/

பின்வாங்குதல்: சரத் விஜேசூரிய

தமிழில்: எம்.ரிஷான் ஷெரீப்

தனது மகனின் திருமண வைபவத்துக்கான நடவடிக்கைகள் பூர்த்தியான நிலையில், தான் கேள்விப்பட்ட தகவலால் திருமதி. ரணசிங்க நிலைகுலைந்து போயிருந்தாள். அவள் மிகுந்த கையறு நிலைக்கு ஆளாகியிருந்தாள்.

கணவனும் அருகில் இல்லாத நிலைமையில், அனைத்து நடவடிக்கைகளையும் எவ்வளவு பாடுபட்டு ஏற்பாடு செய்தாள்?.. இறுதியில் அனைத்தையும் மின்னல் வேகத்தில் தவிடுபொடியாக்கி விடும் தகவலொன்றைத்தானே கேட்கக் கிடைத்தது.. திருமணத்தை முன்னிட்டு, அடுத்த கிழமை துபாயிலிருந்து வரப் போகும் அவளது கணவன் பல எதிர்பார்ப்புகளைச் சுமந்து கொண்டுதான் வருவார் என்பதை தனியாக விவரிக்கத் தேவையில்லை. ஒவ்வொரு நாளும் இரவில் அரை மணித்தியாலம்போல அவளுடன் உரையாடி, திருமண ஏற்பாடுகளைக் குறித்து விசாரித்து, தேவையான அறிவுறுத்தல்களை வழங்கி மிகவும் மனமுவந்து அவளை தைரியமூட்டியவர் அவர். அந்த அனுபவங்களின் காரணமாக அவளது இதயம் ஆறுதலடைந்து பூரித்துப் போன விதத்தை எண்ணிப் பார்ப்பதுகூட அவளுக்கு மகிழ்ச்சிதான். எவ்வளவு அருமையான காலம் அது? மீண்டும் அவ்வாறானதோர் காலத்தை அனுபவிக்கும் வாய்ப்பு கிடைக்காது. மிகப் பிரமாண்டமான திருமண வைபவமொன்றை நேரில் காணும் ஆவலில், கணவன் தூர தேசத்திலிருந்துகொண்டு வழங்கிய அறிவுறுத்தல்களையும், தெளிவுபடுத்திய விடயங்களையும் பின்னொரு நாளில் நேரில் பார்க்கக் கூடியவாறு ஒழுங்காக நிறைவேற்றி வைத்ததே எவ்வளவு உத்வேகத்தைத் தந்தது?.. மனதை ஆற்றுப்படுத்திய அந்த மகிழ்ச்சியை யாரோ களவாடிப் போனது போலிருந்தது.

இன்றிரவு அவர் கதைக்கும்போது கேட்டால் என்ன சொல்வது?

மகள் தனது இஷ்டத்துக்கு திருமணம் செய்து கொண்டதால் பெற்றோரின் மனம் விரும்பியதுபோல, திருமண வைபவமொன்றை எடுக்கும் வாய்ப்பு கிடைக்கவேயில்லை. ஆகவே, மிகவும் உயர்தரத்தில் சொந்தபந்தங்களுக்கெல்லாம் அழைப்பு விடுத்து, பிரமாண்டமாக தனது மகனின் திருமண வைபவத்தை எடுக்க வேண்டும் என்பதுவே அவளதும் எதிர்பார்ப்பாக இருந்தது. இப்போது அழைப்பு விடுக்கப்பட்டுள்ள சொந்தபந்தங்களுக்கு எவ்வாறு முகம் கொடுப்பது? அவர்கள் கேட்கப்போகும் கேள்விகளுக்கு எவ்வாறு பதிலளிப்பது?

“மகனும் அப்பா போன வழியிலேயே போகத் தீர்மானிச்சது எவ்வளவு நல்ல விஷயம்?”

தனது மகன் மொரட்டுவை பல்கலைக்கழகத்துக்குத் தெரிவு செய்யப்பட்டுள்ளதை அறிந்து கொண்ட கணவன் மிகுந்த பெருமிதத்தோடு கூறிய வார்த்தைகளை திருமதி. ரணசிங்க கவலையோடு நினைத்துப் பார்த்தாள். மின் பொறியியலாளரான கணவன், ஏனைய பொறியியலாளர்களை விடவும் மின் பொறியியலாளர்கள்தான் உயர்வானவர்கள் என்ற உணர்வோடுதான் எப்போதும் பெருமை பேசி வந்தார். மின் பொறியியல் படிப்பைத் தொடர ஆரம்பித்த பிறகு மகனும் கூட அப்பாவின் அதே கருத்தைத்தான் வெளிப்படுத்தினான். படிப்பில் திறமை வாய்ந்த அவளது மகன் மிகவும் விரைவாக அவளை விட்டுத் தொலைவானது, அப்பாவின் மீது மிகுந்த மரியாதை வைத்து அவருடன் மிகவும் நெருக்கமானதால்தான். ‘அம்மா ஒரு உலகம் விளங்காத மோட்டுப் பொம்பளை’ என்ற எண்ணத்தை அப்பா, மகன் என இருவரும் கொண்டிருக்கக் கூடும். இருப்பினும், மகன் தனது எதிர்காலத்தைக் குறித்துச் சிந்தித்தது, அப்பாவை விடவும் வித்தியாசமான கோணத்தில்தான் என்று கூற முடியுமா? அந்தத் தீர்மானம் பிழையாகிப் போனது, இல்லையா? அப்பா கூறியது போலவே, அப்பா போன வழியிலேயே தனது அனைத்து நடவடிக்கைகளையும் மகனும் தேர்ந்தெடுத்திருக்கிறானோ?

மகன் பாடசாலையில் உயர்தரம் படிக்கும் போதே தூரத்துச் சொந்தத்தில், ஆனால் இந்தக் குடும்பத்தோடு நெருங்கிப் பழகி வந்த ஒரு ஆசிரியையின் மகளோடு, வருங்காலத்தில் அவளைத்தான் கல்யாணம் முடிப்பேன் என்ற உத்தரவாதத்தை அளித்து வெளிப்படையாகவே காதல் தொடர்பைப் பேணி வந்தவன். தன்னைப் போலவே, தனது கணவனும் அந்தத் தொடர்பை விரும்பியிருந்த விதத்தை திருமதி.ரணசிங்க நினைத்துப் பார்த்தாள். குடும்பத்தில் பெரியவர்களது ஆசிர்வாதங்களும் அவர்களுக்குக் கிடைத்திருந்தன. ஆனாலும், மகன் பல்கலைக்கழகத்துக்குப் போனதற்குப் பிறகு, ‘அவளால என்னைப் புரிஞ்சுக்க முடியாது’ என்று கோபத்தோடு கூறி அந்தத் தொடர்பை நிறுத்தி விட்டிருந்தான். அந்த முடிவு ஆழமாகச் சிந்தித்து எடுத்த முடிவு இல்லை, கோபத்தில் எடுத்த முடிவு என்று அவள் தீர்மானித்திருந்த போதிலும், கணவன் வேறொரு கருத்தைக் கொண்டிருந்தார்.

“தொடர்பை உருவாக்கிக்கிட்டதும் அவன்தான். முடிச்சுக்கிட்டதும் அவன்தான். அதுக்கு நாங்க என்ன செய்றது? நாங்க இதுல தலையிடத் தேவையில்ல. நடக்கப் போறதப் பார்ப்போம். அவனோட எதிர்காலத்தப் பற்றி முடிவெடுக்குற உரிமை அவனுக்குத்தான் இருக்கு.”

கணவன் தன்னிடம் இவ்வாறு கூறிய போதிலும், மகனின் தீர்மானத்தைக் குறித்து ஏதோவிதத்தில் விருப்பத்துடன்தான் காணப்பட்டார் என்பது திருமதி. ரணசிங்கவுக்குப் புரிந்தது. அந்தப் புரிதல் சரியாகத்தான் இருக்க வேண்டும்.

“எனக்குன்னா, ஒரு பெண்பிள்ளையை ரொம்ப நாளாக் காதலிச்சுட்டு இப்படி திடீர்னு கைவிடுறது கொஞ்சம் கூட பிடிக்கல. அது அந்தப் பெண்பிள்ளைக்குச் செய்யுற அநீதம்.”

“அதெல்லாம் கொஞ்சம் பழைய காலத்து நினைப்பு. சமூகம் என்ன சொல்லுமோன்னு பயந்துக்கிட்டு கட்டிக்கிறதக் காட்டிலும், பழகிப் பார்க்குறப்பவே பொருந்தாதுன்னு தோணுச்சுன்னா ஒரு தீர்மானத்துக்கு வர்றது நல்லதுதான். வளர்ச்சியடைந்த நாடுகளைப் பாரு. பொருந்தலைன்னு தோணுச்சுன்னா கல்யாணம் பண்ணியிருந்தாக் கூட உடனே பிரிஞ்சுடறாங்க. எங்களைப் போல சிரமப்பட்டு ஒண்ணா இருக்குறதில்ல.”

கணவன் பூடகமாக, அவளைக் குத்திக் காட்டி குற்றம் சாட்டும்விதமாகத்தான் அவ்வாறு கூறினார், இல்லையா?

அவர்களது திருமணத்துக்கு முன்பு அவளது கணவனுக்கு இரண்டு, மூன்று காதல் தொடர்புகள் இருந்ததை அவளிடம் வெளிப்படையாகவே அவர் கூறியிருந்தார். அவை அனைத்தும் பாதியிலேயே நின்று போனது இருவருக்குமிடையே கருத்து வேறுபாடுகள் அதிகம் என்பதால்தான் என்றும் கூறியிருந்தார். இருந்தும், வேறு பெண்களை ஏறெடுத்தும் பார்க்காமல் அவர் தன்பாட்டில் இருந்தபோது வந்த திருமண ஆலோசனைக்கு அவரது தந்தையின் வற்புறுத்தலால்தான் அவர் சம்மதித்திருந்தார். அதற்காக அவர் எப்போதாவது வருத்தப்பட்டிருப்பாரோ?

“எல்லாப் பொம்பளைங்களுமே கல்யாணம் முடிச்சதுக்குப் பிறகு புருஷன் தனக்கு மாத்திரமே சொந்தமா இருக்கணும்னு நினைக்கிறாங்க. அந்த மூடத்தனத்தாலதான் கல்யாண வாழ்க்கை ரெண்டு பேருக்குமே வெறுத்துப் போயிடுது.”

கணவன், அவள் அவரைக் குறித்து ஆராய்ந்து பார்த்து அவரிடம் ஒன்றைக் கூறிய வேளையில்தான் இந்த வார்த்தைகளைக் கூறினார். அவ் வேளையில், அவர் மீது குற்றம் சாட்ட போதுமான அளவு ஆதாரங்கள் அவளிடம் இருக்காததால் அமைதியாக இருந்தாள். பின்னர், ஆதாரங்களை வைத்துக் கொண்டு கேட்ட சந்தர்ப்பத்தில் அவர் எதுவுமே அறியாத ஒரு அப்பாவிக் கைக் குழந்தையைப் போல நடந்து கொண்டார். ஆணினுள்ளே இருக்கும் மர்மங்களை பெண்ணால் புரிந்து கொள்வது என்பது எவ்வளவு சிரமமானது?..

“மாப்பிள்ளைப் பையன் ரொம்ப நல்லவன்தான். ஆனா பொண்ணுங்க விஷயத்துல கொஞ்சம் விளையாட்டுப் பையன். புத்தி யோசனையோடு கவனமாப் பார்த்து நடந்துக்கோ புதுப் பொண்ணே. எப்படியும் கல்யாணம் கட்டிட்டான்னா ஒரு பொறுப்பு வந்துடும். நீயும் பொறுமையா அனுசரிச்சுப் பொருந்திப் போறதுதான் நல்லது.”

கணவனின் சொந்தக்காரப் பெண்ணொருத்தி அவர்களது திருமண வைபவத்தின்போது இவ்வாறு கூறிய வார்த்தைகள் பின்னொரு காலத்தில் திருமதி. ரணசிங்கவின் இதயத்தைத் துளைத்து வருத்தி எப்போதும் துன்புறுத்தத் தொடங்கியிருந்தன. அன்று அவள் இந்த வார்த்தைகளைக் கூறிய வேளையில், அந்தப் பெண்மணி மிகவும் மோசமான, கேவலமான,  கீழ்த்தரமான ஒருத்தியென்றுதான் திருமதி. ரணசிங்கவுக்குத் தோன்றியது. அன்று அந்த உபதேசம் காதில் விழுந்ததுமே அந்தப் பெண்ணைக் குறித்து ஒரு அருவருப்புதான் அவளது மனதில் உருவானது. அந்தப் பெண்மணியின் குற்றச்சாட்டை தனது கணவனிடம் கூறாமல் தவிர்த்தது, அதனால் அவரது மனம் புண்படக் கூடும் என்று அவள் எண்ணியதால்தான். அல்லது, அவள் மிகுந்த பதிபக்தியோடு கணவனை குருட்டுத்தனமாக நம்பியிருந்ததாலா?

அன்று அந்தப் பெண்மணி வெளிப்படையாகக் கூறிய அனைத்துமே உண்மைதான் என்பதை வெகுகாலம் செல்லும் முன்பே அவள் ஏற்றுக் கொள்ள நேர்ந்தமைதான் விதியின் ஏற்பாடாக இருந்தது. அந்தப் பெண்மணி சொன்னது அனைத்தும் உண்மைதான் என்பது காலத்தினால் உறுதிப்படுத்தப்பட்டதால்தான், அந்த எண்ணம் அவளது மனதினுள் ஆழமாகப் பதிந்திருந்தது. இருந்தும் ஒரு பெண், இன்னொரு பெண் மீதுள்ள பச்சாதாபத்தால் கூறிய கருத்தாக அதை எடுத்துக் கொள்ள தனக்கு நேர்ந்த விதத்தை திருமதி.ரணசிங்க மனதால் அழுதவாறுதான் நினைத்துப் பார்த்தாள்.

“என்கிட்ட உண்மையைச் சொல்லுங்க. யார் இந்த பத்ரா?”

“எனக்குத் தெரிஞ்ச ஒரு பத்ராவும் இல்ல.”

“அப்போ உங்க கூட இருக்குற இது யாரு?”

துப்பறியும் வேலை பார்க்கும் தோழியொருத்தியின்  உதவியோடு, அவளிடமிருந்து பெற்றுக் கொண்ட புகைப்பட ஆதாரங்களைக் காட்டி விசாரித்த வேளையில் கணவன் திடுக்கிட்டுப் போன விதத்தை திருமதி. ரணசிங்க காயப்பட்ட மனதோடு நினைத்துப் பார்த்தாள். அவள்,  மகளைப் பிரசவிக்கக் காத்திருந்த வேளையில்தான், கணவன் பத்ரா எனப்படும் பெண்ணோடு கள்ளத் தொடர்பைப் பேணி வந்திருந்தார். அது எவ்வளவு கேவலமானது? கணவனால் எந்த விளக்கத்தையும் கூறி தப்பிக்க முடியாது. என்றாலும், அவள் அப்போது எந்தத் தீர்மானத்தையும் எடுக்க முடியாத இக்கட்டான நிலைமையில் இருந்தாள். குழந்தை வயிற்றில் இருந்ததால், அனைத்தையும் மிகுந்த வேதனையோடு சகித்துக் கொண்டாள். ஒவ்வொரு நாளையும் மனதால் செத்துச் செத்துப் பிழைத்துக் கடத்தினாள். அதன் பிரதிபலனை கடைசியில் இருவருமே அனுபவிக்க நேர்ந்துள்ளதை சொல்லாதிருக்க முடியுமா?

மகள் பிடிவாதமாக தனக்குப் பிடித்தமான விதத்தில், குடும்பத்துக்குப் பொருந்தாத ஒருவரைத் திருமணம் முடித்து தனது வாழ்க்கையைத் தொடங்கிய வேளையில், அவளை வயிற்றில் சுமந்திருந்த காலத்தில் தான் மனதால் அனுபவித்த துன்பங்களையெல்லாம் திருமதி. ரணசிங்க ஆயிரம் தடவைகளாவது எண்ணிப் பார்த்திருப்பாள். உண்மையில், தான் அனுபவித்த மனக் கஷ்டங்களின் பிரதிபலனாக மகளின் நடவடிக்கையைக் கருத இயலாதா? கணவன் துரோகம் இழைத்திருப்பதை அறிந்து கொண்ட சந்தர்ப்பத்தில் அந்த வலியை அனுபவிப்பதல்லாமல், வேறு எதையும் செய்ய வழியிருக்கவில்லை. அவள் அதைத் தாங்கிக் கொண்ட விதம் ஒரு விதத்தில் உண்மையிலேயே வியப்புக்குரியதுதான். கணவன் தனது குற்றத்தை ஏற்றுக் கொள்ளவும் இல்லை. எந்த முடிவையும் அவள்தான் எடுக்க வேண்டும் என்றுதான், அன்று அவர் தெளிவாகச் சொன்னார்.

“இனிமேலும் என்கூட சேர்ந்து வாழப் போறியா இல்லையான்னு எல்லாம் நான் கேட்க மாட்டேன். தன்னோட வாழ்க்கையைத் தீர்மானிக்குற உரிமை எல்லார்கிட்டயும் இருக்கு. நான் அதுக்கு எதிர்ப்பு தெரிவிக்க மாட்டேன்.”

கணவனது கூற்று எவ்வளவு ஆழமானது? கடுமையானது? அவளது பொறுமை மாத்திரம் இருந்திருக்காவிட்டால் அன்றே இந்த பந்தம் முடிந்து போயிருக்க வாய்ப்பிருந்தது. அவ்வாறு நடந்திருந்தால், இந்த மகன் அவளது வயிற்றில் பிறந்திருக்கவும் மாட்டான்.

அவளது வயிற்றில் வந்து பிறந்தது, நற்குணங்களைக் கொண்ட சிறந்தவரொருவரின் மகனா என்ன? புலிக்குப் பிறந்தது பூனையாகுமா என்று சொல்லப்படுவதை எவ்வாறு நிராகரிக்க முடியும்?

உறவினர்கள் மத்தியில் மட்டுமல்லாமல், மகனின் நண்பர்களிடத்திலும் அவனது காதல் தொடர்பு இரகசியமானதாக இருக்கவில்லை. அவள் அனைவரதும் மனம் கவர்ந்த அழகியொருத்தி. உண்மையிலேயே ஒரு நல்ல பெண்பிள்ளையாக, அடக்கமாக, ஒழுக்கமாக, பக்குவமாக, நேர்த்தியாக அவள் வளர்ந்திருந்த விதம் எவ்வளவு பாராட்டத்தக்கதாக இருந்தது? அவள் சிறந்த குணநலன்களைக் கொண்டவள் என்று கூறவும் இரண்டு தடவைகள் யோசிக்கத் தேவையிருக்கவில்லை. மகனுக்கு அவளைப் பிடிக்காமல் போனது ஏன்?

“அவளொரு முட்டாள் அம்மா. நான் சொன்னதுக்காக உயர்தரப் பரீட்சையை ரெண்டாம் தடவையும் எழுதினாள். ஆனா, முதல் தடவை எடுத்த பெறுபேறைக் கூட இந்தத் தடவை அவளால பெற்றுக் கொள்ள முடியாமப் போயிருக்கு.”

 “அதனாலதான் இந்த முடிவை எடுத்தியா?”

“எனக்கு வருங்காலத்தில கிடைக்கப் போற தொழிலால, எனக்கு வரப் போற பொறுப்புகளைப் புரிஞ்சுக்க முடியாத ஒருத்தியோட என்னோட வாழ்க்கையைக் கட்டியெழுப்ப முடியாது அம்மா. பல்கலைக்கழகத்துக்குப் போன ஆணோ, பெண்ணோ, பல்கலைக்கழகத்துக்குப் போகாத ஆணையோ, பெண்ணையோ கல்யாணம் முடிப்பது சரியில்லன்னு நிறைய உதாரணங்களையெல்லாம் குறிப்பிட்டு எங்க ஜயசிங்க சேர் விளங்கப்படுத்தியிருக்கார். அது உண்மைதான்னு அப்பாவும் ஒருநாள் சொன்னார்..”

வாலிப வயதையெட்டி வளர்ந்து வரும் மகன் வெளிப்படுத்திய கருத்துகளில் எவ்வித நியாயமும் இல்லையென்றே திருமதி. ரணசிங்கவுக்குத் தோன்றியது. ஆனாலும், அவனிடம் எதையும் விளங்கப்படுத்திச் சொல்லவும் முடியாது. மகன், அவள் கேட்கும் எந்தக் கேள்விக்கும் மிகுந்த உதாசீன உணர்வோடுதான் பதிலளிப்பான். உண்மையில் மகன் வெளியாட்கள் இருக்கும் இடத்தில் கூட அவளை மட்டமாகக் கதைத்த சந்தர்ப்பங்கள் எண்ணிலடங்காதவை. அவன் பாரதூரத்தை யோசிக்காமல் பேசும் சொற்கள் மிகவும் மோசமானவை. அவனை இவ்வுலகத்துக்கு பிரசவித்தது யார் என்று கேட்டால் உறுதியாக ‘அப்பா’ என்று சொல்வதற்குக் கூட அவன் தயங்க மாட்டான். தனது வயிற்றிலிருந்து பிறந்த குழந்தை எவ்வளவு சுயநலமானதாக இருக்கிறது? அவனது ஜீவிதத்தில் தான், ஒரு தாயாக, எந்தப் பயனுமற்ற ஒருத்தியாக உணர்த்தப்பட்ட சந்தர்ப்பங்களும் இருக்கின்றன அல்லவா என்றும் திருமதி. ரணசிங்கவுக்குத் தோன்றியது.

அவளுக்கு ஞாபகம் வரும் எவற்றாலும் மனதுக்கு நிம்மதி கிடைக்கவேயில்லை. ஏன் அது? போன ஜென்மத்தில் செய்த பாவத்துக்கு யாரேனும் அவளைத் தண்டித்துக் கொண்டிருக்கிறார்களோ?

பல்கலைக்கழகத்துக்குப் போய் ஒரு வருடம்போல கழிந்த பிறகு ஒரு நாள் மகன் எவ்வித முன்னறிவிப்பும் இல்லாமல், கிட்டத்தட்ட பத்து தோழர், தோழியர்களைக் கூட்டிக் கொண்டு வீட்டுக்கு வந்தான். வீட்டுக்கு வந்த உடனேயே கட்டளையொன்றைப் போல கூறிய வார்த்தைகள் ‘எங்களுக்கு சமைச்சுப் போடு’ என்பதுதான். நிச்சயமாக, அது அப்பாவிடமிருந்து அவனுக்கு உரித்தாகியுள்ள குணம்தான்.

மகனின் கட்டளைக்குக் கீழ்ப்படிவதல்லாமல், செய்வதற்கு வேறு எதுவும் இருக்கவில்லை. அவள், மகனின் கௌரவத்தை சிறப்பாகப் பேணும் விதமாக அனைவரையும் சிறப்பாகக் கவனித்துக் கொண்டது, விருந்துபசாரம் செய்து உபசரித்தது என அனைத்தையும் தன்னந்தனியாக, எவருடைய உதவி ஒத்தாசையும் இல்லாமல்தான் செய்தாள். வந்திருந்தவர்கள் மனம் விரும்பிய விதத்தில் உண்டு களித்து கும்மாளமிட்டுவிட்டு மாலை நேரமானதும் புறப்படத் தயாரான வேளையில் மகன், ஒரு இளம்பெண்ணைக் கையால் பிடித்திழுத்துக் கொண்டு வந்து, ‘அம்மா இவளோட முகத்தை நல்லா ஞாபகம் வச்சுக்கோ. நான் பிறகொரு நாள் வந்து விஷயத்தைச் சொல்றேன்’ என்றான். அதுதான் ஒரு மகன் அம்மாவின் மீது வைத்திருக்கும் மரியாதையின் அளவு. எவ்வாறாயினும், பின்னர் ஒருபோதும் அந்த இளம்பெண்ணைக் குறித்து அவன் ஏதும் கூறாததால், அவளே அதைக் குறித்து நினைவுபடுத்தியது, ஒரு தாயாக, தான் பெற்றெடுத்த பிள்ளை மீது பொறுப்போ அல்லது பாச உணர்வோ இருந்ததால்தான்.

“அவள் மெடிகல் ஃபெகல்டில இருக்கிறாள். என்னோட கூட்டாளிட ஆன்ட்டியோட மகள். கூட்டாளி வீட்டுப் பார்ட்டில அவளைச் சந்திச்சேன். எனக்கு அவளைப் பிடிச்சிருக்கு.”

ஒரு பிள்ளை வயதுக்கு வந்த பிறகு சுயாதீனமாவது என்பது வியப்புக்குரியதல்லதான். என்றாலும், உடலைப்பற்றி யோசித்துப் பார்க்காமல் கழுத்தை அறுத்துப் போட்டதுபோல சுயாதீனமாவது எவ்வளவு தந்திரமானது?!

மகன், புதிய காதலியொருத்தியைத் தேடிக் கொண்டதை விடவும், திருமதி. ரணசிங்கவுக்குக் கவலையைத் தந்தது, தனக்கு முன்பே மகன் தனது தந்தையிடம் புதிய காதலியைப் பற்றிய விவரங்களைச் சொல்லி அவளது புகைப்படத்தைக் கூட அவருக்கு அனுப்பி வைத்திருந்ததை அறிந்து கொண்டதும்தான்.

மகன், பெண்பிள்ளையொன்றை வீட்டுக்குக் கூட்டிக் கொண்டு வந்து அறிமுகப்படுத்தியதைச் சொல்வதற்கு ஒரு நாள் திருமதி. ரணசிங்க தனது கணவனைத் தொலைபேசியில் அழைத்து மிகுந்த தயக்கத்தோடுதான் அதைக் கூறினாள். மகனின் ஒழுக்கம் குறித்து கணவர் என்ன நினைக்கக் கூடும்? அவனை வளர்த்திருக்கும் விதம் பற்றி கணவனிடமிருந்து திட்டு வாங்க வேண்டி வருமோ? போன்ற கேள்விகள் மனதுக்குள் அலையடித்துக் கொண்டிருந்தன. ஆனால், அவள் ஏதேனும் கூறுவதற்கு முன்பே கணவன் கூறியது என்ன?

“மகனுக்கு ஒரு பெண்பிள்ளை மேல விருப்பம் வந்திருக்குன்னு நினைக்கிறேன்…”

“ஆமா. என்கிட்ட சொன்னான். போட்டோவும் அனுப்பியிருந்தான். மெடிகல் ஃபெகல்டில படிக்குற பொண்ணு. ரொம்ப அழகான பிள்ள. குடும்பம் கூட நல்ல அந்தஸ்துள்ள குடும்பம்தான். அந்தப் பிள்ளையோட அம்மாவும் ஒரு டொக்டராம். எந்தளவு பொருத்தம்னு பாரு.. அந்தப் பிள்ளையோட அப்பாவும் எலக்ட்ரிகல் எஞ்சினியராம். உண்மையிலேயே மகன் நல்ல மூளைசாலிதான்…”

மூளைசாலி கூட குற்றமிழைத்திருப்பதைத்தானா கணவனிடம் இப்போது சொல்ல வேண்டியிருக்கிறது?

திருமதி. ரணசிங்க, மகனின் வருங்கால மாமியாரிடமிருந்து தனக்கு வந்த தொலைபேசி அழைப்பைக் குறித்து மிகுந்த கவலையோடு நினைத்துப் பார்த்தாள்.

“…இல்ல. அப்படியெல்லாம் நினைக்காதீங்க. நாங்க நல்லா யோசிச்சு, பாரதூரமெல்லாம் பார்த்துத்தான் இந்தத் தீர்மானத்துக்கு வந்திருக்கோம். நாங்க எங்க மகளை ரொம்பக் கவனமா கண்ணுக்குள்ள வச்சு பார்த்துப் பார்த்து வளர்த்திருக்கோம். அடுத்தது, இந்தத் தீர்மானத்தால ரொம்பவே அவமானப்படப் போறது நாங்களும், எங்க மகளும்தான். இருந்தாலும், இந்தக் கல்யாணம் வேணாம்னு மகளே மனசைத் தயார்படுத்திக்கிட்டா. நடந்தது எல்லாம் நல்லதுக்குத்தான்னுதான் நாங்களும் நினைக்கிறோம். ஏதோ போன ஜென்மத்துல என் மகள் செஞ்ச புண்ணியம், கடைசிக் கட்டத்திலாவது கடவுள் எங்களைக் காப்பாத்தியிருக்கார்…”

மகன் என்ன தவறிழைத்தான் என்று கூறாவிட்டாலும் கூட, திருமண வைபவத்தை நிறுத்துமளவுக்கான காரணம் மணமகனது ஒழுக்கம் தொடர்பான பாரிய விடயம் ஏதோவொன்று என்பதைப் புரிந்து கொள்ள திருமதி. ரணசிங்கவால் முடிந்தது.

“பசங்க, பொண்ணுங்க காதலிக்குறாங்க, பிரியுறாங்க… இது சாதாரண விஷயம்தான். ஆனா ஒரு பையன், கல்யாணத்துக்கு எல்லாமும் தயாரான நிலைமைல, வைபவம் இவ்வளவு பக்கத்துல நெருங்கியிருக்குறப்ப ஒரு பொம்பளைப் பொறுக்கின்னு தெரிய வந்த பிறகும், சமூகம் என்ன சொல்லுமோன்னு பயந்துக்கிட்டு எங்க மகளைப் பலியாக்க நாங்க விரும்பல. அவ்வளவுதான் என்னால சொல்ல முடியும்…”

திருமதி. ரணசிங்க மனதைக் கல்லாக்கிக் கொண்டு, மகனைத் திருமணம் முடிக்கவிருந்த அந்த இளம்பெண்ணைச் சந்திக்கத் தீர்மானித்தாள். எந்தப் பிரச்சினையாக இருந்தாலும், ஏதேனுமோர் இடத்தில் அதைத் தீர்க்க முடியுமென்றால் அந்தச் சந்தர்ப்பத்தைத் தவிர்த்து விடுவது பெரும் பிழை. மனதைச் சரிப்படுத்திக் கொண்ட திருமதி. ரணசிங்க, புறப்படும் முன்பு மகனிடம் சொல்லி விட்டுச் செல்ல வேண்டுமா என்று யோசித்துப் பார்த்து பிறகு தேவையில்லை என்று முடிவுக்கு வந்தாள்.

திருமதி. ரணசிங்க முதன்முதலாக, தான் தனியாக எடுத்த தீர்மானத்தைக் குறித்து மகிழ்ச்சியடைந்தாள். கவலை, வலி இவற்றுக்கு மத்தியில், மகன் இரண்டாம் தடவையும் அருமையான வைரமொன்றை இழந்து விட்டிருப்பதாக அவளுக்குத் தோன்றியது.

“… ஆன்ட்டி, உங்களை நினைச்சுப் பார்த்தா எனக்கும் கூட ரொம்பக் கவலையாத்தான் இருக்கு. எனக்கு உங்களை ரொம்ப பிடிச்சிருக்கு. இருந்தாலும் ஆன்ட்டி, நெருப்புல எரியப் போறோம்னு தெரிஞ்சுக்கிட்டே, நெருப்பைக் கட்டியணைச்சுக்க முடியாது, இல்லையா? அவர், நாம கற்பனை பண்ணிக் கூட பார்க்க முடியாத ஒரு ஆள். எனக்கு ஒருபோதும் அவர் மேல சந்தேகமே வந்ததில்ல. அவர் வேறொரு பெண்பிள்ளையைக் காதலிச்சிருந்தாக் கூட என்னால அதைப் புரிஞ்சுக்க முடியும். ஆனா ரெண்டு பிள்ளைகளோட தாயொருத்தியோட அவர் வச்சிருக்குற தொடர்பு.. அது  என்னன்னு யோசிச்சுப் பார்க்க முடியும், இல்லையா? தகவல் கிடைச்சதுமே நாங்க அதை நம்பல. அப்பாதான் அதுக்குப் பின்னால தொடர்ச்சியா விசாரிச்சுப் பார்க்கத் தொடங்கியிருக்கார். வார இறுதி நாட்கள் ரெண்டுலயும், ரெண்டு பேரையும் ஒண்ணா ரெண்டு இடத்துல வச்சு என்னோட அப்பாவே நேர்ல பார்த்திருக்கார். ஒரு நாள் நுவரெலியாவுல. இன்னொரு நாள் ஹலாவத்தையில. என்னோட மனசுல அவர் மேல தோன்றியிருக்குற அருவருப்பை ஒருபோதும் அழிக்க முடியாது, ஆன்ட்டி.. இப்போதைக்கு  என்னால இன்னொருத்தரைக் கல்யாணம் பண்றதையும் நினைச்சுக் கூடப் பார்க்க முடியல. வருங்காலத்துல என்ன நடக்குமோ தெரியாது. நாங்க நாலு வருஷத்துக்கும் மேலா காதலிச்சிட்டிருந்தோம். அவரை எந்தளவு நம்பியிருந்தேன்? எனக்கு இந்த வாழ்க்கையைப் பற்றி இப்ப வெறுப்பே வந்துடுச்சு. தற்செயலாக் கூட இனிமேல அவர் என் கண் முன்னால தோன்றக் கூடாதுன்னுதான் இப்பல்லாம் நான் பிரார்த்திச்சிட்டிருக்கேன்…”

சரத் விஜேசூரிய

பிரபல சிங்கள எழுத்தாளர். கொழும்புப் பல்கலைக் கழகத்தில் சிங்களப் பிரிவு பேராசிரியராகவும் கடமையாற்றுகிறார். நாவல்கள், சிறுகதைகள், கவிதைகள், சிறுவர் நூல்கள், கட்டுரைகள், இலக்கிய நூல்கள், சுய முன்னேற்ற நூல்கள், மொழிபெயர்ப்புகள் என நூற்றுக்கும் அதிகமான நூல்களை எழுதியிருக்கிறார்.

உரையாடலுக்கு

Your email address will not be published.