சுமதி சிறுமி. வயது பன்னிரெண்டுதான் இருக்கும். ஆனால், வயதை மீறிய வளர்த்தி. வாடிய தோற்றம். வறுமையின் சுவடுகள்.
அவள் தனிமையாக நின்று அழுதுகொண்டிருந்தாள். அழுக்குப் படிந்து, நாற்றமடித்து, தனது உடலுக்கு அரணாக இருக்கும் கவுணை வெறுப்போடு பார்க்க உள்ளத்தில் எழும் ஆவேசம் முகத்தில் விம்மலாகப் பரிணமிக்கின்றது.
அவளிடம் ஒரேயொரு கவுண் மட்டும்தான் உண்டு. அந்தக் கவுண்கூட ஒழுங்காக இல்லை. எண்ணமுடியாத கிழிசல்கள். அவை மீது தையல்கள். அந்தக் கவுணைத்தான் அவள் எப்போதும் அணிவாள். இரவு நேரத்தில், எப்போதாவது ஒருநாள் ஏதாவது கிழிசலைக் கட்டிக்கொண்டு அதனைத் துவைப்பாள். சுமதியின் இதயம் இதன் காரணமாக எப்பொழுதுமே சங்கடத்தில் தவித்துக்கொண்டிருந்தது.
கூலிவேலை செய்யும் தகப்பன் நடராசாவிடம், தனக்கு ஒரு “கவுண்” தேவையென்ற குறைபாட்டை எத்தனையோ தடவைகள் தயங்கித் தயங்கிச் சொல்லியிருக்கிறாள். அப்பொழுதெல்லாம் முதுகு உறைக்க நாலு அடி விழும். இவள் மௌனமாகி விடுவாள். மீண்டும் சில நாட்கள் கழித்து தனது தேவைப்பாட்டினைச் சொல்லுவாள். அப்போதும் அடிவிழும். எனவே “கவுண் கேட்டால் அப்பா அடிப்பார்” என்ற தீர்க்கமான முடிவு அந்தப் பிஞ்சு நெஞ்சினுள் வேரூன்றிவிட்டது.
“எடியே! தள்ளிப் போடி!” சுமதியின் சகமாணவியான சுகிதா இப்படிச் சொன்னதும் அவள் திகைத்துவிட்டாள். ஏன் இவ்வாறு சொல்லுகிறாள் என்பதற்கான காரணம் இவளுக்குப் புரியவில்லை. எனவே, தள்ளிப்போகாமல் சேர்ந்தே போனாள். மீண்டும் அவள் “சீ! தள்ளிப்போடி. உன்ரை கவுண் ஒரே நாத்தமாக் கிடக்கு, தள்ளிப் போ” என்று சொன்னபின்தான் உண்மை புரிந்தது. அத்தோடு இரண்டு நாட்களாக அம்மாவிடம் சவர்க்காரம் கேட்டதும் நினைவுக்கு வந்தது. சத்தம் போடாமல் தள்ளியே போனாள். கடைசி வாங்கினில் இருந்த சுமதியைத் தன்னருகே கூப்பிட்டாள் ஆசிரியை. உடையின் மணம் அவளையும் பாதித்திருந்தது. “பிள்ளை, சுமதி. இனிமேல் புதிய கவுண் போடாமல் பள்ளிக்கூடத்துக்கு வராத. வந்தா முதுகுத்தோலை உரிச்சுப்போடுவன்” என்று எச்சரித்தாள்.
➽➽➽➽➽
காலை எட்டு மணியைத் தாண்டிவிட்டது. பாடசாலைக்குப் போக எந்தவிதமான ஆயத்தங்களும் செய்யாமல் இருந்த சுமதியைக் கண்ட தாய் ராசம்மாவுக்கு ஆத்திரம்தான் வந்தது.
“சுமதி, இஞ்சை வா, நீ இண்டைக்குப் பள்ளிக்குப் போகேல்லையே?” என்று கேட்டாள்.
“இல்லை, நான் போகேல்லை.” சுருக்கமாகப் பதில் சொன்னாள். ராசம்மாவின் நெஞ்சில் சுருக்கென முள் ஏறியது போல இருந்தது.
“பள்ளிக்குப் போகாம இஞ்சை இருந்து என்னடி செய்யப்போறாய்?”
“டீச்சர் புதுக் கவுண் இல்லாம இனிமேல் பள்ளிக்கு வரவேணாம் எண்டு சொல்லீட்டா. கவுண் இல்லாம இனிமேல் நான் பள்ளிக்குப் போகமாட்டன். எல்லாப் பிள்ளையளும் என்னை நெடுகப் பகிடி பண்ணினம், என்ரை கவுண் ஒரே நாத்தமாகவும், அசிங்கமாகவும் கிடக்காம்” என்று சொன்னாள்.
“பிள்ளை, உனக்குக் கவுண் கெதியா எடுத்துத் தருவம். நீ பள்ளிக்குப் போ!” என்று ராசம்மா கூடியவரை கெஞ்சாடினாள். சுமதியின் மனதில் சோடி சோடியாகத் தீபாவளிகளும், வருடப் பிறப்புகளும் தோற்றமளிக்கவே, அவள் முடியாது என்று இறுக்கமாகச் சொன்னாள். நெஞ்சில் ஒரு பிடிவாதம் அரும்பி விட்டது.
➽➽➽➽➽
நடராசாவுக்குத் “தண்ணி” போடும் பழக்கம் உண்டு. ஒவ்வொரு நாளும் மதி மயங்கிய நிலையில்தான் வீட்டுக்கு வருவான். அரையிலே கிடந்த சாரம் அவிழ்ந்து அலங்கோலமாக அவன் தரையிலே கிடக்கிறான். மதுவின் ஆளுமை அவனது உடலைவிட்டு இன்னமும் அகலவில்லை.
“அப்பா!” சுமதி அழைத்தாள். அவள் அழைத்தபோதுதான் விழிகளைச் சிரமத்துடன் திறந்தான். “என்னடி!” சுள்ளென எரிந்து விழுந்தான்.
பயந்து நடுங்கினாள் சுமதி. தன்னுள் ஒரு துணிவை சிரமப்பட்டு வரவழைத்துக் கொண்டே “அப்பா, எனக்கு கவுண் ஒண்டு வேண்டித் தாங்கோ” என மெதுவாகச் சொன்னாள்.
“கவுணோ! சாப்பிடவே தவிண்டையடிக்கிறம். அதுக்கிடையிலை உமக்கு கவுண் வேணும் என்ன? போடி, போய் உன்ரை அலுவலப் பார்.”
“அப்பா, எனக்குள் கவுண் கட்டாயம் வேணும். எல்லாப் பிள்ளையளும் என்னை நையாண்டி பண்ணினம். நான் ஒரு குப்பையாம்.இந்தக் கவுணும் மங்கிப் போச்சுது. கவுணில்லாம நான் பள்ளிக்கூடம் போக மாட்டன்.”
“படார், படார் “ எனச் சுமதியின் முதுகில் நான்கைந்து அறைகள் விழுந்தன. அவள் சத்தம் போட்டு அழுதாள். கண்ணீர் மழை போலப் பொழிந்தது. விம்மலூடே “ நீங்க மட்டும் நெடுகயும் குடிக்கக் காசு கிடக்கு, எனக்குக் துணி வாங்கித் தரத்தான் காசு இல்லை. நீங்க மட்டும் ….”
நடராசாவால் ஆத்திரத்தை அடக்க முடியவில்லை. தனது முரட்டுக் கரங்களால் அவள் மீது ஆத்திரத்தைத் தீர்த்தான். சுமதி விக்கி விக்கிக் கொண்டே போய் திண்ணையில் படுத்தாள்.
➽➽➽➽➽
எந்தப் பெரிய மாமூடையாயினும் புளி மூடையாயினும் இலகுவாகத் தூக்கிவிடுவான் நடராசா. அவை அவனுக்குக் கனப்பதில்லை. ஆனால், இன்று ஒரு விடயம் அவனது இதயத்தை அழுத்தியது. கனத்தது. மனமோ நிலை கொள்ளாமல் தவித்தது.
“பாவம், சின்னப்பிள்ளை. எவ்வளவு முரட்டுத்தனமா அடிச்சுப்போட்டன்?” என்று எண்ணி எண்ணிக் கவலையுற்றான். அந்த “ஒரேயொரு கவுண்” அவரது மனதின் முன் நிழலாடியது.
“நான் ஒரு சுயநலம் பிடிச்சவன். ஒவ்வொரு நாளும் என்ரை நலனை, அதுவும் எந்த நன்மையையும் தராத என்ரை ‘குடி’யை மட்டும் ஒழுங்காகக் கவனிச்சன். ஆனாப் பிள்ளையள், குடும்பம் என்பதை மறந்திட்டன். இன்னும் கொஞ்ச நாளில் அவள் பெரிய பிள்ளையாயிடுவாள். ஒரேயொரு கவுண். அதை மட்டும் போட்டுக்கொண்டு ரெண்டு வரிசத்தைக் கழிச்சிட்டாள். நான் பெரிய பாவம் செய்திட்டன். இனிமேல் குடிக்கக் கூடாது. முதல் வேலையா அவளுக்குக் கவுண் தைக்கத் துணி வேண்டவேண்டும். சுமதி சின்னவள் எண்டாலும் என்னைப் பற்றிச் சொன்னது முழுக்க முழுக்க உண்மை.”
நடராசாவின் அறிவு விழித்தது. உடனடியாகப் புடவைக்கடையொன்றினுள் புகுந்து பூப்போட்ட சீத்தை ஒன்றரையார் வாங்கிக்கொண்டு வீட்டுக்கு விரைந்தார்.
➽➽➽➽➽
நடராசா வியர்வை பெருகப் பெருக வீட்டுக்கு வந்தார். அதிகாலையில் கிடந்த இடத்திலேயே சுமதி இப்போதும் கிடந்தாள். நல்ல தூக்கம். முகத்திலே வாட்டம். கவுணின் முதுகுப்புறம் வெடித்துக் கிடந்தது.
“சுமதி, சுமதி! “ நடராசா அழைத்தார்.
அவள் திடுக்கிட்டு விழித்தாள். பயக் கெடுதியுடன் எழுந்து தகப்பனைப் பார்த்தாள். நெஞ்சு டிக் டிக்கென அடித்தது.
“புள்ளை சுமதி இஞ்சை வா.” நடராசாவின் சொற்களில் ஓர் கனிவு.
திகைப்போடு அருகில் வந்த சுமதியைத் தனது கரங்களால் வாரி அணைத்தார். அவரது கண்களில் இருந்து சில துளிகள் சுமதியின் உச்சந்தலையிலே விழுந்தன.
“சுமதி, இதிலை துணி இருக்கு. உனக்கு விருப்பமான கவுண் ஒண்டைத் தைச்சுக்கொள். இனிமேல் உனக்கு ஒரு குறையும் வைக்கமாட்டன்.”
சுமதியால் எதுவுமே பேசமுடியவில்லை. அடுக்களையில் இருந்த ராசம்மா இந்த விசித்திரத்தைப் பார்த்துச் சிலையாகி நின்றாள்.
➽➽➽➽➽
“பிள்ளை, பவளமக்கா வீட்டை போய் இந்தத் துணியைக் குடுத்து கவுணைத் தை.” ராசம்மா சொன்னாள்.
சுமதி துணியோடு ஓடினாள். அந்தச் சின்ன முகத்திலே மகிழ்ச்சி பூத்துக் கிடந்தது. நெஞ்சு இளைக்க இளைக்க ஓடினாள்.
பவளமக்கா கால்வேறு, உடல் வேறு, கை வேறு எனச் சிதறிக் கிடந்த சட்டைத் துணிகளை மிகவும் நுட்பமாகப் பொருத்திக்கொண்டிருந்தார். அவரைச் சுற்றி ஒரு கூட்டம். கூட்டத்தில் இருந்தவர்கள் நாவுக்கிதமாகப் பல்வேறுபட்ட விடயங்களைக் கதைத்துக் கொண்டிருந்தனர். பவளமக்கா இவற்றிலே காதைச் செலுத்தி, கவனத்தைத் தையல் மீது பதித்திருந்தார்.
தன் முன் முகமெல்லாம் பல்லாக நின்ற சுமதியைப் பார்த்தார். சுமதி சீத்தைத் துணியை மெசினின் இடது பக்கம் உள்ள வெறுமையான பகுதியிலே வைத்தாள்.
“அக்கா, ஒரு கவுண் தைக்க வேணும்.”
“அளவு சட்டை கொண்டு வந்தனியே?”
“இல்லை.” சொல்லில் ஏக்கம்.
“கையில அலுவலா இருக்கிறன். வீட்டை போய் அளவு சட்டையைக் கொண்டு வந்தியெண்டா நான் அதைப்போல தைச்சு வைச்சிடுவன்.”
சுமதி அசையவில்லை. மௌனமாக நின்றாள்.
தையல் இயந்திரம் இயங்கியது. கூடியிருந்தோரின் சத்தம் கேட்டது.
“சுமதி, ஓடிப்போய் எடுத்துக்கொண்டு வாவன்.” பவளமக்கா துரிதப்படுத்தினாள்.
சுமதி அப்போதும் மௌனமாக நின்றாள். அந்த மௌனத்தில் இருக்கும் காரணத்தை அறியத் துடிப்பதுபோல பவளமக்கா நிமிர்ந்து பார்த்தாள். சுமதியின் விழிகளில் இருந்து மௌனமாக இரண்டு கண்ணீர்த் துளிகள் வீழ்ந்தன.
➽➽➽➽➽
- எனது அம்மாவிற்குத் தைக்கத் தெரியும், எழுதவும் வாசிக்கவும் தெரியாது. அவரது சிங்கர் மெஷின் எப்போதும் எனக்குள். தைப்பதில் மகிழ்வைக் கண்டவர் என் அம்மா. அவர் எவரிடமும் பணம் வாங்கியதில்லை. அம்மாவின் தையல் நினைவுகளால் உதித்ததே “அளவு”. – க.கலாமோகன்
- ஜூலை 1981-இல் எழுதப்பட்ட சிறுகதை, சிரித்திரன் இதழில் ‘ரூபதர்ஷினி’ என்ற புனைபெயரில் பிரசுரமானது.
க. கலாமோகன்
இலங்கையில் இருந்து புலம்பெயர்ந்து பிரான்சில் வசித்து வரும் தமிழ் எழுத்தாளர். கவிதை, சிறுகதை, நாடகம், மொழிபெயர்ப்புகளில் தொடர்ந்து இயங்குகி வருகிறார். சிதறுண்ட தன்னிலைக் கூறில், எங்கேயும் தன்னைச் சரியாக பொருத்திக்கொள்ளாத இயல்பில் தத்தளிக்கும் மனங்களை கதைகளாக்கி வருகிறார்
அப்பாவின் கண்ணீர்த்துளிகளும், மகளின் கண்ணீர்த்துளிகளும் ‘அளவு’க்குள் கொண்டு வர இயலாதவை. அளக்க இயலாதவையும் கூட.