உதிரத்துவம்
எனது பேனாவுக்குள்
எந்த நிற மை உள்ளதென்று
கருகிய பூவரச மரத்தில் இருந்த
காகம் கேட்டது
உதிரங்கள் வழியும் உலகில்
எனக்குக் கறுப்பு மை தேவையா?
என்னிடம் இருந்த
அனைத்துப் பேனாக்களையும்
உதிரம் கொண்டே நிரப்பினேன்
சிலர் என்னைப்
பைத்தியம் எனச் சொன்னார்கள்
தமது பேனாக்களில்
கறுப்பு மைதான் உள்ளதெனவும்
கத்தினார்கள்
என்னிடம் சிவப்பு மையுள்ளதென
நான் அவர்களிற்குச் சொல்லவே இல்லை
உதிரங்கள்
எனது பேனாக்களிற்குள் அசைந்தன
அனைத்துக் காலங்களிலும்
கொலை மழை
கொட்டும் வேளையில்
அனைத்து அலைகளும்
நிலத்தை நனைக்கின்ற
உதிரத் துளிகளை
அழித்துவிடாததென்று
கடல் குதிரைகள்
அழுதபடி சொல்லின
செந்நீர் நிலங்களில்
என்னிடம் என் உடல்
இல்லாததை
எவரும் அறிய வேண்டுமா?
எனக்குத் தாகம் வரும்
கிணறுகளில் நீர் இல்லை
நீரில்லாத கடல்கள்
நான் அழுதாலும்
கண்ணீர்கள் கொட்டாத
எனது விழிகள்
பூக்களைத் தேடினேன்
அவைகளைக் கசக்கியபோது
வழியும் துளிகளைக் குடிக்க
எனது வீதிகளில்
மரங்கள் இதுவே இல்லை
பிணங்களின் மீதே
எனது பாதங்கள் நடந்தன
எனக்கு அம்மாவும் இல்லை
அப்பாவும் இல்லை
சிலவேளைகளில் இவர்களது
பிணங்களிலும்
என் கால்கள் நடந்திருக்கும்
என்னை
அழிவின் நிலத்தில் தந்த
அம்மாவையும் அப்பாவையும்
நிந்தனை செய்து
சில கணங்கள் முறிந்தபின்
அவர்களிற்காக அழுதேன்
அனைத்து மேடைகளது
இன வெறி, மத வெறிக்
கத்தல்கள் இப்போதும்
எனது காதுகளிற்கு அருகில்
முறிந்த பனை மரங்களது
கதறல்கள்
கொஞ்சமாகவே கேட்கின்றது
கடலின் கரைகளில்
தவிக்கும்
அனைத்துப் பறிகளிலும்
மணக்கும் இரத்த வாடை
சிறகுகள் இல்லாத
ஓர் சிறு குருவி
எனது தலையில் அமர்கிறது
நான் தொட முனைகையில்
அது தப்புகின்றது
தொடுதலும்
பயம் புரியும்
நிலத்தில் நான்
திடு திப்பென
ஓர் பிணம் எழுகின்றது
அது எனது அம்மா
முலைகள் அறுக்கப்பட்ட அம்மா
விழிகள் குழிகளாக
அவளை நான் அணைத்தேன்
எனது பேனாவினை
எடுத்து அவளிற்கு
ஓர் பொட்டு வைத்தேன்
அது பச்சையாக அல்ல
சிவத்தப் பொட்டாக இருந்தது.
அனைத்து
அம்மாக்களது அழிவிலும்
எனது அம்மாவின் பெயரை
மறந்துவிட்டேன்
இந்த நினைவின்மையை
முத்தமிட்டது
எனகுக்குப் பின்னிருந்து
எழுந்த வேறு ஓர் பிணம்.
தொலையும் கவிதைத் தினங்கள்
அனைத்துத் தினங்களும்
கவிதைத் தினங்களா?
ஓர் சுவரிடம் கேட்டேன்
அது உடைந்தது
குறைவாகத் தூங்கி
விடியலில் குளிர் கடிக்க நடந்து
மெத்ரோவுக்குள் நுழைந்து
பிரயாண நெரிச்சலுக்குள்
எனக்குள் நுழையும்
கவிதை மழைகள்
முறிந்துகொண்டே உள்ளன
தொழில் நிறுவனத்துள் நுழைந்தால்
பணிப்பாளி
ஓர் சிகரெட் புகைத்தபடி வெளியில்
நான் உள்ளே நுழைந்து
அசுத்தமாகக் கிடக்கும்
கோப்பைகளையும் கரண்டிகளையும்
தேய்த்துப் புனிதமாக்கும்போது
என்னைப் பிரிகின்றன
இந்தக் கவிதை மழைகள்
நான் வெளியே வரும்போதும்
பணிப்பாளி வெளியே
சிகரெட்டுடன்
புகை விடும் இயந்திரமாக
அவளைக் கடந்து சென்றால்
எனது கடல் அழுவது
எனக்கு மட்டுமே கேட்கின்றது
நிலத்தில் கிடக்கும்
அனைத்து வாடிய இலைகளிலும்
இருப்பைத் தேடிய
மழையின் துளிகள்
அனைத்து இலைகளில் உள்ள
துளிகளும் அசையாமல்
ஓர் சுழகில்
மிகவும் கவனமாக வைத்தேன்
ஓர் வீதிக் கிழவியிடம்
அதனைக் கொடுத்தேன்
அவள் அதனை எறிந்தாள்
இலைகளும் துளிகளும் சிதைந்தன
“மகனே,
ஓர் சிறிய துண்டு
பாண் இல்லையா?”
“அம்மா,
காத்திருங்கள்
நான் ஓர் பாணோடு வருவேன்.”
தாளும் சில்லறையும் இல்லாமல்
நான் ஓர் பாண் கடைக்குள் நுழைந்தேன்.
“என்னிடம் பணம் இல்லை
ஓர் சிறிய கவிதை உள்ளது
அதனைப் பணமாகக் கருதி
ஓர் சிறிய பாண் துண்டு தருவீர்களா?”
“கவிதை வேண்டாம்,
பணமும் வேண்டாம்.”
அவள் எனக்கு ஓர்
பெரிய பாணைத் தந்தாள்
வீதிக் கிழவியைத் தேடி ஓடினேன்
அவள் இல்லை
நடுங்கும் உடலைக் கொண்ட
ஓர் கிழவன்
பாணைப் பறித்தபோது
நான் அவனுக்கு முத்தமிட்டேன்.
க. கலாமோகன்
இலங்கையில் இருந்து புலம்பெயர்ந்து பிரான்சில் வசித்து வரும் தமிழ் எழுத்தாளர். கவிதை, சிறுகதை, நாடகம், மொழிபெயர்ப்புகளில் தொடர்ந்து இயங்குகி வருகிறார். சிதறுண்ட தன்னிலைக் கூறில், எங்கேயும் தன்னைச் சரியாக பொருத்திக்கொள்ளாத இயல்பில் தத்தளிக்கும் மனங்களை கதைகளாக்கி வருகிறார்
மிகவும் சிறப்பு சார்…