையாடும் பகுதி இவ்வாறு: “இந்த குடியும் நிலமும் ஏற்கனவே பிளந்துவிட்டன யாதவரே. இன்று உண்மையில் அது மேலும் பிளக்காதபடி செய்துவிட்டோம். சற்றுமுன்புவரை நான் அந்தப்புரத்தில் காந்தாரியிடம் பேசிக்கொண்டிருந்தேன், நீர் இக்குலத்தை பிளந்துவிட்டீர் என்றாள். அவள் நோக்கில் இருதரப்பு மைந்தரையும் ஓர் ஊட்டவையில் அமரச்செய்து அவள் கையால் அமுதூட்டி பேசச்செய்தால் அனைத்தும் நன்றே முடிந்துவிடும், அன்னையென அவள் அப்படி நினைப்பதை நான் தடுக்கவும் விரும்பவில்லை.” இவ்வாறு கிருஷ்ணனை நோக்கிய திருதிராஸ்டிரனது உரையாடலாக அமைந்திருந்தது. இந்த உரையாடலின் பொருளை மகாபாரத காவியத்திலான ஒரு உரையாடலாகவோ, அல்லது கிருஷ்ணன், திருதிராஸ்டிரன் எனும் பாத்திரங்களுக்கான ஒரு பொன்மொழியாகவோ நான் பற்றிக்கொள்ளவில்லை. அப்பிரதியிலிருந்து என்னை வேறானவனாக, சுயமானவனாகக் கருதும் வாசிப்பு முறைமையானது என்னை வெவ்வேறு பொருள்கொண்டு நிகழ்த்திக்கொண்டிருந்தது. அரச ஆதிக்க மனநிலையிலிருந்து இருதரப்பையும் தான் பரிமாறும் அன்புப் பெருக்கினால் ஒரு ‘பொதுத் தாய்’ மனம் வெல்லும் ஆவலையும் பொருள் கொண்டிருக்கிறது. ஆணாதிக்க அதிகார மையத்தின் கண்ணியை உடைத்தெறியும் வல்லமையை அவ்வுரையாடல் கொண்டிருப்பதாகவும் என பல்வேறு திசைகளாக எனக்குள் நிகழ்த்திக்கொண்டிருந்தது.
மேற்கொண்டு வெளியில் உலாவாது, நாம் ‘போர்உலா’ நாவலோடு நெருங்குவோம். 1986ல் நீ பதுங்குளிக்குள் தவழ்ந்துகொண்டிருந்தாய். துப்பாக்கி ஓசைகளோடும் உயிர் அச்சுறுத்தும் போர்விமான இரச்சல்களோடும் அவ்வாறே நீ வளர்ந்துகொண்டிருந்தாய். 1986ல் என்போன்ற தலைமுறைகளின் அனுபவம் இவ்வாறிருந்தது: “துரோகி எனத் தீர்த்து முன் ஒரு நாள் சுட்ட வெடி சுட்டவனை சுட்டது, சுடக்கண்டவனை சுட்டது, சுடுமாறு ஆணையிட்டவனை சுட்டது, குற்றம் சாட்டியவனை, வழக்குரைத்தவனை, சாட்சி சொன்னவனை, தீர்ப்பு வழங்கியவனை சுட்டது, எதிர்த்தவனை சுட்டது. சும்மா இருந்தவனையும் சுட்டது (நன்றி சிவசேகரம்). இவ்வாறாகச் சுட்டுச் சுட்டே துரோகிகளுக்கான சொற்பொருளும் வளர்ந்தது, இவைகளை அவதானித்தும் விமர்சித்தும் கண்டித்தும் கடந்துவந்த தலைமுறைகளில் நானும் ஒருவன். 90களின் பிற்பகுதியில் எமது சமூக அரசியல் போராட்டப் பாதையிலிருந்து முற்றாக என்னை விலக்கிக்கொண்டேன். மாற்றாக வேறொரு பாதையை தேர்ந்தெடுத்தேன் உனக்கு அது தெரிந்ததே. அனால் உங்கள் தலைமுறைகளின் அனுபவங்களும் நீங்கள் எதிர்கொண்ட நெருக்கடிகளும் வேறு. அதுகுறித்த பல விடயங்களை என்னோடு நிறையவே பகிர்ந்திருக்கின்றாய். உங்கள் தலைமுறைகள் எதிர்கொண்ட நெருக்கடிகளை புரிந்துகொள்வதற்கான சுய புரிதலுள்ளவனாகவே நான் இருந்துள்ளேன். இருக்கின்றேன் அகரன்.
மேற்குறிப்பிட்ட எனக்குள் நிரம்பிய அனுபவங்களூடாகவே ‘போர்உலா’ நாவலை வாசிக்காதபோதும் உனது பதிவில் யுத்தங்களை வெறுக்கும் உன் நேர்மையான மனநிலைக்குள்ளும் போரை மூட்டியவர்கள்மீது மட்டும் அல்லாது போரைத் தொடர்ந்தவர்கள் மீதான விமர்சனத்தையும் காண விழைந்தேன் அகரன்.
‘போர்உலா’ மீதான அவதானிப்பு
“மகள் சேவல் வருகிறது என்று என்மீது தொங்கி ஏறினாள். அவள் என்னிடம் ‘சேவலுக்கு அடித்து அதை எதிரியாக்க விரும்பவில்லை’ என்ற சொல் கல் வீழ்ந்த குளமாக வட்டங்களை உருவாக்கியது. மகளே உன்னிடம் ஒன்று கேட்கவேண்டும் இதை நீ எங்கே கற்றுக்கொண்டாய்” என்பதாகவே போர்உலாவிற்கான அறிமுகத்தை தொடங்கினாய். மேலும் எனக்குரிய உனது மறுப்பான “போரை வெறுத்தல் பற்றிய மனப்போர்” எனும் பதிவிலும்: “உண்மையில் நேற்றைய தமிழர்களே இன்றைய சிங்கள மக்கள். இன்றைய தமிழர் நாளைய சிங்களவர் ஆகலாம்” எனபதான இனப்பரிணமிப்பையும் இவைகளின் தொடர்ச்சியிலும் அதனை புரிந்துணரும் தன்மையின்றி இனங்களுக்கிடையிலான பகையும் முரண்பாடும் நிகழ்கின்றதே எனும் உனது அங்கலாய்ப்பையும் நான் புரிந்து கொண்டேன்.
உனது நூல் விமர்சன உரைகளை அவதானித்தவகையில் படைப்பாளிகளின் பலவீனப்பகுதிகளை நீ சுட்டிக்காட்டும் தருணங்களிலும், உன்னிலிருந்து நழுவிழும் சொற்களானது மென்பஞ்சுப் பொதியில் வீழ்ந்து ஊறுவதுபோன்று சம்மந்தப்பட்ட படைப்பாளிகளின் அகம் சில்லிட்டு குளிர்ச்செய்துவிடுகிறது. விமர்சன உரைகளினூடான உனது சொற்கள் படைப்பாளிகள் எவரையும் சுடுவதில்லை. எதிர்த்தோ உரத்தோ பேசும் இயல்பற்ற சுபாவம் உனக்கு.
யுத்தம் முடிந்ததன் பிற்பாடு புலிகளை ஆதரித்த, புலிகளோடு இணைந்து பணியாற்றிய இலக்கியப்படைப்பாளிகள் சிலருடனான உரையாடலின்போது ஆச்சரியமாக இருந்தது. நான் முரண்படும் விமர்சிக்கும் விடயங்களை உள்வாங்குபவர்களாக இருப்பதும், எனது கருத்தோடு உடன்படாதபோதும் இயல்பான அவர்களது இலக்கிய மனமே என்னை அங்கீகரிக்கிறது. மலரவனும் அப்படி உள்வாங்கும் மனம் கொண்டவராகவே இருந்திருப்பார். உயிரோடு இன்றிருந்தால் என எண்ணத் தோன்றுகிறது. போர் இலக்கியம் என வரைந்து கொண்டிருக்கும் தீபச்செல்வன், குணாகவியழகன், தமிழ்நதி போன்றவர்களோடு ஒப்பிடும்போது மலரவன் சிறந்த கலைஞானம் மிக்க படைப்பாளி என்பதை அவரது சிறிய பதிப்பான ‘போர்உலா’ மூலமாகவே உணரக்கூடியதாக இருந்தது. அழகியல் சித்தரிப்பிற்கான முனைப்புக்களை அவரது எழுத்தில் அவதானிக்க முடிந்தது.
இன வெறுப்புப் பகுதிகளையும். துரோகி என தீர்த்து முன்பு ஒரு நாள் சுட்ட வெடிகளின் நியாயங்களையும் வலியுறுத்தும் ‘போர்உலா’ வில் இருந்து ‘போரை வெறுத்தல் பற்றிய மனப்போர்’ கொண்ட உனக்காக மிருதுவான ஒரு வழியை பின்பற்ற விழைகிறேன்.
தன்னை கொத்தவரும் சேவலை எதிர்த்து, சேவலுக்கு தான் எதிரியாக மாட்டேன் என்பவளும். தன்னுடன் இணைந்து விளையாடாத தோழிகளை ஆசிரியரிடம் முறையிடுவதனூடா அவர்களுக்கு தண்டனை வழங்கப்படுவதை விரும்பாத அந்த பிஞ்சுமனம்கொண்ட உன்மகள், ‘போர்உலா’ நாவலில் வரும் சில பகுதிகளோடு உன்னோடு தொடர்ந்து உரையாட விரும்புகிறாள்….:
அப்பா எனது சுபாவத்தை ஆதாரமாக முன்வைத்து ‘போர்உலா’ எனும் நாவலின் கதையைச் சொல்லி பெருமைப்பட்டீங்க. ஆனால் “நீங்கள் எத்தனை ஆமியை சுட்டனீங்கள்” என ஒரு சிறுவன் கேட்டதற்கு “ஏன் சுடவேணும் அவங்கள் பாவங்களெல்லே” என கூறிய போராளி தொடரும் உரையாடலில் தனது மாமாவை சுட்ட ஆமியை நீதான் வளர்ந்து சுடவேணும் என்றபோது ஏன் கொல்லவேணும் அவங்கள் பாவங்களெல்லே என்பவரே “நாங்கள் ஏன் இருக்கிறோம் அவங்களை கட்டாயம் கொல்லுவோம்”. என்பது நியாயமா அப்பா…!! வேறோர் இடத்தில் என்னைவிட ஐந்து வயதே கூடுதலான சிறுவர்களும் கொலை ஆயதங்களுடன் நிற்பதாக ‘போர்உலா’ சொல்கிறதே அப்பா… அத்தருணம் எனது நினைவோடுதானே அதையும் கடந்திருப்பீங்கள் அப்பா…
இந்திய இராணுவகாலத்தில் அவர்களோடு இணைந்துவர்களின் துரோகச்செயல்களென ‘போர்உலா’ சில குற்றச்சாட்டுக்களை பதிவு செய்கிறது. பெண்களை பாலியல் துன்புறுத்தியதாகவும். ஒரு பெடியனை முள்ளுக்கம்பியால் கட்டிப்போட்டு கழுத்தைச் சுற்றி ரயரைக்கொழுவி எரித்ததாகவும் சொல்கிறதே ‘போர்உலா’. அப்பா இந்த குற்றச்சாட்டை முன்வைக்கும் மலரவனின் இயக்கம்தான் 1986ல் உயிருடன் தமது சகோதர இயக்கங்களை ரயர் போட்டு உயிருடன் கொழுத்தியதாக வரலாறு சொல்கிறதாமே அது உண்மையா அப்பா… அவர்கள்தான் பிற இயக்கத்தவர்கள். ஆனால் மாவலி ஆற்றுக்கருகில் தமது இயக்கத்தவர்களையே பேசுவதற்காக என அழைத்த மலரவனின் இயக்கத்தவர்கள் கொலை செய்தவர்களென்றும், தங்களது பெண்போராளிகளையே சிதைத்துக் கொன்றவர்களாமே…!! பொதுமக்களே அதனை நேரில் பார்த்ததாகவும் வரலாற்றுப் பதிவுகள் உள்ளதாக சொல்கிறார்களே உண்மையா அப்பா…!! இதுபோன்று யுத்தத்தை, கொலைகளைக் கொண்டாடும் பகுதிகள் ‘போர்உலாவில்’ நிரம்பியிருக்கிறதே அப்பா…!!
போர்உலாவில் இவ்வாறு மனிதக்கொலைகளை நியாயப்படுத்தும் பல பகுதிகளை, “போரை வெறுத்தல் பற்றிய மனப்போர்” உள்ள உங்களால் மலரவனின் காதுகளிலும் அவை ஒலிக்கும் வகையில் சொல்லியிருக்க வேண்டாமா அப்பா…!!
எனது உயிருக்கும் மேலான அன்பிற்கும் பாசத்திற்கும் உரிய அப்பா நீங்கள். உங்களை நான் அறியாதவளா? அன்றொருநாள் நாங்கள் இரவு காரில் வரும்போது எங்கள் காரில் மோதிய மானின் மீது நீங்க காட்டிய கருணையைக்கண்டு மனம் பூரித்துத் திளைத்தவள் நான். காரில்மோதிக் காயம்பட்ட அந்த மானை வீட்டை அள்ளிவந்து சிகிச்சை அளித்ததும், அன்றிரவு தூங்காமல் அதன் உயிருக்காக நீங்கள் பட்ட அவலத்தையும், அந்த உயிருக்காக உங்கள் விழிகள் கொந்தளித்துக் கசிந்ததைக் கண்டு மலர்ந்து நின்றவள் அப்பா நான். நீங்க பிறந்த தேசத்தில் நடக்கக்கூடாத அவலம் ஒன்று நடந்து முடிந்துவிட்டது, அந்த அவலத்தில் சிக்கிக்கொண்டு உயிர்துறந்த மலரவன் தனது அனுபவங்களை இலக்கிய கலைநயம் மிக்க சித்தரிப்பினூடாக போர்உலாவில் மேற்கொண்ட பதிவை நீங்கள் மீளவும் நினைவூட்டியதும் ஒரு வரலாற்றுப் பதிவுதான்.
அப்பா…, நான் உங்களிடம் விழைவது அனைத்தையும் சமநிலை நோக்குடன் அவதானிக்கும் வழிமுறையை. அப்பா… நீங்கள் பிறந்து வளர்ந்த தேசத்தைப்போல் ஜனநாயகம் என்பது வெறும் தேர்தல் அரசியலுக்காவே பயன்படும் வெற்றுச் சொல்லாக வேரூன்றவில்லை பிரான்சில். இங்கு பண்பாட்டு கலாசார முறைமைகளூடாகவும் வேரூன்றிவிட்டது ஜனநாயகம். இங்கும் ஆங்காங்கே இனவாதங்கள் தலை நிமிர்கின்றபோதும் அதனால் வேரூன்றவே முடியாது. இங்கு நான் பிறந்து வளர்வதனால்தான் ஜனநாயகம் என்மீதும் படர்ந்து செழிக்கிறது.
அப்பா… இங்கு வாழ்பர்கள்தான் பல்லினமக்கள். நீங்க பிறந்ததேசத்தில் வாழ்வர்கள் பல்வேறு இனங்களாக கருதும் மக்கள். அவரவர் தங்களுக்கான இனப்பெருமையை இன அடையாளத்தையே வேண்டி நிற்கின்றனர். அங்கு எவ்வாறு ஜனநாகம் தளைக்கும்.
அப்பா…, மனிதகுலம் தோன்றிய காலம் முதலாய் பல்வேறு பிரிவுகளாக பரிணமித்தபோதும் அவ்வாறான மனிதகுலத்தின் வாழ்விற்கு ஆதாரமாக தொடர்ந்து வந்தது போர்தான்… யுத்தங்கள்தான்… அந்த மரபுவழிப்போர்மனம் உங்கள் தேசத்தில் பிறந்தவர்களிடம் அவர்கள் அறியாமலே அவர்களைப் பின்தொடரும் நிழலாகவும் தொடர்கிறது. அதனை அறிவதற்கு அனைத்திலும் சமநிலைப் பார்வைப் பயிற்சி அவசியம் என்பேன். மலரவனின் போர்உலாவிலும் நீங்கள் அதை பிரயோகித்திருக்கலாமே என்பதுதான் நான் உங்களிடம் விழைவது. கட்டி அணைத்து உங்கள் ‘உச்சி’ மேலும் மேலும் வளர நானும் உருகுவேன் அப்பா.
– அசுரா நாதன்
‘போர் உலா பற்றிய மனப்போர்’
நீங்கள் காலை போர் உலா பற்றிய கட்டுரைக்கு அனுப்பிய மிகவும் நுட்பமான விமர்சனத்திற்கு ‘உண்மை’ என்ற ஒரு வரியில் பதில் போட்டது வருத்தமாக இருந்தது. நான் பாரிஸ் கிளம்பவேண்டி இருந்தது. இயலை அவசரமாக பள்ளிப் பேரூந்தில் ஏற்றும்போதுதான் உங்கள் விமர்சனத்தை பார்த்தேன்.
எனக்கு ‘உண்மை’ க்கு மீறிய நேரம் இருக்கவில்லை. ஆனால் உங்களுடன் நீண்ட உரையாடலை நிகழ்த்த வேண்டும் என்பது மனதில் தோன்றியது. மீண்டும் வீட்டுக்கு மாலை ஐந்து மணிக்கு வந்து இயலை கைப்பற்றும் வரை இருந்தது.
மிருணா வந்துவிட்டதால் இயலை கவனித்துக்கொள்வாள். எனது தலை நரம்புகள் கொதித்துக்கொண்டு இருந்தது. மான் விபத்தால் பாதிக்கப்பட்டு வைத்தியசாலையில் இருக்கும் எனது வாகனத்திற்கு பதிலாக கிடைத்த வாகனம் தூசி நிரம்பியும், காற்றை சுழற்சி செய்யாததாகவும் இருந்ததால் வந்த தலை வலி அத்தோடு உங்கள் விமர்சனம் பற்றிய மனவலி.
ஐரோப்பிய காலநிலை இன்று சதிராடியபடி சூரியனை கொஞ்சமும் விடவில்லை. மேகங்கள் தாம் மட்டுமே அனுபவித்துக்கொண்டு அவ்வப்போது தண்ணீரை எங்களுக்கு காட்டியபடி இருந்தது. எனக்கு வெளியே எங்கேனும் நீண்ட நடை செல்ல வேண்டும் போல் இருந்தது. மழை வந்தாலும் நனைவது என்று நினைத்தபடி ஓர் கறுப்பு உடற்பயிற்சிக்கு பயன்படுத்தும் அங்கியை அணிந்து கொண்டேன். அனாவசியமாக பாதணிகள் வேண்ட கூடாது என்ற முடிவின்படி தேய்ந்திருந்த மழைநீர் நுழைந்து விடும் பாதணியை அணிந்து கொண்டேன். இயலை வருகிறாயா ? என்று கேட்டேன். தாயை கண்ட மகிழ்ச்சியில் அவள் இருந்தது தெரிந்தது. அவள் மெதுவாக அருகே வந்து ‘பிறகு போகலாமா ?’ என்றாள். இல்லை ‘மழையும், இருட்டும் நுழைந்ந்துவிடும்’ என்றேன். ‘சரி, நான் போய் வருகிறேன்’ என்றதும் ஓடிவந்து ‘ஆனால் உன்னை நான் விரும்புகிறேன்’ என்று பிரெஞ்சு மொழியில் கூறி என்னை சமாதானம் செய்தாள். தான் வரவில்லை என்று நான் வருந்தக்கூடாது என்பதற்கான நிவாரணி தான் அந்த அன்புமொழி. நோகாமல் சூழலை வைத்திருக்கும் கலையை இயற்கை அவளிடம் விட்டுவிட்டது என்று நினைத்தபடி நடக்க ஆரம்பித்தேன்.
இரண்டுவழிகள் உண்டு. ஒன்று கொனி ஆற்றை அரை வட்டவடிவில் வயல் வெளிக்கூடாக கடப்பது. மற்றது கொனி ஆற்றின் ஓரம் பயணப்பட்டு வீதிகக்ரையோரமாக அடுத்த கிராமமான ‘கொனி- மொலித்தார்’ கிராமத்தை அடைந்து காடுகளையும், வயலையும் கடந்து வருவது. மழை வந்தால் பாதுகாப்புக்கு இரண்டாவது வழித்தடம் பயன்படும் என்று நினைத்தபடி புறப்பட்டேன்.
நடக்கும்போது அற்புதமாக எனது மூளை வேலை செய்வதை பல தடவை உணர்ந்திருக்கிறேன். எனக்குள் காண விளையும் உலகத்தையும், பல உரையாடல்களையும் எனக்குள்ளேயே நிகழ்த்தி இருக்கிறேன். இலங்கையை ஓர் இனிய நாடாக்க எப்படியான அரசியல் யாப்பு அவசியம் என்றும் எப்படி எல்லா மக்களும் மகிழ்ந்திருக்கும் தீவாக அதை மாற்றவேண்டும் என்றும் தனிமையில் கட்டிய கோட்டைகள் கால வெளியில் மிதந்து திரியும். பல மனதுக்கு இனிய மனிதர்களை நினைத்தபடியும் நடத்திருக்கிறேன். எழுதிய கதைகளில் அதிகமானவை நடக்கும்போதும், வேலை செய்யும்போதும் மூளை கோர்த்து வைத்தவைகள்தான்.
இன்று அதிகாலையே நீங்கள் அனுப்பிய விமர்சனம் நடக்கும்போது ஆரம்பத்திலேயே வந்துவிட்டது. அந்த விமர்சனத்தோடு உரையாடியபடியே சென்றேன்.
கொனி ஆற்றில் நீர் அதிகமாகி இருந்தது. பாசிகள் நீருக்குள் ஓடும் நீருக்கு வழிவிட்டு தலைசாய்த்து தம்மையும் காத்துக்கொண்டது. அது ஊற்று நீர் என்பதால் மட்டுமல்ல அது ஓடுவதால் பல இடங்களில் நிலம் நீர்க்கண்ணாடிகளுக்குள்ளால் தெரிந்தது. ஓர் இடத்தில் அது என்னை நின்று விடச்சொன்னது. அதன் தெளிவையும், அம்மணத்தையும் பார்த்தபடியே இருந்திருக்க முடியும். மழைத்துளிகள் வீழ்ந்து என்னை அங்கிருந்து கலைந்தது.
கொனி ஆறு கடந்து அயல் கிராமத்து மௌன வீதியில் நடந்தபோது நீங்கள் எழுதி இருந்த
‘உன்னிடம் எமக்கான போர் புனிதம் என்ற மனநிலையும் பெருமையும் தலை காட்டவே செய்கிறது’
‘போரைக்கொண்டாடும் மனம் உன்னில் இருந்து முற்றாக விலகவில்லை என்பது எழுத்தில் தெரிகிறது.’
என்ற இரண்டு கருத்தும் என்னை உலுப்பியபடி இருந்தது.
எனது கடந்த இருபது ஆண்டுகளில் எனது சிந்தனை பல வடிவங்களில் படியேறி வந்துள்ளது. இருபது ஆண்டுகளின் முன் நான் இருந்து சூழல் மனம்வேறுபட்டது. இந்த இருபது ஆண்டுகளில் அடைந்த மாற்றம் மனிதர்களாலும், புத்தகங்களாலும் , அனுபவங்களாலும் உருவானது. இவை எல்லாம் எல்லோருக்கும் வரக்கூடியது. தினமும் கிடைப்பதை எனக்குள் ஆராய்கிறேன். அந்த மன ஆராட்ச்சி எனக்குள் புதியவனை உற்பத்தி செய்தபடியே இருக்கிறது. இந்த வாய்ப்பை எல்லாவழிகளிலும் தரும் இயற்கை எனக்கு முக்கியமானது.
நீங்கள் முதலாவதாக கூறிய போர் புனிதம் , பெருமை என்ற மனம் இருபது ஆண்டுகளின் முன் என்னிடம் நிச்சயமாக இருந்தது. ஆனால் இன்று அது முழுவதுமாக இல்லை. ஆனால் போர்உலா நடந்த காலத்தில் அதை எதிர்கொண்டு மற்றவர்களுக்காக அல்லது சுதந்திரத்திற்காக இறந்தவர்களை ஒருபோதும் என்னால் குறைத்து மதிப்பிட முடியாது. ஆனால் அதே போரில் அனியாயமாக இறந்த சிங்கள இளைஞர்களுக்காகவும் எனது மனம் துடிக்கிறது.
கிளிநொச்சி இராணுவ முகாம் தாக்கப்பட்ட போது 1500 இராணுவ வீரர்களின் உடலை தமிழ்ச்செல்வன் செஞ்சுலுவை சங்கத்தின் ஊடாக அனுப்பிய போது நான் சிறுவனாக பார்த்தபடி இருந்தேன். மறுநாள் அத்தனை உடல்களும் இராணுவத்தால் ஏற்றுக்கொள்ளப்படாமல் மீண்டும் எங்கள்பள்ளிக்கூடத்திற்கே வந்து சேர்ந்தது. அத்தனை உடல்களையும் மைதானத்தில் இறக்கி வைக்கும்போது ஓடிச்சென்று அருகே நின்று பார்த்தேன். ஒரு பெருமிதமும் இல்லை. அந்த இளைஞர்களின் தாய்களின் அழுகுரல் மட்டுமே என் காதில் கேட்டது. மாபெரும்சோகம் மனதை கௌவியது. இறந்த உடல்களில் இனம் தெரியவில்லை. அதில் கிட்டத்தட்ட மீசை வைத்த நீண்ட உடல் சாறம் கட்டியபடி மேலே பச்சை ரீசேட் போட்டபடி இருந்தது. அந்த உடலின் தலையின் பின்பாதியை காணவில்லை. ஒருமுறை உடல் மயிர் சிலிர்த்துஅடங்கியது. அந்த உடல் எனது மாமா வின் தோற்றத்தில் இருந்தது. அப்போதே போர் பற்றிய பெருஞ்சோகம் எனக்குள் உருவாக ஆரம்பித்துவிட்டது என்றுதான் நினைகக்கிறேன்.
இந்த உடல்கள் எல்லாவற்றையும் இயக்கம் தங்களிடம் இருந்த கைதிகளை வைத்து எங்கள் மைதானத்தில் ஒரு கிளமையாக எரித்து முடித்தனர். அதன் பின்னர் பதினைந்து வயதுக்கான உதைபந்தாட்ட பயிற்சியை அந்த மைதானத்தில் பழகச்செல்வதை நிறுத்திவிட்டேன்.
மறுபக்கம் வவுனிக்குளத்திலும், மல்லாவியிலும் கிபிர் தாக்கி சிதைந்து கிடந்த உடல்களையும், சாரணர் இயக்கத்தில் இருந்ததால் கிபிர்தாக்கியவர்களுக்கு முதலுதவி செய்ய ஓடிய போது ஒருவர் மோட்டார் சைக்கிளில் காயப்பட்டவர்ஒருவரை ஏத்தி வருகிறார் அவரின் கையால் இரத்தம் ஓடுகிறது. மோட்டார் வண்டி வேகமாக சென்றுகொண்டிருக்கும் அந்த காட்சியை பார்த்தபடி நான் நின்றபோது அவரின் கால் கணுக்காலுக்குகீழ் தோலில் தொங்கியபடி இருந்ததை பார்த்ததும் எனது தலை சுற்றி அப்படியே இருந்துவிட்டேன்.
ஒருமுறை இராணுவம், பெண் போராளிகளின் உடலை கொடுத்தது. அதை திறந்து பார்த்தபோது அவர்களின் இறந்த உடல்கள் பாலியல் சிதைப்புக்குஉள்ளாகி இருந்த காட்சியை நண்பன்சொன்னபோது உணர்வுகள் மரத்துப்போனது.
எனது நண்பனின் அண்ணனின் உடல் துண்டு துண்டாக துணியில் கட்டப்பட்டு வந்த கோலம் எக்காலத்தாலும் மறக்க முடியாதது.
இந்த போரை எதிர்நோக்கிய தலைமுறையான எமக்கு என்ன தெரிவு இருக்கமுடியும். தனது தாயும்தந்தையும் செல் வீழ்ந்துவெடிக்கும்போது சிதறிப் போவதை பார்த்த தங்கை போராளியான தையும் ; அவள் அக்கா மனநலம் பாதிக்கப்பட்டதை மட்டுமே நாம் எதிர்கொள்ள சபிக்கப்பட்டோம்.
உள்ளே இருந்தும் அந்த காலத்தை எதிர்கொள்வதில் இருந்தும் பார்த்தால் அந்த போரை எதிர்கொண்ட இராணுவம் அரச கட்டளைகளை நிறைவேற்ற போர் செய்தது. போராளிகள் தமக்கு நிகழும் கொடுமைகளை தீர்க்க எதிராடினர். ஆனால் இந்த போரை மூட்டிய சிலருக்காக இலங்கையின் மொத்த இழப்புக்களும் அர்த்தமற்ற அபந்தமாக காலம் காட்டி நிற்கின்றது.
உண்மையில் நேற்றைய தமிழர்களே இன்றய சிங்கள மக்கள். இன்றைய தமிழர் நாளைய சிங்களவர் ஆகலாம்.
அர்த்தமற்ற இந்த வெறுப்பை விதைதத்வர்கள் மனதில் மாற்றம் இன்றுமட்டும்தென்படவில்லை. ஆனால் போரை எதிர்கொண்ட தலமுறையைச்சேர்ந்தவனான எனது மனம் இந்த அபந்தத்தால் உயிரை போக்கிய எல்லோருக்குமாக அழுகிறது.
நீங்கள் போருலாவில் 1990 களில் ஒர் இளைஞன் தனது கொடூரமான பின்னணியில் போரை எதிர்கொள்கிறான். அவனுக்கு அவன் கண்முன்னே உள்ள காலம்தான் தெரியும். அதை மட்டுமே அவனால் எதிர்கொள்ள முடியும். கோரமான எதிர்ப்பை அவன் எப்படி எதிர்கொண்டான் என்பதை அவன் காலத்தில் இருந்து தானே என்னால் பார்க்க முடியும் ? இப்போது எனக்குள்இருக்கும் மனநிலையை என்னால் அவனிடம் திணிக்க முடியாதே ?
இந்த நினைவுகளில் நடந்துகொண்டிருந்தபோது காட்டுக்கரையோரம் மரங்கள் வீழ்த்தப்பட்டு அடுக்கப்பட்டிருந்தது. அந்த வெளியை எதேச்சயாகபார்த்தேன். ஆச்சரியம் ! அதே கலை மான் அங்கே நின்றது. நேற்று என் வாகனத்தில் மோதி மயக்கமுற்று இரவு பூராவும் வாகனத்தின்பிருட்டத்தில் தூங்கி, விடிந்தும் அங்கிருந்து வெளியேறாது இருந்த அந்த மானை அதன் கொம்புகளில் பிடித்து காட்டுக்குள் விட்டதைப் பற்றி உங்களுக்கு சொன்னேனே அதே மான். அதை இரண்டு தடவை என் கைகளால் தொட்டிருக்கிறேன். அதன் கொம்புகளை என் வாழ்நாளில் மறக்கமுடியாது.
அது என்னைபார்த்து. நான் எனது கைகளை நீட்டி வா..வா.. என்றேன். அது என்னை இனம் கண்டுவிட்டதாகவே நினைக்கிறேன். அசையாது பார்த்தபடி நின்றது . நாம் ஐம்பதுமீற்றர் தூரத்தில் இருந்தோம். அதன் கன்னத்தில் இருந்த இரத்த அடயாளம்இல்லை. சில நிமிடங்கள் நின்றுவிட்டு நான் அருகே செல்ல நகர்ந்த போது பயமில்லாத பாச்சலோடு காட்டின்இறக்கத்தில் மறைந்தது.
இந்த சம்பவம் எனக்குள் அதிர்வை உண்டாக்கியது. எனது வாகனத்தில் மோதியதும், இயல் அதன் குடும்பம் அதை தேடும் என்றதும் , இரவு தூக்கம் இன்றி மானுக்காக இருந்ததும், இன்று அதை மீண்டும் கண்டதும் எனக்குள் ஏதோ தொடர்பை விதைக்கிறது.
மான் அடிபட்டதும் அது செத்திருந்தால் கறியாக்கலாம் என்று நினைத்த எனது வெடுக்கு மனதை நினைத்து வெட்க்கப்படுகிறேன்.
அந்த மானை மீண்டும்காண வேண்டும் என்று தவிக்கிறது உயிர்.
பின்னர் தொடர்ந்து நடக்க ஆரம்பித்தேன். எனது மனம் போரை இப்போது கொண்டாடுகிறதா ? என்று கேட்டேன். அப்படி நான் நினைத்தால் என்னையே இன்று நான் வெறுப்பேன்.
நாங்கள் எவ்வளவு வன்மமாக மனிதர்களை மனிதர்கள் குறிவைத்து கொன்றோம். சிறிய தீவில் யார் அந்த வெறுப்புத் தீயை வைத்தார்கள் ? போராளிகளான இளைஞர்களும் வறுமையால் இராணுவத்தில் சேர்ந்தஇளைஞர்களும் செத்து விழுந்த நிலத்தை இந்த சிறிய தீவில் நிகழ்த்தியவர்களின் மனிதத் தொடர்ச்சியாக வெட்கப்படுகிறேன்.
இன்று ஒரு மனிதனை குறிபார்த்து வீழ்த்தும் வீரம் என்னிடம் இல்லை. அந்த வீரம் எவ்வளவு அழுக்கானது என்பது எனக்கு இப்போது நன்றாகவே தெரியும்.
ஆனால் இன்று உலகமெல்லாம் அதுதானே வளர்ந்து வருகிறது?
ரஷ்யர்களும் உக்ரேனியர்களும் 1990 வரை ஒருதாய் பிள்ளைகளைகள்தானே ?
பாலஸ்தீன் மக்களும் யூத மக்களும் ஒரு வேரின் தளிர்கள் தானே ?
பர்மாவின் இராணுவத்துடன் ஜனநாயகத்திற்காக மோதும் போராளிகள் யார் ? அவர்கள் அவர்களையே கொல்வதன் சூத்திரம் எங்கே தவறியது ?
இந்த முரண்பாட்டைவெறுப்பாக்கி- போராக்கி இயங்கும் உலகத்தின் ஆட்சியில் தானே நாம் இருவரும் வாழ்கிறோம் ?
இப்படி சிந்தனை ஆடியபடி இருந்தது. அப்போது கொனி ஆறு அயல் கிராமதத்தைஇரண்டாக வெட்டியபடி செல்லும் பாலத்துக்கு வந்திருந்தேன். அந்த பாலத்தின் கீழ் நீர், மேடையில் நடனமாடும் இளம்பெண் கண்களை அசைத்து பாவத்தை காட்டுவது போல் ஆடியபடி இருந்தது. பாலத்தின் அருகே பலகையால் கட்டப்பட்ட குடில் போன்ற இறங்கு துறை. அதை இப்போது யாரும் பயன்படுத்துவதில்லை. அதற்குள் சென்றால் வீட்டுக்குள் நீரோடுவதுபோன்ற அமைப்பு. சற்று நேரம் அதற்குள் சென்று அமர்ந்திருந்தேன். அங்கே கட்டப்பட்ட நீரில் இருந்து பொருட்களை மேலேற்றும் சங்கிலிகள் துருப்பிடித்து இருந்தது. பாவனையில் இல்லாமல் போன உலகம் கண்களில் நின்றது. இதற்குள் இருந்து எத்தனைபேர் காதலை தெரிவித்திருப்பார்கள் ? எத்தனை பேரின் முத்தங்களை இந்த இடம் சந்தித்திருக்கும் ? நதியின் வெளிச்ச நீரில் கால்களை நனைத்த காதலர்களின் பாதங்கள் பட்டுத் தேய்ந்த இடம் யாருமற்று தனித்திருந்தது. அங்கே நான் மட்டும் இருந்தேன். அந்த இடம் காதலுக்கானது. காதலர்கள் அற்று இருக்கிறது என்று நினைத்தபடி எதிரே பார்த்தபோது நதியோடு இருந்த குறு மாளிகைபோன்ற வீடு பற்றை வளர்ந்து இருந்தது. கைவிடப்பட்ட வீடுகள் நிறைந்து கிராமங்கள் பெருகுவது எத்தனை அவலம் ? இந்த வீட்டில் எத்தனை தலைமுறையாக மனிதர்கள் வாழ்ந்திருப்பார்கள் என்று நினைத்தபடி வீதியில் ஏறி நடக்க ஆரம்பித்தேன். பாலத்தில் நின்றபடி மீண்டும் நதியைப் பார்த்தேன். அது பளபளப்பான நதிப்பாம்புதான்.
பாலம் கடந்த வளைவில் நதியை பின்புறத்தில் சந்திக்கும் அந்த பெருவீட்டின் முன்பகுதி பிரமாண்டமாய் இருந்தது. பெரிய வீட்டில் மூன்று மாடிகள் இருந்திருக்கிறது. கூட்டுக் குடும்பமாக பல தலைமுறை வாழ்ந்திருக்கக்கூடிய வீடு. அதன் சன்னல் ஊடாக நதியும், அது பேசும் ஒலியும் கேட்கும் வீடாக இருக்கும் கவிதை. இன்று யாருமற்று தன்னை இழந்த படி தனியே இருக்கிறது. அது தன்னில் வாழ்த மனிதர்களின் கதையை கூற ஆரம்பித்தால் எத்தனை கலவியும், கண்ணீரும், மரணமும், பிறப்புமாக இருக்கும் என்றுநினைத்தேன். வீடுகள் மட்டுமே மனிதர்களின் மகத்தான அசடுகளை மௌனமாக அறிந்த வரலாற்றுப்பெட்டிகள். ஏதோ ஒன்றின் தனிமையும் அழிவும் மனதை ஆட்டிப் பார்க்கவே செய்கிறது.
வழமையாக இந்த வழியால் நடந்து வருகிறபோது ஒரு மனிதரைக்கூட கண்டது கிடையாது. அதிகமான வீடுகள் முதியவர்களை மட்டுமே சுமந்தபடி இருக்கிறது. எப்போதாவது ஏதாவது நகரத்தில் இருந்து பிள்ளைகள் வந்துவிட்டு செல்வார்கள். பலருக்கு அந்த வாய்ப்பும் இருக்காது. இருந்தும் அவர்கள் சோர்ந்துபோகாமல் புற்களுக்கு தலைமயிர் வெட்டியும் சுவர்களில் தொங்குபூக்களை கொழுவியும், பழைய கால நீர்ப்பம்பியை வீட்டின் முன் வைத்து அதைச்சூழ பூச்செடிகள் வைத்து வீடுகளைச் சித்திரம் தீட்டுகிறார்கள்.
அந்த இடம் எங்கள் கிராமத்தை நோக்கிய நேர் வீதிக்கு வளைந்து ஏறியபடி இருந்தது. அதிசயமாக ஒரு பெண் எதிர் வீட்டில் இருந்து படலை நோக்கி வந்ததை கண்மடல்கள் காட்டின. நான் உடனே பார்காகவில்லை. அந்த பெண் கதவை சாத்திவிட்டு திரும்பியதும் பார்த்தேன். இரண்டு ஆண்டுகளில் இங்கே பார்த்த முதல் பெண் அவளாகத்தான் இருக்கும். அசல் ரோஜா நிறம். இடைக்கு கீழ் கறுப்பு கொலோன் அணிந்திருந்தாள். மாலை வெயில் அவள் முகத்தில் படும்போது அவளை நான்பார்த்தேன். அது ஒரு மகத்தான கிராமப்பூ. உடனே ‘பூன்சூர்’ சொன்னேன். திருப்பி சொல்லுவாள் என்று நினைத்தேன். ஆனால் அவள் முன்பொருகால இலங்கை- இந்திய பெண் போல் தலைகுனிந்து நகர்ந்து போனது ஆச்சரியமாகவும் சஞ்சலமாகவும் இருந்தது. நான் என்ன இருபதாம் நூற்றாண்டிலா நிற்கிறேன் என்று நினைத்தபடி அந்தப்பெண் சென்ற வீதியை பார்த்தேன் அவளை காணவில்லை. அவள் ஓடிப்போய் இருக்கலாம். கறுப்பு உடையில் கறுப்பு மனிதனை அவள் முதல் முதல் பார்த்த அதிர்ச்சியாக இருக்கலாம்.
பின்பு வயல்வெளிகள் அதைத் தாண்டினால் வெங்காயத்தோட்டம், உருளைக்கிழங்குத்தோட்டம் வானம்முடியும்வரை தெரிந்தது. வானத்தையும் நிலத்தையும் இணைக்கும் படி அந்தத்தில் தோட்டங்களுக்கு காவலாக பழங்கால சிலுவை கல் தெரிந்தது.
யுத்தம் பற்றிய ஒரு பதிவுக்கு அதை எதிர்கொண்டவர்களின் மன நிலையில் அவர்களின் காலத்தில் வைத்துத்தான் அதன் வாசிப்பை நிகழ்த்த வேண்டும். நமது முதிர்ச்சியில் இருந்து ஆயிரமாண்டுகள் முன் வரலாற்றை எப்படி விமர்சித்தால் எப்படி இருக்கும் ?
ஆனால் ஈழ யுத்தம் பற்றிய ஈடுபாடும் அதற்காக உயிர் கொடுத்தோர் பற்றிய உயர்மதிப்பீடும் என்னிடம் நிச்சயம்இருக்கும். ஏனெனில் என் நண்பர்களில் எத்தனை அற்புதங்களை அங்கு நான் தொலைத்தேன். ?
இந்த என் மன நிலையை உங்களுக்கு எப்படி புரிய வைக்கப்போகிறேன் ?
ஒருநாள் என் நண்பர்களை கொன்றவர்களுக்கும், நண்பர்கள் கொன்றவர்களுக்கும் முன்னால் நின்று நாம் மன்னிப்பு கேட்க்க வேண்டும். அவர்களை பலியாடாக்கிய சமூகத்தின் வாடை எங்களிலும் வீசும்.
வீட்டை நோக்கி நெருங்கிய போது மனதில் எழுதியதை உடனே எழுத ஆரம்பித்தேன். நான் என்னை ஆராயவும் , என்னிடம் பேசவும் உங்கள் விமர்சனம் உதவியது. தொடர்ந்து நான் எழுதுவதை நீங்கள் வாசிப்பதால் மட்டுமே எழுத வேண்டி இருக்கிறது. என் வாழ்வில் வந்து நிற்கும் மான்போல, நாணியபடி நகர்ந்த கிராமத்து அதிசயப் பெண்போல என்னை புதுப்பிப்பதற்க்கு நன்றி. கதவைத் திறந்தால் ‘மழை அடிச்சு ஊத்தப்போகுது. எங்க இவ்வளவு நேரமும் போன்னீங்கள்’ என்று மிருணா கூந்தலை உலர்த்திய படி கேட்டாள். அவள் அளக நீர்த்துளிகள் வீட்டுக்குள் மழையாகப்பெய்தன. நான் ஒன்றும் பறையவில்லை.
– அகரன்