/

காலமெனும் பலூன்: சுனில் கிருஷ்ணன்

பதாகை - யாவரும் வெளியீடாக வெளிவர இருக்கும் எழுத்தாளர் காலத்துகளின் சிறுகதை தொகுப்புக்கு எழுதப்பட்ட முன்னுரை

நாற்பது வயதில் நீ நுழையும் போது, உன்

ஓப்பனைகள் ஆடைகள் மாறுகின்றன

சட்டையை தொளதொள வென்றோ

இறுக்கமாகவோ போடுகிறாய்

தலைமுடியை நீளமாகவோ

குறுகவோ தரிக்கிறாய்

உன்னிடமிருந்து பறந்து சென்ற

இருபது வயது என்னும் மயில்

உன்

மகளின் தோள் மீது

தோகை விரித்தாடுவதை

தொலைவிலிருந்து பார்க்கிறாய்

காலியான கிளைகளில்

மெல்ல நிரம்புகின்றன,

அஸ்தமனங்கள்,

சூரியோதயங்கள் மற்றும்

அன்பின் பதட்டம்

பன்னிரெண்டு கதைகள் கொண்ட காலத்துகளின் ‘வேதாளத்தின் மோதிரம்’ சிறுகதை தொகுப்பை வாசித்து முடித்தபோது தேவதச்சனின் கவிதைகள் நினைவுக்கு வந்தன. காலம் நழுவி கைவிட்டு செல்லும் அன்பின் பதட்டம்.  எழுத்தாளர் காலமாக்கடலை தனது நினைவெனும் ஓட்டைப்படகில் கடக்க முற்படுபவர். யூகியோ மிஷிமா  அவருடைய முகமூடியின் ஒப்புதல் வாக்குமூலத்தில் ஒரு வயது சிறுவனாக தனது நினைவுகளை எழுதியிருப்பார். ஒரு வயதில் நினைவுகள் தெளிவாக இருக்க முடியுமா என கேட்டால், ஒரு வயதின் நினைவுகளாக உள்ள மனப்பதிவுகள் அசல் என்றே சொல்ல முடியும். காலப்போக்கில் நினைவுகளுடன் அனுமானங்களும் கற்பனையும் பிரித்தறிய முடியாதபடிக்கு படிந்துவிடும். கலை என்பது கலைஞன் காலத்திற்கு எதிராக பிடிக்கும் முரண்டு. 

இளமை கால நினைவுகள் எல்லோருக்கும் முக்கியமானவைதான் என்றாலும் எழுத்தாளருக்கு அவை மேலும் முக்கியமானவை. ஆளுமையை தீர்மானிப்பவை, ஊற்றெடுத்து பெருகும் படைப்பு ஆற்றலுக்கு பாதை சமைத்தளிப்பவை. இளமை அனுபவங்களின் ஊடாகவே எழுத்தாளர் தன்னை ஆட்டிப்படைக்கும் கேள்வியை  கண்டடைகிறார். சபரிநாதன் தாஸ்தாவெஸ்கி பற்றிய ஒரு கட்டுரையில் பிரக்ஞையே பிணி என கொண்டவர் தாஸ்தாவெஸ்கி என குறிப்பிட்டிருப்பார். தாஸ்தாவெஸ்கி என்றில்லை உள்முக ஆளுமை கொண்ட அத்தனை எழுத்தாளருக்கும் கூரிய தன்ணுணர்வு உண்டு. அதுவே அவர்களின் படைப்பூக்கத்திற்கான ஊற்றாகவும் அவர்களின் சிக்கலாகவும் அதுவே ஆகிறது. காலத்துகளிடமும் இந்த தன்மை உண்டு.  நான்காம் வகுப்பு படிப்பவனுக்கு தண்டனையாக பெண் பிள்ளைகளுடன் அமர வைக்கப்படும் போது தொடை உரசி அதுவரை உணராத கிளர்ச்சியை உணர்கிறான்‌. அந்த தருணத்தின் காட்சிகளையும் மணத்தையும் மொத்த புலனனுபவத்தையும் அவனால் மீண்டும் தனக்குள்ளாக நிகழ்த்தி கொள்ள முடிகிறது‌. இந்த தொகுப்பின் இறுதி கதையான மிர்சா கர்தரெஸ்கோ காலத்துகளின் புனைவுமனம் இந்த கதைகளில் எப்படி செயல்படுகிறது என்பதை ஆராய்கிறது. ‘நான் காலப்பயணமோ, கடிகாரத்தின் மூன்று பதினெட்டின் நிஜத்தில் இருப்பதை உணர்ந்தபடியே அந்நினைவுகளை மீட்டுக்கொண்டிருப்பதையோ செய்யவில்லை. மீண்டும் நிகழ்ந்து கொண்டிருக்கும் அந்தக் கணங்களில் முன்பைப்போலவே பங்கேற்றுக் கொண்டிருந்தேன்‌.’  அவர் மேற்கோளிடும் மிர்சாவின் வரிகளை கணக்கில் கொள்ள வேண்டும். ‘ You do not describe the past by writing about old things, but by writing about the haze that exists between yourself and the past’ தனக்கும் தன்னுடைய கடந்தகாலத்திற்கும் இடையேயான புகைமூட்டத்தை எழுதுவது என்பதே காலத்துகளின் பாணி. காலத்துகள் நினைவுகளை பெயர் மாற்றி நாட்குறிப்பாக எழுதவில்லை மாறாக நினைவுகளை இடுபொருட்களாக ஆக்கி அதிலிருந்து கதை தருணங்களை சமைக்க முயல்கிறார். தொகுப்பின் முதல் மற்றும் இறுதி கதைகள் இந்த செயல்பாட்டை சுட்டிக்காட்டுகின்றன. தொகுப்பின் முதல் கதையான ‘புனைவுத் தருணம்’ கதையில்    இரண்டு வளர்ந்த பிள்ளைகள் இருக்கும் கதைசொல்லியின் எதிர்வீட்டில்  கணவர் இல்லாதபோது  வந்து செல்லும் வேற்று ஆண் ஒருவரை கதைசொல்லி கவனிக்கிறார். ‘அந்த பதின்ம வயதிலும் எனக்கு அவரது வருகை குறித்த பாலியல் கிளர்ச்சியோ கற்பனையோ ஏற்படவில்லை. மற்றொரு ஆசாமி தன் வீட்டிற்கு வந்து போவது குறித்து அந்தப் பெண்ணின் கணவர் என்ன நினைக்கிறார் என யோசிப்பேன். ஆனால் அதிகமும் அந்தப் பிள்ளைகள் குறித்து, அவர்கள் அந்த தொடர் நிகழ்வை, அது குறித்து தெருவில் உலவிய புரளிகளை எதிர்கொண்ட விதம்- கண்டிப்பாக அவை அவர்கள் காதுகளையும் சென்றடைந்திருக்கும், அது அவர்கள் மனநிலையை, அன்றாட வாழ்க்கையை பாதித்திருக்கக்கூடிய விதத்தை பற்றிதான் எனக்கு கேள்விகள் இருந்தன.’ என எழுதுகிறார்.  வாசகருக்கு இவையாவும் கோர்வையான நினைவு குறிப்பாக தோன்றுவதே இவ்வகை எழுத்தின் நம்பகத்தன்மையை கூட்டுவது. இந்த நினைவுகுறிப்பு தன்மை ஒரு உத்தி என்பதை கவனத்தில் கொள்வது முக்கியம். உண்மையில் இவற்றுள் எந்த அளவிற்கு  புனைவு எந்த அளவிற்கு அசல் என்பதை எழுத்தாளரே அறிவார் அல்லது அவரும்கூட அறியமாட்டார். 

சில கதைகள் தன்னிலையிலும் சில கதைகள் படர்கையிலும் எழுதப்பட்டுள்ளன. எதாவது ஒரு நிலையில் எழுதப்பட்டிருந்தால் இவை ஒரு நாவல் என்றே சொல்லியிருக்க முடியும். எண்பதுகளின் மத்தியில் தொடங்கி தொண்ணூறுகளின் மத்தியில் பள்ளி கல்வியை முடித்த நகர்ப்புற மத்தியவர்க்கத்து சிறுவனின் கதை என சொல்லலாம்‌. கதைசொல்லி, அவனுடைய அம்மா, அப்பா, நண்பன் சந்துரு ஆகியோர் அனேகமாக அனைத்து கதைகளிலும் வரும் பாத்திரங்கள். பிற கதைமாந்தர்கள் கதைக்கு கதை மாறுபவர்கள். எம்ஜியார் மரணம், ராஜீவ் மரணம், ரஜினி கமல் ஒப்பீடு, காமிக்ஸ், சச்சின், ஸ்டெப்பிகிராப் என அந்த காலகட்டத்தையும் அதன் எச்சங்களையும் துல்லியமாக மீள்கட்டமைக்கிறார். தாளை சுருட்டி பைண்ட் புத்தகத்தால் வகுப்பறையின் உள்ளே விளையாடும் கிரிக்கெட், முதுகு பஞ்சர் என வழங்கப்படும் எரிபந்து போன்ற விளையாட்டுக்கள் இதற்கு முந்தைய மற்றும் பிந்தைய காலகட்டங்களில் புழக்கத்தில் இருந்ததாக தெரியவில்லை. காலத்துகளின் இதே காலகட்டத்தின் பிற்பகுதியை சேர்ந்தவன் எனும் முறையில் அவருடைய உலகம் வாசகனாக என் நினைவுகளையும் தொட்டு மீட்டெடுத்தது. ஒருவகையில் இந்த தொகுதியில் உள்ள மீபுனைவு கதைகளை அந்த தலைமுறையின் ‘ட்ரிப்யூட்’ கதைகள் என சொல்ல இடமுண்டு. 

நாஞ்சில்நாடனின் ‘என்பிலதனை வெயில் காயும்’ நாவலை தமிழின் மிக சிறந்த வயதடைதல் வகை நாவல் என சொல்வேன்‌. அறுபது எழபதுகளில் பள்ளியும் கல்லூரியும் படித்த முதல் தலைமுறை கிராமத்து பட்டதாரிகளின் கதை. உலகமயமாக்களை பள்ளிப்பருவத்தில் எதிர்கொண்ட தலைமுறையின் நகர்ப்புற நடுத்தர வர்க்கத்தின் கதை என இத்தொகுதியை சொல்லலாம். நாஞ்சில் நாடனுடன் ஒப்பிடுவதற்கு இன்னும் இரண்டு காரணங்களும் உண்டு. ஒன்று, கான் சாகிப், தன்ராம் சிங் போன்ற நாவல் தன்மை கொண்ட வாழ்க்கை சித்திர கதைகள் என ‘கிளி ஜோசியம்’ ‘யாருமற்ற மனை’ ‘மரிசா’ மற்றும் ‘வேதாளத்தின் மோதிரம்’ போன்ற கதைகளை சொல்லலாம். கதை வழியாக இந்த மனிதர்களை எந்த அளவிற்கு அறிகிறோமோ அதேயளவு கதைசொல்லியை பற்றியும் அறிகிறோம். கதைசொல்லியின் தன்ணுணர்வு எல்லோரை பற்றியும் சொல்வதுடன் எல்லோரை பற்றிய தனது சிந்தனைகளையும் சேர்த்தே சொல்கிறது. இதுவே காலத்துகளின் தனித்தன்மையும் எல்லையும் கூட. இரண்டாவதாக இளமை கால அவமரியாதைகள் தொடர்ச்சியாக நாஞ்சிலின் கதைகளில் பதிவாகியுள்ளன. ‘கிழிசல்’ கதையில் திருவிழா கூட்டத்தில் சிறுவனை அழைத்துக்கொண்டு செல்லும் தந்தை உணவகத்தில் காசு கொடுக்காமல் அங்கிருந்து வெளியேறுவார்‌. பள்ளி பருவத்து மகன் தந்தையின் அந்த கீழ்மை நிறைந்த செயலுக்கு சாட்சியாகிறான். அவர் மீதான மதிப்பில் பொத்தல் விழுகிறது. இத்தொகுதியில் ‘பெயர்தல்’ கதையில் முன்னர் கணக்கு வைத்திருந்த கடையில் நெருக்கும்போது திங்கள் கிழமை தந்து விடுவதாக அம்மா சொல்கிறாள் ஆனால் கணக்கை நேர் செய்யாமல் கடை மூடியிருக்கும் ஞாயிற்றுக்கிழமை மதியத்தில் ‘நா சொன்னேன்ல சண்டே மத்தியானம் கடை கெடையாதுன்னு’ என அப்பா சொல்ல அம்மா கடைப்பக்கம் திரும்பாமல் எதிர்திசையில் பார்த்துக் கொண்டிருந்தபடி  வீட்டை காலி செய்து வேறு ஊருக்கு செல்லும் சித்திரத்தை எழுதுகிறார். ‘படுகளம்’ எனும் கதை அம்மாவின் மீதான பிம்பம் உடைப்படும் நுட்பமான தருணத்தை பதிவு செய்கிறது. தந்தையின் நிர்பந்தத்தினால் அம்மாவுடன் பணிபுரியும் ஆசிரியரின் வீட்டுக்கு மகனை அழைத்து செல்கிறார். தொலைக்காத மணிபர்ஸை பணத்துடன் பேருந்தில் தொலைத்த பழியை அம்மா அவன் மீது சுமத்தி அந்த ஆசிரியரிடம் கடன்கேட்கிறார். படுகளத்தில் அம்மா அவனுடைய சுயமதிப்பை பலியிடுகிறாள். அவனுடைய படுகளத்தில் அம்மாவின் மீதான மதிப்பு கொலையுருகிறது. மற்றொரு தருணத்தில் கடன்பாக்கி வசூலிக்கும் போது தந்தையை ஒளித்து வைக்கிறார் அம்மா. அரசுமருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்துகொள்ளும் அம்மா வீட்டுக்கு வரும்போது அங்கிருக்கும் செவிலியர்களுக்கு குளிர்பானம் வழங்குவது வாடிக்கை என சொல்லி  ‘ப்ளீஸ்மா ரொம்ப கேவலமா நெனைப்பாங்கம்மா’ என்று வார்டிலேயே அம்மா கெஞ்சியதற்கு ‘அதுக்கெல்லாம் காசு இல்ல ..அவங்க ட்யூட்டிய செய்யறதுக்கு நாம் எதுக்கு எக்ஸ்ட்ரா தரணும்..டீன்கிட்ட கம்ப்ளைன்ட் பண்ணுவேன்’ என கத்துகிறார்‌ தந்தை. 

தந்தை மீதான வெறுப்பு உச்சகட்டமாக வெளிப்படும் கதை என ‘வேனிற் காலத்தை’ சொல்லலாம். தந்தைக்கும் தன்னைவிட சில வயதே மூத்தவனாகிய இளைஞனுக்கும் இடையேயான தற்பால் உறவை அறிந்து சீற்றம் கொள்கிறான். அதற்கு முந்தியே ‘ஃபாதர் என்ன பன்றார்’ கதையில் தந்தை அவன் எனும் ஏகவசனத்திற்கு குறைகப்படுகிறார். வேலைக்கு செல்லாமல் வெட்டியாக திரியும் தந்தை அவமரியாதையின் சின்னமாகிறார். தந்தையை கொலை செய்ய பின்தொடரும் ஒரு கட்டம் கூட உண்டு. செருப்பை வீசி வசைபொழிகிறான். குடும்ப வன்முறை நிறைந்த, சிதைந்த உறவுகள் சூழ வளரும் நுண்ணுர்வு கொண்ட சிறுவன் நிதர்சனத்திலிருந்து தப்புவதற்கு கற்பனையை தேர்கிறான். அவன் விட்டு வந்த ஊரிலிருந்து நண்பர்கள் அவனுடன் விளையாட காத்திருப்பதாக கற்பனை செய்கிறான்.‌ ஹாரி பாட்டர் நாவலில் ஹோக்வர்ட்ஸ் வளாகத்தில் ஒரு ரகசிய அறை உண்டு. அதை ‘தேவைக்கேற்றபடி உருமாறும் அறை’ (room of requirement) என்பார் ரவுலிங். கதைசொல்லியின் வீட்டருகே உள்ள காலி மனை கதைசொல்லியின் கற்பனைக்கு ஏற்ப கால்பந்தாட்ட மைதானமாக, வக்கார் யூனிஸ் பந்துவீச்சை சச்சினுடன் சேர்ந்து எதிர்கொள்ளும் கிரிக்கெட் விளையாட்டரங்கமாக, கொடிய ஆற்றல்களை, சாத்தான்களை கொல்லும் சமர்களமாக முடிவற்று உருமாறியபடி இருக்கிறது. ஷெர்லாக் ஹோம்ஸும், கத்திரிக்காயும், டின்டின்னும் புழங்கும் மீபுனைவான ‘அதிநாயகனின் குதிகால்’ ‘ஆந்திகிருஸ்துவின் வருகை’ ‘முகமற்றவர்களின் மர்மம்’ போன்ற  கதைகளை இப்படியே வகுக்கமுடியும். வயதேற வயதேற வாழ்க்கையின் சிறு சிறு மர்மங்கள் அளித்த கிளர்ச்சிகள் அடங்கி அறிதல் எனும் துயரம் வாழ்வை சுவாரசியமற்ற அன்றாடமாக மாற்றும் துக்ககரமான சித்திரத்தை காலத்துகளின் கதைகள் அளிக்கின்றன. ஆர்.கே நாராயணனின் மால்குடி  போல் செங்கல்பட்டும் ஒரு கதாப்பாத்திரமாக உருபெறுகிறது. காலத்துடன் பொருத்திக் கொள்ள முடியாமல் மறைந்து போகும் மனிதர்களை சாகசக்காரர்களாக காணும் பதின்ம மனம் கதைசொல்லியுடையது. விடுதலை போராட்டத்தில் பங்கேற்ற தனியரான தாத்தா, கிளப்புக்கு வேலைக்கு வந்து கொலைகுற்றத்திற்காக சீர்திருத்த சிறையில் இருக்கும் ஒருவன், செங்கல்பட்டின் மீது பெரும் பிரியம் கொண்டு அதனை பிரியமறுத்து அரசு பணியை தவிர்க்கும் கணேசன், குமாஸ்தாவின் இரண்டாவது மனைவியாக குடியேறி தனிமையில் இருப்பதாலேயே மாயமாந்த்ரீகம் என பலரும் அஞ்சும் ராட்சஸி என அலைக்கழியும் கதைமாந்தர்களின் வாழ்வு மான அவமானங்களாலும் மாத வருமானத்தினாலும் கைகள் கட்டப்பட்ட மத்திய வர்க்கத்து இளைஞனின் ஈர்ப்புக்கு உரியவர்களாகிவிடுகிறார்கள். அவர்களின் தளையின்மை அவனை ஈர்க்கிறது. காலம் அவன் ஆதர்சங்களை நொறுக்கி பொருளிழக்க செய்கிறது. ‘வரலாறு, கடந்த காலம் என்பது அரசர்கள் போர் என்பது மட்டுமே அல்ல. சித்திரங்கள், தோல்வியின் இடிபாடுகள் மட்டுமல்ல, கைவிடப்பட்ட முயற்சிகளின் மிச்சங்களாகவும் இருக்கலாம்…வெற்றியோ தோல்வியோ அல்லது எதிர்கொள்ளும் தவறிய யுத்தங்களோ காலம் தன் முத்திரையைப் பதிக்கத் தவறுவதில்லை.’ எனும் வேதாளத்தின் மோதிரம் கதையில் வரும் வரி கதைசொல்லியின் கதைமாந்தர்களை பற்றிய துல்லியமான விவரனை. வரலாற்றுக்கு அளிக்கும் விளக்கத்தை தனி மனிதனின் வாழ்க்கைக்கு போட்டுபார்க்கிறார். கணேசன் வேலை கிடைத்து இடம் மாறி சென்று கனவுகளை இழக்கிறார். கணவனின் மரணத்துக்கு பின் ராட்சஸி அடித்து துரத்தப்படுகிறார். சிறார் சிறையில் இருக்கும் ‘அவனை’ கதைசொல்லி அவ்வப்போது பார்த்துவரவேண்டும் என உறுதி எடுத்துக்கொள்கிறான் ஆனால் அவனை சந்திக்கவேயில்லை‌. நெடுங்காலத்திற்கு பின் சந்திக்கும் கணேசனையும் அவன் திரும்ப சந்திக்க செல்லவில்லை. தெருவில் சந்திக்கும் சுதாகரிடம் எண் பரிமாறிக்கொண்டாலும் அங்கும் அதுவே நிகழ்ந்திருக்கும். தயக்கமும் உள்முக ஆளுமையும் பாதுகாப்புணர்வுக்கான விழைவும் கதைசொல்லி விரும்பும் சாகசத்தை கற்பனையில் மட்டுமே அனுமதிக்கிறது.  ‘அதிநாயகனின் குதிகால்’ இந்த கற்பனைக்கும் நிதர்சனத்திற்குமான உறவை நுட்பமாக சுட்டிக்காட்டுகிறது. அகிலியசின் பலவீனம் அவனுடைய குதிகால் என்பதுபோல் கற்பனையில் மிதக்கும் அதிநாயகனை துளைக்கும் நிதர்சனம் எனும் அம்பு. இந்த மனநிலையின் நீட்சியை ‘பற்றுகை’ கதையில் காண முடியும். ஆங்கிலேய ராணுவத்தில் பணியாற்றி பின்னர் இந்திய ராணுவத்தில் பணியாற்றி ஓய்வுபெற்ற தாத்தாவை சுதந்திர போராட்ட வீரர் என நண்பர்களிடம் அறிமுகப்படுத்துகிறான். தன் தாத்தா இந்திய விடுதலை போராட்டத்தில் பங்குபெறாமல் ஏன் ஆங்கிலேய தரப்பை தேர்ந்தார் எனும் குழப்பம் அவனுக்கு‌. இழிவென கருதும் கடந்த காலத்தின் மீது இன்றைய சரிநிலைக்கு ஏற்ப போலியான உன்னதப் படுத்தப்பட்ட கடந்தகாலத்தை உருவகித்து கொள்கிறான். எல்லோருக்கும் உன்னதமான கடந்தகாலத்தின் மீதுதான் விருப்பம். உரையாடல்கள், எண்ண ஓட்டங்கள், அதைவிட சொல்லப்படாத மவுனம் படரும், தொகுதியின் சிறந்த கதைகளில் ஒன்று. ‘மரிஸா’ ஆங்கிலோ இந்திய குடும்பத்தை பற்றிய கதையின் இறுதி வரி ஒரு அடையாளசிக்கலை பேசும் கச்சிதமான சிறுகதை. 

இந்த தொகுதியின் எல்லை என்பது இந்த வகைமாதிரி எழுத்தின் எல்லை என சொல்லலாம். இதில் உள்ள மீபுனைவு கதைகள் அந்நினைவுகளுடன் தொடர்பு இல்லாதவர்களுக்கு எந்த அளவிற்கு உணர்வு ரீதியாக பிணைப்பு ஏற்படுத்தும் என தெரியவில்லை. எனினும் இந்த எல்லைகளை கடந்து சாதாரணங்களிலிருந்து அசாதரணங்களை மீட்டெடுக்க முயலும் காலத்துகளின் ‘வேதாளத்தின் மோதிரம்’ தொகுப்பு தமிழுக்கு ஒரு நல்வரவு. மீண்டும் ஒரு தேவதச்சன் கவிதையுடன் இந்த கட்டுரையை நிறைவு செய்கிறேன்.

இந்த நீலநிற பலூன் மலரினும்

மெலிதாக இருக்கிறது. எனினும்

யாராவது பூமியை விட கனமானது

எது என்று கேட்டால், பலூனைச் சொல்வேன்.

நீங்களாவது கூறுங்களேன், இந்த

நாற்பது வயதில் ஒரு பலூனை

எப்படி கையில் வைத்திருப்பது என்று

பலூனை விரல்களில் வைத்திருப்பது என்பது

காற்றைக் கையில் வைத்திருப்பது போல் இருக்கிறது

பலூன்கள் கொஞ்சநேரமே இருக்கின்றன.

எனினும் சிறுவர்கள் கொஞ்சத்தை ரொம்ப நேரம்

பார்த்து விடுகிறார்கள்.

அருகிலிருக்கும் குழந்தையின் பலூன் ஒன்று

என்னை உரசியபடி வருகிறது. நான்

கொஞ்சம் கொஞ்சமாக பலூன் ஆகிக் கொண்டிருக்கிறேன்.

சுனில் கிருஷ்ணன்

காரைக்குடியில் வசிக்கும் சுனில் கிருஷ்ணன் சிறுகதையாசிரியராகவும், நாவலாசிரியராகவும் நன்கு அறியப்பட்டவர். காந்தியத்தின் மீது ஈர்ப்புக் கொண்டவர். விமர்சனத் துறையில் தொடர்ச்சியாக ஈடுபட்டு வருகிறார்.

1 Comment

  1. நூல் குறித்த அடர்த்தியான பார்வை. தேவதச்சன் கவிதையோடு ஆரம்பித்து அவர் கவிதையோடு முடித்திருப்பது சிறப்பு. இளமை நினைவுகள் எழுத்தில் எவ்வாறு மலர வேண்டும் என்பது குறித்த கருத்தோட்டம் நினைவில் கொள்ளத்தக்கது

உரையாடலுக்கு

Your email address will not be published.