/

திடலில் சாயும் நிழல்கள் – அந்திமகாலத்து இறுதி நேசத்தை முன்வைத்து: சுனில் கிருஷ்ணன்

தக்ஷிலா ஸ்வர்ணமாலி சிங்களத்தில் எழுதிய பத்து சிறுகதைகள், ரிஷான் ஷெரிப்பின் மொழியாக்கத்தில் ‘ஆதிரை’ பதிப்பக வெளியீடாக, ‘அந்திம காலத்து இறுதி நேசம்’ எனும் தலைப்பில் இந்த ஆண்டு வெளியாகியுள்ளது.

சிடுக்கற்ற  கூறுமுறை அளிக்கும் எளிமையும் நேரடித்தன்மையும் தான் ஸ்வர்ணமாலியின் கதைகளுக்கு வலு அளிப்பவை. பொதுவாக எளிமையும் நேரடித்தன்மையும் மட்டும் ஒரு கதையை நல்ல கதையாக ஆக்கிவிடுவதில்லை. எளிமையாகவும் நேரடியாகவும் சொல்வதாக எண்ணிக்கொண்டு  வலுத்து ஒலிப்பவைகளாக ஆகிவிடும் கதைகளே அதிகம். இந்த ஓசை வாசகருக்கு மனவிலக்கத்தை ஏற்படுத்துவிடும். வாசகர் கதையை தன்னுள் வளர்த்துக்கொள்ள வாய்ப்பே அளிக்காத கூறுமுறை அயர்ச்சியையே அளிக்கும்.   ஸ்வர்ணமாலியின் இக்கதைகளில் உள்ளோட்டமாக உள்ள மவுனம் வாசகரை கதையில் பிணைத்துக்கொள்ள செய்கிறது.

இத்தொகுதியில் உள்ள ஒரு கதைக்கு ‘நந்தியாவட்டைப் பூக்கள்’ என பெயரிட்டிருப்பார். ஒருவகையில் அவருடைய மொத்த கதையுலகத்திற்கும் பொருத்தமான படிமம். பகட்டற்ற எளிமையும் மவுனமும் அளிக்கும் அழகு.

சிங்கள பின்புலத்தில் எழுதப்பட்டாலும் ஸ்வர்ணமாலியின் கதைகளின் பேசுபொருள் மானுட உறவுகளின் ஊடாக நிலவும் சிடுக்குகள் என்பதாலும், கீழை பண்பாடுகளில் ஏறத்தாழ குடும்ப அமைப்பும் உறவுச்சிடுக்குகளும் ஒன்றுபோலவே உள்ளதாலும், சிற்சில சிங்கள பண்பாட்டு கூறுகளுக்கு அப்பால், இக்கதைகள் நமக்கு எவ்வகையிலும் அந்நியமாகத் தென்படவில்லை. ஸ்வர்ணமாலியின் மற்றொரு பலம் உரையாடல். பெரும்பாலான கதைகளில் புறச்சித்தரிப்புகள் குறைவாகவே உள்ளன. படிமமாக வேர்கொண்டு வளர்பவை மிகக்குறைவு. இவை அவருடைய எல்லைகள். உரையாடல்களின் இடைவெளிகள் வழியாக அகவோட்டத்தை காட்ட அவரால் முடிகிறது என்பது அவருடைய பலம். இந்த உரையாடல்களை இயல்பாக வாசிக்க முடிவதில் மொழிபெயர்ப்பாளர் ரிஷான் ஷெரிப்பின் மொழியாக்கத் திறனுக்கு முக்கிய பங்குண்டு. மொழிபெயர்ப்பை வாசிப்புத்தன்மையுடயதாக ஆக்குவதற்காக ஒரேயடியாக உள்ளூர் தன்மையை அளித்துவிடுவது அல்லது முற்றிலும் திருகலாக நுழையமுடியாத அளவிற்கு அந்நியத்தன்மை அளிப்பது – இவை இரண்டும் பொதுவாக மொழிபெயர்ப்பாளர்கள் செய்யும் பிழை.  புதிய நிலப் பரப்பை, பண்பாடுகளை அனுபவிக்க விழைவது மொழியாக்க நூல்களை வாசிக்க மிக முக்கியமான தூண்டுதல்களில் ஒன்று. சரளத்தன்மைக்கும் தனித்தன்மைக்கும் இடையேயான சமநிலை அடையப்படும்போது அது நல்ல மொழிபெயர்ப்பாக இருக்க முடியும். ரிஷான் ஷெரிப் இக்கதைகளில் அதை அடைந்திருக்கிறார்.

இந்த பத்து கதைகளில் சில பொதுத்தன்மைகளையும் தொடர்ச்சிகளையும் காண முடியும். ‘தெரு வழியே’ மற்றும் ‘அன்றைக்கு பிறகு அவன் அவளருகே வரவேயில்லை’ (சுருக்கமாக அன்றைக்கு பிறகு என இக்கட்டுரையில் இனி சுட்டப்படும்) ஆகியவை ஒரே தன்மைகொண்டவை. இரண்டு கதைகளிலும் அதன் பிரதான பாத்திரங்கள் தங்கள் இணையைப் பற்றி கொண்டிருந்த கனவு கலைகிறது. தொகுப்பின் முதல் கதையான ‘தெரு வழியே’ திருமண உறவு முறிந்த பெண் அவள் சந்தித்த ஜிகொலாவின் மீது ஆழ்ந்த காதலை வெளிப்படுத்தும் உணர்ச்சிகரமான அக உரையாடலில் தொடங்குகிறது. அவரை தேடித்தேடி தெருக்களில் அலைகிறாள். காதலனை பொலிந்த நெற்கதிராக காண்கிறாள். தன்னையும் கூட காதலன் அறுவடை செய்ய வேண்டிய பொலிந்த நெற்றாக உணர்கிறாள். தன் காதலை அன்று எப்படியும் அவருக்கு  உணர்த்திவிட விரும்புகிறாள். அவரை கண்டுபிடிக்கிறாள். ஆனால் அதுவே அவர்களின் இறுதி சந்திப்பாகிறது. அவளுடைய அத்தனை காதலுக்கு நேர்மையின்மை காரணமாக அவன் தகுதியற்றவன் என உணரும்போது, அதுவரை பிராம்மாண்டமாக அவள் மனதை நிறைத்தவன், உரு சுருங்கிப்போகிறான். ஒருவகையில் அவனை அறிவதன் வழியாக அழள் தன்னையும் அறிகிறாள். அவர் மீது அதுவரை இருந்த அத்தனை ஈர்ப்பும் காதலும் கணப்பொழுதில் ஆவியாகிறது. கனவு கலைந்து நிதர்சனத்தில் காலூன்றுகிறாள்.

‘அன்றைக்கு பிறகு..’ கதையில் சமில்’ தன்னுடன் பணிபுரியும் ‘நெலும்’ பற்றி கனவு காண்கிறான். பயண இக்கட்டுகளையும் நெருக்கடிகளையும் மீறி எதிர்பார்ப்பின் குறுகுறுப்புடன் நெலுமை காணச் செல்கிறான். கதை முழுக்க அவளை பற்றிய அவனுடைய கனவுகளே சொல்லப்படுகிறது. அவள் வீடு எப்படி இருக்கும், என்ன சமைத்திருப்பாள், என்ன செய்து கொண்டிருப்பாள், என்ன உடுத்தியிருப்பாள் என யோசித்துக்கொண்டே வருகிறான். நெலும் அவனுடன் வங்கியில் பணிபுரிபவள்‌. கனவுகளோடு வருபவனை கழிப்பறை வாளியுடன் வரவேற்கிறாள் நெலுமின் தங்கை. அது தொடங்கி அவனுடைய அத்தனை கனவும் தலைகீழாகிறது. கதை தலைப்பை கசந்த புன்னகையுடன் நெலும் அவளுடைய அம்மாவிடம் சொல்வதுடன் கதை முடிகிறது.

‘மாங்காய் பருவத்தில் அருண் தனித்திருந்த மேலுமொரு நாள் தொடங்கியது’ (சுருக்கமாக மாங்காய் என இக்கட்டுரையில் சுட்டப்படும்), ‘இப்போதும் இருவரும் இடைக்கிடையே சந்தித்துக்கொள்கிறோம்’ (இப்போதும் இருவரும் என சுருக்கமாக) மற்றும் ‘தங்கையை அவன் தேடி தேடி அலைந்தான்’ (தங்கையை என சுருக்கமாக) ஆகிய மூன்று கதைகளும் முழுக்க முழுக்க ஆண் பெண் உரையாடல்களினால் உருக்கொள்கிறது. இம்மூன்று கதைகளிலும் ஆணுக்கும் பெண்ணுக்குமான உறவு நிலை வெவ்வேறாக உள்ளது. ‘மாங்காய்..’ கதையில் கூர்மையான உரையாடல்கள் வழியாக தனது அடையாளத்தை சுயபரிசோதனை செய்து கொள்கிறாள் நெலுகா. நெலுகாவிற்கு ஒரு ரொமான்டிக் உறவு தேவைப்படுகிறது. அவளை கனவில் மயக்கும் ஒரு உறவு. அருணுக்கு அவ்வகையான எந்த மயக்கங்களும் இல்லை. எல்லாவற்றையும் கிழித்து நோக்கும் கூர்மையுடையவன். ‘நீலகண்டம்’ நாவலின் ஹரியைப்போல. அருணின் ஒழுங்கிண்மை மீது நெலூகாவிற்கு பெரும் ஈர்ப்புள்ளது. அவளால் தனது ஒழுங்கை விட்டகலமுடியவில்லை என்பதே சிக்கல்‌. ஒருவகையில் ஆதவனின் கதை மாந்தர்களை நினைவுபடுத்திய கதை. அருண் பலூன்களை குத்தி காற்றை வெளியேற்றுபவன். கனவுகளை கலைப்பவன். முந்திய கதைகளுடன் இணைத்து வாசிக்க முடியும். ‘இப்போதும் இருவரும்..’ விவாகரத்தான கணவரிடம் தனது புதிய திருமணத்தில் கரு உண்டாகிய நற்செய்தியை அறிவிப்பதற்காக உணவகத்தில் மனைவி சந்திக்கிறாள். கதையின் ஊடாக மனைவி தனது இன்றைய கணவனுடன் முந்தைய உறவின் காலத்தில் சினிமாவிற்கு சென்றதும், அதை கணவன் பார்த்ததும் சொல்லப்படுகிறது. அது இருவருக்கும் ஆசுவாசத்தை அளிக்கிறது. புதிய உறவுக்குள் சென்ற பிறகு பழைய உறவின் வன்முறை சுவடுகள் கரைந்து இனிய ஏக்கமாக எஞ்சியிருக்கிறது. சுமையின்றி அவர்கள் உரையாடி சண்டையிட முடிகிறது. உறவு முறிந்த பிறகு இருவரும் மெய்யான நேசத்தை பரஸ்பரம் கண்டுகொள்கிறார்கள். ‘தங்கையை .’ கணவன் தன் மணைவியுடன் தொலைந்து போன தங்கையை நினைவுகூர்ந்தபடி தேடுகிறான்.

‘அந்திம காலத்து இறுதி நேசம்’ மற்றும் ‘எப்போதும் மேரி நினைவில் வருகிறாள்’ ஆகிய இரண்டு கதைகளும் வயோதிகர்களை மய்யமாக கொண்ட கதைகள் என சொல்லலாம். ‘அந்திம காலத்து’ கதையில் சக்கர நாற்காலியில் தினமும் வாசலில் அமரும் முதியவர் ஒருநாள் அத்தெரு வழியாக செல்லும் இளம்பெண்னைக் காண்கிறார். தர்க்கப்பூர்வமாக விளக்கமுடியாத ஒரு நேசம் அவர்களுக்குள் முகிழ்கிறது. தினமும் அவளுடைய வருகைக்காக காத்திருக்கிறார். அவரை கவனித்த மனைவி, மகன் வந்த பிறகு கைவிட்டுச்செல்கிறார். இறுதியில் மரணமடைகிறார். ‘எப்போதும் மேரி..’ இறந்து போன மனைவிக்கான அஞ்சலிக்குறிப்பு.

இவைத்தவிர உள்ள பிற மூன்று கதைகளான ‘ஒரே திடல்’ ‘பொட்டு’ ‘நந்தியாவட்டைப் பூக்கள்’ ஆகியவைகளுள் ‘நந்தியாவட்டைப் பூக்களும்’  ‘ஒரே திடலும்’ ஒன்று மற்றொன்றின் நீட்சி என சொல்லலாம். இத்தொகுதியில் நிறைவான வாசிப்பளித்த கதை என ‘பொட்டு’ கதையைச் சொல்வேன் ஸந்தா எனும் சிங்கள விதவையின் வீட்டிற்கு குடிவருகிறார் ரகு எனும் தமிழ் இளைஞன். வீடை பார்க்க வரும்போது மழை கொட்டித்தீர்க்கிறது. அறைக்குள் மழை நீர் புகுந்துள்ள போது ஸந்தா கட்டிலில் அமர்ந்திருக்கிறாள். இந்த சமயத்தில்தான் ரகு முழுக்க நனைந்தபடி வீட்டை காண வருகிறான். மாங்காய் கதையில் ‘வெளியே மழை பெய்யுறதை வீட்டுக்குள்ளயும் உணர்றது எவ்வளவு இதமாயிருக்கும் தெரியுமா?’ என்று ஒரு வரி வருகிறது. மழையும் வீடும் ஸ்வர்ணமாலி கதைகளில் வேறாக உருமாறுகிறது. மழை கட்டற்றது. வீடு பாதுகாப்பானது. வீட்டுக்குள் மழையை உணர்வது என்பது இவை இரண்டிற்குமான சமரசப்புள்ளி. சட்டென  குற்றாலத்து சிற்றருவி நினைவுக்கு வருகிறது.‌ ஒரு அறையை போலிருக்கும் ஆனால் உள்ளே குறைந்த உயரத்திலிருந்து ஆவேசமாக அருவிகொட்டும்‌.‌ மழை என்பது புதிய உறவாகவும். வீடு குடும்பமாகவும் பொருள் நீட்சி கொள்கிறது. குடும்பத்திற்குள் இருந்தபடியே புதிய உறவை அனுபவிக்க இயலுமா என்பதே அவருடைய முக்கிய கேள்வி.

ரகுவிற்கும் ஸந்தாவிற்கும் இடையே  ஒரு நேசம் முகிழ்கிறது. ஸந்தாவிடம் பொட்டு வைத்துக்கொண்டால் அழகாக இருக்கும் என்கிறான். கிரிஸ் கறை படிந்த கையுடன் நெற்றியில் பொட்டு இட்டுவிடுகிறான். ஸந்தா தனது அடையாளம் குறித்து ஆழமாக யோசிக்கிறாள். எது தன்னை சிங்கள பெண்ணாக ஆக்குகிறது? தமிழ் சிங்கள அடையாளங்களுக்கு அப்பால் ‘மாங்காய்..’ கதையில் அருண் அவனை காதலிக்கும் சரோஜாவைப் பற்றி சொல்வது போல் அவனும் அவளும் ஹோமோ சேப்பியன்ஸ்கள்தானே. கதை இப்படி முடிகிறது. ‘எனது கணவன், தோடம்பழப் பெட்டியைத் தலையில் சுமந்தவாறு அன்றைய வருமானத்துக்காக அலைந்து கொண்டிருக்கையில், புறக்கோட்டை குண்டுவெடிப்பில் அகப்பட்டுச் செத்துப் போன நாளில் நான் துயரப்பட்டதைப் போன்ற கவலை எனக்குத் தோன்றியது,’ தமிழ் கதைகளில் சிங்களர்கள் எப்படி வருகிறார்கள் என்பதை கவனிப்பது போல சிங்கள கதைகளில் தமிழர்கள் எப்படி வருகிறார்கள் என்றொரு கேள்வி இருக்கும். சயந்தன், அனோஜன் கதைகளைப் போலே அடையாளங்களை கடந்து மனிதர்களாக ஸ்வர்ணமாலியால் நோக்க முடிகிறது என்பது இக்கதையை மேலும் முக்கியமானதாக ஆக்குகிறது‌.

‘நந்தியாவட்டைப் பூக்கள்’ அப்பாவுக்கும் பெரியம்மாவிற்கும் இடையேயான உறவும், பெரியம்மாவிற்கு திருமணமாகி வந்த பெரியப்பாவிற்குமான உறவும் சொல்லப்படுகிறது. திருமணத்திற்கு முன்பு முற்றத்தை பெருக்கி சுத்தமாக வைக்கும் பெரியம்மா ஒருபோதும் உதிரும் நந்தியாவட்டை பூக்களை பெருக்குவதில்லை. திருமணத்திற்கு பிறகு இது தலைகீழாகிறது. நந்தியாவட்டையை சுற்றிய பூக்கம்பளம் பெருக்கப்பட்டு முற்றுத்து குப்பைகளுடன் கிடக்கிறது. ‘தான் தனியாக இருந்தபோது தோன்றியிராத தனிமையை,

திருமணம் முடித்த பிறகு பெரியம்மா உணர்ந்திருக்கக் கூடும்.’ எனும் வரி சட்டென பற்றிக்கொள்கிறது. ‘ஆம், ஏன் இப்படி?’ என நம்மை நோக்கியே கேள்வி எழுப்பிவிடுகிறது.  தாயின் கணவரை சித்தப்பா என அழைப்பது ‘அன்றைக்கு ..’ கதையிலும் நிகழ்கிறது. ‘ஓரே திடல்’ மற்றும் ‘நந்தியாவட்டை’ ஆகிய இரண்டு கதைகளுமே சிறுமிகளின் பார்வையில் பெற்றோர்களின் கதைகளை சொல்கிறது. சிறுவர் வழி கதைசொல்லும்போது இயல்பாக ஒரு வெகுளித்தனம் கூடி வருகிறது. வாசகர் மனதில் கதை விரிய இடமளிக்கிறது. அகழ் இதழுக்கு அளித்த நேர்காணலில் ஸ்வர்ணமாலி இந்த கதைசொல்லல் முறையைப் பற்றி ‘சமூகத்தினால் நிலைநிறுத்தப்பட்டிருக்கின்ற கோட்பாடுகளுக்குள் பிரவேசித்துக் கொண்டிருக்கும் ஒரு தரப்பினராகத்தான் சிறுவர்களை நான் காண்கின்றேன். அவர்கள் முழுமையாக ஒரு வரையறைக்குட்பட்டவர்கள் அல்லர். அவ்வாறானதொரு கோணத்தில் ஏதாவது ஒரு விடயத்தினை எழுதும் போது அங்கீகரிக்கப்பட்ட வரையறையிலிருந்து அதற்கு அப்பால் நகர்ந்து செல்வது இலகுவாக இருக்கும். அப்பொழுதுதான் ஆழமான விடயத்தினையும் மிகவும் சரளமாக எழுத முடியும்.’ எனச் சொல்கிறார். சிறுவர் பார்வையில் உறவு சிடுக்குகளை சொல்வதன் வழியாக தீர்ப்பெழுதலை தவிர்க்க முடிகிறது. இங்கிருந்து ஸ்வர்ணமாலியின் கதைகளில் இருந்து எழுந்து வரும் முதன்மை கேள்வி என்ன என்பதை நோக்கலாம். ‘தெரு வழியே’ கதையில் ‘மானிட உறவுகள் தனிப்பட்ட நபர்களுக்கிடையிலான செயற்பாடுகள் அல்லாமல் சமூக வெளியீடுகளாக ஆனது ஏன்?’ என ஒரு கேள்வியை எழுப்புகிறார். அதே கதையில் ‘இந்தத் தெருவின் எந்த இடத்திலிருந்தேனும் அந்தப் பையனைச் சந்திப்பேனாயின், அவரையும் கூட்டிக் க ொண்டே உங்களிடம் நான் வருவேன், அப்பா. ஆனால், அப்போது ‘புருஷன் எங்கே?’ என்று ஊரார் கேட்பார்கள். ‘யாரைக் கூட்டி வந்திருக்கிறாய்?’ என்றும் கேட்பார்கள். கண்ணியமாக ஊரில் வாழ்ந்துவரும் அப்பாவி அப்பாவுக்குக் கடைசி காலத்தில் என்னால் அவப்பெயர் ஏற்படக் கூடும். இந்த நிலைமையில், எவ்வாறு ஊருக்குப் போவது? இந்த நிலைமையில், எவ்வாறு திரும்பவும் கணவனிடம் போவது? நான் யாரைக் கூட்டிச் சென்றாலும் அப்பா ஒருபோதும் என்னைப் புறக்கணிக்க மாட்டார்.’ என இந்த சிடுக்கை விவரிக்கிறார். ஸ்வர்ணமாலியின்‌ கதைகளில் மனிதர்களுக்கு இடையேயான உறவுகளை வரையறை செய்ய அவர் முயல்வதில்லை. ‘மாங்காய் ..’ கதையில் அருணுடைய கூற்றாக வரும் பகுதி துல்லியமாக சொல்கிறது. ‘அதாவது எங்களுக்கிடையிலான உறவுக்கு ஒரு பெயர் இல்ல. இப்படி, மொழியால பெயர் சூட்ட முடியாத உறவுகள் நிறைய இருக்கு நிலூகா. மனுஷங்க, மனுஷங்களுக்கிடையிலான உறவுகளை ரொம்ப லேசா கோடு பிரிச்சு சட்டம் போட்டு வேறாக்கிப் பெயர் சூட்டினாலும் கூட, அதை அப்படிச் செய்றது சரிப்பட்டு வராது.’ ‘அன்றைக்கு பிறகு..’ கதையில் சமிலுக்கும் நெலுமிற்கும் இடையேயான உறவு காதலாக முகிழ சாத்தியமுள்ள ஈர்ப்பின் பருவத்தைச் சேர்ந்தது. ‘இப்போதும்..’ கதையில் கணவன் மனைவி பிரிந்த பின்னும் நேசத்துடன் உள்ளார்கள். ‘அந்திம..’ கதையில் முதியவருக்கும் இளம் பெண்னுக்கும் இடையேயான ஈர்ப்பு ஒரே சமயத்தில் பலவாக தோற்றம் கொள்கிறது. இளம்பெண் வீட்டில் கணவன் இருந்தும் அவரிடம் அண்ணனும் தானும் இருப்பதாக சொல்கிறாள். சொன்ன பிறகு ஏன் அப்படி சொன்னோம் என யோசிக்கிறாள். முதியவர் அவளை மகளே என விளிக்கிறார். ஆனால் இளமையில் தன் மனைவி அவளைவிட அழகி என எண்ணுகிறார். அவளுடைய உருவத்தை முழுமையாக நினைவில் பதிகிறார். மனைவி சென்ற பிறகு தலைகோதி உறங்க வைக்கிறாள். இந்த கேள்வியிலிருந்து அவருடைய கண்டடைதல் என்னவாக இருக்கிறது? ‘மனிதர்கள் எவரும் தமது ஜீவிதத்தில் எடுத்த எந்தத் தீர்மானத்திற்காகவும் மனம் வருந்தத் தேவையில்லை. மனிதனால் எடுக்கப்படும் எந்தத் தீர்மானமும் தவறானதல்ல.’ (தெரு வழியில்) இந்த கண்டடைதலே ‘ஒரே திடலின்’ தரிசனமும் கூட. ‘அப்பா, அம்மாவைக் கை விட்டுச் சென்றது அம்மாவின்  தவறால் அல்ல. அது அப்பாவின் தவறும் கிடையாது. ஸ்ரீமலி சித்தியின் தவறும் இல்லை. “நாங்கள் அனைவரும் மனிதர்கள் என்பதால் எங்கள் அனைவருக்கும் இப்படி நிகழ்ந்தது” என்று அம்மா கூறினாள்.’ (ஒரே திடல்). இமையத்தின் ‘செல்லாத பணம்’ இதே கரிசனத்தையே தனது செய்தியாக கொண்டது. சமூக வரையறைக்கு அப்பாலான உறவுகளின் மீதான இயல்பான நேசம் அற்புதமாக வனையப்பட்ட கதை என ஓரே திடல் கதையைச் சொல்லலாம். தந்தையும் தாயும் பிரிந்து வெவ்வேறு இணைகளை தேடிக்கொள்கிறார்கள். ஆனால் அவர்களுக்கு இடையே எந்த வன்மமும் இல்லை. அவர்கள் ஒருவருக்கு ஒருவர் ஆதரவாக தொடர்கிறார்கள். பிற கதைகளில் கனவுகளை கலைத்த ஸ்வர்ணமாலி இக்கதையில் உன்னத கனவை படைக்கிறார். எதையும் முத்திரையிடாமல் நோக்கும் சிறார் கதைசொல்லி கச்சிதமாக கதைக்கு பொருந்துகிறார். வண்ணதாசன், வண்ணநிலவன் புனைவுலகிற்கு மிக நெருக்கமான கதை. தனி மனிதர்களுக்கு இடையேயான உறவுகள் சார்ந்து சமூகம் முன்வைக்கும் வரையறைகளை கலகக்குரல் என பிரகடனப்படுத்திக் கொள்ளாமலேயே இயல்பாக கேள்விக்கு உட்படுத்துகிறார். 

“மகள் வந்திருக்குறப்ப எனக்குத் தூக்கம் அவசியமில்ல. எனக்கு மகளைப் பார்த்துக்கிட்டேவிழிச்சிட்டிருக்குறதுதன் இப்ப தேவையாயிருக்கு” என சொல்கிறார் ‘அந்திமகாலத்து..’ கிழவர். ‘மாங்காய்..’ கதையில் நெலூகாவை அருண் உறங்கி சற்று ஓய்வெடுக்கச் சொல்லும்போது “நான் தூங்க வரல. உன்னோட சேர்ந்து விழிச்சிட்டிருக்குறதுதான் எனக்கு வேணும். மஞ்சுவோ, அஷேனோ என்னோட கதைச்சிட்டிருக்க வர்றதில்லையே.” என்கிறாள். சக மனிதரின் இருப்பு ஆறுதல் அளிக்கிறது. உறவை இழத்தல் ஒரு முக்கியமான சரடு. ‘மேரி..’ கதையில் இறந்து போன மேரியை பற்றிய நினைவுச்சித்திரம். ‘அந்திம’ கதையிலும் இறந்துபோன பெரியவரை மரணத்திற்கு பின்னரும் அவள் தேடுகிறாள். ‘தங்கை..’ கதையில் அண்ணன் காணாமல் போன தங்கையை தேடிக்கொண்டே அவளது நேசத்தை தான் பிரதிபலிக்கவில்லை என வருந்துகிறான். நீ அப்படி ஒன்றும் மோசமான அண்ணனில்லை என அவன் மனைவி அவனை தேற்றுகிறாள். தன் சுயமைய போக்கு தன்மீதே வெறுப்பை கவியச்செய்கிறது.

‘தெரு வழியில்’ கதைசொல்லி தனது கடந்தகாலத்தை எண்ணுகிறாள். குறிப்பாக தந்தைக்கு பணம் அனுப்பி அவரை வளமாக்கும் நிலையில் இருப்பதையும் முதன்முதலாக நகரத்து கல்லூரிக்கு சென்றபோது அந்நியமாக உணர்ந்ததையும் நினைவுகூர்கிறாள். ‘மேரி’ மற்றும் ‘தங்கை’ என இரண்டு கதைகளில் பொதுவுடமை மீதான கரிசனப் பார்வை பதிவாகியுள்ளது. சமூகத்தை வர்க்கங்களாகவும் நகரம் கிராமம் எனும் இருமையில் பகுத்து  நோக்குவது இக்கதையிலும் ‘அன்றைக்கு பிறகு..’ கதையிலும் காணக்கிடைக்கிறது. ஒரு வகையில் ‘அன்றைக்கு பிறகு..’ கதையை நகரத்தவர்கள் கிராமத்தின் மீது கொண்டிருக்கும் விபரீதமான ஈர்ப்பு களைவதைப் பற்றி சொல்வதாக கூட வாசிக்க முடியும். கிராமத்திலிருந்து நகரங்களுக்கு பெயர்ந்து நுகர்வுபடியில் மேலெற முயலும் வர்க்கத்திற்கும் கிராமத்தை இனிமையான வாழ்விற்கான இடமாக கற்பனை செய்து கொள்ளும் வர்க்கத்தினருக்கும் இடையேயான உறவில் கிராம வாழ்க்கை மீதான கனவு கலைகிறது.

தமிழில் இப்போது எழுதிக்கொண்டிருக்கும் கமலதேவியின் கதையுலகத்துடன் நெருக்கமாக தொடர்புபடுத்த முடிகிறது. ஜானிஸ் பரியாத் போன்ற இதே பேசுபொருளை கொண்ட பிற ஏழுத்தாளரின் ஆக்கங்களுடன் ஒப்பிட்டால் ஸ்வர்ணமாலி கவித்துவமான படிமங்களை பயன்படுத்துவதில்லை என்பதை உணர முடிகிறது. கதைகளின் தலைப்பே கதையை சொல்லிவிடுகிறது. ‘அன்றைக்கு பிறகு அவன் அவளருகே வரவேயில்லை’ என தலைப்பிலேயே கதையை சொல்லிவிட்டு ‘ஏன்?’ என்றொரு கேள்வியை எழுப்பி அதற்கு ஒரு பதிலை சொல்கிறது கதை. ‘அந்திம காலத்தில் இறுதி நேசம்’ எனும் தலைப்பே கதையை சொல்லிவிடுகிறது. நேசத்திற்குரியவர் யார் என்பதை மட்டுமே கதை விவரிக்கிறது‌. ‘இப்போதும் இருவரும் இடைக்கிடையே சந்தித்துக்கொள்கிறோம்’ எனும்‌ தலைப்பும் மொத்த கதையை ஒருவரியில் சொல்லிவிடுகிறது. ‘பொட்டு’ ‘நந்தியாவட்டைப்பூக்கள்’ ‘ஒரே திடல்’ ஆகிய மூன்று கதைகள் மட்டுமே ஒரு படிமத்தை பயன்படுத்தியுள்ளது. நாம் வேறு வேறாக இருக்கலாம் ஆனால் நாம் அனைவரும் நிற்பது நிழலற்ற ஒரே திடல். அங்கு ஒருவரின் நிழலே பிறருக்கு ஆறுதல். ஆகவே வாசக மனதில் வேர்கொண்டு வளர்கிறது. இக்கதைகள் வாசகராக நமக்கு புதிதாக எதையும் அளிக்கவில்லை. கதைகள் ஒவ்வொரு சமயமும் புதிதாக அளித்தே ஆகவேண்டும் என்பதுமில்லை. சில கதைகளை வாசிக்கும் போது அவற்றுடன் மவுனமாக மனம் இயைந்து ஆமோதிக்கும். ஸ்வர்ணமாலியின் கதைகள் அத்தகையவை. கதைகளின் கூறுமுறை காரணமாகவே நமக்கு நெருக்கமானவை.

சுனில் கிருஷ்ணன்

காரைக்குடியில் வசிக்கும் சுனில் கிருஷ்ணன் சிறுகதையாசிரியராகவும், நாவலாசிரியராகவும் நன்கு அறியப்பட்டவர். காந்தியத்தின் மீது ஈர்ப்புக் கொண்டவர். விமர்சனத் துறையில் தொடர்ச்சியாக ஈடுபட்டு வருகிறார்.

உரையாடலுக்கு

Your email address will not be published.