பேராசிரியர் அ. ராமசாமி, திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத் தமிழியல் துறையில் பேராசிரியராகப் பணியாற்றி ஓய்வுபெற்றவர். கல்விப்புலம் சார்ந்தவராக மட்டுமல்லாமல் நிகழ்காலத் தமிழ் இலக்கியம், அரசியல், கலை, பண்பாடு சார்ந்த சிற்றிதழ்களில் 1983 தொடங்கிக் கட்டுரைகள் எழுதி வருவதன் மூலம் திறனாய்வாளராகவும் அறியப்படுபவர். தொடர்ச்சியாக ஈழ இலக்கிய புத்தகங்களை வாசித்து அது பற்றி எழுதிவருபவர்.அவருடனான மின்னஞ்சல் வழியான நேர்காணல் இது.
தமிழ் இலக்கியத்தில், ஈழ இலக்கியத்தை எப்படி மதிப்பிடுவீர்கள்? தற்கால போக்கை எப்படி பார்க்கிறீர்கள்?
மரபுத்தமிழ் இலக்கியப்பரப்பில் ஈழத்தமிழ் இலக்கியம் என்ற அடையாளப்படுத்துதல் இல்லை. தமிழ் இலக்கிய வரலாற்றை எழுதுவதில் காத்திறமான பங்களிப்புச் செய்துள்ள கனகசபைப்பிள்ளை, ஆ.வேலுப்பிள்ளை, கா.சிவத்தம்பி போன்ற இலங்கைப் பேராசிரியர்களே கூட தமிழகம், இலங்கையென எல்லாப்பரப்பையும் ஒன்றாகக் கருதியே இலக்கியவரலாற்றை எழுதியிருக்கிறார்கள். மொழிமையவாதத் தமிழ்ச்சிந்தனையை தேச எல்லை அடிப்படையில் பார்க்கும் பார்வையை உருவாக்கிய காலம் காலனிய ஆதிக்கம் நிலவிய காலம். காலனி ஆதிக்கத்திலிருந்து விடுபட வேண்டும் என்ற நோக்கம் தலையெடுத்த பின்னரே தமிழக இலக்கியப்போக்கும், ஈழத்தமிழ் இலக்கியப்போக்கும் வேறுபடுகிறது.
நெகிழ்ச்சியான மரபுக்கவிதைக்குள் சமகாலப் பெரும்போக்குகளான தேசியவாதம், தமிழியம், கல்வி, பெண் நிலையை மாற்றுதலுக்கான சீர்திருத்தங்கள் போன்றவற்றை எழுதிய சி.சுப்பிரமணிய பாரதி, கவிமணி தேசிகவிநாயகம் பிள்ளை, நாமக்கல் கவிஞர், பாரதிதாசன், அவரது பரம்பரையினர் போன்ற அடையாளங்கள் கொண்ட கவிதைகளுக்கும் ஈழத்து மறுமலர்ச்சிக்காலக் கவிதைகளுக்கும் வேறுபாடுகளும் விலகல்களும் உண்டு. சாதியப்பிளவுகள், கோயில் நுழைவு, வர்க்கப்பிரச்சினை போன்ற பொருண்மைகளை எழுதிய கவிதைகளை ஈழத்து மறுமலர்ச்சிக் கவிதைக்குள் வாசிக்க முடிகிறது. மஹாகவி, நீலாவாணன்,இ.முருகையன், சில்லையூர் செல்வராசன் போன்றவர்களின் கவிதைகளுக்கு ஒருவித உள்ளூர்த்தன்மைகள் உண்டு. அதனைத் தமிழகத்துக் கவிகளிடம் காண முடியாது. அங்கிருந்துதான் ஈழத்துத் தமிழ் இலக்கியம் தனி அடையாளம் தொடங்குகிறது. கவிதை வடிவத்தில் அதன் நீட்சியை இன்றுவரை- போர்க்காலம், போருக்குப்பிந்திய அலைவுறுகாலம் வரை அந்த விலகல் நீள்கிறது. புனைகதைப் பரப்பின் தொடக்க நிலையில் தமிழக வணிக எழுத்தின் பாதிப்பு அங்கேயும் இருந்ததாக இலக்கிய வரலாற்றை எழுதியவர்கள் குறிப்பிடுகிறார்கள். (இருபதாம் நூற்றாண்டு ஈழத்துத்தமிழ் இலக்கியம்- சி. மௌனகுரு, மௌ. சித்திரலேகா & எம். ஏ. நுஃமான்) தமிழகத்தைப் போலவே அறநெறிக்கதைகள், குடும்பக் கதைகள், திகில் மற்றும் துப்பறியும் கதைகள் எழுதும் போக்கும் இணைநிலையாகவே இருந்துள்ளன. அதிலிருந்து விலகலைச் செய்த போக்காக மல்லிகை இதழின் கவனக்குவிப்புகளும் கே.டானியலின் சாதியப்பிளவைப் பேசிய புனைகதைகளும், மலையகச் சிக்கல்களைப் பேசிய எழுத்துகளும் ஈழத்துப் புனைகதைப்பரப்பைத் தமிழ்நாட்டு எழுத்துகளிலிருந்து வேறுபடுத்தியுள்ளன. நாடக முயற்சிகளில் தமிழ்நாட்டிற்கு முன்பே தமிழ் அடையாளங்களை உருவாக்கும் இசைக்கூறுகளும் கவிதை மொழியைப் பயன்படுத்துதல் போன்றனவும் அங்கு தொடங்கிவிட்டன தொடங்கிவிட்டன.
ஈழத்தமிழ் இலக்கியத்தின் தற்காலப் போக்கு என்பதில் இருபெரும் காலகட்டங்களும் மூன்றுவிதமான போக்குகளும் இருப்பதாக நினைக்கிறேன். போருக்கு முந்திய காலகட்டம்; போரும் போருக்குப்பின்னுமான கால கட்டங்கள். போருக்கு முந்திய காலகட்டத்தில் தனித்த அடையாளங்களை உருவாக்கிய ஈழத்தமிழ் எழுத்துகளில் தமிழ்நாட்டைப்போலவே மறுமலர்ச்சி இலக்கியம், இட துசாரி முற்போக்கு இலக்கியம், அகவய உணர்வுகளைப் பேசிய இலக்கியங்கள் போன்றன இருந்தன. அதே காலகட்டத்தில் தமிழ்நாட்டில் தோன்றிய வட்டார இலக்கியங்களையொத்த மலையக அடையாளத்தை முன்வைத்த எழுத்துப் பனுவல்களும் வாசிக்கக் கிடைத்தன. இவ்வகைப் போக்குகள் அனைத்தையும் போர்க்காலமும் போருக்குப்பிந்திய அலைவுறு காலமும் ஒன்றாக்கி விட்டன. எல்லாவற்றையும் போரோடு தொடர்புபடுத்திப் பார்க்க வேண்டிய நெருக்கடியை உண்டாக்கிவிட்டது. அதற்குள் போரியல் எழுத்துகள், புலம்பெயர் அல்லது அலைவுறு எழுத்துகள், போரிலிருந்து விலகிய எழுத்துகள் என வகைப்படுத்தலாம்.
போரியல் எழுத்துகளில் வெளிப்பட்ட போரின் நியாயங்களையும் தேவைகளையும் நம்பிக்கையளிப்பையும் புலம்பெயர் எழுத்துகள் கேள்விக்குள்ளாக்கியுள்ளன. போரிலிருந்து விலகிய எழுத்துகள் என நான் குறிப்பிடுவது மலையகப்பகுதியிலிருந்தும் இசுலாமியர் வாழும் கிழக்கிலங்கைப் பகுதியிலிருந்தும் வரும் எழுத்துகள். இலங்கை இசுலாமியக் கவிதைகளின் மொழியும் கவனக்குவிப்பும் ஒருவிதத் தத்துவ உள்ளடக்கத்தையும் மென்மையான அழகியல் மொழியையும் வாசிக்க முடிகிறது. நிறையப் பெண்கள் எழுத வந்துள்ளதாகத் தோன்றுகிறது. தொடக்கநிலைப் புனைகதைக்காரராக இருந்தபோதிலும் பிரமிளா ப்ரதீபன் போன்றோரின் புனைவுகளில் பெண்களின் அகம் சார்ந்த கேள்விகள் விவாதப்பொருளாகிறது. கடந்த பத்தாண்டுகளில் எனது வாசிப்புக்குக் கிடைத்த இலங்கைத் தமிழ் எழுத்துகள் வழியாகவும் போருக்குப் பின் இருமுறை- முதல் முறை 15 நாட்களும் (2016 செப்டம்பர்) இரண்டாவது முறை 20 நாட்களும் ( 2019 டிசம்பர் -2020 ஜனவரி) தமிழர் பகுதிகளுக்குச் சென்று வந்தபோது அங்கிருந்த இலக்கிய நண்பர்களோடும் பேராசிரியர்களோடும் திறனாய்வுப்பார்வை கொண்ட வாசகர்களோடும் உரையாடிப் பெற்ற செய்திகளின் வழியாகவும் இம்மூன்று போக்குகளை அடையாளப்படுத்துகிறேன்.
போரியல் மற்றும் புலம்பெயர் எழுத்துகள் அளவுக்கு இல்லையென்றாலும் கணிசமான இசுலாமியப் பகுதி எழுத்துகளும் வாசிக்கக் கிடைக்கின்றன. போர்க்காலத்தில் தமிழ்ப் போராளிக்குழுக்களாலும் அரசபடைகளாலும் நெருக்குண்ட வாழ்க்கையையும் வாழ்வாதாரத்திற்காக அரபுப்பகுதி நாடுகளுக்குப் புலம்பெயர்தலுக்குத் தள்ளப்பட்ட எளிய இசுலாமியக் குடும்பங்களின் கதைகளைப் புனைகதைகளும், இசுலாமியச் சமயச் சொல்லாடல்களையும் இறை நம்பிக்கையின் மீதான ஈர்ப்பையும் கேள்விகளையும் கவிதைகளும் முன்வைக்கின்றன. தமிழ் இலக்கியப்போக்கையும் வரலாற்றையும் எழுதும் பொறுப்பு என்னிடம் ஒப்படைக்கப்பட்டால் கடந்த கால் நூற்றாண்டுத் தமிழ் இலக்கிய வரலாற்றில் செம்பாதியை ஈழத் தமிழ் இலக்கியத்திற்கே வழங்குவேன் என ஒரு தடவை சொன்னதைத் திரும்பவும் சொல்ல விரும்புகிறேன்.
ஈழத்தில் நிகழ்ந்து முடிந்த யுத்தம் மிகக் கொடூரமாது. பெரும்பலான போர்களுக்கு அரசியலும், மதமும் காரணங்களாக இருக்கின்றன. ஈழமும் அதற்கு விதிவிலக்கு அல்ல. அரசியல் பிளவுகள், குழு மனப்பான்மையாலும் பலர் படுகொலை செய்யப்பட்டார்கள், புலம் பெயர்ந்தார்கள். இந்தப் பின்னனியில் எழுதப்படும் உரைநடை புனைவுகள் இப்போது அதிகமாக வெளியாகின்றன. அவற்றை வாசிக்கும்போது, யுத்தத்துக்குள் வெளியே வாழ்ந்த உங்களால் எப்படி மதிப்பிட இயல்கிறது?
போருக்குப் பின்னர் வந்த நாவல்கள் போர்க்காலத்தையே அதிகம் எழுதின. ஈழத்தமிழர்களுக்கான தனி நிலம்; அதனை அடைவதற்கான போரில் நடந்த உள் முரண்பாடுகள், அழித்தொழிப்புகள், அரசியல் நிலைபாடுகள் போன்றவை குறித்து எனக்கொரு பார்வை இருந்தபோதிலும் பெரும்பாலான போர்க்காலப்புனைவுகளை எழுதியவர்களின் கோணத்திலிருந்தே வாசித்துப் பேசவேண்டும் என்று கருதியிருக்கிறேன். அப்படி நினைப்பது கல்விப்புலப்பார்வை. அந்தப் பார்வை எழுதியவர்களின் நோக்கம் பனுவலுக்குள் எவ்வளவு தூரம் நிறைவேறியிருக்கிறது என்று கண்டறிந்து சொல்லும். அதே நேரத்தில் அவர்களின் எழுத்து முன்வைக்கத் தவறிய இலக்கியவியலின் பொதுவிதிகளைச் சுட்டிக்காட்டவும் செய்யும். இந்தப் புரிதலோடு போரின் கள நிலவரத்தை – போரில் ஈடுபட்ட போராளிகளின் சாகசங்களை – போரின் அழிவுகளை- இடப்பெயர்வை – வாழ்வாதார வெளிகளின் அழிவைத் துல்லியமாகவும் இயற்பண்புவாதப் பார்வையுடனும், நடப்பியல் நுட்பத்துடனும் எழுதிய பனுவல்களை வாசித்துக் காட்டியிருக்கிறேன்.
கனடா, யார்க் பல்கலைக்கழகத் தமிழியல் ஆய்வு மாநாட்டில்(2016) ஆய்வுக்கட்டுரை வாசிப்பதற்காக ஐந்து ஆண்டுகளில் ( 2011-2016) வந்த 12 நாவல்களை வாசித்தேன். விமல் குழந்தைவேலின் கசகறணம், சயந்தனின் ஆறாவடு, ஆதிரை, தமிழ்க்கவியின் ஊழிக்காலம், ஸர்மிளா ஸெய்யித்தின் உம்மத், குணாகவியழகனின் நஞ்சுண்ட காடு, விடமேறிய கனவு, அப்பால் ஒரு நிலம், தேவகாந்தனின் கனவுச்சிறை, சாத்திரியின் ஆயுத எழுத்து, சோபாசக்தியின் BOX கதைப்புத்தகம், சேனனின் லண்டன்காரர் ஆகியன அந்நாவல்கள். இப்பன்னிரண்டில் நாவல் என்னும் இலக்கிய வடிவத்திற்குத் தேவையான அடிப்படைக்கூறுகள் இல்லாத போதும் அதன் பிரச்சினைப்பாடுகள் சார்ந்து முக்கியப்படுத்த நினைத்தேன். அதே அணுகுமுறையை இப்போது வாசிக்கும்போதும், வாசித்துக் கருத்துரைக்கும்போதும் செய்வதில்லை.
இப்போதெல்லாம், எழுத நினைக்கும் வடிவத்திற்கும் சொல்ல நினைத்த பொருண்மைக்கும் ஒருங்கிணைவுத்தன்மை இருக்கிறதா? என்பதை முதன்மையாகப் பேச நினைக்கிறேன். அதனைச் சரியாகச் செய்யும் எழுத்தாளர்களைக் கவனித்துச் சொல்கிறேன். திரும்பவும் திரும்பவும் போர்க்காலத்தை எழுதுவதால் உண்டாக்க நினைக்கும் உணர்வுகள் குறித்துக் கேள்விகள் இருக்கின்றன. வெளியிலிருந்து வாசிப்பவர்களிடம் வெற்று இரக்கத்தையும் அனுதாபங்களையும் பெறக்கூடிய இவ்வகை எழுத்துகள் அலுப்பானவை; போலச்செய்பவை என்று சொல்வதில் தயக்கம் இல்லை.
போரினால் நேரடியாக பாதிக்கப்பட்டவர்கள், அதன் அரசியல் கோணத்தையும் எழுத விரும்புகிறார்கள். அந்த அரசியல் கோணம் கொடுக்கும் முக்கியத்துவம், ஒற்றைப்படையான வாசிப்புக்கு இழுத்துச் செல்வதாக இருப்பதை எப்படி பார்க்கிறீர்கள்?
இந்தக் குற்றச்சாட்டில் பெருமளவு உண்மை உண்டு. அதே நேரம் போர்க்கள அனுபவத்தை எழுதிய எழுத்துகளில் வேறுபாடுகளும் உண்டு. எழுத்துகள் வெளிப்படும் தர்க்கம் அறிவுசார்ந்தனவாக மட்டுமே இருக்கவேண்டும் என்பதல்ல. அப்பாவித்தனமான தர்க்கமும் ஏற்பும் ஈடுபாடும் கூடக் கவனிக்கப்பட வேண்டியன என்றே நினைக்கிறேன். வாசிப்பு என்பது வேறுபட்ட சொல்முறையையும் உணர்வுருவாக்கத்தையும், நோக்கங்களை அடையும் முயற்சிக்காக மொழியின் நுட்பத்தைப் பயன்படுத்தும் விதங்களையும் அறியும் நோக்கம் கொண்தாக இருக்க வேண்டும். அத்தகைய வாசிப்பைக் கோராமல் வாசித்துக்கொண்டிருக்கும்போது நினைவிலிருந்து விலகிச் செல்லும் எழுத்துகளைக் கவனிக்க வேண்டியதில்லை. வெற்றிச்செல்வி அனுபவத்தை எழுதியதற்கும் தமிழ்க்கவி எழுதியதற்கும் வேறுபாடுகள் இருக்கின்றன. தமிழினியின் முன்வைப்புக்கும் குணா கவியழகனின் முன்வைப்புக்கும் வேறுபாடுகள் இருக்கின்றன. போரும் காதலும் என்னும் தமிழ் இலக்கியத் தொன்மக்கலவையைச் சரியாகத் தந்துள்ள தமிழ் நதியின் பார்த்தீனியம் வாசிக்கப்படவும் விவாதிக்கப்படவும் வேண்டிய புனைவாகவே இருக்கிறது. தனித்துவமான மொழி மற்றும் இன அடையாளத்துக்கான தனிநாடு என்ற லட்சியத்தை முன்னிறுத்தி நடந்த ஆயுதப்போரில் ஈடுபட்ட இளைஞர்களின் தொடக்கநிலை விலகல், சேர்ந்தியங்கும்போது உண்டாகும் ஈர்ப்பும் கொண்டாட்டமும், தலைமைக்குக் கட்டுப்பட்ட அர்ப்பணிப்பு, தேர்ந்த மதிநுட்ப வெளிப்பாடு எனத்தொடர்ச்சியாக எழுதிக்காட்டிய குணா கவியழகனின் தேர்ந்த சொல்முறைமையை வெறும் சித்திரிப்பு என்று ஒதுக்கிவிட முடியாது என்றே நினைக்கிறேன். பல ஆயிரம் பேரின் கொலைக்குக்காரணமான போரென்னும் என்னும் மகாப்பேரழிவைச் சித்திரங்களாகத் தீட்டிப் போருக்கு வெளியேயிருக்கும் வாசகர்களுக்குக் கடத்தும் நுட்பங்களுக்காகக் குணா கவியழகனின் எழுத்துமுறைமையை எப்போதும் வியந்து வாசிக்கப்பட வேண்டிய ஒன்று. தனித்தனியாகவும் ஒன்றாகவும் வாசிக்கும்போது ஒருவிதக் காவிய வடிவத்தைக் கண்டடையமுடியும் என்றே சொல்வேன்.
ஓர் இலக்கியப்பனுவலை – அதற்குள் உருவாக்கப்படும் கதை சொல்லி அல்லது பாத்திரங்கள் எந்தக் கோணங்களிலிருந்து முன்வைக்கின்றன எனக் கண்டறிந்து வாசித்தால் ஆதரவு நிலைபாட்டையும் எதிர்நிலைபாட்டையும் புரிந்துகொள்ள முடியும். மெய்ம்மைகளின் பக்கம் நிற்பது எழுத்தின் அறம். மெய்ம்மைகள் சூழலுக்குக் கட்டுப்பட்டது என்ற போதிலும் மனம் சரியானதின் பக்கம் நிற்கச் சொல்லும். அதைச் செய்யாமல் தவறிய இலக்கியப் பனுவல்கள் போர்க்காலத்தைப் பற்றி நிறைய வந்துள்ளன; போருக்குப் பின் போரை எதிர்த்தவர்களின் எழுத்துகள் – எதிர்நிலையில் நிறைய வருகின்றன.
இன்று போர் சார்ந்து அதிகம் எழுதப்படும் நாவல்கள், வாசிக்கும்போது அதிர்ச்சியை கொடுக்கிறது. இந்திய தமிழர்களுக்கு குற்ற உணர்ச்சியையும் அளிப்பதாக சொல்கிறார்கள். பத்திரிகை செய்திகள், சனல் 4 காணொளிகள் இதே அதிர்ச்சியை கொடுக்கக் கூடியது. கலை இவற்றில் இருந்து மாறுபட்டது. மேலதிகமாக ஒன்றை அளிக்கக்கூடியது. அந்த மேலதிகத் தன்மை இல்லாமல் வெறுமே சித்தரிப்புகளாக ஈழத்து இலக்கியம் இருப்பதை உங்களால் உணர இயல்கிறதா? நான்கு நாவல்களின் எழுத்தாளர்களின் பெயர்களை மறைத்துவிட்டு கொடுத்தால் வேறுபாடுகளை கண்டுபிடிக்கவே கடினமாக இருக்கும் நிலை தோன்றுகிறதே?
30 ஆண்டுக்காலம் நடந்த போரின் காட்சிகள் உலகத்தின் எந்த மூலையில் எந்த மொழி பேசுகிறவர்களாக இருப்பவர்களுக்கும் குற்றவுணர்வை ஏற்படுத்தவே செய்யும்; செய்யவேண்டும். உலகத்தின் ஒரு பகுதி மக்கள் நவீன வாழ்க்கையின் வசதிகள் அனைத்தையும் இழந்து, உயிர் பயத்தோடு சொந்த மண்ணைக் கைவிட்டுவிட்டு இன்னொரு இடம்தேடி அலைபவர்களாக ஆக்கப்பட்டதைக் காணாமலும் கண்டிக்காமலும் தீர்வு காணும்படி அரசதிகாரத்தை நெருக்கடி தராமலும் இருந்த குற்றச்செயல் ஒவ்வொருவரையும் தாக்கவே செய்யும். இதனைத் தனது தாய்மொழியைப் பேசும் ஒரு கூட்டம் சந்தித்தது என்கிறபோது இந்தியத் தமிழர்களுக்குக் கூடுதல் குற்றவுணர்வு உண்டாவதைத் தவிர்த்துவிட முடியாது. தங்கள் நாட்டு அரசும் சேர்ந்து இந்தக் கொடூரம் நடப்பதற்கு உதவியது என்பதால் அந்தக் குற்றவுணர்வு கொந்தளிப்பாக ஆகும் நிலை உருவாகும். இதனைத் தமிழ்நாட்டில் வாசிக்கக் கிடைத்த இலக்கியப்பனுவல்கள் செய்யவில்லை. ஊடகக் காட்சிகளும் செய்திப்பத்திரிகைகளின் எழுத்துகளுமே செய்தன.
திரட்டப்பட்ட எதிர்ப்புணர்வின் மனசாட்சியாக இலக்கியம் செயல்பட்டிருக்க வேண்டும். ஆகக் கூடிய சித்திரிப்புகளின் வழியாக உருவாகும் ஈர்ப்போடு, சித்திரிப்பை ஒட்டி எழுப்பப்படும் விவாதங்களே வாசிப்பவர்களின் மனச்சாட்சியைக் கேள்விக்குள்ளாக்கும். அந்தப் பணியைப் போர்க்கள – போர்க்காலப் புனைவுகள் குறைவாகவே செய்தன. போர் தொடங்கியதின் காரணங்களையும் வரலாற்றுப் பின்னணிகளையும் முன்வைத்ததோடு உள்முரண்பாடுகளையும் போராளிக் குழுக்களின் மீதான ஐயப்பாடுகளையும் அதிகம் எழுப்பின. எதிரிகளையும் எதிர்ச்சக்திகளையும் அடையாளப்படுத்துவதிலும் கவனம் செலுத்திய பதிவுகளின் தொகுப்பாகப் புனைகதைகள் எழுதப்பெற்றுள்ளன. அதனால் அந்நாவல்களில் புனைவின் அழகியலும் கருத்தியல் விவாதங்களும் திரளாமல் ஒருவித வரலாற்று நூல்களின் தன்மை வந்துசேர்ந்திருக்கிறது. பக்க எண்ணிக்கையில் அதிகம் இருக்க வேண்டுமென நினைக்கும்போது இந்த ஆபத்து நடக்கும். அதனைத் தாண்டிப் போராளிகளோடு பொதுமக்கள் இணைந்து நின்ற காட்சிகளை – களங்களைத் தரும் பதிவுகளைப் புனைகதைகள் எழுதிக்காட்டவில்லை. ஈழத்தமிழ் மக்கள் போர்க்களத்தில் வகித்த பங்களிப்புகள் பற்றியும் ஆதரவு நிலைப்பாடுகள் பற்றியும் அதிகம் வாசிக்கக் கிடைக்கவில்லை. அரசப்படைகளால் துரத்தப்பட்டும், போராளிக்குழுக்களால் சந்தேகத்தோடு பார்க்கப்பட்டும் வாழ வேண்டிய நெருக்கடியில் மக்கள் பெரிதும் அச்ச உணர்வுடன் வாழ நேர்ந்ததாகவே பதிவாகியுள்ளன.
இந்தக் கேள்விக்கு நேரடியான பதில் இல்லை என்றாலும் இதனைச் சொல்லத்தான் வேண்டும். தமிழ்நாட்டுத்தமிழர்கள் காட்டும் ஆதரவும் இருப்பதாகச் சொல்லும் குற்றவுணர்வும் ஒருவிதப்பாவனையானது என்பது என் கணக்கு. மொழி சார்ந்த தொப்புள்கொடி உறவு என்பதான பாவனை அவ்வப்போது தோன்றி மறையும் நீர்க்குமிழிகள் போன்றது.
உள்ளூர்த் தமிழர்கள் மீது காட்டப்படும் சாதிய ஒடுக்குமுறை சார்ந்த வன்முறை, ஆதிக்க கொலைகள், பெண் வெறுப்பு போன்றவற்றைக் கண்டும் காணாமல் ஒவ்வொன்றுக்கும் வெவ்வேறு காரணங்கள் சொல்லி ஒதுங்கிக் கொள்ளும் தமிழ்நாட்டுத் தமிழர்கள் ஈழத்தமிழர்கள் மீது காட்டும் பாவனையான குற்றவுணர்வு மட்டும் எப்படி உண்மையானதாக இருக்கும் என்ற கேள்விகள் எனக்குண்டு.
போர்கால இலக்கியத்தை எப்படி வரையறை செய்யலாம்?
காலத்தை அடிப்படையாகக் கொண்டுதான் வரையறை செய்யவேண்டும். போர்க்காலம் என்பது முதல் துப்பாக்கிச் சத்தம் தொடங்கிய நாளிலிருந்து தொடங்கிக் கடைசிக்குண்டு இதுவென அறிவிக்கப்பட்ட நாள் வரையிலான காலம் அல்ல. எந்தவொரு போருக்கும் முன்னும் பின்னுமான நிகழ்வுகளும் இயங்குநிலைகளும் இருக்கவே செய்யும். அதனை இலக்கியம் காலத்தாழ்த்தியே பதிவு செய்யும். இலங்கையில் தமிழர்கள் அறவழிப்போராட்டங்களைக் கைவிட்டு ஆயுதப் போராட்டத்தை நோக்கி நகர்த்திய அரசியல் நகர்வுகள், உரிமை மறுப்புகள், இனவாத முன்னெடுப்புகள் எல்லாம் போர்க்கால இலக்கியத்தின் பகுதிகள் என்றே சொல்லலாம் தேர்தல் அரசியலில் பெரும்பான்மையை உருவாக்கப் பயன்படும் இனவாதம், மதவாதம், மொழிவாதம் ஆகியவற்றின் இயங்குநிலைகளோடுதான் போர்க்கால இலக்கியத்தை வரையறை செய்ய வேண்டும். அந்த வரையறையை செய்யும்போது ஒரு தேசத்தின் பரப்புக்குள் நிகழ்வதாக – நிகழ்ந்ததாக வரையறை செய்துவிட முடியாது. . இருமுனை உலகப் பார்வைகள் முடிவுக்கு வந்த பின்பு தேசிய அரசுகள் பலமானதாகத் தோன்றினாலும் அவை ஒவ்வொன்றும் பாதுகாப்பின்மையை உணர்ந்தே உள்ளன. அதனால் தேசம், தேசிய இனம் என்ற கட்டுமானங்களின் அழிவையும் புரிந்துகொள்ள வேண்டும். புலம் பெயர்ந்து வரும் தொழிலாளர்களின் உழைப்பைச் சுரண்டும் நோக்கம் கொண்ட நவகாலனிய நாடுகள் அதனை மறைத்துக் காருண்யமான கரிசனைகளை வெளிப்படுத்துவதில் உலகமயத்தின் தேவைகள் இருக்கின்றன. அவரவர் மொழியைத் தக்கவைத்துக் கொண்டே வெவ்வேறு நாடுகளில் சின்னச் சின்னக் குழுக்களாகச் சின்னச் சின்ன வெளிகளில் வாழ அனுமதிக்கப்படுவார்கள். அங்கிருந்தபடியே அவரவர்களின் சொந்த மண்ணில் வாழ்ந்த காலத்தை நினைவுகளில் புதுப்பித்துக் கொண்டே இருக்கலாம்.அப்புதுப்பு சில தலைமுறைக்குத் தொடரலாம். ஏற்றுக்கொண்ட தேசங்களின் மொழியின் பயன்பாட்டிற்கு மாறிவிடும் தலைமுறைகள் உருவாகும்போது நினைவுகளும் இல்லாமல் போய்விடும். இந்த வரையறை, இலங்கையில் நடந்த போர்க்காலத்தை எழுதுவது சார்ந்த வரையறை மட்டுமல்ல ; பெரும்போர்களையும் புலப்பெயர்வுகளையும் சந்தித்த நாடுகளின் இலக்கியங்களுக்கான வரையறை.
போரின் நேரடியான அழிவுச் சித்தரிப்பு திரும்பத்திரும்ப எழுதப்படும் அளவுக்கு, போர் கொடுத்த தாக்கத்தின் அடுத்த கட்ட பிறழ்வுகள் ஏற்படுத்திய விளைவுகள் எழுதப்படுவதில்லை என்ற விமர்சனம் எனக்குண்டு. உங்கள் வாசிப்பில் மாறுபட முடிகிறதா?
எனது வாசிப்பில் நான் மாறுபடவே செய்கிறேன். தமிழ் ஈழப்பகுதியில் போர் தொடங்கிய காலத்திலிருந்து ஈழம் குறித்த இலக்கியப் பனுவல்களை வாசித்த வாசிப்பு என்னுடையது. போரியல் எழுத்துகளின் தொடக்கப் பனுவல்கள் பாதிக்கப்படுகிறோம்; ஒதுக்கப்படுகிறோம்; அடக்கப்படுகிறோம்; அச்சத்திலும் கொலை பயத்திலும் இருக்கிறோம் என்பதைச் சொல்ல ஏற்ற வடிவமாகக் கவிதையைக் கைக்கொண்டன. மரணத்துள் வாழ்வோம், வேற்றாகி நின்ற வெளி போன்ற தொகுப்புகளின் கவிதைகள் அப்படியான குரல்களைக் கொண்டிருந்தன. அதே கவிதை வடிவம் போரை மறுக்கும் கருவியாகவும் வெளிப்பட்டதைச் சக்கரவர்த்தி போன்றவர்களிடம் வாசிக்க முடிந்தது. ஈழத்திலிருந்து வந்தவைகள் அணிதிரட்டலையும் விடுதலைப்புலிகளின் தலைமைத்துவ இருப்பையும் போரியல் உத்திகளையும் கொண்டாடிப் பாராட்டும் நிலைபாட்டைக் கொண்டிருந்தன. புலம்பெயர் தேசங்களிலிருந்து வந்த இதழ்களிலும் இந்தப் போக்கு தூக்கலாக இருந்த போதிலும் போரைக் கொண்டாடும் மனநிலைக்கு மாறான குரல்களும் வரத்தொடங்கின. ஆதரவாகவும் எதிராகவும் யுத்தத்தை எழுதியவர்களுக்கேற்ற வடிவமாக இருந்த கவிதை வடிவத்தின் போதாமை உணரப்பட்ட நிலையில்- இயக்கங்களின் உள்முரண்பாடுகளைப் பேச முடியாமை உணரப்பட்டபோது இயல்பாகவே புனைகதையைத் தேட வேண்டியது நிகழ்ந்திருக்கலாம்.
தமிழ்ப்போராளிக்குழுக்களின் உள் முரண்பாடுகளையும், சிங்களப்பேரினவாத அரசின் படைகளும், இந்திய அமைதிப் படையும் தந்த நெருக்கடிகளையும் விவரிக்கவும் விவாதிக்கவும் சிறுகதைகளும் நாவலும் ஏற்ற வடிவமாக உணரப்பட்டபோது போர்க்களம் உச்சநிலையை எட்டியிருந்தது. வாசிக்கக் கிடைத்தவையெல்லாம் இணையப் பதிவுகளாகவும் புலம்பெயர்ந்த நாடுகளிலிருந்து தொகுக்கப்பட்ட பெருந்தொகுப்புகளாகவும் இருந்தன. அவை எனது வாசிப்புக்கு வந்துசேரக் காரணமானவர்கள் இருவர். ஒருவர் ஈழத்திலிருந்து புலம் பெயர்ந்து லண்டனில் வாழும் பத்மஞாப ஐயர்; இன்னொருவர் ஈழப்போராட்டங்களின் ஆதிமுதல் இன்றுவரை சாட்சியாக இருந்துகொண்டிருக்கும் கவி.கருணாகரன். தபாலில் அனுப்பப்பட்ட நூல்களாகவும் பிடிஎப் வடிவத்தில் அனுப்பப்பட்டனவாகவும் என்னிடம் இருப்பனவற்றை வாசித்ததைக் கொண்டே இந்த இந்தக் குறிப்புகளைச் சொல்கிறேன். அய்யர் பெரும்பாலும் நூல்களையே அனுப்பித் தந்தார். கருணாகரன் இணையம் வழியாகப் பிடிஎப் வடிவப்பனுவல்களை அனுப்பினார்.
இலண்டனிலிருந்து தமிழர் நலன்புரிச்சங்கம் சார்பாக வெளிவந்த யுகம் மாறும் -1999 தொகுப்பு தான் எனக்கு அறிமுகமான முதல் தொகுப்பு. அதில் நானொரு கட்டுரை எழுதினேன். அதே காலகட்ட த்தில் சரிநிகரில் எனது எழுத்துகள் மறுபிரசுரம் ஆனது. அய்யரின் தொடர்பினால் அவர் தொகுத்த தொகுப்புகளும் மற்றவர்களின் தொகுப்புகளும் கிடைக்கப்பெற்றேன். சுகன்& சோபாசக்தி முன்னெடுப்பில் வந்த தொகுப்புகள், கனடாவிலிருந்து வந்த தொகுப்புகள், உயிர்மெய் வெளியீடு, வடலி வெளியீடு, அம்மா இதழ் வெளியீடுகள், கூர் வெளியீடுகள், ஊடறு வெளியீடுகள், போர்க்காலக் கதைகள் எனப் பலவற்றை எனக்குக் கிடைக்கச் செய்தவர் அய்யர் தான். சென்னையில் காலச்சுவடு பதிப்பக விற்பனையகம் தீவிரமாகச் செயல்பட்ட காலத்தில் மொத்தமாக எனக்கு அனுப்பித் தரும்படி சொன்னதாக 27 நூல்களை அனுப்பித்தந்தார்கள். பனியும் பனையும், கண்ணில் தெரியுது வானம், கறுப்பு, குவர்னிகா, சனதருமபோதினி, இருள்வெளி,வெயில் காயும் பெருவெளி முதலான தொகுப்புகள் வழி அறிமுகமான இலக்கியப் பனுவல்களும் ஈழப்போர்க்கால நிலைமைகளை ஒற்றைப் பரிமாணத்தில் காட்டுவதற்குப் பதிலாகப் பலவிதப் போக்குகள் நிலவுவதைச் சொல்லிய பனுவல்கள். அவற்றை நிதானமாக வாசிக்கும் எவரும் தமிழ் வெகுமக்கள் இதழ்களும் வாக்கு அரசியல் கட்சிகளும் எடுக்கும் தீவிர ஆதரவு மனநிலையை எடுக்கத் தயங்கவே செய்வர். அந்தத் தீவிர மனநிலையே ஈழப்போராட்டம் பற்றிய தமிழகப் பொதுப்புத்தியாக இன்றளவும் நீள்கின்றது.
ஈழம்: போரும் போருக்குப் பின்னும் என்ற யார்க் பல்கலைக்கழக க்கருத்தரங்கிற்கான நீண்ட கட்டுரை பற்றி முன்னர் குறிப்பிட்டேன். அந்தக் கட்டுரைக்காக வாசித்த எழுத்தாளர்களின் நாவல்களைத் தாண்டி தமிழ்நதி, தமிழினி, நோயல் நடேசன், இளங்கோ, அகரமுதல்வன், தாமரைச்செல்வி, ஈழவாணி, ரவி, சி.வி விஜிதரன் எனப் பலரது நாவல்கள் வாசிக்கக் கிடைத்துள்ளன; நானே வாசித்தவைகளும் என்னிடம் ஆய்வு செய்யும் ஆய்வாளர்கள் வாசித்து என்னோடு விவாதித்த நாவல்களும் உள்ளன. இவற்றையெல்லாம் குறித்துத் தனித்தனியாக எழுதவேண்டும். வாசிப்பதையெல்லாம் எழுதவேண்டுமா? என்ற கேள்வி எழுவதால் தள்ளிப்போட்டுவிடுகிறேன். ஈழவாணி தொகுத்த காப்பு என்ற பெண்களின் சிறுகதைத் தொகை நூலுக்காக 100 -க்கும் அதிகமான கதைகளை வாசித்திருப்பேன். காலச்சுவடு, உயிர்மை, காக்கைச் சிறகினிலே, டிஸ்கவரி புக் பேலஸ் ஆகியன நடத்திய புனைகதைப் போட்டிகளிலும் நடுவராக இருந்தபோது வாசிக்கக் கிடைத்த ஈழம்/ புலம்பெயர் தொடர்பான புனைவுகள் பற்றியும் எழுதியதில்லை. அதே நேரம் நான் வாசித்த சிறுகதைகள் பலவற்றைக் குறித்து அவ்வப்போது எழுதிவிடுகிறேன். ஈழ/ புலம்பெயர்ப் புனைவு எழுத்துகளுக்கு முக்கியத்துவம் தரும் ஆனந்த விகடனிலும் காலச்சுவடு, அம்ருதா, உயிரெழுத்து, உயிர்மை முதலான மாத இதழ்களிலும் எதுவரை, நடு, யாவரும், கனலி, வல்லினம் முதலான இணைய இதழ்களிலும் கிடைக்கும் சிறுகதைகளை வாசித்து அவ்வப்போது எனது வலைப்பூவில் குறிப்புகள் எழுதிவருகிறேன்.
அதனடிப்படையில் இப்போது ஈழத்து/ புலம்பெயர் எழுத்துகள் பெரும் நகர்வைச் செய்துகொண்டிருக்கின்றன என்பதை உணர்கிறேன். நினைவுகளில் ஈழத்து வெளியும் போர்க்கால நினைவுகளும் இருந்தபோதும் போருக்குப் பிந்திய வாழ்க்கை உருவாக்கியுள்ள நெருக்கடியையும் புலம்பெயர் வாழ்வு ஏற்படுத்தும் உளவியல் /பண்பாட்டியல் நெருக்கடிகளும் எழுத்துகளாக வரவேண்டியவை என்று உணரத்தொடங்கியிருப்பதைக் கவனிக்கிறேன். நிதானமாகவும் புலம்பெயர் தேசங்களின்/ மேற்கத்தியப் பண்பாடு உருவாக்கியுள்ள வாழ்க்கையை இணையாக வைத்துப் பார்க்கும் பக்குவமும் தங்கள் மரபின் மீதும் பண்பாடு என்று நம்பிய சடங்குகள் மீதும் கேள்விகள் உருவாகியிருக்கின்றன.
அதனைப் பதிவுசெய்யும் பல சிறுகதைகள் இப்போது வந்துகொண்டிருக்கின்றன. போர்க்காலம் முடிந்து பத்துப்பன்னிரண்டு ஆண்டுகள் முடிந்துவிட்ட நிலையில் திரும்பத் தாய்நாட்டிற்குப் போகவேண்டும் என்ற நினைப்பு எழாமல் இருப்பதை ஒரு குற்றவுணர்வாகக் கருதுவதோடு, அக்குற்றவுணர்வு மனத்தைச் சந்திக்க முடியாமல் உளவியல் பிரச்சினைகளை எதிர்கொள்ளும் பாத்திரங்களை இப்போது புலம்பெயர் எழுத்தாளர்கள் எழுதுகிறார்கள். அனோஜன் பாலகிருஷ்ணன், ப.தெய்வீகன், இளங்கோ, கறுப்பு சுமதி, ஸ்ரீரஞ்சனி கருணாகரமூர்த்தி, சோபா சக்தி, கலாமோகன், உமையாள், நெற்கொழுதாசன், மாலினி, மயூ முதலானவர்களின் புனைகதைகள் இவ்வகைப்பொருண்மைகளை முன்வைக்கின்றன. இவர்களில் ப.தெய்வீகனும் அனோஜனும் கதை சொல்வதில் லாவகத்தோடும் புதிய பரப்பிற்குள் நுழையும் ஆர்வத்தோடும் இருக்கிறார்கள். வாசிக்கக் கிடைக்கும் ஒவ்வொரு கதையிலும் புதுமை இருக்கிறது. அண்மையில் நான் வாசித்த சயந்தனின் அசேரா இவ்வகையான பொருண்மையில் நாவல் வடிவில் முக்கியமான பனுவலாகச் சொல்வேன். ஒரு மொழியின் இலக்கியம் பல தளங்களில் விரிவடைகின்றது என்பதை அம்மொழிக்கான நல்வரவாக நினைக்கப்படவேண்டும். இதையெல்லாம் எழுதுகிறார்களே என்று பார்ப்பதை நான் விரும்புவதில்லை. இதன் மூலம் உலகத்தமிழ் இலக்கிய வரைபடம் ஒன்றை உருவாக்க முடியும் என்று நம்புகிறேன். அவ்வரைபடத்திற்குப் புலம்பெயர் இலக்கியங்களுக்குள் உருவாகும் எல்லாவகைப் போக்குகளும் முக்கியத்துவம் பெறும்.
உலகமயத்திற்கும் இணையத்திற்கும் பிறகான இக்காலகட்டத்தில் இலக்கிய விமர்சன மரபும், மதிப்பீட்டு அணுகுமுறைகளும் வாசக ரசனையும் பிரத்யேகமாக வெவ்வேறு நிலங்களுக்கேற்ப வேறுபட்டு நிலவுவதற்கு வாய்ப்பு குறைந்து செல்கிறது. முன்னமும் ரசனை அப்படி இருந்ததில்லை என்று நம்புகிறேன். அது பொதுவானது. ஈழ இலக்கியம் சார்ந்த உரையாடல்களில் பிரிவினைகள் வலிந்து புகுத்தப்படுகிறது. இது இலக்கியத்திற்கு எதிரானது அல்லவா?
இணையம் உலகமயத்திற்கான கண்டுபிடிப்பு; அதனை வேகமாகப் பரப்பும் கருவி. நில எல்லைகளை இல்லாமலாக்கி, எல்லோரும் அருகாமையில் இருப்பதாக நம்பச்செய்யும் மாயாபஜார் பூதம் அது. மதுரையில் நடக்கும் இலக்கியக்கூட்டத்திற்குக் கோயில்பட்டியிலிருந்து கிளம்பிவரும் வாசகரின் அதிகாலைப் பயணத்தையும் கூட்டம் முடிந்தபின் நடக்கக் கூடிய கொண்டாட்ட நிகழ்வுகளையும் இல்லாமலாக்கி விட்டன இப்போது நடக்கும் ஸூம், வெப்னார் வழிக்கூட்டங்கள். உலகமயம் பொருளியல் மற்றும் நுகர்வியத்தில் ஒரேமாதிரியான மனிதர்களாக ஆக்கும் நோக்கம் கொண்டது. வாசிப்பையும் நுகர்வியத்தின் பகுதியாக மாற்றும் வினையை வேகமாகச் செய்து வருகிறது. ஒவ்வொரு மாதமும் வீட்டுக்கு வந்த நடுவாந்திர இதழ்களில் அதிகம் 25 சிறுகதைகள் வாசிக்க க்கிடைத்தன. இப்போது இணைய இதழ்கள் வழியாக மாதம் 50 கதைகளுக்கும் மேல் கிடைக்கின்றன. அவற்றைப் பதிவேற்றம் செய்யும் இதழ்களின் ஆசிரியத்துவமும் இலக்கியப் பார்வையும் என்னவென்று இதற்கு முன் அறியப்படாதவை; அவர்களின் எழுத்தின் வழி நிறுவப்படாதவை. எல்லாத்தரப்பையும் வாசிக்கத் தரவேண்டும் நல்லெண்ணம் வெளிப்படுகிறது. அதனைப் புரிந்துகொண்டே வாசிக்கவேண்டும். வாசிப்பவர்கள் தேர்வு செய்து வாசிக்கவேண்டும் என்ற நெருக்கடி இருக்கிறது. அதே நேரம் முகநூல் போன்ற அன்றாட கருத்துக்கூறல் பரப்பில் உடனடியாகச் சொல்லிவிட வேண்டும் என்ற ஆசையில் விமர்சனப்பார்வை காணாமல் பொய்விடுகிறது. வெறும் குறிப்புகளும் பாராட்டுகளும் எழுதியவர்களுக்கும் இணைய இதழாசிரியர்களுக்கும் போதுமானதாக இருக்கிறது. வாசிப்புக்குள் இருக்கும் தரவேறுபாடுகளைக் குறைத்துக்கொண்டே வந்த வெகுமக்கள் இதழியலின் வேலையை இப்போது இணையத்தின் வருகை வேகப்படுத்தியுள்ளது. ரசனையின் நுட்பம், கருத்தியல் நிலைபாட்டுத்திறனாய்வு, வகைப்பாட்டுத் தேர்வுடன் கூடிய பகுப்பாய்வுகள் எல்லாம் கானல் நீர்தான்.
ஈழ அரசியலைப் பற்றிய சொல்லாடல்களே பிரிவினைகளை முன்வைத்து விவாதிக்கும் சொல்லாடல்களாக மாறிவிட்ட சூழ்நிலையில் ஈழ இலக்கியம் சார்ந்த உரையாடல்களிலும் பிரிவினைகளைத் தேடிக்கண்டடைந்து விவாதிப்பதும் நடக்கவே செய்யும். அத்துடன் இந்தியக் கலையியல் பார்வையில் இருக்கும் இரண்டு போக்குகளை இங்கே குறிப்பிட்டுச் சொல்லலாம் என நினைக்கிறேன். சம்ஸ்க்ருதம் சார்ந்த கலையியல் பார்வை ஒருபடித்தான இலக்கை முன்னெடுக்கும் இலக்கியவியல் பார்வையைக் கொண்டது. துவைதா, விசிச்டாத்வைத எனச் சமயச் சொல்லாடல்களை முன்வைத்தாலும் கலையியலில் அத்வைத நிலையை ஏற்றுக் கடவுளை நோக்கிய பயணத்தை மனிதர்களுக்குப் பரிந்துரைக்கக்கூடியது. அக்கலையியல் குற்றமனத்தின் ஈடேற்றம் என்னும் ஐரோப்பிய மரபு மனத்தோடு நெருக்கமானதும் கூட. சம்ஸ்க்ருதக் கலையியலுக்கும் அரிஸ்டாடிலின் வழியாக உருப்பெற்ற ஐரோப்பியக் கலையியலுக்கும் ஓர்மைதான் அதன் இலக்கு.
தமிழ் அழகியல் என்பது வேற்றுமையின் தனித்துவங்களைக் கொண்டாடக்கூடியது. அகம் புறமெனவும், எழுவகைத் திணை எனவும் இலக்கியப் பாகுபாடுகளை வகுத்துக் கொண்டு அதனதன் அளவில் ரசித்துவிட்டு ஒதுங்கக்கூடியது. காவ்யதர்சமென்னும் தண்டியலங்காரத்தின் முன்னோடிப் பனுவல் பிற்காலத் தமிழ் இலக்கியத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. ஆனால் தண்டியலங்காரத்தை அடியொற்றாத சிலம்பிலும் மணிமேகலையிலும் காவ்ய ஓர்மைகள் உருவாக்கப்படவில்லை என்பதைப் புரிந்துகொள்ளவேண்டும்.
ஈழ இலக்கிய திறனாய்வில் பாரிய தேக்கம் நிகழ்ந்திருக்கிறது. அதேபோல ஈழ இலக்கியங்களை அனுதாபத்தோடு அணுகும் போக்கை தமிழகமும் அதிகம் கொண்டிருப்பதாக தோன்றுகிறது. இந்த அனுதாபத்தை எப்போது தமிழகம் களையும்?
ஒட்டுமொத்தமாகவே தமிழ் இலக்கியத்திறனாய்வில் தேக்கம் நிகழ்ந்திருக்கிறது. இந்த நூற்றாண்டின் தொடக்கத்தில் ஏற்பட்ட அந்தத் தேக்கம் இன்னும் முடியவில்லை. இந்த த்தேக்கத்தின் பின்னணியில் இலக்குகளற்ற இலக்கியவியல் பார்வைகளும், திறனாய்வு அணுகுமுறைகளும் காரணம் என நினைக்கிறேன். இருபதாண்டுகளுக்கு முந்திய நவீனத்துவப் பனுவலாக்க முறைகளுக்கும், திறனாய்வுப் பார்வைகளுக்கும் சில இலக்குகள் இருந்தன. அந்த இலக்குகளை முன்வைத்துத் திறனாய்வு செய்யப்படும் பனுவல்களை வாசித்து அடையாளப்படுத்தும் பணியைத் திறனாய்வாளர்கள் மேற்கொண்டனர்.
நடப்பியல்வாதத்தை முன்மொழிந்த எழுத்துமுறைமையே நவீனத்துவத்தின் தொடக்கநிலை. அதிலிருந்து விலகலாகத் தோன்றிய குறியீட்டியல், மனப்பதிவியல், வெளிப்பாட்டியல், அபத்தவியல், குரூரவியல் முதலான இலக்கியவியல் பார்வைகளும் தனித்த ஆக்கமுறைமைகளை முன்வைத்துப் பனுவலாக்கங்களை முன்னெடுத்தவை. அவ்வாறு முன்னெடுக்கப்பட்ட கவிதை, புனைகதை போன்றவைகளின் கலையியல்/ அழகியல் கூறுகளைக் கண்டுபிடித்துச் சொல்லும் திறனாய்வுக்கு மதிப்பும் மரியாதையும் இருந்தது. அதன் தொடர்ச்சியாக அமைப்பியல் வாதம் இலக்கியத்தை வாசித்துக் காட்டியதையும் புரிந்துகொள்ளவேண்டும். அதனைச் செய்தவர்கள் இலக்கியப் பனுவல்களின் மீது தங்கள் புலமைப்பார்வையைச் செலுத்துவதை இலக்கிய வாசிப்பனுவமாகவும் வியப்பிற்குரிய ஒன்றாகவும் கொண்டாடிய காலகட்டம் இருபதாண்டுகளுக்கு முன்பே முடிந்துவிட்டது. இலக்கியத்தின் தரத்தை உறுதிசெய்வது- வரிசைப்படுத்துவது எனச் செயல்பட்ட கலை கலைக்காக குழுவினர்கள் கூட இந்தக் கலையியல்/ அழகியல் வழியாகப் பனுவல்களின் இலக்கின் மீது விவாதத்தை முன்வைத்தே தங்கள் இலக்கியத்தரத்தை நிறுவினார்கள். அப்படி நிறுவுவதில் ஒரு புலமைத்துவம் வெளிப்பட்டது. அதனால் திறனாய்வு உயிர்ப்புடன் இருப்பதாக உணரப்பட்டது.
கலையியல்/ அழகியல் பார்வைகள் வழி திறனாய்வைப் புலமைத்துவச் செயல்பாடாகக் காட்டியதுபோலவே இலக்கியப்பனுவல்களைப் பிறதுறை அறிவோடு வாசிக்கத் தூண்டிய மார்க்சிய இலக்கியப்பார்வை, உளவியல் இலக்கியப்பார்வை ஆகிய இரண்டும் எழுத்தாளர்/ ஆசிரியர் வேறொன்றின் விளைவால் பனுவல்களை உருவாக்குகிறார்கள் எனப் பேசின. இவ்விரண்டின் முன்னோடி அறிவுப்புலங்களான சமூகவியல் பார்வையும், மானுடவியல் மற்றும் தொன்மவியல் இலக்கியப்பார்வைகளும்கூட அப்படித்தான் பார்க்க/ வாசிக்கத் தூண்டின. அப்படியான வாசிப்புகள் பனுவல்களை பகுப்பாய்வு செய்து இதனால் – இப்படி எழுத்தாக்கப்பட்டிருக்கலாம் என்ற ஐயங்களையும், எழுத்தாக்கப்பட்டிருக்கின்றன என்று ஐயத்தைத் தவிர்த்த உறுதித்தொனியிலும் விமரிசனக் கருத்துகளை முன்வைத்தன. இவ்வறிவுப்புலங்களை உள்வாங்கித் தனித்த அடையாளங்களாக வடிவம் கொண்ட தலித்தியப்பார்வையும், பெண்ணியப்பார்வையும்கூட அதே பகுப்பாய்வை முன்வைத்து முடிவுகளைச் சொல்லத் தயங்கியதில்லை. பின் நவீனத்துவக் காலம் அடையாளங்களையும் தற்செயல்களையும் கொண்டாடும் நோக்கம் கொண்ட காலம். அங்கு முடிவான இலக்குகளுக்கு இடமில்லை. இதனைக் கருத்தியலாக உள்வாங்கிப் பனுவலாக்கங்கள் நடந்துள்ளன. ஆனால் அதனை உள்வாங்கிப் பேசும் திறனாய்வாளர்கள் என அடையாளப்படுத்திக் கொள்ளும் திறனாய்வாளர்கள் இன்னும் உருவாகவில்லை.
ஈழத்தமிழர்கள் மீதும் ஈழ இலக்கியங்கள் மீதும் தமிழகம் காட்டும் அனுதாபமும் ஈடுபாடுகளும் தற்காலிகத்தன்மையானதே. அவ்வப்போது தோன்றி மறையும் குற்றவுணர்வைப் போன்றதே. புதியனவற்றைப் பேசுவதின் வழியாகத் தங்களின் இருப்பைக் காட்ட முடியும் என்ற நோக்கங்களும் இருக்கக்கூடும். அத்தோடு வணிக நோக்கங்களும் இதில் செயல்படவே செய்கின்றன.
அனோஜன் பாலகிருஷ்ணன்
தமிழில் இளைய தலைமுறைப் படைப்பாளிகளில் குறிப்பிடத்தக்க சிறுகதை ஆசிரியர். இரண்டு சிறுகதைத் தொகுப்புக்கள் வெளியாகியிருக்கின்றன. இலக்கிய விமர்சன, மதிப்பீடுகளிலும் தொடர்ச்சியாக ஈடுபட்டுவருகிறார். தற்போது இங்கிலாந்தில் வாழ்கிறார்.