திடுதிடுமென மேல்மாடியில் பொருட்கள் வைக்கும் சப்தம் பலமாகக் கேட்டது. வீடு குலுங்கிக் குலுங்கி பழைய நிலைக்கு மாறுவதும் மீண்டும் குலுங்குவதுமாகவும் இருக்க தூக்கம் கலைந்து எழுந்தேன். அதற்குமேல் தூங்கமுடியவில்லை. இந்த சப்தங்களுக்கு எல்லாம் சப்தமிடாமல் கத்தத்தெரியாதா தூக்கம் கலையும்போது நமக்கு ஒரு முகம் தோன்றும். அதுவொரு மோசமான முகம். ஆக மொத்த பலவண்ண வெறுப்புகள் அடர்ந்த முகமாக அது இருக்கும். அந்த முகத்தைப் பார்த்தபடியே மாடியில் ஏறினேன்.
மாடியில் அப்பா அம்மா நின்றுகொண்டிருந்தார்கள். அவர்களுடன் ரங்கோன்ராஜ் நின்று பேசிக்கொண்டிருந்தார். அவரது கண்கள் அழுது உலைச்சலில் சாய்ந்தபடி இருந்தது. அவர் கையெடுத்துக் கூப்பியபடி நீங்கள்தான் பார்த்துக்கணும் என சோர்ந்த குரலில் சொல்லிக்கொண்டிருந்தார். எனது தூக்கம் சார்ந்த முகம் முற்றிலும் கலைந்துவிட்டது. எதுவுமே புரியாதபடி அவர்களைப் பார்த்துக்கொண்டிருந்தேன்.
ரங்கோன்ராஜ் ஒரு நேபாளி. பல வருடங்களுக்கு முன்பே தமிழகம் வந்தவர். கட்டுமானத் தேவைப்பொருட்களைப் பழையது புதியதுமாக வாங்கிச் சேகரித்து விற்பனை செய்பவர். நேபாளம் அவரது பூர்வீகமாக இருந்தாலும் சிலஆண்டுகளாக எங்கள் வீட்டில்தான் வாடகைக்குத் தங்கி வருகிறார். பொதுவாக இரவில் வருவார். வெகுகாலையிலே கிளம்பிவிடுவார். அவரால் எந்த தொந்தரவும் இதுவரை இருந்ததில்லை. நன்கு தமிழ் பேசத்தெரிந்த நேபாளி. இன்று ஏன் இவ்வளவு பொருட்களை வீட்டில் இறக்குகிறார் என்பதே எனக்குப் புரியவில்லை. அம்மா என்னை பார்வையால் சைகையிட அவள் அருகே சென்றேன். ரங்கோன்ராஜ் என்னையும் அதே சோர்ந்த கண்களால் பார்த்தார். நான் தலையை நிமிர்த்தி அம்மாவைப் பார்க்க அம்மாவும் என்னைப் பார்த்தாள்.
நான் அங்கிருந்து நகர்ந்து ரங்கோன்ராஜ் வீட்டை எட்டிப்பார்த்தேன். பொருட்கள் அங்கும் இங்குமாக சிதறிப்போய் இருந்தன. ஒரு பெரிய மரபீரோ வீட்டுக்கு நடுவே இருந்தது. அதை நகர்த்தவே நான்கு பேர் வேண்டும் அவ்வளவு பெரியது. கீழே சில பயணப்பைகள். அமரும் நாற்காலிகள். பாத்திரங்கள் அடங்கிய மரக்கட்டைகளால் செய்யப்பட்ட கூடு. ஒரு பெரிய நிற்கும் விளக்கு மற்றும் காற்றாடி அதன் அருகிலே ஒரு சின்ன ஷோபா அதில் அசையாத படி ஒரு சின்னப் பெண் இருந்தாள். அழுது களைத்த ஏதும் தெரியாத முகம். மாட்டிக் கொண்டுவிட்டோம் என்பது போல பாவனையில் ஒடுங்கிப்போய் அமர்ந்திருந்தாள். ஏதாவது சப்தமாய் கேட்டால் அழுதுவிடுவாள் போல அப்படி இருந்தாள்.
அன்று மதியம் சாப்பிடும்போது அம்மா சொன்னாள். அவள் பெயர் மாலினி. ரங்கோன்ராஜுக்குத் திருமணமாகிவிட்டது என்பது எங்களில் யாருக்குமே தெரியாது. அவருக்கு இவ்வளவு பெரியமகள் இருப்பதே அதிசயமாய் இருக்கிறது என்றாள். அம்மாவுக்கு ஒரு சந்தேகம். இது இவன் மகள்தானா?. எதாவது கடத்தி வந்திருப்பானோ வடநாட்டுக்காரன் வேறு நம்பமுடியவில்லை என்று கேட்டேவிட்டாள். அப்பா எரிச்சலாகிவிட்டார். மனைவி இறந்துட்டாங்கன்னு சொந்த ஊரில் இருந்து இங்க கூப்பிட்டு வந்திருக்கிறான். இதில் என்ன சந்தேகம். அவனைப் போய் சந்தேகப்படலாமா !அவன் பிள்ளை இல்லைனா இப்படி அமைதியா உட்கார்ந்து இருக்குமா ?. அதிகம் சந்தேகப்படாதே என அப்பா சொல்ல அம்மா அமைதியாகிவிட்டாள். எனக்கு அவர்கள் பேச்சில் எல்லாம் புரிந்துவிட்டது.
அன்றிரவு ரங்கோன்ராஜ் எங்கோ வெளியே சென்றுவிட்டார். மாலினி எங்கள் வீட்டில்தான் இருந்தாள் அவளுக்கு சுத்தமாகத் தமிழ்தெரியாது. எங்களில் யாருக்கும் நேபாளி தெரியாது. எதுவுமே அவள் பேசவில்லை. பெயரைச் சொன்னால் திரும்பிப் பார்ப்பாள். ஆனால் அவளிடம் அதற்கு மேல் என்ன பேசுவது என்று தெரியாது. அவளுக்குப் புரியாத மொழியில் ஓடிக்கொண்டிருக்கும் தமிழ்ப்படத்தை தலையில் வீடே இடிந்து விழுந்தால் கூட திரும்பமாட்டேன் என்பதுப் போன்ற பாசாங்குடன் பார்த்தபடி இருந்தாள். எங்கள் மூவருக்குமே அவள் குரல் எப்படி இருக்கும் என கேட்பதில் அவ்வளவு ஆர்வம்.
அன்று இரவு முழுக்க எனக்கு அவளது நேபாளி பெண்களுக்கே உரிய சப்பையான அந்த ஊசி முகம் வந்துக்கொண்டே இருந்தது. கூடவே அவள் குரல் கேட்கும் ஆர்வமும் அதைக்கேட்க அவ்வளவு ஆசையாக இருந்தேன். இப்படியே நாட்கள் நகரத்தொடங்கின. ரங்கோன்ராஜ் முழுமையாக மாலினியை மறந்தாற் போல் மாறிவிட்டார். சமயங்களில் நாட்கணக்காக வெளியூர் பயணம் என வராமல் இருப்பார். இதனால் முழுமையாக மாலினி எங்கள் வீட்டில் இருக்கத் தொடங்கினாள். அம்மாவுக்கும் அவள் மிக நெருக்கமாகிவிட்டாள். ஆனால் என்னை பார்த்தால் மட்டும் முகத்தை கவிழ்திவிடுவாள் நிமிரமாட்டாள். அம்மாவுக்கு ஒத்தாசையாக சமையல் செய்வது துணி துவைப்பதுயென எப்போதும் அம்மாவுடனே உலாவத்தொடங்கினாள். சமயங்களில் அம்மா அவளை மாலினி எனக்கூப்பிடுதை தவிர்த்து “வெள்ளச்சி” என்றுதான் அழைப்பாள். அந்தளவுக்கு இருவரும் தோழிகளாகி விட்டார்கள். அவளும் கொஞ்சம் கொஞ்சமாக தமிழ் பழகத்தொடங்கினாள். அம்மா எப்போதாவது சொல்வாள் ‘நல்லா தமிழ் பேசுறாடா’ ஆனால் நான்தான் கேட்டதேயில்லை.
இப்படியான போக்கில்தான் முழு ஆண்டு தேர்வுக்கு பின் பள்ளிக்கூடம் திறக்கப்பட்டது. அப்பா தனக்குத்தெரிந்த பேராசிரியரிடம் பேசி மாலினியைப் பள்ளியில் சேர்த்துவிட்டார். அதன் பிறகு தினமும் நான்தான் மாலினியை சைக்கிளில் பள்ளிக்கு அழைத்துச்செல்வேன். அது பெரிய பணியாக இல்லை, அவ்வளவு கனமாக இருக்கமாட்டாள் அந்த ஒல்லிப்பெண். அவள் எந்த நெருக்கடியும் என்னை செய்யவில்லை. அவளால் ஒரு துளிகூட தொந்தரவும் இல்லை என் சுதந்திரத்தில். அதுவே முக்கியமான காரணமாக இருந்தது அவளை நான் சைக்கிளில் அழைத்துச் செல்வதற்கு. காலையில் நான் வேகமாக கிளம்பி சைக்கிளை வெளியே எடுத்து நிறுத்தி சைக்கிளில் அமர்ந்துவிடுவேன். மாலினி கீழங்கி என் முன் வரும் போது முகத்தை குனிந்து கொள்வாள். சைக்கிளின் பின்பகுதியில் அவள் அமர அழுத்திசெல்வேன். எதுவும் பேசமாட்டாள்.
பள்ளி முடிந்த பிறகும் இதே போல மரத்தடியில் அமைதியாக வண்டியில் அமர்ந்திருப்பேன். அவள் வேகமாக வந்து சைக்கிளின் பின்பகுதியில் அமர சைக்கிளை அழுத்தி வீட்டில் இறக்கிவிடுவேன். எதுவும் பேசமாட்டாள். அவள் குரலை நான் எப்போது கேட்பேன் என ஏங்கவும் செய்தேன். ஒரு வேளை நான் எதுவும் பேசாததால் அவள் பேசுவதில்லை என்ற படியாக கூட இருக்கலாம். ஆனால் நானும் அவளிடம் எதுவும் பேச முனையவில்லை என்பதும் உண்மைதான். கிட்டத்தட்ட எனக்கு காலையும் மாலையும் ஒரு வெள்ளை பொம்மையை சைக்கிள் பின் அமரவைத்து தினமும் அழைத்துச் சென்று கொண்டு வருவதாகத்தான் இவ் வேலைபட்டது.
இப்படியாக நாட்கள் நகரநகர அவளுக்கு எல்லோரும் பழகியவர்களாகி விட்டனர். மாலினி எங்கள் வீட்டு பெண்ணாகவே மாறிவிட்டாள். கிட்டத்தட்ட ரங்கோன்ராஜ் கூட முழுமையாக வீட்டை மறந்தவராகிவிட்டார். மாலினியை எதிர்கடையில் இருந்து பள்ளி ஆசிரியர்கள் வரை எல்லோரும் “வெள்ளச்சி” என கூப்பிட்டார்கள். அவள் அதற்கு சிணுங்குவாள். அழகாக தமிழ் பேசுகிறாள். என்று பலரும் சொல்வார்கள். ஆனால் நான் அவள் குரலை கேட்டதேயில்லை. கிட்டத்தட்ட அவள் குரலைக் கேட்பது என்பது எனக்கு மாபெரும் லட்சியமாக மாறிவிட்டது. யாராவது மாலினி அழகாகப் பேசுகிறாள் என்றால் கோபமாகிவிடுவேன். அந்தளவுக்கு மாற்றிவிட்டது அவளது கேட்காத குரல். அதை என்னால் எவ்வளவு தாங்கமுடியுமோ அவ்வளவு தாங்கினேன்..
ஒருநாள் இரவு உணவு தயாராகி இருந்தது. மாலினி அவள் வீட்டில் இருந்தாள். அம்மா என்னை மாலினியை அழைத்து வரசொன்னாள். நானும் சென்றேன். பாதி படிக்கட்டில் ஏறும் போதுதான் நினைவு வந்தது நான் அவளிடம் பேசியதில்லையே அவளும் கூட எந்த தைரியத்தில் அழைக்கவந்தேன். திரும்பி சென்றுவிடலாம் என படிகளில் இறங்கத் தொடங்கினேன். அப்போதுதான் அந்த குரலை கேட்டேன். மெல்ல படிகளில் மேலேறினேன். மாலினியின் வீடு முழுமையாக சாத்தப்படாமல் பாதிதிறந்திருந்தது. நான் மெல்ல இருகதவுகளின் இடைவெளியில் எட்டிப்பார்த்தேன். ஒரு சங்கீதத்தனமான குரல் அது தேவலோகத்தின் ஏதோ ஒரு இசைகருவியில் இருந்து வழிகிற நரம்புசப்தம் இப்போது எனக்கு இந்த சப்தம் சப்தமாக கேட்காமல் இசையாகக் கேட்டது. அவள் தனது குரல் எனும் இசைக்கருவியில் இருந்து ஒரு நேபாளி பாடலை கீழிறக்கி வைத்தாள். அது துள்ளியது. மாலினியின் குரலை எப்போது கேட்பேன் என்பதே சவாலாய் இருந்த எனக்கு இப்போது அவள் பாடுகிறாள் கேட்கிறேன் என லயிக்க அப்போதுதான் தொடங்கியிருப்பேன். திடிரென நிசப்தமாயிற்று; திரும்பி உள்ளே பார்த்தேன். மாலினி வீட்டின் உள்ளே திரும்பி நின்றாள். எதுவும் பேசவில்லை பாடவில்லை. ஆடப்போகிறாளோ என கூர்ந்து அவளை பார்த்துக் கொண்டிருந்தேன். பாதங்களை சப்தம் கேட்காதபடி நகர்த்தி மெல்ல நடந்து நடந்து ஷோபாக்கு பின் மறைந்துக்கொண்டாள். எனக்கு அவளது செய்கை வேடிக்கையாய் இருந்தது. ஷோபாவின் பின்னிருந்து தலையை நிமிர்த்தி என்னை பார்த்தாள். நான் அதிர்ந்து போனேன். அப்படியென்றால் அவள் என்னைப் பார்த்துதான் இப்படி மறைகிறாளா? நான் ஏதோ தவறான செயலை செய்வதை போல தோன்றியது. வேகவேகமாக தலையை வெளியே எடுத்துக்கொண்டேன். “அம்மா உன்னை கூப்டாங்க” என சப்தமாக சொல்லிவிட்டு கீழறங்கினேன். அதான் நான் அவளிடம் முதல்முறை பேசியது. எனது மனது முழுக்க ஒரு விதமான சங்கடம். அவளை நான் மறைந்திருந்து பார்த்ததை அவள் எப்படி நினைத்திருப்பாள். என்னை ஒரு மோசமானவனாகத்தான் நினைத்திருப்பாள். நான் அவளிடம் மன்னிப்பு கேட்கவேண்டும் என தோன்றியது. மாலினி குனிந்த தலையோடு கீழிறங்கிவந்தாள். அம்மா ஏதோ கேட்டாள் எதுவும் பேசாமல் ஒரு ‘ம்’ மட்டும் வைத்தபடி சாப்பிட்டால். நான் பாதி உணவோடு திரும்பிவிட்டேன்.
மறுநாள் பள்ளிக்குப் போகும் போது மன்னிப்பு கேட்க விரும்பினேன். ஆனால் அதற்கான சந்தர்ப்பம் இருந்தும் நான் முயற்சிக்கவில்லை. எங்கு தொடங்கினேனோ அங்கே முடித்துவிடலாம் என தோன்றியது. அன்று இரவும் அம்மா அதேபோல மாலினியை அழைத்து வர சொன்னாள். இம்முறை படிகளில் ஏறும் போது பாடல் இல்லை. வெகு அமைதி. கதவு அதே போல பாதி சாத்தியிருந்தது. நான் கதவினை மெல்ல தள்ளி விலக்கினேன். மாலினி என மெல்ல வாயசைத்தபடியே உள்ளே சென்றேன். அதிர்ந்து போய்விட்டேன். மாலினி கையில் ஒரு கம்புடன் நின்றுக்கொண்டிருந்தாள். அதன் உச்சியில் துணி சுற்றி இறுக்கி இருந்தது. நான் உள்ளே நுழைந்ததை பார்த்ததுமே முடிச்சிட்டு இருந்த துணியில் நெருப்பைப் பற்றினாள். அது குபு குபுவென பற்றி எரிந்தது
‘மாலினி என்ன செய்கிறாய்’
அவள் எனது முகத்திற்கு நேரே பற்றி எரியும் நெருப்பை வீசி
“வாசோ”
“வாசோ”
எனக் கத்தினாள்.
எனக்கு பயங்கரமான படபடப்பு என் தோளில் இருந்து உடல் முழுக்க அந்த நெருப்பு அனலாய் அடித்தது. “மாலினி உனக்கென்ன பைத்தியமா அதைக் கீழேபோடு” எனக்கத்தினேன்.
“வாசோ” போ!போ! என மீண்டும் பலத்து கத்தினாள்.
அவள் கையில் இருந்த தீப்பந்தம் என்னை அனல்களால் அலைகழித்தது. நான் அந்த நெருப்புக் குவியலைப் பார்த்தேன். பற்றியெறிந்த பந்தத்தின் துணிகள் தீத்துளிகளாக சரிந்தன. அதிலொன்று சன்னலின் திரைச்சீலையில் பற்றி எரியத் தொடங்கியது. நான் திகைத்துப்போனேன். அதற்கு மேல் பற்றி எரிய அருகில் ஏதுமில்லாததால் அந்த நெருப்பு அதனுள்ளே எரியத்தொடங்கியது. நான் சுதாரித்து ஓடிப்போய் ஏதேதோ செய்து அதை அணைத்தேன். அவ்வளவு பெரிய விபத்தாகவில்லை. ஆனால் மாலினி என்னிடம் நடந்து கொண்ட விதம் அவ்வளவு கொடூரமானது. நான் அவளைப் பார்த்தேன். அந்த சின்ன புகைமூட்டத்துக்குள் அவளது முகம் அவ்வளவு வெறுப்பும் கோபமும் ஏறிப்போனதாக நின்றிருந்தது.
தீப்பந்தம் மெல்ல அடங்கிக் கொண்டிருந்தது. அவள் “வாசோ…வாசோ” என சொல்லிக் கொண்டே என்னைப் பார்த்தாள். இத்தனை வெறுப்பாய் என்னிடம் அவள் நடந்து கொண்டதற்கான காரணம் என்னவென்று எனக்குப் பிடிபடவில்லை.
இந்த சம்பவத்திற்குப் பிறகு அம்மா என்னை மாலினியை அழைத்துவர சொன்னாள். மாட்டேன் என தவிர்க்கத் தொடங்கினேன். அவளைப் பார்த்தாலே நான் தலைகுனியத் தொடங்கினேன். தினமும் பள்ளிக்கு அழைத்து செல்வது மட்டும் வாடிக்கையானது.
முன்பு மாதிரி இல்லை இந்த ஒல்லிப்பெண் இப்போது ரொம்பவே கனமாகத் தொடங்குகிறாள். சைக்கிளை ஒவ்வொரு முறை அழுத்தும் போதும் ஏறி இறக்குகிற மூச்சுகாற்று “வாசோ..வாசோ” என அவள் உச்சரிப்பது போல தொடர்ந்து தொந்தரவு செய்தது. ஒரு பாவியாக என்னை உணரத்தொடங்கினேன். மாலினி தீப்பந்தத்தால் அச்சுறுத்திய விதம் அவ்வளவு தூரம் என்னை வழக்கமான நபராக இருக்கவிடாமல் தொந்தரவான ஒரு நபராகவே நடமாட வைத்தது.
அன்று பள்ளி இடைவேளையோடு முடிந்தது. இருவரும் சைக்கிளில் வந்து கொண்டிருந்தோம். பின்னால் ஒரு விசும்பல் சப்தம். வண்டியை அழுத்திக் கொண்டே திரும்பிபார்த்தேன். மாலினி அழுதுக்கொண்டிருந்தாள்.
“ஏய் என்னாச்சு மாலினி” என கேட்டேன்.
அவள் அழுது கொண்டே”என் அம்மாவை ஏன் சாகடிச்ச” எனக் கேட்டாள்.
நான் ப்ரேக்கை வேகமா அழுத்தி அவளை திரும்பி பார்த்தேன். நேருக்கு நேராக என் முகத்தைப் பார்த்து மாலினி சைக்கிள் பின்புறம் அமர்ந்தபடி மீண்டும்கேட்டாள்.
“என் அம்மாவை ஏன் சாகடிச்ச?” இப்போது பெரிய சப்தமாக கேட்டாள். கேவல் உடைந்து சாலையில் ஓடத் தொடங்கியது. நான் என்னவோ போல் ஆகிவிட்டேன்.
“என்ன மாலினி சொல்ற நானா?”
“ஆமா நீதான் என் கண்ணு முன்னாடி நீதான் சாகடிச்ச” என்றாள் அழுதபடியே.
“எனக்கு உன்னையே இப்பதான் தெரியும். உங்க அம்மா எப்படி இருப்பாங்கனு கூட தெரியாது. என்னை ஏன் இப்படி சொல்ற, அப்படி சொல்லாதே.” என்றேன்.
“இல்லை நீதான் சாகடிச்ச ‘வாசோ’ நீதான் ‘வாசோ’ என கத்தத் தொடங்கினாள்.
எனக்கு நிலவரம் தலையை மீறிப் போவதாகபட்டது. அவளை சமாளிக்க அவ்வளவு கடினமானேன். அம்மா சொல்லிருயிருக்கிறாள் மாலினியின் அம்மா சமையல் எரிவாயு வீட்டில் வெடித்து இறந்ததாக அப்படிதான் ரங்கோன்ராஜ் கூட சொல்லியிருக்கிறார். ஆனால் மாலினி இன்று நான் கொன்றதாய் சொல்கிறாள். இவள் குரலை கேட்க அவ்வளவு ஆசைப்பட்டிருக்கிறேன். இப்போது ஏன் பேசுகிறாள் என்பது போல தோன்றுகிறது. எனக்குள் ஒரு பயம் அவள் அப்படி சொல்லும்போது. இது எங்குபோய் முடிய போகிறது என்றளவு பயந்தேன். அங்கிருந்து அவளிடம் ஏதேதோ பேசி சமாளித்து வீட்டில் போய் இறங்கிவிட்டேன். அதன் பிறகு முற்றிலுமாக மாலினியைத் தவிர்த்தேன்.
அவள் தனது வீட்டுச்சுவர் முழுக்க சின்ன சின்ன கண்களை வரைவதைப் பார்த்திருக்கிறேன். அப்போதெல்லாம் ரங்கோன்ராஜ் வீட்டுக்கு வரும்போது அவள் வரைந்த அந்த சின்ன சின்னக் கண்களை சுவரில் இருந்து அழிப்பார். பிறகு அப்படி அவள் வரைந்ததற்கு அவளைக் கடிந்துக்கொள்வார். அவர்கள் நேபாளத்தில் பேசினாலும் சில விஷயங்கள் எனக்குப் புரியும். அவர் மாலினியை கட்டிக்கொண்டு அழுவது சமாதானம் செய்வது மாலினி பதிலுக்கு அழுவதுயென சிலமுறை பார்த்திருக்கிறேன். ஒருமுறை அவள் ரங்கோன்ராஜ்ஜை அழைத்து வந்து என்னை நோக்கி கைநீட்டி “வாசோ” என்று சொன்னாள். ரங்கோன்ராஜ் பதிலுக்கு அவள் கையைத் தட்டிவிட்டு இழுத்துப்போனார்
“வாசோ” அப்படி அந்த வார்த்தைக்கு என்ன அர்த்தம் என தேடி தமிழ் தெரிந்த நேபாளி நண்பனின் கேட்ட போதுதான் அவன் சொன்னான். அதன் அர்த்தம் “ஓநாய்” என்று. அதைகேட்டதும் முதலில் எனக்கு பயங்கரமான கோபம்தான் ஏற்பட்டது.
எப்படி என்னை அவள் ஓநாய் என்று சொல்லலாம்.
எனக்கு ஒரு மாதிரி அவமானமாக இருந்தது. அந்த சின்னப்பெண் என்னை நோக்கி தீப்பந்தத்தை வீசிய போதே கண்டித்திருக்கவேண்டும். ஓங்கி ஒரு அறை வைத்திருந்தால் என்னை இப்படி புரியாத வார்த்தையில் இவ்வளவு நாட்களாக ஓநாய் ஓநாய் என்று சொல்வதை தவிர்த்திருப்பாள். எல்லாம் என் தவறுதான். கூடுதலாக நொந்துக்கொண்டேன். ஒருவேளை இந்த வார்த்தையின் அர்த்தம் தெரியாமல் இருந்திருந்தால் கூட இவ்வளவு என்னைக் கடிந்திருக்கமாட்டேன் போல என்றெல்லாம் தோன்றியது.
எப்போதும் சில விஷயங்கள் பிடிபட காலம் தேவைப்படும். அது ஒரு அமைதிக்குள் இருந்து கூட பிடிபடலாம். கிட்டத்தட்ட அமைதி என்பதும் ஒரு காலம்தான். அவள் என்னை ஓநாய் என்றதும். என்னை ஓநாய் என்று அவள் சொன்னதிற்கு நான் கோபப்பட்டதிற்கு பிறகு நான் அந்த அமைதி என்ற காலத்தின் மேல் அமரத்தொடங்கினேன். சில நிமிடங்கள்தான் அந்தக் காலத்தின் மேல் அமர்ந்தேன்.
அது என்னைப் பலமாதங்களின் பின்னே பயணிக்கவைத்தது.
மாலினி என்னை தீப்பந்தத்தால் அடிக்கவந்தது. கோபமாக என்னை “வாசோ” என கத்தியது. சின்ன சின்னக் கண்களை சித்திரங்களாக வரைந்தது. ரங்கோன்ராஜ் அழுது சரிந்ததுயென எல்லாவற்றிலும் மேலாக, என் அம்மாவை ஏன் கொன்றாய் என மாலினி அழுதது. இவை எல்லவாற்றினதும் மூலமே என்னை அவள் ஓநாயாகப் பாவித்ததுதான் காரணம் என முடிவெடுத்தேன். அப்படியானால் மாலினி அம்மா சமையல் எரிவாறு வெடித்து இறக்கவில்லை. ஓநாய் கடித்து இறந்திருக்கிறாள்.
ரங்கோன்ராஜ் நேபாளத்தில் ஒரு காட்டுப்பகுதியைச் சார்ந்த கிராமம் என சொல்லியது அப்போது நினைவுக்கு வந்தது. மாலினியை நான் ஏதோ வகையில் தொந்தரவு செய்திருக்கிறேன். இப்போது எனக்கு மாலினி மீதான கோபமெல்லாம் முற்றிலுமாக குறைந்தது. அவள் மேல் பரிதாபம் கொண்டேன். இந்த மாற்றத்திற்குக் காரணம் அமைதி என்ற காலம்தான். மாலினி பாவம் அந்த சின்னப்பெண் அவ்வளவு பெரிய கம்பில் நெருப்பைப் பற்றி வீசும் அளவுக்கு அவள் வாழ்வு சித்திரவதை பெற்றிருக்கிறது. அவள் என்னை ஓநாயாக எப்போது அறியத் தொடங்கினாள். அதன் முழுமை எங்கு தொடங்கியிருக்கும் என்பதை அறிய ஆர்வப்படத் தொடங்கினேன்.
மறுநாள் வழக்கம் போல சைக்கிளில் போகும்போது கேட்டேன்.
“என்னை ஏன் “வாசோ” அப்படினு கூப்பிடுற?”
“நீ “வாசோ” அதான் உன்னை அப்படி கூப்பிடுறேன். வாசோ தான் மறைஞ்சிருந்து நோட்டமிடும். வாசோ”வின் குணமே அதான்” என்றாள்.
எனக்கு அப்போது அவள் பாட்டுப் பாடும் போது நான் மறைந்திருந்து பார்த்தது ஞாபகம் வந்தது. அதுதான் காரணம் போல. அங்கிருந்துதான் மாலினி என்னை ஓநாயாகப் பார்க்கத் தொடங்கியிருக்கிறாள். ஓநாய்கள் அப்படியானவைதான் தனது இரைகளுக்கான வேட்டையில் படுகவனமாக செயல்பட கூடியவைகள். அவையால் தனது கூட்டத்தை உடனே ஒன்று சேர்க்க முடியும்.
“உங்க ஊர் ரெம்ப பெருசா மாலினி?”
“இல்லை வாசோ, அதுவொரு சின்ன ஊர். காட்டுப் பகுதியை ஒட்டிய ஊர். நிறைய மிருகம் பறவைகள் வரும்”
அவள் என்னை திரும்ப திரும்ப “வாசோ” என்றழைப்பது இப்போது வேறு விதமாக என்னுள் சில மாற்றங்களைக் கொண்டு வந்தது. மாலினி சைக்கிளில் அமர்ந்திருகிறாள். அவளை இன்னும் ஓநாயாக மாறாத மனதளவில் ஓநாயான ஒருவன் சைக்கிளில் அழுத்திச்செல்கிறான்.
“உங்க அம்மா எப்படி இறந்தாங்க?”
“நீதான் சாகடிச்ச!”
வண்டியை நிறுத்தினேன். கீழிறங்கினேன். அவளை உட்கார வைத்தபடியே ஸ்டான்ட் போட்டு அவளை சாந்தமாகப் பார்த்தேன். அவள் முகத்தில் அந்தகோபம் மீண்டும் வந்ததை போல தோன்றியது. என்னைக் கொஞ்சம் சரி செய்தபடியே கேட்டேன். “சரி நான்தான் சாகடிச்சேன். நான் எப்படி சாகடிச்சேன் சொல்லு” அதைக் கேட்டதுமே அவள் அழத்தொடங்கினாள். அவள் உடல் நடுங்கத்தொடங்கியது.
நான் கேட்டிருக்ககூடாது. ஆனால் என்னால் கேட்காமல் இருக்க முடியவில்லை. அந்த சின்னப்பெண் அழுவதை தாங்கமுடியவில்லை. ஆனாலும் “வெள்ளச்சி” அழாதே என்றேன். அமைதியானவள் வித்தியாசமாய் என்னை நிமிர்ந்துப் பார்த்தாள். என் கண்களை நேருக்கு நேராய் எப்போதும் பார்க்காதபடி குனிந்து பயணிப்பவளுக்கு அன்று ஏதோ ஒரு தைரியம். எதையோ வென்றது போல உணர்ந்து வேகவேகமாகச் சொன்னாள்.
“நானும் அம்மாவும் வீட்டுக்கு வெளிய உட்கார்ந்து இருந்தோம். நீ ஆட்டுக்குடில் பக்கம் மறைந்து இருந்தாய். உன்னை முதலில் நான்தான் பார்த்தேன். அம்மாவைக் கூப்பிட்டு உன்னைக் காண்பித்தேன். அம்மா என்னை தூக்கிக் கொண்டு வீட்டுக்குள் போகும்போது, சரியாக நீ ஓடிவந்து அம்மாவின் காலைக் கடித்தாய்.” என்று அழ ஆரம்பித்தாள்.
அழுததில் மாலினியின் கன்னம் வீங்கத்தொடங்கியது. அதைப்பார்த்ததும் என்னுள் ஏதோ ஒரு உணர்வு, உடல்சிலிர்ப்பு. அவள் தொடர்ச்சியாக “நீ! நீ!” என்று சொல்வது என்னை ஏதோ போல் மீண்டும் மாற்றியது. ஒருவிதமான போராட்ட மனநிலை போல என்னுள் இருந்து அது ஏதோவாக வெளிவரத்துடிப்பதாக இருந்தது.
“அம்மா என்னை வீட்டுக்கு தள்ளிவிட்டு உன்னோடு போராடினாள்.”
எனது நகங்கள் வளர்வதைப் போல் உணர்ந்தேன்.
“அம்மா தன் உடலை, உன்னிடம் இருந்து காப்பாற்ற நிறைய போராடினாள்.”
எனது தோள் கைகால்கள் உருமாறுவதாகப்பட்டது.
“அப்போது எனது பலத்த சப்தம் கேட்டு அங்கம் பக்கத்தினர் ஓடிவர நீ ஓடிவிட்டாய்”
எனக்குள் அடங்காத பசி மீண்டும் ஏறியது.
“ஆனால் அம்மாவைக் காப்பாற்ற முடியவில்லை அவளது கழுத்துப்பகுதியை நீ பலமாகக்கடித்துவிட்டாய். எனது பற்கள் ஊசியாகின. மாலினியைக் கடிக்கலாம் போல தோன்றியது. அவளது வெள்ளைக் கழுத்தையே பார்த்தேன். மாலினி தனது கையில் இருந்த பள்ளிப்புத்தகம் ஒன்றைத் தூக்கி என் தலையில் அடித்து பலமாக கேவத்தொடங்கினாள்.
“அம்மாவை ஏன் சாகடிச்ச?” என்று மீண்டும் கேட்டாள். எனது முழு உடலும் பழைய தன்மைக்கு மாறியது. “அவளைக்கட்டி அணைத்தபடி மன்னிச்சுடு” என்றேன். என் கண்கள் கலங்கின. “மன்னிச்சுடு மாலினி நான் அப்படி செய்திருக்கக்கூடாது தவறுதான்” என்றேன். என்னையறியாமலே வந்த வார்த்தைகளை போல் இல்லை. சுயமாகவே வந்திருந்தன. அவளைப் பத்திரமாக வீட்டில் இறக்கிவிட்டு குளியலறை சென்றேன்.
என் சின்ன கண்கள் அந்த கண்ணாடியில் முழுமையாகவே ஓநாயின் கண்களாக மாறியிருந்ததைப் பார்த்தேன். நான் மாலினியின் அம்மாவைக் கொன்றிருக்ககூடாது. பாவம் அவள் என மீண்டும் அழத்தொடங்கினேன். சீக்கிரம் இந்நாளின் இரவு வந்தால் நல்லது. நிலவைப் பார்த்து துயரத்தில் ஒரு ஊளையிட்டால் இந்தக் குற்றவுணர்வில் இருந்து கொஞ்சமாவது தப்பிப்பேன்.
ச.துரை
ச.துரை, ராமேஸ்வரம் அருகேயுள்ள மண்டபம் ஊரில் வசித்துவருகிறார். ‘மத்தி’ என்ற கவிதைத்தொகுப்பின் ஊடாக பரவலான கவினிப்பைப் பெற்றவர்.
நிறைவான கதை நீரோட்டம் போன்ற மொழி
சிறப்பு .நல்ல எழுத்து நடை