/

ஒவ்வொரு மணல்துகளும் ஒரு முழுப் பிரபஞ்சம்… : யுவன் சந்திரசேகர்

நேர்கண்டவர் சுனில் கிருஷ்ணன்

எழுத்தாளர் யுவன் சந்திரசேகருக்கு ஒரு ரீடர் செய்ய வேண்டும் என்பது அவரது வாசகராக எனது நெடுநாள் கனவு. என்னளவில் இதுவரை என்னை ஏமாற்றாத எழுத்தாளர் யுவன்தான். அவர் எழுதி எனக்கு உவக்காமல் போனது என சொல்வதற்கு ஒரு கதைகூட இல்லை. ‘நீர்ப்பறவைகளின் தியானம்’ தொகுப்பை மட்டும் ஐந்தாறு முறை வாசித்திருப்பேன். இன்னதென்று வகுத்துக்கொள்ள முடியாத மர்மமும் வசீகரமும் நிரம்பிய எழுத்து. கதைசொல்லலின் திளைப்பு முழுமையாக வெளிப்பட்டது அவர் கதைகளில் என எனக்குத் தோன்றுவதுண்டு. நூல்வனம் வெளியீடாக வரவுள்ள இந்த ரீடருக்காக அவரை நேர்காணல் செய்ய வேண்டும் என உத்தேசித்தேன். மார்ச் மாதம் ஒருமுறையும் ஜூலை மாதத்தில் ஒருமுறையும் என இருமுறை சென்னையில் உள்ள அவரது இல்லத்திற்கே சென்று உரையாடினோம். முதல் அமர்வில் விக்னேஷ் ஹரிஹரன், காஞ்சி சிவா, அ. க. அரவிந்தன் ஆகியோர் அவருடன் உரையாடினோம். ஜூலை மாத அமர்வில் எழுத்தாளர்கள் சுரேஷ் பிரதீபப்பும் காளிபிரஸாத்தும் விக்னேஷ் ஹரிஹரனும் உரையாடலில் பங்கெடுத்தார்கள். யுவன் அபாரமான உரையாடல்காரர். காரைக்குடிக்கு வந்தபோது கூட “எங்கயாவது போலாமா சார்” என்றால் “வாங்க பேசிக்கிட்டு இருப்போம். அதுதானே நம்ம லாகிரி” என்பார். ஏறத்தாழ ஏழுமணிநேர உரையாடல் பதிவு உள்ளது. அச்சாக்கினால் 200 பக்கங்களுக்குக் குறையாது. தனி நூலாகவே கொண்டு வரலாம். இத்தனை பேசிய பின்னரும் நாங்கள் இன்னும் கவிதைகள் பற்றிய விவாதத்தை தொடங்கவே இல்லை என்பதை உணர்ந்து கொண்டோம். காலை பத்து மணிக்கு அவரது அடுக்குமாடிக் குடியிருப்புக்கு சென்றோம். உள்ளே செல்வதற்கு நிறைய பாதுகாப்பு கெடுபிடிகள் உண்டு. விசாலமான வீடு. ஒவ்வொரு அறையிலும் இசைக்கான ஏற்பாடுகளை செய்து வைத்திருந்தார். அவரது அறையிலிருந்து கீழே நீச்சல் குளம் தெரியும். விசாலமான ஃபிரெஞ்சு ஜன்னல்கள் வழி போதுமான வெளிச்சமும் காற்றும் உள்ளே வந்தது. “உங்களுக்கு ஒண்ணும் டிஸ்டர்பன்ஸ் இல்லையே” என்றபடி ஸித்தார் இசையை சன்னமாக ஒலிக்கவிட்டார். அநேகமாக இருபது நிமிடங்களுக்கு ஒருமுறை “காப்பி சொல்லட்டா?” என்பார். நாங்கள் சென்ற அன்று மகள்வழிப் பேரன் பிறந்து ஒரு மாதம் ஆகியிருந்தது. மதியம் அவருடனேயே வயிறார உண்டோம். இருட்டும்வரை பேசிக்கொண்டிருந்துவிட்டுக் கிளம்பினோம். நமக்குப் பிடித்த ஆளுமைகளை, எழுத்தாளர்களை நெருங்குவது அவசியமில்லை என்பார்கள். அவர்கள் மீதான நம் மதிப்பு குறைந்துவிடும், ஏதோ ஒருவகையில் நமக்கு ஒவ்வாதவர்களாக ஆகிவிடுவார்கள் என்பார்கள். எனக்கேகூட அத்தகைய அனுபவங்கள் சில உண்டு. ஆனால் யுவன் இன்னும் இன்னும் என அணுக்கமாகவே தெரிந்தார். எல்லா இடங்களிலும் நேர்மையாக வெளிப்பட்டார் என்பதே காரணம் என தோன்றுகிறது. இந்த உரையாடலை வாசித்தால் ஒன்று புரியும், கேள்விகள் அவரை ஏதேனும் ஒன்றில் வரையறை செய்ய முயன்றபடி இருக்கும், அவர் அவற்றை மீறிச் சென்றபடியே இருப்பார். ஒருவிதமான கபடி ஆட்டம் போல. இரு அமர்வுகள் முடிந்தபின்னர் இந்த உரையாடலை நினைவுகூரும்போதும் வாசிக்கும்போதும் திகைப்பே எஞ்சியிருக்கிறது. இங்கே யுவன் ஒரு சிறு வட்டத்திற்கு அப்பால் சென்றுசேரவே இல்லை. ஏன் என்பதை ஒருவாறு புரிந்துகொள்ள முடிகிறது. அவர் இமைகளுக்கு வெளியே இருப்பவர். தீர்ப்பு சொல்பவராக இல்லாமல் வேடிக்கை பார்ப்பவராக இருக்கிறார். நமக்கு தீர்மானங்களும் தீர்ப்புகளும் ஆறுதல்களும் அல்லவா வேண்டியதாய் இருக்கிறது.

முதல் சந்திப்பின்போது நிகழ்ந்த உரையாடலின் ஒரு பகுதி இது…

  • சுனில் கிருஷ்ணன்

கவிதைகள் எழுதுவதே இல்லையா? எம். யுவன் கவிஞராகத்தானே அறிமுகமானார்.

கவிதையைப் பத்தி மிக நீண்ட நேர்காணல் ஒண்ணு ஜெயமோகன் எடுத்து ’சொல்புதிது’ இதழ்ல வந்தது. ஆனால் இப்போ அவ்வளவு பேசியிருக்க வேண்டாமோன்னு தோணுது, கவிதை எழுத முடியாம போயிடுச்சு (கண்மூடிப் புன்னகைக்கிறார்) பூடகம் ஏதுமில்லாம எல்லாம் தெளிவா தெரிஞ்சுடுச்சுன்னா எழுத முடியாது. தெரியாதவரைதானே ஈர்ப்பு.

கவிதை எழுதிக்கிட்டுத்தான் இருக்கேன், எங்கேயும் அனுப்புறதில்ல. பத்திரமா வச்சுருக்கேன். இந்த வருஷம் ஒரு தொகுப்பு கொண்டு வரும் யோசனையும் உண்டு. ஆனா என் கவிதைகள் மீது எனக்கொரு அதிருப்தி இருந்துக்கிட்டே இருக்கு, ஆகவே பதிப்பிக்கல, அறுபது எழுபது கவிதைகள் கையில இருக்கு.

உங்கள் முதல் மொழியாக்க அனுபவம் என்ன?

ஆமா. ’கொல்லிப்பாவை’யில எனது முதல் மொழியாக்கம் வந்தது. ‘வெறும் நுரைதான்’ ங்கிற ஸ்பானிய சிறுகதை. ஆங்கிலம் வழி மொழியாக்கம் செஞ்சிருந்தேன். சிற்றிதழில அறிமுகம் ஆவதுங்கிறதே அன்றைய காலத்தில பெரிய விஷயம். ஆகவே அது எனது எழுத்து வாழ்க்கையில முக்கியமானது. பிரம்மராஜன் மொழியாக்கம் செய்யச்சொல்லிக் கொடுத்தார். படிச்சேன், பிடிச்சது, செய்தேன். அப்போ ’மீட்சி’ வந்துகொண்டிருந்தது, அதில கொடுக்காமல் கொல்லிப்பாவையில ஏன் கொடுத்தேன்னு இப்போ யோசிக்கும்போது, ஆச்சரியமாக இருக்கு. அவங்களோட மொழியில இது இல்லைங்கிறதால பதிப்பிக்க மாட்டாங்கன்னு ஒரு பயம். ’கசடதபற’ வந்திருந்தால் அதிலும் கொடுத்திருக்க மாட்டேன். ஏன்னா, நான் வேறொண்ணை முயற்சி செஞ்சு பாக்கிறேன், புழக்க மொழிக்குப் பக்கத்திலே இருக்கணும். ஆனா வெகுமக்கள் ரசனைக்கான கதையா இருக்கக் கூடாது. திருகித் திருகி இடியாப்பம் பிழியறதில் எனக்கு நம்பிக்கை இல்லை.

உங்கள் வாசிப்பு எங்கிருந்து தொடங்கியது? எப்படி வளர்ந்தது?

என்னுடைய பிராயத்தைச் சேர்ந்தவங்க எல்லாருக்கும், அநேகமா, ஒரே இடத்திலிருந்துதான் வாசிப்பு தொடங்கியிருக்கும். காமிக்ஸ். அதிலயும் முத்து காமிக்ஸ். அதிலிருந்த கதாபாத்திரங்களுடைய பெயர்களும் முகங்களும் கூட எனக்கு நினைவில் இருக்கு, சி.ஐ டி லாரன்ஸ்- ஜூடோ டேவிட் என ஒரு ஜோடி. அப்புறம் ஜானி நீரோ. அவருடைய அசிஸ்டென்ட் ஸ்டெல்லா ன்னு ஒரு அம்மா. இரும்புக்கை மாயாவி! அவர் எனது டார்லிங். அது ஒரு மேஜிக். அவர் என்ன செய்வாருன்னா, பவர் தீர்ந்துடுச்சுன்னா எலெக்ட்ரிக் பாயிண்டில் கையை நுழைப்பார். உடல் முழுக்க மறைஞ்சுடும், இரும்புக் கை மட்டும் தென்படும். காத்துல இரும்புக் கை மட்டும் பறப்பதுங்கிறது ஒரு பெரிய ஃபாண்டஸி! அப்புறம் வீட்டில் விகடன், குமுதம், கல்கி என அப்பா வாங்கும் பத்திரிகைகளை வாசிப்பேன். ஒரு பக்கம் குழந்தைத்தனமான ஃபேண்டஸி, இரும்புக் கை மாயாவியைப்போல; மறுபக்கம் சாண்டில்யன்னு கலவையாக வாசிப்பேன், உள்ளூர ஒருவித லிஸ்ட்லஸ் தன்மை இருந்திருக்கு, இன்னிக்குவரை என் வாசிப்பில் அதுதான் தொடருது.

தள்ளாட்டம், ஊசலாட்டம், நிலையின்மை, நிம்மதியின்மைன்னு சொல்லலாம். வாழ்க்கைச் சூழலும் அதற்கு ஏதுவாக அமைஞ்சது, பதினோரு வயசுல அப்பா காலமானார், இயல்பாக, வேறென்ன செய்ய முடியும், ஓடி விளையாட முடியாத உடல்வாகு வேறே. ஆக, ஒரு திண்ணை அங்கே சில புத்தகங்கள் – அதுதான் என் உலகம். அந்தச் சமயத்தில் ’ராணிமுத்து’ ஒரு ரூபாய்க்கு ஒரு புத்தகம் என்று அறிமுகம் செய்தாங்க, அதில வெளிவரும் நூல்களை அப்பா வாங்குவார், வெள்ளிக்கிழமை – கருணாநிதி எழுதியது, அறிஞர் அண்ணா எழுதிய பார்வதி பி.ஏ போன்ற கதைகள் எல்லாம் வாசிச்சிருக்கேன்.

உங்களது ஆங்கில வாசிப்பு எப்போது தொடங்கியது? அது எப்படி பரிணாமம் அடைந்தது…

நீங்களாக எனக்கு ஆங்கில வாசிப்பு உள்ளதா ஊகிச்சுக்குறீங்க. நல்லாருக்கே. வாசிப்பைப்பத்திச் சொல்றதா இருந்தா நான் மிகப்பெரிய பூஜ்யம். இரண்டு அர்த்தத்தில பூஜ்யம். ஒன்னு – என்னுடைய சமகால எழுத்தாளர்கள் வாசித்த அளவுக்கு, அல்லது வாசித்ததாக சொல்லிக்கொள்ளும் அளவுக்கு, நான் வாசிச்சதில்லை, மேலும் நானே உத்தேசிச்ச அளவுக்கு எனக்கு வாசிக்க முடிஞ்சதில்ல. நான் 35 வருஷங்கள் ஸ்டேட் பேங்குல வேலை பாத்தவன். ஒழுங்காக வேலை பாத்தேன். (அழுத்திச் சொல்கிறார்) ஆகவே எனக்குக் கிடைத்த அவகாசம் அவ்வளவுதான். ஒரு விஷயம் சொல்லலாம், முக்கியம் அல்லாத எதையுமே நான் வாசிச்சதில்லை. முதல் அஞ்சாறு பக்கங்களிலேயே தெரிஞ்சுடும். அப்பறம் அதோட போய்ப் போராட மாட்டேன். இரண்டாவது, நான் படித்த புத்தகங்கள்ல எல்லாமே இரண்டு வரி படிச்சுட்டு இரண்டு நாள் சிந்திக்கும் வகையில இருந்தவை, அது எனக்குப் போதுமானதாக இருந்தது,

பட்டியல் கொடுக்கமாட்டேன். (தீர்மானமாகத் தலையசைக்கிறார்) எந்தெந்தப் புத்தகம்னு சொல்லமாட்டேன், ஏன்னா இதுல மறைமுகமான சுட்டல் ஒண்ணு இருக்கு. எனக்கு இப்படி நடந்தது, எழுத்தாளர் எதையும் பரிந்துரைக்கக் கூடாதுன்னு நான் நினைக்கிறேன். ஏன்னா தானாக மலரவேண்டிய வாசகனை அது கட்டுப்படுத்தி சொதப்பிவிடும்னு நினைக்கிறேன்.

ஆங்கிலத்தில் துப்பறியும் கதைகள் போன்ற பரப்பிலக்கிய தாக்கம் ஏதும் உண்டா என அறிய விரும்பினேன்…

அது என்னன்னா, ஆங்கிலத்திலும் சரி தமிழிலும் சரி நீங்க ஒரு எழுத்தாளரைச் சொன்னா ஒரு சில பக்கங்களாவது வாசிச்சுருப்பேன். ஆனா அதுவும்கூட சிறுகச் சிறுகக் குறைந்துகொண்டே போனது. ஒரு கட்டத்தில் படிக்க வேண்டாம்னு தோணும். நான் அந்த இடத்துக்கு, கிட்டத்தட்ட, வந்துட்டேன். கடமையாக இன்னைக்கு காலைல எந்திரிச்சதும் நூறு பக்கங்களாவது படிச்சே ஆகணுங்கிற கடப்பாடையெல்லாம் கடந்தாச்சு. போதும்னு தோணிடுச்சு. உங்களுக்கு ஊக்கம் அளிக்கக்கூடிய, உங்க இலக்கியத்திற்கு உதவக்கூடியதை மட்டும் படிச்சா மட்டும் போதும். நான் இலக்கிய செயற்பாட்டாளர் இல்லை. ஆகவே என்னை நானே புதுப்பித்துக்கொண்டேயாக வேணுங்கிற நிர்ப்பந்தம் இல்லை. ஆகவே இதுவரை வந்ததை எல்லாம் வாசிச்சு அதப்பத்தி அபிப்பிராயம் வச்சுக்கிட்டேயாக வேணுங்கிறதும் இல்லை.

தியாகச் செயல்கள் புரிய வேண்டாம் என்கிறீர்கள்!

நல்லாருக்கே! (புன்னகைக்கிறார்). நான் விமர்சகனா செயல்பட்டதே இல்லை. அப்புறம் என் இலக்கியக் கோட்பாட்டைக்கூட வரையறுத்து, தெளிவாக்கி வச்சக்க வேணும்னு நிர்ப்பந்தம் ஏதும் எனக்குக் கிடையாது. இன்னைக்கு ஒரு விதமா எழுதுவேன்; இது வேண்டாம்ன்னா, நாளைக்கி வேறுவிதமா எழுதுவேன். இந்த சுதந்திரத்தின்மீது உக்காந்துதான் செயல்பட்டுட்டிருக்கேன். புனைவு எழுத பிடிக்கிறது; கவிதைகள் எழுதப் பிடிக்கிறது; அதை மட்டும் செய்றேன். அதுக்கு எதெல்லாம் அனுசரணையா இருக்கோ அதை எல்லாம் வாசிக்கிறேன். இன்னைக்குக் காலைல எந்திருச்சு இந்த கதைக்குப் புறநானூறு பாடல் ஒண்ணு இருந்தா நல்லா இருக்கும்னா, அதுக்குத் தேவையானதை மட்டும் படிப்பேன், புறநானூறு பத்தி ஆத்தன்டிக்கா பேசணுங்கிற அளவில் எல்லாம் கிடையாது.

பொதுவாகவே நிபுணத்துவம் என்பது புனைவு எழுத்தாளருக்கு அதிகம் தேவையில்லை என்பது உங்கள் எண்ணம்தானே…

ஆமா. நிபுணத்துவம்ங்கிறது அந்தந்தத் துறை சார்ந்தவங்களுக்கு இருந்தா போதும். உதாரணமா, சைக்காலஜியில் நான் நிபுணனாக இருக்க வேண்டியதில்லை, ஒருவேளை இருந்தேன்னா, சைக்காலஜி பாடப் புத்தகத்தில இருக்கிற ஒவ்வொரு பக்கத்திற்கும் ஒரு கதை எழுதிக்கிட்டு உக்காந்திருப்பேன். இயற்கையா மலரக்கூடிய ஒண்ணை செய்யாம, என் நினைவிலிருந்து, நான் படித்ததில் இருந்து ஏதோ ஒண்ணை நகலெடுத்துட்டிருப்பேன்.

நீங்கள் தத்துவம், அறிவியல் போன்றவற்றைக்கூட இதே அளவில்தான் கதைகளில் கையாள்கிறீர்கள் இல்லையா?

எக்ஸாக்ட்லி. நான் தத்துவவாதியோட கோணத்தில நின்று கதைக்குள் இயங்கறதில்ல. எனது தத்துவம் தொடர்பான கேள்விகள், மெட்டாஃபிஸிக்ஸ் தொடர்பான கேள்விகள் எல்லாமே பாமரனுடைய கேள்விகள். வேணும்னா இப்படி சொல்லிக்கலாம், நான் பாமர எழுத்தாளன்தான்! பேட்டிக்குத் தலைப்பு கிடைச்சுடுச்சுல்ல! (சிரிக்கிறார்) கெட்டிக்கார எழுத்தாளனோ, அறிவுஜீவி எழுத்தாளனோ இல்லை. என்னை எழுத்தாளன்னே சொல்லவே தயங்குறாங்க சிலபேருங்கிறதையும் கணக்கில கொள்ளணும்! திரும்பச் சொல்றேன், சொல்லப்பட்ட வடிவத்தில் உள்ள எதன் மீதும் எனக்குப் பெரிய அபிப்பிராயம் இல்லை. நான் கண்டு தீண்டி நுகர்ந்து தொட்டுணரக்கூடிய ஒன்று இருக்கிறது இல்லையா. அதுக்கு எதெல்லாம் உதவிகரமா இருக்கோ, அதைக் கடத்துறதுக்கு எதெல்லாம் உதவிகரமா இருக்கோ அது மட்டும்தான் எழுதும்போது என் கவனத்திற்கு உரியது. அப்படின்னா நாங்களெல்லாம் படிக்க வேணாம்னு சொல்றீங்களான்னு ஒருத்தர் கேக்கலாம். படிங்க சார். சந்தோஷமாப் படிங்க.. நிறையப் படிங்க..

சமீபத்தில் நீங்கள் பங்குகொண்ட இலக்கிய நிகழ்வுகளை கவனிக்கிறேன். உங்கள் ரசனை என்பதைத் தாண்டி உள்ள நூல்கள் சார்ந்த நிகழ்வுகளில் பங்கு பெறுகிறீர்கள். சமரசமற்றும் கரிசனையுடனும் கருத்துக்களை வைக்கிறீர்கள். நமது ரசனைக்கு முரணான விஷயங்களில் ஈடுபடத்தான் வேண்டுமா?

ரசனைங்கிறதுக்குள்ள எல்லாத்தையும் அடக்க வேண்டுமா என்ன? அது நியாயமில்லை. ஆனால் பிடிக்கிறது பிடிக்கல்லைங்கிறதைத் தாண்டி வேற கோணங்களில் இருந்து நம்மால கருத்து சொல்ல முடியலாம்; அது நமக்கும் புதுசாக இருக்கும், கேப்பவருக்கும் பயனுள்ளதா இருக்கும். என்னளவில் எனக்கு பிடிச்சதை மட்டும்தான் வாசிப்பேன்னு ஒரு அளவுகோல் இருக்கு. எந்த ஒரு கலை வடிவத்தையும் மதிப்பிட ஒரு அளவுகோல் உண்டுதானே. ஆனால் ஒரே அளவுகோல்தான் உண்டு என்பதல்ல. அந்த அளவுகோலே நாமதானே. முதல் பத்து பக்கங்கள்ல என்னை ஈர்க்காத நாவல் நூறு பக்கங்களிலோ ஆயிரம் பக்கங்களிலோகூட என்னை ஈர்க்காது. நாவல் என்றில்லை, சிறுகதை, கவிதை என எல்லாவற்றுக்குமே ஒரு டேக் ஆஃப் புள்ளி இருக்கும். மீனம்பாக்கத்தில புறப்படவேண்டிய விமானத்திக்கு ஓடுதளம் மீனம்பாக்கத்திலேயே முடியணும். செங்கல்பட்டுவரை நீளக் கூடாது. (சிரிக்கிறார்).

ஆனாலும் பணிக்கப்பட்ட வேலைன்னா, இப்ப ஏதோ ஒரு கூட்டத்தில உரையாற்றனும்னா, பிடிக்காத நூலாக இருந்தாலும் முழுசா வாசிப்பேன். மத்தபடி, நான் இன்னும் பத்துப் பதினஞ்சு வருஷங்கள்தான் இருக்கப்போறேன் – என் நேரத்தை வீணாக்க எனக்கு விருப்பமில்லை. இதுவும் சுவாரசியம் சார்ந்தது இல்லே. எனது அளவுகோல் சார்ந்ததுதான். ஜெயமோகனாக இருந்தாலும் சர்வபள்ளி ராதாகிருஷ்ணனாக இருந்தாலும் இதுவேதான்…இப்படியெல்லாம் எதாவது சீரியஸா சொன்னாதானே எழுத்தாளர்னு ஏத்துக்குவீங்க. ஆமா, அப்பப்ப இப்படி ஏதாவது சொல்லணும் (சிரிக்கிறார்).

உங்கள் ‘இடம்பெயர்தல்’ கதையில் திருகாட்டுப்பள்ளி பற்றி எழுதியுள்ளீர்கள். அதுதான் என் ஊர். அங்கு வந்ததுண்டா, விவரணைகள் துல்லியமாக இருக்கிறது. மிக நல்ல கதை அது.

திருக்காட்டுப்பள்ளிக்கு வந்ததில்ல. துல்லியமா இருக்குன்னு நீங்க சொல்றதுல மகிழ்ச்சி. 1988 ஆம் வருஷம் தேவதச்சன் அறிமுகம் ஆன அன்னிக்கு என்கிட்ட ஒரு விஷயம் சொன்னார், அது இன்னிக்குவரை என்னோடயே இருந்துட்டுருக்கு. ஜே ஜே சில குறிப்புகள் முதல் வரி ஞாபகமிருக்கிறதுதானே, ஆல்பர் காம்யு பத்தின குறிப்பிலேந்து ஜே ஜே என்ன மாதிரியான ஆளுங்கிறது நமக்குத் தெரிஞ்சுடுது. பாத்திரத்தோட பேரு தொடங்கி ஒவ்வொண்ணுக்கும் ஏதோ ஒரு உள்ளர்த்தம் இருக்கு, ஏதோ ஒண்ணைக் குறிக்குது. ஆனால், அதெல்லாம் ஒரு தலைமுறையோட முடிஞ்சுடுச்சு. இப்போ அதெல்லாம் வேண்டியதில்லை, என்ன வேணுமானாலும் எழுதலாம், (கண்களை மூடிக்கொண்டு ஆமோதிக்கும் வகையில் தலையாட்டியபடி) ஆமா, என்ன வேணுமானாலும் எழுதலாம். எல்லாத்துக்கும் ‘மனதைத் தொட்டுவிட்டது’ என கமென்ட் போட ஒரு பெரிய கூட்டமே இருக்கு, அதுதான் பெரிய debacle.

எங்கிட்ட யாராவது என் கதை நல்லா இருக்குன்னு சொன்னா பதட்டமாயிடுவேன். மேக்கொண்டு ஏதும் செய்ய முடியாது, பாராட்டை வாங்கி பைக்குள்ள வச்சுக்கலாம். அவ்வளவுதானே.

இன்னிக்குக் காலைல எழுதுற கதையில எனக்கு ஒரு சிக்கல் இருக்குன்னா, அதுக்கு அந்தப் பாராட்டு உதவாது. ஆனா நல்லாயில்லைங்கன்னு சொல்லிக்கிட்டு ஒருத்தர் வந்தா, ஒருவேளை அது இன்னைக்கு நான் தடுமாறும் அதே புள்ளின்னா, அது எனக்கு உதவிகரமா, ஆக்கபூர்வமா, இருக்க வாய்ப்புண்டு. அவர்ட்ட பேசிப் பார்ப்பேன், நான் இப்படி இருக்கும்னு நினைச்சுச் செஞ்சேன், அது உங்களுக்கு வந்து சேரலையோன்னு கேப்பேன். ஆனால், பாராட்டு இருக்கே அது குழந்தைங்க பஸ் டிக்கெட்டை சேர்த்து வைக்கிற மாதிரித்தான், வாங்கி வாங்கிச் சேத்து வச்சுக்கலாம், பயன் ஒண்ணும் இல்லை. அதை வச்சுக்கிட்டு எங்கயும் போக முடியாது!

நீர்ப் பறவைகளின் தியானம் முன்னுரையில் ’நானொன்றும் சுயம்பு இல்லை’ என சொல்லியிருக்கிறீர்கள். ஆனால் அது சர்காஸ்டிக்காக ’நான் சுயம்பு என எனக்கு தெரியும்’ என்பதாகவே தொனிக்கிறது…

அப்படியா தொனிக்கிறது?! இது ஒருவகையான வாசிப்பு. ஜெயமோகன் இதைப் பத்தியும் எழுதி இருக்கான், ’தமிழில் மட்டும்தான் கட்டுடைப்புங்கிறது நீ என்ன வேணுமானாலும் எழுது; நான் என் இஷ்டப்படிதான் வாசிப்பேன்னு இருக்கு!’. நீங்க சொல்ற மாதிரி, ஒரு எழுத்தாளரோட எல்லா வாசகங்களையும் ஐயம்கொள்ள தொடங்கினோம்ன்னா, அப்புறம் அவரை எதுக்காக வாசிக்கணும்?
முன்னுரையில் பொய் சொல்ல மாட்டான் என நம்பத்தானே வேணும்!

தொடர்ந்து உங்கள் கதைகளில் தந்தை பேருரு கொண்டு, வாஞ்சை மிக்க ஆளுமையாக வருகிறார். இன்னும் சொல்வதானால் நவீன எழுத்தாளர்கள் எல்லோரும் பொறாமைப்படக் கூடிய தந்தை ஆளுமை என்றுகூடச் சொல்லலாம்…

கதை எழுதக்கூடிய பலரைக் கண்டு நான் பொறாமைப் பட்டுருக்கேன். அவங்களோட அப்பா எல்லாம் ரொம்பகாலம் உயிரோட இருந்திருக்காங்க, இல்லையா. என்னுடைய பதினோரு வயசில அப்பா காலமானார். அதனாலேயேகூட அவர் எனக்கு நாயகனாக மட்டுமே எஞ்சியுள்ளார். ஒருவேளை நான் அடல்ட் ஆகும்வரை இருந்திருந்தா, அவரிடமிருந்து எனக்கு விலகல்கூட ஏற்பட்டிருக்கக் கூடும். இப்போது, கடந்த காலத்தில் உறைந்தவராகவே எனக்கு அவர் இருக்கிறார். அடுத்து, என் கதைகளில் வரும் அப்பாவுடைய எல்லா இயல்புகளுடனும் ஒருவர் வாழ வேண்டும் என்றால் குறைஞ்சது ஆயிரம் வருஷங்கள் வாழணும்! என்னுடைய ஆதரிசத் தந்தைன்னு ஒருத்தர் இருக்கார் இல்லையா. அவரைத்தான் தொடர்ந்து எழுதுறேன்.

கிடைக்காமல் போன அப்பாவைக் கொண்டு எனக்கு ஆதரிசமான அப்பாவை உருவாக்குகிறேன்னு சொல்லலாம். அப்பா என்னும் வெற்றிடத்தை நிரப்பிக்கொண்டு இருக்கிறேன். அவரை முழுக்க முழுக்கத் தரையில் நடமாடவைத்துள்ளேன் என்பதைத்தான் எனது வெற்றி, அல்லது பலம்ன்னு நம்புறேன். அவரை ரத்தமும் சதையுமா, வாசக மனதில் நம்பகத்தன்மையுடன் உருவாக்கியிருக்கிறேங்கிறதை என் வெற்றின்னுதான் நினைக்கிறேன்.

நிச்சயமாக. அவர் ஒரு கனிந்த மனிதராக, ரசிகராக உருவாகியுள்ளார்.

ஆமாம். ஆனால் அப்படி அவர் ஒற்றைப்படையாகவும் இல்லை, ’மணற்கேணி’யில் ஒரு நிகழ்வு வருமே ஞாபகமிருக்கா? அண்ணன் திருமணமாகி தனிக்குடித்தனம் போயிருப்பான், அவனது பையைத் தூக்கிட்டு வரச்சொல்லி, எவ்வளவு பைசா வச்சிருக்கிறான்னு திறந்து பார்ப்பார். இந்தச் சமநிலை இருப்பதால்தான் எல்லோருக்கும் ஈர்ப்பு உடைய ஆளுமையாக அவர் உருவாகியிருக்கார்ன்னு நினைக்கிறேன்.

தந்தை என்றதும் நினைவுக்கு வருகிறது, மூன்று ஜாமங்கள் கொண்ட இரவு கதையில் கிட்டத்தட்ட ஏழு தந்தைகள் இருப்பார்கள். கிருஷ்ணன் ஒரு அப்பா, அவர் தனது அப்பாவின் நினைவிலேயே இருக்கிறார். நினைவுகூர்தலாக சுகவனம் வருகிறார். இன்னும் சில அப்பாக்கள் வருவார்கள்…

ஒரு அப்பாவை நீங்க விட்டுட்டீங்க. ஒரு பையனோட கண்ணு முன்னாடி அவனோட அப்பா சுடப்பட்டு கிணத்தில விழுவார்… அந்தக் கிணறு ஒரு படிமம். இல்லாமல்போன அப்பாக்கள் அதுக்குள்ளதான் இருக்காங்க. மகன்களும் மகள்களும் வெளியிலேயிருந்து அவங்களைக் கூப்பிட்டுக்கிட்டே இருக்கிறாங்க. (முகபாவம் சட்டென மாறுகிறது. தீவிரமாக இருந்த முகம் குழைந்து புன்னகை அரும்புகிறது) இப்படி ஒரு வரியைச் சேர்த்திருந்தா எல்லாருக்கும் புரிஞ்சிருக்கும்தானே!

தேவதச்சனை உங்களுக்கு தந்தை வடிவம் என கொள்ளலாமா? அவரை நீங்கள் எப்படி வந்தடைந்தீர்கள் என சொல்லலாமா?

ஆமாம். ஆனால், தேவதச்சனுக்கு முன்னரே சுந்தரராமசாமியைக் கண்டடைந்திருந்தேன்.

ஓ அப்படியா! எப்படி அவரைச் சந்தித்தீர்கள்?

‘புளியமரத்தின் கதை’ ‘ஜே ஜே சில குறிப்புகள்’ ‘பிரசாதம்’ ‘திரைகள் ஆயிரம்’ ன்னு இந்த நாலு புத்தகங்களையும் சுந்தர ராமசாமியைப் பாக்கிறதுக்கு முன்னயே, 81 – 82 ஆம் வருஷத்துலயே, அதாவது என் கல்லூரிக் காலத்திலேயே வாசிச்சிருந்தேன். 84ஆம் வருஷம் அவரை சந்திச்சேன், சிறுபத்திரிகை ஆட்களுக்கு ரவி ஸ்ரீனிவாஸைத் தெரிஞ்சிருக்கலாம், ‘நிகழ்’ மாதிரியான இதழ்களில் எழுதியவன். இப்போ தமிழ் இலக்கியச் சூழல்லே இல்லை. தொடர்பற்று, தள்ளி இருக்கான். அவன் என் கல்லூரி ஜூனியர். அவனுக்கு சுராவுடன் கடிதத் தொடர்பு இருந்துச்சு. அவர் கடிதங்களை எல்லாம் எனக்குக் காட்டுவான். தட்டச்சு செய்யப்பட்ட கடிதங்களைப் பாத்திருக்கிறேன்.
புளிய மரத்தின் கதை புரியும். ஆனால் அதைப் பத்திப் பேசப்படுகிற கோட்பாடுகள் புரியாது. இப்போதுவரை அப்படித்தான் மார்க்வஸை, போர்ஹேஸைப் புரியும். ஆனால் அவங்களைப் பத்தி யாராவது எழுதினால் புரியாது! தமிழின் தனித்துவமான கட்டுரை மரபு இது! (ஆமோதிப்பதுபோல தலையாட்டுகிறார்).

அந்தச் சமயத்தில ஒரு திருமணத்துக்கு நண்பர்கள் எல்லாம் சேர்ந்து பாளையங்கோட்டை போனோம், அங்கிருந்து கன்னியாகுமரி போனோம். திரும்பும் வழியில், நாகர்கோவில் பக்கத்திலதானே இருக்கு அங்கதானே சுந்தர ராமசாமி இருக்காருன்னு ரவி ஸ்ரீனிவாஸ் சொன்னானே; போய்ப் பார்க்கலாமேன்னு தோணினது. விலாசம் எல்லாம் நினைவிருந்துச்சு, சுதர்சன் டெக்ஸ்டைல்ஸ். பஸ்ஸ்டாண்டுக்குக் கிட்டே. நேராக கடைக்குப் போனேன். சுந்தர ராமசாமியை ஒருமுறை சந்திச்சால் வாழ்நாள் முழுக்க மறக்க முடியாது. யாராக இருந்தாலும். அவரது விரோதிகளுக்கும் அதே சிக்கல்தான், அவரை ஒருமுறை சந்திச்சிருப்பாங்க; ஆகவே மறக்க முடியாமல் அவதிப்படுவாங்க. மிக முக்கியமான ஆளுமை, இலக்கியவாதியாக மட்டுமில்லாம, தனிநபராகவும் முக்கியமான ஆளுமை.

அவருடன் நேரடி உறவில் இருந்த ஒரு தலைமுறை எழுத்தாளர்கள் சுந்தரராமசாமியால் பாதிப்புக்குள்ளானார்கள், வழிகாட்டப்பட்டார்கள் இல்லையா. உங்களுக்கு அவர் எதை அளித்தார் அல்லது எதைப் பெற்றுக்கொண்டீர்கள்?

அவர் நேரடியாக இலக்கியத்தில் எனக்கு கொடுத்தது எதுன்னு சொன்னா, என் கவிதையில இருக்கக்கூடிய சொற்சிக்கனம். ஆமா, அப்படி ஒண்ணு என் கவிதைகள்ல இருப்பதா நம்புறேன். அவருடைய கவிதைகளில் இருந்தும் அவரிடமிருந்தும்தான் அதை கத்துக்கிட்டேன், அது ஒரு நவீனத்துவத் தன்மை. எனக்குள்ள நவீனத்துவம்கிறது நவீனத்துவம்னு நான் அறியாமலே எனக்குள்ளே நுழைய சுந்தர ராமசாமிதான் காரணம்னு சொல்லலாம். ஆனால் பிற்காலத்தில, புனைவுகள் எழுதத் தொடங்கியபோது அவருடைய பாணியை நான் பின்பற்றல. அவரிடம் தீவிரமான சமூகச் சீர்திருத்த நம்பிக்கை இருந்ததுன்னு இப்போத் தோணுது, அவருடைய கட்டுரைகள்ல அதை‌ நிறையப் பாக்க முடியும். ஒருவித விஷ்ஃபுல் திங்க்கிங் (Wishful thinking) வழியாதான் அவரது இலக்கியம் முன்நகர்ந்ததுங்கிறதை இப்பப் பாக்கிறேன். இப்படி இருந்திருந்தா நன்றாக இருந்திருக்குமே என்னும் நம்பிக்கை. எனக்கு அப்படியில்லை, உள்ளதை இன்னும் ஆழ்ந்து பார்க்க முடியுமாங்குறதே எனது வழியா இருந்து வருது.

அப்புறம், இருக்கிறதில ஒரு சமநிலையும் சீர்குலைவும் கலந்தேதான் இருக்கு. சமநிலையாக இருக்குன்னும் சொல்லமுடியாது, அதுக்காக முழுக்கத் தாறுமாறாக உள்ளதுன்னும் சொல்ல முடியாது, ஏதோ ஒரு விகிதாசாரம் அதக்குள்ள ஓடிட்டிருக்கு. அதை கைப்பற்ற முயல்கிறோம். நேரடியாகக் கைப்பற்ற முடியல்லைன்னா, ஃபேண்டஸிக்குள்ள போயி ஒரு மாயத்தை நிகழ்த்திப் பார்க்கிறோம். அவ்வளவுதான்.
சுந்தர ராமசாமியிடம் எனக்கு கிடைத்த தாக்கம்ங்கிறது, மொழியை கையாள்வது, மொழியின்மீதான அக்கறை, வடிவம் தொடர்பான கவனம் – இதையெல்லாம் குறிப்பிடலாம். ஆனால் அது குருகுலத்தில் ஆசிரியர் மாணவருக்கு கற்பிப்பதுபோல இல்ல. அவர் செய்து காட்டினார், அவர்ட்ட இருந்து நான் கத்துக்கிட்டேன்னு சொல்லலாம்.

தேவதச்சனுடனான உறவை அப்படிச் சொல்ல முடியாது. அவரோட மோதியும் உரசியும்தான் கத்துக்கிட்டேன். அவர் ஒண்ணைச் சொல்வார், எனக்குப் பிடிக்காது, சண்டை போடுவேன், அப்புறம் பத்துப் பதினஞ்சு நாளிலெ எனக்கே புரியும். நேரே அவரிடம் போய், நான் அப்படிச் சொல்லியிருக்க கூடாதுன்னு மன்னிப்பெல்லாம் கேட்டிருக்கேன், இந்த உறவில் இப்படி ஒரு touch and feel தன்மை இருக்கு. எப்போத் தரையளவு தாழ்ந்து கேட்டுக்குவேன், எப்போ சரிக்குச்சரியா நின்னு சண்டைபோடுவேன்னு சொல்ல முடியாது.

சுந்தர ராமசாமி உறவில அப்படி இல்லை. கண்ணாடிச் சுவருக்கு மறுபக்கம் அவர் நிகழ்த்திக்கொண்டிருப்பார், நான் மறுபக்கத்திலிருந்தபடி கூர்ந்து கவனிப்பேன். வேடிக்கை பாப்பேன். ஆனால் சத்தம் போட்டால் கேட்காது. அவர் என்னைவிட இருபத்தைந்து வயது மூத்தவர். முந்தைய தலைமுறையைச் சேர்ந்தவர். இந்த கவனம் குறையாமலேதான் அவருடைய உறவை நான் பேணினேன். வயது வித்தியாசமெல்லாம் அவருக்கு ஒரு பொருட்டேயில்லை. சமதையாகத் தோளில் கைபோட்டுப் பேசக்கூடியவர். தேவதச்சன் உடனானது சத்தமும் ஸ்பரிசமும் சேர்ந்த ஒரு உறவு. இன்றுவரை நான் எழுதியிருக்கும் அனைத்தையுமே அவருக்குத்தான் சமர்ப்பணம் செய்தாக வேண்டும் – நியாயப்படி!

சுராவிடமிருந்து தொடங்கிய எழுத்தாளர்கள் என எடுத்துக்கொண்டால், நாஞ்சில் நாடனில் இருந்து தொடங்கலாம், நீங்கள், ஜெயமோகன், சுரேஷ்குமார இந்திரஜித் தொடங்கி கே.என். செந்தில்வரை என எல்லோருமே சுராவால் தொடப்பட்டவர்கள். ஆனால் அவரிடமிருந்து வெவ்வேறாக கிளைத்து வளரும் தன்மையை கவனிக்கிறேன். அவரது பாணி, பார்வை இரண்டிலிருந்தும் வேறுபட்டதான தன்மை.

அது அவருக்குப் பெருமைதானே. றெக்கைக்குள்ளேயே அமுக்கி வைத்துக்கொள்ளாமல் சுதந்திரமாக ஓடவிட்டார் என்றுதானே அர்த்தம்.

இந்தத் தனித்தன்மை எந்த புள்ளியில் ஏற்படுகிறது? உதாரணமாக உங்களது புனைவுமொழி அவரது பாணியில் இருந்து விலகியது என சொல்லலாமா?

அப்படியெல்லாம் ஏதாவது செஞ்சா, நாம ஏதோ விலகணும்ன்னு திட்டமிட்டுச் செஞ்சதா ஆகாதா! அப்படியில்ல. எனக்கு ஒரு வடிவத்தோட விளிம்புகள் போதலைன்னு என்னிக்குத் தோணுதோ, அன்னிக்கு நான் வேறொரு விதமாய்ச் செஞ்சு பாக்கிறேன். அவ்வளவுதான். எனக்குன்னு தனியாக சில ரசனைகள் உண்டு. நான் உவக்கிற பல எழுத்தாளர்களை சுந்தர ராமசாமி உவக்க மாட்டார். அவர்களை வாசித்திருப்பார். ஆனால், அவருக்குப் பிடித்த எழுத்தாளர்களா அவங்க இருக்க மாட்டாங்க. மிக முக்கியமான உதாரணம் ‘கார்லோஸ் கேஸ்டநெடா’. அவரை எனக்கு ரொம்பப் பிடிக்கும். ஆனால் அவரை சுரா பொருட்படுத்தமாட்டார், இந்த மாதிரி எழுத்துக்கள் சார்ந்து அவருக்கு எதிர்மறையான அபிப்பிராயம்தான் உண்டு. அதற்கான நியாயமும் அவரிடம் உண்டு.

பொதுவாக லத்தீன் அமெரிக்க இலக்கியம் பற்றி அவருக்கு நேர்மறை அபிப்பிராயம் இருந்ததா?

அப்படி ஏதுமிருக்கா? எங்கயாவது பேசியிருக்கிறாரா? புனைவு எழுதுபவர் விக்கிரமாதித்யன் கதையையோ 1001 அரேபிய இரவுகளையோ விட்டு தள்ளி நிற்க முடியாதுன்னு தான் நம்புகிறேன். சுரா இந்த இரண்டு கதைகளைப் பத்தி ஏதும் சொன்னதா நினைவில்லை. பொதுவாகவே, இது மாதிரி யதார்த்தத்தைவிட்டு விலகிப்போகும் எழுத்துக்கள்மேல அவருக்கு ஒரு அவநம்பிக்கை இருந்திருக்கலாம். அது அவருடைய தேர்வு.

’வெயிட் பண்ணாம காத்திரு’ என்று தேவதச்சன் பற்றிய ஒரு சம்பவத்தை நீங்கள் சொன்னது நினைவில் உள்ளது. அது பிறகு ஒரு கதையிலும் வரும். ஒரு ஜென் கதை போல..

ஆமாம். ’ஒளிவிலகல்’ தொகுப்பில. நான்கு திருடர்கள் வருவாங்க. தாவோ மியான் சொல்வதாக வரும். என்னுடைய எல்லாக் கதைகளும் என் நினைவில் இல்லை, தொடக்கத்தில் எழுதிய கதை என்பதால் நினைவில் இருக்கு. பிற்காலக் கதைகள் இதே அளவு நினைவில் இருப்பதில்லை.

ஆம் எந்த கதை எங்கு வருகிறது என்பது எங்களுக்கே தோராயமாகத்தான் நினைவிருக்கிறது!

அப்படியெல்லாம் நினைவில வச்சுக்க முடியுமா என்ன? அப்படி நினைவில் வச்சுக்க வேண்டியதில்லைங்கிறதுக்குத்தானே இந்த உருவம்!

தேவதச்சனை முறையாகத் தெரிஞ்சுக்கிறதுக்கு முன்னமே அவரைப் பாத்திருக்கேன். மதுரையில சுரேஷ்குமார இந்திரஜித், ராஜமார்த்தாண்டனெல்லாம் சேந்து ’சந்திப்பு’ எனும் பேரில கூட்டங்கள் நடத்தினாங்க. அங்கதான் அவரை நான் முதல்ல பாத்தேன். அவங்க நிம்மதியை கெடுக்கிறதுக்குன்னே நான் சுந்தர்காளி எல்லாம் மாசாமாசம் போயி உக்காருவோம். ஒருமுறை கௌரிஷங்கர் கட்டுரை வாசிக்க வந்தார், அதுக்கு தேவதச்சன் வந்திருந்தார். அவரு நான் ராஜமார்த்தாண்டன் எல்லாம் ஒரு டீக்கடையில் பேசிக்கிட்டிருந்தோம். என்ன பேசினோங்கிறதுலகூட ஒருசில விஷயங்கள் நினைவில இருக்கு, ராஜமார்த்தாண்டன் அவருக்கிட்ட ‘இப்ப என்ன செஞ்சுக்கிட்டு இருக்கீங்க?’ன்னு கேக்கிறார். ’கேரிகேச்சர் மாதிரி சிலதை எழுதுறேன்’ங்கிறார் அவர். உடனே நான் ’பிச்சமூர்த்தியோட ’மனநிழல்’ மாதிரியா?’ன்னு கேக்குறேன். தேவதச்சன் என்னைத் திரும்பிப் பாத்தார், ‘நான் அதை படிச்சதில்லையே’ ன்னார். (தேவதச்சன் எப்படிச் சொல்லியிருப்பாரோ அத்தகைய குரலில் முகபாவத்துடன் சொல்கிறார்).

கோவில்பட்டியில் நான் 6 வருஷம் குடியிருந்தேன். நாள்தவறாமல் அவரைப் பார்க்கப் போவேன். ரெண்டு பேருக்குமே ஒருத்தரையொருத்தர் பிடிச்சிருந்துச்சு. அலைவரிசை ஒத்துப்போச்சு. அவரும் எனக்குள்ள ஏதோ ஒரு பொறியை கண்டுகொண்டிருக்கலாம். அவர்ட்டத்தான் ஒரு நவீன கவிதையை வாசிக்கிறது எப்படின்னு கத்துக்கிட்டேன். கவிதைய மட்டும் இல்ல, இலக்கியத்தை வாசிக்கும்போது எதையெல்லாம் கவனத்தில கொள்ளணும்னு கத்துக்கிட்டேன். ஒரு கட்டத்தில, என் வழியாக வாசிக்கும் இடத்துக்கு நகர்ந்து வந்திருக்கிறேன்.

இப்போ வாசிப்பு தொடர்பா எனக்கிருக்கும் நம்பிக்கை என்னன்னா, எனக்கு தெரிஞ்ச எதையுமே ஏத்தாமல் வாசிக்க முடியுமா. ரொம்ப கஷ்டம்தான். ஆனா அதுதான் ஆதரிசமான வாசிப்பாக இருக்கும்னு நம்புறேன். எங்கிட்ட ஒரு பிரதி வருது, அதில என்ன இருக்குங்கிறதை மட்டும்தான் பாக்கணும். அதுதான் ரொம்ப பிரயாசையான விஷயம். ஒரு குழந்தையை விளையாடவிட்டுப் பாக்குறது போல – தூக்கி, கசக்கி, கொஞ்சி எல்லாம் செய்யாம பாக்கணும். என்ன, நிறையக் குழந்தைகளுக்கு விளையாடவே தெரிய மாட்டேங்குது. (சிரிக்கிறார்)

எப்படித்தான் இலக்கிய பிரதியை மதிப்பிடுவது? பிடிக்கிறது பிடிக்கவில்லை, அதற்கப்பால் சொல்ல முடியாதா?

தொகுப்பில் என்ன இருக்குன்னு சொல்லலாம். சமீபத்தில ஒரு புத்தகத்தைப் பத்திப் பேசினேன். நான் உவக்காத, எனக்கு உகக்காத, வேறொரு வகைமை சார்ந்த புத்தகம். ஆனால் அதைப்பத்திப் பேசவேண்டிய சூழல் ஏற்பட்டது. அந்த புத்தகத்தின் இடமென்னன்னு பேசிப் பாக்கிறேன். எனக்குப் பிடிச்சுருக்கு பிடிக்கல்லைன்னோ, நல்லாயிருக்கு இல்லைன்னோ நான் பேசலை. இது இந்த வகையை சார்ந்தது, அதுக்கு நியாயம் செஞ்சிருக்கா, செய்யலையான்னு பேசலாம். விமர்சனம்ங்கிறது அதுதானே. எனக்கு என்னவெல்லாம் தெரியும்னு சோதிச்சுத் தெரிஞ்சுக்கவா எங்கிட்ட விமர்சிக்கச் சொல்லி கொடுக்கிறாங்க? எனக்கு என்னவெல்லாம் தெரியும், தெரியாதுங்கிறதைத்தான் நான் காலம்காலமா எழுதிட்டு வரேனே.

மைண்ட்ஃபுல்னஸ், ஏதோ ஒரு வகையில் அக விழிப்புணர்வுடன் இருப்பது, உங்கள் கலையின் அடிநாதமாக இருப்பதாக தோன்றுகிறது.. கவிதையிலிருந்து இந்த அகவிழிப்பும் கவனமும் பிறக்கிறதா அல்லது அடிப்படையிலேயே அகவிழிப்புடைய ஆளுமை கொண்டவர் என்பதால் படைப்பில் இயங்குகிறீர்களா? உங்கள் கதைக்கான இடுபொருளை மைண்ட்ஃபுல்னஸிலிருந்து பெறுகிறீர்களா?

வாசிச்சது, யோசிச்சது, அறுபதாண்டுகால வாழ்க்கை எல்லாமே படைப்புக்கு உதவுதுங்கிறது ஒண்ணு. சைக்கிள் பழகும்போது யாரோ ஒருத்தர் சீட்டைப் பிடிச்சுக்கிட்டே வருவார். அவர் விட்டது தெரியாமல் நாமே அழுத்த ஆரம்பிச்சு இருப்போம். அவர் விட்டுவிட்டார். அடடே நாமளே ஓட்டுறோம்னு தெரிஞ்சவுடனே ஒரு தடுமாற்றம் ஏற்படும் இல்லையா. செயல்படும்போது சுவாதீனமா அதுக்குள்ள இருப்பீங்க. இப்போ என்னைக் கேட்டால் எனக்குச் சொல்லத் தெரியலை. இது ஒரு அனிச்சைபூர்வமான விஷயம். அது பத்தி நான் என்ன கூறினாலும் என்னை நானே பாராட்டிக்கொள்வதாகத்தான் இருக்கும்; அதாவது, என்ன சொன்னால் என்னை நானே பாராட்டிக்கொள்வேனோ அதைத் தான் சொல்ல வேண்டியதா இருக்கும்.

கலை என்பது ஏதோ ஒருவகையில் இந்த அகவிழிப்பு அனுபவத்தை அளிக்க வேண்டும். இன்றைய சமகால இலக்கியத்தில் எனது வாசிப்பின் எல்லைக்குட்பட்ட வகையில் உங்களிடம் அந்த அனுபவத்தைப் பெறுகிறேன். ’பெயரற்ற யாத்ரீக’னைக் கூட இதன் நீட்சியாகக் காணமுடியும்.

மூணு வகையில சொல்லலாம். நீங்க சொல்லும் மைண்ட்ஃபுல்னஸுங்கிறது ஒண்ணு. அதுக்குப் பக்கத்திலேயே, தாட்ஃபுல்னஸ்னு ஒண்ணு இருக்கு, ஜெயகாந்தனை அப்படி புரிந்துகொள்ளலாம். அப்புறம் ஆர்ட்ஃபுல்னஸ்னு ஒண்ணு இருக்கு. கலாபூர்வமானது, அதில எல்லா அலங்காரங்களுக்கும் இடமுண்டு

கம்பனைப்போல செவ்வியல் இலக்கியங்களை சொல்லலாம்.

எக்ஸாக்ட்லி. தமிழ் ரொம்ப செழுமையான மொழி, எல்லா வகைக்கும் சிறந்த முன்னுதாரணங்கள் உண்டு. மோசமானதுக்கு முன்னுதாரணம் இருக்கிறது போலவே நல்லதுக்கும்கூட உண்டு. (சிரிக்கிறார்) மைண்ட்ஃபுல்னஸ்ங்கிறது ஒரு வகைமாதிரி. நாம என்ன செய்றோம்னா, நமக்கு பிடிச்ச வகைமாதிரி கண்ணுக்குப் பட்டதும் அதுதான் அறுதின்னு நினைச்சுக்கிறோம். அப்புறம் இன்னொண்ணு, நமக்கு அதைமட்டும்தான் செய்யத் தெரியுதுங்கிறதும் இருக்கே! வேறு வகையில் அலங்காரமாக எழுத எனக்குத் தெரியலையே. தெரிஞ்சிருந்தா அதையும் முயற்சி செஞ்சிருப்பேனோ என்னவோ.

நம்மட்ட ஒரு குதிரை இருக்கு, அது குதிரைதான், சந்தேகமில்லை. ஆனா அது பந்தயத்தில் ஓடுமா, பாரம் இழுக்குமா, கடற்கரையில் சவாரிக்கு சுத்தி வருமாங்கிறதெல்லாம், அதோட தன்மையும் நமது விழைவும் சந்திக்கிற ஏதோ ஒரு புள்ளியில நடைமுறையாகும்.

மைண்ட்ஃபுல்னஸ் எனும் சொல்லை நீங்கள் சொன்னதால சொல்றேன், பவுத்தத்தில் ஒரு தனிப் பிரிவாகவே அது இருக்கு, அதைப்பத்தித் தொடர்ந்து பேசுறாங்க. இதைக் கத்துக்கொடுக்கன்னு நிறுவனங்கள் இருக்கு, பயிற்றுநர்கள் இருக்காங்க. இந்தமாதிரிச் சொற்களைப் பயன்படுத்தும்போது உள்ள சிக்கல் என்னன்னா, யுவன் சந்திரசேகரை இப்படி எதுலயாவது கொண்டுபோய்ச் சேர்த்துவிட்டுருவோம்! அதுக்கும் எனக்கும் தொடர்பில்லை, நான் பவுத்தன் அல்ல. பவுத்தம் பற்றி அறிந்தவனும் அல்ல.

நிர்வாணத்தை திடீரெனப் பார்ப்பது என்பது உங்கள் கதைகள் சிலவற்றில் தொடர்ந்து வருகின்றன.. அது வெறும் ஆடையற்ற உடலைக் காணும் அனுபவமாக மட்டும் இல்லையோ என தோன்றுகிறது. அது அரிதான அனுபவமாக, அதிர்ச்சியாக மாறுகிறது. ஒரு வாசகராக, பொருள் ஏற்றப்பட்ட, எனது வாசிப்பாகக்கூட இருக்கலாம், அம்மணம் என்பது கதைக்குள் எப்படியாக வருகிறது.

இரண்டு விஷயங்கள் இருக்கு, ஒண்ணு, nudity per se. அப்பட்டமானது, எல்லா ஆண்களைப் போலவும் எல்லாப் பெண்களைப் போலவும் எனக்குள்ள ஒரு obsession ஆக இருந்திருக்கலாம். ஒண்ணுக்கு மேற்பட்ட இடங்கள்ல ஒரு நிகழ்வோ படிமமோ திரும்பத்திரும்ப வருதுன்னா அது எனக்குள்ள வெளித்தெரியாத ஒரு அப்செஷனாக இருந்திருக்கணும். இரண்டாவதாக, தமிழ்ல பெரும்பாலும் sexual activityயைத்தான் எழுதுறாங்க, sexualityயை இல்லை. இரண்டும் வெவ்வேறு. sexuality பற்றி நீங்கள் எழுதப் போகும்போது நிர்வாணத்தை எழுதுவது தவிர்க்க முடியாததாக இருக்கு. அப்புறம், நிர்வாணத்தை, துய்க்கக் கூடிய விஷயமாகவும், இன்னொரு சந்தர்ப்பத்தில், தரிசனம் சார்ந்த விஷயமாகவும், மற்றொரு தருணத்தில், எதையுமே கொடுக்காத, எதையுமே தூண்டாத, வெற்றுக் காட்சியாகவும்கூட எழுதலாம். இப்படி வேறவேற கதைகள்ல வேறவேற பொருளில வந்திருந்தாப் பரவாயில்லை. எந்தெந்தக் கதைல எப்படி வந்திருக்குன்னு திரும்பப் போய்த்தான் பாக்கணும்.

எனக்கு, நிர்வாணம் என்பது taboo ஆக இருக்க வேண்டியதில்லைங்கிறதைப்போலவே, அது பெரிய கோலாகலமாகவோ கொண்டாட்டமாகவோவும் இருக்க வேண்டியதில்லைங்கிற நம்பிக்கை உண்டு. அதுவொரு இயல்பு நிலை. ஆடைதான் செயற்கையானது. கொஞ்ச காலத்துக்கு முன்ன அப்படி எல்லோருமே அப்பிடித்தானே இருந்திருக்காங்க! அப்படியே தொடர்ந்திருந்தா, இப்போ இருக்க கூடிய சமூக, பொருளாதார, அரசியல் அமைப்புகள் எல்லாமே இல்லாமக்கூட போயிருக்கலாம். நாம வெறும் பாலூட்டிகள் மட்டும்தாங்கிற ஞானம் நமக்கு கிடைச்சிருக்கும். நம்மை நாம உச்ச இனமாக கருதிக்கிறோம் இல்லையா அது இல்லாம போயிருக்கும். இயற்கைக்கும் சுற்றி உள்ள இனங்களுக்கும் நாம்தான் எஜமான்ங்கிற உணர்வு வராம இருந்திருக்கலாம்னுகூடத் தோணுது.

இசையைப் பற்றி ஒரு கேள்வி…

இசையப் பத்தி இதுவரை கேள்வி கேட்கலையேன்னு நினச்சேன்! இசை பத்திக் கேள்வி இல்லாமலேயே இந்த நேர்காணல் முடிவுக்கு வந்தால் உங்களைப் பாராட்டலாம்னு நினைச்சேன்! வாய்ப்பைத் தவற விட்டுட்டீங்க!!

நேர்காணலின் பின்புலத்தில் கேட்டுக்கொண்டே இருக்கிறது.. எப்படி கேட்காம விட முடியும்!

இசைக்கு என் வாழ்க்கையில அதுதான் இடம். பின்னாடி ஓடிக்கிட்டே இருக்குது இல்லையா. அது எனக்கு இதமான சூழலை உருவாக்குது, இசை தொடர்பான எந்த ஞானமும் எனக்குக் கிடையாது. உளவியல் பற்றி எதுவுமே தெரியாம அதை அடிப்படையாகக் கொண்டு கதை எழுதுறேன் இல்லையா, அது மாதிரித்தான்! ஒரு சுவாரசியமான நிகழ்வு, என் கதையொண்ணைப் படிச்சுட்டு ஒரு ஹோமியோபதி மருத்துவர் தனது வலைத்தளத்தில அந்தக் கதை நாயகனுக்கு இன்னின்ன கோளாறு இருக்கு, இன்னின்ன மருந்து கொடுத்தா சரியாகிடும்னு எழுதி இருந்தார்!

உங்கள் கதைகளில் மிக சகஜமாக சொலவடைகள் புழங்குகின்றன. எப்படி உருவாக்குகிறீர்கள்?

நானே உருவாக்கினது நிறைய உண்டு! ஏற்கனவே புழக்கத்தில இருக்கிறதும் உண்டு. ’பகடையாட்டம்’ நாவலில் அஸ்ஸாமியப் பழமொழி, ஐரோப்பியப் பழமொழி, ஆப்பிரிக்கப் பழமொழி எல்லாம் நானே உருவாக்கி இருக்கிறேன்! ’ரொம்ப நேரம் கரையில விளையாடின கடலாமை கடலுக்குத் திரும்பினவொடனே, ’ஐயோ குளிருதே’ன்னு சொல்லுச்சாம்’ன்னு தன் அம்மா சொல்வாள் என்பான் லுமும்பா.
அது ஒரு படைப்புச் செயல்பாடு. ஒரு காலகட்டத்தின் ஞானம் மொத்தமாகத் திரண்டு வந்து பழமொழியாக ஆகுது. நிலக்கரி ரொம்பநாள் பூமிக்குள்ளே கிடந்து வைரமாக ஆகும் ரசவாதத்தை ஒத்தது. அவ்வையாரின் பாடல்கள்லெ கடைசி வரியிலே அந்த விவேகம் வெளிப்படும். ’எறும்புக்கும் அதன் உடம்பு எண் ஜாண்’ ன்னு வரும். பாமர விவேகம், இந்தியப் பொதுமனசோட ஞானம் வெளிப்படும். கோட்பாடு வழியாகவோ, தவம் வழியாகவோ வந்தது இல்ல, பார்க்கிறாள், தோணுகிறது, அதையொரு வரி எழுதி வைக்கிறாள். அதில் ஒரு துளி ஞானம் உள்ளது. பழமொழிகள் எல்லாமே அப்படித்தான். ’சுண்டைக்காய் கால்பணம் சுமைகூலி முக்கால்பணம்’ இந்த மாதிரி! ஒரு கலாசாரம் ஈட்டிய அறிவின் ஒரு சொட்டு.

சொலவடைகள் பிறமொழிக்குப் போகும்போது என்னமாதிரிப் புரிந்துகொள்ளப்படும்?

ஆங்கிலத்தில மொழிபெயர்க்கிறோம். அவர்களால் இதை வாசிக்க முடியும்; தொடர்பு ஏற்படுத்திக்க முடியாது, ’குள்ளச்சித்தன் சரித்திர’த்திலெ ஒரு சித்தர் வரார். கோலமிட்டிருப்பார்கள். ’கோலத்தை அழிக்க ஆளில்லை இல்லயா’ன்னு அவர் கேக்கிறார். இது என்னன்னு ஒரு மேற்கத்திய மனத்தாலெ புரிஞ்சுக்கவே முடியாது. காலையில் பால்காரன் வந்து நிப்பான், பால் கேன் தலைவெட்டப்பட்ட சிவலிங்கம் போல இருந்தது என ஒரு உவமை இருக்கும், இதை மேற்கில் எப்படி புரிஞ்சுக்குவாங்க?
அப்போ, நாம் சினுவா ஆச்சிபியைப் படிக்கிறதுபோல அவர்கள் இதைப் படிப்பார்கள். கதையம்சம் மட்டும் போய்ச்சேரும் இதில் உள்ள கரிசனம் போய்ச்சேராது.

வெளியேறிச் செல்பவர்களின் மீதான உங்களது வசீகரத்தின் காரணம் என்ன? நாவல்களில் மீண்டும் மீண்டும் வருகிறார்கள்.. வாழ்விலிருந்து தப்பித்தல்தானா அதன் மீதான வசீகரம்?

சமூகம் எனும் நிறுவனம் செட் தியரி போல. அதுக்குள்ள ஒரு நிறுவனமா குடும்பம் இருக்கு. வெளியேறுபவர்கள் எல்லோரும் சமூகத்தைவிட்டு வெளியேறுவதில்லை. குடும்பத்தைவிட்டுத்தான் வெளியேறுகிறார்கள். வெளியேறி என்னவாகிறாங்க ங்கிறது வேறொரு கேள்வி. சும்மா சொல்லிப் பார்க்கிறேன், ஒரு தர்க்கத்திற்காக, குடும்பத்தில் இருந்து வெளியேறி வசுதைவ குடும்பத்திற்குள் நுழைகிறார்கள்னு சொல்லலாமா? அறுதியாக வெளியேறிப் போவது என்றொரு இடம் இல்லையில்லயா. அமைப்பின் மீதான அதிருப்தி, அவ்வளவுதான், அப்புறம் வெளியேறி அவன் என்னவாக ஆகுறான், என்ன செய்றாங்கிறதும் இருக்குல்லையா. அததான் கவனிக்கணும். இப்பப் பார்த்தீங்கன்னா, தமிழ் இலக்கியத்தில் பெருமளவு இடத்தை அடைச்சுக்கொண்டிருப்பவங்க குமாஸ்தாக்கள்தான். எழுதுபவர்களை சொல்லலே – கதை மாந்தர்களைச் சொல்றேன். யோசித்துப் பாருங்க, பெரும்பாலும் மத்திய வர்க்கம், அபூர்வமா உயர்வர்க்கம் பற்றி வரும். அவர்களைப் பத்தின கரிசனம் எல்லாம் ஏதுமிருக்காது, சித்தரிப்புதான் இருக்கும். அடித்தள வர்க்கம் பத்தி நிறைய வருதுன்னாகூட அதுவும் குறைவுதான். இத்தனை பேர் மத்தியவர்க்கத்தை பத்தி எழுதும்போது வெளியேறியவனை பத்தியும் ஒருத்தன் எழுதட்டுமே என்ன குறைஞ்சுடப் போகுது? நமது குடும்பம் என்பதே மத்திய வர்க்க மனநிலையைச் சார்ந்ததாகத்தானே இருக்கு.

இதை அரசியல் நிலைப்பாடாகக் கொள்ளலாமா? குடும்பம் எனும் அமைப்பின்மீதான விமர்சனம் என விளங்கிக் கொள்ளலாமா?

எல்லாமே அரசியல் நிலைப்பாடுதானே. ’எல்லாமே அரசியல் நிலைப்பாடுதான்’ எனச் சொல்லும் எல்லாத் தரப்புமே ஆன்மீக வறட்சி கொண்டவைதானே. அப்படியெல்லாம் லேபில் செய்ய வேண்டியதில்லை. எல்லாமே அரசியலின்பாற்பட்டது எனச் சொல்லும் தரப்பு எப்போதாவது மரண பயம் பத்திப் பேசியிருக்கா? மரணத்துக்குப் பின்பான வாழ்வைப் பத்தின ஊகங்களைப் பேசியிருக்கா?

அது என்ன செய்யுதுன்னா மேற்கத்திய அறிவியலை அப்படியே எடுத்துக்குது. உடல் அழிஞ்சுடுச்சுன்னா, ஆன்மா அழிஞ்சுடுச்சி. இந்தப் பக்கம் ஆந்திரப்பிரதேசத்தில ஒரு மூணு வயசுக் குழந்தை முன்னூறு ராகங்களைக் கண்டுபிடிக்குது. இன்னொரு குழந்தை பாடவே செய்யுது. இதையெல்லாம் எந்தக் கணக்கிலே வைப்பது? மரபணு வழியா வருமா? சங்கீத வாசனையே இல்லாத குடும்பத்தில் பிறந்த குழந்தை நாற்பது ராகங்களைக் கண்டுபிடிக்குதுன்னா எப்படி புரிஞ்சுக்குறது?

அதுக்குக் காரணம் என்னன்னு நான் கேக்கலை. அறிவியல் காணாத மர்மம் என சில இருக்குன்னு சொல்றேன். இதுக்குப் பரிச்சயம் ஆகாத மனுஷன் உண்டா? உளவியலாளர் இதுக்கு ஏதேனும் ஒரு காரணத்தைச் சொல்வார். யூட்யூபில் நான் பேசுவதை என் பேரன் பாக்கிறான், என்னையும் பாக்கிறான், இதே தாத்தா அங்கேயும் இருக்காருங்கிறான், இங்க இருக்கார், அதுக்குள்ளயும் இருக்கார். ’என்னையும் அதுக்குள்ள போடு’ன்னு சொல்றான். அது அவனுக்கு புரியல. புரியவரும்போது இதில் உள்ள மிஸ்டிரி காணாம போயிடும், புரிகிறவரை பெரிய மர்மம்தானே. இன்னைக்கு நான் ஒரு விஷயத்தை சுனில்கிட்ட சொல்லணும்னு நினைக்கிறேன். அதே நேரம், சரியா சுனில் போன் செய்றார். நான் சொல்ல நினச்ச அதே விஷயத்தப் பேசுறார், இதுக்கு டெலிபதின்னு ஒரு பெயரைக் கொடுத்து அந்த பாக்கெட்டுக்குள் போட்டுடலாம்!

ஒருத்தனுக்கு வாழ்நாள் முழுவதும் எல்லாமே தற்செயல் வழியாவே நடக்கும்னா அதுதானே வரலாறாக ஆகும்! தற்செயலுக்கு தற்தொடர்ச்சி இருக்கு. நாம அடையாளம் சுட்டுதல் வழியா பெரிய நம்பிக்கையைப் புறம்தள்ளுறோம். அதை ஆராய மாட்டோம், கணக்கில் கொள்ள மாட்டோம். காரணம் அதைப் புரிந்துகொள்ள என்னிடம் கருவி இல்லை. என்னிடம் கருவியில்லைங்கிறதுனாலயே, அதுவே இல்லைன்னு ஆகிடுமா?

மேலும் பொலிட்டிக்கலி கரெக்ட் ஸ்டேட்மென்ட்கள் வழியாக நமக்கு ஏதும் நன்மை வந்து சேர்ந்துருக்கான்னு பாருங்களேன்… அது வழியாக பிளவுகள்தான் வந்திருக்கு!

எழுத்தாளர் சமகாலத்திற்கு எதிர்வினை ஆற்ற வேண்டும், சமகாலப் பேசுபொருளுக்கு ஒரு எழுத்தாளர் ஏதோ ஒருவகையில் தனது பங்கைச் செலுத்த வேண்டும் என்றொரு விமர்சனம் தொடர்ந்து வைக்கப்படுகிறது. நீங்கள் எதையும் அளிப்பதில்லை என்றொரு விமர்சனம் உள்ளது. ஏன் கொண்டுவர வேண்டும் என நீங்கள் கேட்பீர்கள் இருந்தாலும்…

சமகாலத்தன்மைக்கு தெளிவான வரையறை உள்ளதா, பாரதி எனக்கு சமகாலத்தவரா இல்லையா. பிச்சமூர்த்தி சமகாலத்தவரா இல்லையா. வோர்ட்ஸ்வொர்த்தும் ஷேக்ஸ்பியரும் எனக்கு சமகாலத்தவரா இல்லையா. இன்றும் அவர்களைப் பாடம் நடத்துறாங்க, அப்படியானா விலைப்பட்டி தான் உங்களுக்குச் சிக்கல், துணி அதன் மெட்டிரியல் தரம் இதெல்லாத்தையும் பத்தி கேள்வியே இல்லை. அபத்தமாக இருக்கிறதே அய்யா!

எப்பவும் சமகாலத்தில உள்ளவைன்னு சில உண்டுதானே, உதாரணமாக, கனவுகளை எப்படி அணுகுறது. பாமர மனசிலிருந்து நான் கேள்வி கேட்டுக்கிட்டே இருப்பேன், மறுபக்கம் சைக்காலஜி ஆதாரபூர்வமாக ஆராய்ச்சிபூர்வமாக பேசிக்கிட்டே இருக்கு, ரெண்டுபேரும் ஒரே குழப்பத்தைத் தானே பேசுறோம். அப்படின்னா இது ஃபிராய்டு காலத்தில இருந்தே இருப்பதுதானே, அவர் தொகுத்து ஆய்வு முடிவுகளைச் சொல்றார். முடிவுன்னு எதையும் கலை சொல்லாது இல்லையா. தன் காலத்தில் தன் கோணத்தில் சொல்லும், அவ்வளவுதான்.

சமகால விஷயங்களைப் பற்றிப் பேசலாம், அதுக்குத்தான் நிறைய பேர் இருக்காங்களே. சமகால விஷயம்னு நீங்க கேக்கிறது எல்லாமே, சமூகார்த்த விஷயங்கள். தமிழ் சமூகம் சார்ந்த, இந்திய சமூகம் சார்ந்த அரசியல் விஷயங்களை எங்கிட்ட கேக்குறீங்க. குவாண்டம் மெக்கானிக்ஸ் பத்தி ஒரு கதையில் பேசுறேன் அல்லது ஸ்ட்ரிங் தியரி பத்தி இரண்டு வரி ஒரு கதையில எழுதுறேன்னா அதெல்லாம் காலாவதி ஆகிடுச்சா? இதெல்லாம் சமகால விஷயம் இல்லையா? அப்படின்னா ’எனக்குப் பிடிச்சதை, எனக்குத் தெரிஞ்சதை பேசுய்யாங்கிற டிமாண்ட்தான் அது, எனக்குத் தெரியாததை நான் எதுக்குப் பேசணும்? எப்படிப் பேச முடியும்? எனக்குத் தெரிஞ்சதைத்தானே நான் பேச முடியும்? இல்லை, எனக்குத் தெரியாததைக் கூரையில நின்னு கூவிக்கிட்டே இருக்கணுமா!

சமகாலம்னு ஒண்ணு கிடையாதுங்கிறதே நான் ஆதாரமாக சொல்லவரும் விஷயம். அதற்கொரு ஸ்கேல் கிடையாது, இந்த நூற்றாண்டுதான் சமகாலம் என்றால் நான் பிறந்ததே போன நூற்றாண்டில்தானே, அது முக்கியமான நிகழ்வில்லையா! இந்த டிமார்க்கேஷன் எல்லாமே ஏதோ ஒருவிதத்தில் இந்த பாகுபாடு வழியாகத்தான் இதைக் கையாள முடியும் என்பதற்காகத்தான்.

’இதைப்பத்திப் பேசு, என்னிடம் ஒரு பதில் இருக்கிறது அது உன்னுடையதுடன் பொருந்துகிறதான்னு போட்டுப்பாக்கிறேங் கிறதுதான். எங்கிட்ட பதில் இல்லாத விஷயத்தை பேச வருவார்ன்னா, அவர் ஏதோ கிரீக் லத்தீனில் பேசுறார்னுதான் நினைச்சுக்குவேன்ங்கிற அடம்.

ஒருத்தர் கேட்டார், ’எழுத்தில் மனித நேயம் வேண்டாமா சார்?’ எருமைமாடு நேயம், கொசு நேயம் எல்லாம் வேண்டாமான்னு பதிலுக்குக் கேட்டேன். பின்ன அவங்களோட எல்லாம் நேயத்துடன் இருக்க வேண்டாமா?…

ஈசல் நேயம் வெளிப்பட்ட கதைகூட ஒன்று இருக்கிறது. ’தாயம்மா பாட்டியின் 41 கதைக’ளில் வரும். எனக்கு மிகவும் பிடித்த குறுங்கதை.

ஐநூறு வயசு ஆன கடலாமை, பக்கத்திலெ உக்காந்திருக்கிற ஈசல்கிட்டக் கேக்கும், ’நேத்து நீ இங்க இல்லையே.’ ஈசல் திரும்பக் கேக்கும், ’நேத்துன்னா என்ன?’

புனைவு எழுத்தாளருக்கு டிஸப்ஷன்தான் முக்கியமான திறன் என சொல்லலாமா, அதாவது வாசகருக்கு முன் நம்மை பூரணமாக வெளிப்படுத்திக்கொள்ளாமல் கொஞ்சம் காண்பித்துவிட்டு பின்னணியில் பிரம்மாண்டமாக ஏதோ ஒன்று இருப்பதாக நம்பவைத்து விட்டால் போதும்தானே, பிசி சர்க்கார் மாயாஜாலம் போல.

பொதுவான அக்கறை, வாசகரை நம்பவைப்பது எப்படிங்கிறதை பத்தித்தானே. நம்பகத்தன்மை பத்தி நாம திரும்பத்திரும்ப பேசுறோம், நீங்க ஏமாத்துறதைப்பத்தி பேசுறீங்க. இரண்டுக்கும் இடையில ஏதோ ஒரு இடம் இருக்குன்னு தோணுது. டிஸப்ஷனைவிட deduction முக்கியம்னு சொல்வேன். ஒரு விஷயத்தில நீங்கள் எதைக் கறந்து எடுக்கிறீங்க என்பதுதான் முக்கியம், நீங்களே கறந்து எடுக்கிற பட்சத்தில அது மோசமா இருந்தாலும், அதை சொல்றதுக்கான அருகதை உண்டு, முட்டாள்தனத்திலும்கூட, அசல்தன்மைக்கு ஒரு மதிப்பு இருக்கத்தானே செய்யுது. (சிரிக்கிறார்)

உங்கள் கதையில் வரும் உளவியலாளர் கேப்டன் ஸ்ரீனிவாசமூர்த்தி நிஜமான ஆளா?

ஆமாம் ரொம்பவே நிஜமான, ரொம்பவே முக்கியமான ஆளு – கதைக்குள்ள! (சிரிப்பு) திருவாரூரை சேர்ந்த மருத்துவர் ஒருத்தர் ஒருநாள் ‘தம்பி அந்த விட்னி ரோஜர்ஸ் புத்தகம் ஒண்ணுமே கிடைக்கலையேப்பா’ என்றார். ‘எப்படி டாக்டர் கிடைக்கும்’. ஒரு முழு நாள் தேடியிருக்கிறார். பாவம்.

நம்பகத்தன்மையான பாத்திரத்தையும் உருவாக்குகிறீர்கள், அதற்கு அடுத்து இல்லாத ஒன்றையும் உருவாக்குகிறீர்கள்..

நாம இப்போது நிஜத்தைப் பத்தி பேசுகிறோமா அல்லது நம்பகத்தன்மையைப் பத்தி பேசுறோமா. நம்பியதாலதானே அப்படியொருத்தன் இருக்கிறானான்னு தேடுறீங்க. அசோகமித்திரன் எங்கோ எழுதி இருந்தார், எழுத்தாளர் fact களை எழுதனுங்கிறதில்லை, possibilityகளை எழுதினா போதும். சீனிவாசமூர்த்தின்னு ஒருவர் இருக்க முடியும், அவர் உளவியல் நிபுணராக இருக்க முடியும், இப்படியெல்லாம் எழுத முடியும், அவ்வளவுதான். உங்களுக்கு ஏன் இவ்வளவு அறிவுப் பசி? புனைகதையில் சொல்லப்பட்ட புத்தகங்களை எல்லாம் படிச்சே ஆகணும்னு ஏன் துடிக்கிறீங்க? குறிப்பிடப்பட்ட புத்தகம் பேசும் விஷயத்தின்மேலெ உங்களுக்கு நம்பிக்கை ஏற்படுவதால்தானே!

அப்படியானால், இந்தக் கதையில் காணப்படும் பெயர்கள் யாவும் கற்பனையேன்னு தொடக்கத்திலேயே அறிவிப்பு வெளியிடணும் போலருக்கு…!

அப்படியில்லை…

இல்லை பேசப்பட்ட விஷயத்தைப் பத்தி இல்லையா கேள்வி வந்திருக்கணும். ’இல்லை சார், இப்படி எப்படி சொல்ல முடியும்’னு இல்லையா கேட்டிருக்கனும், நீங்கள் அந்த ஆளையில்லையா தேடிப் போறீங்க. ஜே ஜே சில குறிப்புகள்ல ஜே ஜே எழுதிய நூல்கள்னு ஒரு பட்டியல் இருக்கு, அதை நீங்க என்னிக்காவது தேடிப் போவீங்களா? பிரமிள் அப்பவே எழுதுறார் ‘கொந்தளிப்புத் தத்துவம்’ என்றால் என்னன்னு சொல்லணும்; அப்போதுதான் அது நிறைவடையும்.’ புனைகதைக்குள் அப்படியொரு நிர்ப்பந்தம் நிலவுவதில்லை. கதாசிரியனின் உத்தேசத்தைப் பொறுத்து, விரிவாகச் சொல்லலாம்; சொல்லாமலும் இருக்கலாம். எழுத்தாளரின் சுதந்திரம் அது. ஆகவே, ஒரு புத்தகத்தைக் குறிப்பிடுவதல்ல, அதனுள் என்ன இருக்கு என்று கதையில் சொல்லப்படுது, கதைக்கு அது எந்தவகையில் பயன்படுது, அதன்வழி நான் என்ன சொல்ல வரேன் – அதுதானே சரியான பயணப்பாதை. நாம ஒரு பெயரைப் பிடிச்சுக்கிட்டு உடனே இணையத்தில் தேட ஆரமிச்சுடுறோம்!

நான் ’நினைவுதிர் காலம்’ நாவல்ல, அந்த வயலின் கலைஞர் வாசித்திருக்கும் ஆல்பங்களின் பட்டியலை பின் இணைப்பாகக் கொடுத்திருக்கேன். அவர் எல். சுப்பிரமணியனுடன் வாசித்ததாகக் குறிப்பிட்டிருப்பேன். அந்தக் கதாபாத்திரத்தை மெய்யாக ஆக்குறதுக்கு கொஞ்சம் புனைவு தேவைப்படுது இல்லையா! இப்படி உருவான ஆளை விட்டுவிட்டு நீங்கள் வேறு எதையோ பின் தொடருறீங்க…

இலக்கியத்துக்கு வெளியே சொல்றதுன்னா, அரைத்தூக்க நிலையில் புரண்டுக்கிட்டு இருக்கோம். இன்னதெல்லாம் கனவு, இன்னதெல்லாம் நினைவு, இன்னின்னதெல்லாம் மறுகூறல்னு சீர்பிரித்துப் பாக்க முடியுமா. நான் முன்பு ஒரு கதையில் எழுதிய நினைவு – இப்போது நாம் அமர்ந்து பேசிக்கொண்டிருக்கிறோம் இல்லையா இது கனவில் இல்லைங்கிறதுக்கு எந்த நிரூபணமும் இல்லை. ஏன்னா, என்னைப் பத்தி உங்களுக்கு ஒரு மனச்சித்திரம் இருக்கு, அதோடதான் நீங்க என்னைப் பார்க்க வந்துருக்கீங்க. அந்தச் சித்திரத்துக்குள்ள என்னவெல்லாம் நடக்கக் கூடுமோ அதுதான் நேரிலும் நடக்கிறது. இது எல்லாம் உங்கள் கனவில் நடக்கலைன்னு நிரூபிக்க என்ன அத்தாட்சி இருக்கு.

இந்த இரட்டைநிலை எல்லாத்திலேயும் இருக்கு, தண்ணீரும் தரையும் போல.

பொதுவாக உங்க கதைகள்ல இத்தகைய வேதாந்தக் கண்ணோட்டம் உண்டுதானே. ஆனால் அதை நீங்கள் அறிவியல்பூர்வ வேதாந்தமாக, அதாவது மரபான வேதாந்தமாக இல்லாமல் வேறொன்றாக ஆக்குகிறீர்கள் அல்லவா.

அந்த சொற்பயன்பாட்டை நான் மறுக்கிறேன். பெயரில்லாத ஒண்ணைத்தான் நான் செய்து பார்க்கிறேன். வாசிக்கிற நீங்கதான் இதுக்கு ஒரு பேரைப் போட்டுப் பார்க்கிறீங்க. அதுக்கு நான் பொறுப்பில்லை. நான் எங்கெயாவது வேதாந்தம்னு குறிப்பிட்டுருக்கேனா, எங்காவது அறிவியல்னு அறிவிச்சிருக்கேனா?

நீங்கள் ஒன்றை உருவாக்கி, நீங்களே அதைக் கலைத்துவிடுகிறீர்கள். அதில் ஒரு வேதாந்தப் பார்வை உள்ளது என சொல்ல முடியும்தானே?

அறிவியல் தொழில்நுட்பம் கையளித்த நூதனமான தொழில்நுட்பம் 5ஜி உள்ள மொபைல்ல வாட்ஸாப் செய்தி வருது – அதுல ‘ஆமா என்ன செய்ய. நாம கொடுத்து வெச்சது அவ்வளவுதான்’. அப்படின்னா நான் அறிவியலோட இருக்கேனா, வேதாந்தத்தோட இருக்கேனா?!

மரபு ரீதியான வேதாந்தத்தின்மீது உங்களுக்கு ஈடுபாடு இல்லை. ஆனால் அறிவியல்பூர்வமாக உள்ளதின்மீது ஈர்ப்பு உள்ளது என்றுதான் நானும் சொல்கிறேன்.

வேதாந்தத்தில் மரபு என்ன அறிவியல் என்ன, அதுல அறிவியல் எங்கிருந்து வந்தது. பாரம்பரிய வேதாந்தம், நவீன வேதாந்தம்னு பிரிவுல்லாம் கிடையாது. அறிவியல்ங்கிறது, பருவுலகம் என்னவாக இருக்கு எனத் தேடிப் புறப்படுது. தான் கண்டறிஞ்சதை எனக்கு சீர்பிரித்துக் கொடுக்குது. ஒவ்வொரு அலகையும் பகுத்துப் பகுத்து கடைசித் துணுக்குவரை போகணும்னு ஆசைப்படுது. மறுபக்கம், வேதாந்தம் தத்துவமெல்லாம் எல்லாத்தையும் கையாளும் பிரக்ஞைங்கிறதுதான் என்னதுன்னு தேடிப் போகிறது. இரண்டும் ஒண்ணுக்கொண்ணு தொடர்பில்லாதவை. ஒண்ணு, காட்சிப்படும் புற உலகத்தில் புலப்படாதவை எவையெல்லாம் இருக்குன்னு தேடிப் போகுது. இன்னொண்ணு, புலப்படாத உலகத்திற்குள்ளே, புலப்படக்கூடிய விதமா ஏதாவது கிட்டிடாதான்னு ஏங்குது. நான் எதனால் ஆனவங்கிற கேள்வி இயற்பியலுடைய கேள்வி. இதன் நரம்பு மண்டலம்தான் என்ன என்பது உயிரியலுடைய கேள்வி. உளவியல் துறை, இரண்டும் கெட்டான். அதற்கு நிலமே கிடையாது. கடைசித் தனி மனுஷன்வரை ஆராய்ந்து தனது முடிவுகளைச் சொல்வதில்லை அது. ஆனா, இயற்பியல் கடைசி மணற்துகள் வரை ஆராய்ந்துதான் ஒரு வார்த்தையை உதிர்க்கிறது. தண்ணீருக்கு அதே மூலக்கூறுதானே. ஆகவே ஒரு இடத்துல கண்டடையப்படுறது எல்லா இடத்துக்கும் பொருந்தும். ஆனா மனசுங்கிறது தனிப்பட்டது, ரத்த மாதிரி சேகரிக்கிறது போல மனமாதிரியைச் சேகரிக்க முடியுமா? அதுதான் உளவியல் தோல்வியடையும் இடம். ஆனால், அது என்ன செய்யுதுன்னா, பெரிய தோராயத்தை நம்பகத்தோட உருவாக்குது. அதன் வழியா சிலவிஷயங்களைப் பிரகடனம் செய்யுது. உதாரணமா games people play ன்னு ஒரு புத்தகம் படிச்சேன். மிகப் புகழ்பெற்ற புத்தகம். அதில ரெண்டு பேருக்கு இடையில நடக்கும் பரிமாற்றத்தை, transaction ன்னு சொல்றாரு. எல்லாவகையான பரிமாற்றத்தையும் 36 வகைக்குள்ள அடக்கிடலாங்கிறாரு. அதுலயும் சில உள்வகைகள் இருக்கு. Look, how hard i have striven for you ன்னு ஒரு வகை. உனக்காக நான் எவ்வளவு கஷ்டப்பட்டிருக்கேன் தெரியுமான்னு அர்த்தம். இதை சொல்றதுக்காகத்தான் ஒரு அப்பா அவ்வளவு பிரயாசைப்பட்டு குழந்தையை வளர்க்கிறான்னு அந்தப் புத்தகம் சொல்லுது. நல்லாருக்கேன்னு நினைச்சுக்கிட்டேன்.

இதப் படிச்ச பத்தாவது நாள், நண்பரொருவர் வந்தார், விடிகாலையில், ஒரு கடைவாசலில், சிகரெட் பிடிச்சுக்கிட்டு நின்னுட்டு இருந்தேன். வேகுவேகுன்னு நடந்து வந்தார். வியர்த்து ஊத்துது. எங்க சார் இவ்வளவு காலையில, வேகவேகமா வர்றீங்களேன்னு கேட்டேன். பையன் ஒரு ஜியாமெட்ரி பாக்ஸ் கேட்டான் வாங்கப் போனேன்னார். இந்தக் கடையிலேயே இருக்கே சார்ன்னேன்… பாத்தேன், ஆனால் தரமா இல்லைன்னு சொல்னார். அவன் நாளைக் கழிச்சு அதைத் தொலைக்கப் போறான். இல்லைன்னா உடைக்கப் போறான். ஆனாலும் மிகத் தரமான பொருளை மகனுக்கு வாங்கித்தரணும்னு நினைக்கிறார் இல்லையா. அவன் பெரியவனானப்புறம், ஒரு முப்பது வருஷம் கழிச்சு, சொல்லிக் காட்டுறதுக்காக இதைச் செய்றார்னு சொல்றதுல எவ்வளவு மௌடீகம், எவ்வளவு முட்டாள்தனம் இருக்கு! பெரும்பான்மையான நேரங்கள்ல இதுதான் உளவியலுடைய தன்மையாக இருக்கு . ஆனாலும் நமக்கு ஒண்ணுமே தெரியாத இடத்தில லேசான வெளிச்சம் விழுந்தா நல்லாத்தானே இருக்கும்.

நான் பேசுறது கோட்பாட்டு உளவியல் (Theoretical psychology) பத்தி. .சமூகத்தில உளவியல் மருத்துவர்கள் இருக்காங்க இல்லையா. அவங்களோட சேவையை மறுக்கவே முடியாது. அதிலும், நவீன உலகம் விதவிதமான உளச்சிக்கல்களை உருவாக்கிக்கிட்டே இருக்கு. உரிய விதத்திலே கையாளலேன்னா இருக்கிற களேபரம் இன்னும் பல மடங்கு ஜாஸ்தியாயிடும். என்ன, பல நேரங்கள்ல மாத்திரையக் கொடுத்து தூங்க வெச்சுடுறாங்க! இருந்தாலும், தூங்குறது ஆனந்தம்தானே..

சார், சர்ப்ப ரஜ்ஜு பிராந்தி மாதிரி கனவு, நினைவு நிலை. புறவுலகிற்கு அடியில் இன்னொரு உயிர்ப் பின்னல் உள்ளதுபோல அவற்றுக்குள் ஒத்திசைவு இருப்பதாக உள்ளது, அதை கைப்பற்ற வேண்டும் எனும் அடிப்படை ஆகியவை எல்லாம் வேதாந்த நோக்கு உள்ளதாக காண முடியுமா, அல்லது படைப்பு சுதந்திரம் மட்டும்தானா.

’உலகமே ஒரு நாடக மேடை நாமெல்லாம் அதில் நடிகர்கள்’ என்பது வேதாந்தப் பார்வையா இல்லையா.

ஆம், வேதாந்தப் பார்வைதான்.

சொன்னவர் ஷேக்ஸ்பியர். அவர் என்ன அத்வைத வேதாந்தியா? அவர் வேதாந்தத்தைப் பத்திப் பேசியிருக்கிறாரா!

என்னய்யா அநியாயம்! இரண்டு விதமான பார்வை இருக்கு. ஒண்ணு, எல்லாமே திரைக்குப் பின்னால நடக்குது, திரையை கிழித்துக் காட்டுறேன் பார் என்பது. இது ஒரு கோணம். நடப்பதே திரைமீதுதான், எல்லாமே இமேஜஸ்தான் என்பது இன்னொரு பார்வைக் கோணம். முதல் பார்வையைச் சொல்லும்போது அறிவியல்பூர்வமாகத் தோணுவதும் இரண்டாவதைச் சொல்லும்போது புகைமூட்டமாகத் தெரிவதும் இயல்பான விஷயம்தான். அப்புறம், நான் மூணாவது இடத்துக்கும் போவேன். நான்தான் அந்தத் திரை, என்மீதுதான் எல்லாமே நடக்குதும்பேன். நார்சிஸிஸ்ட்டிக் ஸ்டேட்மென்ட் மாதிரித் தோணும். ஆனா, அதுவும் ஒரு உண்மைதானே!

எம்ஜியார்கூட அப்படித்தான் சொல்லியிருக்கிறார் இல்லையா.. ’உலகம் பிறந்தது எனக்காக…’ (சிரிக்கிறார்)

அப்படியென்றால் இதை வரையறுக்காமல், அனுபவப் புலம் சார்ந்தது மட்டுமே என்று சொல்ல இயலுமா.

எக்ஸாக்ட்லி. அனுபவம்ங்கிற சொல் நையப் புடைக்கப்பட்ட சொல். என் சொந்த அனுபவத்தையே நான் ட்ரான்ஸ்லேட் செஞ்சுதான் புரிஞ்சிக்குறேன். காக்னிஷன்னு ஒண்ணு இருக்கு. அதைப்பத்திப் பேசுறதே கடினம். நாம் செய்வது எல்லாம் ரி – காக்னிஷன்தான். வெண்மையைப் பாக்கிறது ஒரு அனுபவம். ஆனால் முதன்முதலா வெண்மையைப் பாத்தேன் இல்லையா, அதன் நகல்களைத்தானே எல்லா இடத்திலும் பாக்கிறேன். அப்போ, இப்போது நான் வெண்மையை பாக்கிறது எப்படி அனுபவமாகும். இது ஒரு நகல் அனுபவம்தான். அசல் அனுபவம்னு ஒண்ணு இருக்கு தானே. அதை இன்னும் யாருமே அனுபவிக்கலை, அல்லது அதை அனுபவித்த ஆள் அதை தனக்குத்தானே சொல்லிக்கொள்ள ஆரம்பிக்கும்போதே அது டிஸ்டார்ட் ஆகிடுது. அனுபவத்தை ஒருவர் அகத்தூய்மையுடன் அனுபவித்துவிட முடியுமா?. ஆகத் தூய அனுபவம் ஒண்ணை உடல் கொண்ட நிலையில் அனுபவிக்க முடியுமா? எனக்கு இது அனுபவம் ஆனது எனச் சொல்லும்போதே அது இரண்டாம் கட்ட அனுபவம் ஆகிவிடுகிறது. பெரும்பாலான சந்தர்ப்பங்கள்ல அது மொழி அனுபவமாத்தான் இருக்கு, எனக்குள் உறங்கிக்கிட்டிருக்கும் மொழித்திரள் இருக்கு இல்லையா… அதுதான் எனக்குத் தலை வலிக்கிதுன்னு தொடர்புபடுத்துது. மிகவும் சிடுக்கான இடம், சொல்லிப் புரிந்துகொள்வது கடினம்.

குள்ளச்சித்தன் சரித்திரம் வெளிவந்தபோது வேதாந்த நோக்கில்தானே எதிர்கொள்ளப்பட்டிருக்கும். நவீனத்துவ கலையிலிருந்து தனித்துத்தானே தெரிந்திருக்கும்.

நாவல் வெளிவந்தபோது பெரிதாகப் பேசப்படலை. இப்போ வரை எல்லாப் பட்டியலிலும் அந்த நாவல் இடம்பெற்று விடுவது எனக்கே ஆச்சர்யம்தான். அதன் பின்னுரையிலேயே குறிப்பிட்டிருப்பேன், இரண்டு புலங்களுக்குத்தான் டைம் மற்றும் ஸ்பேஸ் (காலம்-வெளி) பற்றிப் பேசுறதுக்கான அருகதை உண்டு. அறிவியல் மற்றும் ஆன்மவியல். தமிழ்ச் சூழல்ல ஆன்மவியல் பத்திய உரையாடல் எல்லாமே பக்தி சார்ந்து, மதம் சார்ந்து ஒரு பிரிவாகவும், அதைச் சாராமல் சித்தர்கள் சார்ந்து இன்னொரு பிரிவாகவும் இருப்பதைப் பாக்கலாம்.

ஆனால், அறிவியல் முன்வைக்கிற கருதுகோள்களை இந்தியச் சூழல்ல, இந்திய அனுபவத்தோட பொருத்திப் பார்க்கும் பேச்சு அவ்வளவாக இல்லை. அதைத்தான் நான் முயற்சி செஞ்சு பாத்தேன், ஆனால் சரியா முயற்சி செய்யலையோ என்னவோ! அதனால்தான் தேவையில்லாத மத ஒட்டுக்கள் எல்லாம் வந்து சேந்துகொண்டது.
அறிவியலையும் ஆன்மவியலையும் இரண்டு றெக்கைகளா வச்சுக்கிட்டு கொஞ்சதூரம் பறந்து பார்க்கலாங்கிற ஒரு முயற்சிதான் அது. எழுத்தாளனுக்கு இயல்பா இருக்கும் அக சுதந்திரத்தின் வழியா இவற்றை எல்லாம் எதிர்கொள்ள முடியும். அதனால்தான் அதில் வரும் சித்த புருஷர் செய்யும் ஜாலங்கள் மட்டுமில்லாமல், மறைபுலம் பற்றிப் பேசும் பகுதிகளும் அநேகம் உண்டு. பேச்சை விட்டுவிட்டு அற்புதங்களைத்தான் எல்லாரும் கவனிப்பாங்க போல!

யாரும் உங்களிடம் அவருடைய சமாதி எங்குள்ளது, பிரசாதம் எங்கு கிடைக்கும் என கேட்டதில்லையா!

கேட்க மாட்டாங்க . யாரும் கேட்டதில்லை. ஆனா கரட்டுப்பட்டியில் யாராவது சித்தர் இருந்திருக்காங்களான்னு பலரும் கேட்டிருக்காங்க. (சிரிக்கிறார்)

இந்த நாவலுக்கு ஜெயமோகன் எழுதிய விமர்சனத்தில் குழந்தையானந்த சுவாமிகளுடன் ஒப்பிட்டிருப்பார். இப்படி இவர்தான் என அடையாளப்படுத்துவது, ஏதேனும் ஒரு வரையறைக்குள் கொணர முயற்சிப்பது பற்றி… ’கானல் நதி’யை வாசிக்கும்போது இந்த இசைக் கலைஞரைப் பற்றிச் சொல்கிறார், இந்த நிகழ்வைப் பற்றிச் சொல்கிறார் என மோப்பம் பிடித்தவர்களும் உண்டு. பெயரும் அடையாளமும் நீக்கப்பட்டு, சாரமான அந்நிகழ்வை மட்டும் வேறொன்றாக மாற்றிய பின்னும், வாசகன் மீண்டும் அசலை தேடிச் செல்வதை எப்படிப் பார்க்கிறீர்கள். நீங்கள் அப்படிச் செய்வதே வரலாற்று நீக்கம் எனும் அனுபவத்தை அளிப்பதற்காகத்தானே.. வரலாற்று நீக்கம் வழியாக ஒருவித காலமின்மையைக் கதைகள் அடைகின்றன என்று எனக்குத் தோன்றுகிறது, அதைத் திரும்ப இன்ன மனிதர் இன்ன இடம், இன்ன நிகழ்வு என வரையறுக்க முயற்சிப்பதைப் பற்றி என்ன எண்ணுகிறீர்கள்.

வாசகர் என்ன செஞ்சா நமக்கென்ன. அதைப்பத்தி ஏன் கவலைப்பட வேண்டும்! குழந்தையானந்த சுவாமின்னு ஜெயமோகனுக்குத் தோணியிருக்கு. இன்னொருத்தர், சேஷாத்திரி சுவாமிகள்னு சொல்லியிருக்கார், நாம இதில கவனிக்க வேண்டியது, அவதூதர்கள் எல்லாருக்கும் சில பொதுத்தன்மைகள் இருந்திருக்கு ங்கிறதைத்தான். அம்மணமா இருந்திருக்காங்கங்கிறதிலிருந்து தொடங்குது. இந்த காமன் டினாமினேட்டரை பிடிச்சாதான் குள்ளச்சித்தங்கிற பாத்திரத்தை உருவாக்க முடியும். ஒரேயொரு முன்மாதிரியை மட்டும் வச்சுக்கிட்டு உருவாக்க முடியாது, வெகுஜன எழுத்து அப்படிச் செய்யும். நாம செய்ய முடியாது. இந்தப் பொதுத்தன்மையிலேர்ந்து சில கூறுகளை எடுத்துக்கிட்டு நம்பகமான பாத்திரங்களை உருவாக்குவோம். இரண்டாவது, தமிழ்ச் சூழல்ல, இத்தனை சித்தர்களைப் பத்தி உங்களுக்குத் தெரியுது. அதனால சொல்றீங்க. இதுவே நான் விஞ்ஞானியைப் பத்தி எழுதி இருந்தா ஜெகதீஷ் சந்திர போஸைப் பத்தியோ சி.வி ராமனைப் பத்தியோ நினைச்சுப் பாப்பீங்களா. நேரடியா வெஸ்ட்டுக்குப் போயிருவீங்க. ஐன்ஸ்ட்டீன், நீல்ஸ் போர்னு போயிருவீங்க. ஏற்கனவே இருக்கிற முன்மாதிரியை வச்சுக்கிட்டு, எனக்கு என்னவெல்லாம் தெரியுமோ அதைப் பொருத்திப் பாக்கிறது ஒரு வகை வாசிப்பு. சாத்தியத்தையும் விமர்சனத்தையும் மட்டுப்படுத்தக் கூடியது. ஏன்னா முடிவுக்கு வந்துடுறீங்க. ’குழந்தையானந்தருக்கு பெரிய தொப்பை இருந்தது, இங்கே இவருக்கு தொந்தி இருந்ததாக் குறிப்பே இல்லையே. சித்த புருஷனுக்கு தொந்தி இல்லைன்னா எப்பிடி!’ங்கிற மாதிரி விமர்சனக் கணை பாயும்!

எனக்கு தெரிந்த ஆவியுலக ஊடகர்மீது அவரவர் ஆராதனை சமயத்தில் குழந்தையானந்தரும் சேஷாத்திரி சுவாமிகளும் இறங்கி வருவார்கள்.

ஒரே சமயத்திலா? சிரிக்க வேணாம். ஏன்னா இது முக்கியமான கேள்வி. மாயம்மாவும் புரவிபாளையத்துக்காரர் ஒருத்தர் இருந்தார் இல்லையா, ரெண்டுபேரும் ஒரே சமயத்தில வந்தா ஆணாக இருப்பாரா பெண்ணாக இருப்பாரா.. குள்ளச் சித்தர் நான்கு இடங்களில் ஒரே சமயத்தில் இருந்தார்னு இருக்கு இல்லையா, சதாசிவ பிரம்மேந்திரர் பத்தி அப்படி தகவல் உண்டு. சாதாரண மனுஷன் புவியியல் ரீதியாவும் வரலாற்று ரீதியாவும் ஒரு இடத்தில் இருப்பது மட்டும்தான் சாத்தியம். ஆனால் அவதூதர்கள் உடல் கடந்தவங்க என்பதால் வெவ்வேறு இடங்களில் இருக்க முடியிது. கிருஷ்ண பரமாத்மா ஒரே சமயத்தில் பதினாயிரம் கோபியர்களோட இருக்கார். ஒரே சமயத்தில் இப்படி இருப்பதுங்கிறது காலத்தோட தொடர்புடையது. ஒளியின் வேகத்திலே பயணிக்கும் ஒருத்தனோட பிரக்ஞைநிலை என்னவா இருக்கும்? ஆகவேதான் அதை சுப்ரீம் ஸ்டேட்னு சொல்றோம். தசாவதாரத்தில அடுக்கும்போது, தண்ணில மட்டும் இருப்பது, தண்ணியிலும் தரையிலும் இருப்பது, தரையில் இருப்பது, தரையில் மிருகமாகவும் மனிதனாகவும் இருப்பது – இப்படியொரு அடுக்குமானம் இருக்கு. அதன் உச்ச கட்டத்தில் ஒருவன் ஒளியின் வேகத்தை எட்டிவிட முடியும்னு ஒரு கட்டமைப்பு இருக்குது போல.

தாஓ ஆஃப் ஃபிஸிக்ஸ் போல அறிவியலையும் ஆன்மீகத்தையும் பயன்படுத்தும் வகை மாதிரி உண்டு. அங்கிருந்து நீங்கள் வருவதாக சொல்லலாமா?

ஆன்மீகமும் அறிவியலும் இரு சிறகுகள்னு சொன்னேன். இலக்கியமோ ஆன்மவியலோ மனிதன் பறப்பதைப் பத்திச் சொல்லுது. ஆனால், அறிவியல் அதுக்காக ஒரு கருவியை உருவாக்கி பறக்கவும் வைக்கிது. இவன் கற்பனையுடன் நிறுத்திக்கிறான். மறுபக்கம், இந்தக் கற்பனை செயல்பாட்டுக்கு வருது, இந்த இரண்டையும் எப்படி சமமாப் பார்க்க முடியும்?

ஆக, தாஓ ஆஃப் ஃபிஸிக்ஸ் வகையறாக்களை நான் முழுக்க நிராகரிக்கிறேன். அங்கே இருப்பது ஒரு வகையான அறிவுத் தேட்டம். இங்கே இருக்கிறது வேறொரு வகை ஆன்மத் தேட்டம். இரண்டையும் ஏன் ஒரே இடத்தில கொண்டுபோய் வைக்கணும்? இதெல்லாம், ராவணன் காலத்திலேயே புஷ்பக விமானம் இருந்தது, அப்பவே போயிங் ஜெட் இருந்ததுன்னெல்லாம் போய்ச் சேரும்.

ஆனால், ரெண்டுக்கும் பொதுவான ஒரு ஆதாரக் கேள்வியிருக்கு, அது என்னன்னா, மனுஷனுக்கு றெக்கை இல்லை, ஆனால் பறக்க வேண்டும் என்கிற ஆசை இருக்குங்கிறதுதான்.

நான் அறிவியல்பூர்வமாவோ வேதாந்த ரீதியாவோ காலத்தைப் பற்றிப் பேசலை, அனுபவத்தை அலகாகக் கொண்டுதான் பேசுறேன். எனது சொந்த அனுபவத்தில் ஏற்படும் குழப்பங்களை இப்படியெல்லாம் எழுதிப் பாக்கிறேன். அவ்வளவுதான். இவ்வளவு எளிமையா இதைப் பார்த்தா, பொருள் ஏத்தாமப் புரிஞ்சுக்கலாம். நமக்கு இப்படியான குழப்பம் எப்போது நேர்கிறதுன்னு பாக்கலாம். நம் அளவில் யோசித்துப் பார்க்கலாம். மத்தபடி, கோட்பாடுகள் வழியாவோ, கருதுகோள் வழியாவோ போனோம்னா அவற்றுக்கும் சேர்த்து விசுவாசமாக இருக்கணும்.

நாவல்களில் கிருஷ்ணன் மாதிரியான சில கதை மாந்தர்கள் தொடர்ந்து வருகிறார்களே அதற்கு காரணம் ஏதும் இருக்கிறதா?

இந்தக் கேள்வியை நாம் எப்பவாவது முந்தைய தலைமுறை எழுத்தாளர்களிடம் கேட்டிருக்கிறோமா. உதாரணமா, ஜானகிராமன் கதையில் வரும் அத்தனை ’நான்’ களும் அவரேதானா வேறயா. அசோகமித்திரன் கதைகளில் நான்ங்கிற அடையாளத்தோட வர்றது ஒரே ஆளா, வேற வேற ஆட்களா!

நவீன நாவல்கள் எல்லாவற்றிலுமே நான் என்பது வந்துகிட்டே இருக்கு. நான் அதை சொல்லவில்லை.

இத்தனை சிறுகதைகளும், நாவல்களும் சேர்ந்து ஒரேயொரு வலைப்பின்னல், இது ஆயுள்கால வேலை, இந்த வலைப்பின்னலை உருவாக்கத்தான் எல்லா எழுத்தாளர்களும் உழைக்கிறாங்க . பல்ப் எழுத்தில் மட்டும்தான் வேறுவேறாக இருக்கும். சுஜாதா கதைகளில் வருகிறவை கற்பனைப் பாத்திரங்கள் இல்லையா. ஆகவே, அத்தனையுமே கற்பனையாகி விடுகிறது.

தீவிர எழுத்துக்கு வேறு கரிசனங்கள் இருக்கு. வாழ்விலிருந்து பிடுங்கி எடுக்கிறோம். ஒரே பாத்திரம் திரும்பத் திரும்ப வரும்போது, எவ்வளவு இடம் மிச்சமாகிறதுன்னு பாருங்க. என் கதையிலே ’அப்பா’ன்னு சொன்னதும் அவரைப்பத்தி இத்தனை கதைகள் வழியாக ஏற்கனவே சொன்னவை அத்தனையும் உங்களுக்குள் வந்துவிடும். ஆமாம், அவருக்கு மகோதரம் வந்தது, பையனுக்கு சின்னவயசாக இருக்கும்போதே இறந்து போயிட்டாருங்கிற மாதிரி அம்புட்டும் வந்துருது. இப்ப ’அப்பா அங்க நிக்கிறார்’னு சொன்னதும் அப்பாவை முழுசாக் கொண்டுவந்து நிறுத்திட முடியும். இந்த சவுகரியம் இருக்குல்ல. இப்படித் திட்டமிட்டுச் செய்தாயா என்றால், இப்போ அப்படித் தோணுது, சொல்றேன்.

பொதுவாக இப்படியான ஒரு வலைப்பின்னல் உங்கள் கதையில் வருது இல்லையா?

அது என்னன்னா, ஒட்டுமொத்தமாப் பாத்தா வலைப் பின்னலா, பெரிய கதையா தோணும். தனித்தனியாப் பாத்தா, துண்டு துண்டாத்தானே இருக்கு. துண்டுகள் ஒவ்வொன்றுமே கிராண்ட் ஆனதுன்னு நான் நம்புறேன். கடற்கரையின் ஒவ்வொரு மணல்துகளும் ஒரு முழுப் பிரபஞ்சம்ங்கிறது ஒரு நம்பிக்கை. நான் இங்கே உங்ககிட்டப் பேசும்போது ஒட்டுமொத்த மனித குலத்தின் பிரதிநிதியாத்தான் பேசுறேன், ஆமாம். அது வேற எக்ஸ்பிரியன்ஸ், முழுக்கவே வேற எக்ஸ்பீரியன்ஸ். அதுக்கு ஈடே கிடையாது, ஒரு நிமிஷம் நீங்க ராட்சச பலூன் மாதிரி விரிஞ்சு, பிரபஞ்சம் முழுக்க நிரம்பி..(விம்முகிறார்) அதை வார்த்தைகளில் சொல்லவே முடியாது. சொல்லவே முடியாது. சொல்லவேண்டிய அவசியமும் இல்லை. அது ஆகப் பெர்சனலான எக்ஸ்பிரியன்ஸ். மாஸ்டர்பேஷன் மாதிரி, என் உடம்புக்குள் தொடங்கி என் உடம்புக்குள்ளேயே முடியிற அனுபவம். எப்பவாவது வெளியே திமிறிச்சுன்னு சொன்னாக்க அதைக் கதையில பிடிச்சு வக்கக்கலாம்.

நான்தான் சார் கோவணம் கட்டிக்கிட்டுத் திரிஞ்சவன். நான்தான் குகை மனுஷனா இருந்தவன். நான்தான் நியாண்டர்தாலாக இருந்தேன். அவனைப் போய்க் கேளுங்க, நான்னுதான் சொல்லுவான். எல்லாருக்கும் நான் உண்டு. அத்தனை நானும் சேந்த ஒரு நான் இருக்குல்ல, அந்த ஒரு நானுக்குப் பேரு வைக்கத்தான் அறிவியலும் ஆன்மவியலும் அத்தனை பாடுபடுது. அத்தனை பாடுபடுது.. (சற்றுநேரம் கண்மூடி மவுனத்தில் ஆழ்கிறார்) சாரி… அடுத்த கேள்விக்குப் போகலாம்..

இல்லை சார், கொஞ்சம் இடைவெளி விடுவோம்.

ம்…

000

ஒளிப்படங்கள் நன்றி Shruti Ilakkiyam.

சுனில் கிருஷ்ணன்

காரைக்குடியில் வசிக்கும் சுனில் கிருஷ்ணன் சிறுகதையாசிரியராகவும், நாவலாசிரியராகவும் நன்கு அறியப்பட்டவர். காந்தியத்தின் மீது ஈர்ப்புக் கொண்டவர். விமர்சனத் துறையில் தொடர்ச்சியாக ஈடுபட்டு வருகிறார்.

1 Comment

  1. என் கற்பிதங்களை either challenge or change செய்யும் அத்துணை உரையும் வணக்கத்திற்குறியது.
    இவ் வகையில், 10 ற்க்கும் மேற்பட்ட இடங்களில் நெடுஞ்சான் கிடையாய் வணங்கினேன்.
    interviewer & interviewee இருவரும் உவகையளித்தார்கள்.
    நன்றி.

உரையாடலுக்கு

Your email address will not be published.