காற்று பலமாக வீசிக்கொண்டிருந்தது.

சந்தையின் தார்பாய்களையும், குடிசைகளையும் தூக்கி தூக்கி சட்டத்தில் வைத்தபடி இருந்தது. அப்போது காய்கறிகடையின் ஓரத்தில் இருந்த தேநீர்கடையில் குடித்த தேநீருக்கு காசை கொடுத்து மீதி சில்லறையை தனது கொப்புளம் நிறைந்த கையை நீட்டி அவன் வாங்கி திரும்பினான். ஆறெழுபேர் அவனுக்கு முன் நின்றுக்கொண்டிருந்தார்கள். அவனை எதுவும் பேசகூட விடாமல் இழுத்துச்சென்றார்கள். அவனை யாரும் நிமிர்ந்து கூட பார்க்கவில்லை. ஒரு செம்மறி ஆட்டை தரதரவென இருப்பதுபோல இழுத்து அந்த சந்தையின் தனியான இடத்தில் நிறுத்தி வைத்தார்கள். இப்போது அவனுக்கு எதிரே  இன்னும் பெரியதொரு கூட்டமாக அது உருவாகியிருந்தது. அவனது  கொப்புளங்கள் விழுந்த கையில் ஒன்றிரண்டு நாணயங்களும் அன்று இரவு உண்ண சட்டைப்பையில் ஒரு ரொட்டி பாக்கெட் மட்டுமே வைத்திருந்தான். இந்த கூட்டம் தன்னிடம் எதை எதிர்பார்க்கிறதென அவர்களின் பார்வையை நேருக்கு நேராக பார்த்தபடி அவன் நின்றான். அந்த கூட்டத்தில் ஒருவர் கூட அவனை நல்ல முறையில் அணுக தயாரில்லாதவர்களாக இருந்தார்கள்.

உன் பெயர் என்ன? என கூட்டத்தில் இருந்து ஒருவன் கேட்டான்.

“சேவியர்” என்றான் பதட்டத்தொடு.

ஊர்?

அவன் எதுவும் பேசவில்லை. அந்த கேள்வி அவனுக்கு அதிர்ச்சியாக இருந்தது. ஏனென்றால் கிட்டத்தட்ட அவன் இந்த ஊரின் சுற்றுவட்டாரங்களுக்கு பதிமூன்று வருடமாக வந்து போகிறான். யாருக்கும் அவனை இத்தனை வருடமாக தெரியவில்லை, அதுவுமில்லாமல் இத்தனை வருடத்திற்கு பிறகு தன்னை ஒருவன் எந்த ஊர் என கேட்பதால் அது அவனுக்கு புது கேள்வியாக இருந்தது. இருந்தாலும் சற்று சுதாரித்தவன்.

“நான் இராமேஸ்வரம். “ஆனால் இந்த ஊர்ல இப்ப ரெண்டு வருஷமா இருக்கேன் ” என்றான்.

மொத்த கூட்டமும் சிரித்தது. அவனுக்கு அது அருவெறுப்பாக இருந்தது. கூட்டத்தில் ஒருவன்.

“ஏன் ராசு இவனை இந்த முந்நீர்ல நீ எங்கயாவது பார்த்திருக்க” என்று கூட்டத்தில் ஒருவன் கேட்டான்.

அதற்கு எதிர்ப்புறம் நின்ற ராசு “ இல்லையே ஏதே பொய் சொல்லி சுத்தி திங்குற நாய் மாதிரி இருக்கான்”  என கூறினான்.

அதனை கேட்டதும் சேவியருக்கு கோபம் வந்தது தனது கையில் இருந்த அந்த ஒன்றிரண்டு நாணயங்களை கசக்கினான். அப்போது பின்னே இருந்த ஒருவன்

“உன் கை ஏன் இப்படி வெந்து போயிருக்கு “ என கேட்டான்.

சேவியர் எதுவும் பேசவில்லை

“ வேலை வெட்டிக்கு போற எவனும் உன்னை இங்க பார்த்ததில்லை. ஆனால் நீ இங்க தங்கிருக்கனு சொல்ற இதை நாங்க நம்பணுமா? என சற்று கோபத்தோடு இன்னொருவன் “சொல்லுடா” கை ஏன் வெந்து போயிருக்கு என கேட்டான்.

சேவியர் கூறவில்லை. தலையை குனிந்தபடி நின்றான். அப்போது கூட்டத்தில் நின்ற சற்றே தடித்த ஒருவன்.

“கேட்குறாங்கல்ல சொல்லுடா. “உன்ன ஒன்னும் சும்மா நிக்க வச்சு கேள்வி கேட்கலை. தினம் ஒரு கடைனு சந்தைல திருட்டு போவுது. நீ மட்டும் இப்ப பதில் சொல்லலை கட்டி வச்சு தோலை உரிச்சுடுவேன்“. என மிரட்ட சேவியர் பயந்தான். காற்று இப்போது இன்னும் வேகமாக வீசியது. சற்று தூரத்தில் அவனுக்கு எதிரே இருந்த கடையொன்றின் முன் கட்டித்தொங்கவிடப்பட்டிருந்த பொருட்களை காற்று தள்ளி கீழே உருட்டியது. அதை கடையில் இருந்து வெளியே வந்த ஒரு சிறுவனும் சற்றே வளர்ந்த சிறுமியும் சேகரிப்பதை பார்த்தான்.

மொத்த பலத்தையும் இழந்து நின்று சேவியர் அவ்வளவு பரிதாபமான குரலில், “என் அக்காவை தேடி வந்துருக்கேன். இங்கதான் இருக்காள்” என்றான்.

“எது அக்காவை தேடி வந்துருக்கியா ”என மொத்த கூட்டமும் சேவியரை விநோதமாக பார்த்தது.

***

பேருந்து காயல்கொடியில் நின்றதும். அவன் தோள்பையுடன் இறங்கினான். தெற்கே பார்த்த நீளமான மணல்சாலை, கருவேலமர கூட்டங்களுக்குள் வளைந்தபடி சென்றுகொண்டிருந்தது. இந்த பொதி மணலில் எவ்வளவு தூரம் நடக்க வேண்டுமோ என்கிற சலிப்போடு தோள் பையை இறுக்கமாக பிடித்தபடி மணலில் இறங்கினான். அவன் நினைத்தது தவறு. மணல் பொதியாக இல்லை. கல்போல் இறுகியிருந்தது. நடக்க அவ்வளவு சிரமமாக இல்லை. சிறிது தூரம் சென்றதும் அவனுக்கு தோன்றியது இந்த ஊருக்கு தார்சாலையே தேவையில்லை இந்த மணல் சாலையே போதும். இதைவிட தரமான சாலை அமைந்துவிடாதென்று, கொஞ்ச தூரம் அவன் நடந்து சென்றிருப்பான் பின்னேயொரு வண்டியின் சப்தம் கேட்டது. திரும்பிப் பார்த்தான். பைக்கில் ஒருவர் அவனை நோக்கி வந்து பின்னே நின்றார். வண்டியின் முன்னே காலியான மீன்கூடை இருந்தது. வண்டியை திருகியபடியே அவனைப் பார்த்து,

ஊருக்குள்ளயா போறீங்க? என கேட்டார்.

“ஆமாம்” என்றான்.

“நாலு கிலோ மீட்டர் நடந்திருவீங்களா” ?

அவனுக்கு பதக்கென்று இருந்தது . காலையில் சாப்பிட கூட இல்லை அவ்வளவு தூரம் தன்னால் நடக்க முடியாதென்று அவனுக்கு தோன்றியது அவர் தனது வண்டியை மீண்டும் ஒருமுறை முறுக்கியபடி,

“நான் வேணும்னா இறக்கி விடவா? ஐந்து ரூபா கொடுத்துடுங்க போதும் ஆட்டோல போகணும்னா முப்பது ரூபாய் ஆகும்” என்றார்.

அவனுக்கு அவரின் சாமர்த்தியம் வேடிக்கையாக இருந்தாலும் சரியென்றான். வண்டியில் ஏறினான். வண்டி கிளம்பியது.

” எங்கிருந்து வர்றீங்க ” என வண்டிக்காரர் கேட்டார்.

“இராமேஸ்வரம்” என்றான்.

” யார பார்க்கப் போறீங்க” என கேட்டார்.

“எஸ்தர்” என் அக்காகாரியை பார்க்க போறேன் என்றான்.

” ஊருக்குள்ள பாதி பொண்ணுங்க எஸ்தர்தான் நீங்க எந்த எஸ்தரை பார்க்க போறீங்க” என வண்டிக்காரர் கேட்க, அவனுக்கு எப்படி சொல்வதென்று தெரியவில்லை.

நாற்பது வருஷம் முந்தி தனுஷ்கோடி புயலில் அத்தனையும் இழந்து வளர்க்க முடியாமல் சொந்தக்காரங்க வீட்டில் விட்டு போன ஒருத்தியை இத்தனை வருடம் கழித்துதான் தேடி வந்திருக்கேன் என எப்படி கூறுவது என தெரியாமல் சற்று யோசித்தான், பிறகு சிறிது இடைவெளி வைத்து,

“பால்ராஜ் மாமா வீட்டுக்கு போறேன் அங்கதான் என் அக்கா இருக்காள்” என்றான்.

வண்டிக்காரர் வண்டியை ஓட்டியபடியே ஒருமுறை அவனை திரும்பிப் பார்த்தார் “இந்த ஊருல மொத்தம் ஏழு பால்ராஜ் இருக்காங்க. நீங்க எந்த பால்ராஜை பார்க்கணும்” என கேட்டார்.

அவனை அந்த கேள்வி சோர்வுற செய்தது “கருவாட்டு வியாபாரி” என சலிப்போடு கூறினான். அதன் பிறகு வண்டிக்காரன் எதுவும் பேசவில்லை.

அந்த மணல் சாலையின் இருபுற கருவேலமரங்களும் முடிந்தது. அதற்கு பதிலாக தேங்கிய குட்டை போல அங்கங்கு நீர்நிலைகள் வரத்தொடங்கின. அவன் அதையே பார்த்தபடி அமர்ந்திருந்தான். அவர்கள் செல்லும் சாலையின் ஓரத்தில் இருந்து தூரம்வரை அந்த நீர்நிலைகள் நல்ல இடைவெளியில் பரவியிருந்தது அதில் நிறைய நாரைகளும், கடல் குருவிகளும் சில பெயர் தெரியாத பறவைகளும் அமர்வதும் பறப்பதுமாக இருந்தன.

***

இறக்கும் போது இந்த மனிதர்கள் ஏதாவது ஒரு பாரத்தை வைத்துவிட்டு போய்விடுகிறார்கள். அவனின் அம்மாவுக்கு முதுமையில் எண்ண ஓட்டங்கள் கொஞ்சம் கொஞ்சமாக அதிகரிக்கத் தொடங்கின. படுத்த படுக்கையாக அவள் இருந்தபோது சின்னச் சின்ன பிதற்றலின் வழியே அந்த ரகசியத்தை கசியவிடத்தொடங்கியவள், அவளுக்காக துணையாய் இருந்த அவனின் வாழும் காலத்தின் பாரத்தை அதன் மூலம் அதிகரிக்க செய்தாள்.

ஒருமத்தியானம் ஈரத்துணியால் அவளது உடல் முழுக்க அவன் கழுவித்துடைக்கும்போது அந்த மொத்த ரகசியத்தையும் சொல்லி அழுதாள். அதை அவள் சொல்லும் போது அவளது தலைப்பகுதி மட்டுமே சற்று துடிப்போடு இருந்தது. தலைக்கு கீழே இருந்த உடல் முழுக்க மரத்துப் போய்விட்டது. நடுங்கும் உதடுகளோடு அவனை அருகே அழைத்து நோய்மையின் குரலில் சொன்னாள்.

என்னம்மா சொல்ற..  அக்காளா? எனக்கு முந்தி பிறந்தவனு ஒருத்தி எனக்கு இருக்காளா? என கேட்டான்

அம்மா “ஆமாம்” என தலையசைத்தாள்

“காயல்கொடி” என ஊரின் பெயரை அம்மா சொன்னதும் அவன் உடல் அம்மாவின் நோய்மையை மறந்து ஆனந்தத்தில் சில்லிடத்தொடங்கியது. அந்த நடுக்கத்தில் அழுதே விட்டான். தனித்தே வாழ்ந்தவன் , அம்மாவே கதியென்று இருந்தவன். அவளது மறைவுக்கு பின் என்னாக போகிறேன் என இருந்தவனுக்கு அந்த ரகசியம் அவ்வளவு உயிர்ப்பூட்டுவதாக இருந்தது. தினமும் அம்மாவுக்கு பணிவிடை செய்யும் போதெல்லாம் அக்காவை பற்றி விசாரித்தபடியே செய்வான். அந்த நேரத்தில் எல்லாம் அவனுக்கு அந்த வீட்டில் மூன்று பேர் இருப்பதாக உணர்வான்.

ஒருநாள் அவனது அம்மா அசைவில்லாமல் இருந்தாள். எழாமல்,ஓடாமல் இருந்த அம்மா வாய்மூடி பேசாமல் இருப்பதை அப்போதுதான் அவன் முதல்முறையாக பார்த்தான். அவளுக்கான நல்லடக்கத்தை தனியே செய்தான். வீட்டிலே தனித்து இருந்தவனுக்கு அவள் கூறிய ரகசியம் பெரும் தொந்தரவாக இருந்தது. அதன்படி அம்மா கூறிய காயல்கொடிக்கு அக்காவை தேடி புறப்பட்டான்.

***

இருபுற நீர் நிலைகளும் முடிந்து ஊரின் தொடர்ச்சி தொடங்கியது. ஆரம்பத்தில் பத்து பதினைந்து வீடுகள் மூடியே இருந்தன. அதன் பின்னே மனித நடமாட்டம் தென்படத்தொடங்கியது. வண்டிக்காரன் வேகத்தை குறைத்து நேர் சாலையின் குறுக்கே வந்த சந்தில் வண்டியை விட்டான். அது முட்டிக்கொண்டு ஒரு வீட்டை அடைந்தது. வண்டியில் இருந்து அவன் இறங்குவதற்குள்ளே வண்டிக்காரன் வேகவேகமாக வீட்டை பார்த்து சப்தமிடத்தொடங்கினான்.

” பால்ராஜ் அண்ணே உங்களைத் தேடி ஆள் வந்திருக்காங்க “

அவனுக்கு பால்ராஜ் மாமா வீட்டுக்கு வந்துவிட்டோம் என புரிந்ததும் வேகவேகமாக இறங்கி சட்டைப்பையில் இருந்து ஐந்து ரூபாயை எடுத்து வண்டிக்காரனிடம் கொடுத்துவிட்டு வீட்டை பார்த்தான். அதுவொரு ஓட்டுவீடு வெளி கதவின் பக்கத்தில் கருவாட்டு கூடைகள் ஒன்றன் மேல் ஒன்றாக அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. வண்டிக்காரன் வண்டியை இரண்டு முறை முறுக்கி வேகமாக அந்த இடத்தை விட்டு கிளம்பினான். வீட்டின் கதவு முன்னே அவன் வந்து நின்றான் . நாற்பது நாற்பத்தைந்து வயது மிக்க பெண்ணொருத்தி கதவை திறக்க வந்து கொண்டிருப்பது கதவின் வெளிபுறம் இருந்து பார்க்க அவனுக்கு நன்றாக தெரிந்தது. அந்த பெண் எதிர் புறத்தில் வேற்று ஆண் ஒருவன் நிற்பதை உள்ளிருந்து பார்த்ததும் புடவையை சரிசெய்தபடியே வந்து கதவை திறந்தாள். அவள் கதவைத் திறந்ததும் அவன் ஒருமுறை அவளை நன்றாக மேலும் கீழும் பார்த்தான்.

வந்தவள் அவன் முகத்தை பார்த்துச் “சொல்லுங்க” என கூறினாள்.

அவன் பதிலுக்கு அவளை பார்த்ததும் ” எஸ்தர் ” என அழைத்தான்.

அவளுக்கு ஒன்றும் புரியவில்லை ” நீங்க யாரை தேடி வந்துருக்கீங்க” என கேட்டாள்.

“நீங்க எஸ்தரா” என மீண்டும் கேட்டான்.

அவள் “இல்லை” என தலையசைத்தாள்.

இது “பால்ராஜ் மாமா வீடு” தானே என கேட்டான்.

அவள் “ஆமாம்” என்றாள். அப்போது அவளுக்கு பின்னே யாரோ நடந்து வருவதை அவன் பார்த்தான். அவர் “யாருமா” என கேட்க “தெரியலைப்பா உங்களைத் தேடிதான் வந்திருக்காங்க” என கூறி உள்ளே சென்றாள். அவர் “சொல்லுங்க தம்பி உங்களுக்கு என்ன வேணும்” என கேட்க பெரும் தவிப்போடு அவன்,

“நான் எஸ்தரை பார்க்கணும்” என்றான் .

அவர் “இங்க அப்படி யாரும் இல்லையே தம்பி” என கூறினார். அவனுக்கு அந்த வார்த்தைகள் பெரும் துயரமாக இருந்தன இருந்தாலும் தன்னை சற்று ஆசுவாசப்படுத்தி,

 “நீங்க பால்ராஜ்தானே” என கேட்டான். அவர் ஆமாம் என்றார்.

” நாற்பது வருஷம் முந்தி தனுஷ்கோடிக்கு நீங்க கருவாடு வியாபாரம் பண்ண வந்த போது ஐந்து வயசு புள்ளையா இருந்த என் அக்காளை உங்களுக்கு வளர்க்க கொடுத்தாங்களே அவளை பார்க்கத்தான் வந்திருக்கேன்” என கூறியதும் அவருக்கு பகீரென்றானது, பதட்டமானார்.

” இல்லை தம்பி நீங்க தப்பா வந்துருக்கீங்க நான் பால்ராஜ்தான் கருவாட்டு வியாபாரிதான் ஆனா நான் தனுஷ்கோடி பக்கம் வியாபார மார்க்கமா போனதில்லை என் தொழிலெல்லாம் தொண்டியோட நின்னுடும்” என்றார்.

அவனுக்கு நம்பிக்கை போகவில்லை அவரையே பார்த்தபடியே நின்றான். “அம்மாவும் செத்து போச்சு. அக்காளை ஒருமுறை பார்த்துட்டு போயிடுறேனே செத்த காமிங்களேன்” என்றான். அவனுக்கு உள் மனது தவறான ஆளாக இருந்தாலும் சரி அழுவதில் தவறில்லை என்றாகிவிட்டது கலங்கிப்போன குரலில் மீண்டும் மீண்டும் அதையே சொன்னான்.

இந்த உலகில் யாரும் இல்லாது ஒருவன் தனியாக நிற்பதை பார்த்து கருணைப்படுகிறவன் ஒரு நல்ல குடும்ப சூழலில் கூட்டாக வாழ்ந்து பெரிதாக அனுபவித்தவனாகதான் இருப்பான். அவன் அப்படி நிற்பதை பார்த்ததும் பால்ராஜ்க்கு என்ன செய்வதென்று தெரியவில்லை சற்று யோசித்தவர் மறுகணமே வேகவேகமாக உள்ளே சென்று சட்டையை மாற்றி வெளியே வந்தார். தனது வீட்டின் முன் நின்ற எம்.ஐ.டி பைக்கை உதைத்து இயக்கினார். அவனை ஏறச் சொன்னார். இருவரும் வண்டியில் புறப்பட்டார்கள். அந்த குறுகிய சந்தில் இருந்து வண்டி வெளியேறி ஊரின் மறுதிசைக்கு சென்றது. அவன் ஒரு சோர்வான பூனைக்குட்டியை போல வண்டியின் பின் அமர்ந்திருந்தான். பால்ராஜ் வண்டியை ஓட்டியபடியே ஒருமுறை அவனை திரும்பிப் பார்த்தார்.

தம்பி உங்க பெயரு என்ன ? என பால்ராஜ் கேட்க அவன் சோர்வாக ” சேவியர்” என்றான்.

“ சாப்டிங்களா “ என கேட்டார்

“ இல்லை ” என தலையசைத்தான்.

வழியில் இருந்த சிறு ஓட்டல் ஒன்றில் பால்ராஜ் வண்டியை நிறுத்தினார். சேவியர் காலை உணவை முடித்து வரும்வரை வெளியே நின்று ஒரு சிகரெட் அடிக்கத்தொடங்கினார். அவருக்கு சேவியரின் பரிதவிப்பு பெரும் பாதிப்பை கொடுத்திருக்க வேண்டும். சேவியர் சாப்பிட்டு முடித்து வந்தான். பிறகு வண்டி மீண்டும் புறப்பட்டது. அமைதியாக அமர்ந்து வந்த சேவியரை மீண்டும் ஒருமுறை பால்ராஜ் திரும்பிப் பார்த்தார்.

“தம்பி இப்ப நாம போறது தனுஷ்கோடி பக்கம். தொழில் செஞ்ச பழைய ஆளுங்க இருக்கற இடத்துக்கு அவனுங்களுக்கு தெரியும். கண்டிப்பா அங்கதான் உன் அக்கா இருக்கும். கவலைப்படாம வா” என கூறினார்.

சேவியருக்கு அவரது வார்த்தைகள் நம்பிக்கையை கொடுத்தன. சோர்வில் உடைந்து போகிற ஒவ்வொரு மனிதனுக்கும் உணவாக கவலையை அகற்றுகிற வார்த்தைகள் இருக்கின்றன.

வண்டி பரந்த நீர்நிலை குட்டைகள் நிரம்பிய தரவை ஒன்றின் முன் நின்றது. தூரத்தில் அங்கங்காக சிறு சிறு குடில்கள் தென்பட்டன. கடற்கரை ஓரமாக நடந்து கடலில் முட்டிவரை இறங்கி நடந்து மறுகரைக்கு செல்லவேண்டும். இருவரும் நடக்கத்தொடங்கினர். சில அடிதூரம் சென்றதுமே மணல் பொதியாக இருப்பதில் இருந்து சகதியாக இறங்கியது. சேவியரால் நன்றாக கால் ஊன்றி நடக்க முடியவில்லை தடுமாறி நடந்தான்‌. பால்ராஜ் அதற்கு பழகியவராக இருந்தார். இயல்பாக நடந்துகொண்டிருந்தார். சிறிது தூரம் சென்ற பால்ராஜ் திரும்பி பார்த்தார். சேவியர் தடுமாறி நடந்து வருவதை பார்த்து அவனுக்காக காத்திருந்தார். அவன் அருகே வந்ததும் கையை நீட்டி அவனை அவரோடு பற்றிக்கொண்டார்.

” அளக்கர்ல நடக்க காலுக்கு நல்ல சத்து வேணும்யா ” என்றார்.

சேவியருக்கு எதுவும் புரியவில்லை அவரை வித்தியாசமாக பார்த்தான். ” இந்தப்பக்கம் கடலு முழுக்க அளக்கர்தான்” என்றார்.

“அளக்கர்னா என்ன” என்று சேவியர் மெதுவாக கேட்டார்.

பால்ராஜ் அவனை ஆச்சரியமாக பார்த்தார்.

” இராமேஸ்வரம்னு சொல்ற அளக்கர் தெரியாதா “

” நான் பிறந்ததுதான் இராமேஸ்வரம் வளர்ந்தது எல்லாம் வெளியூரு அங்கேயே இருந்துட்டேன்” என்றான்.

பால்ராஜ் சரியென தலையசைத்தபடியே அவனது கையை கெட்டியாக பிடித்து அவனை தடுமாற விடாமல் காலை அகற்றி வைத்து நடக்க சொல்லிக்கொடுத்தார், சேவியரும் அதே போல் சரியாக நடக்கத்தொடங்கியதும் பேசத் தொடங்கினார்.

“ கடலுக்கு கடலுன்றது பொதுப் பெயரு. ஆனா நம்மளை மாதிரி கடலாடிகளும் , கடலை நம்பி வாழ்றவங்களும் வச்ச பெயரு நூறு இருக்கு, இப்ப நடக்குறோமே சேறும் சகதியுமா ஆழமில்லாத இந்த கடல் பகுதி. இதைதான் அளக்கர்னு சொல்வாங்க. இப்ப நீ வர்றீயே இராமேஸ்வரம் அங்க இருக்கே தனுஷ்கோடி அங்கயிருந்து இலங்கைக்கு இடைப்பட்ட தூரமிருக்குற கடலை வீரைனு சொல்வாங்க, எப்பவும் பொங்கி பொங்கி அலையடிக்குற கடலை புணரினும் , மீனுங்க இல்லாமல் மத்த ஜீவராசிகளை  அதிகமா வச்சுருக்க கடல் பகுதியை சலநிதினு சொல்வாங்க. இதிமாதிரி கடலுக்கு ஏகப்பட்ட பெயர் இருக்கு, என பால்ராஜ் ஆர்வமாக சொல்ல சேவியர் அது எதன் மீதும் விருப்பமற்றவனை போல் கீழே குனிந்தபடி நடந்துகொண்டிருந்தான்.

பால்ராஜ் சேவியரை பார்த்தபடியே “இப்ப நாம வடக்குப் பக்கம் இருக்க கடல்ல நிக்குறோம் இதே தெற்கு பக்கம் இன்னொரு கடல் இருக்கு அது முழுக்க கரையில் பால் ஊத்திவிட்ட மாதிரி வெள்ளவெளேர்னு நுரையை அள்ளி கரையில கொடுத்துட்டு இருக்கும் அதுக்கு பயோததினு பெயர் என கூறி நிறுத்தினார். சேவியர் திரும்பி ஒருமுறை கடலை பார்த்தான். கடுகளவு மட்டுமே கசிந்த சாம்பல் நிறத்தை நிலம் முழுக்க பூசியது போல் பரவியிருந்தது இருவரும் ஒருசேர மறுகரையை அடைந்தார்கள்.

கரையில் நூல்சாக்குகளும் , ஓலைபாய்களுமாக விரித்து அதில் கடுவாடுகள் காயப்போடப்பட்டிருந்தன.  பறவைகள் தூக்கி செல்லக்கூடாதென்று கருவாடு கோளின் மேலே வலை விரித்திருந்தார்கள். சேவியர் அவைகளை பார்த்தபடியே நடந்தான். இருவரும் வியாபாரிகளின் குடிலை அடைந்தார்கள். பால்ராஜை பார்த்ததும் குடில் ஒன்றில் இருந்து பெரியவர் ஒருவர் வெளியே வந்தார்.

” வா பால்ராஜு என்ன இந்த பக்கம் ” யாரு அது ஆள் புதுசாருக்கே” என சேவியரை பார்த்து கேட்டார்.

பால்ராஜ் சேவியரை ஒருமுறை திரும்பி பார்த்து ” தம்பி இராமேஸ்வரத்துல இருந்து வந்திருக்காங்க. பெயரு சேவியர் பல வருஷத்துக்கு முன்ன இவரோட அக்காவை நம்ம ஆளுங்கள வளர்க்க சொல்லி பெத்தவங்க கொடுத்துருக்காங்க அதை தேடி வந்திருக்காரு “என பால்ராஜ் கூற, பெரியவர் சேவியர் அருகில் சென்று அவனை கூர்ந்து கவனித்தார்.

உங்க அம்மா பெயரு ? என சேவியரை பார்த்து பெரியவர் கேட்டார்.

சேவியர் ஒருமுறை பால்ராஜை பார்த்து ” மரிய பிலோமி” என்றான்.

அந்த பெரியவர் கண்களை மூடி திறந்து தலையை ஆட்டினார்.

சேவியர் தொடர்ச்சியாக ” அக்கா பெயர் எஸ்தர்‌. நான் அவளை பார்க்கணும். அம்மா இறந்துட்டா. அதை அவகிட்ட சொல்லணும். அவளுக்காவது வளரவோ, தூங்கவோ சொந்தம்னு சொல்ல ஒரு இடமிருக்கு. எனக்கு அதுவும் இல்லைனு சொல்லணும்” என வேகமாக பேசி அழத்தொடங்கினான். பால்ராஜ் அவனை அணைத்து தேத்தினார்.

” இப்படி வளர்ந்திருக்க என்னப்பா அழுதுட்டு ” என தடவிக்கொடுத்தபடியே பால்ராஜ் பெரியவரை பார்த்தார். ” ஏதும் விபரம் இருக்கா தொலைவுல இருந்து வந்துருக்கான் நாமதானே வழிகாட்டணும் ” என்றார்.

எப்படியும் இப்ப உன் அக்காவுக்கு ” நாற்பத்தைந்து வயசுக்கு மேல இருக்கும்ல ” என பெரியவர் கேட்டார் .

சேவியர் அழுத கண்களை துடைத்தபடியே “ஆமாம்” என்று தலையசைத்தான். பெரியவரின் கண்கள் பணிந்தன. தலையை கீழே குனிந்து எதையோ மணலில் பார்த்ததை போல நிமிர்ந்தார். அவர் கண்கள் ஈரத்தை கசிந்தன.

பெரிதாக ஒரு குரல் கொடுத்தார். பின்னேயிருந்த மற்ற குடில்களில் இருந்து நிறைய பேர்கள் வெளிவரத்தொடங்கினர். எல்லோரும் அந்த பெரியவரை சூழத்தொடங்கினர். பெரியவர் அவர்களை திரும்பி பார்த்தார். மத்த குடிலில் இருந்து வந்த ஆட்கள் எல்லோரும் மூன்று பேரையும் மொத்தமாக சூழ்ந்தனர். பெரியவர் அவர்களை பார்த்து சேவியரை நோக்கி கை நீட்டினார். எல்லோரும் சேவியரை புரியாத வகையில் பார்த்தார்கள். சேவியரும் , பால்ராஜும் அவர்களை புரியாமல் பார்த்தார்கள்.

பெரியவர் எல்லோரையும் பார்த்து,

 “ எஸ்தரை தேடி வந்திருக்கான். எஸ்தர் தம்பி” என கூறினார்.

எல்லோருக்கும் பெரும் ஆச்சரியம் மிகுந்த அன்போடு சேவியரை பார்த்தார்கள். அவர்கள் அனைவரும் சேவியரை ஆரத்தழுவினார்கள். சேவியர் பேச்சு மூச்சற்று நின்றான். அவனுக்கு எதுவும் புரியவில்லை,

“ எஸ்தர் எங்க “ இதுல யாரு என் அக்கா” என கேட்டு “அக்கா அக்கா” என கூக்குரலியிட்டான் “அம்மா செத்துட்டு” என கத்தினான். பெரியவரை பார்த்து கேட்டான். “ இதுல யாரு என் அக்கா”.

பெரியவர் அந்த கூட்டத்தை ஒருமுறை பார்த்துவிட்டு “இதுல யாரும் உன் அக்கா இல்லை” என கூறி பேசத் தொடங்கினார் .

“இன்னைக்கு இந்த சனமெல்லாம் உசுரோட இருக்க காரணமே உன் அக்கா எஸ்தர்தான், அன்னைக்கு இதுக எல்லாம் கைப்புள்ளைங்க. தனுஷ்கோடில இருந்து உன் அம்மா அக்காளை வளர்க்க முடியலைனு என் அண்ணன் பால்ராஜு கையிலதான் வளர்க்க கொடுத்தாள். அப்ப அவளுக்கு ஐந்து வயசு இங்க வந்த கொஞ்ச நாள்லயே நல்லா பழகீட்டா, எல்லோரும் அவளை நல்லா பார்த்துக்கிட்டாங்க, ஊரு ஊரா கருவாடு தூக்க போயி வரும் போது எங்களுக்காகவே காத்துட்டு இருப்பா, அண்ணனுக்கு எஸ்தர்னா அவ்வளவு பாசம். அவளும் அப்படிதான் எஸ்தரையும், அண்ணனையும் பிரிச்சு பார்க்க முடியாது. 1964 புயலுக்கு அப்புறம் 1977ல ஒரு புயல் வந்தது, சுத்தி நீர்நிலைக்கு நடுவுல இருக்கற இந்த நிலப்பகுதியில வாழுற சனங்களுக்கு அதெல்லாம் தெரியாது. அன்னைக்கு ராத்திரி உன் அக்கா எஸ்தருக்கு என்னானதோ தெரியலை எல்லோரையும் எழுப்பினாள்.

 “புயல் வருது ஓடுங்க ஓடுங்கனு” சப்தம் போட தொடங்கினா. எங்க யாருக்கும் எதுவும் புரியலை. ஆனா அண்ணன் பால்ராஜுக்கு மட்டும் நிலவரம் ஏதோ சரியில்லைன்னு புரிஞ்சு எங்க எல்லோரையும் ஊருக்குள்ள அனுப்பிட்டாரு. மொத்த சனமும் ஊருக்குள்ள போனது. அன்னைக்கு ராத்திரி அடிச்ச புயலும் காத்தும் இந்த மொத்த நிலத்தையும் ஊத்தாக்கிடுச்சு. தண்ணி வடியவே சில மாதமானது. அன்னைக்கு மட்டும் உன் அக்கா எச்சரிக்கைலனா மொத்த சனமும் அண்ணியோட போயிருக்கும். நாங்க எல்லாம் உன் அக்காவை சாமியா பார்த்தோம். ஆனா அங்க இருந்துதான் பெரிய மாற்றம் இங்க நிகழ ஆரம்பிச்சது. அன்னைக்கு ராத்திரி வீசுன புயல் காத்துக்கு பிறகு உன் அக்கா பயப்பிட ஆரம்பிச்சா. சின்ன வயசுல தனுஷ்கோடி புயலுக்கு அப்புறம் அம்மா இன்னொருவரிடம் கொடுத்தை போல் இந்த புயலுக்கு அப்புறமும் நாங்களும் யாரிடமாவது அவளை கொடுத்துடுவோம்னு பயந்து எங்களை பார்த்து பயப்பிட ஆரம்பிச்சா. நாங்க எவ்வளவோ சொல்லியும் அவளால் சமாதானம் ஆகமுடியலை, பதினெட்டு வயசுக்காரி. மனசுல என்ன நினைச்சாலோ அண்ணனோட கூட சரியா பேசலை ஒதுங்க தொடங்கிட்டா. அண்ணனும் அந்த கவலைலயே சீக்கிரம் போயிட்டாரு” என பெரியவர் பேசி முடித்து கண்ணீர் விட சேவியர் பேச்சு மூச்சற்று போனான்.

“ இப்ப அக்கா எங்க “ என சேவியர் கேட்டான். ஆளாளுக்கு முகத்தை பார்த்தார்கள்.

 “எப்பவாவது வருவா தம்பி. இருக்கறதை கொடுப்போம் சாப்டு போயிடுவா” என ஒரு பெண் கூற மனமுடைந்து சேவியர் அழத்தொடங்கினான். பால்ராஜுவும் இதை எதிர்ப்பார்க்க வில்லை. அவருக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை , மொத்த கூட்டத்தையும் பார்த்தபடி அவனை அணைத்தார்.

சேவியர் ஓவென அலறி அழத்தொடங்கினான்.

“ என் அக்காளுக்கு பிசகு விழுந்துட்டாம்ணே ? என கத்தினான்” எல்லோரும் அவனை ஆசுவாசப்படுத்தினார்கள்.

“ அப்படியில்லை தம்பி. அவ எங்க மாதா. அவளாலதான் நாங்க உசுரோட இருக்கோம்” என தேத்தினார்கள். பால்ராஜ் சேவியரை கைத்தாங்கலாக அங்கிருந்து அழைத்து சென்றார். மொத்த கூட்டமும் அவர்களை பார்த்தபடி இருந்தது , “ அக்காவை பார்க்கணும்னா ” என அழுதபடி பால்ராஜை பார்த்து சேவியர் சொன்னான். அவனை மேலும் அணைத்தார் பால்ராஜ். அளக்கரில் இருவரும் இறங்கினார்கள். இப்போது பால்ராஜும் தடுமாறி நடக்கத்தொடங்கினார். இருவரும் எதுவும் பேசவில்லை, கடல் கூட சப்தமில்லாமல் படுத்திருந்தது.

***

அன்றிரவு பால்ராஜ் வீட்டிலே சேவியர் உறங்கினான். அவனுக்கென்று யாருமில்லை என்பதில் உறுதியாகவில்லை. அவன் எப்படியாவது அக்காவை பார்த்துவிட வேண்டும் என தினமும் பக்கத்து ஊரின் ஒவ்வொரு திசைக்கும் தேடி தேடிப்பார்க்கத்தொடங்கினான். காயல் கொடியில் இருந்து திசையூர், இசக்கம், வானூர் என தினமும் ஒவ்வொரு ஊராக சென்று தேடத்தொடங்கினான். அப்படியே பதிமூன்று ஆண்டுகள் கழியத்தொடங்கின. பால்ராஜ் உதவியால் காயல்கொடியில் சங்கு கழுவும் வேலையில் சேர்ந்து கொண்டான். தினமும் ஆசிட் ஊத்தி எல்லா சங்குகளையும் கழுவ வேண்டும். பிறகு கூடையில் ஏற்ற வேண்டும், இரவெல்லாம் வேலை பார்த்து பகலெல்லாம் அக்காவை தேடிக்கொண்டே இருந்தான். ஆசிட் பட்டு கைகள் கொப்புளங்களாகின நீர் வைத்து வடிய தொடங்கின. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு ஊரின் முக்கியஸ்தல இடங்களுக்கு எல்லாம் சுற்றித்திரிந்தான். இறுதி ஊரான முந்நீரில் நூற்றி ஐம்பது ரூபாய் வாடகைக்கு வீடு எடுத்து அங்கிருந்து அக்காவை தேடத் தொடங்கினான்.

***

வழக்கம் போல முந்நீர் சந்தையில் அக்காவை தேடி சேவியர் நின்றுக்கொண்டிருந்த போதுதான் சந்தை திருட்டில் சந்தேகத்திற்கு இடமாகி அந்த பெரும் கூட்டத்தின் நடுவே கேள்வியாகி நின்றான்.

ஆசிட் பட்டு கொப்புளங்கள் ஆன கையை பார்த்து வித்தியாசமாக இருந்த அவனை பிடித்து எல்லோரும் கேள்விக் கேட்டத்தொடங்கினர். ஆனால் சேவியர் அக்காவை தேடி வந்திருப்பதாக சொன்னதும் எல்லோரும் ஆச்சர்யமாக பார்க்கத் தொடங்கினர்.

அப்போது காயல் கொடிகாரர் ஒருவர் அந்த சந்தைக்கு வர சேவியரை அவர்களிடம் இருந்து அழைத்து வர பேச்சுவார்த்தை நடத்தத் தொடங்கினார்.

“ராசு நம்ம பையன்தான். சந்தேகிக்க ஏதுமில்லையா” என கூற அதுவரை மெதுவாக சந்தையின் தார்பாய்களை அசைத்துக்கொண்டிருந்த காற்று திடீரென வலுவெடுத்தது. சந்தை முழுக்க புழுதியை கிளப்பியது கடைக்காரர்கள் எல்லோரும் கடையின் கதவுகளை வேகவேகமாக அடைக்கத்தொடங்கினர்.

அப்போது “புயல் வருது எல்லோரும் ஓடுங்கள் “ என குரல் கேட்டது. குரல் வந்த திசைக்கு எல்லோரும் திரும்பினார்கள். சேவியரும் திரும்பினான். அங்கு யாரும் இல்லை ஆனால் மீண்டும் அந்த குரல் கேட்டது.

“புயல் வருது எல்லோரும் ஓடுங்கள்”

சுற்றி பார்த்தான். சந்தை முழுக்க மக்கள் ஓடத்தொடங்கினார்கள். அவ்வளவு நேரம் அவனை விசாரித்தவர்கள் கூட அங்குஇல்லை.

“இத்தனை வருஷம் கழிச்சு புயல் வருதுன்னு சொல்லுறா, ஓடுங்க ஓடுங்க” என எல்லோரும் கத்தியபடி ஓடினார்கள். அப்போது அங்கு நின்ற காயல்க்கொடி காரர் சேவியரையும் இழுத்துக்கொண்டு ஓடினார். எல்லோரும் அடைந்து கொண்ட புயல் காப்பகத்துக்கு அவனையும் அடைத்தார். காப்பகத்தின் சிறு ஜன்னல் வழியே சேவியருக்கு அதே குரல் மீண்டும் கேட்டது.

“புயல் வருது எல்லோரும் ஓடுங்கள் “

யாருடைய குரலது? என கேட்டான் சேவியர்.

அவளொரு பைத்தியக்காரி, இப்படிதான் ரொம்பவருஷத்துக்கு முந்தி  புயல் வருதுன்னு கத்தினாள். சரியா வந்தது என்றான் ஊர்க்காரன்.

புயல் நெருங்கிடுச்சே, அவ ஏன் காப்பகத்துக்குள்ள இன்னும் வரல? என கேட்டான் சேவியர்.

“அவள் வரமாட்டாள். அவளை புயல் ஒன்றும் செய்யாது” என்றான் மற்றொரு ஊர்காரன்.

“நூறு புயல் பார்த்தவள், நூறு சடலம் பார்த்தவள். அவளுக்கு ஒன்னுமாகாது என்றான் இன்னொருவன்.

காப்பகத்தின் சிறு ஜன்னலை கெட்டியாக பிடித்தபடி குரல் வரும் திசையை பார்த்தபடி நின்றான் சேவியர் , அவனுக்கு கண்கள் பொங்கின “ எஸ்தர் எஸ்தர் என அலறினான்,, அக்கா அக்கா என கத்தினான்‌. காப்பகத்துக்குள் இருந்த மொத்த மக்களும் அவன் அழுவதை பார்த்தபடி இருந்தார்கள், புயலுக்குள் மொத்த ஊரும் மூழ்கிக்கொண்டிருந்தது. அவனை யாரும் வெளியே விடவில்லை, பதிமூன்று ஆண்டுகள் அவளுக்காக காத்திருந்தவன் அவள் வந்தும் பார்க்க முடியாமல் திணறினான். இப்போது சேவியருக்கு மட்டுமல்ல யாருக்கும் அந்த குரல் கேட்கவில்லை. காற்றின் குரல் மட்டும் வலுத்தது. எல்லோரும் உள்ளே நடுங்கியபடி இருந்தார்கள். இரவெல்லாம் பெரிய சப்தங்கள் காப்பகத்தின் மேல் விழுந்த பெருமழை அடித்து வீசியது. மறுநாள் புயல் சற்று தணிந்து எல்லோரும் காப்பகத்தை விட்டு வெளியேறினார்கள். மொத்த சந்தையுமே அலங்கோலமாக கிடந்தது. சேவியர் எஸ்தரை தேடினான்.

“ புயல் போய்ருச்சு இல்லையா. அவளும் போயிருப்பா. அடுத்த புயலுக்குதான் வருவாள் ” நூறு புயல் பார்த்தவள் , நூறு சடலம் பார்த்தவள்  என பேசிக்கொண்டு ஊர்க்காரன் சென்றான். சேவியருக்கு மொத்த அழுகையும் நின்றிருந்தது ஆனால் அவனுக்கு இப்போதொரு ஆறுதல் நான் தனியாளில்லை. இத்தனையாண்டு காத்திருந்தது வீண்போகவில்லை. எஸ்தர் இன்னும் இருக்கிறாள்.

அன்று எஸ்தரை தேடி அளக்கருக்கு சென்று அவள் இல்லாது வந்த முதல் நாள் இரவு காயல்க்கொடியில் தங்கிய போது பால்ராஜ் இரவு சொன்னது சேவியருக்கு நினைவு வந்தது.

“ஒவ்வொரு கடலை பத்தியும் சொல்லும் போது அம்பரத்தை பத்தி சொல்ல மறந்துட்டேன் பார்த்தியா, இருக்கதுலயே மோசமான கடல்னா அது அம்பரம்தான். எவ்வளவு தூரம் பயணிச்சாலும் கரைபார்க்க முடியாது. அதுல மாட்டுறவன் வெளியே வரமுடியாது எங்க சுத்தி பார்த்தாலும் கடலாதான் இருக்கும்.  “அதுக்குள்ளயேதான் இருப்பான். வெளிய இருந்தும் யாரும் உள்ள இருக்கவனையும் பார்க்க முடியாது. உள்ள இருக்கறவனும் வெளியே இருக்கவனை பார்க்கமுடியாது ”.

சேவியர் அதை நினைத்து மெல்லமாக சிரித்தான். அவன் கை கொப்புளம் ஒன்று வெடித்து நீர் வெளியேறியது.

***

ச.துரை

ச.துரை, ராமேஸ்வரம் அருகேயுள்ள மண்டபம் ஊரில் வசித்துவருகிறார். ‘மத்தி’ என்ற கவிதைத்தொகுப்பின் ஊடாக பரவலான கவினிப்பைப் பெற்றவர்.

தமிழ் விக்கியில் 

9 Comments

  1. அருமையான கதைக்களம்…
    சிறப்பான தொய்வில்லாத நடை.

  2. அருமையான கதைக்களம்…
    சிறப்பான தொய்வில்லாத நடை.

  3. நண்பா மிக மிக சிறப்பு. சொல்லாடல்கள் அத்தனையும் அருமை.
    :

  4. மிக சிறந்த கதை
    எஸ்தர் வருவாள்

    வாழ்த்துக்கள்

  5. காணாமல் காண்பதே அழகு . உங்களிடமிருந்து மற்றுமொரு அற்புத படைப்பு. நன்றி.

  6. நானும் தனுஷ்கோடி வந்திருக்கிறேன் இரண்டு பக்கம் இருக்கும் கடலை பார்த்திருக்கிறேன் மீண்டும் அங்கு வருவேன் கடலை பார்க்க அல்ல எஸ்தரை தேடி சென்ற சேவியரை பார்க்க ..அப்படி ஒரு உருவம் இந்த கடற்பரப்பில் சேவியர் என்ற பெயரில் சுற்றி திரிவதாக நான் என்னை பல முறை அங்கு தொலைத்திருக்கிறேன் இந்த புதையுண்ட மணல்வெளியில் என் கால்களும் நடைபோட்டது என்கண்முன்னே எஸ்தரை உங்கள் வரிகளில் நான் பல முறை பார்த்து விட்டேன் நன்றி

உரையாடலுக்கு

Your email address will not be published.