/

கதையாக மாறும் காலம் – செல்வம் அருளானந்தத்தின் நூல்களை முன்வைத்து: சுரேஷ் பிரதீப்

தமிழ் இலக்கியச் சூழலில் புலம்பெயர் இலக்கியத்துக்கான வாய்ப்புகளை அதிகம் கொண்டுள்ளது ஈழ இலக்கியமே. ஈழத்துக்கு வெளியே இயங்கும் படைப்பாளிகளின் ஆக்கங்களை புலம்பெயர்ந்தவர்களின் எழுத்து, புலம்பெயர் எழுத்து என்று இரண்டாகப் பிரித்து விட முடியும். வேறொரு தேசத்தில் காலூன்றி நிலை கொண்ட பிறகு நினைவு மீட்டல்களாக ஈழத்தை எழுதிப் பார்ப்பதை புலம்பெயர்ந்தவர்களால் எழுதப்படும் என்று வரையறுக்கலாம். இன்றுவரையிலான ஈழத்திலிருந்து குறிப்பிடத்தக்க நாவல்களை எழுதிய பல படைப்பாளிகள் இந்த வரிசையிலேயே வருகின்றனர். ஈழ நிலத்தையே எழுதிப் பார்ப்பதற்கு இப்படைப்பாளிகளிடம் அரசியல் சார்ந்த காரணங்களும் அகம் சார்ந்ந காரணங்களும் இருக்கின்றன. அப்பால் ஒரு நிலம் நாவலின் முன்னுரையில் குணா கவியழகன் ‘நீண்ட காலமாய் காத்திருந்து ஈழப்போரின் அழிமுகத்தை அதில் மக்களின் வாழ்வுப்பாடுகளை வாழ்வு கொண்ட மனங்களை எழுத முயலும்போது ஒரு பயிற்சி அவசியமெனப்பட்டது. தமிழ் திணைகள் அதிகம் கண்டு கொள்ளாத வாழ்வை எழுதுவதற்கு மொழிப் பயிற்சி மட்டுமல்ல, அதன் அழிமுகம் வரை வாழ்ந்து கடந்தவன் என்ற வகையில் மனப்பயிற்சியும் அவசியமெனப்பட்டது. அந்தப் பயிற்சியாக இந்த நாவலை எழுத முயன்றேன். இது ஒரு நல்ல ஒத்திகையாக அமைந்தால் என் பயணத்திற்கு நல் வழி பிறக்கும் என நம்புகிறேன்’ என்று நேரடியாகவே ஈழத்தை எழுதுவதன் காரணத்தைச் சொல்கிறார்.

ஈழ இலக்கியம் என்றதும் நினைவுக்கு வரும் ஆதிரை, கொரில்லா போன்ற நாவல்கள் கூட ஈழத்தையே பேசுகின்றன. அதிலும் குறிப்பாக இந்த நாவல்களில் தமிழர்களே பெரும்பாலும் இடம்பெறுகின்றனர். இரண்டு தலைமுறைகளுக்கு முன்னதாகவே தமிழ் உரைநடை இலக்கியத்தில் ஒரு சர்வதேசப் பார்வையை கொணர முயன்ற அ.முத்துலிங்கத்தை புலம்பெயர்ந்து வாழ நேர்ந்த முக்கியமான  ஈழப் படைப்பாளிகள் தங்கள் முன்னோடியாகக் கொள்ளாதது சற்று ஆச்சரியமாகவே இருக்கிறது.

அ.முத்துலிங்கத்தின் புனைவுகளை புலம்பெயர் இலக்கியம் என்ற வகைமைக்குள் முழுமையாகக் கொண்டுவர இயலாது என்றாலும் அவருடைய எழுத்துக்களில் புலம்பெயர் வாழ்வை எழுதக்கூடியவர்கள் பின்பற்றிச் செல்லக்கூடிய பல கூறுகள் இருக்கின்றன. போரினால் நிகழ்ந்த புலப்பெயர்வின் காரணமாக முன்னோடித்தன்மை பெறுகிறவையாக கலாமோகனின் புனைவுகளைச் சொல்லலாம். இரண்டு வருடங்களுக்கு முன் இரண்டாயிரத்தில் வெளியான அவருடைய நிஷ்டை என்கிற புலம்பெயர் இலக்கிய வகைமையில் வரக்கூடிய சிறுகதைத் தொகுப்பு கிண்டிலில் வெளியானது. ‘காலூன்றுதலின் கசப்புகள்’ என்ற பெயரில் அத்தொகுப்புக்கு எழுதிய முன்னுரையில் ‘போரினால் தலைகீழாக மாறிப்போன சூழலால் தாக்குண்ட மனிதனின் கதைகளை இவை இருக்கின்றன. அத்தகையவனின் கசப்புகளும் விலக்கங்களும் சில இடங்களில் கவித்துவமாகவும் சில இடங்களில் அங்கதமாகவும் சில இடங்களில் எதார்த்தமாகவும் வெளிப்படுகின்றன. அதேநேரம் கதை சொல்லி மெல்ல மெல்ல மாற்றம் கண்டுவிட்ட வாழ்க்கைக்குள் தன்னை பொறுத்திக் கொண்டதையும் தனக்கே உரிய வகையில் ஒரு எதார்த்தத்தை உருவாக்கி அதற்குள் வாழப் பழகிக் கொண்டதையும் இக்கதைகளில் நாம் காண்கிறோம்.’ என்று குறிப்பிட்டிருந்தேன்.

செல்வம் அருளானந்தத்தின் எழுதித் தீராப் பக்கங்கள் மற்றும் சொற்களில் சுழலும் உலகம் என்ற இரு நினைவுக்குறிப்பு நூல்களையும் நிஷ்டை தொகுப்புடன் ஒப்பிடலாம். நிஷ்டை கலாமோகன் புலம்பெயர் வாழ்வில் தன்னைப் பொறுத்திக்கொள்ளும் காலத்தில் எழுதப்பட்ட கதைகளைக் கொண்ட நூல். புதிய கலாச்சாரம் அளிக்கும் அதிர்ச்சியும் வாழ்வு குறித்த நிச்சயமின்மையும் வெளிப்படும் மனதின் கதை. ஆனால் செல்வத்தின் எழுதித் தீராப் பக்கங்கள் ஒரு கால இடைவெளிக்குப் பிறகு இலங்கையில் இருந்து பிரான்ஸுக்கு வந்ததையும் அங்கு மெல்ல நிலைகொள்வதையும் பேசும் நூல். சாகசங்களும் ஆபத்தும் நிறைந்த வாழ்வை எப்படிக் கடந்தோம் என்று பல இடங்களில் இந்நூல் வியக்கிறது. சொற்களில் சுழலும் உலகம் பிறரின் அனுபவங்களை நூலாசிரியர் கேட்கும் விதத்தில் அமைந்துள்ளது.

இவ்விரு நூல்களின் பொது அம்சம் மற்றும் முக்கியமான பலமென உரையாடலைச் சொல்ல வேண்டும். பொதுவாக பத்தி எழுத்துக்கள், அனுபவத் தொடர்கள் போன்றவற்றில் அலுப்பேற்படுத்தும் அம்சம் எழுதுகிறவரின் எண்ண ஓட்டம் தொடர்ச்சியாக முன்வைக்கப்படுவதுதான். புனைக்கதைப் பாத்திரங்களுக்கு இச்சிக்கல் இல்லை. அவை ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமாக சிந்தித்துச் செல்லும். ஆனால் அனுபவக்குறிப்புகளில் மாற்றமில்லாத ஒரு தன்னிலை வந்து அமர்ந்து விடுகிறது. அது தொடர்ந்து பேசும்போது இயல்பாகவே சலிப்பு ஏற்படும். செல்வம் இந்த நூல்களில் வட்டார நடையில் அமைந்த உரையாடல்கள் வழியாக அந்தக் குறைபாடு ஏற்படாமல் பார்த்துக் கொள்கிறார். இவ்விரு நூல்களுமே பெரும்பாலும் ‘நினைவுபடுத்திக்கொள்ளுதல்’ என்ற உத்தியையே பெரும்பாலும் பயன்படுத்துகின்றன. ஒரு சம்பவம் அதைத் தொடர்ந்து வரும் நினைவுக்கோவை என்றே பெரும்பாலான பகுதிகள் எழுதப்பட்டுள்ளன. ஆனாலும் எழுதிக் தீராப் பக்கங்களில் செல்வம் இலங்கையில் இருந்து ரஷ்யா வழியாக பிரான்ஸ் வருவது பாரிஸில் மெல்ல மெல்ல கால் பதிப்பது என்றொரு சித்திரம் உருவாகி வருகிறது.

பல இடங்களில் ஒரு சம்பவம் மாறி நடந்திருந்தாலும் வாழ்க்கை மாறிப்போகும் அபாயங்களை எதிர்கொள்கிறார். பெல்ஜியத்தில் இருந்து பிரான்ஸுக்கு செல்லும்போது ஒரு செக்போஸ்டில் நுழைவதற்கு அனுமதி மறுக்கப்படுகிறது. இன்னொரு சோதனைச் சாவடி வழியாக ‘தற்செயலாக’ உள்நுழைகிறார். விமான நிலையத்தில் தூய்மைப் பணியாளராக வேலைக்குச் சேரும்போது ஒரு பிரான்ஸ் பெண்மணி வலிய வந்து உதவுகிறார். பிரான்ஸில் இருந்து நார்வேவுக்கு ரயிலில் செல்லத் தீர்மானித்து இடையே ஒரு நாட்டில் பிடிபட்டு அது என்ன நாடென்றே தெரியாமல் விடுதலை ஆகிறார். இதுபோன்ற கள்ளத்தனங்களின் சுவாரஸ்யமும் சாகசமும் நூல் முழுவதுமே விரவி இருக்கின்றன.

குகன், ஆசைத்துரை, ‘அங்கிள்’, பாலன் என நினைவில் தங்கும்படியான எண்ணற்ற மனிதர்கள் நூல் முழுவதுமே விரவி இருக்கின்றனர். 1983ல் இலங்கையில் ஏற்படும் கலவரம் பாரிஸ் வரை பிரதிபலிக்கிறது. அந்தக் கலவரம் பற்றிய அத்தியாயத்தில் கூட ஒரு கசப்பான புன்னகையே பரவி இருக்கிறது. ஒரு பாண்டிச்சேரி தமிழர் சிங்களர் என்றால் ஆப்பிரிக்கர் போல இருப்பார் என்று நினைக்கிறார். மொரீஷியஸைச் சேர்ந்த ஒருவரை அவர் ‘நிறத்தைக்’ கொண்டு சிங்களர் என்று எண்ணி தமிழர்கள் துரத்தித் துரத்தி அடிக்கின்றனர். பத்து ஆண்கள் நெருங்கிக் குடியிருக்கும் அறையில் வந்து தங்க நேரும் பெண் அவளுடன் அவர்களுக்கு ஏற்படும் தோழமை என ஆச்சரியமேற்படுத்தும் இடங்களும் நூலில் உள்ளன.

எழுதித் தீராப் பக்கங்கள் நூலினை வாசிக்கும்போது ஐரோப்பா குறித்தும் அதன் ஜனநாயகத்தன்மை குறித்தும் ஒரு சித்திரம் கிடைக்கிறது. பெரிய குற்றங்கள் செய்யாமல் கள்ளத்தனமாக நாடு தாண்டுகிறவர்களை தண்டிக்காமலோ சிறிய தண்டனைகள் கொடுத்தோ விரட்டி விடுகின்றனர். முழுக்கவும் நிலங்களால் இணைக்கப்பட்ட நிலப்பரப்பு என்பதால் நாடு தாண்டுதல் என்பது நிகழ்ந்து கொண்டே இருக்கிறது. புலம்பெயர்ந்தோர் எங்கும் தங்க இயலாமல் அலைந்து கொண்டே இருக்கிறார்கள்.

நூலில் ஒரு இடத்தில் ஒரு பிரெஞ்சு காவலதிகாரி சொல்வதாக இப்படி வருகிறது.

‘இந்த சிறீலங்கன்கள் பற்றி எனக்கொண்டுமே விளங்கல்லை. இந்த சிறீலங்கன்கள் ஜெர்மனியில் இருந்து பிரான்சுக்கு போறாங்கள், பேந்து பிரான்சிலையிருந்து ஜெர்மனிக்கு போறாங்கள், பிறகு ஜெர்மனியிலை இருந்து ஹொலாண்டுக்குப் போறாங்கள். என்ன பிரச்சினை கண்டு விளங்கல்லை. இனிமேல் பிரான்சுக்கும் ஜெர்மனிக்கும் ஒரு யுத்தம் வரும் எண்டால் அது உங்களாலைதான்’

நூலின் இன்னொரு இடத்தில் வேறினை தொலைத்தவர்கள் நிலையில்லாமல் அலைவது பற்றியும் வருகிறது.

இன்ன சார்புநிலை என்றில்லாமல் நூல் முழுக்க அரசியல் இயக்கங்கள் பகடி செய்யப்படுகின்றன. ரஷ்யாவில் கோழியை சரியாகப் பொரிக்கவில்லை என்று சத்தம் போடுகிறவரிடம் அவர் நண்பர் ‘இது கம்யூனிச நாடு. சத்தம் போடாதீர்கள்’ என்று எச்சரிக்கிறார். அவர் ‘கம்யூனிச நாடென்றால் சரியாக கோழியை வேக வைக்க மாட்டார்களா’ என்று கேட்கிறார்.

செல்வம் சொந்த மண்ணை விட்டுப்பிரிந்து பாரிஸ் வந்து அதனை தன் சொந்த ஊராக எண்ணுமளவு நெருக்கம் கொண்ட பிறகு மீண்டும் ‘களவாக’ மனைவி மற்றும் கைக்குழந்தையான மகளுடன் கனடா செல்வதுடன் எழுதித் தீராப் பக்கங்கள் முடிகிறது. எண்பதுகளின் தொடக்கத்தில் இருந்து தொன்னூறுகள் வரையிலான ஒரு காலகட்டம் ஒரு அகதியின் பார்வையில் இந்த நூலில் பதிவாகிறது.

சொற்களில் சுழலும் உலகம் பெரும்பாலும் இறுதி யுத்தத்துக்கு பிறகு இலங்கையில் அல்லது வேறொரு நாட்டில் சந்திக்க நேர்ந்தவர்களின் அனுபவங்களை பதிவு செய்யும் வகையில் எழுதப்பட்டுள்ள நூல். இறுதிப்போரின் கொடூரங்கள் உலகம் முழுக்க பரவியிருக்கும் ஈழத் தமிழரிடத்தில் ஏற்படுத்தி இருக்கும் சலனங்களை பதிவு செய்வது என்ற ‘நோக்கம்’ வந்து விடுவதாலோ என்னவோ எழுதித் தீராப் பக்கங்களில் உள்ள கட்டின்மையையும் கள்ளமின்மையையும் இந்நூலில் காண முடிவதில்லை. சம்பவ விவரிப்புகளில் இயல்பாகவே ஒரு புனைவுத்தன்மை கூடிவிடுகிறது. அதன் காரணமாகவே நாம் வாசிப்பது புனைவா அல்லது அனுபவ விவரிப்பா என்ற அந்தர நிலை தோன்றி விடுகிறது. புனைவினைப் பொறுத்தவரை இந்த ‘மயக்கநிலை’ ஒரு வெற்றிகரமான உத்தி. யுவன் சந்திரசேகரின் ஆக்கங்களில் இந்த மயக்கநிலை ஆச்சரியமேற்படுத்தும் வாசக இடைவெளியை உருவாக்கி அளிக்கவல்லது. ஆனால் ஆவணத்தன்மை கொண்ட அனுபவப்பதிவு என்ற நோக்கத்துடன் எழுதப்படும் நூல்களில் இதுபோன்ற மயக்கநிலைகள் எதிர்விளைவையே ஏற்படுத்தும் என நினைக்கிறேன். மண்கடன், கானாள நிலமகளைக் கைவிட்டுப்போனானை போன்ற பதிவுகள் ஒரு நாவலாக எழுதப்படுவதற்கான விரிவையும் அடர்த்தியையும் கொண்டுள்ளன.

இரண்டு நூல்களையும் ஒன்றாக யோசித்து நினைவுமீட்டும்போது இந்த நூல்களில் சம்பவங்கள் தொடர்ந்து கதையாக மாறியிருப்பதை அவதானிக்க முடிகிறது. கதை என்பதே மாற்ற முடியாத கடந்தகாலத்தின் மீதான நம் மனதின் எதிர்வினையாகவே தோன்றியிருக்கக்கூடும் என நினைக்கிறேன். அப்படிக் கொண்டோமெனில் செல்வம் இந்த நூல்களில் கடந்து போன காலத்தினை தன்னுடைய ஆர்வமூட்டக்கூடிய மொழியின் மூலம் நினைவுமீட்டுவதன் வழியாக அக்காலத்தை கதையாக மாற்றுகிறார் என்று சொல்லலாம். ஈழ இலக்கியத்தின் ஒட்டுமொத்த பரப்பில் மிகக்குறைவாக இடம்பெறும் புலம்பெயர் இலக்கியம் என்ற வகைமையில் செல்வத்தின் எழுதித்தீராப் பக்கங்கள் ஒரு முக்கியமான நூல். புத்தாயிரத்துக்கு முந்தைய நினைவுப்பதிவு என்ற வகையில் முன்னோடித்தன்மை கொண்டதும் கூட. இந்நூலில் இடம்பெறும் அரசியல் பகடிகள் இன்று பகடிகளாக மட்டுமே தொனிக்கும் அளவுக்கான ஒரு காலத்திற்கு வந்து சேர்ந்துவிட்டோம். இந்நிலையில் இந்நூலின் மீதான விவாதம் செல்வத்தைப்போன்ற முதல் தலைமுறை புலம்பெயரிகள் தங்களுடைய அனுபவத்தை பதிவு செய்வதற்கு தூண்டுதலாகவும் அமையும்.

சுரேஷ் பிரதீப்

தமிழ்நாடு திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர். தொடர்ச்சியாக புனைவுகள், விமர்சனங்கள் எழுதிவருகிறார். அழகியலை முன்னிலைப்படுத்தி எழுத்தாளர்களின் சிறப்பியல்புகளை நுட்பமாக மதிப்பிடுபவர். ஒளிர் நிழல் என்ற நாவலும் இரண்டு சிறுகதைத் தொகுப்புக்களும் வெளியாகியுள்ளன.

உரையாடலுக்கு

Your email address will not be published.