/

நீதியின் பரிணாமம் – மற்றவர்களின் சிலுவை தொகுப்பை முன்வைத்து: சுரேஷ் பிரதீப்

இந்திய மொழிகளில் சிறுகதை வடிவத்தில் முதன்மையான படைப்புகள் அதிகம் வெளியானது தமிழில்தான். சிறுகதை என்ற வடிவம் பற்றிய போதம் தமிழ்ச் சூழலில் சென்ற நூற்றாண்டின் தொடக்கத்திலேயே ஏற்படத் தொடங்கிவிட்டதை அன்றைய இலக்கியப் படைப்புகளையும் இலக்கியம் சார்ந்து எழுதப்பட்ட கட்டுரைகளையும் வாசிக்கும்போது உணர்ந்து கொள்ள முடிகிறது. அத்தகைய ஆரோக்கியமான சூழலிலிருந்தே புதுமைப்பித்தன் போன்ற மேதைகள் எழ முடியும். புதுமைப்பித்தனிலிருந்து தொடங்கும் தமிழ்ச் சிறுகதை மரபு வளமானது. ஆழமும் கூர்மையும் நிறைந்த நூற்றுக்கணக்கான கதைகள் தமிழில் எழுதப்பட்டுவிட்டன. நாவலை ஒப்பிட சற்று சவாலான வடிவமான சிறுகதை எழுதத் தொடங்கும் போதே பலருக்கும் கைவருவதை தமிழ்ச் சூழலில் அவதானிக்க முடியும். ஆனாலும் படைப்பிலக்கிய எல்லையைத் தாண்டி தமிழ்ச் சிறுகதைகளை தொகுத்து நோக்கும் முயற்சிகள் மிகக் குறைவாகவே நடந்திருக்கின்றன. தொகை நூல்கள் ஏன் அவசியமாகின்றன? படைப்பிலக்கியம் என்பது எல்லாச் சூழலிலும் ஒரு குறிப்பிட்ட எல்லைக்குள் மட்டுமே நிகழ முடியும். இலக்கியச் சூழல் ஜனநாயகப்படுத்தப்பட்டதான ஒரு தோற்றம் ஏற்பட்டாலும் எழுத்தாளனும் வாசகனும் கொள்ளும் உறவு மிக அந்தரங்கமானது. பொதுச் சமூகத்துடன் அதற்கு பெரிய உறவில்லை. அப்படியெனில் இலக்கியம் சமூகத்தின் மீது தாக்கத்தை செலுத்துவதில்லை என்று சொல்லிவிடலாமா? அதுவும் இல்லை. இலக்கியம் பல்வேறு செயல்பாடுகள் வழியாக பல்வேறு உருமாற்றங்கள் வழியாக சமூகத்தை நோக்கிச் செல்கிறது. தொகை நூல் என்பது அத்தகைய உருமாற்றமே. ஒரு மொழிச்சூழலில் ஒரு காலகட்டத்தில் எழுதப்பட்ட எல்லாப் படைப்புகளையும் ஒரு குறிப்பிட்ட நோக்கத்துடன் தொகுத்துப் பார்க்கும் போது அக்காலம் குறித்த ஒரு அகவயமான வரலாற்றுச் சித்திரம் முன்வைக்கப்படுகிறது. புறவயமான தரவுகள் அடிப்படையில் தொகுக்கப்பட்ட வரலாற்றுடன் இலக்கியம் உருவாக்கும் உணர்ச்சிகரமான சித்திரம் இணையும்போது நம்முடைய கடந்தகாலம் குறித்து மேலும் தெளிவான சித்திரத்தைப் பெறுகிறோம்.  அதிலும் தமிழ் வாழ்க்கையின் மிகத் தீவிரமானதும் சிக்கலானதுமான தருணங்கள் சிறுகதைகள் மூலமாகவே பெரும்பாலும் எழுதிக் காட்டப்பட்டுள்ளன. ஆகவே தமிழ்ச் சிறுகதைகளை பல்வேறு கோணங்களிலிருந்து தொகுத்து நோக்க முடியும்.

எழுத்தாளர் கீரனூர் ஜாகிர்ராஜா இஸ்லாமிய வாழ்க்கை சார்ந்து இஸ்லாமியரல்லாத எழுத்தாளர்கள் எழுதிய கதைகளை காஃபிர்களின் கதைகள் என்ற பெயரில் தொகுத்திருக்கிறார். அழியாத கோலங்கள் என்ற தலைப்பில் தமிழின் முக்கியமான காதல் கதைகளைத் தொகுத்திருக்கிறார். சுப்ரமணி ரமேஷ் தொகுத்த  மகாபாரத சம்பவங்களை ஒட்டி எழுதப்பட்ட சிறுகதைகளின் தொகுப்பான பத்மவியூகம் குறிப்பிடத் தகுந்த முயற்சி. இந்த வரிசையில் தி.மரிய தன்ராஜ் தொகுத்திருக்கும் மற்றவர்களின் சிலுவை மிக முக்கியமான ஒரு தொகை நூல். தமிழில் தொகை நூல்கள் வருவதே குறைவு என்றால் தொகை நூல்கள் பற்றிய மதிப்பீடுகள் அதைவிடக் குறைவாகவே வருகின்றன. ஏனெனில் நம்முடைய விமர்சன மரபு பெரும்பாலும் விமர்சகரின் ரசனையைச் சார்ந்து செயல்படுவது. ரசனை விமர்சகர் ஒவ்வொரு படைப்புடனும் அந்தரங்கமாக உறவு கொள்ளவே விழைகிறார். ஒரு படைப்பாளியின் தனிப்பட்ட அலைச்சல்களும் சிக்கல்களும் ரசனை விமர்சகருக்கு முக்கியமானதாகின்றன. இன்னும் ஒரு படி நகர்ந்து ஒரு குறிப்பிட்ட அல்லது படைப்பாளி அன்றைய இலக்கியச் சூழலுடன் கொண்டிருந்த தொடர்பென்ன என்பதை ஆராய்கின்றனர். ஆனால் வேறு வேறு எழுத்தாளர்கள் எழுதி தொகுக்கப்பட்ட கதைகள் என்று வரும்போது விமர்சகர்கள் தயங்கிவிடுகின்றனர். இத்தகைய தொகுப்புகள் பற்றி எழுதுவதற்கான சட்டகம் நம்மிடம் தெளிவாக உருவாகவில்லை.

முதலில் ஒரு தொகை நூலில் கவனிக்க வேண்டியது தொகுப்பாசிரியரின் நோக்கம் என்ன என்பது? தொகை நூல்களைப் பொறுத்தவரை தொகுப்பாசிரியரே வாசகனிடத்தில் கதைகளை முன்வைக்கிறார். அவ்வகையில் இந்நூலினை தொகுத்திருக்கும் மரிய தன்ராஜ் கிறிஸ்துவ இறையியலினைப் பயின்றவர். முன்னுரையிலிருந்து நவீனத் தமிழ் இலக்கியத்தில் கிறிஸ்தவம் வகித்திருக்கும் பங்கு என்ன என்ற அடிப்படையிலேயே தேடலைத் தொடங்கி இருக்கிறார் என்பது புலப்படுகிறது. ஒரு விரிவான தேடலுக்குப் பிறகு கிறிஸ்துவரல்லாத எழுத்தாளர்கள் எழுதிய கிறிஸ்துவம் சார்ந்த கதைகளை தொகுக்கலாம் என்ற முடிவின் அடிப்படையில் இத்தொகுப்பினை கொண்டு வருகிறார். ஆகவே தொகுப்பின் நோக்கத்திலேயே ஒரு இயல்பான லட்சியவாதம் இணைந்து கொள்கிறது.‌ முன்பே வாசித்த கதைகள் என்றாலும் தொகுப்பாசிரியரின் நோக்கத்தின் அடிப்படையில் இக்கதைகள் ஒருங்குகின்றன. அ.மாதவையா தொடங்கி சுரேஷ் பிரதீப் வரை ஒரு நூற்றாண்டு கால இடைவெளி கொண்ட படைப்பாளிகளின் கதைகள் இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ளன.

தனித்தனி கதைகளாக எடுத்துப் பேசுவதைவிட இக்கதைகளினூடாக ஏதேனும் ‘ஒன்று’ திரண்டு வருகிறதா என்று பார்ப்பதே இத்தகைய தொகை நூல்களுக்கான சரியான வாசிப்பாக இருக்க முடியும். ஏனெனில் இத்தொகை நூலில் இடம்பெற்றுள்ளன பெரும்பாலான எழுத்தாளர்கள் தமிழ்ச் சிறுகதையின் முன்னோடிகள் சாதனையாளர்கள். ஆகவே அவர்களுடைய கதைகளில் ஒன்றை எடுத்துக்கொண்டு சிலாகிப்பது அந்த எழுத்தாளருக்கோ இந்த நூலுக்கோ நியாயம் செய்வதாக இருக்க முடியாது. ஆகவே தனித்தன்மைகளைவிட தொகுப்பாசிரியரின் நோக்கத்துடன் இயைந்து செல்லும் பொதுத்தன்மைகள் நூலில் கிடைக்கின்றனவா என்று தேடுவதே இத்தகைய நூல்களுக்கான சரியான வாசிப்பாக இருக்க இயலும். அவ்வகையில் இந்நூலின் பெரும்பாலான கதைகளிலிருந்து நீதியின் பரிமாணங்களை பார்க்க முடிகிறது. அதோடு தமிழ்ச் சிறுகதையின் கூறுமுறையில் நிகழ்ந்திருக்கும் மாற்றங்களையும் அவதானிக்க முடிகிறது. அ.மாதவையாவின் குதிரைக்கார குப்பனில் தொடங்கி சுரேஷ் பிரதீப்பின் விடைபெறுதல் வரை நீளும் இக்கதைகளில் நேரடியான அநீதிக்கு எதிரான சாடலில் தொடங்கி சமூகத்தின் உள்ளுறையாக இருக்கும் நீதிக்கான தவிப்புவரை மிக விரிவாகவே இக்கதைகள் பேசுகின்றன. அ.மாதவையாவின் குதிரைக்கார குப்பன் என்ற கதையை தவிர வேறெந்த கதைகளிலும் ஓங்கி ஒலிக்கும் குரல் நமக்கு கேட்பதில்லை. புதுமைப்பித்தனின் புதிய நந்தன் கதையில் அத்தகைய ஒரு குரல் கேட்பது போலத் தோன்றினாலும் கதையின் அதிர்ச்சிகரமான முடிவு அக்கதை எழுப்பும் கேள்வியை வேறொரு தளத்துக்கு நகர்த்திவிடுகிறது.

தி.ஜானகிராமனின் முள்முடி கிருஷ்ணன் நம்பியின் காணாமல் போன அந்தோணி போன்ற கதைகள் நீதியுணர்வை மிக நுட்பமான விசாரணைகளுக்குள் இட்டுச் செல்கின்றன. தொகுப்பின் முதல் மூன்று கதைகள் மற்றும் பிரபஞ்சனின் மரி என்கிற ஆட்டுக்குட்டி ஆகிய கதைகள் நீங்கலாக மற்ற அனைத்துக் கதைகளும் நவீன தமிழ்ச் சிறுகதைக்கே உரிய அடங்கலான தொனி சொல்ல வந்த விஷயத்தை குறிப்புணர்த்தி நின்றுவிடும் தன்மை ஆகியவற்றைக் கொண்டுள்ளன. உதாரணமாக காணமல் போன அந்தோணி கதையை எடுத்துக் கொள்ளலாம். வீட்டில் வளர்த்து ஆடு கிறிஸ்துமஸ் அன்று காணமல் போனதை எண்ணி மார்த்தாள் புலம்புவதுதான் கதை. கதையினூடாக மார்த்தாள் அந்த ஆட்டினை விற்பதற்காகவே வளர்க்கிறாள் என்பதும் சொல்லப்பட்டு விடுகிறது. ஆனாலும் கதையின் முடிவு அதிர்ச்சி அளிக்கிறது. வாசகனிடமிருந்து ஒன்றை‌ மறைத்து வைத்துவிட்டு இறுதியில் அதைத் திறந்து காண்பித்து அதிர்ச்சியடைய வைக்கும் எளிய உத்தி இக்கதையில் இல்லை. மாறாக கதையின் முடிவு வாசகனை நீதியுணர்வு குறித்த தீவிரமான அக விசாரணைக்கு இட்டுச் செல்கிறது. காணமல் போன அந்தோணி தமிழ்ச் சிறுகதை மரபில் ஒரு சாதனை என்றாலும் இத்தொகுப்பில் அக்கதை மேலும் அழுத்தத்தையும் வேறொரு பரிமாணத்தையும் அடைகிறது.

கிறிஸ்துவத்தை இந்திய மனம் எவ்வாறு உள்வாங்கி இருக்கிறது என்ற அடிப்படையிலேயே இத்தொகுப்பில் உள்ள கதைகளைப் பார்க்க முடியும். பைபிளின் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு தமிழில் நிறைய கதைகள் எழுதப்பட்டிருக்கின்றன. ஆனால் இத்தொகுப்பில் அத்தகைய கதைகள் சேர்க்கப்படவில்லை. இத்தொகுப்பு முழுக்க இந்திய மரபு கிறிஸ்துவத்தை சுவீகரித்துக் கொண்டதன் வெளிப்பாடுகளைத்தான் காண்கிறோம். ஆங்கிலோ இந்திய வாழ்க்கையைச் சொல்லும் நடனத்துக்குப் பின் இங்கிலாந்திலிருந்து வரும் பாதிரியைப் பற்றி பேசும் விடைபெறுதல் போன்ற கதைகளிலும் கூட இந்த இந்தியத் தன்மையே ஓங்கி இருக்கிறது. மாறாக தனுமை இருப்பு போன்ற கதைகள் தன்னளவில் நல்ல கதைகள் என்றாலும் தொகுப்பின் உணர்வொழுங்கில் ஒட்டாமல் சற்றே விலகி நின்கின்றன.

ஒரு சம்பிரதாயமான தொகைநூல் முயற்சியாக இல்லாமல் கதைத்தேர்வில் ஆசிரியர் பிரக்ஞைப்பூர்வமாக செயல்பட்டிருப்பது பாராட்டுக்குரியது. தொகுப்பின் முன்னுரையில் இதுபோல வேறு சில தொகுப்புகள் கொண்டுவரும் எண்ணமிருப்பதாக ஆசிரியர் குறிப்பிட்டிருக்கிறார். அத்தொகுதிகள் மேலும் உணர்வொருமை கொண்டவையாக விளங்கும் என்பதை மற்றவர்களின் சிலுவை தொகுப்பு நிரூபிக்கிறது. மிகக் குறைவான அளவிலேயே வெளிவந்திருக்கும் தமிழ்ச் சிறுகதை தொகைநூல் வரிசையை மேலும் விரிவுபடுத்தும் சாத்தியங்களை இத்தொகுப்பு ஏற்படுத்தி இருக்கிறது என்ற வகையில் தமிழ்ச் சூழலுக்கு இதுவொரு முக்கியமான வரவு.

சுரேஷ் பிரதீப்

தமிழ்நாடு திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர். தொடர்ச்சியாக புனைவுகள், விமர்சனங்கள் எழுதிவருகிறார். அழகியலை முன்னிலைப்படுத்தி எழுத்தாளர்களின் சிறப்பியல்புகளை நுட்பமாக மதிப்பிடுபவர். ஒளிர் நிழல் என்ற நாவலும் இரண்டு சிறுகதைத் தொகுப்புக்களும் வெளியாகியுள்ளன.

1 Comment

  1. நல்ல ஆழ்மான விமர்சனம். ‌‌உங்ககள் விமர்சனம் வாசகர்களை நூலைத் தேடி படிக்கத் தூண்டுகிறது. வாழ்த்துக்கள்……

உரையாடலுக்கு

Your email address will not be published.