/

கடவுள் இல்லாத இடம்: ஏஜே.டானியல்

நீண்ட நேரம் சிகரெட் எதுவும் புகைக்கவில்லை. உதடுகள் காய்ந்து வெடித்துபோவதை உணர்ந்தேன்.  படுத்திருந்து படித்துக்கொண்டு இருந்த  மொழிபெயர்ப்பு நாவலை சோபாவிலே குப்புற போட்டுவிட்டு குசினியை நோக்கி சென்றேன். ஒரு கோப்பியை அடித்து கோப்பையில் ஊற்றினேன். இடுப்பில் இருந்த சாரம் வழுக்கி செல்வதை உணர்ந்த போது எதுவித பிரயத்தனமும் செய்யவில்லை. வயிற்றோடு கையை அழுத்தி மெல்ல சாரத்தை பிடித்தபடி கதிரையில் கிடந்த குளிர் அங்கியின் பையில் இருந்து ‘ரோத்தமென்’ சிகரெட் பெட்டியை உருவி எடுத்தேன். ஒரு சிகரெட்டை எடுத்து பற்ற வைத்த படி குளிரினால் இறுகி போய் கிடந்த பல்கணிக்  கதவை ஓங்கித்திறந்தேன். கண்ணாடிக்கதவு கிரீச்சிட்டபடி திறந்தது. அவுக்கென குளிர் முகத்தில் அடித்தது. மெல்ல நகர்ந்து பல்கணி வழியே நகரத்தை பார்த்தேன்.

கைவிடப்ப நகரம் போல  மனித சஞ்சாரம்  இன்றி வெறிச்சோடிக்கிடந்தது. என்னைச் சூழ்ந்து இருந்த அமைதியை தொடரும் நாய்களின் குரைப்பு கலைத்துக்கொண்டிருந்தது. வெறுப்போடு நுனிக்கால்களை சற்று தூக்கி  சத்தம் வரும் திசையை நோக்கி பார்வையை பதித்தேன். தொலைவில் இரண்டு பேர் நாய்களுடன் நடைபயணம் செய்கின்றனர். நாய்கள் ஒன்றை ஒன்று பார்த்து தொண்டை கிழியும் வரை  மூர்க்கமாக குரைத்துக்கொண்டிருந்தன. அவை ஒன்றை ஒன்று நெருங்க ஆவேசத்துடன் குரைப்பதை உணர்ந்த போது சட்டென்று மனதுக்குள் அச்சம் முளைக்க ஆரம்பித்தது. அது ஆவேசத்துடன் என்னை கேலி செய்வது போல உணர்ந்தேன். ஒருவிதமான வெறுப்பு என்னுள் படர ஆரம்பித்தது. மட மட வென்று கோப்பியை குடித்தேன். சிகரெட்டை வலித்த படியே தரையை பார்த்தேன்.  கார்கள் வெண்பனியில் மூடிகிடந்தன.கண்ணுக்கு எட்டும் தூரத்தில் இருக்கும் சிறுவர் பூங்கா அழகாக வெண் பஞ்சு மெத்தையால் மூடிக்கிடந்தன. நத்தார் தினம் முடிந்தும் சுத்தம் செய்யாத வீதி அலங்காரம் அங்காங்கு பனி மெத்தைகளில் குத்தி நின்றன. பல்கணி மேல்கட்டின் மீது குவிந்திருக்கும் பனியை கைகளால் தரையில் தட்டிய போது வேகமாக தரையை நோக்கி சென்று தொப்பென்று எதோ ஒன்றின் மீது வீழ்ந்து தெறித்து  மெல்லிய சத்தத்தை எழுப்பியது. திடுக்கிட்டுப்போனேன். அப்போதுதான் அந்த தற்கொலை மீண்டும் நினைவுக்கு வந்து என்னை வாட்டி எடுத்தது. இப்படி பனி கொட்டும் மார்கழி மாதம் ஒன்றில் தான் இதே பல்கணி கட்டின் மீது ஏறி எந்த சலனமும் இன்றி  அந்த வாலிபன் பரிதாபமாக தன்னை மாய்த்துக்கொண்டான். அதன்பின்பு  இன்று வரை நான் எதிர்கொள்ளும் துன்பம் கொஞ்சம் நஞ்சமில்லை. அந்த நாளை சபிக்கின்றேன். கண்களில் இருந்து கண்ணீர் துளிகள் என்னை அறியாமலே வடிந்து என் தோள்களை நனைத்தன. அந்த வாலிபன் உடல் சிதறித்தெறித்த பக்கத்து அடுக்கு மாடி சுவர்களின் அடித்தளத்தை பார்த்தேன். இன்னும் அங்கு அவனது சூடான குருதி வடிந்து கொண்டு இருப்பது போன்ற பிரம்மை சிகரெட்டின் நெருப்பு விரல்களை சுட்டது. வெடுக்கென்று விரல்களை தட்டினேன். இயந்திரம் போல இயங்கி பல்கணி கண்ணாடியை ஓங்கி மூடி விட்டு அறையை நோக்கி சென்றேன்.

பிற்பகல் நான்கு மணியாக  இன்னும் இரண்டு மணித்தியாலங்கள் இருக்கின்றன. இன்று ஒரு பெண் எழுத்தாளரை வரவேற்க செல்ல இருக்கின்றேன். அவள் பாரீசில் உலகப்புகழ்பெற்ற புத்தக கம்பெனிக்கு தன் புத்தக வெளியீட்டுக்காக வருகின்றாள். அவளுடனான சந்திப்பு, முதன் முதலில் அம்ஸடாம் இரவு விடுதியொன்றிலே தான்  இடம்பெற்றது

சில  வருடங்களுக்கு முன்பு  எனது கோடை விடுமுறையை அம்ஸடாம்   நகரத்தில் கழித்தேன். அந்த வருடம் மிக குதுகாலமானது. நான் அங்கு சென்று ஒரு நடுத்தரமான விடுதி ஒன்றில் இரவுகளை களித்தேன். பகல் முழுவதும் நகரில் ஆடம்பர களியாட்ட நிகழ்வுகளில் கலந்து கொண்டேன். ஒருமுறை நள்ளிரவு கடந்து திறந்திருந்த களியாட்ட விடுதியில் மது அருந்திக்கொண்டு இருந்தேன்.  மென் இருட்டில்  பல வர்ண மின்குமிழின் ஒளி வெள்ளத்தில் விடுதி தள்ளாடிக்கொண்டு இருந்தது. பார்த்தால் மனிதர்கள் அன்புக்காக ஏங்கிக்கொண்டு இருக்கின்றார்கள் என எண்ணத்தோன்றுகின்றது. நான் ஒரு அழகிய  குவளையில்  அஃப்சலுட் வொட்க்காவை நிறைத்த படியே அங்கு சல்லாபம் இடும் பக்தங்களின் நெளிப்புகளையும் ஆட்டங்களையும் ரசித்தபடி குடித்துக்கொண்டிருந்தேன்.

சற்று நேரத்தின் பின்பு ஒரு சிகரெட்டை பற்ற வைத்து ஊதிய படியே விடுதிக்கு  முன்னே இருந்த செக்ஸ் சொப்பை நோட்டமிட நடந்தேன். அருகில் இருந்து ஒரு பெண்குரல் சிகரட்டை வலக்கை நடுவிரலுக்குள் சொருகியபடி வந்தாள். வெடுக்கென்று திரும்பிப்பார்த்தேன். அவள் பார்ப்பதற்கு அசல் தமிழ் பெண் போல் தோற்றமளித்தாள். மது மயக்கத்தில் நேர்த்தியாக மைதீட்டிய அவள் கண்கள் சோர்ந்து இருந்தன. அழகான முகவெட்டு. தலை முடியை வர்ணம் தீட்டி  சற்று தோள் வரை இறக்கி கத்தரித்து வைத்திருந்தாள். பாலாடை நிறத்தில் இறுக்கமான சாம்பல் நிற குட்டைபாவடை  அணிந்திருந்தாள். சாம்பல் நிறத்தில் வெள்ளை நிற பூக்களை வரைந்த  டீசேட்டை உள்ளே விட்டு இறுக்கமாக  அணிந்திருந்தாள்.

அவள் சீசா அருந்தி இருக்க வேண்டும் அவள் இருந்த இடத்தை நோட்டமிட்டேன். வேறு யாரும் அவள் நிறத்தில் இருக்கவில்லை; இரு பெண்கள் சீசா அடித்துக்கொண்டிருந்தனர். அவர்களின் மேசையில் சில புத்தகங்கள் கிடந்தன.

அவள் என்  கையில் இருந்து வாங்கிய சிகரட்டால்  தன் சிகரெட்டை ஊதி பற்ற வைத்துவிட்டு ஒல்லாந்து மொழியில் நன்றி சொன்னாள். நான் பிரெஞ்சில் பேசிய போது தொடர்ந்து பேசினாள். நான் என்னை அறிமுகம் செய்த போது எந்த மொழியில் எழுதுகிறாய் என கேட்டாள்; நான் தமிழ் மொழி என்றேன். ‘ஆ’ என்ற படி தலை அசைத்து புகையை வானத்தை பார்த்த படி ஊதினாள். தன்னுடைய பெயரை ‘அலெக்ஸ்சான்றா’ என்று  அறிமுகம் செய்தாள். தான் ஒல்லாந்து மொழியில் நன்கு அறிமுகமான நாவல் ஆசிரியை என்றும் ஒரு நாவல் பிரெஞ்சு மொழியில் மொழியாக்கம் செய்யப்படுவதாக சொன்னாள். மெதுவாக இருவரும் கதைத்த படியே மெல்ல நடந்தோம். அவளது பின் அழகு லத்தினோ அழகிகளை நினைவுபடுத்தியது. தரிப்பிடத்தில் நின்ற ஒரு காரில் இருந்து ஒரு நூலை எடுத்து காட்டினாள்; அது பிரெஞ்சில் மொழியாக்கம் செய்யப்பட்ட நூல். அதை நான் கேட்டு பெற்றுக்கொண்ட, போது அதில் அவளது கையொப்பம் அவளது வாட்ஸாப் இலக்கம் மின்னஞ்சல் அனைத்தையும் எழுதி கொடுத்தாள்.

சில நிமிடங்கள் அங்கிருந்த மரக்கதிரையில் எதிரெதிரே அமர்ந்து பேசிக்கொண்டோம்.  வழுவழுப்பான தொடைகளை  பின்னிய படி எனக்கு முன்பாக அமர்ந்தாள். எனக்குள் காமம் உருகி திரவமாக வடிய ஆரம்பித்தது. அவள் கால்களை ஆட்டி தொடைகளை மெல்ல பிரிக்க என் கண்கள் போதையில் தடுமாறின. அவள் எழுந்து பேச ஆரம்பிக்க புத்தி தெளிந்தேன். “நான் திருமணம் ஆனவள். என்  கணவன் ஒல்லாந்து நாட்டுக்காரன். இந்த நிமிடம் அவன் வேற்று பெண்களோடு மது அருந்தி புணர்ந்து கொண்டிருப்பான்” என்று உதடுகளை சுளித்தபடிச் சொன்னாள். தன் தகப்பன் தன் தாயை விவாகரத்து செய்து விட்டதாகவும் தகப்பன் மொரீஷியன் தாய் ஹரியானா மாநிலத்தை சேர்ந்தவள் என்றும் தான் பிறந்து இதே நாட்டில் தான் என்று போதையில் கண்களை கூசியபடி சொன்னாள்.

மீண்டும் நாங்கள் நடக்க ஆரம்பித்தோம். அவள் தனது ஒல்லாந்து நண்பர்களுக்கு என்னை அறிமுகம் செய்து வைத்தாள். பின்னர் நான் இரவு வணக்கம் கூறி அங்கிருந்து வெளியேறிவிட்டேன். இரவு நான் தங்கி இருக்கும் விடுதிக்கு டாக்ஸி பிடித்து வந்து சேர்ந்து விட்டேன். நள்ளிரவாகிய பின்னர் விடுதியில் ஒரு பியர் ஒன்றை வாங்கி அறையில் வைத்து பருகினேன். இரவு என்னால் தூங்க முடியவில்லை – வழுவழுப்பான ஒட்டிய தொடைகளும், நெளித்து விடப்பட்ட கூந்தலும் நினைவுக்கு வந்துகொண்டிருந்தன. அந்த இரவு நான் சுயமைத்துனன் செய்திருக்க வேண்டும்; போதையில் சரியாக நினைவில்லை.

அடுத்த நாள் அவளை அதே விடுதியில் சந்திக்க சென்றேன். அவள் வரவில்லை. நான் அந்த சுற்று வட்டத்தில் உள்ள டிஸ்கோ  விடுதி ஒன்றில் இரவைக்களித்தேன். இரண்டு வருடங்களுக்கு முன்னர் இடம்பெற்ற முதல் சந்திப்பு என்றாலும் நாங்கள் தொடர்ந்து ஈ மெயில் வாட்ஸாப் என்று தொடர்பில் இருக்கின்றோம். என் தொலைபேசியை எடுத்துக்கொண்டு கட்டிலில் சாய்ந்தேன். அறை முழுவதும் சூடேற்றப்பட்டு கததடவென்று இருந்தது. எண்ணங்கள் சிறகடிக்க ஆரம்பித்தன.கடிகார முட்கள் நகர மறுத்தன.

பனிகொட்டித் தீர்ந்த பாடில்லை. கடந்த பத்து வருடங்களில் இப்படி ஒரு பனிப்பொழிவை பாரிசின் புற நகரம்  அனுபவித்ததில்லையென  ஊடகங்கள் சொல்லிக்கொண்டிருக்க வீட்டு மின்குமிழ்களை இயந்திரமாக இயங்கி அணைத்துவிட்டு  கட்டியான குளிர் அங்கி ஒன்றை அணிந்துகொண்டு  மின்தூக்கி  இருக்கும் அறையை நோக்கி சென்றேன். எனக்காக காத்திருந்தது போல மின்தூக்கி எனது தளத்தில் நின்றது. உடனடியாக கட்டிடத்தை விட்டு வெளியேறினேன். பனியில் மெத்தென்ற விரிப்புக்குள்  பாதங்கள் புதைந்தன. என்னால் வீதியில் நடக்க முடியவில்லை. விரைந்து சென்று கதவைத் திறந்தேன். கண்ணாடியில் உறைபனி உறைந்து கிடந்தது.  துடைப்பான்கள் பனியில் சிக்கிக்கொண்டன. தாமதிக்காமல் வண்டி எஞ்சினை ஸ்ரார்ட் செய்தேன். புகையை கக்கிக்கொண்டு வண்டி உறுமியது வண்டியின் கொதி கலனை போட்ட போது கண்ணாடியில் அப்பியிருந்த பனி கரைந்து உருக ஆரம்பித்தது.

ஜக்கெட் கையை  இழுத்து நேரத்தை பார்த்தேன். நேரம் பிற்பகல் நான்கு மணியை தொட்டது. நேரம் நெருங்க நெருங்க அலெக்ஸ்சாவை சந்திப்பதற்கான ஆர்வம் மேலோங்கியது. வண்டியின் வேகத்தை சற்று முடுக்கி விட்டேன். வண்டி சற்று வேகமாக சென்று வரிசையாக இருந்த புத்தக கடைகள் இருந்த தெருவை அடைந்தது. வண்டியை ஓரமாக ஒரு தரிப்பிடத்தில் விட்டு வெடுக்கென்று வெளியேறினேன். எதிரே ஷேக்ஸ்பியர் அன் கொம்பனி வரலாற்று புகழ்பெற்ற புத்தக கடை இங்கு பல முறை வந்து இருக்கின்றேன். என்னை முதன் முதலில் அழைத்துச்சென்று பிரபலமான இங்கிலாந்து எழுத்தாளர் ஒருவரை அறிமுகம் செய்துவைத்தது நண்பன் பர்ஹான்.

இன்றும் ஒரு நாவலாசிரியரை சந்திக்க இருக்கின்றேன். அந்தக்கடை பச்சை நிறமும் தங்க நிறமும் பூசப்பட்டு வெளிப்புற அழகை மெருகூட்டிகொண்டிருந்தன. கடைக்கு முன்பாக  உற்சாகம் குன்றாமல்  வரிசையில் நின்ற வாசகர்களின் முகங்களில் ஒரு விதமான படபடப்பை  காணக்கூடியதாக இருந்தது. உள்ளே வாயிலை திறந்து உள்ளே ஒரு கருப்பு நிற அழகி என்னை வரவேற்றாள். சிறிய மேடை அங்கே இரண்டு கதிரைகள் இருந்தன. ஒன்றில் அலெக்ஸாவும்  இன்னொன்றில்  அறிவிப்பாளர் ஒருவரும் இருந்தனர். சற்று தாழ்வான பகுதியில் வாசகர்கள் கையில் புத்தகத்தை ஏந்திய படி, பிரபல பெண் எழுத்தாளரின்  உரையை மிக கவனமாக செவிமடுத்துக்கொண்டிருந்தனர். மெலிந்த உடலை கட்டியான நீண்ட குளிரங்கியினால் அவள் மூடியிருந்தாள். சுருள் சுருளாக அழகுபடுத்தப்பட அழகிய கேசம் தலையில் ஒரு பக்கம் ரோஸ் நிறத்தில் பூ எம்பிராயட்டு செய்த அழகான வெள்ளை நிறத்தில் வட்டவடிவ தொப்பி அவளுக்கு எடுப்பாக இருந்தது. ஆரஞ்சு நிறத்தில் உதட்டுச்சாயம் அவளது மெல்லிய உதட்டினை மெதுவாய் திறந்து பேசும்போது மஞ்சள் ஒளியில் பிரகாசமாக இருந்தது. அவளது நிகழ்வு முடியும் வரை பொறுமையோடு அவளது அழகான வாயில் இருந்து வெளிவரும் சொற்களை எண்ணிக்கொண்டிருந்தேன். இறுதியாக புத்தகங்களை பெற்றுக்கொண்டவர்களிடம் தனது கையெழுத்தை போட்டுக்கொடுத்தாள். சில நிமிடங்களில் வெள்ளை நிற குவளையில் வயின் பரிமாறப்பட்டது. நான் இருக்கையில் இருந்த படியே வயினை சுவைத்தேன். அலெக்ஸா  வயின் அருந்துவதற்காக தனது மேலங்கியை கழற்றினாள். கழுத்தைச் சுற்றி அழகான கருப்பு முத்துமாலை ஒளியில் பட்டு மின்னியது. இந்த அழகோடு அவள் என்னை கண்டபின் கொடுக்கும் முத்தத்தை பற்றி கற்பனை செய்யத்தொடங்கினேன்.

பின்னால் இருந்து ஒரு பெண் குரல்; வெடுக்கென்று திரும்பினேன். அது வயின் பரிமாறிய அதே பெண் குவளையை என்னிடம் இருந்து வாங்கிவிட்டு நன்றி சொல்லி அவ்விடத்தைவிட்டு அகன்றாள். நேரம் இரவு எட்டுமணியை தொட்டது; வாசகர்கள் சாலையை விட்டு மெல்ல மெல்ல அகன்றபோது அலெக்ஸா தரையில் இறங்கினாள் .என்னை நோக்கி வந்து “Cava டானியல்?” என்று சுகத்தை விசாரித்தபடியே என்னை மென்மையாக கட்டி அணைத்து மெல்லிய முத்தம் கொடுத்தாள். அவளது உடலில் பூசி இருந்த வாசனைத்திரவியம் அவளது  சூட்டுடன் என் உடலோடு அப்பியது. அனைவரிடமும் நன்றி கூறி புறப்பட  தயாரானோம். 

இரவு உணவுக்காக வண்டியை உணவகத்துக்கு செலுத்தினேன். தொடர்ந்து பேசிக்கொண்டு போனோம்.முன் இருக்கையில் இருந்துகொண்டு தன் கைப்பையை திறந்து ஒரு சுவிங்கத்தை என்னிடம் நீட்டினாள். அதை மென்றுகொண்டு பேச ஆரம்பித்தோம். ஈபிள் கோபுரத்துக்கு அருகில் இருந்த இந்திய உணவுவகை வழங்குகினற ஒரு உணவகத்தில் உண்பதற்காக வண்டியை நிறுத்தினேன். சிறிய வட்ட மேசையை சுற்றி இரண்டு கதிரைகள் மேசையின் நடுவில் நீண்ட மெழுவர்த்தி சுடர் விட்டு எரிந்துகொண்டிருந்தது. மேசைக்கு சற்று தள்ளி சூடேற்றிகளில் இருந்து பீறிட்ட  வெப்பம் உடலை கத கதப்பாகியது . உணவகத்தில் உள்ள பிரமாண்டமான தொலைக்காட்சி பெட்டியில் கால் பந்தாட்டபோட்டியில் பலர் மூழ்கி இருந்தனர் – சிலர் புகைத்துக்கொண்டிருந்தனர். அவள் தான் விரும்பிய மிக்ஸ் பிரைட் ரைஸை ஆடர் செய்தாள். நானும் அதையே விரும்பினேன்.

உணவை தட்டில் கொட்டியபடியே  அந்த வழக்கைப்பற்றி விசாரித்தாள்.ஏற்கனவே நான் வாட்ஸாப்பில் பொதுவான விடயங்களைப்பற்றி அவளுடன் பேசியிருக்கின்றேன். இளைஞன் ‘மொம்மதின்’ தற்கொலை பற்றிய  தகவல்களை அறிய அவள் ஆவலாய் இருந்ததை நான் உணர்ந்தேன். என்னால் அந்த துன்பியல் சம்பவத்தில் இருந்து விடுபடமுடியவில்லை. அந்த தற்கொலையால் நான் அதிர்ந்து போயிருக்கின்றேன்; உதவி செய்யப்போய் துன்பம் அடைந்ததுதான் மிச்சம். அந்த வழக்கு சம்பந்தமாக பேசுவதற்கு நான் தற்சமயம் தயார் இல்லை என்பதை அலெக்ஸா உணர்ந்தாள். இருவரும் இலக்கியம் சம்பந்தமாக பேச ஆரம்பித்தோம். பின்னர் சமகால பிரெஞ்சு அரசியல் தேர்தல் பற்றி பேசினோம். மேடம் லூப்பன் அதிபராக்குவதற்கு தகுதி இல்லாதவர் என்றும் எதிர்க்கட்சி அகதிகள் பற்றி கொண்டுள்ள நிலைப்பாட்டை தான் வெறுப்பதாகவும் தன்னுடைய புளொக்கில் அதுபற்றி விரிவான கட்டுரை எழுதி இருப்பதாக சொன்னாள். அவளது அடுத்த புராஜெக்ட் ஒரு நாவல் என்றால் அதற்கான வேலையாகவும்தான் பரிஸ் வந்ததாக சொன்னாள்.

இருவரும் உணவை முடித்து விட்டு பணத்தை செலுத்த அவள் என்னை அனுமதிக்கவில்லை. இருவரும் புறப்பட்டோம். வீடு வந்து சேர இரவு பத்துமணியை கடந்துவிட்டது. வண்டியை தரிப்பிடத்தில் நிறுத்திவிட்டேன்.

வெளியில் இலக்கில்லாமல் பனித்துகள்கள் வீசிக்கொண்டிருந்தன. நிலம் சேறும் சகதியுமாக இருந்தது. நீண்ட குதியை உடைய அலக்ஸாவுடைய பூட்ஸ் நறுக் என்று பனியில் வழுக்க வெடுக்கென்று என் தோள்களைபிடிக்க சமயம் பார்த்திருந்தவனைப்போல சுறுக்கென்று அவளது ஒல்லிடைய பிடித்து தூக்கிக்கொடுத்தேன். “ஓ கோட் மெர்சி செரி” என்றாள்.

மெல்ல  இருவரும் சிறிய பொதிகளை தூக்கிக்கொண்டு மாடிக்கேறினோம். கதவை திறந்து உள்ளே போனதும் அலெக்ஸா கையில் இருந்த பொதியை தூக்கி எறிந்துவிட்டு அருகில் இருந்த சோபாவில் தொடைகளை பின்னிக்கொண்டு தொப்பென வீழ்ந்தாள். “இன்று நீண்ட பயணம் செய்து இருக்கின்றேன் உடல் சோர்வாக இருக்கிறது” என்றாள்.  நானும் சேர்ந்து அதை ஆமோதித்தேன்.

உறங்கப்போகிறாயா? என்று கேட்டேன். குளிக்கப்போவதாக சொன்னாள். உடனடியாக குளியலறையை தயார் செய்தேன். சில நிமிடங்களில் முழுகி விட்டு பியாமாவோடு சோபாவில் வந்தமர்ந்தாள். உதட்டுக்கு மென்மையாக உதட்டுச்சாயம் பூசி இருந்தாள். அவளது உடலில் இருந்து சோப்பு வாசனை வீசிக்கொண்டிருந்தது. பரிசுத்தமான முகத்துடன் சோபாவுக்கு முன்னால் படித்துவிட்டு மூடி வைத்த புத்தகத்தை எடுத்து அதன் அட்டையை முன்னும் பின்னும் புரட்டிப்பார்த்தாள். மொழி தெரியாததை அவள் கண்கள் உறுத்தின. அந்தப்புத்தகம் “அப்பாவின் துப்பாக்கி” அதைப்பற்றி நான் சொன்ன போது தான் பிரெஞ்சு மொழியில் படித்து விட்டதாகவும், ஹினேர் சலீம் என்னும் எழுத்தாளருடைய  சிறந்த நாவல் என்றும் அண்மையில் அவரது “வோட்கா லெமன் “என்னும் திரைப்படத்தை தான் பார்த்ததாகவும் சொன்னாள். குர்திய மக்களின் வாழ்க்கை வரலாற்றை அவர்களது இளமைக்கால வாழ்க்கையை விபரிக்கும் நூல் என்றாள். இருவருக்கும் அந்த நூல் பற்றிய அறிந்த விடயங்களைப்பற்றி அதிகம் பேசிக்கொண்டோம்.

சோபாவில் இருந்து எழுந்து என்னுடைய அறையில் இருந்த புத்தக அடுக்கில் இருந்த சில புத்தகங்களைபுரட்டி பார்த்தாள்.கார்சியா மார்க்கஸ்,அன்ரன் செக்கவோ,அல்பேர்ட் கெம்யூ போன்ற எழுத்தாளர்களது புத்தகங்களை எடுத்து அதன் முன்னடையில் அச்சிட்டிருந்த அவர்களது முகங்களை தடவியபடியே எந்த நாவல் என்று என்னிடம் விபரம் அறிந்தாள். நான் இடைமறித்து ஏதும் குடிக்க போகிறாயா? என்று கேட்ட போது ஜஸ்ட் வைன் அல்லது பியர் மட்டும் இரவில் வருந்துவதாக சொன்னாள். உடனடியாக பிடிச்சில் அடுக்கி இருந்த வைன் போத்தலை எடுத்து இரு கண்ணாடிகுவளைக்குள் ஊற்றினேன். சிவப்பு நிற திரவம் நுரையோடு பொங்கி குவளையை நிரப்பியது.

நன்றி கூறி கையில் மதுக்குவளையை வாங்கியவண்ணம் என்னிடம் ஒரு கேள்வி கேட்டாள்.

“நீ காஃப்காவின் தற்கொலைக்குறுங்கதை படித்திருக்கிறாயா? இல்லையா?”

நான் இல்லை என்றேன். அதில் வரும் சில சம்பவங்களை எடுத்துக்கூறினாள். என்னுடைய குவளையில் இருந்த திரவம் காலியானது. மீண்டும் கொஞ்சம் ஊற்றினேன். அவள் தொடர்ந்து பேசத்தொடங்கினாள்.

சோபாவின் மறு முலையில் இருந்தவள் மதுக்கிண்ணத்தை மேசையில் நீட்டி வைத்தபடியே மெல்ல என்னை அண்மித்து என் தோள்களில் தன் கன்னத்தை மெல்ல அழுத்தியபடியே “ஹேய் நீ சில மாதங்களுக்கு முன்பு கூறிய அந்த தற்கொலை பற்றி விரிவாக  சொல்லுவாயா?” என்றாள்.

என்னையறியாமல் ஒருவித உணர்வு மனதில் எழுவதை நான் உணர்ந்தேன். குளிரில் உறைந்து போய் இருக்கும் இந்த நகரில் வெறும் இருவர் மட்டும் மிக நெருக்கமாய்  இருக்கும் நிமிடம் என்னால் என்னதான் செய்ய முடியும் வெடுக்கென்று எழுந்து

‘’உனக்கு சிகரெட் வேணுமா’’ என்று கேட்டேன்

‘’யெஸ் பிளீஸ்’’ என்றாள் அவளுக்கு சிகரட்டை பற்ற வைத்து விட்டு சிகரெட்டை ஊதிய படி நான் பனிக்குளிரில் இருகிபோய்க்போய்க்கிடந்த பல்கணி கதவை போரடித்திறந்தேன்.

அங்கிருந்த உயரமான மது அருந்தும் கதிரையில் அருகருகே அமர்ந்து புகைக்க ஆரம்பித்தோம். அவளுடைய வழுவழுப்பான தோள் என்னை

தீண்டிகொண்டிருந்தது. நகரை பார்த்தேன். நள்ளிரவு இருட்டில் பூப்பனித்தூறல் முடிவின்றி கட்டிடகாட்டுக்குள் மௌனமாக சரிந்துகொண்டிருந்தன.

பிடிக்காத உணவை தவிர்க்கும் குழந்தையைப்போல அந்த வாலிபனின் தற்கொலைகதையை தவிர்க்க முயற்சித்தேன். என்னால் அவளது அன்பான கோரிக்கையை தட்டிவிட முடியவில்லை. கதிரைக்கு அருகில் நெருங்கி அவள் என்னை மெல்ல அணைக்க விரும்பியதை நான் உணர்ந்தேன். அவளது உடலின் கத கதப்பு என் தொண்டைக்குள் எதோ கட்டியான திண்மத்தை இறுக்கியது போல உணர்ந்தேன். அவளது மெல்லிய விரல்களை தீண்டினேன்.

அவளும் என்னை இறுகப்பிடித்து “டானியல், பனிபொழியும் நள்ளிரவில் இந்த பிரபஞ்சத்தின் கீழ் இருக்கும் எல்லாவற்றையும் பற்றி இரவு முழுவதும்  உன்னுடன் பேசிக்கொண்டிருக்க  வேண்டும் போல் இருக்கிறது”  என்றாள்.  சிகரெட்டில் நுனியில் இருந்து எரிந்த சாம்பல் தரையில் விழாமல் புகைந்துகொண்டு இருந்தது. அதை சாம்பல் குப்பிக்குள் தட்டிய படியே கதையை சொல்ல ஆரம்பித்தேன். அவள் தனது விரித்து விட்ட முடியை மெல்ல விரல்களை விட்டு கோதியபடி தன்  பார்வையால் என்னை விழுங்கிக்கொண்டிருந்தாள். என் மனம் அமைதியில்லாமல் தவித்தது. இந்தக்கதையை நான் சொல்ல எத்தனித்த போது மனதுக்குள்  என்னையறியாமல் குற்றவுணர்வை உணர்ந்துக்கொண்டிருந்தேன் என்பதை முன்கூட்டியே வாசகர்களிடம் சொல்லிவிடுகின்றேன்.                                                                                                       

முகமது நயீம்  என்பது என்னுடைய கால்பந்தாட்ட பயிற்சியாளருடைய பெயர் அவர் ஒரு முஸ்லிமாக அறியப்பட்டாலும் தன் மதம் குறித்து மற்றவர்கள் போல எந்த பெருமையும் பாராட்டிக்கொள்வதில்லை. உதவி கேட்டு வாசலுக்கு போனால் முடிந்தால் செய்து கொடுத்து விடுவார். நாங்கள் அவரை மாஸ்டர் என்றுதான் அழைப்போம். நல்ல உடல் வாகு ஜிம் அடித்து உடம்பை ஏற்றி வைத்திருந்தார். கறுத்த உருவம் தலை முடி நெற்றி வரை சுருண்டு கிடக்கும் கண்கள் இரண்டும் பழுப்பு நிறம் என்ர கூட்டுகாரங்கள் மாஸ்ட்டரை பார்த்த பின்புதான் ஜீம் கிம் என்று யாழ்ப்பாண ரவுண் புள்ளா திரிய வெளிக்கிட்டவங்க. அவர் புத்தளம் ஸாஹிரா கல்லூரியில் சில காலம் கடமையாற்றிவிட்டு யாழ்ப்பாணம்  நாவாந்துறைக்கு பணி  மாற்றம் கேட்டு இங்கு வந்துவிட்டார்.

யாழ் அய்ந்து சந்தியை அண்மித்த பகுதியில் அவரது பூர்வீக சொத்தென்று சில  இருந்தன. அதில் ஒன்று யாழ்ப்பாண மாநகர எல்லையில் இருந்தது.  தொண்ணூறாம் ஆண்டுக்கு முன்னர் சிறிய மாடியுடன் கூடிய வீடு தற்போது தரை மட்டமாக கிடக்கின்றது. போரின்  பின் எஞ்சி இருக்கும் காணித்துண்டில் இடிபாட்டுக்குள் தப்பி ஒரு பக்க சுவர் மட்டும் விறுமன் போல நிலைத்து நின்றது . அச்சுவருடன் முட்டுக்கொடுத்து ஒரு தகரக்கொட்டிலை மாஸ்ட்டர் நிர்மாணித்தார். மாஸ்ட்டரை இரண்டாயிரமாம் ஆண்டிலிருந்து அறிந்திருக்கின்றேன். கொழும்பு சிட்டி லீக் மைதானத்தில் அவரது அணியை அப்போது நடத்தி இறுதிப்போட்டி வரை வலி நடத்தி வந்து பைனலில் எங்களுடைய அணியுடன் தோல்வியடைந்து வெளியேறினார். அவருடன் என் சொந்த உரை சொல்லி அறிமுகமான போது  கண்கள் விரிய கொஞ்சம் பெருமூச்சு விட்டபடி அவரும் தானும் அதே ஊர் என்கிறார். அப்போது என்னால் நம்பமுடியவில்லை. சில காலம் சென்ற பின்னர் தான் அந்த அரசியல் எனக்கு பிடிபட்டது.

யாழ்ப்பாணம் துரையப்பாவில் மாவட்ட தெரிவு அணிக்கு பயிற்சிக்கு சென்று வரும் வேளை என்னுடைய சகாக்களுடன் மாஸ்ட்டர் வீட்டில் ரின் பால் தேத்தண்ணி குடித்து இளைப்பாறியவிட்டுத்தான் வீட்டுக்கு போவோம். ஈத் கொண்டாட்டத்தின் போதெல்லாம் மாஸ்ட்டர் வீட்டில் தான் ஆட்டுக்கறி பிரியாணி ஒரு புடி புடிப்போம்.  அந்த வேளையெல்லாம்  முகம் கோணாமல் எம்மை உபசரித்து வழி அனுப்பி வைத்த மாஸ்ட்டருடைய மனைவி – நாங்கள் அவாவை டீச்சர் என்று அழைப்போம்; அது மாஸ்ட்டருக்கு கௌரவமாக இருந்தது. சொல்லப்போனால் என்னை ஏஜென்சி மூலம் அனுப்பி வைத்தது அவர் தான். கொழும்பில் எவ்வளவோ ராணுவ கெடுபிடிகள் எனக்கு சிங்களம் சுத்தமாக தெரியாது. சொல்லப்போனால் சிங்களத்தில் ‘’எண்ட’’  ‘’தெண்ட’’ போன்ற ஒருசில சொற்கள் மாத்திரம் தெரிந்து வைத்திருக்கின்றேன்.

எனக்கு மாஸ்ட்டர் செய்தது உதவி இல்லை அது பேருதவி என்பேன். நான் வெளிநாடு வந்து பத்து வருடங்கள் உருண்டோடி விட்டன. இப்போது மாஸ்ட்டர் ஓய்வு பெற்றுவிட்டார். மீதிக்காலத்தை மனைவி பிள்ளையள், பேரப்பிள்ளைகளோடு சந்தோசமாக கழிப்பதாக சொல்லுவார்.

ஓர் நாள் அதிகாலை நான்கு மணிக்கு தொலைபேசி அழைப்பு வந்திருந்தது. துடித்துப்பதைத்து தொலைபேசியை எடுத்தேன். இந்த நேரங்களில் வரும் அழைப்புகள் பெரும்பாலும் எனக்கு துக்க செய்திகளையே சொல்லி இருக்கின்றன. கொஞ்சம் தளர்ந்த குரலில் ஆண் குரல் ஒன்று “தம்பி” என்றது. அரைத்தூக்கத்தில் “ஹலோ” சொன்னேன். மறுமுனையில் பதட்டத்தோடு மாஸ்ட்டர் பேசத்தொடங்கினார். ‘’தம்பி டிஸ்ரப் பண்ணிற்றன் போல கிடக்கு”

“இல்லை மாஸ்ட்டர், சொல்லுங்க மாஸ்ட்டர் என்ன இந்த நேரத்தில அடிச்சு இருக்கிறீங்க ஏதும்?”

‘’ஒண்டும் இல்ல தம்பி சின்ன பிரச்சனை’’

சொல்லுங்க விபரமாக என்று மெல்லிய அதட்டலுடன் என்னை அறியாமலே வார்த்தைகள் வெளியில் வந்து  வீழ்ந்தன.

“தம்பி என்ர கூட்டாளி ஒருத்தண்ட மகன் இப்பதான் ஒரு வருசம் சுவிஸுக்கு போய் திடீரெண்டு அவனை டிப்போட் செய்ய போறாங்களாம்.  அவன் ‘வாப்பா என்ன காப்பாத்துங்க’ எண்டு சொல்லி கத்துறான் தம்பி. போலீஸ் அடிக்கிறாங்க போல காலங்காலத்தால டெலிபோன் அடிச்சவன்.  என்ன செய்றாண்டு தெரில, பாவம் அவன்ர வாப்பா மொளடா கலியாணத்துக்கு சேத்து  வச்சு இருந்த காசு வீடு எல்லாத்தையும் இழந்துபோட்டான். எனக்கு வேண்டியவன். அவன்ர ரெண்டு கண்ணும் குருடா போச்சி. என்னோட திருகோண மலையில புட்பால் விளையாடினவன். அவன்ர நிலைமையை பார்க்க கவலையா இருக்கு. தம்பி உன்னால ஏதும் உதவி செய்ய முடியுமா தம்பி?”

இப்போது என்னுடைய தூக்கம் எல்லாம் கலைந்து போனது.

‘மாஸ்ட்டர் கவலைப்படாதீங்க, பொடியன்ட டெலிபோன் நம்பர் இருந்தால் உடனே அனுப்புங்க என்ன எண்டு பாத்து செய்றன்’’ என்றேன். பெரிய உதவி தம்பி இப்ப அவன்ர வாப்பாவை அடிக்க சொல்றன் என்றார். சில நிமிடங்களில் ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. இம்முறை ஒரு பெண்குரல் ஹலோ ‘’நான் றஸ்மிட றாத்தா பேசுறன். கொஞ்சம் பொறுங்கோ வாப்பாட்ட குடுக்கிறன்’’ என்றாள். ‘’வாப்பா அந்த அண்ணே இந்தாங்க டெலிபோன் வடிவா புடிங்க இந்தா இருக்கு வடிவா வாய்க்கு கிட்ட வச்சி பேசுங்க என்றாள். “தம்பி….சோமா இருக்கிறீங்களா?”  என்ற மோன் தான் றஸ்மி என்ன பிரச்சனையோ தெரில தம்பி பயமா இருக்கு இங்க ஒருக்கா செல்லி பாருங்க அல்லாஹ் உங்களை பாதுகாப்பார். இங்கின இருந்து எங்களால ஒண்ணும் செய்ய முடியாது தம்பி மலைபோல நம்புறேன். கையை விட்டுராதீங்க! என்று சொல்லி முடிப்பதற்குள் அங்கிருந்து சில அழுகுரல்கள் என்னை கலங்கவைத்தன. அவரது குரலில் நடுக்கத்தை உணர்ந்தேன். 

என்னால் எப்படி அவர்களை தைரியப்படுத்துவது என்று தெரியவில்லை.

‘’சரி ஒண்டும் யோசிக்காதீங்க. வாப்பா  இப்ப என்ன என்று பாக்கிறேன்’’ எண்டு சொல்லி டெலிபோனை கட் செய்தேன் .மனதுக்குள் பயம் மெல்ல அரும்பு விட ஆரம்பித்தது. சில நிமிடங்களில் சுவிஸர்லாந்து தொலைபேசி இலக்கம் ஒன்று வாட்ஸாப்பில் வந்து வீழ்ந்தது. உடனடியாக அந்த தொலைபேசிக்கு அழைத்துப்பேசினேன். பெடியன் முக்கால் சினுங்க ஆரம்பித்தான். நான் அவனுடைய முழு விபரத்தையும் அறிய விரும்பினேன். இது கரணம் தப்பினால் மரணம் என்ற நிலை, நான் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியையும் மிகவும் நிதானமாக வைக்க வேண்டி இருந்தது.பொறுமையாக அவன் சொல்வதை செவிமடுத்தேன். தான் சுவிஸுக்கு வந்து இரண்டு வருடங்கள் போட்ட விசா எல்லாம் ரிஜக்கட் ஆகிவிட்டதாகவும் இப்போது தன்னை நாட்டை விட்டு வெளியில் போக சொல்லி லோயருக்கு கடிதம் அனுப்பி இருக்கிறாங்க. எந்த நேரமும் போலீஸ் பிடிக்க வாய்ப்பு இருக்கு. எப்படியாவது தன்னை பிரான்சுக்கு கும்பிடுங்க என்று கெஞ்சினான். உன்னுடைய வயது என்ன தம்பி ?என்று கேட்டேன். பத்தொன்பது என்றான்.

பேசி முடிந்ததும் தொலைபேசியை நிறுத்திவிட்டு மீண்டும் நண்பன் சுவிஸ் மாமன்சுக்கு அழைத்தேன். மாமான்ஸ் அழைப்பில் வந்தான். விபரத்தைக்கூறினேன். பிரான்சுக்கு அழைத்துவர தற்போதைய நிலையில் முடியாது என்று மறுத்துவிட்டான். நாட்டு எல்லைகளுக்குள் ஏராளமான போலீசார் நிறுத்தப்பட்டு இருப்பதாகவும் எல்லைகளில் பிடிபட்டால் எல்லாருடைய வாழ்க்கையும் கேள்விக்குறி ஆகிவிடும், தான் குடும்பகாரன் என்று கையைக்கழுவ நினைத்தான். வேண்டுமானால் அந்த பொடியினை பேருந்தில் அல்லது தொடரூந்தில் அனுப்பி வைக்க முடியும் என்றான். அதில் எனக்கு நம்பிக்கையில்லை – சரி எதுவானாலும் அந்த பெடியனின் தொலைபேசி இலக்கத்தை கொடுத்து பேசிப்பாரு என்றேன்.

மாமான்ஸ் சில மணித்தியாலங்களில் என்னை அழைத்தான். அந்த பெடியன் தன்னை பேருந்தில் அனுப்பி விடும்படி தொந்தரவு செய்வதாக சொன்னான். மீண்டும் தான் போயருக்கு சென்றால் தன்னை கைது செய்து விடுவார்கள் இல்லையென்றால் அந்த ஆபிரிக்க கருப்பு புண்டைகள் தன்னை  துன்பறுத்திக்  கொன்று விடுவார்கள் என்றானாம்.

எனக்கு குழப்பமாக இருந்தது. பிடிப்பட்டால் பழி என்மீது விழும் என்று பயந்தேன். ஆனாலும் பெடியனின் நிலைமை இப்படி இருக்கின்றது. மாஸ்ட்டருக்கு வாக்கு வேற கொடுத்துவிட்டேன். அப்போது ஒரு  யோசனை உதித்தது. உடனடியாக  விபரத்தை பெற்றோருக்கு சொன்னேன். அவர்களால் எதையும் புரிந்து கொள்ள முடியாமல் திணறிக்கொண்டு இருந்தனர். ‘காப்பாத்து தம்பி! என்று புலம்பிக்கொண்டிருந்தனர். மாமன்ஸ் பொடியண்ட இன்சூரன்ஸ்ஸை பயன்படுத்தி தன்னுடைய பணத்தை செலுத்தி ஒரு பயண ரிக்கட்டிடை பொடியனின் பெயரில் பதிவு செய்து, அதன் பிரதியை எனக்கு அனுப்பினான். பயண ஒழுங்குகள் சரியாக செய்துவிட்டதாக சொன்னான். அவசரப்புடுக்கு ஒரு மாதிரி ஆளுதான் மச்சான் அவனை கவனமாக கையாளு என்று மாமான்ஸ்  அறிவுரை கூறினான். எனக்கு ஒன்றும் பிடிபடவில்லை!

பேரூந்தில் ஏறுவதற்கு முன்னர் பொடியன் தொலைபேசியில் அழைத்திருந்தான்.தான் அணிந்து இருக்கும் ஜாக்கெட்டின் நிறம் மஞ்சள் ஜீன்ஸ் கருப்பு வெள்ளை கன்வாஸ் சப்பாத்து என எல்லா அடையாளங்களையும் சொல்லி முடித்தான். எச்சிலை விழுங்கிய படி  “அண்ணே கூட்டி போக வந்துவிடுவீங்கதானே?”

“தம்பி ஒன்றுக்கும் யோசியாத நான் ஒரு மணித்தியாலத்துக்கு முன்னமே பஸ் நிலையத்துக்கு வந்துவிடுவேன். என்று உறுதி அளித்தேன். “சரிணா” என்று சொல்லி தொலைபேசியை துண்டித்தான்.

அடுத்த நாள் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் நான்கு மணிக்கே சென்றுவிட்டேன். பரி பேர்சி பஸ் நிலையம் என்னை வரவேற்றது. மழைபெய்து சேறும் சகதியுமாக கிடந்த நிலத்தை தாண்டி பயணிகளின் நெருக்கடிகளை சமாளித்துக்கொண்டு பொறுமையுடன்  அங்கே அமைக்கப்பட்டு இருந்த ஒற்றையடிப்பாதையாலே உள் நுழைந்தேன். வெளி நாடுகளில் இருந்து உள்வரும் பிரமாண்டமான பேருந்துகள் வரிசையாக நிறுத்தப்பட்டு அவற்றின் ஓட்டுனர்கள் அடுத்த சவாரிக்காக தயார்படுத்திக்கொண்டிருந்தனர்.

பேருந்துகளின் முகப்பின் அழகாக பொருத்தப்பட்டு இருந்த இலக்கத்தக்கட்டில் இடப்பக்கம் எந்த நாட்டுக்கு சொந்தமான பேருந்தென அந்த நாட்டின் பெயரின் முன் இரு எழுத்துக்களையும் அழுத்தமாக எழுதி இருப்பதை கண்டேன். நேரம் நெருங்க நெருங்க எனக்குள் பதட்டமும் பயமும் உள் நுழைவதை உணர்ந்தேன். அப்போது வாட்ஸாப்பில் அந்த பொடியனின் வாப்பா அழைத்தார். ‘’மகன்  சின்னவன் வந்துட்டானா ? நேரம் ஆச்சு தானே ? நீங்க எங்க ஸ்டேசனில தானே? என்று பதட்டத்துடன் கேட்டார்.

‘’ஆமா என்று பதில் கூறிக்கொண்டு பேருந்து வரும் திசையை வெறித்தேன்.வரிசையாக பேருந்துகள் வந்துகொண்டிருந்தன .சூரிச் என்ற பெயர் பொறித்த பேரூந்து அதன் தரிப்பிடத்தை நெருங்க தடித்த கருப்பு  நிற கண்ணாடியூடாக அந்த பொடியனின் அசைவு தெரிகின்றதா என பார்த்தேன். உஸ்ஸ் என்ற சத்தத்தோடு பேரூந்து தனக்கான தரிப்பிடத்தில் நின்றது.கதவு திறக்கப்பட்டதும்  பயணிகள் இறங்கிக்கொண்டிருந்தனர். மஞ்சள் நிறத்தில் ஜாக்கெட் அணிந்த பொடியனை என் கண்கள் தேடின. தங்க நிறத்தில் பிரேம் இட்ட மூக்குக கண்ணாடியை அணிந்த பருமனான ஒரு மனிதனின் பின்னால் நின்று ‘’அண்ணே என்று குரலை எழுப்பினான்.

அப்போதுதான் நிம்மதிப்பெருமூச்சு விட்டேன். உடனடியாக வாப்பாவுக்கு அழைத்து விபரத்தை சொன்னேன். அவரிடம் அப்போது தோன்றிய களிப்பை என்னால் விபரிக்க முடியாது. “மகன் உங்கட வீட்ட கூட்டிப்போய் ஒரு பீங்கான் சோறு குடுங்க மகன்; அல்லாஹ் உங்களையும் குடும்பத்தையும் ஆசீர் வாதிப்பாரு” என்கிறார். எனக்கு ஒரு மாதிரி ஆகிவிட்டது. பொடியன் வாடி வதங்கி சிவப்பு நிற உதடுகள் உரிந்து கருப்பு நிறத்தில் தோன்றியது.

பொடியினை ஏறிட்டுப்பார்க்க கவலையாக இருந்தது. வெடுக்கென்று அவனது பயணப்பொதியை கையில் எடுத்துக்கொண்டு ஸ்டேசனை விட்டு வெளியேறினோம்.பயணப்பொதியை உருட்டிச்செல்ல முடியாதபடி நிலம் சேறும் சகதியுமாக இருந்தது. அவனது பயணப்பொதியை மெல்ல நகர்த்திக்கொண்டு சென்றேன். பொடியன் கையில் இருந்த ஆரஞ்சு சாற்றை உறுஞ்சிகுடித்துக்கொண்டு உயர்ந்து நின்ற கட்டிடங்களைப்பார்த்த படி நடந்து வந்தான். வழியில் பொலிஸாரின் கண்களில் படாமல் இருக்க நடையை துரிதப்படுத்தினேன். வாகன தரிப்பிடம் வந்ததும் எனது வண்டியை திறந்து பொருட்களை உள்ளே அடுக்கினேன்.

அண்ணே! ஒரு நிமிஷம் உத்தரவு கேட்டான். வெடுக்கென்று தனது குளிரங்கியின் உட்பகுதியில் உள்ள சிறிய பையில்  இருந்து ஒரு பொட்டலத்தை எடுத்து அதில் பச்சை நிறத்தில் ஒரு சிறிய துண்டை எடுத்து  உள்ளங்கையில் வைத்து உருட்டி மெல்ல தனது கடைவாயின் உள்ளே  திணித்தான்.  என் கன்னத்தில் யாரோ அறைந்தது போல இருந்தது. ‘’சரி தம்பி போகலாமா ? என்று கேட்டேன் வெறும் தலையை மட்டும் மாடு மாதிரி ஆட்டினான். நான் கதை சொல்லிக்கொண்டிருக்கும் போது இடை மறித்து ‘’ஜஸ்ட் ஏ மினிட் பிளீஸ்’’ என்று சொல்லிவிட்டு அலெக்ஸ்சா  உள்ளே போய்விட்டு வந்தாள். கனமாக பொழிந்து கொண்டிருக்கும் பனியைத்தவிர ஜன்னலுக்கு வெளியில்  வெளியில் பார்ப்பதற்கு எதுவுமில்லை. அலெக்ஸ்சா  குளிரில் மெல்ல நடுங்குவதை உணர்ந்தேன். ‘’உனக்கு போர்த்துக்கொள்ள கட்டியான போர்வை வேண்டுமா? என்று கேட்டேன். ‘’யெஸ் பிளீஸ்’’ என்றாள். உள்ளே சென்று ஒரு ஓயின் போத்தல் ஒன்றையும் மூடுவதற்கு ஒரு போர்வையையும் எடுத்து வந்தேன்.சிகரட்டை பற்ற வைத்து ஒன்றை அவளுக்கும் மூட்டி விட்டேன்.

அவள் சிகரட் புகையை உள்ளிழுத்து தொடர்ந்தும் கதையை கேட்கும் ஆவலில் என் தோள்களில் தனது முகத்தை தேய்த்தாள். என்  இதயம் வேகமாக துடிக்க நான் மீண்டும் சொல்ல ஆரம்பிக்க முன் ஒரு குவளையில் ஒயினை ஊற்றினேன்.

அதன் பின்பு அந்தப்பொடியன் மீது இருந்த நம்பிக்கை மெல்ல மெல்ல சரிய ஆரம்பித்ததை உணர்ந்தேன். வண்டியில் இருந்துகொண்டு மெல்ல பேச்சைக்கொடுத்தேன். தன்னுடைய பெயர் முகம்மது ரபீக் என்றும் சுவிஸ் போயரில் ரபீக்கை வெட்டிவிட்டு மம்மது என்று அழைப்பார்கள் என்றான். நானும் இனி மம்மது என்றே கதையில் அவனைக்குறிப்பிடுகின்றேன்.

“அண்ணே இப்ப எங்க போறோம்?”

“எங்கட வீட்டுக்கு போய் சேர ஒரு மணித்தியாலம் பிடிக்கும்” என்றேன்.

“ஒரு மணித்தியாலமா?”

“ம்ம்…”

மெல்ல பேச்சுக்குடுத்தேன்.

“தம்பி என்னமாதிரி தொழுகிற பழக்கம் இருக்கா?”

“சும்மா நேரம் கிடைக்கிற போதெல்லாம் தொழுவேன்”

அடுத்த கேள்விக்கு வாய் எடுக்க அவன் இடைமறித்து

“அண்ணே உங்க வீட்டில ஒரு ரூம் தருவீங்களா? எனக்கு தனியா இருக்கவேணும் எப்பவும் டிஸ்ரப் பண்ணினா கடுப்பாகிடுவேன்”

“எங்க வீட்டுக்கு குழந்தைகள் வந்து போகும் உனக்கு குழந்தைகளை புடிக்குமா?” என்று கேட்டேன்.

வெடுக்கென்று “புடிக்காது” என்றான்.

அவனது பதில் என்னை  தூக்கி வாரிப்போட்டது. ஏதும் தப்பு செய்கிறேனோ என்ற பயம் உடல் படபடத்தது. கொஞ்சம் தண்ணீர் குடித்துக்கொண்டு தொடர்ந்து பேச்சுக்கொடுத்தேன். அவனைத்திரும்பி பார்க்க சங்கடமாக இருந்தது. என் முன் இருந்த கண்ணாடியால் அவனது முகத்தைப்பார்த்தேன். அவன் சாதாரணமாகவே தெரிந்தான். “தம்பி கிரிக்கெட் விளையாடுவியா, புட் போல் விளையாடுவியா?”

“நான் கிரிக்கெட் என்றா செமயா விளையாடுவன். பாஸ்ட் போலர் அண்ணே எண்ட போலுக்கு யாரும் நிக்க முடியாது”

அக்தர் மாதிரி போடுவியா ? என்று கேட்டேன். வெடுக்கென்று கோபமடைந்தான்.

பல்லை நறும்பிக்கொண்டு “என்ன என்ன வைச்சு ஆத்தல் எடுக்க பாக்கிறிங்களா?” 

எனக்கு பயம் வந்துவிட்டது. “நோ நோ…” என்றேன்.

தொடர்ந்து பேசுவதை நிறுத்திவிட்டேன்….

வீட்டுக்கு வந்து சேர்ந்துவிட்டோம். அவன் கேட்டது போலவே அவனுக்கு தனியாக ஒரு அறையை கொடுத்துதவினேன். அவனது குண நலன்கள் எனக்கு புரியாத புதிராக இருந்தது. சில வாரங்கள் சென்றன. ஒரு நாள் இரவு கிரிக்கெட் போட்டி ஒன்றை பார்த்துக்கொண்டிருந்தான். அன்றைய நாள் அவன் சற்று மகிழ்ச்சியாக இருப்பதை உணர்ந்தேன். அன்று தான் தன்னுடைய முழுக்கதையையும் எனக்கு சொன்னான்.

02.

மம்மொது என்னிடம் சொன்ன கதை.

இரண்டு மூன்று இரண்டு வருடங்களுக்கு முன் ஒரு கோடை காலத்தில், நான் சுவிஸ் பேர்ண் என்னும் நகரத்துக்கு வந்து சேர்ந்தேன். புதிய தேசம் புதிய முகங்கள் யாரையும் எனக்குத்தெரியாது. காரில் கொண்டு வந்து இறக்கி விட்ட அந்த தமிழ் ஆள் ஒரு உயர்ந்து நீண்ட ஒரு கட்டிடத்தைக்காட்டி அங்கே செல் என்று என்னைப் பணித்து விட்டு ஆள் மின்னல் வேகத்தில் காரை செலுத்தினார். நான் முதுகில் சுமந்து கொண்டு வந்த பள்ளிக்கூட பையை மெல்ல இறக்கி வைத்துவிட்டு சுற்றி கண்ணாடியால் மூடி அடைக்கப்பட அந்த காரியாலத்துக்கு முன் போய் நின்றேன். ஒரு மாநிறத்தில் முகம் முழுவதும் ஒப்பனை செய்த ஒரு இளம் வயதுப்பெண் எனக்கு தெரியாத மொழியில் எதோ கேட்டாள் நான் விழி பிதுங்கி வார்த்தைகள் வாயில் சிக்காடிக்கொண்டிருக்க ஆங்கிலத்தில் பேசினாள். தொடர்ந்து பேச என்னுடைய கடவுச் சீட்டிடை வாங்கி பரிசோதனை செய்த்துவிட்டு நீண்ட படிவம் ஒன்றை எடுத்து வேகமாக பூர்த்தி செய்தாள். பின்னர் தொலைபேசி அழைத்தாள். நீண்ட தலை முடி கொண்ட ஒரு வயதான ஆண் என்னை தன்னுடன் அழைத்துக்கொண்டு சென்றார்.படிவழியே நிலவறைக்கு என்னை அழைத்துக்கொண்டு போய் ஒரு கதவைத்திறந்து ஒரு விசாலமான அறையில் நீண்ட வரிசையில் கட்டில்கள் போடப்பட்டு இருந்தன ஒரு கட்டிலை காட்டி கட்டிலின் மேல் தட்டு உனக்கு சொந்தமானது என உறுதியாக சொன்னார். அதோ உடைகளை உனக்கு சொந்தமான பொருட்களை அந்த அலமாரியை பயன்படுத்தலாம். இங்கு உள்ளவர்கள் எல்லாரும் உனது நண்பர்கள் என்கிறார். திரும்பி அனைவருக்கும் வணக்கம் குருத்து போல மென் சிரிப்பை வெளிப்படுத்தினேன்.

அந்த அறையில் இருந்த பெரும்பானமையினார் ஆபிரிக்க நாட்டவர். சில வேற்று நாட்டவரும் இருந்தனர். என் கீழ்தளத்தில் இருந்து ‘’சாவா மொங்கா’’ என்று கீழ் இருந்து ஒரு கருப்பன் குரல் எழுப்பினான். அவனது பெயர் காலித் காமரூனியன் என்னை விட வயதில் மூத்தவன். என்னுடன் அன்பாக இருப்பதாக காண்பித்தவன். இடைக்கிடையில் உணவு உண்ணும் மேசையில் இரவு நேரங்களில் என்னுடன் அருகில் இருந்து தன் முரட்டுக்கைகளால் என்னுடைய தொடைகளை மெல்ல தடவிக்கொண்டு அவித்த உருளைக்கிழங்கையோ பழங்களையோ வாட்டிய இறைச்சியையோ கொடுப்பான். ஆரம்பத்தில் எனக்கு கூச்சமாக இருந்தது; நாட்கள் செல்ல செல்ல பழக்கமாகிவிட்டது. குளிக்கும் போது உள்ளாடை இல்லாமல் எனக்கு முன்பாக குளிப்பான் அருவருப்பாக இருக்கும் – சில நேரங்களில் குளித்துக்கொண்டு ஷவரை தன் விறைத்த  ஆண்குறியில் பிடித்து அழுத்தி சுயமைத்துனம் செய்வான். அருவருப்பாக இருக்கும். நாட்கள் கடக்க இவ்வாறான செயல்கள் எங்களது போயரில் சகஜமான விடயம் என்று அறிந்துகொண்டேன்.

ஒரு ஞாயிற்றுக்கிழமை நான் உணவு உண்ட பின்பு என்  கட்டிலின் மீது அசந்து தூங்கி விட்டேன். நேரம் சென்றது தெரியாது.அறையில் யாரும் இல்லை வெளியில் சென்றுவிட்டு வந்த கமரூனியன் எனது கட்டிலின் மீது தாவி என்னுடைய பின்பக்கமாக வந்து தன் முரட்டு  குறியை தேய்த்துக்கொண்டிருந்தான். திடுக்கிட்டு மிரண்டு எழுந்தேன். என்னை விடுவிக்க வலையில் சிக்கிய சிறு மீன் குஞ்சு போல கால்களையம் கைகளையும் போட்டு அடித்தேன். அவனது உடும்புப்பிடியில் இருந்து என்னை விடுவிக்க முடியவில்லை. தன் எண்ணம் நிறைவடைந்த பின்பு ஒரு கத்தியை காட்டி வெருட்டினான். அன்று இரவு கடும் காய்ச்சலில் பிடிக்கப்பட்டேன். இரண்டு நாட்கள் கழிந்தது. என்னை அழைத்துக்கொண்டு நகருக்கு வெளியில் ஒரு பாழடைந்த பாலத்தின் கீழ் வைத்து ஒரு சிறிய பொட்டலத்தை கொடுத்து, இதை சாப்பிடு காய்ச்சல் போய்விடும் என்றான். அன்றைக்கு தான் காட்டுத்தனமாக நடந்ததை எண்ணி வருத்தப்பட்டான்.

தன் முன்னாலே பொட்டலத்தை பிரித்து சிறிய துண்டை உள்ளங்கையில் வைத்து அகன்று விரிந்த தன் மூக்கினால் உறுஞ்சி இழுத்தான். அந்த நொடி அவன் கண்கள் சிவந்து ஒரு பயங்கர யந்து போல கண்களில் தென் பட்டான். அன்றில் இருந்து போதைக்கு அடிமையானேன். ஒரு முறை என்னை விலை மாதுக்களிடம் அழைத்துப்போனான். தான் ஒரு சைனீஸ் பெண்ணை புணருவதை நின்று பார்க்கும்படி சொன்னான். எனக்கு அது புதிய அனுபவம் சில நாட்கள் செல்ல எனக்கும் அவனைப்போல பாலியல் இச்சை ஏற்பட்டு விட்டது. முதன் முதலில் ஒரு சைனீஸ் பெண்ணை ஒரு பற்றைக்குள் வைத்து புணர, பணம் மற்றும் அந்த பெண்ணுக்கு கஞ்சாவும் கொடுத்து உதவினான். அதே ருசியில் ஒரு விடுமுறை நாள் அதைப்போல காமரூனியனுக்கு தெரியாமல் களவாக சென்று பெயரினால் குடுக்கப்படட பணத்தை எடுத்துக்கொண்டு மீண்டும் சைனீஸ் பெண்ணுடன் உறவு கொண்டேன். இதை கமரூனியனுக்கு சொல்ல ஒரு நாள் இரவு அறைக்குள் வந்து என்னை கண்டபடி தாக்கினான். என்னால் அழக்கூட முடியவில்லை எல்லாரும் அவனுடைய ஆக்கள் என்னை பலி வாங்க வேண்டும் என்று முடிவெடுத்தான்.

நான் கழிவறையில் இருந்து வெளியில் வரும்வரை காத்திருந்து என்னை ஒரு சுவரோடு வைத்து அழுத்தி அவனது மொழியால் திட்டினான். என்னுடைய ஆடையை கிழித்து கத்தியால் வெட்டி எறிந்தான். பாய்ந்து வந்த வேறு சில கறுப்பர்கள் என்மீது தங்கள் கைகளால் என்னுடைய தலையை அழுத்து, இடித்து ஒரு உருளை வடிவ களியை என் தொண்டைக்குள் செலுத்தி வாயை பொத்தினார்கள். என்னால் மூச்சு எடுக்க முடியவில்லை தொண்டை அரிப்பெடுத்தது. பேய் அறைந்தது போல திரிய வெளிக்கிடேன். கஞ்சா அடிக்க ஆரம்பித்தேன்; அதற்கு அடிமையாகி பொருள் கிடைக்க வில்லையென்றால் கண்டதையும் உடைக்க வேண்டும் என்ற எண்ணம் வரும்.

ஒரு நாள் பில்லியாட் அறையில் உள்ள தடித்த கண்ணாடியை கைகளால்  உடைத்து சேதப்படுத்திவிட்டேன். இரத்தம் சிந்துவதை வதைக்கண்ட காவலாளி உடனடியாக என்னை வைத்தியசாலைக்கு கொண்டு செல்ல ஆம்புலன்ஸை அழைத்தார். மெடிக்கல் செக்கப் செய்வதற்கான நாட்கள் வந்தது. என்னுடைய உடலில் ஒரு வித நச்சு ஏறி இருப்பதாகவும் அது என்னுடைய மூளையை எதுவென்றாலும் செய்ய உற்சாகம் அளிக்கும் என்று வைத்திய சான்றிதழ் வந்தது. என்னை அறியாமலே எனக்குள்ளே மாற்றம் நிகழ்வதை அறிந்தேன்.

முதன் முதலாக தற்கொலை செய்ய வேண்டும் என்ற எண்ணம் தீவிரமடைந்தது. ஒரு  கனத்த நாள் அன்று நான் தற்கொலை செய்ய தூண்டப்பட்டு கையில் சவரக்கத்தியால் கீறி குருதியை வெளியேற்றினேன். என்னை அவசர சிகிச்சையில் அனுமதித்து நான்கு நாட்களின் பின்பு விடுவித்தார். சில வாரங்கள் செல்ல நான் அனுப்பிய கேஸ் எல்லாம் தோல்வியடைந்து. என்னை நாட்டுக்கு அனுப்பும் நிலைக்கு வந்துவிட்டேன். அங்கிருந்து தப்பி ஓடவேண்டிய நிலைமை வந்துவிட்டது. அப்போதுதான் நீண்ட நாட்களின் பின்பு என்னுடைய வீட்டுக்கு தொலைபேசியில் அழைத்து என்னை நாட்டுக்கு டிப்போட் செய்ய போறாங்கள் என்று சொன்னேன்.

நேரம் நள்ளிரவை நெருங்கிவிட்டது. பனித்தூறல்கள்  எங்களது முகத்தில் ஓங்கி அடித்தது. வெடுக்கென்று இருவரும் பால்கனியை விட்டு வெளியேறி அறைக்குள் சென்றோம். பெரிய அளவிலான கட்டிலில் இருவரும் எதிரெதிர் அமர்ந்து கொண்டோம். மேலும் சொல்ல ஆரம்பித்தேன். மம்மோது அவன் வீட்டுக்கு சொல்லி அழுத இரண்டாம் நாள் என்னை மாஸ்ட்டர் அழைத்து விஷயத்தை சீரியஸாக சொன்னார். அதனால் நான் இவனை இங்கு அழைக்க விரும்பினேன்.

தன்னுடைய மார்புக்கச்சையை சரிபடுத்திக்கொண்டு பின்னர் நடந்த கதையை கேட்க முயன்றாள் அலெக்ஸ்சா. மமோதுவை இங்கு அழைத்து வந்து அவனுக்கு தேவையானதை எல்லாம் ஒழுங்காக செய்து கொடுத்தேன். ஒரு நாள் என்னிடம் தான் கஞ்சா அடிக்க வேண்டும் வாங்க முடியுமா என்று கேட்டான். நான் இல்லை இங்கு யாரையும் தெரியாது என்றேன். வெடுக்கென்று பல்லை நறும்பிக்கொண்டு  “புண்டையும் மயிரும்” என்றான்.

அவனது முகத்தின் அத்தனை நரம்புகளும் நடுங்கின. எனக்கு கோபம் வந்தது. மத குருவைப்போல நடந்துகொண்டேன். அவனது குணம் மாறிச்செல்வதை உணர்ந்தேன்; தவறு செய்வதை உணர்ந்தேன். மீண்டும் இங்குள்ள பெயரில் மமோதுவை விட்டு விடுவோமா என்று யோசித்தேன்.

இரண்டு தலையணையை எனக்கு பின்னால் கட்டிலுக்கு முட்டுக்கொடுத்து அதன் பின்பு சரிந்தேன். அலெக்ஸ்சா கட்டிலின் விளிம்பில் இருந்து பேசிக்கொண்டிருக்கும் போது என் அருகில் வந்து தோள்களோடு சாய்ந்தாள். அவளது சூடான மூச்சுக்காற்று என்மீது நெருப்பைகொட்டியது. வெடுக்கென்று எழுந்த அலெக்ஸ்சா குளியறைக்குள் சென்று உடையை மாற்றும் சர சரப்பு வெளியில் கேட்டது. மெல்லிய மேலாடையை அணிந்துகொண்டு தனது சுருண்ட கேசத்தை சரிப்படுத்திக்கொண்டு வளுவளுப்பாக கால்களால்  அடியெடுத்து  வைத்து கட்டிலில்  பறவையைப்போல அமர்ந்தாள். இளமையின் மதமதப்பு அவளிடம் அடங்கவில்லை.

நான் வேகமாக சுவாசித்துக்கொண்டேன். அவளது இளமையின் முதல் பிரசவ காலத்தில் அவளை உணர்ந்தேன். தொடர்ந்து சம்பவங்களை சொல்ல விடாமல் அவளது இளமை துள்ளும் அழகு என்னைத்தடுத்தது. மீறி அவள் கதையை சொல்லும்படி செய்கையால் உணர்த்தினாள். ஒரு வேலை நாள் வழமைபோல என்னுடைய பணிக்கு சென்று விட்டேன். மம்மொதுக்கு தேவையான உணவை தாயார் செய்து வைத்து விட்டு வெளிக்கதவை அடைத்துவிட்டு  மாடிப்படிகளினால் இறங்கி வெளியேறிவிட்டேன். மத்திய உணவுக்கான இடைவேளையின் போது ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. அது போலீஸ் காவல் நிலையத்தில் இருந்து அவர்களது பேச்சில் அதட்டல் இருந்தது. எங்கு இருக்கிறாய் உடனடியாக உன்னுடைய வீட்டுக்கு வர வேண்டும் இல்லையென்றால் நாங்கள் வரவேண்டி வரும் என்று மிரட்டும் தொனியில் சொல்லி தொலைபேசியை நிறுத்தினார்கள்.

நான் உடனடியாக வண்டியை எடுத்துக்கொண்டு மமோதுவை அழைத்தேன். அவனது தொலைபேசி இயங்கவில்லை. பயம் என் உடலை நடுங்க செய்தது. வேகமாக எனது வீட்டு ஆவேன்யூவை அடைந்தேன்.

பொலிஸாருடை வாகனங்கள் அம்புலன்ஸ் வண்டிகள் சிவப்பு நிற ஒளியை பாய்ச்சியபடி அந்த இடத்தை அச்சமூட்டும் ஸ்தலமாக ஆக்கின. என்னுடைய அடுக்கு மாடிக்கு கீழ் சிவப்பு மஞ்சள் நிற பட்டிகளால் பாதுகாப்பு வேலி போட்டிருந்தனர். எங்கும் பரபரப்பு வாகனங்கள் போக்குவரத்து தடை; பொலிஸாரின் வாகனங்கள் அந்த சுற்றுவட்டத்தை சுற்றி கூவிக்கொண்டு திரிந்தன. நான் ஸ்தலத்தை அண்மித்த போது, போலீசார் என்னை அடையாளம் கண்டு கொண்டனர். என்னுடைய கையை குலுக்கி தொடர்ந்து விபரங்களை சொல்ல தொடங்கினார்.அடுத்த நாள் நான் வேலைக்கு போகவில்லை – போலீசார் விசாரணைக்கு அழைத்து இருந்தனர். மாமோது பல்கணி வழியே பாய்ந்து தற்கொலை செய்து தன் உயிரை மாய்த்துக்கொண்டான். அவன் கேட்ட போதை பொருளை வாங்கி கொடுத்து இருந்தால் இந்த தற்கொலை எண்ணம் அவனுக்கு வந்திருக்காது இல்லையா ? அலேக்ஸ்சா !

சட்டத்துக்கு புறம்பாக ஒரு இளைஞனை நான் அடைத்து வைத்து இருந்து இருக்கின்றேன் என ஆரம்பத்தில் போலீசார் என் மீது வழக்கை பதிவு செய்து இருந்தனர். அவனது கைவிரல் ரேகையை சோதித்த போலீஸ் அவன் சுவிஸில் இருந்து இங்கு வந்து பதுங்கு இருந்தான் அவனுக்கு அடைக்கலம் கொடுத்தது குற்றம் என தொடர்ந்து வழக்குகளை ஒன்றன் பின் ஒன்றாக அடுக்கிக்கொண்டு போனது. நான் தலை தூக்க முடியவில்லை என் கண்களில் இருந்து நீர் கசிவத்தின் கண்ட அலெக்ஸ்சா என்னை கட்டி அனைத்து முத்தமிட்டாள். அவளது மார்புச்ச்சூட்டில் என்னை விடுவிக்காமல் அதிலே குடிகொண்டேன். அவளை கட்டிலில் இருந்துகொண்டு முத்தமிட தொடங்கினேன். இடை மறித்து தனக்கு அடுத்த நாவல் அதற்கான கதை தயார் சென்றாள். அவளை விடுவித்து முகத்தைப்பார்த்தேன். அதுதான் நீ சொன்னாயே அதுதான். எனக்கு ஆச்சரியம் வாயை பிளந்துகொண்டு கட்டிலில் சரிந்தேன்.

என் மீது அவளது கைகளால் ஓவியம் வரைந்தாள் மெல்ல தன் மார்புகளால் உரச காமம் பீறிட்டது. மெல்ல காதுக்குள் ‘’டானியல் கடவுள் இல்லாத இடம் எது தெரியுமா சொல்லு பார்ப்போம் என்று தன் உதடுகளை ஈரப்படுத்திய படி   கேட்டாள். எனக்கு ஐடியா வரவில்லை. நீயும் நானும் புனருகின்றோமே இந்த அறையும் இந்த கட்டிலும் தான் என்று சொல்லி என் மீது ஏறி இயங்க ஆரம்பித்தாள். பெரிய பனிக்கட்டிகள் பல்கணி கண்ணாடி மீது தெறித்து வீழ்வதை காதுகள் கேட்டன.

ஏஜே.டானியல்

இலங்கையை தாயகமாகக் கொண்டு தற்சமயம் பிரான்ஸில் வசித்துவரும் ஏஜே.டானியல், சிறுகதைகள் தொடர்ச்சியாக எழுதிக்கொண்டு வருகிறார்

1 Comment

உரையாடலுக்கு

Your email address will not be published.