/

நந்தியாவட்டைப் பூக்கள்: தக்‌ஷிலா ஸ்வர்ணமாலி

தமிழில்: எம். ரிஷான் ஷெரீப்

எமது பரம்பரை வீட்டில் பெரியம்மா தனியாகத்தான் வசித்து வந்தாள். இருந்த போதிலும், அவள் ஒருபோதும் தனிமையை உணர்ந்ததாகவே தெரியவில்லை. அம்மாவுக்கென்றால் அடிக்கடி கோபம் வரும். ஆனால், பெரியம்மாவுக்கு ஏதேனும் ஒரு தருணத்தில் கூட, கோபம் வந்ததாக எனக்கு நினைவில்லை. மலைப் பாறையருகே இருந்த துறவிகள் மடத்தில் தியானித்துக் கொண்டிருக்கும் பெண் துறவியை விடவும் பெரியம்மா எப்போதும் சாந்தமாகக் காணப்பட்டாள். அவள் எந்தவொரு விடயத்திற்காகவும் பதற்றப்பட்டதேயில்லை. சுதர்மா அத்தையின் தென்னோலைக் கூரைக்கு யாரோ தீக்குச்சியை எறிய, கூரை படபடவென பற்றியெரிந்த போதும் கூட பெரியம்மா பதற்றப்படவில்லை. ‘இந்தப் பெரிய வீடு பற்றியெரிஞ்சாலும் இப்படித்தான் இருப்பா’ என்று அம்மா கத்தினாள். பெரியம்மா அதைக் காதில் வாங்கியதாகக் கூட காட்டிக் கொள்ளவில்லை.

பரம்பரை பரம்பரையாகப் பலரும் வாழ்ந்து மடிந்த எமது பெரிய பரம்பரை வீட்டின், சுவர்கள் அனைத்தும் தூய பால் வெள்ளை நிறத்தில் இருந்தன. அலங்காரங்கள் செதுக்கப்பட்டிருந்த தூண்களை சிறு வயதில் எனது இரண்டு கைகளால் கூட கட்டிப்பிடிக்க முடியாது. கூரையைச் சுற்றி வர திண்ணைத் தாழ்வாரத்தின் இறவானத்தில் பொருத்தப்பட்டிருந்த அலங்காரப் பலகைகள், பெரியம்மா பின்னும் நூல் சரிகையின் அலங்காரங்களைப் போலிருந்தன. அப் பரம்பரை வீட்டின் குளிர்ச்சியான சீமெந்துத் தரையில் ஒரு மணல் கூடக் காணப்படாது. பெரியம்மா எப்போதும் வீட்டைப் பெருக்கிக் கொண்டேயிருப்பது எனக்கு நினைவிருக்கிறது.

பரம்பரை வீட்டின் முற்றத்து மணல் எப்போதும் தென்னோலை அலங்கார வடிவில் பெருக்கப்பட்டிருக்கும். வேறு வேலைகள் எதுவுமற்றவள் போல பெரியம்மா மெதுமெதுவாக முற்றத்தை அலங்கார வடிவத்தில் பெருக்கிக் கொண்டேயிருப்பாள். பெரியம்மாவுக்கு அந்த வீட்டில் நிறைய வேலைகள் இருந்தன எனினும், அவள் அவற்றைப் பற்றி ஒருபோதும் அலட்டிக் கொள்ளவேயில்லை. ஏனைய பெண்களைப் போல வேலைகள் அதிகமெனக் கூறி ஒருபோதும் அவள் புறுபுறுத்துக் கொண்டிருக்கவில்லை. தோட்டத்தில் தேங்காய் பறித்த நாளில் கூட தேங்காய்கள் அனைத்தையும் ஒன்று திரட்டிக் குவித்து வைக்கும் பெரியம்மா பட்டை, பாளைகளையும் சேகரித்து வைப்பாள். பின்னர், சின்னஞ்சிறு பட்டை, பாளைகளை ஒன்று சேர்த்துக் கட்டி, அக் குவியல்களை எனது கையில் தந்து கிராமத்திலிருந்த ஒவ்வொரு வீட்டுக்கும் விறகுக்காகக் கொடுத்தனுப்புவாள்.

தேங்காய்களை விற்றுக் கிடைக்கும் பணத்தை பெரியம்மா, எனது அம்மாவிற்கும், சித்திக்கும், மாமாவுக்கும் சமமாகப் பகிர்ந்து கொடுக்கிறாள் என்று எனது அப்பா கூறுவதை நான் கேட்டிருக்கிறேன். பெரியம்மா, தேங்காய் விற்ற பணத்தைக் கொடுத்த மறுநாள், அப்பா, அம்மாவுக்குத் தெரியாமல் பெரியம்மாவுக்குத் துணி வாங்கிக் கொடுத்த போது, திரைச்சீலை மறைவில் நானும் இருந்ததை அப்பா காணவில்லை.

“தங்கச்சிக்கிட்ட இதைச் சொல்லாம இருந்தாப் பரவாயில்ல” என்று கூறியவாறுதான் அப்பா, பெரியம்மாவிடம் துணியைக் கொடுத்தார். பெரியம்மா மிகவும் அடக்கமாக, மெலிதாகப் புன்னகைக்க மாத்திரமே செய்தாள். அப்பா சொன்னாலும், சொல்லாவிட்டாலும் கூட பெரியம்மா இவற்றையெல்லாம் அம்மாவிடம் கூறிக் கொண்டிருக்கப் போவதில்லை. பெரியம்மா, தான் கொடுத்தவை குறித்தும், தனக்குக் கிடைத்தவை குறித்தும் எவரிடமும் கூறப் போவதேயில்லை. எது கிடைத்தாலும், கிடைக்காவிட்டாலும் அவளுக்கு அது ஒரு பொருட்டேயல்ல. அவள் எவ்விதக் கணக்கு வழக்குமின்றி கையில் கிடைத்ததையெல்லாம் அனைவருக்கும் பகிர்ந்தளித்தாள் என்றே எனக்குத் தோன்றுகிறது.

எமது உறவினர்கள் பெரியம்மாவைப் பார்த்துப் போக எப்போதாவதுதான் வருவார்கள். எனினும் நான், தினமும் பள்ளிக்கூடம் விட்டு வீட்டுக்கு வந்ததுமே பெரியம்மாவின் வீட்டுக்குத்தான் போவேன். பள்ளிக்கூடத்தில் தந்த வீட்டு வேலைகளை பெரியம்மாவிடம் கேட்டுப் படிக்கச் செல்வதாகச் சொல்லிவிட்டு, புத்தகப் பொதியையும் எடுத்துக் கொண்டு எமது பரம்பரை வீட்டுக்குப் போகும்போது அம்மா அதற்குத் தடை விதிப்பதில்லை. நான் வீட்டில் இல்லையென்றால் இரண்டு மூன்று வேலைகள் தனக்குக் குறைவதாக அம்மாவுக்குத் தோன்றியிருக்கக் கூடும். நான் புத்தகங்களைச் சுமந்து கொண்டு பெரியம்மா வீட்டுக்குப் போனாலும் அங்கே நான் பள்ளிக்கூட வேலைகளைச் செய்ததே இல்லை. பள்ளிக்கூட வேலைகளை பள்ளிக்கூடத்திலேயே செய்தால் போதுமானது என்றாள் பெரியம்மா. அவற்றை மிகவும் எளிதாகவும், இலகுவாகவும், தெளிவாகவும் அவள் கற்பித்தாள். அதைத் தவிர்த்து எனக்கு வேறெந்த தொந்தரவையும் அவள் தந்ததில்லை.

மழை நாட்களில் பரம்பரை வீட்டின் நிலாமுற்றத்தில் அமர்ந்திருக்கும்வேளையில் என்னை எழுந்து உள்ளே வரச் சொல்லி பெரியம்மா ஒருபோதும் திட்டியதேயில்லை. என்னை அப்படியே மழையில் நனைய விட்டுவிட்டு, தடிமன் பிடித்தால் இஞ்சியும், கொத்தமல்லியும் இட்டுக் கொதிக்க வைத்த தண்ணீரில் சீனி கலந்து பருக்கி விடுவாள். பூனைக் குட்டிகளை சுமந்து திரிய வேண்டாம் என்று  பெரியம்மா என்னிடம் ஒருபோதும் கட்டளையிட்டதில்லை. அவள் பூனைக்குட்டிகளை மாத்திரமல்ல, பெரிய பூனைகளையும் தூக்கி அரவணைத்துக் கொண்டிருப்பாள். பூனைக்குட்டிகளிடத்தில் விநோதமான ஒரு வாசனை இருக்கிறதென நான் கூறியதை ஏற்றுக் கொண்டவள் பெரியம்மா மாத்திரம்தான்.

பெரியம்மா அப் பரம்பரை வீட்டின் திண்ணைப் படிக்கட்டில் அமர்ந்திருக்கும்போது அவளுக்குப் பின்னால் நின்று கொண்டு அவளது நீண்ட கூந்தலை வாரி விடுவதை நான் மிகவும் விரும்பினேன். பெரியம்மாவின் கூந்தலிடையே வெண்ணிற நரை முடிகள் சில இருந்தன. அப்பா தாடி மழிக்கும்போது மீசையிலிருக்கும் வெண்ணிற முடிகளைத் தேடித் தேடி வெட்டுவதை நான் கண்டிருக்கிறேன். பெரியம்மா தனது நரை முடிகளைப் பற்றிக் கவலைப்பட்டதை நான் கண்டதேயில்லை. முற்றத்திலிருந்த நந்தியாவட்டை செடியிலிருந்த பூக்கள் அளவுக்கு பெரியம்மாவின் கூந்தல் ஆங்காங்கே நரைத்திருந்தது.

பரம்பரை வீட்டு முற்றத்திலிருந்த நந்தியாவட்டை செடியில் பூக்கள் நிறைந்திருந்தன. செடியின் கீழே கம்பளம் விரித்தது போல பூக்கள் எப்போதும் உதிர்ந்து கிடக்கும். பெரியம்மா ஒருபோதும் பூக்களைப் பெருக்கி அகற்றுவதில்லை. நந்தியாவட்டை செடியின் கீழே அமர்ந்திருந்து, பெரியம்மா தரும் பையில் பூக்களைச் சேகரித்துக் கொடுப்பதை நான் மிகவும் விரும்பினேன். நான் சேகரிக்கும் பூக்களைக் கொண்டு பெரியம்மாவும், நானும் கோர்க்கும் மாலையை எனது வீட்டுக்கு எடுத்துச் செல்லும்போதெல்லாம் அம்மா எங்களைப் “பைத்தியங்கள்” என்பாள். அப்பா அந்தப் பூமாலைக்காக கோபிக்காததும், அம்மா அந்தளவுக்குக் கோபப்பட்டதும் ஏனென்று எனக்கு விளங்கவேயில்லை.

ஒரு நாள் திடீரென அம்மா என்னையும் கூட்டிக் கொண்டு பெரியம்மாவைப் பார்க்கப் போனாள். அன்று எம்முடன் இன்னும் யாரெல்லாமோ அந்த வீட்டில் இருந்தார்கள். அதிலொருவர் கறுப்பு கோட் அணிந்து, கையில் ஊன்றுகோலையும் வைத்திருந்தார். அவரது மீசையை எனக்குப் பிடிக்கவேயில்லை. நாங்கள் பரம்பரை வீட்டுக்குச் சென்ற பிறகு அதிகமாகக் கதைத்துக் கொண்டவர்கள் எனது அம்மாவும், அவரும்தான். பெரியம்மா எதுவுமே கதைக்கவில்லை. அவள் கதைப்பதற்குப் பதிலாக அனைத்தையும் கேட்டுக் கொண்டிருந்திருக்கக் கூடும். பெரியம்மா எப்போதுமே அதிகமாகக் கதைக்கக் கூடியவளில்லை. எனினும் அவள் தொலைவில் ஒலிக்கும் சிறு பட்சிகளின் ஓசைகளைக் கூடக் கேட்டுக் கொண்டிருப்பாளென எனக்குத் தோன்றியது.

பெரியம்மா அனைத்தையும் அமைதியாகக் கேட்டுக் கொண்டிருந்து விட்டு “தங்கச்சிக்கிட்ட பிறகு முடிவைச் சொல்லி அனுப்புறேன்” என்று மாத்திரம் சொன்னாள். அதுவரையில் எந்தவொரு அயலவருடனோ, உறவினருடனோ, அந்த வீட்டுக்கு வந்துபோன தெரிந்தவர், தெரியாதவரிடமோ கோபப்பட்டிருக்காத பெரியம்மா அன்று அந்தக் கறுப்புக் கோட்காரரிடம் மாத்திரம் முகத்தைச் சுளித்துக் கொண்டிருந்தது ஏனென்பது எனக்கு விளங்கவில்லை. எனினும் அவள் அவருக்கும், அம்மாவுக்கும், எனக்கும் நன்றாகச் சீனி இட்டு, இஞ்சித் துண்டொன்றை இடித்துப் போட்ட சாயத் தேநீரைக் குடிக்கத் தந்தாள். பிறகு அவள் என்னை மாத்திரம் சமையலறைக்கு அழைத்துப் போய் எள்ளுருண்டையொன்றையும் தந்தாள். அது அவள் பலகாரங்களை இட்டிருந்த போத்தலின் அடியில் எஞ்சியிருந்த ஒரேயொரு எள்ளுருண்டை.

மறுநாள் மாலை நேரம் அப்பா தனியாக அந்தப் பரம்பரை வீட்டுக்குச் செல்வதை நான் கண்டேன். நானும் இயன்ற வரையில் வேகமாகப் போய் அப்பாவை நெருங்கினேன். அப்பா என்னைக் கண்டும் காணாதவர் போலச் சென்றார். ஒருவேளை அவர் வேறேதும் சிந்தனையில் ஆழ்ந்திருந்திருக்கக் கூடும். அப்பா திண்ணை வழியே படிகளிலேறிச் செல்லும்போது நான் கொல்லைப்புறமாகச் சென்று அப்பா வந்திருப்பதாக பெரியம்மாவிடம் எத்தி வைத்தேன். பெரியம்மா, தான் பிளந்து கொண்டிருந்த விறகுக் கட்டையை அவ்வாறே கிடக்க விட்டுவிட்டு, கோடாரியைக் கொண்டு போய் பின்னால் வைத்தாள். பிறகு மெதுவாக வீட்டுக்குள் போனாள். அப்பாவிடம் காணப்பட்ட பரபரப்பு,  அவளிடம் காணப்படவில்லை. வழமையாக பரம்பரை வீட்டுக்கு வரும்போதெல்லாம் தாழ்வாரத்திலேயே அமர்ந்திருக்கும் அப்பா அன்று சமையலறைக்கே வந்து, பெரியம்மா காய்கறி நறுக்கும்போது அமர்ந்து கொள்ளும் பலகை வாங்கின் மீது அமர்ந்து கொண்டார். பெரியம்மா கூட தேங்காய் துருவப் பயன்படுத்தும் துருவுபலகையை எடுத்து அதில் அமர்ந்து கொள்வதைக் கண்டேன். அவ்வாறு இருவரும் அமர்ந்து கொண்டது ஏதோவொரு பெரியதொரு உரையாடலுக்காகத்தான் என்பது, நிறைய விடயங்கள் விளங்காத எனக்குக் கூட விளங்கியது.

அன்று மொத்த உலகமுமே இடிந்து போய் விட்டது போல அப்பா காணப்பட்டார். பெரியம்மாவின் முகத்தில் அந்தளவு பதற்றம் காணப்படாத போதிலும், அவளும் ஆழ்ந்த சிந்தனையில் மூழ்கியிருந்தாள். பெரியம்மாவின் கழுத்து வழியே ஊர்ந்து வடிந்த வியர்வைத் துளியை அப்பா தனது விரல்களால் துடைத்து விட்டார். ஒருபோதும் அழுதிராத பெரியம்மாவின் கண்களில் அன்று கண்ணீர் நிரம்பியிருந்தது. அது ஏனென பெரியம்மாவும், அப்பாவும் மாத்திரமே அறிவார்கள்.

“எனக்குப் பிடிச்சிருக்குன்னு தகவல் அனுப்பச் சொல்லி தங்கச்சிக்கிட்ட சொல்லுங்க” என்று கூறிய பெரியம்மா நீண்ட பெருமூச்சு விட்டாள்.

அப்பா எழுந்து சமையலறை வாசலால் வெளியே வந்து என்னைத் தூக்கிக் கொண்டு போகத் திரும்பினார்.

“குழந்தை இருக்கட்டும். தினமும் தவறாம அவளை அனுப்பி வைங்க” என்ற பெரியம்மா, அப்பாவின் கைகளிலிருந்து என்னை வாங்கிக் கொண்டாள்.

அப்பா எனதும், பெரியம்மாவினதும் தலையைத் தடவி விட்டுப் போய் விட்டார். பெரியம்மா ஒருபோதும் செய்திராத அளவுக்கு என்னை இறுக்கமாக அணைத்துக் கொண்டாள். தனது கைகளிலிருந்து நழுவப் பார்ப்பதைப் பாதுகாக்கும் பொருட்டு இறுக்கமாகப் பற்றிப் பிடித்துக் கொள்வதைப் போல பெரியம்மா என்னை அரவணைத்துக் கொண்டிருந்தாள்.

சில தினங்களுக்குப் பிறகு எமது உறவினர்கள் ஒன்றிணைந்து அப் பரம்பரை வீட்டுக்குச் சுண்ணாம்பு பூசவும், வீட்டைத் துப்புரவாக்கவும் தொடங்கியிருந்தார்கள். எனினும் அவ் வீட்டில் புதிதாகத் துப்புரவாக்க எதுவும் இருக்கவில்லை. பெரியம்மா அந்தளவு தூய்மையாக அந்த வீட்டையும், முற்றத்தையும், தோட்டத்தையும் வைத்திருந்தாள். தென்னை மரத்தின் வேரைச் சுற்றி வர தேங்காய் மட்டைகளை அடுக்கி வைத்தும், சில தேங்காய் மட்டைகளைக் காய வைத்து விறகுக் கொட்டிலில் அடுக்கி வைத்தும், என்னால் சுமக்க முடியாதளவுக்குப் பாரமான மண்வெட்டியைச் சுமந்து புற்புதர்களைப் பிடுங்கிக் கொண்டும் பெரியம்மா அனைத்தையும் தனியாகவே செய்து வந்தாள். அப் பரம்பரை வீட்டில் ஒட்டடையோ, தூசோ இருக்கவில்லை. தூய வெண்ணிறச் சுவர்களில் ஒரு துளி கூட அழுக்கிருக்கவில்லை. சித்திரைப் புத்தாண்டு கூட அண்மையில் இல்லை எனும்போது திடீரென உறவினர்கள் ஒன்று சேர்ந்து இவ்வளவு அவசரமாக எதற்கு இவற்றையெல்லாம் செய்து கொண்டிருக்கிறார்கள் என எனக்கு விளங்கவில்லை.

பெரியம்மா மாத்திரம் எவ்வித உற்சாகமோ, சுறுசுறுப்போ, களையோ, பரபரப்போ இன்றி மிகவும் கவலையுடன் காணப்பட்டாள். ஏனைய நாட்களில் மிகவும் பிரகாசமாக மின்னும் அவளுடைய கருணையும், பாசமும் மிளிரக் கூடிய கண்கள் அன்று வெறுமையாகக் காணப்பட்டன. அவள் பார்த்த இடத்தையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தாளே தவிர, வேலை செய்து கொண்டிருந்த உறவினர்களுக்கு கொஞ்சம் சாயத் தேநீரை ஊற்றிக் கொடுக்கக் கூட முன்வரவேயில்லை. அம்மாவும், சித்தியும்தான் அந்த வேலைகளைச் செய்தார்கள். பெரியம்மாவைப் போலவே அன்றைய தினத்தை சோகத்தோடு முகம் கொடுத்த மற்றுமொருவரும் இருந்தார். அவர், எனது அப்பா.

அங்கிங்கென ஓடியாடி வேலைகள் செய்து களைத்த உறவினர்கள், சில தினங்களுக்குப் பிறகு பல வர்ணங்களிலான பகட்டான புதிய ஆடைகளை அணிந்து கொண்டு அப் பரம்பரை வீட்டில் ஒன்று திரண்டார்கள். வண்ண வண்ணப் பந்துகள் வரையப்பட்டிருந்த துணியிலான ஆடையொன்றை அம்மா எனக்கும் அணிவித்து விட்டிருந்தாள். அந்த கவுணை அதற்கு முன்னர் ஒரேயொரு தடவைதான் அணிந்திருந்தேன். அது பிஸோ அத்தையின் திருமண வைபவத்தின் போது. அதே கவுணை அம்மா திரும்பவும் எனக்கு அணிவித்த போது, எமது பரம்பரை வீட்டிலும் ஒரு திருமண வைபவம் நடக்கப் போவதாக நான் நினைத்தேன். எப்போதும் வீட்டில் சாதாரணமாக உடுத்திருக்கும் ஆடையோடு அந்தப் பரம்பரை வீட்டுக்குப் போகப் பழகியிருந்த நான், அன்று காலுறை, சப்பாத்துகள், சுருக்கிட்டுத் தைக்கப்பட்ட வண்ண வண்ணப் பந்துகள் அலங்காரம் கொண்ட கவுண் ஆகியவற்றை அணிந்து, வண்ண வண்ண ரிப்பன்களால் அலங்கரிக்கப்பட்ட கொண்டைப் பின்னும் சூடிக் கொண்டுதான் பரம்பரை வீட்டுக்குச் சென்றிருந்தேன்.

அன்றைக்கு பரம்பரை வீட்டுக்குப் போகும்போது வழி நெடுகவும் அப்பா, அம்மாவைத் திட்டிக் கொண்டே நடந்தார்.

“உனக்கு இதைத்தானே செய்ய வேண்டி இருந்துச்சு. நான் பெரியக்காவை நெருங்குறதை நிறுத்த நினைச்சுக்கிட்டுத்தான் நீ இந்தக் கூத்தையெல்லாம் பண்ணிட்டு இருக்கேங்குறது எனக்குத் தெரியாதுன்னு நினைக்காதே.”

அம்மாவின் முகத்தில் நக்கல் சிரிப்பொன்று மாத்திரம் இருந்தது. ஏதோ ஆட்சி அதிகாரத்தைப் பிடித்தவள் போல அம்மா கம்பீரமாக அடி வைத்து நடந்தாள்.

அப்பா, பெரியம்மாவை நெருங்குவதை இந்த அம்மா நிறுத்தப் பாடுபடுவது ஏன்? அவ்வாறெனில் நான் கூடத்தான் பெரியம்மாவோடு நெருக்கமாக இருக்கிறேன், இல்லையா? என்றாலும், ஒவ்வொரு நாளும் அந்தி வேளைகளில் அம்மா என்னை அவளின் பரம்பரை வீட்டுக்கு விருப்பத்தோடுதான் அனுப்பி வைத்தாள். ஒருவேளை எனக்கு எதற்காக பெரியம்மாவைப் பிடிக்கின்றதோ அதற்காகவே அப்பாவிற்கும் அவளைப் பிடித்திருக்கக்கூடும்.

பெரியம்மா எப்போதும் மென்மையாகத்தான் அடியெடுத்து வைத்து நடப்பாள். கதைப்பது கூட மிருதுவாகத்தான். நந்தியாவட்டைச் செடியையும், நிலாமுற்றத்தையும், பூனைக் குட்டிகளையும் என்னைப் போலவே அவளும் விரும்பினாள். என்னை மடியில் அமர்த்தி வைத்து ராஜா, ராணி பழங்கதைகளைக் கூறுவாள். அவள் ஒருபோதும் என்னிடம் கடுமையாக நடந்து கொண்டதில்லை. ஏதாவது குறும்புத்தனம் செய்து விட்டு அம்மாவிடமிருந்து தப்பி ஓடி வரும்போது என்னைக் காப்பாற்றும் தந்திரம் அவளுக்கு மட்டுமே தெரியும்.

எப்போதாவது எமது பரம்பரை வீட்டுக்கு அடியெடுத்து வைக்கும் உறவினர்கள் அன்றைக்கு அந்த வீட்டில் நிறைந்திருந்தார்கள். தினந்தோறும் பரம்பரை வீட்டுக்குப் போய் வந்த நான், அன்று யார் கண்ணுக்கும் தென்படவில்லை. அந்தக் கூட்டத்தினிடையே நான் பெரியம்மாவைத் தேடினேன். கடைசியில் ஒருவாறு அவளைக் கண்டுகொண்டேன். ஏனைய நாட்களில் கற்பூர வாசனையடிக்கும் சட்டங்களிடப்பட்ட பருத்தித் துணியும், மெல்லிய நிறத்திலான நீண்ட கைகளையுடைய சட்டையும் அணிந்து, தலைமுடியை சீராக வாரி, கூந்தலை ஒரு பந்து போலச் சுருட்டி கொண்டை கட்டி, செருப்போ, முத்து மாலையோ அணியாமல் வெறுமையாக இருக்கும் பெரியம்மாவை அன்று என்னால் அடையாளம் காணவே முடியவில்லை. அவளது கூந்தலில் ஏதேதோ பூக்கள் சொருகப்பட்டிருந்தன. அவளது உடலில் அலங்காரமான சேலையொன்று சுற்றப்பட்டு, பலவித ஆபரணங்களும் அணிவிக்கப்பட்டிருந்தன. வழமையாக பவுடர் கூடத் தடவாத பெரியம்மாவின் முகத்தில் அன்று ஒரு அடுக்கு பவுடர் தடவப்பட்டிருந்தது. ஏனைய நாட்களில் காணப்படும் நரை முடிகள் கூட அன்றிருக்கவில்லை.

பெரியம்மா மிகவும் அசௌகரியத்தோடு இருக்கிறாள் என்பதை நான் உணர்ந்தேன். வந்திருந்த அனைவரும் அன்று பெரியம்மா மிகவும் அழகாக இருந்ததாகச் சொன்னார்கள். எனக்கென்றால் பெரியம்மா ஏனைய நாட்களில்தான் அழகாக இருப்பாள் எனத் தோன்றியது. அப்பாவுக்கும் கூட அப்படித்தான் தோன்றியிருக்கும்.

அதிர்ந்து போய் பெரியம்மாவையே பார்த்துக் கொண்டிருந்த நான், அவளுக்கு அருகில் அமர்ந்திருந்த அந்நிய நபரை பிறகுதான் கண்டேன். அந்த வீட்டிலிருந்த அறிமுகமற்ற பிற மனிதர்கள் இவருடன் வந்தவர்களாக இருக்கக் கூடும். இவரையும் எனக்கு யாரென்று தெரியவில்லை.  அந்த நபர், மெலிந்து உயரமாக வெளிறிப் போய் ஒரு சோம்பேறி போல காணப்பட்டார். அருகில் சென்று அந்த ஒல்லிப்பிச்சானைத் தொட்டுப் பார்க்க வேண்டும் போல எனக்குத் தோன்றியது. எனினும், அவரை விட்டு, பெரியம்மாவின் அருகில் செல்லுமளவிற்குக் கூட எனக்கு அன்று தைரியம் இருக்கவில்லை. அந்தப் பரம்பரை வீட்டில் பெரியம்மாவின் மடியிலேயே எப்போதும் அமர்ந்திருந்த எனக்கு, அதே வீட்டிலேயே பெரியம்மா எந்தளவு தொலைவாகப் போய்விட்டாள் என்று தோன்றியது.

திருமணப் பதிவாளர் என்று கூறப்பட்ட நபரைச் சுற்றி அனைவரும் அமர்ந்திருந்து ஏதேதோ செய்து முடித்து விட்டு, கூடியிருந்தவர்கள் உண்டு, குடித்து முடித்த பிறகுதான் அன்றைய அந்தப் பரபரப்பு முடிவுக்கு வந்தது. பெரும் யுத்தமொன்று முடிவுற்றதைப் போல, இறுதியில் அனைவரும் கலைந்து சென்றார்கள்.

பெரியம்மாவும், நானும், அப்பாவும், அப் புதிய மாமாவும் மாத்திரம் அந்த வீட்டில் எஞ்சியிருந்தோம். புதிய மாமாவும், அப்பாவும் உரையாடிக் கொண்டிருக்கும்போதே பெரியம்மா என்னையும் கூட்டிக் கொண்டு அறைக்குப் போய், அனைத்து அலங்காரங்களையும் களைந்து உடுத்தாடையொன்றை அணிந்து கொண்டாள். என்னுடன் தோட்டத்தில் கீழேயிருந்த வயல் கிணற்றுக்குப் போய் வேண்டிய மட்டும் நீரை அள்ளி அள்ளிக் குளித்தாள். பிறகு என்னையும் குளிப்பாட்டி, துண்டொன்றை அணிவித்து விட்டவள், தான் கழுவிய துணி மூட்டையையும், என்னையும் தூக்கிக் கொண்டு வீட்டுக்கு வந்து சேர்ந்தாள். ஒரு வார்த்தை கூடக் கதைக்காமல்தான் அவள் இவையனைத்தையும் செய்தாள். மீண்டும் ஒருபோதும் அவள் என்னுடன் கதைக்க மாட்டாளோ என்று அச்சுறுத்தக் கூடிய அளவுக்கு அவள் அமைதியாகக் காணப்பட்டாள். அன்று அவள் ஆழ்ந்த சிந்தனையில் மூழ்கி இருந்திருக்கக் கூடும்.

“ஆஹ்! நீ குளிச்சிட்டியா? நான் உன்னோட சேர்ந்து குளிக்கப் போக நினைச்சுட்டிருந்தேன்” என்று பெரியம்மாவிடம் கூறினார் அந்தப் புதிய மாமா. பெரியம்மா அதைச் செவிமடுக்காததைப் போல பாவனை செய்தாள்.

“அண்ணாவுக்கு நான் வீட்டுக் கிணத்திலருந்து தண்ணியிழுத்துத் தாறேன். உடம்பைக் கழுவிக்குங்க.” என்றார் அப்பா.

“வேணாம் தம்பி. நீங்க இருங்க. நான் தண்ணியள்ளிக் குளிச்சுக்குறேன்” என்று அப்பாவிடம் கூறிய புதிய மாமா தாழ்வாரத்திலிருந்து நீங்கிச் சென்றார். பெரியம்மா தாழ்வாரத் திண்ணைக்கு வந்து வழமை போலவே படிக்கட்டின் மீது அமர்ந்து கொண்டாள். வழமையாகப் பெரியம்மாவின் அருகிலேயே அமர்ந்து கொள்ளும் அப்பா, அன்று அருகில் அமராது சாய்வு நாற்காலியில் அமர்ந்து சாய்ந்து கொண்டார்.

“தங்கச்சிக்காகத்தான் நான் இதுக்கு சம்மதிச்சேன். நீங்க ரெண்டு பேரும் என்னால பிரிஞ்சீங்கன்னா இந்தக் குழந்தையோட எதிர்காலம் என்னாகும்? எனக்குன்னா முன்னாடி இருந்தது போலவே தனியா இருக்குறதுதான் பிடிச்சிருக்கு.”

“எனக்குப் புரியுது. தனியா இருக்கீங்கன்னு நாங்க உங்களுக்கு எந்தக் குறையும் வைக்கப் போறதில்ல. உங்களுக்கு ஏலாமப் போற காலத்துல இந்தக் குழந்தை உங்களைப் பார்த்துக்குவா. நான் எப்படியும் உங்களைத் தனியா விடப் போறதில்லன்னுதான் நினைச்சிட்டிருந்தேன்.”

அப்பாவும், பெரியம்மாவும் எங்கேயோ வெறித்துப் பார்த்தவாறு, பெருமூச்சுடன் கதைத்துக் கொண்டிருந்தார்கள். புதிய மாமா குளித்து விட்டு வந்ததும், அப்பா என்னையும் தூக்கிக் கொண்டு, புறப்படுவதற்காக வெளியே வந்தார்.

“ஐயோ… குழந்தையை விட்டுட்டுப் போங்க.”

“குழந்தையை இன்னிக்கு விட்டுட்டுப் போறதெப்படி? நீங்க மனசைத் தேத்திக்குங்க.”

அப்பா என்னைத் தூக்கிக் கொண்டு, பரம்பரை வீட்டிலிருந்தும் தொலைவாகச் சென்றார். நான் அப்பாவின் தோள் வழியே பெரியம்மாவையே பார்த்துக் கொண்டிருந்தேன். பெரியம்மா கொஞ்சம் கொஞ்சமாக சிறிதாகிக் கொண்டே போனாள். நான் பெரியம்மா தென்படாத தொலைவுக்குச் செல்லும் வரைக்கும் கூட பெரியம்மா, அந்த இடத்திலேயே நின்று கொண்டு எம்மைப் பார்த்துக் கொண்டிருந்தாள்.

அதன் பிறகு இரண்டு மூன்று தினங்கள் கழியும் வரைக்கும் நான் பரம்பரை வீட்டுக்குப் போவதற்கு அம்மா அனுமதிக்கவில்லை. பெரியம்மாவுக்கும், புதிய மாமாவுக்கும் தொந்தரவளிக்கக் கூடாதென அவள் சொன்னாள். அப்பா, என்னையும் கூட்டிக் கொண்டு அங்கு செல்ல மிகவும் விரும்பினார் என்பதை நான் உணர்ந்தேன். அம்மாவுக்குத் தெரியாமல் திருட்டுத்தனமாகவாவது பரம்பரை வீட்டுக்குப் போக நான் நினைத்திருந்த வேளையில் புதுமையான சம்பவமொன்று நிகழ்ந்தது.

பெரியம்மா அவசர அவசரமாக எமது வீட்டுக்கு வந்தாள். அவள் தனியாகத்தான் வந்திருந்தாள். அவள் வந்ததை புதிய மாமா கூட அறிந்திருக்க மாட்டார். பெரியம்மா வேலியைக் கடந்து வரும்போதே, நான் அவளருகே ஓடிச் சென்றேன். பெரியம்மா என்னைத் தூக்கிக் கொண்டு வீட்டுக்குள் நுழைந்தாள்.

“பொண்ணு, மாப்பிள ரெண்டு பேரும் சேர்ந்துதானே வந்திருக்கணும்” என்றாள் அம்மா. யார் என்ன சொன்னாலும், செய்தாலும் தவறாக நினைக்காத பெரியம்மா, அம்மா சொன்னதைக் கேட்டு கோபப்படவில்லை.

“நான் குழந்தையைக் கூட்டிட்டுப் போக வந்தேன்” என்ற பெரியம்மா என்னையும் தூக்கிக் கொண்டு உடனடியாக புறப்படத் தயாரானாள்.

அப்பா ஒரு வார்த்தை கூடக் கதைக்கவில்லை. அம்மாவும் எதற்கும் சலனப்பட்டதாகக் காட்டிக் கொள்ளவில்லை. பெரியம்மா என்னைத் தூக்கிக் கொண்டு போய் பரம்பரை வீட்டின் படிக்கட்டில் அமர்ந்து என்னை மடியிலமர்த்திக் கொண்டாள். பின்னர், எனது தலையில் பேன் பார்க்கத் துவங்கினாள்.

“மாமா எங்க?”

“எந்த மாமா, மகளே?”

“புதிய மாமா.”

“அவர் மாமா இல்ல மகளே. உன்னோட பெரியப்பா.”

அவர் எவராக இருந்தாலும் பரவாயில்லை. கல்யாண வீடு போலக் களை கட்டியிருந்த பெரியம்மாவின் முகம் சாவு வீடு போல ஆனது மாமாவோ பெரியப்பாவோ, அந்த ஆள் வந்த நாள் தொடக்கம்தான்.

“பெரியப்பா தோட்டத்துல தென்னை மரங்களச் சுற்றி கொத்திக் கொண்டிருக்குறார்” என பெரியம்மா பேன் பார்த்துக் கொண்டே கூறினாள்.

நான் தலை திருப்பி பரம்பரை வீட்டின் உள்ளே பார்த்தேன். அந்த ஓரிரு நாட்களுக்குள் சுவரில் ஒட்டடை கட்டியிருந்தது. தரையில் மணல் மிதிபட்டது. அந்த வைபவத்துக்கு முன்னர் நேர்த்தியாக வைக்கப்பட்டிருந்த பொருட்கள் அனைத்தும் அன்று ஆங்காங்கே விசிறப்பட்டுக் கிடந்தது. பெரியம்மா முற்றத்தைப் பெருக்கியிருந்தது கூட தென்னோலை அலங்கார வடிவமாக இருக்கவில்லை. வேண்டாவெறுப்பாக முற்றத்தை ஒவ்வொரு திசையிலும் பெருக்கியிருந்தாள். குப்பை கூளங்கள் முற்றத்தின் மத்தியிலேயே குவிக்கப்பட்டு அகற்றப்படாதிருந்தன. நான் நந்தியாவட்டைச் செடியைப் பார்த்தேன். ஏனைய நாட்களைப் போலவே நந்தியாவட்டைச் செடி பூக்கள் நிறைந்து காணப்பட்டது. எனினும், ஏனைய நாட்களில் மரத்தின் கீழிருக்கின்ற நந்தியாவட்டைப் பூக் கம்பளத்தை அன்று காணவில்லை.

“பூ மரத்துக்குக் கீழ வழமையா விழுந்து கிடக்கும் பூக்களெல்லாம் எங்க பெரியம்மா?”

“நான் அதையெல்லாம் கூட்டிப் பெருக்கிட்டேன் மகளே.”

உண்மைதான். நந்தியாவட்டைப் பூக்கள் எல்லாம் முற்றத்தின் மத்தியிலிருந்த குப்பைக் குவியலில் கிடந்தன.

தான் தனியாக இருந்தபோது தோன்றியிராத தனிமையை, திருமணம் முடித்த பிறகு பெரியம்மா உணர்ந்திருக்கக் கூடும். அதனால்தான், புதிய மாமாவும், அம்மாவும் பலவிதமாகப் பழி சொன்ன போதிலும் பெரியம்மா அடிக்கடி எங்கள் வீட்டுக்கு வந்து என்னைத் தூக்கிக் கொண்டு பரம்பரை வீட்டுக்குப் போயிருக்க வேண்டும். போகப் போக அநேக தினங்களில் இரவு விடியும் வரைக்கும் கூட என்னை அந்தப் பரம்பரை வீட்டிலேயே வைத்திருக்க பெரியம்மா பழகியிருந்தாள். அந்த பரம்பரை வீடும், பெரியம்மாவின் மனதும் பாழடைந்த மயானம் போலத்தான் என எனக்குத் தோன்றியது.

தொடக்க நாட்களில் அப்பா நெருங்கி வரும்போதெல்லாம் விளங்காதது போலவும், உணராதது போலவுமிருந்த பெரியம்மா, நாளாக நாளாக, அப்பா தனியாக இறப்பர் மரங்களில் பால் வெட்டப் போகும்போதெல்லாம், நந்தியாவட்டைப் பூ மொட்டைப் போன்ற புத்துணர்வோடு அப்பாவுக்கென என்னுடன் தேநீர் எடுத்துச் செல்லத் தொடங்கியிருந்தாள். என்னை அணைத்துக் கொண்டிருந்ததற்கு மேலதிகமாக, பெரியம்மா மிகவும் விருப்பத்தோடு செய்த ஒரேயோரு காரியம் அதுதான்.

எவ்வாறாயினும், பெரியம்மா முன்பு போலவே பௌர்ணமி நிலா வெளிச்சம் பரவியிருக்கும் ஆலயமொன்றைப் போல இருப்பதைக் காணவே நான் விரும்பினேன். ஆனால் ஒருபோதும் பெரியம்மா மீண்டும் அவ்வாறு இருக்கவேயில்லை.

தக்‌ஷிலா ஸ்வர்ணமாலி

சிங்கள இலக்கிய உலகில் சிறுகதை, கவிதை, நாவல் படைப்புகள் வழியாக நன்கு அறியப்பட்டவர். பட்டதாரி ஆசிரியை. சிறுவர் இலக்கியத்திலும் சமூக ஆய்வுகளிலும் ஆர்வம் உள்ளவர். 3 கவிதைத் தொகுப்புகள், 2 சிறுகதைத் தொகுப்புகள், 1 நாவல், 3 சமூக ஆய்வுக் கட்டுரைத்தொகுப்புகள் வெளியாகியிருக்கின்றன.

எம்.ரிஷான் ஷெரீப்

இலங்கையைச் சேர்ந்த எழுத்தாளர், கவிஞர், மொழிபெயர்ப்பாளர், ஊடகவியலாளர். சிங்கள இலக்கியங்களை தமிழிற்குத் தொடர்ச்சியாக மொழிபெயர்த்துவருகிறார். இலங்கை அரச சாகித்திய விருது, வம்சி விருது, கனடா இலக்கியத்தோட்ட விருது முதலான விருதுகளைப் பெற்றிருக்கிறார்.

1 Comment

  1. சிறந்த சிறுகதை . நான் பல வருடங்களுக்கு முன்பு றூமேனிய சினிமா ஒன்று பார்த்தேன்.அதன் பெயர் சிக்கான்

    சிந்து ரோமா மக்களை தளமாக கொண்டு எடுக்கப்பட்டது.அதில் வரும் சிறுவன் ஒருவன் புல்லாங்குழலை வாசித்துக் கொண்டு போவான் அவனுக்கு பின்னால் வாத்துகள் தம்மை மறந்து போய்கொண்டு இருக்கும். காட்சிப் படுத்துதல் மிகவும் அழகாக இருக்கும். இதில் வரும் சிறுவனைப் போல இச்சிறு கதைப் படைப்பாளியும் வாசகர்களை அழைத்துச் செல்கின்றார்.அழகியல் கலை கொண்டது இச்சிறுகதை. மிகவும் அழகான மொழிபெயர்ப்பு.

உரையாடலுக்கு

Your email address will not be published.