/

கே.என் செந்திலின் விருந்து: சுரேஷ் பிரதீப்

தமிழில் குறுங்கதை என்ற வடிவத்தின் முன்னோடி என யுவன் சந்திரசேகரை சொல்லலாம்‌. தாயம்மா பாட்டியின் நாற்பத்தோரு கதைகள், இருபத்து மூன்று காதல் கதைகள் போன்ற கதைகளின் வழியாகவும் மணற்கேணி, தலைப்பில்லாதவை போன்ற குறுங்கதை தொகுப்புகளின் வழியாகவும் விரிவான தளத்தில் குறுங்கதைகளை யுவன் சந்திரசேகர் எழுதி இருக்கிறார். அராத்து தற்கொலை குறுங்கதைகள்,சயனைட் குறுங்கதைகள் என சில தொகுதிகளை கொண்டு வந்திருக்கிறார். கொரோனா பொது முடக்க காலத்தில் எஸ்.ராமகிருஷ்ணன்(கர்னலின் நாற்காலி), சுரேஷ்குமார இந்திரஜித் (பின்னணி பாடகர்),பெருந்தேவி (ஹைன்ஸ் ஹால் கட்டிடத்தில் வாழும் பேய்) சி.சரவண கார்த்திகேயன்(69) ஆகியோரின் குறுங்கதை தொகுப்புகள் வெளியாயின. இப்பட்டியலில் எழுத்தாளர் அராத்துவுடைய குறுங்கதைகள் சற்று பலகீனமான கூறுமுறை கொண்டவை. நாவலை ஒப்பிட சிறுகதையும் சிறுகதையை ஒப்பிட குறுங்கதையும் எழுதுவதற்கு சவாலான வடிவங்கள் என்று தோன்றுகிறது. அதாவது எழுதும் தருணத்தில் சவாலை அளிக்கக்கூடிய வடிவமென குறுங்கதையைச் சொல்லலாம். கே என் செந்திலின் விருந்து தொகுப்பினைப் பற்றி பேசுவதற்கு முன் குறுங்கதை வடிவத்தின் மீதான அபிப்ராயம் மற்றும் எதிர்பார்ப்புகளை பேச வேண்டும்.

குறுங்கதையை தோரயமாக கவிதைக்கும் சிறுகதைக்கும் இடைப்பட்ட வடிவமென வரையறுக்கலாம். கவிதைக்குரிய மொழிச்செறிவும் சிறுகதைக்கு உரிய கூர்மையான கதைத்தருணமும் அமைந்து வரும் குறுங்கதைகளே கலாப்பூர்வமான வெற்றியை எய்துகின்றன. நம்முடைய நாட்டுப்புற மற்றும் புராண மரபுகளில் இருந்தே எண்ணற்ற குறுங்கதைகளை எடுக்க முடியும். ஒரு குறுங்கதையாக சொல்லிவிடக்கூடிய ஏராளமான கதைகளும் நம்மிடம் உள்ளன. கண்ணப்ப நாயனார் புராணம் சிறுத்தொண்டர் புராணம் போன்றவற்றைக் கூட குறுங்கதையாக எழுதிவிட முடியும்! ஆனால் குறுங்கதை வடிவத்தில் கதை சொல்லப்படும் குறிப்புச் சட்டகம் (frame of reference) இன்றியமையாத ஒன்று. முன்பே சொன்னதுபோல சிறுகதையின் கதைத் தருணத்தையும் கவிதையின் மொழிச்செரிவையும் குறுகிய பக்க எல்லைக்குள் சாத்தியப்படுத்துவதற்கு சொல்லப்படும் குறுங்கதை ஒரு குறிப்பிட்ட வலுவான கதைச்சூழலில் நிகழ்வது அவசியம். ஆனால் அப்படி ஒரு ‘பழக்கமான’ கதைச்சூழலை தேர்வு செய்யும்போது கதைகள் தனித்தன்மையை இழந்துவிடும் வாய்ப்பும் இருக்கிறது. சிறுகதை தன்னுடைய கதைச்சூழலை உருவாக்கிக் கொள்வதற்கான குறைந்தபட்ச வாய்ப்பினைக் கொண்டுள்ள வடிவம். உதாரணமாக ஒரு சர்வாதிகாரி ஆட்சி செய்யும் தேசத்தில் நிகழும் ஒரு சம்பவம் சிறுகதையாக எழுதப்படுகிறது என்று கொள்வோம். அந்த தேசத்தின் பிரத்யேகமான சர்வாதிகாரத்தன்மையை விளக்குவதற்கான அல்லது கோடிடுவதற்கான இடம் சிறுகதையில் இருக்கும். ஆனால் குறுங்கதையில் அதற்கான வாய்ப்பு குறைவு. அது உருவாக்கும் அர்த்தத் தளம் தற்சுட்டுத் தன்மையைக் கொண்டிருக்க வேண்டும். குறைவான சொற்களில் தற்சுட்டுத் தன்மை கொண்ட ஒரு புனைவு வெளியை கட்டமைப்பதுதான் குறுங்கதை எழுதுவதன் பிரதானமான சவால் என்று தோன்றுகிறது. அராத்து, சரவண கார்த்திகேயன் போன்றோரது கதைகளில் இந்த தற்சுட்டு பெரும்பாலும் காமமாக இருக்கிறது. ஆனால் காமத்தை மையமாகக் கொண்டு எழுதப்படும் கதைகள் இலக்கியத்திற்குரிய ஆழத்தையோ மௌனத்தையோ எட்டுவது கடினம். காமம், அரசியல், சினிமா போல வெகுமக்கள் உளவியலை கட்டமைக்கும் பண்டங்களை இவை பற்றின ஆழ்ந்த புரிதல் கொண்டவர்களால் மட்டுமே புனைவுக்குள் கையாள முடியும்.‌ மேலும் இலக்கியத்திற்கு பொதுமைகளை விட பிரத்யேகங்களே முக்கியமாகிறது. அத்தகைய பிரத்யேகமான கதைக்களங்களை நம்பகத்தன்மையுடன் வாசகனிடம் எடுத்துச் செல்ல மொழியை வெகு நாட்கள் தீவிரத்துடன் கையாண்டிருப்பது அவசியம். யுவன் சந்திரசேகர், சுரேஷ்குமார இந்திரஜித், பெருந்தேவி,எஸ்.ராமகிருஷ்ணன் போன்றோரது குறுங்கதைகள் வெல்வதற்கு அவர்கள் நெடுங்காலமாக மொழியினுள் தீவிரமாக செயல்பட்டதே காரணமாகிறது.

கே.என் செந்தில் ‘விருந்து’ தொகுப்பு மொழியை தீவிரத்துடனும் கவனத்துடனும் கையாண்டு எழுதப்பட்டிருக்கும் நூல். நூலின் முன்னுரையில் ஆசிரியர் இத்தொகுப்பிலுள்ள அனைத்து கதைகளையும் குறுங்கதை என்ற பகுப்புக்குள் கொண்டு வர முடியுமா என்ற சந்தேகத்தில் இக்கதைகளை ‘கதைகள்’ என்றே குறிப்பிடுகிறார். ஆசி,எஞ்சுவது,பதில் என மிகச்சில கதைகள் நீங்கலாக நாற்பத்துமூன்று கதைகள் கொண்ட இத்தொகுப்பின் பிற கதைகள் அனைத்தும் குறுங்கதை வடிவத்தில் பொருந்திப் போகிறவையாகவே உள்ளன. நிமித்தம் என்ற கதை மீபுனைவு தன்மை கொண்டது.‌ எழுத்தாளனுக்குள் ஒரு கதாப்பாத்திரம் தோன்றி வளர்ந்து மடியும் தன்மையை கதையாக்க முயன்றிருக்கிறார். ஈரம் நாய்களின் உலகத்தையும் சிணுங்கல் தொட்டி மீன்களின் உலகத்தையும் சித்தரிக்கிறது. சிணுங்கல் கதையில் நிகழும் மீனும் குழந்தையும் முத்தமிட்டுக் கொள்ளும் தருணம் கவித்துவமானது. புதையல் கதை ஒரு பழைய காலத் தருணத்தை சமகால வாழ்வுடன் இணைப்பதில் வெற்றி பெற்றிருக்கும் கதை. இக்கதைகளை தவிர்த்துப் பார்த்தால் இத்தொகுப்பின் பிற கதைகள் அனைத்திற்கும் ஒரு பொதுத்தன்மை இருப்பதை உணர முடிகிறது. அந்த தன்மையை கரிசனம் என்ற சொல்லின் வழியே வரையறுக்க முடியும் என்று தோன்றுகிறது.

நிகாஸ் கசாண்ட்சாகிஸின் The Last temptation of Christ நாவலில் கிறிஸ்துவின் சீடர்களாக காட்டப்படும் யாருமே அவருடைய ‘அருள்’ பெற்று எந்நேரமும் ஆன்மீகமான மந்தகாசத்துடன் திகழ்வதாக சித்தரிக்கப்ட்டிருக்கவில்லை. மாறாக கிறிஸ்துவின் மீது பிரியமும் பிரம்மிப்பும் பொறாமையும் வஞ்சமும் வெறுப்பும் சந்தேகமும் பயமும் அவர்களுக்கு மாறி மாறி ஏற்பட்டுக் கொண்டே இருக்கும். யூதாஸுக்கும் பிற சீடர்களுக்கும் பெரிய வித்தியாசம் எதையும் அவர்களிடம் காண முடியாது. கிறிஸ்து அந்த நாவலில் புழங்கும் இடங்களும் அழுக்கும் வசைகளும் நிறைந்த சந்தைகளும் கூடாரங்களுமாகவே இருக்கும். எளியவர்களின் தேவனாக இருப்பதாலேயே கிறிஸ்துவை ஆத்மார்த்தமாக உணர எண்ணற்றவர்களால் இயல்கிறது போலும். வறுமை,பிணி,பசி என துன்புறும் மனிதர்களை தன்னிலிருந்து விலக்கி நிறுத்தி அவனை இன்னொருவனாக புரிந்து கொண்டு ஒருவன் கண்ணீர்விடும் புனைவுகளை விட அத்தகையவர்களின் உலகில் மனப்பூர்வமாக வாழ்ந்து மீளும் கதைகள் மேலானவை என்பது என் எண்ணம். இந்தத் தன்மைதான் இத்தொகுப்பு முழுவதும் பயின்று வந்திருக்கிறது. இக்கதைகள் அனைத்திலும் போதாமை ஒரு பெரும் பிரச்சினையாக இருக்கிறது. வறுமையால் ஏற்பட்ட பொருள்வயமான போதாமை பெரும்பாலான கதைகளில் ஒரு பொதுநோக்கை கட்டமைத்தாலும் உண்மையில் அன்பின் கருணையின் போதாமையையே இக்கதைகள் முன்னிறுத்துகின்றன. கைவிடப்பட்ட முதியவர்கள் (திருடன்,விடுதலை,பதில்) சூழலால் வஞ்சிக்கப்படும் பெண்கள் (சிதைவு,அந்தி) காமத்தின் அனலால் துன்புறும் மனிதர்கள் (அடகு,எரிந்த அழைப்பு) என இத்தொகுப்பில் இடம்பெறும் பெரும்பாலான கதைகள் தங்களுடைய குறிப்புச் சட்டகத்தை மிகச் சரியாக சுட்டிக் காட்டுகின்றன. இந்தத் தன்மையாலேயே குறைவான சொற்களில் முழுமையுணர்வை தருகிறவையாகவே எல்லா கதைகளும் உள்ளன.‌ உண்மையில் மேற்சொன்ன பட்டியலில் உள்ள எழுத்தாளர்களிடமிருந்து செந்தில் விலகி நகரும் புள்ளி என இதைச் சொல்லலாம். ஒரு சுவாரஸ்யமான தருணம் என்ற குறுங்கதை இலக்கணத்தை இக்கதைகள் கொண்டிருந்தாலும் இவை ஒரு “துணுக்கு” தன்மையோடு நின்றுவிடாமல் முழுமையுணர்வை அளிப்பது வெற்றி எனச் சொல்லலாம்.‌

குடும்ப அமைப்பின் மீதான பிணைப்பும் அதனால் எழும் விமர்சனத்தன்மையும் கேஎன் செந்திலின் முந்தைய தொகுப்புகளைப் போலவே இத்தொகுப்பின் கதைகளிலும் வெளிப்படுகிறது. பெரும்பாலான கதைகள் ஒரு குறிப்பிட காலத்தில் குறிப்பிட்ட வாழ்க்கைச்சூழலிலேயே அமைந்திருந்தாலும் ஒவ்வொரு கதைக்கும் இடையே ஆசிரியர் உருவாக்கும் வண்ணமாறுபாடு வியக்க வைக்கிறது.சிதைவு போல உள ஆழங்களை உரையாடல் வழியாக நுட்பமாக பின்தொடரும் கதைளும் நாயகன் போன்ற பகடிக்கதையும் பரிசு போன்ற மிகக்குறைவான சொற்களில் சொல்லப்பட்ட நெகிழ்வான கதைகளும் இத்தொகுப்பினை சலிப்பில்லாமல் வாசிக்கச் செய்கின்றன.

இரண்டு கொலைகள் செய்துவிட்டு அது நடந்திருக்காது என்ற நம்பிக்கையில் குழந்தைகளின் புத்தகங்களுக்கு அட்டை போட்டுக் கொண்டிருப்பவர், அவிழும் வேட்டியை‌க்கூட கட்ட இயலாமல் மகளை மருத்துவமனைக்கு தூக்கிச் செல்கிறவர், தினத்தந்தி வாசித்து திருடக் கற்றுக் கொள்கிறவன் ,தங்கையை எண்ணி தன் வாழ்வை சிதைத்துக் கொள்கிறவள், தந்தை இறந்தது தெரியாமல் மாமாவுடன் பள்ளியில் இருந்து திரும்பும் சிறுவன் என இக்கதைகளை கட்டமைக்கும் தருணங்கள் வலுவானவையாகவும் ஆழ்ந்த கரிசனம் மிகுந்தவையுமாக உள்ளன. கரிசனத்தின் மறுபக்கத்தை அறச்சீற்றம் எனச்சொல்ல முடியும் . தனி ஒரு மனிதனுக்கு உணவில்லாததற்காக ஜகத்தினை அழிக்கச் சொல்கிறவனிடம் இருந்தது கரிசனத்துடன் கூடிய சீற்றம் தானே. அத்தகையதொரு சீற்றம் வெளிப்படும் கதை ‘விருந்து’. இத்தொகுப்பின் மிகச்சிறந்த கதை என்பதைத் தாண்டி தமிழ் இலக்கியத்தின் மிக முக்கியமான கதைகளில் ஒன்றென இக்கதையைச் சொல்ல முடியும். ஒரு அரசியல் கட்சி கூட்டத்திற்கென ஏற்பாட்டு செய்யப்பட்டிருக்கும் அசைவ உணவில் மிச்ச மீதியை உண்பதற்காக பிச்சைக்காரர்களின் கூட்டம் ஒன்று காத்திருக்கிறது. தலைவர் வரமுடியாமல் போவதால் கூட்டம் ரத்தாகிறது. சமைக்கப்பட்ட பிரியாணியை அந்த பிச்சைக்காரர்களின் கூட்டம் புகுந்து உண்டு களித்துச் சோர்வதே கதை. தலைவரின் படம் பெருமிதத்துடன் பேனரில் உறைந்திருக்க பசி கொண்ட வயிற்றுடன் சாப்பாட்டினை உண்ணும் பிச்சைக்காரன் எனும் சித்திரம் ஆழமான கேள்விகளை எழுப்பவல்லது. மேலும் அவர்கள் தடைகளைத் தாண்டி புகுந்து உண்டு குடித்து புணர்ந்து கிடக்கும் சித்திரமும் மனிதர்களிடம் எந்நிலையிலும் உறையும் கொண்டாட்டத்திற்கான ஏக்கத்தினை சித்தரிப்பதாக உள்ளது. அவர்களுடைய அந்தக் கொண்டாட்டம் வன்முறைக்குத் திரும்புவது காவலர்கள் நுழைந்து அவர்களை தாக்கிக் கொல்கின்றனர்.‌ ஒரு மாய உலகமென கண்முன் விரியும் அந்த பிச்சைக்காரர்களின் கொண்டாட்டம் மாயமெனவே கரைந்தும் அழிகிறது.

அன்றாட வாழ்விலிருந்து இருந்து விதவிதமான கதைத்தருணங்களை கண்டடைந்து இருப்பது இத்தொகுப்பின் பலம் எனில் அன்றாடத்தின் எல்லையில் இருந்து துளியும் நகராத பிடிவாதத்தை பலகீனம் என்று சொல்ல முடியும். கதாப்பாத்திரங்களின் அந்தந்த கணத்து உணர்வுகளை கூர்மையாக தீட்டுவதில் ஆசிரியரிடம் வெளிப்படும் அக்கறையும் கதாப்பாத்திரங்களின் மீது கொள்ளும் கரிசனமும் அவர்களை எவ்வகையிலேனும் வகுத்துவிட முடியுமா என்ற தேடல் நோக்கி நகர்வதில்லை. இது ஒரு எல்லை வரை வாசகனின் வேலை என்றாலும் இதுபோன்ற இயல்புவாதத் தன்மை கொண்ட கதைகளின் உலகிலேயே ஆசிரியர் தொடர்ந்து பயணிப்பது ஒரு வகையான ஒற்றைப்படைத் தன்மையை ஆசிரியரின் புனைவுலகுக்குள் புகுத்தி விடும் வாய்ப்பு உள்ளது.

சமகாலத்தில் வெளியான தொகுப்புகளில் முக்கியமானதென இத்தொகுப்பினை சொல்ல முடியும். வாசித்து முடித்த சிலநாட்களுக்குப் பிறகும் குறைவான‌ சொற்களில் தீட்டப்பட்டிருக்கும் கதைமாந்தர்கள் பலரை நினைவில் நீடிக்கச் செய்திருப்பது இத்தொகுப்பின் வெற்றிக்கான சான்று.

சுரேஷ் பிரதீப்

தமிழ்நாடு திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர். தொடர்ச்சியாக புனைவுகள், விமர்சனங்கள் எழுதிவருகிறார். அழகியலை முன்னிலைப்படுத்தி எழுத்தாளர்களின் சிறப்பியல்புகளை நுட்பமாக மதிப்பிடுபவர். ஒளிர் நிழல் என்ற நாவலும் இரண்டு சிறுகதைத் தொகுப்புக்களும் வெளியாகியுள்ளன.

உரையாடலுக்கு

Your email address will not be published.