தொன்னூறுகளில் பிறந்தவர்களுக்கு குழந்தைப் பருவத்தில் இந்தியா குறித்தும் தமிழ்ச்சமூகம் குறித்தும் இரண்டு வகையான சித்திரங்கள் கிடைத்தன. ஒன்று காந்தியை மையமாகக் கொண்டு உருவகிக்கப்பட்ட வெள்ளை ஆதிக்கத்தை எதிர்த்து சுதந்திரமடைந்த ஒன்றுபட்ட இந்தியா. மொழி இனம் மதம் என பலவகைப்பட்ட வேறுபாடுகள் நிலவினாலும் இந்தியர் என்ற உணர்வடிப்படையில் மக்களனைவரும் ஒன்றுபட்ட இந்தியா. இந்தக் கதையாடலில் இந்தியா என்ற நிலப்பரப்பு நெடுங்காலமாக உணர்வால் ஒன்றிணைந்திருந்த மக்களைக் கொண்ட பிரதேசம் என்பதும் இடைக்காலத்தில் இந்தியர்களிடையே ஏற்பட்ட மிடிமைகளாலும் மூடத்தனங்களினாலும் இந்த நாடு அந்நியர் – அதாவது ஆங்கிலேயர் – வசம் சென்றதென்றும் இருபதாம் நூற்றாண்டின் லட்சியத் தலைவர்களால் முன்னெடுக்கப்பட்ட விடுதலை இயக்கத்தினால் இந்தியா அந்நியரிடமிருந்து விடுதலைப் பெற்று தன் பண்பாட்டு பெருமைகளை மீட்டு மீண்டும் தன் ‘பழைய’ ஒருங்கிணைந்த நிலைநோக்கிச் செல்கிறது என்றும் சொல்லப்பட்டது.
மற்றொரு கதையாடல் ஒருங்கிணைந்த இந்தியா என்ற யோசனைக்கு எதிரானதாக இருந்தது. இந்தியா தேசத்தில் பெரும்பான்மையினராக விளங்கும் இந்துக்களுக்கு எதிரானதாகவும் இக்கதையாடல் அமைந்தது. இந்து மதத்திலும் இந்தியா தேசத்திலும் நிலவிய ஜாதிய ஏற்றத்தாழ்வுகள் அடக்குமுறைகள் போன்றவற்றை விமர்சித்து ஆங்கிலேயராட்சிக்கு முன்பு இந்தியாவில் சமத்துவம் நிலவவில்லை, இந்தியர்களின் யோசனைகளில் சமத்துவம் என்பதே இருக்கவில்லை என்று அக்கதையாடல் சொன்னது. சமத்துவம் என்பதே ஐரோப்பாவில் ஏற்பட்ட பிரஞ்சு புரட்சி போன்ற அரசியல் செயல்பாடுகளால் பதினெட்டு, பத்தொன்பதாம் நூற்றாண்டுகளில் அங்கு தோன்றி இந்தியாவுக்கு வந்த யோசனை என்றும் அக்கருதுகோளின் முற்போக்குதன்மை காரணமாக அதை நோக்கியே நாம் பயணிக்க வேண்டும் என்றும் இக்கதையாடல் சொன்னது.
தமிழகத்தைப் பொறுத்தவரை முதற் கதையாடலுக்கு காந்தியையும் இரண்டாவது கதையாடலுக்கு பெரியாரையும் குறியீட்டு உதாரணங்களாகக் கொள்ளலாம். காந்தியை பழமைவாதியென்றோ பெரியாரை முழுக்க மரபுகளுக்கு எதிரானவரென்றோ சொல்லிவிட முடியுமா என்பது வேறு விவாதம். ஆனால் காந்தியை ஒருங்கிணைந்த இந்திய தேசத்தின் முகமாகவும் பெரியாரை ஒருங்கிணைந்த இந்தியா என்ற யோசனையின் இடக்கரடக்கல் தன்மையை கேள்விக்கு உட்படுத்துகிறவர்களின் முகமாகவும் தொன்னூறுகளில் பிறந்த என்னைப் போன்றவர்கள் அறிந்திருந்தோம். இந்தியாவில் ஆட்சியில் இருந்த இந்திய தேசிய காங்கிரஸின் வழியாக காந்தியும் தமிழகத்தில் ஆட்சியில் இருந்து திராவிட இயக்க கட்சிகள் வழியாக பெரியாரும் கருத்தியல் தலைமகன்களாக எதிர்கால வழிகாட்டிகளாக நிறுவப்பட்டுக் கொண்டிருந்த காலத்தில் தொன்னூறுகளின் தொடக்கத்தில் தன்னுடைய நூற்றாண்டு விழாவின் காரணமாக அம்பேத்கர் தமிழகத்தின் விவாதத்திற்குள் வந்து சேர்ந்தார். அம்பேத்கரை திராவிட இயக்க கருத்தியல்களுக்கு ஆதரவானவராகவும் காந்திக்கு எதிரானவராகவும் சித்தரித்து தமிழகத்தில் அரசியல் இயக்கமாக வலுவடைந்திருந்த திராவிட இயக்கம் தங்கள் தரப்பில் அம்பேத்கரை இணைத்துக் கொண்டது.
தாரளமய உலகில் முழுமையாக பால்யத்தையும் இளமையையும் கழித்த இன்றைய தமிழ் இளைஞர் தன்னைச் சுற்றி நிகழும் அரசியல் சார்ந்த ஆர்வம் கொண்டவராக இருந்திருப்பின் இவர்கள் மூவரில் யாரோ ஒருவரையோ அல்லது மூவரையுமே கடந்து வந்திருப்பார். ஒருவரை முன்வைத்து மற்றொருவர் மறுக்கப்படுவதை வசைபாடப்படுவதை மட்டந்தட்டப்படுவதை சந்தேகத்துக்கு உட்படுத்தப்படுவதை சந்தேகங்ஙளுக்கு அப்பாற்பட்டவராக நிறுவப்படுவதை கண்டிருப்பார்.
இவர்கள் வழியாக இன்றைய இளைஞரின் சுய அடையாளம் சார்ந்த நினைவுகளில் சில உறுதிப்பாடுகள் ஏற்பட்டிருக்கும். இந்த இளைஞர் திராவிடர்கள் ஆரியர்களால் விரட்டப்பட்டார்கள், தமிழ் திராவிடர்களின் மொழி, சமஸ்கிருதம் ஆரியர்களின் மொழி
ஆகவே ஆரிய சூழ்ச்சியை இனம்கண்டு உன்னதமான திராவிடப் பெருமையை மீட்டெடுக்க வேண்டும் என்று உறுதிப்பாடு கொண்டிருப்பார். அல்லது வணிக நோக்கத்திற்காக இந்தியாவை ஆங்கிலேயர் பிரித்தாண்டனர். இன்று நாம் காணும் பிளவுகளுக்கு ஆங்கிலேயரை காரணம். ஆங்கிலேயர் விதைத்த பிரிவிணை நஞ்சிலிருந்து நாம் வெளியேற வேண்டும் என்றொரு கருத்தினைக் கொண்டிருப்பார். அல்லது இந்தியர்களின் சிந்தனைகளை மரபை எதிர்காலம் சார்ந்த கற்பனைகளை வடிவமைத்திருக்கும் புராணங்களும் தொன்மங்களும் தங்களுடைய கதையுடலை முழுக்க ஜாதிய சாயத்தை பூசிக் கொண்டுள்ளன. இந்த தொன்மங்களிலிருந்து அறிவுப்பூர்வமாக வெளியேறும் ஒருவரே உண்மையில் சமத்துவ உணர்வு கொண்டவராக இருக்க இயலும். ஆகவே இந்த தொன்மங்களை மீண்டும் மீண்டும் நிலைநிறுத்தும் பழக்கங்களிலிருந்து வெளியேற வேண்டும் என்ற உறுதிப்பாடு கொண்டிருப்பார்.
இதில் ஒரு தரப்பு உயர்ந்தது என்றோ மற்றது பிற்போக்கானது என்றோ விவாதிப்பது நமது நோக்கமல்ல. இந்த முரண்படும் தரப்புகள் உருவாவதற்கான காரணங்களைப் பேசவே இவற்றை சுட்ட வேண்டியிருக்கிறது.
2
அதிகாரத்தைக் கைப்பற்றுதல் அதிகார அமைப்பிடம் பேரம் பேசுதல் என்ற இரண்டு போராட்ட வடிவங்களிலும் போராடுகிறவர்கள் தங்களுடைய வரலாற்று பெருமிதத்தை முன்னிறுத்த வேண்டிய தேவை உருவாகி விடுகிறது. (வரலாற்று பெருமிதங்களில் நம்பிக்கையில்லாத மார்க்ஸியர்கள் கூட அரசு உருவாக்கத்துக்கு முந்தைய கம்யூன் வாழ்க்கை என்ற ஒன்றை சுட்டுகிறார்களே!) வரலாறு என்பது பழைய காலத்தில் இருக்கிறது. ஆகவே வரலாற்று ரீதியான போராடும் குழுவின் பெருமிதத்தைப் பேசுவதும் வரலாற்று ரீதியான போராடும் குழுவுக்கு இழைக்கப்பட்ட அநீதியைப் பேசுவதும் பழமையைப் பேசுவதாகவும் இருக்கிறது.
பழமையைப் பேசுதல் என்ற இந்த செயல்பாட்டின்போதுதான் இந்தியர்களாகிய தமிழர்களாகிய நமக்கு எண்ணற்ற பெருமிதங்களும் எண்ணற்ற குழப்பங்களும் கிடைக்கத் தொடங்குகின்றன. ஏனெனில் இந்திய வரலாறு என்று நாம் பேசப் புகுந்தால் அதை ஐயாயிரம் ஆண்டுகள் பின்னே கொண்டு சென்றாக வேண்டும். தமிழ் வரலாறு என்றால் மூவாயிரம் வருடங்களாவது பின்னே போயாக வேண்டும். ஆயிரக்கணக்கான வருடங்களை வரலாற்று காலமாக உருவகித்தால் இவ்வளவு நீண்ட காலவெளியில் ஏற்பட்டிருக்கும் பண்பாட்டு மோதல்களும் பண்பாட்டு வெற்றிடங்களும் நமக்கு திகைப்பையே அளிக்கின்றன. விதவிதமான சிந்தனை முறைகள் விதவிதமான வரலாற்று விளக்கங்கள் எதிர் விளக்கங்கள் என்று ஏராளமானவை வாசிக்கக் கிடைக்கின்றன.
நாம் மிகப் பழமையானது என்று நம்பிய ஒரு பழக்கம் இடைக்காலத்தில் ஏற்பட்டதாகவும் சமீபமானது என்று நம்பும் ஒரு செயல் மிகப் பழையதாகவும் இருக்கிறது. அன்றாட வாழ்க்கையின் ஒவ்வொரு செயலிலும் மரபும் தெய்வங்களும் ஊடாடுகின்றன. கடந்தகாலத்தை தெரிந்து கொள்ளப் புகுந்தால் நாம் தினம் தினம் வாழ்ந்து கொண்டிருக்கும் சுவாரஸ்யமில்லாத இந்த வாழ்க்கைகூட மர்மம் நிறைந்ததாக மாறிவிடும் வாய்ப்பு இருக்கிறது.
பத்தொன்பதாம் நூற்றாண்டில் தொடங்கி இருபதாம் நூற்றாண்டில் இந்தியா முழுவதுமாக மிகுந்த வீச்சுடன் எழுந்த சமூக சீர்திருத்த இயக்கங்களின் முன்பு இந்தப் பழமையை என்ன செய்வது என்ற கேள்வியே பிரதானமாக இருந்தது. பழமை என்பதை பழைய வாழ்க்கை முறை என்று வகுத்துக் கொள்ளலாம். ஆங்கிலேய ஆட்சியினால் ஏற்பட்ட தாக்கங்களால் உற்பத்தி உறவுகள் பெருமளவு மாற்றம் கண்டிருந்தன. ராஜ் கௌதமனின் ‘ஆரம்பகட்ட முதலாளியமும் தமிழ்ச் சமூகமும்’ என்ற ஆங்கில அரசு மேற்கொண்ட விரிவான விவசாய உற்பத்தி பெருக்க நடவடிக்கைகளால் தமிழக ஜாதிய அடுக்குகளில் ஏற்பட்ட மாற்றங்களை விரிவரிக்கும் சிறு நூல் நடைபெற்றுவந்த மாற்றங்களுக்கு ஒரு உதாரணம். பொருளாதாரத்தில் ஏற்பட்ட திடீர் வாய்ப்புகள் சரிவுகள் வறுமையினாலும் தொழில் வாய்ப்புகளாலும் ஏற்பட்ட இடப்பெயர்வுகள் என பத்தொன்பதாம் நூற்றாண்டு ‘புற வாழ்க்கையில்’ பெரிய மாற்றங்களை கொண்டு வந்து சேர்த்தது. அதற்கு ஏற்றபடி சமூகத்தின் அகத்தைப் பழக்குவதும் சுதந்திரம், சமத்துவம் போன்ற கருதுகோள்களை அறிமுகப்படுத்துவதும் அவற்றுடன் இசைவை ஏற்படுத்துவதும் என்ற வகையான பணிகளை அன்றைய சீர்திருத்த இயக்கங்கள் மேற்கொள்ளத் தொடங்கின.
இந்த இயக்கங்கள் தமிழர்களுக்கு அவர்களுடைய பண்பாட்டு புலத்துக்கு வெளியே என்ன நடக்கிறது என்பது சார்ந்த அறிதலை அளித்தன. உலக அளவில் ஏற்படும் மாற்றங்களைப் புரிந்து கொள்ளவும் அவற்றுக்கு ஏற்றதுபோல நெடுங்கால நினைவுகளும் வரலாறும் கொண்ட இந்திய மனதை மாற்றி அமைத்தன. இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இந்தியாவில் வெளியான முக்கியமான நாவல்கள் பலவற்றிலும் இந்த மாற்றத்தின் பிரதிபலிப்பை நம்மால் காண இயலும். ஆனால் சீர்திருத்த இயக்கங்களுக்கு ஒரு எல்லை இருந்தது. சீர்திருத்த இயக்கங்களின் திட்ட வரைவு மேற்கின் சமத்துவ மற்றும் மனிதாபிமான சிந்தனை அடிப்படையிலான அதேநேரம் இந்தியத்தன்மையை முற்றிலும் கைவிட்டுவிடாத ஒரு இந்தியாவை ஸ்தாபிக்க முயன்றன. தமிழகத்தை பொறுத்தவரை இங்கு தோன்றிய சுயமரியாதை இயக்கம் பெரியாரின் தலைமை ஏற்புக்குப் பிறகு முழுமையாக தன்னை மரபை எதிர்க்கும் ஒரு இயக்கமாக நிலைநிறுத்திக் கொண்டது. அவ்வியக்கம் பழமையை முழுமையாக புறக்கணிக்க முற்பட்டது.
இத்தகைய புறக்கணிப்பினால் ஒரு உடனடிப் பலன் விளைந்தது. ஆட்சி முறையும் புற உலகின் இயங்கு முறையும் மேற்கின் விதிகளை ஏற்றுக் கொண்டிருந்தன. ஆகவே மரபுகளை புறக்கணித்துவிட்டு ‘நவீன சிந்தனை’ என்ற பெயரில் மேற்கில் சொல்லப்படுவதை சந்தேகத்துக்கு அப்பாற்பட்டதாக நம்புவதும் ஏற்றுக் கொள்வதும் அன்றைய சாமான்யன் புழங்கிய வெளிக்கு ஏதுவானதாகவே இருந்திருக்கிறது. மரபு சார்ந்த கதைகளையும் தொன்மங்களையும் மறுபரிசீலனை செய்வதற்கு பதிலாக புறக்கணிப்பது எளிதாக இருந்தது. ஏனெனில் மறுபரிசீலனை என்பதன் காலவெளி மிகப் பெரியதாகவும் குழப்பம் நிறைந்ததாகவும் இருந்தது.
இந்தியாவின் வரலாறு எவ்வளவு நீண்டதோ அவ்வளவு மங்கலானதும் கூட. வரலாறு என்ற பெயரில் நம்மால் கதைகளைத்தான் சொல்ல முடிகிறது. ஆங்கிலேயருக்கு முந்தைய இந்தியாவை குறித்த ஆவணங்கள் சொற்பமாகவே கிடைத்திருக்கின்றன. தமிழகத்தைப் பொறுத்தவரை ‘இருண்ட காலம்’ என்று சொல்லப்பட்ட பொது யுகத்தின் முதல் சில நூற்றாண்டுகள் குறித்து புதிய தகவல்கள் தெரியத் தொடங்கி இருக்கின்றன. ஆகவே இந்திய வரலாற்றையும் தமிழ் நில வரலாற்றையும் கிணறென்று உருவகித்தால் அதனை தோண்டும் போது அதிலிருந்து கற்பனைக்கு எட்டாத பூதங்கள் கிளம்பவே வாய்ப்பதிகம். இருண்ட காலம் களப்பிரர் காலமானது அப்படியானதொரு பூதப் பரிணாம வளர்ச்சியே.
தொன்மங்களை எதிர்கொண்டிருக்க வேண்டிய நவீன இலக்கியமும் சுயமரியாதை இயக்கம் போலவே மரபுத் துண்டிப்பை மேற்கொண்டுவிட்டது. தொன்னூறுகளின் இறுதியில் வெளியான ஜெயமோகனின் விஷ்ணுபுரம் நாவல் தமிழ் இலக்கியச்சூழலில் ஏற்படுத்திய தாக்கத்துக்கு அது இந்த பேசாப்பொருளை பேசியது ஒரு முக்கிய காரணம். அந்த நாவல் அதுவரை இலக்கியப்பாத்திரங்களின் அசைவுகளில் சாதியத்தையும் வர்க்க நலம் பேணும் சுயநலத்தையும் நுண்மையாக அவதானித்துக் கொண்டிருந்த அறிவு ஜீவிகள் மத்தியில் ஏகப்பட்ட குழப்பங்களை ஏற்படுத்தியதற்கு அதன் மரபு விசாரணை ஒரு முக்கிய காரணம். விஷ்ணுபுரம் போன்ற நாவலை அது வெளிவருவதற்கு ஒரு அரை நூற்றாண்டுக்கு முன்பே தமிழ்ச்சூழல் எதிர் கொண்டிருந்தால் தமிழ்ச்சூழல் சீர்திருத்த இயக்கங்களிடம் இன்னும் அதிகமாக கோரியிருக்கும். ஆனால் நவீன இலக்கியமும் சுயமரியாதை இயக்கமும் தங்களை முற்றாகத் துண்டித்துக்கொண்டு வேறு வேறு பாதைகளில் நடைபோட்டால் கூட மரபை கைவிடுதல் என்ற புள்ளியில் ஒன்று போலவே யோசித்திருக்கின்றன.
இதுபோன்ற காரணங்களால் தமிழில் பேசப்படும் ஆன்மீகமும் நாத்திகமும் உறுதியற்றவையாக உள்ளன. ஒரு ஆன்மீகவாதியும் நாத்திகரும் கேள்விக்கு உட்படுத்தப்படும்போது ஒரு எல்லைக்கு மேல் மூர்க்கம் கொண்டு இறுகிவிடுகின்றனர். மிகக் கடுமையாக நாத்திகம் பேசுகிறவர்கள் கூட தங்களுடைய கொள்கை உறுதியால் அடுத்த சந்ததியினரை உருவாக்கும் திராணியற்றவர்களாகவே இருக்கின்றனர். அதுபோல ஆன்மீகவாதிகளாலும் அடுத்த தலைமுறையை ஈர்க்க முடியாமல் போகிறது.
நாம் பார்க்க நேரும் சீர்திருத்தம் பேசுகிறவர்களும் ஆன்மீகம் மரபு என்று பேசுகிறவர்களும் உள்நோக்கம் கொண்டவர்களாக நமக்குத் தெரிவார்களானால் அது நம்முடைய பார்வை பிசகு என்று மட்டுமே கொள்ள முடியாது. அப்பிசகில் ஐம்பது சதவீதப் பங்கு தமிழகத்தில் செயல்படுத்தப்பட்ட பெயரளவிலான சீர்திருத்தங்களுக்கும் அதற்கு எதிரான மேம்போக்கான ஆன்மீக பேச்சுகளுக்கும் உண்டு.
காந்தியம், பெரியாரியம், அம்பேத்கரியம் போன்ற தரப்புகள் தமிழ்ச்சூழலில் ஒரே காலத்தில் அறிமுகமானவை அல்ல என்றாலும் இத்தரப்புகள் இன்றைய தமிழ்ச் சிந்தனை பொதுவெளியில் ஒரே காலதூரத்தில் – அதாவது சம்மந்தப்பட்ட ‘இயத்தை’ தோற்றுவித்தவர்கள் ஒரே காலத்தில் உயிரோடு இருந்தார்கள் என்ற அடிப்படையில் – வைத்தே இந்த சிந்தனைகள் அணுகப்படுகின்றன. கோவை ஞானி போன்றவர்கள் இவர்களிடையே பொதுக்கூறுகளை கண்டடைந்த இந்தியாவில் வலுப்பெறும் ‘ஒற்றைப்படையாக்கத்துக்கு’ எதிராக ஒரு சிந்தனையை முன்வைக்க முடியுமா என்று யோசித்தனர். இவர்களுக்கு இடையேயான உள்முரண்களை காணும் போக்கும் இருக்கிறது. ஆனால் அயோத்திதாசர் சிந்தனைகள் தமிழ்ச் சூழலுக்குக அறிமுகமாகி கால் நூற்றாண்டாகப் போகும் இந்த நேரத்தில் அயோத்திதாசரை முன்னிட்டு அவருக்குப் பிறகு பிறந்த மூவரையுமே பழமைவாதிகள் என்றே சொல்ல வேண்டியிருக்கிறது. அயோத்திதாசரை பூதாகரமாக தோற்றப்படுத்தி நிறுவுவதற்காக அல்லாமல் அயோத்திதாசரும் அவர் சார்ந்த எழுத்துக்களும் இருபதாம் நூற்றாண்டின் சமூக சீர்திருத்தவாதிகள் பலரது சிந்தனையையும் கேள்விக்குட்படுத்துகின்றன என்பது ஒரு இயல்பானதாக இருப்பதே இது போன்ற ஒரு வரியை என்னைச் சொல்ல வைக்கிறது.
3
அயோத்திதாசர் மற்றும் அவர் சார்ந்த எழுத்துக்களைப் பற்றி பேசுவதற்கு முன் சென்ற நூற்றாண்டின் சீர்திருத்த சிந்தனைகளின் காலவதித்தன்மையை பேச வேண்டியிருக்கிறது. சிந்தனைச் சூழலில் நவீனத்துவம் உருவாக்கிய ஒளிமங்கலை விடுத்து இருபதாம் நூற்றாண்டை பேசவே முடியாது. காந்தியம் பெரியாரியம் அம்பேத்கரியம் என்றெல்லாம் நாம் உத்தேசிக்கும் போது இந்த இயங்களில் உள்ள தனிமனிதப் பெயர்களைத் தாண்டி இந்த சிந்தனைகள் தொழிற்பட்ட காலத்தையும் இணைத்தே யோசிக்க வேண்டியிருக்கிறது. இவர்களுடைய சிந்தனைகள் பேசப்பட்ட காலமென இருபதாம் நூற்றாண்டின் பிற்பகுதியைச் சொல்லலாம். உலகப் போர் முடிந்த சோர்வு மேற்கையும் ஏகாதிபத்தியத்தின் முடிவையொட்டிய உற்சாகம் கிழக்கையும் ஆட்கொண்டிருந்த காலம். ஆனால் மேற்கின் சிந்தனை செல்வாக்கு காரணமாக மேற்கின் பதற்றமும் சோர்வும் கிழக்கிலும் உருவானது. அதிகாரம் பற்றிய பதற்றம் போர் குறித்த வெறுப்பு ‘கடவுள் கொல்லப்பட்ட நிலை’ எதையும் தர்க்கப்பூர்வமாக வகுத்துப் பொருள் கொண்டுவிட முடியும் என்றும் அப்படி பொருள் கொள்வதற்கு அப்பால் ஏதுமில்லை என்ற எளிய அறிவியல் மதவாதிகளின் ஆழமான நம்பிக்கை என்றும் நவீனத்துவத்தின் முகம் தலைகாட்டத் தொடங்கிய காலகட்டம் அது. காந்தியர்கள் பெரியாரியர்கள் அம்பேத்கரியர்கள் என அனைவரிடமும் நவீனத்துவத்தின் நேர்மறையான அல்லது எதிர்மறையான எதிர்வினை இருந்திருப்பதை இப்போது உணர முடிகிறது. காந்தியர்கள் நவீனத்துவ சூழல் உருவாக்கிய பொருளின்மையில் இருந்தும் வறட்சியிலிருந்தும் தப்பிக்க ‘தொடர்ந்து செயல்புரிதல்’ என்ற வழிமுறையைக் கையாண்டனர். அம்பேத்கரியர்கள் ‘சமூக ஆய்வுகள்’ வழியாக தப்பித்துக் கொள்ள முயன்றனர். பெரியாரியர்களுக்கு தப்பித்தல் என்பது ‘உடைத்து வீசுதல்’ என்ற புரட்சிகர பாவனையாக இருந்தது.
சிந்தனையளவில் இவர்கள் அனைவருமே பெருங்கதையாடல் என்ற ஒன்றை கற்பனை செய்வதை உணர முடியும். சமத்துவம் நிலவும் சமூகம், வன்முறையற்ற சமூகம், அறிவை ஆயுதமாக ஏந்திய சமூகம் என்று இவர்கள் கற்பனை செய்யும் சமூகம் நவீனத்துவத்தின் மையப்பொருளியல் வாதம் அல்லது மனிதமைய வாதத்தின் புனிதப்படுத்தப்பட்ட எதிர்வினைகள் மட்டுமாகவே இன்று தெரிகின்றன.
இவர்களுடைய சிந்தனைகளும் எழுத்துக்களும் சமூகம் சார்ந்த புரிதல்களில் புதிய வெளிச்சங்களை பாய்ச்சின என்பதை மறுக்க முடியாது. ஆனால் சிந்தனை நதியைப் போல ஓடிக்கொண்டே இருக்க வேண்டியிருக்கிறது. சிந்தனையோட்டம் நிகழும் சமூகத்திலேயே வன்முறை குறைவாக இருக்கிறது. வரலாறு சார்ந்த ஒற்றைப்படையான புரிதலைக் கொண்டிருக்கும் சமூகங்களும் அப்படியான புரிதலைக் கொண்டவர்களை முன்னிறுத்துகிறவர்களை தங்கள் முகமாகக் கொண்ட சமூகங்களும் பேரழிவுகளை விளைவிக்கவும் தங்களுக்கென்றே விளைவித்துக்கொள்ளவும் செய்திருக்கின்றன என்று கடந்தகாலங்கள் நமக்குத் தெரிவிக்கின்றன. காந்தியையோ அம்பேத்கரையோ பெரியாரையோ எந்த அளவுக்கு நல்லெண்ணத்துடனும் உணர்ச்சிகரமாகவும் நாம் அணுகுகிறோம் என்றும் அந்த நல்லெண்ணமும் உணர்ச்சிகரமும் அவர்களுடைய சிந்தனைகளை மதிப்பிடுவதில் நம்மீது எவ்வளவு தாக்கத்தை செலுத்துகின்றன என்றும் கேட்டுக்கொள்ள வேண்டிய ஒரு காலத்திற்கு வந்து சேர்ந்திருக்கிறோம். அயோத்திதாசர் பற்றி பேச வேண்டிய தேவை கூட இந்த நல்லெண்ண உறைநிலையில் இருந்தே எழுகிறது.
4
வரலாற்றை அல்லது கடந்தகாலத்தை அணுகுவதற்கான முறையியல்களும் தொழில்நுட்பங்களும் அதிகரித்தபடியே இருக்கின்றன. பத்தொன்பதாம் நூற்றாண்டு குறித்து இருபதாம் நூற்றாண்டில் வாழ்ந்தவர்களை விட நமக்கு ‘அதிகம்’ தெரியும் என்று இதனை சொல்லிப் பார்க்கலாம். காந்தியைப் பற்றி அவரின் சமகாலத்திலும் அவர் இறந்த உடனேயும் எழுதப்பட்டவற்றை விட எழுபதாண்டுகள் கழித்து ராமச்சந்திர குஹா எழுதியிருக்கும் வாழ்க்கை வரலாறு நம்பகத்தன்மையும் சமநிலையும் கொண்டதாகத் தெரிகிறது. ஒரு நூற்றாண்டுக்கு முன்பிருந்ததைப் போல கல்வெட்டுகள், சுவடிகள் போன்றவற்றைத் தாண்டி வழக்காறுகள், தொன்மங்கள் போன்றவற்றையும் யோசித்தே இன்று நேற்றைப் பற்றின வரலாற்றை எழுத முடியும். வரலாற்றுத் தர்க்கத்திற்குள் இதுபோன்ற புதுக்காரணிகள் வந்து சேரும்போது வரலாற்றின் இறுக்கம் குறைகிறது. மேலும் காலங்கழித்து எழுதப்படும் வரலாறு தன்னுடலில் இதுவரை எழுதப்படும் காலம் குறித்து நடந்த விவாதங்களுக்கான பதிலையும் தன்னுள்ளே கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கலாம்.
இந்தப் பின்னணியில் வைத்தே அயோத்திதாசரின் மறுவருகை தமிழ்ச்சூழலில் புரிந்து கொள்ளப்பட்டது. கல்வி என்பது ஒரு விடுதலை கருத்தியல் என்பது சார்ந்த ஆழமான சந்தேகங்கள் உருவாகிவிட்டிருந்தன. ‘படித்தால் முன்னேறினால் சமத்துவம் வந்து விடும்’ என்று படித்த முன்னேறிய ஒரு தலித்தால் ஒத்துக்கொள்ள முடியவில்லை. காந்திய லட்சியவாதம் போன்ற காரணிகளால் மங்கியிருந்தது போலத் தோற்றம் தந்த ஜாதிய வன்மம் முழு வீச்சுடன் மீண்டும் தலையெடுக்கத் தொடங்குவதை எவ்வடையாளங்களெல்லாம் அருவருக்கத்தக்கவை என்று நவீனத்துவ சீர்திருத்தவாதிகளால் சொல்லப்பட்டதோ அவ்வடையாளங்களெல்லாம் திரும்ப தங்களை பெருமிதமாக காட்டிக்கொண்டு தலையெடுப்பதை ‘படித்து முன்னேறிய’ தலித் குழப்பத்துடனும் அதிர்ச்சியுடனும் பார்த்துக் கொண்டிருந்தார். கல்வி அவருக்குக் கொடுத்த பகுத்தறிவு பிரச்சினை இன்னும் சிக்கலானது என்று புரிந்து கொள்ள மட்டுமே உதவியது. அதாவது உண்மையான சீர்திருத்தத்தை நோக்கி இன்னும் ஒரு அடிகூட நாம் எடுத்து வைக்கவில்லை என்பதை அவர் கண்டு கொண்டார். இந்தப் புரிதலை அடைந்த தலித் வரலாற்றை எவ்வகையாக கற்பனை செய்வாரோ அப்படியான வரலாறு ஒரு நூற்றாண்டுக்கு முன்பே – இந்த சமூக சீர்திருத்த உற்சாகங்கள் பொங்கி வழிந்து வடிவதற்கு முன்பே – எழுதப்பட்டிருந்தது. தமிழக தலித் சிந்தனையாளர்கள் அத்தனை பேரும் ஏறத்தாழ அம்பேத்கரைக்கூட மறந்துவிட்டு அயோத்திதாசரைப் பற்றி பேசத் தொடங்குகின்றனர்.
ராஜ் கௌதமன், பிரேம், ஸ்டாலின் ராஜாங்கம் என அயோத்திதாசரின் வரலாற்று பங்களிப்பை நி்லைநாட்ட பல்வேறு தளங்களில் ஆய்வாளர்கள் முயன்றனர். இம்முயற்சியில் ஓரளவு வெற்றியுங்கண்டனர். ஜெயமோகன் அயோத்திதாசரைப் பற்றி எழுதிய நெடுங்கட்டுரையும் அயோத்திதாசரை மையப்பாத்திரமாகக் கொண்டு அவர் எழுதிய வெள்ளையானை நாவலும் இலக்கிய உலகிலும் அயோத்திதாசரை அறியப்பட்டவராக மாற்றியது.
அயோத்திதாசர் என்ற பெயர் தமிழ் அறிவுச்சூழலில் புழங்கத் தொடங்கிய இந்த காலத்தில் அவரைப் பற்றி நடக்கும் பேச்சுகளில் இருந்து நம்மால் ஒன்றை ஊகிக்க முடிகிறது. அயோத்திதாசர் நவீனத்துவ மனநிலை கொண்டவர்களை எரிச்சல் கொள்ளச் செய்கிறவராகவும் பின்நவீனத்துவர்களை உற்சாகம் கொள்ளச் செய்கிறவராகவும் இருக்கிறார். ராஜ் கௌதமனின் ‘க.அயோத்திதாசர் ஆய்வுகள்’ என்ற நூல் அயோத்திதாசரை தர்க்கப்பூர்வமாக நிறுவ முயல்கிறது. அந்த நூலில் தாசர் அனைத்து வண்ணங்களையும் இழந்து வெளிறிப் போய் விடுகிறார். ஆனால் ஜெயமோகனின் அயோத்திதாசர் பற்றி எழுத்துக்களிலும் சரி வெள்ளையானை நாவலிலும் சரி ஒரு புனைவெழுத்தாளனின் பரவசமும் உணர்ச்சியும் வெளிப்படுகிறது.
இந்த முரணை உண்மைக்கும் புனைவுக்குமான முரணாக நாம் யோசித்துப் பார்க்கலாம்.அயோத்திதாசர் பற்றி பேசப்புகுந்தால் இப்படியான முரண்சொற்களைத்தான் கேட்க வேண்டியிருக்கிறது. பௌத்தர் – பார்ப்பணர், ஆதி – சமீபம், யதார்த்தம் – வேஷம், அமிழ்தம் – விஷம் , வழக்காறு – எழுத்து என்று முரண்களைப் பேசுவதே அயோத்திதாசரின் முறையியலாக இருக்கிறது. எழுத்து ஆதாரங்களை ‘உண்மை’ என்றும் உண்மையை வரையறுக்கப்பட்டுவிட்டது என்றும் நம்பும் நவீனத்துவராக நின்றே ராஜ் கௌதமன் அயோத்திதாசரை அணுகுகிறார். ஆனால் விஷ்ணுபுரம் வழியாக வரலாற்றையே ஐதீகமாக மாற்றி அணுகியிருந்த (ஜெயமோகனிடம் இந்த சிக்கல் இருக்கவில்லை. பின்னாட்களில் ராஜ் கௌதமனே ‘ஆகோல் பூசலும் பெருங்கற்கால நாகரிகமும்’ என்ற ஆய்வில் கற்பனைக்கும் இடமளித்த முதல் தரமான ஒரு நூலை எழுதினார்.)
பிரேமின் அயோத்திதாசர் தொடங்கிவைத்த அறப்போராட்டம் எனும் நூல் அயோத்திதாசரை உலக சிந்தனைப்புலத்துடன் ஒப்பிட்டு தமிழுக்கும் தந்துவிட வேண்டும் என்ற உற்சாகத்துடன் எழுதப்பட்டுள்ளது என்றாலும் நூலின் ‘உணர்ச்சி நிலை’யும் பிரேமின் சாதி குறித்த உறுதியான நிலைப்பாடுகளும் நூலிலிருந்து அந்நியப்படுத்தவே செய்கின்றன.
ராஜ் கௌதமன், பிரேம் இருவரையும் விட ஸ்டாலின் ராஜாங்கம் அயோத்திதாசர் பற்றி எழுதிய வாழும் பௌத்தம், பெயரழிந்த வரலாறு என்ற இரு நூல்களும் முக்கியமானவை. இவ்விரு நூல்களிலும் ஸ்டாலின் ராஜாங்கம் அயோத்திதாசரை அணுகுவதற்கென்று ஒரு பிரத்யேக முறையியலை உருவாக்கிக் கொள்கிறார். வாழும் பௌத்தம் அயோத்திதாசர் முன்வைத்த பௌத்தத்தின் வரலாற்றுத் தொடர்ச்சியைப் பேசுகிறது. இணையாக அயோத்திதாசர் என்ற மனிதரை வரலாற்றில் கட்டி எழுப்பவும் செய்கிறது. பெயரழிந்த வரலாறு ஒரு வகையில் இன்னும் சுவாரஸ்யமான நூல். இந்த நூலில் அயோத்திதாசர் அவருடைய சமகால ஆளுமைகளான பாரதி, உவேசா, மயிலை சீனிவெங்கடசாமி போன்றோருடன் நிகழ்த்தியிருக்கக்கூடிய மௌன உரையாடல்களை அடையாளம் காண முயல்கிறார். பேசப்பட்டவை, எழுதப்பட்டவற்றை தாண்டி ஒருவரைப் பற்றி பேசாமலிருப்பதன் அரசியலை இந்த நூலில் விவரிக்கிறார். அயோத்திதாசர் ‘மறக்கப்படுவதற்கான’ காரணங்களில் ஒன்றாக இந்த பேசாதிருத்தலை குறிப்பிடலாம்.
5
அயோத்திதாசர் பற்றிய எழுத்துக்களில் டி.தருமராஜின் ‘அயோத்திதாசர் பார்ப்பனர் முதல் பறையர் வரை’ என்று நூலின் தனித்துவத்தை குறிப்பிடவே இவ்வளவு பேச வேண்டியதாக இருந்தது. மூன்று விஷயங்களை இந்த நூலின் தனித்தன்மையாக குறிப்பிட வேண்டும்.
முதல் விஷயம். மூன்று பகுதிகளைக் கொண்ட இந்த நூல் ஏறக்குறைய அயோத்திதாசருடனேயே வளர்ந்தது என்று சொல்லலாம். ஞான. அலாய்சிஸ் தொகுத்த ‘அயோத்திதாசர் சிந்தனைகள்’ பெருந்தொகுதிகள் வெளியான சில வருடங்களில் ‘நான் பூர்வ பௌத்தன்’ என்ற இந்த நூலின் முதல் பகுதி தனிநூலாக வெளியாகி இருந்தது. அதன் பிறகான உரையாடல்களால் செய்யப்பட்டதாக நூலின் இரண்டாவது பகுதியான ‘இது பௌத்த நிலம்’ உள்ளது. மூன்றாவது பகுதியான ‘பூர்வ பௌத்தனின் கல்லறை’ அயோத்திதாசரை ஒரு சிந்தனையாளராக, சீர்திருத்தவாதியாக தமிழ்ச் சமூகம் ஏற்றுக் கொண்ட இந்நாட்களில் எழுதப்பட்டுள்ளது. ஆகவே இந்நூலை ஒரு குறிப்பிட்ட நோக்கத்துடன் எழுதப்பட்ட பிரதியென்று வாசிக்காமல் தருமராஜின் அயோத்திதாசருடனான உரையாடலாகவும், அயோத்திதாசரின் சமூகத்துடனான உரையாடலாகவும் வாசித்துப் பார்க்கலாம்.
இரண்டாவதாக அயோத்திதாசரைப் பற்றி எழுதிய பிறருடன் ஒப்பிடும்போது தருமராஜ் அயோத்திதாசருக்கு மேலும் அணுக்கமானவர். நாட்டுப்புறவியல் பேராசிரியரான தருமராஜ் அயோத்திதாசரை ஏறக்குறைய தமிழ் நாட்டுப்புறவியலின் முன்னோடி என்று இந்நூலில் நிறுவியே விடுகிறார். தருமராஜ் அயோத்திதாசருக்கு இரண்டு முகங்கள் இருப்பதாகச் சொல்கிறார். ஒன்று ‘புத்தரது ஆதிவேதம்’ எழுதிய பண்டிதர். புத்த தன்மங்களை தமிழ்படுத்தித் தரும் ஒரு மொழிபெயர்ப்பாளராக மட்டுமே அயோத்திதாசரின் இந்த முகம் வெளிப்படுவதாகச் சொல்கிறார். அயோத்திதாசரின் இன்னொரு முகம்தான் ஆசிரியரை ஆர்வங்கொள்ளச் செய்கிறது. அது ‘இந்திரர் தேச சரித்திரம்’ எழுதிய அயோத்திதாசர். இக்கட்டுரையின் தர்க்கத்தின்படி கூட இந்த இரண்டாவது அயோத்திதாசரே முக்கியமானவர் என்பதால் அயோத்திதாசரை ஆய்வு செய்யும் யாரை விடவும் இந்நூலாசிரியருக்கு அயோத்திதாசர் அணுக்கமானவராக இருக்கிறார்.
மூன்றாவதாக இந்த நூலின் கட்டமைப்பு குறித்து சொல்ல வேண்டும்.
‘சிவனும் காத்தவராயனும்’ என்ற உணர்ச்சிகரமான கட்டுரையுடன் இந்த நூல் தொடங்குகிறது. 1892ல் அயோத்திதாசருக்குள் விதைக்கப்பட்ட கேள்வி எப்படி தமிழ் பௌத்தமாகவும் தமிழன் இதழாகவும் இந்திரர் தேச சரித்திரமாகவும் இன்னும் பிற கதைகளாகவும் கிளைக்கின்றன என்று உணர்ச்சிகரமாகவும் ஆதங்கமாகவும் பேசுகிறது. அயோத்திதாசர் மறைக்கப்பட்டாரா மறக்கப்பட்டாரா என்ற விவாதங்களுக்குள் இப்பகுதி செல்லவில்லை என்றாலும் அவர் கருத்துகள் திராவிட இயக்கத்தால் உள்ளிழுக்கப்பட்டதை இப்பகுதி ஒத்துக் கொள்கிறது. அயோத்திதாசரை மறந்திருந்த கோபமும் இப்பகுதியில் வெளிப்படுவதன் விளைவாகவோ என்னவோ /அயோத்திதாசரின் சுவடுகள் அழிக்கப்பட்டன/ என்று தன்னை முடித்துக் கொள்கிறது.
இரண்டாவது பகுதி ஒரு சுவாரஸ்யமான ஆய்வு நோக்கை வெளிப்படுத்துகிறது. அயோத்திதாசர் எழுதிய மாற்றுப் புராணங்களை ‘திரும்ப எழுதுதல்’ என்ற செயல்பாட்டினை ஆசிரியர் இப்பகுதியில் மேற்கொள்கிறார். திரும்ப எழுதுவதற்கான வரையைகளை சொன்னதுடன் ‘காலத்தினுள் அசையும் வேம்பு’, ‘ஒடுக்கப்பட்ட சரித்திரம்’ போன்ற கட்டுரைகள் வழியாக அயோத்திதாசரின் சிந்தனையை நெருங்கிப் பார்க்க முடியுமா என்ற யோசனை நூலின் இரண்டாவது பகுதி முழுவதும் ஓடுகிறது.
மூன்றாவது பகுதியான பூர்வ பௌத்தனின் கல்லறை ஒரு சிறியதும் பெரியதுமான முப்பத்தாறு அத்தியாங்களுடன் ஒரு நாவலைப் போன்ற வடிவத்தை தேர்ந்து கொள்கிறது. அயோத்திதாசரை நிறுவுதல், அயோத்திதாசரின் சிந்தனையைப் புரிந்து கொள்வது போன்ற செயல்பாடுகள் முடிந்தபின் எஞ்சியிருப்பது புரிந்து கொள்ளப்பட்டவரை என்ன செய்வது என்ற கேள்வி மட்டுந்தான். அந்தக் கேள்விக்கான கறாரான விடையைத் தேடிச் செல்லும் இப்பகுதி முழுக்க முழுக்க அயோத்திதாசரைப் பற்றிய நம்முடைய ஞாபகத்தையும் கடந்தகாலம் பற்றிய அவருடைய ஞாபகங்களையும் விவரித்துச் செல்கிறது.
நூலின் முதல் அத்தியாயத்தில் (சிவனும் காத்தவராயனும்) ஒரு புதைவில் இருந்து மீட்டெடுத்த அயோத்திதாசரை அவ்வளவு உணர்ச்சிகரமாக முன்னிறுத்திய ஆசிரியர் இறுதி அத்தியாயத்தில் மீண்டும் கல்லறையிலேயே கொண்டு சென்று வைக்கிறார். இந்த நூலின் முக்கியமான தனித்துவம் இதுதான். இந்த நூல் வெறுமனே ‘விமர்சன கண்ணோட்டத்துடன்’ அயோத்திதாசரை அணுகிறேன் என்று பாவனை செய்தபடி அவரைப் போற்றவோ தூற்றவோ இல்லை. மாறாக அயோத்திதாசரை வகுக்க முற்படுகிறது. இன்றைய சூழலின் தேவையும் அதுதான். அயோத்திதாசரிடம் எதையெல்லாம் எதிர்பார்க்கலாம் எதிர்பார்க்கக்கூடாது என்று நூலை வாசித்து முடிக்கும் போது உணர்ந்து கொள்கிறோம்.
5
நூலின் முதலிரண்டு பகுதிகள் வழியாக ஆசிரியர் அயோத்திதாசரை நமக்குக் காட்டுகிறார். பூர்வ பௌத்தனின் கல்லறையில் அயோத்திதாசரை நமக்கு புரிய வைக்க முயற்சி செய்கிறார். மொழியியல், உளவியல், நாட்டுப்புறவியல், இலக்கியம் என பல்வேறு தளங்களின் அறிவைக்கொண்டு இப்பகுதியில் ஆசிரியர் அயோத்திதாசரை மோதுகிறார். அந்த மோதல் வழியாக ஆசிரியர் எடுத்துக் கொண்டு வரும் முடிவுகள் அதிச்சியளிப்பதாகவும் பரவசமூட்டுவதாகவும் உள்ளன. அயோத்திதாசரின் இந்திரர் தேச சரித்திரத்தை வாசிக்கும்போது ஏற்படும் அதே அதிர்ச்சியும் பரவசமும். இந்த இறுதிப் பகுதியில் ஞாபகங்கள் சார்ந்த ஆழமான விவாதங்கள் இடம்பெறுகின்றன. இந்த விவாதங்கள் வளர்த்தெடுக்கப்பட்டு பார்த்தல் – பறைதல் என்ற இருமையை நூல் கட்டமைக்கிறது.
பார்ப்பவர்கள் பார்ப்பனர்கள். பறைகிறவர்கள் பறையர்கள். இங்கு பார்க்கப்படுவது மொழி. எழுத்து மொழியை நாம் பார்க்கிறோம்.அதாவது எழுத்ததிகாரத்தை பார்ப்பனம் என்றும் பேச்சுச் செயலை பறைதல் என்றும் ஆசிரியர் வரையறுக்கிறார். நூல் முழுக்க தொழிற்பட்ட விரோதம், அயோத்திதாசர் தமிழனில் திரும்பத் திரும்ப எழுதிய விரோதம் அவருக்கு முன்பே தமிழ்ச் சமூகத்தின் குருதியில் அறையப்பட்டிருந்த விரோதத்தை ஆசிரியர் பார்த்தலுக்கும் பறைதலுக்குமான விரோதமாக மாற்றிக் காட்டுகிறார்.
அயோத்திதாசரின் பங்களிப்பாக ஆசிரியர் நிலைநிறுத்துவது இந்தப் பண்பைதான். சமூக முரணை கருத்தியல் முரணாக மாற்றுகிறார். இந்த கருத்தியல் முரண் தீர்க்கப்படக்கூடியது என்பதே அயோத்திதாசர் பற்றிய பேச்சுகளின் நம்பிக்கை அளிக்கக்கூடிய அம்சமாக இருக்கிறது.
எப்படி?
இக்கட்டுரையின் தொடக்கம் முதலே நவீனத்துவத்தின் எல்லைகளைப் பற்றியும் நவீனத்துவம் சார்ந்தும் அதற்கு எதிராகவும் எழுந்த சீர்திருத்தங்களின் எல்லைகள் பற்றியும் பேசினோம். ஒரு வகையில் எழுத்தும் ஒரு நவீனத்துவ கூறுதான். அதாவது எழுத்தின் மீதான அதீத நம்பிக்கை. பத்தொன்பது மற்றும் இருபதாம் நூற்றாண்டுகளில் நடந்த மாபெரும் தேச உருவாக்கங்கள் எழுத்தையே அடிப்படையாகக் கொண்டிருந்தன. எழுத்து கடவுளின் இடத்திற்கு நகர்ந்திருந்தது. ‘வாக்கு’ என்ற சொல்லே பழையதாகிப் போனது. ‘வாக்கு கொடுத்தல்’ என்பது மிக நெருக்கமான உறவுகளுக்கு இடையே கூட குறைந்து போனது. எழுத்தின் புனிதம் பேச்சை ஒரே சமயம் அபூர்வமானதாகவும் நாகரிகமற்றதாகவும் காண்பிக்கத் தொடங்கியது.
நிறைய பேசுவது தவறென்றும் ஆனது. நாம் அனைவருமே பள்ளிகளில் கைகளைக் கட்டிக்கொண்டு வாய் பொத்தி வாசித்துக் கொண்டிருந்தவர்கள். அதாவது பார்த்துக் கொண்டிருந்தவர்கள். ஆகவே நாம் அனைவரும் ஒரு வகையில் பார்ப்பனர்கள். பேசுகிறவர்களாக அதாவது பறையர்களாக இருந்த நாம் பார்ப்பனர்களாகிப் போனோம். பறையர்களாகிய நாம் பார்ப்பனர்களாகியதைப் பற்றி தீர்ப்பெழுதுவது நமது நோக்கமில்லை. ஆனால் பறைதலின் – அநாகரிகமானது, தவிர்க்கப்பட வேண்டியது என்று கருதப்பட்ட பறைதலின் – அழகுகள் நமக்கு இப்போது தெரியத் தொடங்குகின்றன.
‘குறைவாகப்பேசு’ என்று சொன்ன நவீனத்துவத்தின் அந்திமம் ‘அதிகமாகப் பேசும்’ பின்நவீனத்துவத்தின் பிறப்புடன் ஒத்துப் போனது. இந்த இருபதாண்டுகளில் அயோத்திதாசரும் பல சிந்தனையாளர்களைப் பேச வைத்துள்ளார். பறைதல் அநாகரிகம் பார்த்தல் நாகரிகம் என்ற இறுக்கமான மூடநம்பிக்கையை நம்மால் கைவிட முடிந்தால் பறைதல் என்ற பார்த்தலை விட அதிக சாத்தியங்கள் நிறைந்த செயலை நம்மால் முழு மனதுடன் விசாரிக்க முடிந்தால் நம்முடைய சமத்துவம் சார்ந்த சொல்லாடல்களும் பண்பாடு சார்ந்த விவாதங்களும் மேலும் விரிவையும் கூர்மையையும் அடையும் என்ற நம்பிக்கையை டி.தருமராஜின் நூல் வழியே துலங்கி வரும் அயோத்திதாசர் நமக்கு அளிக்கிறார்.
இந்த நூலினா வழியாகவே வெவ்வேறு வகையான முடிவுகளை வாசகர்கள் சென்றடைய முடியும் என்றாலும் பார்த்தல் – பறைதல் என்ற இருமையை வெற்றிகரமாக சித்தரித்திருப்பதே இந்த நூலின் முக்கியத்துவம் என்று கருதுகிறேன். அயோத்திதாசரை இன்றைய சூழலில் மிகச் சரியாக அணுகி வகுத்திருக்கிறது என்ற வகையில் அயோத்திதாசர் பார்ப்பனர் முதல் பறையர் வரை தமிழ் அறிவுச்சூழலில் ஒரு முதன்மையான நூல்.
சுரேஷ் பிரதீப்
தமிழ்நாடு திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர். தொடர்ச்சியாக புனைவுகள், விமர்சனங்கள் எழுதிவருகிறார். அழகியலை முன்னிலைப்படுத்தி எழுத்தாளர்களின் சிறப்பியல்புகளை நுட்பமாக மதிப்பிடுபவர்.ஒளிர் நிழல் என்ற நாவலும் இரண்டு சிறுகதைத் தொகுப்புக்களும் வெளியாகியுள்ளன.
//எழுத்து கடவுளின் இடத்திற்கு நகர்ந்திருந்தது. ‘வாக்கு’ என்ற சொல்லே பழையதாகிப் போனது. ‘வாக்கு கொடுத்தல்’ என்பது மிக நெருக்கமான உறவுகளுக்கு இடையே கூட குறைந்து போனது. //
// அனைவருமே பள்ளிகளில் கைகளைக் கட்டிக்கொண்டு வாய் பொத்தி வாசித்துக் கொண்டிருந்தவர்கள். அதாவது பார்த்துக் கொண்டிருந்தவர்கள். ஆகவே நாம் அனைவரும் ஒரு வகையில் பார்ப்பனர்கள். பேசுகிறவர்களாக அதாவது பறையர்களாக இருந்த நாம் பார்ப்பனர்களாகிப் போனோம். //.
………
தர்மராஜின் பார்பனர் முதல் பறையர் வரை எனும் நூலை முன்வைத்து அவருக்கு பின்பான காந்தி ,பெரியார், அம்பேத்கர் போன்ற சிந்தனையாளர்களை அல்ல! அவர்களை முன்வைத்து உருவாக்கப்பட்ட கருத்தியலையே கட்டுரை கேள்விக்குட்படுத்துவதை வாசகர்கள் அவதானிக்க…., நிதானிக்க வேண்டியது அவசியம்.
இக்கட்டுரை ஒருவகையில் தொன்மத்தின் அலட்சியத்தையும் நவீனத்துவத்தின் கொண்டாடத்தையும் கேள்விகளாக முன்வைக்கிறது
எழுத்துக்களாக எம்முன்னால் குவிந்துகிடக்கும் வரலாற்றுக்கதையாடல்களை நாம் புரிந்து கொண்டால் அயோத்திதாசரின் மாற்றுக்கதையாடலின் முக்கியத்துவம் அவசியம் என்னவென்பதை புரிந்துகொள்ளமுடியும்.
சுரேஸ் பிரதீப்பின் இக்கட்டுரை எமக்குள் வேரூன்றி சிக்கல்களாக படர்ந்திருக்கும் கருத்தியலை அவிழ்ககும் ஆர்வமுள்ளவர்களுக்கு மட்டுமே நெருக்கமானதாக தோன்றும் (……)