எனக்குச் சொந்தமான ஒரு வீட்டில் மூன்றாம் மனிதனைப் போல ஸோஃபாவின் நுனியில் அமர்ந்திருப்பதற்கு ஒரு மாதிரி இருந்தது. என்னுடைய முதுகு இருக்கும் நிலைமைக்கு அப்படி உட்காரவே கூடாது.
ஹேமாவையாவது உடன் அழைத்து வந்திருக்கலாம். இது போன்ற சூழலை அவளால் எளிதாகச் சமாளிக்க முடியும். ‘இப்படியெல்லாம் நடக்கும்ன்னு யார் எதிர்பார்த்தா’ என்பது போன்று காற்றிலிருந்து வார்த்தைகளை எடுத்துக் கோத்து பொத்தாம் பொதுவாக பேச்சைத் தொடங்கிவிடுவாள். எல்லாவற்றையும் போல இதிலும் நான் அவளுக்கு நேரதிர். ஒரு பக்கம் அவளும் அம்மாவும் கணபதி ஹோமத்துக்கு ஆள் தேட ஆரம்பித்துவிட்டார்கள்.
யாராவது இந்த அமைதியைக் கலைத்தால் நன்றாக இருக்கும் என்று நினைத்தபோதுதான் அருணின் மைத்துனர் என்று அவர் தம்மை அறிமுகப்படுத்திக்கொண்டார். ஸோஃபாவுக்கு இடப்பக்கம் இருந்த நாற்காலியை இழுத்துப் போட்டு அமர்ந்தார். சற்று நேரத்தில் அருணின் மனைவியும் உள்ளறையிலிருந்து ஹாலுக்கு வந்தாள். அவள் ஸோஃபாவுக்கு வலப்பக்கம் இருந்த நாற்காலியில் அமர்ந்துகொண்டாள். இருவருக்கும் பத்து வருடங்களாவது வயது வித்தியாசம் இருக்கக் கூடும்.
எங்கிருந்து எப்படித் தொடங்க வேண்டும் என்று காரில் வரும்போது செய்துகொண்டு வந்த ஒத்திகை எதுவும் கைகொடுக்கவில்லை. கடிகாரத்தின் நொடி முள் நகர்ந்து எழுந்து வந்த ‘டிக் டிக்’ சத்தம் அச்சூழலை இன்னும் அழுத்தமாக்கியது.
அவர்கள் இருவரும் வந்து அமர்ந்ததும் நான் ஸோஃபாவில் முதுகை நன்றாகச் சாய்த்து அமர்ந்துகொண்டேன். முதுகு வலிக்குச் சற்று ஆசுவாசமாக இருந்தது. இப்போதெல்லாம் வலி இல்லாமல் இருக்கும் நேரத்தைக் கணக்கில் வைத்துக்கொள்வது எளிதாக இருக்கிறது.
சின்ன விபத்து; வால் எலும்பில் அடி. தேவையற்ற எலும்புதான். அதில் தொந்தரவு ஏற்படாத வரை ஒரு பிரச்சினையும் இல்லை. ‘கடைசியாக மனிதன் குரங்காக இருக்கும்போது பயன்படுத்திய உறுப்பு என்பதால் உடலின் மற்ற பாகங்களைப் போல அதற்குத் தன்னைத் தானே குணப்படுத்திக்கொள்ளும் தன்மை கிடையாது. எனவே, பட்ட காயம் ஆறுவதில் சிக்கல் இருக்கிறது.’ என்று டாக்டர் சொல்லிவிட்டார்.
மாதக் கணக்காக வலி தொடர்கிறது. அன்று, மடிப்பாக்கத்திலிருந்து கேளம்பாக்கம் வரை காரை ஓட்டிக்கொண்டு வந்ததில் வலி முளை விட ஆரம்பித்திருந்தது.
அருணின் மைத்துனர், “கரெண்ட் இல்ல. இப்போதான் போச்சு. செத்த நேரத்துல ஜெனரேட்டர் ஆன் பண்ணிடுவாங்க.” என்றார்.
‘சரி’ என்பதாக மையமாக தலையசைத்து வைத்தேன்.
அப்போதுதான் கவனித்தேன். ஹாலின் நடுவில் சமையலறையைப் பிரித்து எழுப்பட்டிருந்த சுவரில் மாட்டப்பட்ட கண்ணாடியில் மரச் சட்டம் மட்டும் மிச்சமிருந்தது. கண்ணாடி இல்லை.
அச்சுவரில் ஒரு கண்ணாடி வைக்க வேண்டும் என்பது அம்மாவின் கோரிக்கை. மனை சாஸ்திரம், ஜாதகம், நட்சத்திரம், கோள் போன்றவற்றில் எல்லாம் அவளுக்கு நம்பிக்கை அதிகம். ஹாலிலிருந்து சமையலையறையைப் பிரிக்கும் அவ்விடத்தில்தான் மொத்த மனையின் நடுப்பகுதி அமைந்திருக்கிறது. மனை சாஸ்திரப்படி அப்பகுதிக்கு பிரம்மஸ்தானம் என்று பெயராம். அப்பகுதியில் தூணோ பொருளோ வைத்து அடைக்காமல் திறந்தபடி இருப்பது வீட்டுக்கு நன்மை பயக்கும் என்கிறது மனை சாஸ்திரம். கட்டடப் பொறியியலோ வீட்டின் தாங்கு சக்திக்காக அங்கே ஒரு சுவரை எழுப்பி வைத்திருந்தது. இம்மீறலை நிவர்த் தி செய்யும் விதமாக அச்சுவரில் ஒரு பெரிய கண்ணாடியை மாட்டி வைக்க வேண்டும் என்று சொல்லி எங்கள் வீட்டிலிருந்த ஒரு பூர்வீகக் கண்ணாடியைக் கொண்டு வந்து அங்கே மாட்டினாள்.
அது அம்மா வழித் தாத்தாவுடையது. சொல்லப் போனால் அவர் காலத்துக்கும் முந்தையது. இப்போது போல வெள்ளிப் பூச்சாக இல்லாமல் பின் பக்கத்தில் பாதரசம் பூசி மரச் சட்டகத்தில் பொருத்தப்பட்டிருந்தது. அப்போதே ஓரங்களில் லேசாக இருட்டடிக்கத் தொடங்கியிருந்தது.
“கண்ணாடிகூட மனுஷா போலத்தான். உள்ளே ஹுமிட் ஆகி புழுங்கினா வெளியே கறுத்திட்டு வந்துடும்.” என்று அம்மா அதற்குத் தனி விளக்கம் வேறு கொடுத்தாள்.
அந்த அறையில் அமைதி நீடித்தது. அருணின் மைத்துனர் அவர் அமர்ந்திருந்த நாற்காலியின் கைப்படியிலிருந்த அழுக்கை வண்டிச் சாவியால் மும்முரமாகச் சுரண்டிக்கொண்டிருந்தார். அருணின் மனைவி அச்சூழலுக்கும் தனக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை என்பதைப் போல ஃபோனை எடுத்து பார்த்துக்கொண்டிருந்தாள். அலுவலகத்துக்குக் கிளம்புபவளைப் போல, சுத்தமாகத் துவைத்து இஸ்திரி செய்த சுரிதார் அணிந்திருந்தாள். அப்போதுதான் தூங்கி எழுந்து முகம் கழுவியதைப் போன்ற தோற்றம். அலங்காரம் தேவைப்படாத அபூர்வமான அழகுடன் இருந்தாள். ரொம்பவும் இயல்பாக வேறு எதையோ பார்ப்பதைப் போல கண்கள் அவள் பக்கமாக அவ்வப்போது போய்ப் போய் திரும்பின.
கீழே ஜெனரேட்டர் இயக்கப்பட்டச் சத்தம் கேட்டதும் ஃபேன் ஓடத் தொடங்கியது. சாய்ந்து அமர்ந்து இருந்ததால் வியர்வை முதுகில் அப்பியிருந்தது. விலகி முன்னால் நிமிர்ந்து அமர்ந்தால் முதுகு வலித்தது. சீக்கிரம் அங்கிருந்து கிளம்பினால் பரவாயில்லை என்று நினைத்துக்கொண்டேன். கடைசியில், நானே ஆரம்பித்தேன்.
“நியூஸ் கிடைச்ச அன்னைக்கே வந்தேன். நீங்களெல்லாம் ஃபார்மால்ட்டிஸ் முடிக்க போலீஸ் ஸ்டேஷன் வரை போயிருக்கீங்கன்னு அப்பார்ட்மண்ட் செக்ரட்டரி சொன்னார்”.
“ஆமாமா, எல்லாம் முடிஞ்சு வீட்டுக்கு வர நைட் பதினோரு மணிக்கு மேல ஆகிடுச்சு. செக்ரட்டரி சார் ரொம்ப நல்ல மாதிரி. கூட இருந்து நிறைய ஹெல்ப் பண்ணார்.”
அலுவலகத்துக்கு அவசரமாகக் கிளம்பிக்கொண்டிருந்தபோது அசோஸியேசன் செக்ரட்டரி பரந்தாமன்தான் அழைத்து விசயத்தைச் சொன்னார். செய்தியை ஜீரணிக்கவே எனக்குச் சில நிமிடங்கள் பிடித்தது.
அருணுக்கு அதிகபட்சம் இருபத்தேழு இருபத்தெட்டு வயதிருக்கும். குழந்தை பிறந்து ஆறேழு மாதங்கள்தான் ஆகியிருந்தன. இந்தப் பெண்ணுடன் கையைக் கோத்தபடி பீச்சில் வைத்து எடுத்திருந்த படத்தையே வாட்ஸப் டி.பி. ஆக வைத்திருந்தான். திருமணமான புதிதில் இங்கே குடி வந்தார்கள். தனிக் குடித்தனம். பெரிய பிக்கல் பிடுங்கல் இருக்காது என்பதால் அதிகம் வாதாடாமல் அவன் சொன்ன வாடகைக்கு ஒப்புக்கொண்டேன். அவனும் பிரதி மாதம் ஒன்றாம் தேதி ஜி-பேயில் வாடகையை அனுப்பிவிடுவான். நகரின் பிரதான பில்டர்ஸ் ஒன்றில் கட்டடப் பொறியாளனாக வேலை பார்ப்பதாகச் சொன்னான். வாஷ்பேஸின் குழாயை மாற்ற வேண்டும் என்றால்கூட ஒரு வார்த்தை சொல்லிவிட்டுத்தான் செய்வான். ரொம்பவும் நல்ல மாதிரியாகத்தான் நடந்துகொண்டான்.
செக்கரட்டரி பேசும்போது நான் இருக்கும் தொலைவை மனதில்கொண்டே தற்போது உடனடியாக அங்கே வரத் தேவையில்லை என்றும் தகவல் சொல்வதற்காகவே தான் அழைத்ததாகவும் சொன்னார். இருந்தாலும் மனம் கேட்காமல் அலுவலகத்துக்கு அழைத்து பெர்மிஷன் சொல்லிவிட்டு கேளம்பாக்கத்துக்குக் கிளம்பினேன். நான் வந்து சேர்ந்தபோது வீடு பூட்டியிருந்தது. வெளியே மாட்டியிருந்த எல்.இ.டி. பல்ப் எரிந்துகொண்டிருந்தது. ஒரு தற்கொலை நடந்ததற்கான எந்தத் தடயமும் அப்போது இங்கிருக்கவில்லை. இது ஒரு கேட்டட் கம்யூனிட்டி அப்பார்ட்மண்ட். அந்தத் தளத்தைத் தவிர மற்ற தளத்திலிருப்பவர்களுக்கு இது பற்றித் தகவலாவது தெரிந்திருக்குமா என்று சந்தேகமாகவே இருந்தது. துப்புரவுத் தொழிலாளர்கள் காய்ந்த இலைகளைக் கூட்டி அள்ளிக்கொண்டிருந்தனர். யூனிஃபார்ம் அணிந்த செக்யூரிட்டிகள் வேப்ப மர நிழலில் அமர்ந்து சாப்பிட்டுக்கொண்டிருந்தனர். பேரிளம் பெண்ணொருத்தி சாப்பிட்டுக் கொண்டிருந்தவர்களிடத்தில் கிண்ணத்தில் எதையோ எடுத்து வந்து கொடுத்தாள். கட்டம் போட்ட சட்டை அணிந்த வயதான பெரியவர் பார்க்கில் அமர்ந்து யூ-டியூப் வீடியோ பார்த்துக்கொண்டிருந்தார். யாரும் போய்ச் சொன்னால்தான் இப்படி ஒரு நிகழ்வு நடந்ததே தெரியும் என்பதுபோல மற்ற அனைவரும் அவரவர் இயல்பிலிருந்தனர்.
“சித்தப்பா ஒருத்தர் ஈபி.ல இருக்கார் சார். யூனியன்ல பெரிய கை. அவருக்குக் கொஞ்சம் ஆளும் கட்சி பழக்கமுண்டு. அவர் மூலமாப் போனதால ரொம்ப இழுத்தடிக்காம சீக்கிரம் முடிஞ்சது. இல்லன்னா இன்னும் ரொம்பவே சிரமப்பட வேண்டியிருந்திருக்கும்.” என்றார்.
“எனக்கே ரொம்பவும் ஷாக். எதிர்பார்க்கவே இல்லை. ரொம்ப நல்ல மனுஷன். தேவைக்கு அதிகமா ஒரு வார்த்தை பேச மாட்டார்.” என்று ஒப்புக்கு என்னவோ உளறினேன்.
அப்போது அவர் லேசாக மூச்சை இழுத்துவிட்டுவிட்டு இறுக்கமாக புன்னகைத்தார். உங்களுக்குத் தெரிந்தது அவ்வளவுதான் என்பதுபோல இருந்தது அப்புன்னகை.
“நல்லவர்தான். அப்படி ரொம்பவும் மூடியா இருக்கக் கூடாது சார். பேசணும் சார். மனசுவிட்டுப் பேசி சண்டை போட்டாக்கூட அத்தோட போயிடும். உள்ளுக்குள்ளயே போட்டு அடைச்சு அடைச்சு வச்சிருந்தா இப்படித்தான் ஆகும். சுத்தி மக்க மனுஷர்ட்டப் பழங்காம செய்யாம என்னத்த போங்க! அது இப்போ இவளையும் பிள்ளையையும் எங்க கொண்டு வந்து நிறுத்தியிருக்கு பாருங்க?” என்றவரின் குரல் ஆதங்கத்தில் அவரையே அறியாமல் ஓங்கி ஒலித்தது.
இதைப் பற்றிப் பேசிப் பேசி கேட்டுச் சலித்தவள் போலச் சலனமின்றி தலையைக் குனிந்தபடி அவள் அமர்ந்திருந்தாள்.
“எல்லாம் அவருக்கு வேலை போனதில ஆரம்பிச்சது சார். என்ன சார், ஒரு வேலை போனா இவ்வளவு பெரிய ஊருல இன்னொரு வேலை கிடைக்காதா? அதுலயும் இவர் தப்பு ஒண்ணுமில்ல. அந்த கன்ஸ்ட்ரக்ஷன் கம்பெனி ஏதோ வரவு செலவுல தப்புப் பண்ணி மாட்டிக்கிட்டாங்க. எடுத்த பிராஜெக்ட்ஸ சரியான நேரத்துல கொடுக்க முடியல. அதுகூடப் பிரச்சினையாகி நியூஸ்லலாம்கூட வந்ததே. அதுதான் தொட்டுத் தொட்டு பெருசாகி இவருக்கு வேலை போயிடுற அளவுக்கு வந்துடுச்சு. இன்னிக்குத் தேதிக்கு ரியல் எஸ்டேட் தொழிலே தகிடு தித்தம் போட்டுட்டுத்தான் இருக்கு. ரியல் எஸ்டேட்ன்னு இல்ல. எல்லா தொழிலுமே அப்படித்தான் இருக்கு. எவனைப் பார்த்தாலும் புலம்பத்தான் செய்யறான். எங்க பெரியப்பா பையன் ஒருத்தன் ஆட்டொமொபைல் கம்பெனில இருந்தான். திடீர்ன்னு வேலை போச்சு. அடுத்த இரண்டாவது முன்னே இருந்ததைவிட நல்ல சம்பளத்துல வேலை கிடைச்சுடுச்சு. என்ன, சென்னைலயிருந்து ஆமதாபாத்துக்கு மாத்திப் போக வேண்டியாதாப் போச்சு. அதுனால என்ன இப்போ? அட! வேலை கிடைச்சதே. அதுதானே பெரிய விசயம். என்னைக் கேட்டா ஆமதாபாத் சென்னையவிட ரொம்ப வசதிதான். டிராபிக் கம்மி. செலவும் கம்மி.
இப்படி ஒன்னு போனா இன்னொன்னு வரப் போகுது. என்ன அவனுக்கு இரண்டு மாசம்ன்னா இவருக்கு ஒரு நாலு மாசம் எடுக்கப் போகுது. அவ்வளவுதானே? எல்லாத்துக்கும் ஒரு நேரங் காலம் அமையணும்ல. காத்திருக்கணும் சார். அதுக்குப் பொறுமையில்லன்னா என்ன செய்ய? அவருக்கு மட்டுமா கஷ்டம். இப்பப் பாருங்க. அவர் ஈஸியா தப்பிச்சுட்டார். இதுங்கதான் மாட்டிக்கிட்டுச்சு. நாளைக்கு இங்க இருக்கிற ஒவ்வொருத்தருக்கும் இவதானே பதில் சொல்லிட்டு இருக்கணும். அதுல அவர் வீட்டுக்காரங்க வேற..” என்று எதையோ சொல்ல வந்தவர் சுதாரித்துக்கொண்டு அப்படியே நிறுத்தினார்.
ஒரு மூன்றாவது மனிதன் முன்னால் தன்னுடைய தனிப்பட்ட விசயங்கள் பகிரப்படுவதை அவள் எப்படி எடுத்துக்கொள்வாளோ என்ற சங்கடம் மேலிட நான் அவளைப் பார்த்தேன். அவள் மறுபடியும் ஃபோனை எடுத்து ஸ்க்ரோல் செய்யத் தொடங்கினாள். ஆனால், அவள் மனம் ஃபோனில் இல்லை என்பதை எனக்குப் புரிந்தது.
OOO
ஆரம்பத்தில் எப்படியாவது இன்னொரு வேலையை வாங்கிவிடலாம் என்ற நம்பிக்கையிலிருந்திருக்கிறான். நாட்கள், வாரங்கள் என்று நகர நகர, வேலைத் தேடிப் போன இடங்களிலெல்லாம் ஏமாற்றத்துடன் திரும்ப வேண்டியிருக்கவும்தான் பயம் ஆரம்பித்திருக்கிறது. கைக் குழந்தையோடு இவளும் வந்து சேர்ந்த நேரத்தில் இப்படி நிகழவும் அழுத்தம் இன்னும் கூடியிருக்கிறது. முதல் இரண்டு மாதங்களைக் கையிலிருந்த சேமிப்பை வைத்துச் சமாளித்து இருக்கிறார்கள்.
ஆரம்பத்தில் வேலை போன விசயத்தை நெருங்கிய வட்டத்தில்கூட சொல்லாமல் தாங்களே சமாளித்துக் கொள்ளலாம் என்று நினைத்திருக்கிறார்கள். ஒரு கட்டத்துக்கு மேல் வேறு வழியில்லாமல் நண்பர்கள் மற்றும் உறவினர்கள் வழியாக ஏதேனும் புதிய வாய்ப்புகள் கிடைக்கக் கூடும் என்று வெளியே தெரியப்படுத்தியிருக்கிறார்கள். எதிர்பார்த்ததைப் போலவே ஏகப்பட்ட அறிவுரைகள், ஆலோசனைகளோடு ஒன்றிரண்டு நேர்காணல்களுக்கும் அழைப்புகள் வந்திருக்கிறன. ஆனால், எதுவுமே வேலையாகக் கனியவில்லை.
நம்பிக்கையின் சரடுகள் ஒவ்வொன்றாக அறுபடத் தொடங்கியபோதுதான் அவளும் வேலை தேட ஆரம்பித்திருக்கிறாள். அவளுடையது ஐ.டி. துறை. முன்பு வேலைபார்த்த அனுபவம் கைகொடுக்க அவளுக்கு உடனடியாக வேலை கிடைத்திருக்கிறது. உண்மையில், அது சூழலை இலகுவாக்கியிருக்க வேண்டும். மாறாக, அச்சூழலை இன்னும் இறுக்கமாக்கியிருக்கிறது. குழந்தையைக் கவனித்துக்கொள்ள வென்று தனியாக ஓர் ஆள் வைத்துக்கொண்டார்கள். மீறியும் அருணும் ஒரு சில நாட்கள் குழந்தையைப் பார்த்துக்கொள்ள வேண்டியிருந்தது.
இதற்கிடையில், அவனுள் இருந்த ஈகோ தலை தூக்க, வீட்டில் தொட்டதற்கெல்லாம் சண்டை வெடிக்க ஆரம்பித்திருக்கிறது. அதே நேரத்தில், அவனுக்கு வேலையோ கிடைத்தபாடில்லை. பிரச்சினையின் ஆணி வேர் என்ன என்பது இருவருக்கும் புரிந்தேயிருந்தது. ஆனால், அதைக் களைவதற்கான வாய்ப்பு மட்டும் அவர்களுக்குக் கடைசி வரை கிடைக்கவே இல்லை.
அவள் அவனையும் ஐ.டி.க்கு மாறி வந்துவிடுமாறு கூறினாள் ஆனால் அவன் அதைக் காதில் போட்டுக்கொள்ளவேயில்லை. மாறாக அவள் வேலைபார்க்கும் சூழலை குறை சொல்ல ஆரம்பித்திருக்கிறான். தாழ்வுணர்ச்சி பொறாமையில் தள்ளி சந்தேக புத்தியை வளர்த்தெடுத்திருக்கிறது.
நாட்கள் செல்லச் செல்ல நிலைமை இன்னுமின்னும் மோசமடைய ஆரம்பித்திருக்கிறது. எப்போதாவது நண்பர்கள் சேரும்போது மட்டும் குடிப்பவன், தினமும் குடிக்க ஆரம்பித்திருக்கிறான். அதைப் பற்றிக் கேட்டால் நாள் முழுவதும் சண்டை. குடிக்காமல் இருக்கும் நாட்கள் இன்னும் நரகமாயிருக்கின்றன.
குழந்தை வந்த பிறகே தனக்கு வேலை போயிருக்கிறது என்று தன் இயலாமையில் பள்ளத்தை மூடநம்பிக்கையையிட்டு நிரப்பியிருக்கிறான்.
ஒரு நாள் நன்றாகத் தூங்கிக் கொண்டிருந்தவளை படபடவென தட்டி எழுப்பி, ஹாலுக்கு அழைத்திருக்கிறான். அப்போது, கண்கள் சிவந்து, தலைமுடியெல்லாம் கலைந்து, பித்தம் கொண்டவனைப் போல அவன் முகம் வெளிறிப் போயிருந்திருக்கிறது.
“ப்ரீத்தா ப்ரீத்தா.. என் முகமே கண்ணாடியில தெரிய மாட்டுது.”
அவனிடமிருந்து கிளம்பிய கடும் போதையின் நெடி அவளுக்கு எரிச்சலூட்டியது.
“என்ன உளற?”
“இல்ல இல்ல.. சும்மா யோசிச்சுட்டுத் தூக்கம் வராம படுத்துட்டு இருந்தேன். ஒன்னுக்குப் போக எழுந்தேன். அப்போ தற்செயலாப் பார்த்தேன். இந்தக் கண்ணாடில என் முகம் தெரியல. ஆனா, அதைத் தவிர மத்த எல்லாம் தெரியுது.”
அவள் அவனை முறைத்தபடி நின்றாள்.
“சீரியஸா டி.. விளையாட்டு இல்ல.”
“ப்ச்ச்.. கொஞ்சம் அமைதியாப் போய் படுக்குறியா?” என்று சொல்லி முகத்தைத் திருப்பிக்கொண்டாள்.
“அய்யோ.. நான் சொல்றது உனக்குப் புரியலையா?”
“எனக்கு நல்லாப் புரியுது.” என்று சொல்லி மூக்கின் பக்கமாக கையை அசைத்துக் காட்டினாள்.
“ஏய், அய்யோ அதில்லடி. இது வேற. இது வேற.”
“என்னவா வேணா இருக்கட்டும். அதுக்கு இதான் நேரமா?”
“இப்போதானே பார்த்தேன். அப்போ இப்போதானே சொல்ல முடியும்.”
“உனக்கு என் தூக்கத்தக் கெடுக்கணும். அதானே!”
“அப்படியில்ல. சத்தியமா சொல்றேன். நீயே கூட வந்து பாரேன்.”
“அய்யோ ஆண்டவா! என்னைக் கொஞ்சம் தூங்க விடுறியா? எதுவா இருந்தாலும் காலைல பேசிக்கலாம். நான் சீக்கிரம் எழுந்து ஆபிஸ்க்குப் போகணும்.”
“ஓ.. எனக்குப் புரிஞ்சுடுச்சு.. இப்போ புரிஞ்சுடுச்சு.”
“என்ன புரிஞ்சது?”
“உனக்கு சீவி சிங்காரிச்சுட்டு சிலுப்பிக்கிட்டு அங்க போயி நிக்கணும் அதானே!”
“அடச் சீ.. அசிங்கமா பேசாத!”
“ஆமாடி.. இப்போ நான் பேசுறதெல்லாம் உனக்கு அசிங்கமாத்தான் தெரியும். புதுசா அழகா நிறையத் தெரியுதுல. அப்போ பழசெல்லாம் அசிங்கமாத்தான் தெரியும்.”
இதற்கு மேல் பேசும் ஒவ்வொரு வார்த்தையும் மேலும் மேலும் பிரச்சினைக்கே வித்திடும் என்பதால் அவள் அதற்கு மேல் எதுவும் பேசாமல் இருந்திருக்கிறாள். அவனை எப்படிக் கையாள்வது என்று தெரியாமல் விக்கித்து நின்றிருக்கிறாள். அவன் நடத்தையால் ஒரு பக்கம் கோபம் வந்தாலும் மறுபக்கம் அவனைப் பார்க்கப் பாவமாகவும் இருந்திருக்கிறது.
அவள் எவ்வளவோ சமாதானம் செய்தும் அவன் எதையுமே காதில் போட்டுக் கொள்ளவில்லை. கடைசியில் அவனைத் திட்டி, படுக்கை அறைக் கதவை உட்பக்கமாகச் சாத்திவிட்டுத் தூங்கச் சென்றிருக்கிறாள்.
முதல் நாள் இரவில் கடும் போதையில் அவன் ஏதோ அப்படி உளறியிருக்கிறான் என்று தன்னைத் தானே சமாதானம் செய்துகொண்டு மறுநாள் விடிந்து எழுந்து வந்தால், அவன் அதே இடத்தில் நின்றபடி கண்ணாடியையே உற்றுப் பார்த்துக்கொண்டிருந்திருக்கிறான். அவனைக் கெஞ்சி சமாதானம் செய்து, மன்னிப்பு கேட்டு, சாப்பிட வைத்து உறங்கச் செய்திருக்கிறாள்.
நல்ல தூக்கம் அவனை இளைப்பாறச் என்று நம்பியிருக்கிறாள். ஆனால், அது அன்றோடு நிற்கவில்லை. மறுநாளும் அதற்கடுத்த நாட்களும் நள்ளிரவில் அதே பிரச்சினை தொடர்ந்திருக்கிறது. மீண்டும் மீண்டும் சண்டை. கூப்பாடு. தன் உருவமே மறைந்துவிட்டது என்று புலம்பல். அழுகை. இவர்கள் சண்டையில் குழந்தையும் விழித்துக்கொண்டு கத்தி அழ ஆரம்பித்திருக்கிறது. அவள் அலுவலகம் அங்கிருந்து இருபது கி.மீ. சீக்கிரம் எழுந்து கிளம்பினால்தான் நேரத்துக்குப் போய்ச் சேர முடியும். டிராஃபிக் ஆரம்பிக்கும் முன்னர் கிளம்ப வேண்டும். இவனை அமைதிப்படுத்தி உறங்க வைத்தால் மட்டுமே அவளால் சற்று நேரம் கண்ணயர முடியும்.
ஒரு நாள் இரவு அவளுடைய எந்தவித சமாதான முயற்சிகளும் கைகொடுக்காமல் போகவே, ஒரு கட்டத்தில் அவளும் கோபம் பொங்க அவனுக்கு மேலாகக் கத்திச் சண்டையிட்டு, ஆத்திரத்தில் ஹால் சுவரில் மாட்டியிருந்த கண்ணாடியைக் கையிலிருந்த தன்னுடைய ஃபோனை வைத்தே வெறி பிடித்தவளைப் போல அடித்து நொறுக்கியிருக்கிறாள்.
அவளுடைய இந்தச் செய்கையை அவன் எதிர் பார்த்திருக்கவில்லை. அதற்கு மேல் எதுவும் பேசாமல் அமைதியாக ஸோஃபாவிலேயே சுருண்டு படுத்துவிட்டிருக்கிறான்.
OOO
உள்ளறையிலிருந்து மொபைல் ஒலித்தது. பேசிக்கொண்டிருந்தவர் இடை நிறுத்தி, “ஒரு நிமிஷம் சார். இதோ வந்துடுறேன்” என்று சொல்லிவிட்டு அறைக்குள் சென்றார்.
இப்போது நானும் அவளும் மட்டும் இருந்தோம். அவள் மொபைலை அணைத்து மடியில் வைத்துக்கொண்டாள். இருவரும் பார்த்துக்கொண்டபோது சங்கடமாக இறுக்கமான புன்னகையைப் பரிமாறிக்கொண்டோம். நான் வீட்டில் மாட்டப்பட்டிருந்த புகைப்படங்கள், அலங்கரித்து அடுக்கி வைக்கப்பட்டிருந்த காட்சிப் பொருட்கள் என்று வேடிக்கை பார்த்தேன்.
திரும்ப வந்தவர் என்னிடம், “உள்ள சார்ஜ் போட்டிருந்தேன்.” என்று மொபைலைக் காட்டினார். அவள் பக்கமாகத் திரும்பி, “எழல.. நல்லா தூங்குறான்.” என்றார்.
முன்பிருந்த இடத்திலேயே வந்தமர்ந்து விட்ட இடத்திலிருந்து தொடர்ந்தார்.
அடுத்த சில நாட்கள் அவன் அதைப் பற்றி எதுவும் பேசவோ சண்டையிடவோ இல்லை. அதுவும் நீண்ட நாட்கள் நீடிக்கவில்லை. அந்தச் சம்பவத்துக்குப் பிறகு அவன் கத்தி சண்டையிடவில்லை என்றாலும் கண்ணாடியைப் பார்ப்பதை மட்டும் விடவில்லை.
காலையில் அவள் அலுவலகம் செல்லும் போது ஸோஃபாவில் அமர்ந்து கையில் முகம் பார்க்கும் கண்ணாடியை எடுத்து உற்றுப் பார்த்துக்கொண்டிருப்பான். சாயங்காலம் அவள் திரும்பி வரும்போது அவன் உடை மாறியிருக்கும். ஆனால், காலையில் பார்த்த அதே கோலத்தில் அப்படியே கண்ணாடியை வெறித்தபடி உட்கார்ந்திருப்பான். அவன் எப்போது தூங்குகிறான், எப்போது விழித்திருக்கிறான், சாப்பிடுகிறானா இல்லையா என்பது எதுவுமே அவளுக்குத் தெரியவில்லை. கேட்கவும் பயம். இதில் ஏதோன்றைப் பற்றி எப்போது பேசினாலும் அது கடும் சண்டைக்கு இட்டுச் சென்றதால் அவள் அதைப் பற்றிக் கேட்டுக்கொள்வதை நிறுத்தியிருந்தாள்.
ஆரம்பத்தில் வெறும் கவன ஈர்ப்புக்காக வேண்டுமென்றே அவன் அப்படிச் செய்வதாகத்தான் நினைத்தாள். ஒரு நாள் நடு இரவில் தண்ணீர் குடிக்க எழுந்தபோது உள்ளுணர்வு உறுத்த ஹாலுக்கு வந்திருக்கிறாள். மெல்லிய நீல விளக்கொளியில் அவன் கண்ணாடியை உற்றுப் பார்த்தபடி அமர்ந்திருக்கிறான்.
இவள் பின்னாலிருந்து அவன் தோளைத் தொட்டதும் அவன் சட்டென்று உடைந்து, “நான் பொய்லாம் சொல்லலம்மு. வேணும்ன்னும் பண்ணல. உண்மையிலேயே என் உருவம் எனக்குத் தெரிய மாட்டுது” என்று சொல்லி அவளை இடுப்போடு கட்டிக்கொண்டு ஒரு குழந்தையைப் போல விக்கி அழுதிருக்கிறான். அவனைச் சமாதானப்படுத்தித் தூங்க வைத்தபோது அவளுக்குத் தூக்கம் முற்றிலுமாக தொலைந்து போயிருக்கிறது.
இரண்டு படுக்கையறைகள், குளியலறைகள், வாஷ் பேஸின் என்று மறுநாள் வீட்டிலிருந்த அத்தனை கண்ணாடிகளையும் அப்புறப்படுத்தியிருக்கிறாள். தலை பின்னி முகம் பார்த்துக்கொள்ள வென்று ஒரே ஒரு கண்ணாடியை மட்டும் அவன் கண்ணில் படாதபடி படுக்கைக்கு அடியில் ஒளித்துவைத்துப் பயன்படுத்திக்கொண்டாள்.
ஒரு மாறுதலுக்காக எங்காவது வெளியே போய் வந்தால் நன்றாக இருக்கும் என்று முடிவு செய்து அவர்கள் முன்பு வழக்கமாகச் சென்று வரும் உணவகத்துக்குப் போய் வரத் திட்டமிட்டிருக்கிறாள். வர மறுத்துவிடுவானோ என்று தயங்கித் தயங்கியே அவனைக் கேட்டிருக்கிறாள். மாறாக, உடனே அவன் வர ஒப்புக்கொண்டிருக்கிறான். கீழ் தளத்திலிருக்கும் வாகனம் நிறுத்துமிடத்துக்கு வந்து பைக்கை வெளியே எடுக்கும் வரை சரியாகவே நடந்து வந்தவன், சட்டென்றெ ஒரு கணத்தில் பைக்கை அப்படியே நிறுத்திவிட்டு தான் வரவில்லை என்று சொல்லி விறுவிறுவென்று மாடியிலிருக்கும் அவர்கள் வீட்டுக்கே திரும்பிச் சென்றிருக்கிறான்.
பைக்கில் ஏறி அமரும் முன்னர் அவன் கண்ணாடியைத் திருப்பியதை அவள் கவனிக்காமல் இல்லை.
சம்பவம் நடந்த நாளன்று காலை, குழந்தைக்காக வைத்திருந்த பால் திரிந்துபோயிருக்கிறது. அவனைக் கடைக்குப் போய் வாங்கி வரச் சொல்லி அனுப்பியிருக்கிறாள். அவன் பாலோடு குவார்ட்டர் ஒன்றையும் வாங்கிவந்து நடு ஹாலில் அமர்ந்து குடிக்க ஆரம்பித்திருக்கிறான்.
அதைப் பற்றிக் கேட்கவும் மாறி மாறி வாதிடவும் சண்டை பெரிதாகியிருக்கிறது. இந்த முறை அவளைவிடப் பல மடங்கு தன் சத்தத்தை உயர்த்தியிருக்கிறான். இரும்பு பீரோவை காலால் எட்டி மிதித்து வேண்டுமென்றே சத்தம் எழுப்பியிருக்கிறான். பக்கத்து வீடுகளுக்குக் கேட்கக் கூடுமே என்று இவள் கூசி குறுகியிருக்கிறாள். அவள் அப்படிக் குறுகி நின்று கெஞ்சுவது அவனைத் தூண்டியதோ என்னவோ இன்னும் அதிகமாக வெறிபிடித்தவனைப் போல அதைச் செய்திருக்கிறான். அச்சத்தத்தில் குழந்தை வீரிட்டு அழ ஆரம்பிக்கவும் அதற்கு மேல் அங்கிருப்பது நல்லது அல்ல என்றெண்ணி குழந்தையைத் தூக்கிக்கொண்டு கீழேயிருக்கும் சிறுவர் பூங்காவுக்குச் சென்று அமர்ந்திருக்கிறாள்.
“போட்டிருந்த நைட்டியோட போயிருக்கா சார். ஒரு வார நாள் காலைல ஊரே எப்படி பரபரன்னு இருக்கும்? இவ மட்டும் கைக் குழந்தையோட போய் பார்க்ல உக்கார்ந்து அழுதுட்டு இருந்திருக்கிறா. குழந்தைய அமைதி பண்ணி தன்னையும் சமாதானம் பண்ணிட்டு இருந்திருக்கா. அப்படியே அரை மணி நேரம் போனதும் கொஞ்சம் மனசத் தேத்திக்கிட்டு மேல வந்திருக்கா. மெயின் கதவு உள்ள பூட்டியிருக்கு. காலிங் பெல் அடிச்சிருக்கா. கதவைத் தட்டித் தட்டிப் பார்த்திருக்கா. எதுக்கும் பதில் இல்லை. கதவைத் தட்டித் தட்டிச் சோர்ந்துபோயி வாசல்லயே உக்கார்ந்து அழுதுட்டு இருந்தவளைப் பக்கத்து வீட்டுல இருக்கிற எலக்ட்ரிக்கல்ஸ்காரர்தான் பார்த்து கதவைத் திறக்க ஆள் ஏற்பாடு பண்ணி கொடுத்திருக்கார். உள்ளே போயி பார்த்தா, அவரு உள்ள பெட்ரூம்ல இவளோட புடவைய ஃபேன்ல கட்டித் தொங்கிட்டு இருக்காப்ல. அதுவும் இவங்களோட கல்யாணப் புடவைய!”
மறுபடியும் அங்கே அமைதி நீடித்தது. யாரும் எதுவும் பேசிக்கொள்ளவில்லை. ஃபேன் ஓடும் சத்தம் மட்டும் கேட்டது. அவ்வளவு நேரம் உட்கார்ந்திருந்ததில் எனக்கு அடி முதுகு குத்த ஆரம்பித்திருந்தது. சிலருக்கு வாலெலும்பு தலையில் முளைத்துவிடுகிறது என்று நினைத்துக்கொண்டேன்.
அவளைப் பார்த்தேன். அவளிடமிருந்து எந்தவிதச் சலனமும் இல்லை. தரையை வெறித்தபடி அமர்ந்திருந்தாள்.
அமைதியைக் கலைத்து அவரே தொடர்ந்தார்.
“அவர் தொங்கிட்டிருந்த இடத்துக்குக் கீழ, பெட்டு மேல அவ ஒளிச்சு வச்சிருந்த கண்ணாடி கிடந்திருக்கு சார். எப்படியோ கண்டுபிடிச்சு எடுத்திருக்கான் பாருங்க. அப்படி என்னத்ததான் கண்டானோ அந்த மனுசன் அதுல? இவ்ளோலாம் வளர விட்டிருக்கக்கூடாது சார். முன்னமே இவ கிளம்பி வந்திருக்கணும்” என்றார்.
அதற்கு மேல் வலி தாள முடியாமல் நான் மெதுவாக எழுந்து நின்றேன். அப்போது அவள் பார்வையைத் தரையிலிருந்து எடுக்காமல், அமைதியான குரலில், “உள்ளே போனதும் நான் அந்தக் கண்ணாடியப் பார்த்தேன். அதிலே வெறும் புடவையும் ஃபேனும் மட்டும்தான் தெரிஞ்சது.” என்றாள்.
கார்த்திக் பாலசுப்ரமணியன்
சென்னையில் வசித்துவரும் கார்த்திக் பாலசுப்ரமணியன், புனைவு பரப்பிலும், விமர்சன பரப்பிலும் தொடர்ந்து இயங்கிவருகிறார். டொரினா என்ற சிறுகதைத் தொகுப்பும், ‘நட்சத்திர வாசிகள்’ என்ற நாவலையும் வெளியிட்டுள்ளார்.
சிறந்த பல நல்ல தகவல்கள் சிந்தனைக்கும்
தனக்கு வேலை கிடைக்கவில்லை, ஆனால் ம்னைவியின் சபாத்தியத்தி வாழ நேரிடும் மன அழுத்தம் கதையில் நன்றாக வளர்ந்து வலிமையாக்கியிருக்கிறது. மனைவியே ஆனாலும் கேவலம் அவள் பெண்தான். ஆண் என்ற அகம்பாவம் நம் மரபில் தொன்றுதொட்டே பதிவான ஒரு குணம். அதனால்தான் மனைவிக்கு வேலை கிடைதத்தும் தான் சிறுமைப்பட்டதாய் உண்டான மனக் கிலேசம் அவனைத் தற்கொலை வரை வீழ்த்தியிருக்கிறது. நல்ல கதை.