/

நாயும் நானும்: க.கலாமோகன்

இது எனது நாய். என்னுடன்தான் இருக்கும். ஒருபோதுமே என்னை விட்டு ஓடாது. நாயின் பெயர்? தெரியாது. 20 வருடங்களுக்கு மேலாக என்னுடன். ஆம், நாம் வீதியில். நான் அதனை நாய் என அழைப்பதில்லை. எந்தப் பெயர் எனக்கு நினைவில் வருகின்றதோ அந்தப் பெயரால் அழைப்பேன். உண்மையிலேயே எனக்கு எனது பெயரும் தெரியாது. ஆனால் எம் முன் சில சில்லறைகள், சாப்பாடுகள் வைப்போரது பெயர்கள் அவ்வப்போது எனது நினைவுக்கு வரும். 

நான் எங்கு பிறந்தேன்? நினைவே இல்லை. நீண்ட ஆண்டுகளாகப் பிரான்சில். விசா? நிச்சயமாக இல்லை. பொலிஸார் என்னைப் பிடிப்பார்களா? அதுவும் தெரியாது. அவர்களே என் முன் சிகரெட்டுகளைப் போடுபவர்கள். எனது இடம் ஓர் வீதி. எனக்குத் தொழிலும் இல்லை, சம்பளமும் இல்லை. 

“வணக்கம்  ஜீஸேல்.”

“நான் ஜீஸேல் இல்லை. எலிசபெத்…”

“வணக்கம்  எலிசபெத்.”

“இது, நான் இப்போது சமைத்த பண்டி இறைச்சி. சூடாக உள்ளது.” என்றபடி ஓர் பிளாஸ்ட்டிக் பெட்டியை எடுத்து வைன் போத்தலுடன் வைக்கின்றாள்.

“நன்றி எலிசபெத்.”

“தாமதி, உனது நாய்க்கும் சாப்பாடு உள்ளது.”

வேறு ஓர் சிறு பை என் முன். அவள் போன பின்பு வைன் போத்தலைத் திறந்து கொஞ்சம் குடிக்கின்றேன். சில வேளைகளில் கொஞ்சம், கொஞ்சம் குடிப்பது எனது வழக்கம். நான் சாப்பிடும் அனைத்தையும் எனது நாய்  சாப்பிடும். பண்டி சுவையாக இருந்தது. ஓர் அழகான துண்டை நாயிடம் கொடுக்கின்றேன். அது அமைதியாகச் சாப்பிடுவது என்னை மகிழ்த்துகின்றது. எமக்கு எப்போதும் பண்டிகளே கிடைப்பதில்லை. அனைத்து இறைச்சி வகைகளும் கிடைக்கும். மீன்கள் ஒரு போதுமே கிடைத்ததில்லை. நிச்சயமாக நான் மீன்களைப் பார்த்துப் பல வருடங்கள்.

எனக்குப் பாரிஸ் வீதியில் நிறைய இடங்கள் உள்ளன. நடப்பவர்களைத் தொல்லைக்கு உட்படுத்தாத இடங்களே எனக்கு விருப்பம். இந்த இடங்கள் மிகவும் குறைவே. தோட்டங்கள் சுவையானவை. அவைகள் இரவில் பூட்டப்பட்டு இருக்கும். நாம் சில தினங்களாக  மதுப் போத்தல்கள் எறியப்படும் பெரிய பிளாஸ்ட்டிக் பெட்டியின் அருகில்தான். பகலில் எமக்கு முன்னால் நடந்து திரிபவர்கள் எம்மைப் பார்த்துச் சிரிப்பர். சில்லறைகள் விழும். சாப்பாடுகளும்தான். 

தூங்குவதும் விழிப்பதும்தான் என் வேலை.  நாயும் என்னுடன் தூங்குவதும், வெளியில் சில வேளைகளில்  செல்வதுமாக. நான் தூங்கிய வேளையில் சில்லறைகள் விழுந்தால் களவு போவதில்லை. பல வேளைகளில் எனது தூக்கத்தைக் கலைப்பது நாயின் முத்தங்களே. அதனது முத்தங்கள் மிகவும் சுவையானவை. 

சில தினங்களின் முன் நான் காலையில் விழித்தபோது எனது நாயைக் காணவில்லை. பல தடவைகளில் இப்படி நடக்கும். நான் தலையை உடைக்கமாட்டேன். இரவு ஆகுமுன் என்னைத் தேடி வந்துவிடும். ஆனால், அது இல்லையேல் என்னை ஓர்  வகையில்  கடிப்பது வெறுமையே. அந்த நாய்க்கு எல்லோரையும் விட என்னைத் தெரியும். பலருடன் நான் பொதுவாகச் சிரிப்பேன். ஆனால் எனது மொழியை நாய்தான் கேட்கும். 

ஒருபோதுமே நான் கவிதைகளை எழுதியதில்லை. எனக்கு எழுதவே தெரியாது. கவிதைகள் எனக்குள் சில வேளைகளில் வரும். அவைகளை நான் எனது நாயிடம் மட்டும்தான் சொல்வேன். 

“பச்சை இலை 
ஓர் வனத்தில் 
தூரத்தில் துப்பாக்கிகள் 
பச்சை இலையைக் காக்க 
நான் ஓடுகையில் 
முறிந்த கிளை என் தலையில் 
இப்போது பச்சை இலை
ஓர் சிவப்பு இலையாகி….”

இந்தக் கவிதையை நான் நாயிடம் சொன்னபோது அது அழுதது. சில கணங்களில் மௌனம். பின்பும் அழுதது. அதனது கண்ணீர்கள் எனது கிழிந்த சட்டையில் விழுந்தன. 

“ஏன் அழுதாய்?”

“வாவ்… வாவ் …” எனச் சொல்லியபோது அதனது விழிகளில் இருந்து மீண்டும் கண்ணீர்கள் பெருகின.

சில வேளைகளில் நானும் அழுவதுண்டு. நாய் என்னை விட்டுத் தூரத்தில் போகும்போது. அருகில் இருந்தால் அது அழும் என்பதால்தான். எனது அழுகைகளுக்குக் காரணங்கள் இருக்கலாம். அவைகளை எவருக்கும் சொல்லுவது தேவையா? சொன்னால் இந்தக் கண்ணீர்த் துளிகளின் காரணங்களை அவர்கள் அறிய முயல்வார்களா? 

“உங்கள் நாய் எங்கே?” எனும் கேள்வியால் நான் விழிக்கின்றேன். 

என் முன் ஓர் சிறுமி. அவளை எனக்குச்  சில மாதங்களாகத் தெரியும். பெயரோ தெரியாது. சொக்லேட்டுகள் மட்டுமே கொண்டுவருவாள். நாய் அதனை விரும்பிச் சாப்பிடும், அவளுக்குச் சிலவேளைகளில் முத்தமும் கொடுக்கும். சில வேளைகளில் நானும் இந்த சொக்லேட்டில் சில துண்டுகளைச் சுவைத்துள்ளேன். இவைகள் மிகவும் விலை கூடிய சொக்லேட்டுகள் என்பது என் நினைப்பு. 

“நாய் வெளியே போய் விட்டது.”

“எப்போது வரும்?”

“இன்று வரும். ஆனால் எப்போது வரும் என்பது எனக்குத் தெரியாது.”

“வரும்போது, என்னிடம் சொக்லேட்டுகள் இன்று இல்லை என்று சொல்லமுடியுமா?” 

“நீ கிடைக்கும்போது  கொடு… கொடுக்கவேண்டும் என்பதற்காக  நீ சிரமப்படவேண்டாம்….”

“எனக்கு உங்களது நாயில் விருப்பம்.”

“சரி, உனது சொக்லேட்டுகள் விலை கூடியதாக இருக்கும் என நினைக்கின்றேன்.”

“உண்மை, மிகவும் விலை கூடியவையே. பணக்காரர்கள்தான் அவைகளை வாங்க முடியும்.”

“எப்படி இவைகள் உனக்குக் கிடைக்கின்றன?”

“உங்களுக்கு சாம்ஸ்  எலிசே பகுதியைத் தெரியுமா?”

“தெரியும். அங்கு நான் எனது நாயுடன் சென்றபோது சில முதலாளிகள் என்னைத் துரத்திவிட்டனர்.”

“அது பெரிய முதலாளிகளின் பகுதி. அங்குதான் எனது அப்பாவின் சொக்லேட் கடை உள்ளது. எனது  அப்பாவும் ஓர் பெரிய முதலாளி.”

“நல்லது, நீ நிறையச் சொக்லேட்டுகளைச்  சாப்பிட்டிருப்பாய் என நான் நினைக்கின்றேன்.”

“இல்லை, எனக்கு அவைகளில் விருப்பம் இல்லை.”

“ஒரு போதுமே நீ அவைகளைச் சாப்பிட்டது இல்லையா?”

“சில வேளைகளில். ஆனால் இவைகள் பலருக்குப் பிடிக்கும் என்பது எனக்குத் தெரியும்.” என்றபின் அவளது விழிகளில் இருந்து சில துளிகள் வெளிவந்ததைக் கண்டேன். 

“ஏன் அழுகின்றாய்?” 

அவள் தனது சொக்கையில் வடிந்த துளிகளைத் துடைத்தாள். 

“என்னிடமும் ஓர் நாய் இருந்தது.”

“அது இப்போது எங்கே?”

“அது செத்துவிட்டது.”

“விபத்தா?”

“வருத்தம்.”

“என்ன வருத்தம் என அறியலாமா?”

“புற்றுநோய்.”

எனது விழிகளில் இருந்து கண்ணீர்கள் வழிந்தன. 

“அழவேண்டாம், பெரியவரே.”

“உனது உள்ளத்தின் கவலை எனக்கு விளங்குகின்றது.”

“எனது நாயின் பெயர் ரியோ.”

“அழகிய பெயர்.”

“அதற்குச் சொக்லேட்டுகளில் நிறைய விருப்பம். எமது கடையில் விற்கப்படுவைகளே அதற்கு விருப்பம்…  இப்போது உங்களது நாயை நான் எனது ரியோவாகப் பார்க்கின்றேன். அதனது பெயர் எது பெரியவரே?”

“மன்னிக்கவும் சிறுமியே. அதனது பெயர் எனக்குத் தெரியாது. 11 வருடங்கள் அது என்னுடன். ஆனால் அனைத்துப் பெயர்களாலும் நான் அதனை அழைப்பதுண்டு.”

“நீங்கள் வழங்கும் அனைத்துப் பெயர்களும் அதனது பெயர்களே… சரி… “ என்றபடி அவள் ஓர் சிறிய பெட்டியைத் தருகின்றாள். அந்தப் பெட்டியில் இரண்டு மீன்களின் முகங்கள் இருந்தன. 

“இது ரியோவுக்கு.”

அவள் போகும் வேளையில் அவளது நிழல்களில் இருந்து கண்ணீர்கள் கொட்டுவதை எனது விழிகள் கண்டன. எனது வீதி வாழ்வில் நான் இத்தகைய படங்களைப் பல வேளைகளில் கண்டுள்ளேன். காணுபவைகள் ஓர் தினத்தில் அழிபவையா? என்னிடம் சில வேளைகளில் சில நினைவுகள் வரும். நான் நினைவுகளைக் காப்பதில் அக்கறை காட்டாதவன் என்பது என் முன் நடப்பவர்களுக்கும், ஓடுபவர்களுக்கும் தெரியுமா? என் முன் தெரிபவர்கள் இவர்கள் என நான் சொல்லும்போது, இவர்கள் முன் நான் நிச்சயமாக இவராக இருப்பேன். 

ஓர் இளைஞன் தன் பியர் புட்டியை எறிகின்றான். பின் அது எனது கையில். சில சொட்டுகள் இருந்தன.  குடித்தேன். 

“மார்கரீத்….”

சிலவேளைகளில் அவள் என்முன் வருவதுண்டு. நான் எனது அம்மம்மாவைக் காணவில்லையெனிலும், அவள் எனது அம்மம்மா போல இருப்பாள்.

“பிடி, சாப்பிடு.”

என்னிடம் ஓர் பிளாஸ்ட்டிக் பையத் தந்துவிட்டுப்  போய் விட்டாள்.

அதனுள் போர்த்தோ வைனும், சில நசுங்கிய உருளைக் கிழங்குகளும். தனது தேசம் போர்த்துக்கல் என்று ஓர் தடவை சொல்லியுள்ளாள்.

காச்சப்பட்ட போர்த்தோ வைன் மிகவும் இனிப்பைத் தந்தது. குடித்தேன். உருளைக் கிழங்கில் சிறிது உறைப்பு இருந்தது. இப்போது எத்தனை மணி? தெரியாது. எனது விழிகளின் முன் மங்கல் நிறம். ஏன் இன்னமும் நாய் வரவில்லை? மணிக்கூடு இருந்தால்தானே நேரத்தை அறியலாம். ஓர் பாண் துண்டைக்  கடிக்கின்றேன்.  சில வேளைகளில் எனது நாய் மறுநாளிலும் வரும் வழக்கத்தைக் கொண்டது.  அருகில் கிடந்த ஏற்கனவே  பற்றப்பட்ட சுருட்டைப் புகைத்தபின் தூங்குகின்றேன்.

எனது தூக்கத்தைக் கலைத்தது இனிமையான முத்தம். அது எனது நாயினது. இருளின் மங்கலில் அதனது விழிகள் விளக்குகளைப் போலப்பட்டன. 

“எனது விளக்குகள் 
நாயின் விழிகள் 
நான் சூரியனைத் தின்று 
பல வருடங்கள்.”

எனது நாய் ஓர் பெண்ணா, ஆணா அல்லது அலியா என்பது எனக்குத் தெரியாது. இந்தத் தெரிவு எனக்கு மிகவும் அவசியமானதா? இந்த இரவில் நான் எனது நாயை ஜூலியா என்று அழைத்தேன். 

“உனக்கு எனது பெயர் எப்படித் தெரியும்?” எனும் குரல் என் அருகில் இருந்து கேட்டது. அது நாயின் குரல் அல்ல. 

எனது அருகில் ஓர் பெண் படுத்திருந்ததைக் கண்டேன். பாரிஸில் பலர் வீதிகளில் வாழ்கின்றனர் என்பது எனக்குத் தெரியும். ஆனால் எனக்கு அருகில் எவரும் தூங்கியதை நான் ஒருபோதுமே கண்டதில்லை. 

“நான் ஜூலியா என்பது எப்படி உனக்குத் தெரியும்?”

“நீ ஜூலியா என்பது எனக்குத் தெரியாது.”

“ஏன் இந்தப் பெயரால் என்னை அழைத்தாய்?”

“அது உனது பெயர் இல்லை.”

“நீ, நடிக்கின்றாயா?”

“இல்லை, அது எனது நாயின் பெயர்.” 

“நீ நடிக்கின்றாய்.” அவள் கத்தியதுபோது அது எனது அருகில் வந்தது. 

“இல்லை.”

“உனது நாய் ஓர் பெண் அல்ல, அது ஓர் ஆண்.”

“அது ஆணா, பெண்ணா என்பது எனக்குத் தெரியாது. எனது நாய்க்குப் பல பெயர்கள் உள்ளன. அதில் ஒன்றுதான் ஜூலியா.”

“சரி, எனது வயது உனக்குத் தெரியுமா?”

“ஏன் உனது வயது எனக்குத் தெரியவேண்டும்?”

“நீ கிழவன்.”

“அப்படியா? அதுவும் எனக்குத் தெரியாது? நீ கிழவியா?”

“முட்டாள்! எனக்கு 20 வயது.”

“நான் தூங்கப் போகின்றேன்.”

“நீ தூங்க முடியாது. உனது போத்தலைத் தா.”

கொடுக்கின்றேன். குடிக்கின்றாள். 

“சுவையான வைன். பிடி… “ எனச் சொல்லியபடி ஓர் பையைத் தருகின்றாள். 

“பார்.”

அதனுள் பொரித்த கோழித்துண்டுகள்.  கருகல் மணம் என் மூக்கைத் தொட்டது. பல வாரங்களாக நான் கோழி சாப்பிட்டதில்லை. அதில் விருப்பம் எனக்கு. எனது நாய்   ஓர் துண்டைக் கடித்ததும் துப்பிவிடும். ஓர் துண்டை எடுத்துக் கடித்தேன். மீண்டும் ஓர் துண்டு. 

“சுவையா?”

“ஆம், மிகவும் சுவை…”

“நிறுத்து!”

அவள் தனது பிரேசியரைக் கழட்டினாள். இரண்டு சிவப்பு  முத்துக்கள் எனக்குத் தெரிந்தன.

“சுவை.”

கோழித் துண்டுகள் எனது வீதி மெத்தையில் வீழ்ந்தன. 

நான் பல பெண்களுடன் கிடந்துள்ளேன். அவள்களை நான் தேடவில்லை. சில உடல்கள் என்னைத் தேடும்போது நான் அவைகளைத் துரத்துவதா? ஜூலியா  என்னைத் தனது பல்களால் கடித்தாள். அவை மிகவும் சுவையானவை. 

“கடி!” நான் கத்தினேன்.

அப்போது எனது நாயும் என்னை  முத்தமிட்டது. ஜூலியாவின் பல்கள் மிகவும் கூராக இருந்ததைக் கண்டு சிறிதே அஞ்சினேன். அவளது முலைகள் வெளியே வந்தபோது எனது விழிகள் அவைளைப் பசியுடன் பார்த்தன. பாய்ந்து எனது நாய் அவைகளை முத்தமிட்டது. அதனைத் தூரத்தினேன். அது என்முன் கோபத்தில் கத்தியது. மீண்டும் துரத்தினேன். அது சிறிது தூரத்தில் சென்று மீண்டும் கத்திக் கத்தி களைப்பில் மண்ணில் சரிந்தது.

ஜூலியா  இப்போது “ நீ இளைஞன்” என எனக்குச் சொன்னாள்.

“ஏன், சில கணங்களின் முன் கிழவன் எனச் சொன்னாய்?”

“தா, தா… “ எனக் கத்தினாள்.

கொடுத்தேன். வீதிகளில் சில கால்களின் அசைவுகள் கேட்டன. ஓர் கிழிந்த மெத்தைக்குள் நாம் எமது வயதுகளை மறந்தோம்.

விடிந்தபோது நான் தனிமையில். அவள் எங்கே?  நாயையும் நான் அன்று காணவில்லை. 

23-06-2020 23h 17

க. கலாமோகன்

இலங்கையில் இருந்து புலம்பெயர்ந்து பிரான்சில் வசித்து வரும் தமிழ் எழுத்தாளர். கவிதை, சிறுகதை, நாடகம், மொழிபெயர்ப்புகளில் தொடர்ந்து இயங்குகி வருகிறார். சிதறுண்ட தன்னிலைக் கூறில், எங்கேயும் தன்னைச் சரியாக பொருத்திக்கொள்ளாத இயல்பில் தத்தளிக்கும் மனங்களை கதைகளாக்கி வருகிறார்

உரையாடலுக்கு

Your email address will not be published.