/

பாண்டியும் மாகேயும் : சுரேஷ் பிரதீப்

இந்தியாவில் இந்தியை முதன்மை மொழியாகக் கொள்ளாத மாநிலங்களின் மைய அரசியல் போக்கில் மொழி முக்கியமான பங்கு வகிக்கிறது. இந்திய மாநிலங்கள் மொழிவாரியாகப் பிரிக்கப்பட்டதும்கூட இந்திய மக்களின் மொழிசார் போதத்தையே காட்டுகிறது. தமிழ்நாட்டினைப் பொறுத்தவரை இந்தியா சுதந்திரம் பெற்ற இந்த முக்கால் நூற்றாண்டுகளில் இந்த மொழிசார் போதம் ஆட்சியதிகாரத்தை தீர்மானிக்கும் சக்தியில் ஒன்றாகவே மாறியிருக்கிறது. மிகப்பெரிய அமைப்பு மற்றும் ஊடக பலத்துடன் நிகழும் அரசியல் செயல்பாடுகள் தமிழ்-இந்தி, ஆரியர்-திராவிடர் என்பது போன்ற எதிர்வுகளையே மீள மீள கட்டமைக்கின்றன. இந்த எதிர்வுகள் மட்டுமே நம் பண்பாடு என்பது போன்ற தோற்றம் உருவாக்கப்பட்டுக் கொண்டே இருக்கிறது. இவற்றுக்கு அப்பால் உள்ள நுண்ணிய பண்பாட்டு அம்சங்களையும் அவற்றுக்கு இடையேயான மோதல்களையும் சுட்டிக் காட்டுவது படைப்பாளியின் முக்கிய கடமையாக என்றுமே இருந்து வந்துள்ளது. அரிசங்கரின் முந்தைய நாவலான பாரிஸ் அத்தகைய நுண்மையான பண்பாட்டு இடைவெளியைச் சுட்டிக் காட்டிய படைப்பு. மாகே கஃபே பாரிஸ் நாவலில் இடம்பெறும் பாத்திரங்களின் முந்தைய தலைமுறையினரின் வாழ்க்கையை மையமிட்டு எழுதப்பட்டுள்ளது. இரண்டு நாவல்களுமே புதுச்சேரியை மையமிட்டு நடந்தாலும் இரண்டின் உணர்வுத்தளமும் உரையாடுவதற்கு எடுத்துக் கொண்டு சிக்கல்களும் முற்றிலும் வேறானவையாக இருப்பது கவனிக்கப்பட வேண்டிய அம்சம்.

சுதந்திரத்துக்கு முன் பிரெஞ்சுக்காரர்களின் ஆட்சியில் இருந்த பகுதிகள் பாண்டிச்சேரியை தலைநகராகக் கொண்டு இந்தியாவுடன் இணைக்கப்பட்டன. ஆனால் காரைக்கால் (தமிழ்நாடு), மாகே(கேரளா), ஏனாம் (ஆந்திரா) என்று அப்பகுதிகள் வெவ்வேறு மாநிலங்களில் உள்ளன. இந்த விசித்திரமான இணைப்பினை மையமிட்டே மாகே கஃபேயின் கதை தொடங்குகிறது. மாகேயில் இருந்து பாண்டிச்சேரிக்கு பிழைக்க வரும் வினயன்,அப்புண்ணி என சில மலையாளிகள் மற்றும் பாண்டியிலிருக்கும் சில தமிழ் குடும்பங்களைச் சுற்றி கதை நிகழ்கிறது. பாண்டிச்சேரியை சொந்த ஊராக உணர முடியாத மலையாளிகளின் நிலை அவர்களுக்கும் தமிழர்களுக்குமான உரசல் என்பது கதைப்போக்கின் ஒரு பகுதியை பிண்ணுகிறது. பாரிஸ் அரிசங்கரின் முதல் நாவல். புதுச்சேரியில் ஊடாடி இருக்கும் பிரெஞ்சு கலாச்சாரத்தை அந்நாவல் தொட்டுக்காட்டி பேசி இருந்தாலும் நாவலின் பிரதான உணர்வுநிலையாக உறவுச்சிக்கலே இருந்தது. அதிலிருந்து மாகே கஃபேயில் ஹரியிடம் மிகப்பெரிய முன்னகர்வை காணமுடிகிறது. சந்திரன்,வினயன்,அப்புண்ணி,ரவி டெய்லர்,குரியன் என பலரின் குடும்பங்கள் குறைந்த பக்கங்களில் முழுமையாக சித்தரிக்கப்பட்டுள்ளன. இவர்களுக்கு இடையேயான உணர்வுரீதியான ஊடாட்டங்களை ஹரி மிக நேர்த்தியாக கட்டமைக்கிறார். நாவலில் பக்க அளவு என்பது ஒரு பிரம்மைதான். மிகப்பெரிய நாவல்களில் பல பக்கங்கள் ‘ஒன்றுமே இல்லாமல்’ கடந்து போய்க் கொண்டிருக்கும். மாறாக இந்நாவல் குறைந்த பக்கங்களில் ஏராளமான பாத்திரங்களை நுட்பமாக காட்சிப்படுத்துகிறது. உதாரணமாக குமார் என்ற பாத்திரத்தைச் சொல்லலாம். இரண்டு அத்தியாயங்களில் மட்டுமே குமார் பற்றிய பேச்சு நாவலில் வருகிறது. ஆனால் குமார் வழியாக பாண்டிச்சேரியில் புழக்கத்தில் உள்ள டெம்போ,குமார் டெம்போ ஓட்டுநராக மாறியது, அவருடைய குடும்பம், தொழில்வாழ்க்கை என அனைத்தும் சொல்லப்படுகிறது. ஆனால் அது எதுவும் தகவல் பகிர்வது போலில்லாமல் நாவலின் உணர்வுத்தளத்துடன் நுட்பமாக பிணைக்கப்படுள்ளது.

கலாச்சார ஊடாட்டம்தான் நாவலின் முதன்மை இழை என்றாலும் நாவல் அதை மட்டுமே சுற்றிக் கொண்டிருக்கவில்லை. நிலையற்ற தொழில்ச்சூழல், வறுமை, வாழ்க்கை கைவிட்டுப் போய்விடுமோ என்ற பதற்றநிலை என சமகாலத்தின் முக்கியமான இருப்புசார் பிரச்சினைகளை தொட்டுப் பேசி இருக்கிறது. ஹரியின் சொல்முறை தொடர்ச்சியாக சம்பவங்களை அடுக்கிக் கொண்டே போகும் இயல்புவாதத் தன்மை கொண்டது. ஆனால் இத்தன்மையினூடாக பாத்திரங்களின் குணவார்ப்பினை நுட்பமாக சொல்லிச் செல்கிறார். சந்திரனின் மனைவி ஒரு உதாரணம். மனநலக் குன்றலால் சிறப்பு விடுதியில் இருக்கும் மகனைப் பார்க்கச் செல்வதாக சொல்லிவிட்டு அவர் சினிமாவுக்குப் போகிறார். இதைச் சொல்லும்போது ஆசிரியரின் குரலில் எவ்வித சீற்றமும் வெளிப்படுவதில்லை. மாறாக அப்பாத்திரத்தின் மீது ஒரு வினோதமான பரிதாப உணர்ச்சியே மேலிடுகிறது. இதுபோன்ற நுட்பமான பல இடங்கள் நாவலில் வாசகரின் கற்பனைக்கு விடப்பட்டுள்ளன.

உறவுச்சிக்கல்களை பேசுவதிலும் இந்நாவலில் ஹரி முன்னகர்ந்திருக்கிறார். ஏராளமான இளைஞர்கள் நாவலில் இடம்பெற்றும் அவர்களுடைய இருப்புசார்ந்த பிரச்சினைகள்தான் முதன்மையாகப் பேசப்படுகின்றனவே தவிர காமம் ஒரு முக்கிய பிரச்சினையாக சொல்லப்படவில்லை. ரவி டெய்லருக்கும் அவர் முன்பு காதலித்தவரின் மகன் அசோக்குக்குமான உறவு ஏறத்தாழ ஒரு தந்தை மகனைப் போன்றது. அதுபோலவே சந்திரன் பாவாடைக்கு இடையே உருவாகும் நட்பைச் சொல்லலாம். நாவல் முழுக்க தோற்றுப்போனவர் என்றே சந்திரன் சொல்லப்பட்டாலும் அவரே நாவலுடைய உணர்வுத்தளத்தின் மையமாக இருக்கிறார். தன் பலவீனங்களை கோபத்திரை போட்டு மறைக்காமல் இருக்கிறார். மாகே கஃபேயில் அவருடன் வேலை செய்யும் அப்புண்ணியால் முதலில் வெறுக்கப்படுகிறார். ஆனால் அப்புண்ணியும் சந்திரனுக்கு காலப்போக்கில் நண்பராகவே செய்கிறார். ஆண்-பெண் உறவு என்ற நிலையைக் கடந்து நண்பர்கள், உறவினர்கள் எனப் பலருடனும் நிகழும் ஊடாட்டத்தை பல இடங்களில் நாவல் பேசியுள்ளது. தன் தந்தை சந்திரனைப் போல ஆகிவிடக்கூடாது என்று அவரிடமிருந்து விலகி விலகி ஓடும் கதிர் இன்றைய இளைஞர்களின் அலைச்சலும் நிலையின்மையும் மிகுந்த வாழ்வின் குறியீடு போல தென்படுகிறான். எந்த உணர்ச்சியும் உன்னதப்படுத்தப்படாமலும் வறட்டுத்தனமான தர்க்கம் பார்வையை மட்டும் கொண்டு கையாளாமலும் ஒரு சமநிலையைப் பேணியிருப்பது நாவலின் நம்பகத்தன்மையை அதிகப்படுத்துகிறது.

நாவலில் அதிகம் இடம்பெறும் சொல் பாண்டிச்சேரி. சில பெயர்களை தேடுவதற்காக நாவலில் கண்ணோட்டியபோது இச்சொல் மீள மீள கண்ணில்பட்டது. பல அத்தியாயங்களின் தொடக்கமாக பாண்டிச்சேரி என்ற பெயரே உள்ளது. எழுத்தாளன் எங்கெங்கோ சுற்றினாலும் என்னென்னவோ கற்றுக் கொண்டாலும் அவன் மீள மீள எழுதுவது தன்னுடைய பால்யத்தின் நினைவுகளாகவே இருக்கின்றன. தான் எழுத வேண்டியவை குறித்த போதத்தை எழுத்தாளன் தன்னுடைய தொடக்க நாட்களிலேயே உருவாக்கிக் கொள்வது அரிதானது. அரிசங்கர் தன்னுடைய முதல் நாவலில் இருந்தே பாண்டிச்சேரியை விதவிதமாக சொல்லிப் பார்க்கிறார். ஒரு ஊரின் நினைவு அவ்வூரை எழுதும் எழுத்தாளருடன் இணைந்து எழுவது எழுத்தின் வெற்றிகளில் ஒன்று. அரிசங்கர் என்ற பெயர் பாண்டிச்சேரியுடன் இணைந்து நினைவில் நிற்பதை மாகே கஃபே நாவல் உறுதி செய்கிறது. மணல்கடிகை, ஆழிசூல் உலகு போன்ற வலுவான நிலம் சார்ந்த யதார்த்தவாத ஆக்கங்களை அரிசங்கரால் கொடுக்க இயலும் என்ற நம்பிக்கையை மாகே கஃபே அளிக்கிறது.

மாகே கஃபே நாவலுக்கு எழுதப்பட்ட முன்னுரை.

சுரேஷ் பிரதீப்

தமிழ்நாடு திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர். தொடர்ச்சியாக புனைவுகள், விமர்சனங்கள் எழுதிவருகிறார். அழகியலை முன்னிலைப்படுத்தி எழுத்தாளர்களின் சிறப்பியல்புகளை நுட்பமாக மதிப்பிடுபவர். ஒளிர் நிழல் என்ற நாவலும் இரண்டு சிறுகதைத் தொகுப்புக்களும் வெளியாகியுள்ளன.

உரையாடலுக்கு

Your email address will not be published.