/

பிராப்ளம்ஸ்கி விடுதி – டிமிட்ரி வெர்ஹல்ஸ்ட்:  கார்த்திக் பாலசுப்ரமணியன்

தமிழில் லதா அருணாச்சலம்

ஒரு அகதி புதிய தேசத்துக்கு தன்னுடன் தன் உடைமைகளை மட்டும் மூட்டைகட்டிக் கொண்டுவருவதில்லை – ஆல்பர்ட் ஐன்ஸ்டைன்.

சமீபத்தில், நாளிதழ்களில் வெளிவந்த செய்தி இது. குஜராத்திலிருக்கும் டிங்க்ச்சா கிராமத்தைச் சேர்ந்த இரு குழந்தைகள் உட்பட நான்கு நபர்கள் கொண்ட குடும்பம் ஒன்று கனடாவிலிருந்து அமெரிக்காவுக்குச் சட்டவிரோதமாகச் செல்லும்போது வழி தவறி இரத்தத்தை உறையவைக்கும்  மைனஸ் முப்பத்தைந்து டிகிரி செல்சியஸ் குளிரில் மாட்டி இறந்திருக்கின்றனர். ‘அவர்கள் எப்படி கனடா போய்ச் சேர்ந்தனர்? அங்கிருந்து அமெரிக்கா செல்ல உதவும் சட்டவிரோதக் குழுவுடன் எப்படித் தொடர்பு கொண்டனர்? இத்தனை சிரமமெடுத்து அங்கே போக வேண்டிய அவசியம் என்ன? என்பதெல்லாம் தனக்குச் சுத்தமாக விளங்கவில்லை’ என்று அவர்களின் நெருங்கிய உறவினர் ஒருவர் கூறுகிறார். இத்தனைக்கும் இந்தியாவில் சிரியாவைப் போன்ற போர்ச் சூழலோ ஆப்பிரிக்க நாடுகளைப் போன்று பசியில் மடிய நேரிடும் கொடிய வறுமையோ கிடையாது. தற்போதைய வாழ்வுமுறையைக் காட்டிலும் சற்று மேம்பட்ட ஒன்றைத் தேர்ந்துகொள்ளும் முனைப்பைவிட மேலதிகமாக வேறு காரணம் இருக்க வாய்ப்பு குறைவு.

பல்வேறு காரணங்களை முன்வைத்து மக்கள் தன் சொந்த நாட்டைவிட்டு இன்னொரு நாட்டுக்குத் தொடர்ந்து சென்றுகொண்டேதான் இருக்கிறார்கள். படிப்பு, வேலை போன்ற பொருளாதாரக் காரணங்களுக்காகச் செல்லும் ஆட்களைப் பற்றி அறிந்த அளவுக்கு உயிர் பிழைத்தலின் பொருட்டு சட்ட விரோதமாகச் சென்றடையும் மக்களைப் பற்றி நாம் அறிவதில்லை. மேற்கொண்ட சம்பவம் வெறும் பானைச் சோற்றுப் பத நிகழ்வு மட்டுமே. இந்தச் சம்பவத்துக்கும் இந்நாவலுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு.

தமிழில், குறிப்பாக ஈழத்திலிருந்து வெளியாகியிருக்கும் பல்வேறு படைப்புகளில் அங்கு நிலவும் போர்ச் சூழலின் பொருட்டு அங்கிருந்து வெளியேறி பல்வேறு நாடுகளுக்குப் புகலிடம் தேடிச் சென்றவர்கள் சந்திக்க நேர்ந்த பல்வேறு இன்னல்கள், ஏற்கனவே கதைகளாகவும் நாவல்களாகவும் இங்கே சொல்லப்பட்டிருக்கிறன. அவை அத்தனையும் ஈழத்தைப் பின்னணியாகக் கொண்டவர்கள் பல்வேறு நாடுகளில் குடியேறப் பட்ட பாடுகளைப் பேசுகின்றன. சயந்தனின் ஆறா வடு, செல்வம் அருளானந்தத்தின் எழுதித் தீராப் பக்கங்கள், ஷோபா சக்தியின் பல சிறுகதைகள் போன்றவற்றை உடனடியாகக் குறிப்பிட முடியும். சமீபத்தில் வெளியான வாசு முருகவேலின் ‘மூத்த அகதி’ தமிழ் நாட்டில் வாழும் ஈழ அகதிகளைப் பற்றிய முக்கியமான படைப்பு. ‘பிராப்ளம்ஸ்கி விடுதி’ இப்படைப்புகளுக்குச் சற்று மாறாக பல்வேறு நாடுகளிலிருந்து பெல்ஜியத்துக்குப்  புகலிடம் தேடி வந்தவர்களைப் பற்றிப் பேசுகிறது. நூற்று இருபத்துச் சொச்சம் பக்கங்களில் இந்நாவல் புகலிடம் தேடுபவர்கள் ஆட்படும் ஒட்டுமொத்த துயரின் ஒரு குறுக்குவெட்டுத் தோற்றத்தைத் தந்துவிடுகிறது. மேற்குறிப்பிட்ட ஈழத் தமிழ்ப் படைப்புகளைப் போலவே இந்நாவலும் தன் கதைமொழியாகப் பகடியைக் கைக்கொள்கிறது. பகடி வழியே துயரைக் கடப்பதும் கடத்துவதுமே சற்று இயல்பாகவும் எளிதாகவும் இருக்கிறது போலும்.

கதைசொல்லியான பிபுல் மஸ்லி சோமாலியா நாட்டில் சாகும் தறுவாயிலிருக்கும் சிறுவன் ஒருவனைப் புகைப்படம் எடுக்கும் காட்சியில் ஆரம்பிக்கிறது இந்நாவல். பின்னர் அவன் வாழ்வில் நிகழும் துர் சம்பவத்தைத் தொடர்ந்து அவன் ஐரோப்பாவிலிருக்கும் பெல்ஜியத்துக்கு, உறையும் பனியில் சரக்குக் கப்பல் ஒன்றின் கண்டைனருக்குள் மறைந்து புகலிடம் தேடி வருகிறான். அங்கு அவன் தன்னைப் போலவே உலகின் பல்வேறு மூலைகளிலிருந்து சட்டத்துக்குப் புறம்பாக வந்த பலரும் தங்க வைக்கப்பட்டிருக்கும் ‘பிராப்ளம்ஸ்கி விடுதி’யில் சந்திக்கும் மனிதர்களைப் பற்றிச் சொல்லும் கதைகளே இந்நாவல்.

இரண்டு நாட்களுக்கு முன்னர்கூட கென்யாவிலிருந்து ஓர் இளைஞன் ஆம்ஸ்டர்டாம் வந்த சரக்கு விமானத்தின் முன் சக்கரப் பகுதியில் உயிருடன் வந்து இறங்கிய செய்தி பெரும் ஆச்சரியத்தைத் தாங்கி வெளியாகியிருந்தது. பதினொரு மணி நேரங்கள் அத்தனை உயரத்தில் எப்படி உயிருடன் வந்திறங்கினான் என்பது அதிசயமே. ஆப்கனில் மறுபடியும் தலிபான்கள் ஆட்சியைக் கைப்பற்றியதும் அங்கிருக்கும் மக்கள் ஆடு, மாடு, கோழிகளைப் போல விமானங்களில் அடைக்கப்பட்டு வெளியேறியதையும், அங்கும் இடம் கிடைக்காமல் விமானத்தின் இறக்கைகளில் ஏறியவர்கள், பறக்கத் தொடங்கிய விமானத்திலிருந்து தூக்கி வீசப்பட்டதையும் மொத்த உலகமும் பார்த்தது. இவர்கள் வெளியேறியபோது இருந்ததற்குச் சற்றும் குறையாத பிரச்சினைகளை புகலிடம் கோரும் இடங்களில் அகதிகளாக அடைக்கலம் பெறுவதிலும் சந்திக்க நேரிடுகிறது. அங்கே இவர்கள் அழையா விருந்தாளிகள். இப்படியாகப் பல்வேறு மார்க்கங்களில் உயிர் தப்பி வருபவர்களை அகதிகளாக அனுமதிக்கப் பல்வேறு கடுமையான சட்ட திட்டங்களை ஒவ்வொரு நாடும் தன்னளவில் வைத்திருக்கிறது. அதற்கு பெல்ஜியமும் விதிவிலக்கல்ல. உள்நாட்டுக் கலவரத்தால் பாதிக்கப்பட்டு குடும்பத்தைப் பிரிந்து தனியாக அடைக்கலம் கோரி வந்திருக்கும் பதினெட்டு வயது நிரம்பாத சிறுமியோ, தன் மொத்தக் குடும்பத்தையும் கொடூரமான இனக் கலவரத்துக்குப் பலிகொடுத்துவிட்டு தனியனாய் நிற்பவனோ, குண்டு வீச்சில் காயம்பட்டுப் பாதி முகம் சிதைந்து நிற்கும் சிறுவனோ – அவர்களின் புகலிடக் கோரிக்கை அனுமதிக்கப்படுவதற்கான வாய்ப்பை மேற்கூறப்பட்ட அவர்களின் பின்னணி மட்டுமே உறுதிசெய்வதில்லை.

மூன்றாவது முறை கோரிக்கை நிராகரிக்கப்படும்போது அவர்கள் திரும்பவும் அவர்களுடைய சொந்த நாட்டிற்கேத் திருப்பி அனுப்பப்படுகிறார்கள். நாவல் நடைபெறும் காலம் நியூயார்க் நகரின் ரெட்டைக் கோபுரங்கள் தீவிரவாதிகளால் தகர்க்கப்பட்ட 2001 ஆம் ஆண்டின் செப்டம்பருக்குப் பின்னான டிசம்பர் மாதம். அந்நிகழ்வு புகலிடம் கோரி வருபவர்களிடத்தே காட்டப்பட்டும் குறைந்தபட்ச கருணையையும் கைவிடப் போதுமாக இருந்தது. நாவலில் வரும் ஒருவருடைய கோரிக்கைகூட ஏற்றுக்கொள்ளப்படுவதில்லை. ஆயினும் அவர்கள் நம்பிக்கையைத் தளரவிடாமல் இருக்கிறார்கள். அவர்களிடம் அது மட்டுமே எஞ்சியிருக்கிறது.

விதிவிலக்காக அக்கூட்டத்தில் ஒரே ஒருவனுக்கு மட்டும் அங்கே தங்கிக்கொள்ளும் அனுமதி வழங்கப்படுகிறது. அதுவும்கூட அவன் மனநிலை பிறழ்ந்த காரணத்தினால். அதைத் தொடர்ந்து மற்றவர்களும் தங்களை மனநிலை பிறந்தவர்களாக நிலைநாட்டிக்கொள்ள எடுக்கும் முயற்சிகள் அபத்த அவலத்தின் உச்சம்.

மேம்பட்ட நாகரிக சமூகமாக தம்மைப் பறைசாற்றிக்கொள்ளும் மேற்கத்திய நாடுகளில்கூட அகதிகளுக்கு மறுக்கப்படும் உரிமைகளைப் பார்க்கும்போது மற்ற நாடுகளின் நிலைமையைப் பற்றிச் சொல்லவே தேவையில்லை. அதிலும், பெல்ஜிய நாட்டுச் சிறுவர்களிடத்தில் கூட வெளிப்படும் அகதிகள் மேல் வன்மம் மனிதத்தின் மீதான ஒட்டுமொத்த நம்பிக்கையையும் கேள்விக்குட்படுத்துகிறது.

வாழ்வதன் பொருட்டு சாவதற்கும் துணிந்தவர்களாக இருக்கிறார்கள் அவ்விடுதியின் அகதிகள். மனிதர்களுக்கான அடிப்படை மாண்புகளைக்கூட வாழ்வதற்கான வேட்கைக்குத் தின்னக்கொடுத்துவிட்ட அவர்கள், இச்சமூகம் வரையறுத்துள்ள எந்தச் சட்டகத்துக்குள்ளும் அடைபட மறுக்கிறார்கள். அதிகமாகக் கிடைக்கும் ஒரு சில சிகரெட்டுகளுக்காக அன்னா செய்யும் காரியங்களையும், வன்புணர்வுக்கு ஆட்பட்டு தனக்குப் பிறந்த குழந்தையைக் கொலை செய்யக் கொடுக்கும் மார்ட்டினாவையும், தன் சொந்த நாட்டுக் காவலர்களால் கொல்லப்பட்ட தந்தையையும் வன்புணரப்பட்ட தாயையும் கொண்ட மக்ஸூத்தையும் இயல்பு வாழ்க்கை வாய்க்கப்பட்டவர்களை அளக்கும் அதே அளவுகோல்களுக்கு முன் நிறுத்துவதைப் போன்ற அபத்தம் வேறு இருக்க முடியாது.

இவ்விடுதி ஒரு தனித்த இணை உலகம். இங்கே மதம், கடவுள், தாய்மை, அன்பு, இரக்கம் போன்ற எந்த புனிதங்களுக்கும் இடம் கிடையாது.  இங்கே கனவுகளிலும் கற்பனைகளிலும் மட்டுமே மகிழ்ச்சி என்ற வார்த்தையை உச்சரிக்கிறார்கள். எங்கோ பல்லாயிரம் மைல்களுக்கு அப்பால் இருக்கும் தன் அம்மாவிடம் (அங்கிருக்கும் தபால் நிலையத்துக்கு வந்து அம்மா அழைப்பை எடுத்துப் பேசினால் மட்டுமே அவள் உயிருடன் இருப்பதற்கே உத்தரவாதம்.) தொலைப்பேசியில் பேசும்போது லிடியா தான் இங்கே ஒரு இயல்பு வாழ்க்கை வாழ்வதாகப் புனைகிறாள். அப்போது தான் லண்டனில் 10, டவுனிங் தெருவில் வசிப்பதாகக் கூறுகிறாள். அந்த அத்தியாயத்தில் வரும் ஒரு வாக்கியம்,

“நமக்கு அம்மாக்கள் இல்லையென்றால் பொய் சொல்ல வேண்டிய அவசியமே இல்லை.”

இந்நாவலின் கச்சிதமான மொழியும், புகலிடம் கோரும் பின்புலத்தைக் கொண்டு பல்வேறு கதைகள் புனையப்பட்ட விதமும், இந்தியாவில் எமர்ஜென்சி அமல்படுத்தப்பட்ட காலகட்டத்தைப் பின்னணியாகக்கொண்டு எழுதப்பட்ட  அசோகமித்திரனின் ‘இன்று’ நாவலை அதிகமும் நினைவுபடுத்துகிறன. அதைப் போல இந்நாவலின் எந்த ஓர் அத்தியாயமும் தனியாக வாசித்தால் தன்னளவில் முழுமையைத் தரவல்லதாகவும் அதே நேரத்தில் ஒட்டுமொத்தமாய் வாசிக்கும்போது ஒரு நாவலாக உருப்பெறுவதையும் காணலாம். சாவின் விளிம்பிலிருக்கும் சிறுவன் ஒருவனைக் கதை சொல்லி பிபுல் மஸ்லி புகைப்படம் எடுப்பதில் தொடங்கும் நாவல் அதே போன்று ஒரு புகைப்படத்துக்கு முகம் காட்ட ஒரு முழுச் சுற்றை நிறைவுசெய்து நாவல் முடியும் இடம் அபத்தத்தின் ஓர் அழகியல் தருணம்.

இந்நாவலாசிரியர் டிமிட்ரி வெர்ஹெஸ்ட் ஃப்ளெம்மிஷ் பத்திரிக்கையின் கோரிக்கையை ஏற்று எழுதிய படைப்பு இது. திரைப்படமாகவும் வெளிவந்திருக்கிறது. ஆனால், நாவல் பெற்ற கவனத்தைத் திரைப்படம் அடைந்ததாகத் தெரியவில்லை. இதை எழுதுவதன் பொருட்டு பெல்ஜிய நாட்டின் ஆரென்டெக் நகரப் புகலிட விடுதியில் சில நாட்கள் தங்கியிருந்தாக அவர் தன் பின்னுரையில் குறிப்பிடுகிறார். இதை எழுதத் தேர்ந்துகொண்ட அங்கதம் அவருடைய இயல்பிலேயே இருந்தது என்பதை அவர் எழுதிய பின்குறிப்பிலேயே அறிந்துகொள்ளலாம்.

“தவறான புரிதல்களைத் தவிர்க்க ஒரு விஷயத்தை நான் சொல்ல வேண்டியுள்ளது. அதாவது இங்குள்ளவற்றில் ஏறத்தாழப் பாதிக் கதைகள் நான் புனைந்தவை. அவை எதிலும் ஒரு பொய்கூடக் கிடையாது.”

எடுத்துக்கொண்ட கதையும் அது சொல்லப்பட்ட விதமும் உண்மையில் கடினமானவை. இரண்டு மூன்று பக்கங்களே இருக்கும் ஓர் அத்தியாயத்தில் துயரார்ந்த ஒருவரின் ஒட்டுமொத்த வாழ்வே சொல்லப்பட்டிருக்கும். எனவே, இதை மற்றுமொரு நாவலாக வாசித்துவிட முடியாது. வாசிப்பவனின் மொத்த கவனத்தைக் கோரி அவனுடைய வாழ்நாளுக்குமான அனுபவங்களை அளித்துப் போகும் நாவல் இது. இத்துணை துயர் மிகுந்த வாழ்க்கைகளை இத்தனை குறைவான பக்கங்களில் தரும் ஒரு படைப்பின் அடர்த்தியைச் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. எல்லாவற்றுக்கும் மேல் இதைச் சொல்வதற்குப் பகடியை மொழியாகத் தேர்வுசெய்துகொண்டிருக்கிறார் இந்நாவலாசிரியர் டிமிட்ரி வெர்ஹல்ஸ்ட். தமிழில் அதன் தீவிரம் குறையாமல் கொண்டு வருவது அத்தனை எளிதான காரியம் கிடையாது. அதை மொழிபெயர்ப்பாளர் லதா அருணாச்சலம் திறம்படக் கையாண்டிருக்கிறார். நாவலில் பல நாடுகளின் வேறுபட்ட கலாச்சாரங்கள் ஒரு சில வார்த்தைகளில் போகிற போக்கில் சொல்லப்பட்டிருக்கிறன. (ஆப்பிரிக்க நாட்டிலிருந்து வரும் ஒருவன் அதுவரை சைக்கிளையேப் பார்த்ததில்லை என்ற ஒற்றை வரி அவனுடைய மொத்த பின்புலத்தையும் விளக்கிவிடும்.) அவற்றைச் சரியாக உட்கிரகித்துத் தமிழாக்குவது உண்மையில் கடும் பிரயத்தனம் தேவைப்படும் வேலை. அதே போல பல்வேறு இடங்களில், அப்பட்டமாக வெளிப்படும் வார்த்தைப் பிரயோகங்கள் அருவருப்பூட்டும்படி அதீதமாகாமலும் அதே நேரத்தில் அவற்றை மட்டுப்படுத்தி அவ்விடங்களின் தீவிரத்தன்மையைக் குறைத்துவிடாமலும் தேவையான அளவில் மிகக் கச்சிதமாகப் பயன்படுத்தியிருக்கிறார். பெரும்பாலான மொழிபெயர்ப்பாளர்கள் தவறும் இடம் இது. லதா அருணாச்சலத்தின் முதல் மொழியாக்கப் படைப்பான ‘தீக்கொன்றை மலரும் பருவம்’ நாவலும் தன்னளவில் மிகவும் சிக்கலான கருப்பொருளைக் கொண்ட நாவல். அதைச் சிறப்பாக மொழியாக்கம் செய்த அனுபவம் அவருக்கு இங்கேயும் உதவியிருக்கக்கூடும்.

இதோ இந்தக் கட்டுரையை எழுதி முடித்த இத்தருணத்தில், கொலம்பியாவிலிருந்து கடல் வழியாகத் தப்பி அமெரிக்காவுக்குப் புகலிடம் தேடிச் சென்றவர்கள் வந்த கப்பல் ஒன்று கடலில் மூழ்கி முப்பத்தொன்பது பேர் இறந்துபோய் உள்ளனர். அதில் ஒரே ஒருவர் மட்டும் பிழைத்திருக்கிறார். அவர் அந்த மூழ்கிய கப்பலின் மேல் நடுக்கடலில் அமர்ந்திருக்கும் புகைப்படம் வெளியாகியிருக்கிறது. இந்நாவலை வாசித்து முடித்த அனுபவத்தில் என்னால் இச்செய்தியை இப்படித்தான் புரிந்துகொள்ள முடிகிறது.

உண்மையில், அந்த முப்பத்தொன்பதுபேர் தப்பிவிட்டனர். ஒரே ஒருவர் மட்டும் மாட்டிக்கொண்டார்.

கார்த்திக் பாலசுப்ரமணியன்

சென்னையில் வசித்துவரும் கார்த்திக் பாலசுப்ரமணியன், புனைவு பரப்பிலும், விமர்சன பரப்பிலும் தொடர்ந்து இயங்கிவருகிறார். டொரினா என்ற சிறுகதைத் தொகுப்பும், ‘நட்சத்திர வாசிகள்’ என்ற நாவலையும் வெளியிட்டுள்ளார்.

உரையாடலுக்கு

Your email address will not be published.