/

அழைப்பு: கார்த்திக் பாலசுப்ரமணியன்

ஓவியம்: திண்டுக்கல் தமிழ்ப்பித்தன்

ஆய்வகத்திலிருந்து வெளியே வந்த விஸ்வநாதன் தன்னுடைய லாக்கரிலிருந்து மொபைலை எடுத்தார். பல காலமாக இதை வழக்கமாக வைத்துள்ளார். மிக முக்கியமான ஆராய்ச்சியின்போது ஒலிக்கும் அலைபேசி சத்தத்தைப் போல இடையூறு வேறொன்றும் இல்லை. தனக்கு மட்டுமில்லாமல் அவர் அணியில் பணியாற்றும் எல்லோருக்கும் இதே விதி. தன் கண்ணாடியை அழுந்தத் துடைத்துவிட்டு மொபைலை இயக்கினார். அவர் மனைவி உமாவிடமிருந்து பதிமூன்று தவறவிடப்பட்ட அழைப்புகள் இருந்தன. அவ்வப்போது இப்படி ஒன்றோ இரண்டோ இருப்பது வழமைதான். பதிமூன்று சற்று அதிகமே. திரும்ப அழைத்தார். பதில் இல்லை. கார் நிறுத்தியிருக்கும் இடத்துக்கு நடந்தபடி மறுபடியும் அழைத்தார். அப்போதும் பதில் இல்லை. நேரம் இரவு ஒன்று முப்பது காட்டியது. தூங்கியிருப்பாளாயிருக்கும் என்று நினைத்தபடி காரை கிளப்பினார். ஆய்வகத்தில் விட்ட இடத்திலிருந்து மனதுக்குள் கணிதச் சமன்பாடுகளை நேர்செய்து பார்த்தார். ரொம்பப் பக்கத்தில் வந்துவிட்டோம் என்ற நம்பிக்கை வந்தது. அதே நேரத்தில் மனதின் ஓர் ஓரத்தில் அடையாளம் காணவியலாத அமைதியின்மை அழுத்தியது.

O

உடற்கூறாய்வு முடிந்து முகம் மட்டும் தெரியும்படி தூய வெள்ளைத் துணியால் சுற்றி வைக்கப்பட்ட உமாவின் உடலை அவள் தொங்கிக்கொண்டிருந்த அதே வரவேற்பறையில் ஐஸ்பெட்டிக்குள் கிடத்தியிருந்தார்கள். மூத்தவள் தகவல் தெரிந்தவுடன் கிளம்பி காலையிலேயே வந்துவிட்டாள். அழுது ஆர்பாட்டம் செய்வாள் என்று எதிர்பார்த்த நிலையில் அவள் எதுவும் பேசாமல் ஏதோ எதிர்பார்த்த ஒன்று நிகழ்ந்ததைப் போல அமைதியாக இருந்துவிட்டாள். கான்பரன்ஸ் ஒன்றுக்காக சிங்கப்பூர் வரை வந்திருந்த சின்னவளும் சற்று நேரத்தில் வந்துவிடுவாள். அவள் எப்போதும் அதிகம் பேசுபவள் அல்லள். அவளை எப்படி நேர்கொள்வது என்று விஸ்வநாதனுக்குப் புரியவில்லை.

சாதாரண உடையில் வந்திருந்த அப்பகுதி காவல் ஆய்வாளர், விஸ்வநாதனிடம் சில தாள்களைக் கொடுத்து கையெழுத்து வேண்டினார். மேலும் சில தகவல்கள் வேண்டுமெனவும் தானே இரண்டு நாட்களில் வந்து சந்திப்பதாகவும் சொன்னார். அப்போது அவரின் இடுப்பில் சொருகியிருந்த வாக்கி டாக்கி சிக்னல் கிடைக்காமல் கர் கரென்று இரைந்தது.

விஸ்வநாதனுக்கு முந்தைய நாள் விட்டுவிட்டு வந்திருந்த ஆராய்ச்சியில் மனம் சென்று நின்றது. மிகவும் அருகில் இருக்கிறோம் என்பது அவருக்குப் புரிந்தது. அதே நேரத்தில் இந்தச் சூழ்நிலையில் இப்படி நினைப்பது பற்றி அவருக்குக் குற்ற உணர்ச்சியாகவும் இருந்தது.

O

விஸ்வநாதனுக்கு அன்று எல்லா வகையிலும் மிக முக்கியமான நாள். நாள் என்று சொல்லிவிட முடியுமா? நாள், கிழமை, இரவு, பகல், சாஸ்திரம், சடங்கு என்று எதையும் அவர் பொருட்படுத்துவதில்லை. இதுபோன்ற அற்ப விசயங்களை நினைவில் வைத்துக்கொள்வதற்கு மூளையைப் பயன்படுத்துவதெல்லாம் அவரளவில் வெற்றுச் செயல். பிள்ளைகளின் பிறந்தநாள், பெற்றவளின் இறந்தநாள் உட்பட எதுவுமே அவருடைய வரிசையில் சேர்த்தியில்லை. பசித்தால் சாப்பாடு, களைத்தால் தூக்கம். மற்ற நேரங்களில் வானவியல் கோட்பாடுகள், குறிப்புகள், ஆய்விதழ்கள், புத்தகங்கள், அவ்வப்போது காப்பி. அவ்வளவுதான். அதிகாலையில் அலுவலகத்தின் மீத்திறன் கணினியின் கணக்கீடுகளுக்குள் நுழைந்தார் என்றால் கண் சோர்ந்து எழுத்துருக்கள் மங்கத் தொடங்கும்போது தனது மடிக்கணினியை எடுத்துக்கொண்டு வெளியேறுவார். வீட்டுக்கு வந்ததும் மறுபடியும் வாசிப்பு. குறிப்புகள். கிட்டத்தட்ட இருபது வருடங்களாக இதுதான் அவருடைய அன்றாடம். பெங்களூருவில் இருக்கும் இந்திய விண்வெளி ஆய்வு மையத்தின் வளாகத்துக்குள்ளேயே வீடு. ஐ.ஐ.எஸ்.சி, பிட்ஸ் பிலானி, டில்லி செயிண்ட் ஸ்டீபன் கல்லூரி போன்றவற்றில் ஆற்றும் கெளரவப் பேராசிரியர் பணிக்காகவும், அறிவியல் மாநாடுகளில் நிகழ்த்த நேரிடும் உரைகளுக்காகவும் மட்டுமே அவர் அந்த வளாகத்தைவிட்டு வெளியேறுவார். பேராசிரியர்களும் ஆராய்ச்சி மாணவர்களுக்கும் மட்டுமே அவருடைய நட்பு வட்டத்தில் இடமுண்டு.

ஆராய்ச்சியைத் தவிர வேறு எதுவும் அவருக்கு ஒரு பொருட்டில்லை. இருந்த வரை, வீட்டை அவர் மனைவி உமா கவனித்துக்கொண்டாள். சிறு வயது முதலே அவரைப் பார்த்து வளர்ந்தவள் ஆதலால் அவளும் தன் உலகை நான்கு சுவருக்குள் சுருக்கிக்கொள்ளக் கற்றுக்கொண்டாள். பிள்ளைகள் படித்து வளர்ந்து வீட்டைவிட்டு வெளியேறும் வரை அவளுக்கு இவ்வாழ்வின் மீது எந்தப் புகாருமிருக்கவில்லை. பிள்ளைகள் அவர்களாகவே படித்தார்கள். வளர்ந்தார்கள். மூத்தவள், கான்பூர் ஐ.ஐ.டியில் குவாண்டம் ஃபிசிக்ஸ் சொல்லித் தரும் பேராசிரியர். உமா இருந்தவரை விசேஷ நாட்களுக்கு வந்து போய்க்கொண்டிருந்தாள். பின்பு, அதையும் நிறுத்திக்கொண்டாள். அவ்வப்போது தோன்றினால் ஒரு அழைப்பு அல்லது மெயில். அவ்வளவுதான். இளையவள், அமெரிக்காவிலிருக்கும் கூகிள் நிறுவனத்தின் தானியங்கி கார் பற்றிய ஆராய்ச்சிப் பிரிவின் தலைவராக இருக்கிறாள். உடன் வேலை பார்க்கும் மெக்ஸிகன் ஒருவரைத் திருமணம் செய்துகொண்டாள். செய்தியுடன் திருமணப் புகைப்படங்களையும் இணைத்து அவருக்கு அனுப்பியிருந்தாள். மூன்றாவது நாள் மெயிலில் பார்த்தவுடன் இவர் தம் வாழ்த்துக்களை ஒரு தொலைப்பேசி அழைப்பின்வழித் தெரிவித்துக்கொண்டார். இதே இடத்தில் வேறொருவராக இருப்பின் விஸ்வநாதனுக்கு வாய்த்திருக்கும் தனிமைக்கும் அவருடைய வயதுக்கும் வாழ்வின் வெறுமையென்னும் சக்கரத்திற்குத் தம்மைத் தின்னக் கொடுத்திருப்பார்கள். ஆனால், அவரை எதுவும் பாதிக்கவில்லை. முப்பத்தைந்து வருடங்கள் உடன் வாழ்ந்த பெண்ணின் மறைவே உறைக்காத அளவுக்கு மரக்கட்டையாக தன்னை வைத்துக்கொண்டார். உமாவின் மரணம் மட்டும் தற்கொலையாக இல்லாமல் இயற்கையானதாக அமைந்திருந்தால் காரியங்களையும் கடமைகளையும் முடித்த கையோடு ஒரு வேளை அன்று இரவே தன் ஆராய்ச்சிக்கூடத்துக்குத்தான் கிளம்பிப் போயிருப்பார்.

உண்மையில், அன்று அவரை அப்படி உந்தித் தள்ளும் நிகழ்வொன்றும் நடந்தது. அவருடைய அத்தனை வருட ஆராய்ச்சிக்கான முக்கியமான துருப்புச் சீட்டு அன்றுதான் கிடைத்தது. அவர் தன் வாழ்நாள் முழுவதும் தேடிக்கொண்டிருந்த அழைப்பு வந்தடைந்தது. ஆனால், துரதிர்ஷ்டவசமாக காவல்துறையின் வழமைகளுக்குக் கட்டுப்பட்டு அவர் அன்று அங்கிருந்து நகர முடியவில்லை. அதன் காரணமாய், கைக்கு எட்டிய அழைப்பைத் தொடர இயலவில்லை. சில விநாடிகள் மட்டுமே கிடைத்த ரேடியோ அலைகளை ஆராய்ச்சிக்கு உட்படுத்துவது மிகவும் சிக்கலாக இருந்தது. ஆனால், ஒன்றே ஒன்று மட்டும் அவருக்கு உறுதியாகத் தெரிந்தது. அது பூமியிலிருந்தோ பூமியிருக்கும் பால்வீதியிலிருந்தோ வெளிவரவில்லை. அதற்கும் அப்பால் எங்கிருந்தோ வந்திருந்தது. பின்னர், கிடைத்த மிகக் குறைந்த தகவல்களைக் கொண்டு அது நாமிருக்கும் பால்வீதிக்கு மிக அருகிலிருக்கும் ஆண்ட்ரோமேடா நட்சத்திரக்கூட்டத்திலிருந்து வந்திருக்கக் கூடும் என்பதே அவருக்குக் கிடைத்த ஒரே திறப்பு. அதைத் தொடர்ந்து இன்னுமின்னும் தீவிரமாக தேடத் தொடங்கினார். ஆனால், ஆன்ரோமேடாவிலிருக்கும் பல கோடிக் கணக்கான நட்சத்திரங்களின் பல்லாயிரம் கோடி கோள்களில், இது எதிலிருந்து வந்திருக்கக்கூடும் என்று கண்டுபிடிப்பது அத்தனை எளிதான காரியம் இருக்கவில்லை. ஆனால், அவர் சோர்ந்துவிடவும்வில்லை. தொடர்ந்து இங்கிருந்து ரேடியோ கதிர்களை உமிழும் சாதனத்தின் வழியே தேடிக்கொண்டும் அலைகற்றைகளை இங்கிருந்து தொடர்ந்து அனுப்பிக் கொண்டும் இருந்தார்.

மிகக் குறைந்த அளவேயான சிக்னல் கிடைத்திருந்தாலும் வானவியல் துறை வரலாற்றில் இது மிக முக்கியமான நிகழ்வாகப் பதியப்பட வேண்டிய ஒன்று. 1977 ஆம் ஆண்டு அமெரிக்காவின் ஓஹியோவில் கிடைத்த ‘வாவ்’ சிக்னலுக்குப் பிறகு கிடைத்த மிக முக்கியமான அழைப்பு அது.

O

அதன் தொடர்ச்சியாக ஒரு வருடம் கழித்து இன்று மறுபடியும் அதே சிக்னலைக் கண்டுகொண்டார். கிட்டத்தட்ட ஒரு வருடம் இரவு பகலின்றி உழைத்ததன் பலன். முப்பத்தாறு வருட ஆராய்ச்சியின் முடிவு. சரியான முறையில் இதைக் கண்டுபிடித்து, நிரூபிக்கவும் முடிந்தால் வானவியல் துறைக்கான ப்ரூஸ் மெடல், ஏன்  இயற்பியலுக்கான நோபல்கூட அதிக தூரத்தில் இல்லை. விருதுகளுக்கும் அங்கீகாரங்களுக்கும் அப்பால் உள்ளேயிருந்து அவரை முடுக்கிக்கொண்டிருந்த சக்திக்குக் கொஞ்சம் தீனி. இம்மாபெரும் பிரபஞ்சம் தன்னை அவர் வழியாகவும், அவர் தன்னை இப்பிரபஞ்சத்தின் வழியாகவும் கண்டறிந்துகொள்ளும் முயற்சியின் முக்கியமான மைல் கல்லாக இக்கண்டுபிடிப்பு இருக்கும். அதுதான் அவரை உற்சாகமூட்டியது. தொடர்ந்து ஓடச் செய்தது.

விஸ்வநாதனிடத்தில் இவ்வார்வத்தைத் தூண்டியவர் அவர் படித்த ஆரம்ப பாடசாலையில் அறிவியல் சொல்லிக் கொடுத்த அவரின் தாய்மாமா நீலகண்டர். அறிவியலைப் பாடமாக அல்லாமல் கதையாகவும் எதிரே இருப்பவரின் கற்பனையைத் தூண்டும் வகையிலும் சொல்லித் தருவதில் கைதேர்ந்தவர்.

மழை வருவது போல் மேகம் திரண்டு இருண்டு கொண்டு வரும்போது மொத்த வகுப்பறையின் கண்களும் ஜன்னல்களில் நிலைகொண்டிருக்கும். அப்போது அவர், “என்னடா பசங்களா.. மேகம் எவ்ளோ வேகமா நகர்றது இல்லியா?” என்பார்.

மொத்த வகுப்பறையும் “ஆமா சார்” என்ற குரலில் ஆமோதித்து, அதுவரை திரும்பியிராத ஓரிரு தலைகளையும் சேர்த்து அங்கிருக்கும் அத்தனை தலைகளும் ஜன்னலை நோக்கித் திரும்பும்.

“அங்க நகர்ற மேகமெல்லாம் சுமார் எவ்ளோ எடை இருக்கும்ன்னு நினைக்கிறீங்க?” என்று ஒரு கொக்கியைப் போடுவார்.

“அதுக்கு எடையே கிடையாது சார். காத்துப் போலே இருக்கும் சார்” என்று வரும் பதிலை மறுத்து உண்மையில் அவை எப்படி பல்லாயிரம் கிலோ எடைகொண்டவை என்று விளக்கி தன் பாடத்தைத் தொடங்குவார். ஜன்னலை நோக்கியிருந்த தலைகள் மொத்தமும் தனிச்சையாய் கரும்பலகையை நோக்கித் திரும்பும்.  

மாமாவும் மருமகனும் நிலவற்ற நாளில் மொட்டை மாடியில் மணிக்கணக்காக விடிய விடிய நட்சத்திரங்களைப் பார்த்தபடி உரையாடிக்கொண்டிருப்பார்கள்.

அன்றைய தினம் பளிச்சென்று ஒளிவிடும் நட்சத்திரம் ஒன்றைக் காட்டி, “டேய் விச்சு.. இப்போ பாக்கறியே இந்த நட்சத்திரம் அது உண்மையிலேயே இப்போ அங்க இருக்கிற நட்சத்திரம் இல்ல. அந்தக் கதை தெரியுமோ உனக்கு?” என்று சொல்லியபடி நட்சத்திரத்துக்கு இணையாக ஒளிரும் விச்சுவின் கண்களை உற்றுப் பார்ப்பார்.

பின்னர், எதையோ நினைத்தவராகத் தனக்குள் புன்னகைத்தபடி, “நீ இப்போ பார்க்கிற நட்சத்திரம் சுமார் பத்தாயிரம் இருபதாயிரம் வருட பழசு. அதிலேருந்து அப்போ கிளம்பின ஒளி, இப்போத்தான் உன் கண்ணுக்கு வந்து சேர்ந்திருக்கு. என் பூட்டன் பாட்டனெல்லாம் பாத்திருக்காத ஒண்ணு உனக்கும் எனக்கும் மட்டும் பார்க்க கிடைக்குது. நாளைக்கு உன் பேரன், கொள்ளுப் பேரன், எள்ளுப் பேரன் பார்க்கப் போற நட்சத்திரத்தோட ஒளி இன்னிக்கு நமக்குத் தெரியாது. அது இங்க வந்து சேரும்போது நாமெல்லாம் எங்க இருப்பமோ” என்பதாக விளக்குவார்.

இப்படியாக இவர் வழியாகத்தான் விஸ்வநாதனுக்கு ஆரம்பித்தது இந்தப் பித்து.

ஒரு நாள் தூங்கிக்கொண்டிருந்தவனை பாதியில் எழுப்பிக் கிளப்பி அவசர அவசரமாக மாமா வீட்டுக்கு அழைத்துப் போனாள் அம்மா. அங்கே அன்று, ஒரு வருடத்துக்கு முன்பு உமாவைக் கிடத்தியிருந்ததைப் போலவே அவரையும் கிடத்தியிருந்தார்கள். நெடுஞ்சாலையில் டைனமோ பழுதான சைக்கிளில் வந்துகொண்டிருக்கும்போது எதிரே வந்த பேருந்தில் அடிபட்டு இறந்துபோனார். அந்தக் காலத்தில் இப்படியான விபத்துக்கள் அரிதினும் அரிது.

“தரையைப் பார்த்து சைக்கிளை ஓட்டாம வானத்தைப் பார்த்தே ஓட்டி வந்ததால் வந்த வினை. எங்கேயோ பிறக்க வேண்டியவர். தப்பி இந்த ஊருக்குள்ள வந்து பிறந்துட்டார்.” என்பதாக தன் அண்ணனைப் பற்றிய பேச்சு வளரும்போதெல்லாம் அம்மா பெருமூச்சு விடுவாள்.

பேருந்தில் அடிபட்டு ரத்தம் வழிய துடிதுடித்துக்கொண்டிருந்தவரை எடுத்துத் தூக்கியவனைப் பார்த்து சிரமப்பட்டு பாதிக் கண்களை திறந்திருக்க மெல்லிய புன்னகையுடன் கன்னத்தைத் தடவி “விச்சு” என்று அழைத்தாராம். அதுதான் அவர் உச்சரித்த கடைசி சொல்லாம். இதை, கல் பொறுக்கி வெயிலில் உலர்த்திய பச்சரிசியை மாவு மில்லில் கொடுத்து அரைத்து எடுத்துக்கொண்டு திரும்பிய நாளொன்றில் வெகு சாதாரணமாக அம்மா விஸ்வநாதனிடம் கூறினாள்.

O

இவ்வளவுக்குப் பிறகும் வானம் பார்க்கும் வாழ்க்கையே விஸ்வநாதனுக்கு வாய்த்தது. அவர் வானத்தைப் பார்த்த பொழுதெல்லாம் தான் கால் ஊன்றியிருந்த தரையை நழுவவிட்டபடியே இருந்தார். வானத்தின் விரிவும் ஆழமும் அவரின் மனத்துள் பிரதிபலித்தது. அதன் பிரம்மாண்டத்துக்கு முன் இங்கே நிகழும் ஏதொன்றுக்கும் அவர் அலட்டிகொள்வதில்லை. அவர் தன்னை இப்பிரபஞ்சத்தின் அங்கமாகவும் அதோடு ஒப்பிட இப்பூமியில் நிகழும் லெளகீகச் சமாச்சாரங்களை வெகு அற்பமாகவும் பார்க்க ஆரம்பித்தார். அந்த மாமாவுக்காக மட்டுமே அவரின் மகளை மணந்தார்.

அந்த வானமும் நட்சத்திரங்களுமே விஸ்வநாதனை சிவகங்கைப் பகுதியின் எளிய கிராமமான பூவந்தியிலிருந்து மெட்ராஸ் எம்.ஐ.டி-யில் இளங்கலையும், பெங்களூருவின் இந்திய அறிவியல் கழகத்தில் வானியல் அறிவியலில் முதுகலையும் முடிக்க வைத்தது. அங்கிருந்து வெளியேறிய அவர் சென்ற சேர்ந்த இடம் இஸ்ரோ.

சூன்யத்திலிருந்து நிகழ்ந்த பெருவெடிப்புக்குப் பின் மிச்சமிருந்த கதீர்வீச்சின் துணைகொண்டு பிரபஞ்சத்தின் ஆரம்பத்தையும் அதன் விரிவையும் ஆராயும் அணியில் இருந்தார். இது தொடர்பாக ஜெர்மனி, இஸ்ரேல், அமெரிக்கா நாடுகளோடு இணைந்து உருவான  கூட்டு அணியில் முக்கிய பொறுப்பு ஒன்றும் வகித்தார். பதிமூன்று பில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் நடைபெற்றதாக கருதப்படும் பெருவெடிப்பு குறித்த ஆராய்ச்சியின் உப விளைவே அவருக்கு வெளியிலிருந்து கிடைத்த ரேடியோ அலைகள். நம்மைப் போன்று வேறெங்கோ வாழும் உயிரி ஒன்று அனுப்பியதாக கருதப்படும் அந்த ரேடியோ அலைகளை முதன்முதலாக இவருடைய குழு கண்டறிந்த அதே நாளில்தான் உமாவை வீட்டின் வரவேற்பறையில் இருந்த மின்விசிறியிலிருந்து கீழே இறக்கிக் கிடத்தியிருந்தார்கள். அதன் பிறகு வீட்டிலிருக்கும் சமயங்களில் அவ்வப்போது உமாவின் நினைவு எழுந்து தொந்தரவு செய்தது. தீவிரமாக ஏதேனும் குறிப்புகள் எடுத்துக்கொண்டிருக்கும்போது உமாவினுடைய காலடி ஓசை கேட்கும். எத்தனையோ விதவிதமான ஓசைகளுக்கிடையேயும் அவரால் பிரித்து இனம் காணக்கூடிய தனித்த ஓசை. அது அடிக்கடி அவரைத் துரத்தியது. உமா இருக்கும்போது இதையெல்லாம் கூர்ந்து கவனித்திருக்கிறார் என்பது அவருக்கே ஆச்சரியமாக இருந்தது. அவருக்கு மனையின் இருப்பு ஓர் அனிச்சை செயலைப் போல் ஆகியிருந்தது. அதை மறக்கவும் மறைக்கவும் அவர் இன்னுமின்னும் தன்னை ஆராய்ச்சியில் அர்ப்பணித்துக்கொண்டார். அலுவலகத்திலேயே அதிகம் தங்கினார்.

இந்தப் பால்வீதிக்கு வெளியே இருந்து ஒரு அழைப்பு. கோடிக்கணக்கான மானுடர்களுக்குக் கேட்காத ஒரு குரல் அவருக்குக் கேட்டிருக்கிறது. இந்த மீச்சிறு பூமியில் இதுவரை தோன்றிய எந்த உயிரிக்கும் காணக் கிடைக்காத ஒன்றை தான் காணப்போகிறோம் என்ற நினைப்பே அவரை ஆராய்ச்சிக்கூடத்தில் பிடித்து நிறுத்தியது. அதுவே இப்பூமியின் அத்தனை கட்டுக்களிலிருந்தும் அவரைத் தளர்த்தி விடுவிக்கவும் செய்தது.

சரியாக ஒரு வருடத்துக்குப் பிறகு அதே கதிரலைகள். ஆனால் இன்னும் அதிக தொலைவிலிருந்து வந்திருப்பதாகத் தெரிந்தது. இந்த முறை இன்னுமின்னும் வீரியமாகத் தோன்றின. அவற்றை மீத்திறன் கணினியில் உள்ளீடு செய்து வரைபடங்களாக எடுத்தார். பெரிய உச்சியிலிருந்து சட்டென்று வீழ்ந்து பின் பாதாளத்துக்குத் தாவும்படியான வரைபடமே வந்து நின்றது. அவற்றைப் பின்பு எண்களாக மாற்றிப் பார்த்தார். ஒவ்வொருமுறையும் கதிரலைகளின் வீரியம் 13, 1, 21, 13, 1, 21 … என்ற தொடர் எண்களாகவே பதிவாகின. அதை வரைபடத்தில் குறித்தபோது அவை இதயத்தின் ஒலிப்பை விளக்கும் இ.சி.ஜி-யை ஒத்திருந்தன.

அடுத்தடுத்த நாட்களில் இதே அளவீடுகளே திரும்பத் திரும்ப வந்துகொண்டிருந்தன. தொடர்ச்சியாக இவ்வலைகள் தோன்றியது குறித்து விஸ்வநாதனுக்கு  மிகுந்த உற்சாகம் ஏற்பட்டாலும் அங்கிருந்து அவரால் மேல் செல்ல முடியவில்லை. ஒரு பக்கம், இது உலகின் ஒட்டுமொத்த இயங்கியலைக் குறிக்கும் சமிக்ஞையோ என்ற நினைப்பு பெரும் உற்சாகத்தையும் ஆனால் அதை நிரூபிக்க கிடைக்காத ஆதாரங்கள் கடும் மன அழுத்தத்தையும் அவருக்குக் கொடுத்தன. அவர் அடுத்த நான்கு நாட்களுக்கு வீட்டுக்குக்கூடச் செல்லவில்லை. திரும்பத் திரும்ப அதே எண்கள், அதே அலைவரிசை. செங்குத்தாக மேலெழுந்து கீழே விழும் வரைபடம். அவற்றுக்கு மேலதிகமாக எதுவும் கிடைக்கவில்லை. ஐ.ஐ.டிகளில் கணிதப் பேராசிரியர்களாக இருக்கும் அவரின் நண்பர்களின் துணைகொண்டு இவ்வெண்களுக்கு இடையே இருக்கும் தொடர்பை, அவ்வரைபடம் விளக்க விழையும் செய்தியைப் புரிந்துகொள்ள முயற்சித்தார். இவற்றை மீத்திறன் கொண்ட கணினியின் வழியே பல்லாயிரக் கணக்கான கணிதச் சமன்பாடுகளில் உள்ளீடு செய்து ஆராய்ந்தார். எதுவும் பலனளிக்கவில்லை. சொல்லிக்கொள்ளும்படியாக எந்த முடிவையும் எட்ட முடியவில்லை. இவற்றிலிருந்து எதையாவது புரிந்துகொள்ள முடிந்தால் மட்டுமே அதற்கேற்ப பதிலலைகளை இங்கிருந்து அனுப்ப முடியும். அதுவே இவ்வாராய்ச்சியை அடுத்த நிலைக்கு எடுத்துச் செல்ல உதவும். இல்லாவிட்டால், இது வெறும் வேடிக்கைச் செய்தி என்ற அளவில் மட்டுமே அறிவுசார் உலகில் நின்றுவிடும். அதை விஸ்வநாதன் நன்றாக உணர்ந்திருந்தார்.

நான்காவது நாளுக்குப் பிறகு அவ்வலைகள் வருவதும்கூட நின்றுபோனது. அவ்வலைகளின் வருகை எத்தனைக் கெத்தனை உற்சாகமளித்ததோ அதன் புதிர்த்தன்மையும் மறைவும் அதற்கு இணையாக சோர்வையும் தளர்வையும் அளித்தது.

ஐந்தாவது நாள் இரவு வீட்டுக்கு வந்தார். வீட்டில் போட்ட பொருட்கள் போட்டபடி இருந்தன. வீடெங்கும் தூசி படிந்து இருந்தது. இதுவரை இவையெல்லாம் இவர் கண்ணில் பட்டதேயில்லை. அணிந்திருந்த உடையைக்கூட களைய மனமில்லாமல் சோபாவிலிருந்த தூசியைத் தட்டிவிட்டு அமர்ந்துகொண்டார். யாரிடமாவது பேச வேண்டும்போல் இருந்தது. மூத்தவளை மொபைலில் அழைத்தார். தான் கல்லூரியிலிருந்து திரும்பிக்கொண்டிருப்பதாகவும் பிறகு வீட்டுக்குச் சென்று அழைப்பதாகவும் சொல்லித் துண்டித்துவிட்டாள். இளையவளுக்கு அழைத்தபோது பதிந்துவைத்த பதில் மட்டுமே கிடைத்தது. வாழ்வில் முதல்முறையாக வெறுமையை உணர்ந்தார். உமாவின் நினைவு வந்தது. கூடவே குற்ற உணர்வும் சேர்ந்து வந்தது. மொபைலில் உமாவினுடைய தொடர்பு எண்ணைத் திறந்து பார்த்தார். கால் ஹிஸ்டரியில் கடைசியாக அவ்வெண்ணிலிருந்து வந்த தவறவிடப்பட்ட அழைப்புகள் பதிவாகியிருந்தன.

தலையை உயர்த்தி சுழன்றுகொண்டிருந்த மின் விசிறியைப் பார்த்தார். எழுந்து சென்று மின்விசிறியையும் எரிந்துகொண்டிருந்த விளக்குகளையும்  அணைத்தார். வரவேற்பறையிலிருந்து பால்கனியைப் பிரித்த, அகன்ற பிரஞ்ச் மாடல் கண்ணாடிக்கதவைத் திறந்து பால்கனிக்கு வந்தார். அங்கே போடப்பட்டிருந்த பிரம்பு நாற்காலியில் அமர்ந்தார். இளம் குளிர் காற்று தலையைக் கோதியது. வானம் மேகமின்றி திறந்திருந்தது. அதையே உற்றுப் பார்த்துக்கொண்டிருந்தார். அப்படியே உறங்கிப் போனார்.

கனவிலும் அந்த எண்தொடரே திரும்பத் திரும்ப தோன்றியது. அவை குழந்தைகள் விளையாடும் பொம்மை ரயிலைப் போல இவரைச் சுற்றிச் சுற்றி வந்தது. நடு நடுவே சில ஆங்கில எழுத்துக்களும் தோன்றின. ஆனால், அவை தோன்றுவதும் மறைவதுமாய் மின்னிக்கொண்டிருந்தன. இவர் வானத்தை அண்ணாந்து பார்த்தபடி டைனமோ பழுதான பழைய சைக்கிளில் சென்றுகொண்டிருக்கிறார். அவ்வெண்களின் தொடர்வரிசை நின்றுபோய் 21, 13, 1 ஆகிய மூன்றே மூன்று எண்கள் மட்டும் இவரைச் சுற்ற ஆரம்பித்தன. சட்டென்ற நொடியில் ஏதோ புரிபட, ஆங்கிலத்தின் ஏ, பி, சி என்று ஒவ்வொரு எழுத்துக்கும் வரிசையாக ஒன்று, இரண்டு என்று எண்கள் அளித்து, அவ்வெண்களுக்குச் சரியாகப் பொருந்தும் ஆங்கில எழுத்துக்களை கண்முன் சுழன்றுகொண்டிருந்த அம்மூன்று எண்களுக்கும் ஒவ்வொன்றாக எடுத்துப் பொருத்தினார். இதுவரை அவர் இப்படியான எளிய முறையை யோசிக்கவே இல்லை. அறிவியல் சொல்லிக்கொடுத்த முறையிலிருந்து பிறழாமல் நின்றவர், இப்படிச் சற்று மாற்றிப்போட்டதும் கிடைத்த அவ்வார்த்தையை அவரால்  நம்ப முடியவில்லை. இது வெறும் தற்செயல் என்றே கனவிலும் விழிப்போடிருந்த அவரின் தர்க்க மனம் பலமாக வாதிட்டது. ஆனால், அது தற்செயல் அல்ல என்பதையே ஆழமாக நம்பினார். இப்போது அவ்வெண்களும் ஆங்கில எழுத்துக்களும் ரிப்பன் போல மாறி இவரின் தலை முதல் கால் வரை சுற்றிக்கொண்டு அவரை இறுக்கின. நெஞ்சு படபடவென்று அடித்துக் கொண்டது. சைக்கிளை ஆன மட்டும் வேக வேகமாக அழுத்தினார். மூச்சு வாங்கியது. தலையிலிருந்து கால் வரை வியர்த்துக்கொட்டியது. உடல் அதீதமாய் கனத்துச் சோர்ந்தது. இதுவரை உணர்ந்திருந்தாத பாரம் நெஞ்சை அழுத்தியது. இப்போது அந்த எண்கள் மறைந்து அவ்வெழுத்துக்கள் மூன்றும் இவரைச் சுற்றிச் சுற்றி வந்தன. இவர், சைக்கிளில் அமர்ந்தபடி இடது கையால் ஹாண்டிலை இறுக்கமாகப் பிடித்துக்கொண்டு  வலது கையால் அவற்றை விலக்கித் தள்ளிவிட்டுக்கொண்டிருந்தார். எதிரே கண்கூசும்படி முகப்பு விளக்கை ஒளிரவிட்டபடி பேருந்து ஒன்று வேகமாய் வந்தது.

கார்த்திக் பாலசுப்ரமணியன்

சென்னையில் வசித்துவரும் கார்த்திக் பாலசுப்ரமணியன், புனைவு பரப்பிலும், விமர்சன பரப்பிலும் தொடர்ந்து இயங்கிவருகிறார். டொரினா என்ற சிறுகதைத் தொகுப்பும், ‘நட்சத்திர வாசிகள்’ என்ற நாவலையும் வெளியிட்டுள்ளார்.

உரையாடலுக்கு

Your email address will not be published.