/

பீடி: தக்‌ஷிலா ஸ்வர்ணமாலி

தமிழில் எம். ரிஷான் ஷெரீப்

ஆதிரை வெளியீடாக எதிர்வரும் ஜனவரி 2022இல் வெளியாகவுள்ள தக்‌ஷிலா ஸ்வர்ணமாலி எழுதிய பீடி, சிங்கள நாவலில் தமிழ் மொழிபெயர்ப்பிலிருந்து ஒரு பகுதி

எனது அம்மாவின் பெயர் பனங்கல ஆரச்சிகே சுமனாவதி. முற்றிலுமாக தீய குணங்களைக் கொண்டிருக்கும் மோசமான பெண்ணொருத்தி அவள். அம்மாவை அப்படிச் சொல்வது ஒரு புத்தகத்தில் எழுதக் கூடாத அளவுக்கு பாவமானது என்று நீங்கள் நினைக்காவிட்டாலும் பெரும்பாலானவர்கள் அப்படித்தான் கருதுவார்கள். பெரும்பாலானோரின் கருத்துகளை, அவர்கள் மொட்டுக் கட்சிக்கு மூன்றில் இரண்டு வாக்குகளை அளித்த காரணத்தால் நான் ஒருபோதும் பொருட்படுத்துவதேயில்லை.

அம்மாவால் வெளிப்படையாகவே மோசமானவளாக இருக்க முடிந்தது என்றால், அதை நான் ஏன் வெளிப்படையாகச் சொல்லக் கூடாது என்பது எனக்கு விளங்கவில்லை. உண்மையில் மனித நடவடிக்கைகள் குழப்பத்துக்குரியவை. மனிதர்களிடம் நிச்சயமாக வெவ்வேறு பக்கங்கள் காணப்படுகின்றன. அவர்கள் ஒரே சீரான குணங்களுடையவர்கள் இல்லை. இவ்வாறான காரணங்களால் அம்மாவை மோசமான ஒரு பெண் என்ற இலகுவான தீர்மானத்துக்கு வருவது ஒரு வெற்றிகரமான நாவலுக்குப் பொருந்தாது என்று உங்களுக்குத் தோன்றக் கூடும். எனினும், நான் இங்கு ஒரு வெற்றிகரமான நாவலை எழுதப் பாடுபடாமல் எனது கதையை மிகவும் எளிமையாக உங்களுக்குச் சொல்வதையே செய்து கொண்டிருக்கிறேன். ஆகவே, ஒரு வெற்றிகரமான நாவலுக்கான அளவுகோலைப் பற்றி யோசித்துக் கொண்டிருக்காமல் என்னுடனே கூடவே வாருங்கள்.

இந்தக் கதையிலிருந்து நான் வெளியேறாமல்  நானொரு உத்தம புருஷன் என்ற கோணத்திலிருந்து கதையைச் சொல்வேனாயின், எனக்கு நேர்ப் பார்வையில் தெரியும் கதாபாத்திரங்களின் மறைவானதும், சிக்கலானதுமான பக்கங்களைத் தேடுவது எனக்கு அதிக களைப்பைத் தரும். நான் சொல்லிக் கொண்டு போகும்போது உங்களுக்கு எனது அம்மாவில், எனக்குத் தென்படாத பக்கங்கள் தென்படுமானால் என்னால் உங்கள் கருத்தை ஏற்றுக் கொள்ள முடியும். அதற்காகக் கோபப்பட மாட்டேன் என்பதில் எனக்கு நம்பிக்கை இருக்கிறது. ஏனென்றால், எனக்கு அம்மாவுடனும் எந்தக் கோபமும் கிடையாது. அவளைப் பற்றி நான் உணரும் உண்மைகளைத்தான் கூறிக் கொண்டிருக்கிறேன்.

அம்மா நாள் முழுவதும் யாரையாவது திட்டிக் கொண்டும், புறுபுறுத்துக் கொண்டும்தான் இருப்பாள். அப்பா வீட்டிலிருந்த நேரங்களில் மட்டுமல்ல, இல்லாத நேரங்களிலும் என எல்லா நேரங்களிலும் அம்மா அவரைத் திட்டுவதைத்தான் செய்து கொண்டிருந்தாள். இடையிடையே என் மீதோ, தங்கை மீதோ அவளுடைய சாபம் கலக்கும்போது மட்டும்தான் திட்டுக்களில் மாற்றம் ஏற்படும். எப்போதும் கோபத்தால் முடிச்சிடப்பட்டிருக்கும் புருவங்களே அம்மாவுக்கு இருந்தன. வாய் அவளது முகம் முழுவதையும் அடைத்துக் கொண்டிருப்பதாகவே எனக்குத் தோன்றியது.  எவரைக் கண்டாலும் அவள் ஒரு மடை திறந்ததைப் போல முடிவேயில்லாமல் கதைப்பாள். கதைப்பாள். கதைத்துக் கொண்டேயிருப்பாள். எப்போதாவது புன்னகைத்தவாறு அவள் எதையாவது சொன்னாலும் அந்தப் புன்னகை கூட வெறும் முகத் தாட்சண்யத்திற்காகவே என்று எனக்குத் தோன்றும்.

அம்மாவின் அந்தப் புன்னகையானது அஞ்சலியின் புன்னகையைப் போல ஆழ் மனதிலிருந்து உதித்து உதடுகள் வழியே வெளியே சிந்தும் புன்னகை அல்ல. எப்போதாவது அம்மா சிரிப்பாளானால் அதுவும் கூட சத்தமாக தொண்டைக்குழி தெரியுமளவுக்கு வாயைப் பிளந்து மிகவும் அவலட்சணமாகக் கொக்கரித்துச் சிரிப்பாள். மிகவும் அசிங்கமாக கை கால்களை வீசி வீசி நடப்பாள். தங்கையை விடவும் புதிய பாணிகளில் உடையணிவாள். (அவை ஊராரைப் பொறுத்தவரையில் நவீன நாகரிக உடைகளாக இருந்தன.) அம்மா எல்லா நேரத்திலும் ஆபாசமும், அசிங்கமுமான கதைகளையே பேசிக் கொண்டிருப்பாள். நானும், தங்கையும் ஒருவரிடம் நற்குணங்களாக எவற்றையெல்லாம் காண்கிறோமோ அவையனைத்தும் அம்மாவுக்கு தீய குணங்களாகத் தென்படும். ஒருவரிடம் தீய குணங்களாக எவற்றையெல்லாம் காண்கிறோமோ அவையனைத்தும் அம்மாவுக்கு நற்குணங்களாகத் தென்படும்.

தங்கை எட்டாம் வகுப்பில் படித்த வேளையில் பதின்மூன்றாம் வகுப்பு மாணவனுடன் ஏற்பட்ட காதலால்தான் அவள் அம்மாவின் கட்டுப்பாட்டில் இருந்து மீண்டு கொண்டாள் என்று எனக்குத் தோன்றுகிறது.  அந்தக் காதலன் மிகவும் வித்தியாசமான ஒருவன். கிட்டத்தட்ட ஒரு வருட காலம் நீடித்திருந்த அவர்களது காதல், அந்த மாணவன் பல்கலைக்கழகம் போனதும் அறுந்து விட்டது. என்றாலும் தங்கை தொடர்ந்தும் வேற்றுக்கிரக ஜீவியொன்றைப் போலத்தான் எமது குடும்பத்துக்குள் வளர்ந்தாள். நானோ கட்டுப்பாடு ஏதுமின்றி வளர்ந்தாலும், அவள் கடுமையான சுய கட்டுப்பாட்டோடு, அம்மாவின் பிடியிலிருந்து தப்பி வளர்ந்தே பெரியவளானாள்.

மொத்த உலகமும் தனது எண்ணத்துக்கேற்பவே அசைய வேண்டுமென அம்மா கருதினாள். அம்மாவின் மனதை நோகடிக்காமல் மெல்லிய இடைவெளி வழியே நான் வெளியே குதிக்கத் தடுமாறினேன். ஆனால் தங்கையோ அம்மாவுக்கே மயக்கம் வரச் செய்யும் அளவுக்கு வெளிப்படையாகவே முரண்டு பிடித்ததோடு அம்மாவை  நேருக்கு நேராக எதிர்கொண்டு அதி தீவிர தாக்குதல்களையும் பிரயோகித்துக் கொண்டிருந்தாள். அவற்றைக் கண்டு கோபமடைந்த நான் எனது நடவடிக்கை குறித்து எனக்கிருந்த தடுமாற்றத்தைத் தவிர்த்துக் கொண்டேன். இருந்தாலும், தங்கையின் உக்கிரத்தின் முன்னிலையில் அம்மாவின் மீது அனுதாபம் செலுத்தத் தொடங்கினேன். அனுதாபம் செலுத்துவதென்றால் அம்மாவின் முன்னிலையில் அமைதியாக இருப்பதேயல்லாது அவளது செயல்களை அனுமதிப்பதல்ல என்பதை உங்களிடம் நம்பிக்கையோடு குறிப்பிடுகிறேன்.

எனது அம்மா வாயாடியாக, சிங்காரியாக, கடுமையான, மோசமான பெண்ணாக இருப்பதற்கு ஏதேனும் பொதுவான காரணங்கள் இருக்கலாம் என உங்களுக்குத் தோன்றலாம். அம்மாவை வாயாடியாக, சிங்காரியாக, கடுமையான, மோசமான பெண்ணாகப் பார்க்கும் என்னையும் நீங்கள் முட்டாள் என்று கருதக் கூடும். அது நீங்கள் என்னை விடவும் சமநிலையான மனதோடு மனிதர்களின்  சங்கடங்களைப் பார்க்கப் பழகியிருப்பதாலோ, நீங்கள் என்னை விடவும் நவீனமானவர் என்பதாலோ, பரந்த மனப்பான்மை உடையவரென்பதாலோ இருக்கலாம். நான் இவ்வாறு கூறுவது வஞ்சப் புகழ்ச்சியோ கிண்டலோ அல்ல. நானும் கூட எவரையும் அவ்வாறு பார்க்க முயற்சித்த போதிலும் அம்மாவை அவ்வாறு பார்க்கப் பழகவில்லை. என்பதையும், அதை முயற்சி செய்து கூட பார்க்கவில்லை என்பதையும் வருத்தத்துடன் நேர்மையாகவே தெரிவிக்கிறேன். அஞ்சலியிடம் போலவே எனக்கு உங்களிடமும் எதையும் மறைத்து வைக்க வேண்டிய அவசியமில்லை. இந்தக் கதையில் சில விடயங்களை நான் உங்களிடம் கூறாதிருப்பது அவை எனக்கு முக்கியமற்றவை என்பதனாலேயேயன்றி மறைத்து வைக்க வேண்டும் என்பதற்காகவல்ல.

ஆகவே, அம்மா அவ்வாறிருப்பதற்கு ஏதேனும் காரணங்கள் இருக்கலாம் என்றால் அதில் முதன்மையானது மெட்டில்டா மற்றும் மெட்டில்டாவின் ஜீன் என்பதை நான் ஒருமனதாகக் கூறுகிறேன்.

தக்‌ஷிலா ஸ்வர்ணமாலி

சிங்கள இலக்கிய உலகில் சிறுகதை, கவிதை, நாவல் படைப்புகள் வழியாக நன்கு அறியப்பட்டவர். பட்டதாரி ஆசிரியை. சிறுவர் இலக்கியத்திலும் சமூக ஆய்வுகளிலும் ஆர்வம் உள்ளவர். 3 கவிதைத் தொகுப்புகள், 2 சிறுகதைத் தொகுப்புகள், 1 நாவல், 3 சமூக ஆய்வுக் கட்டுரைத்தொகுப்புகள் வெளியாகியிருக்கின்றன.

எம்.ரிஷான் ஷெரீப்

இலங்கையைச் சேர்ந்த எழுத்தாளர், கவிஞர், மொழிபெயர்ப்பாளர், ஊடகவியலாளர். சிங்கள இலக்கியங்களை தமிழிற்குத் தொடர்ச்சியாக மொழிபெயர்த்துவருகிறார். இலங்கை அரச சாகித்திய விருது, வம்சி விருது, கனடா இலக்கியத்தோட்ட விருது முதலான விருதுகளைப் பெற்றிருக்கிறார்.

1 Comment

  1. தக்‌ஷிலாவை யாழ்ப்பாணப் புத்தக வெளியீட்டு விழாவுக்கு வந்த போது கண்டனான். அவாவுடைய நிகழ்ச்சிக்கே அமங்கலமாக வந்திருந்தவர். ஒரு பட்டுப்புடவையில்லை. ஆபரணங்களில்லை. கொஞ்சம் ஒப்பனை செய்து கொண்டு வடிவா வந்திருக்கலாம். நிகழ்ச்சி அமைப்பாளர்களாவது எடுத்துச் சொல்லியிருக்க வேண்டும். இப்படி நிகழ்ச்சிகள் நடத்தினால் நமது தமிழ் இலக்கியம் எப்படி உருப்படும்?

உரையாடலுக்கு

Your email address will not be published.