/

தா.இராமலிங்கம் – சிறுவரம்பு மேவிய புதுக்கவிதை மூலவர்: சப்னாஸ் ஹாசிம்

ஈழத்தில் அறுபதுகளில் எழுதிய கவிஞர்களில் முக்கியமானவர் தா.இராமலிங்கம். இவரது ‘புதுமெய்க் கவிதைகள்’, ‘காணிக்கை’ போன்ற தொகுப்புகள் இவரது கவிதை கூறலின் பெரும்பரப்பை எடுத்தியம்பினாலும், அதற்குப் பிறகும் அலைகள் போன்ற இதழ்களில் வந்தவைகளும் பதினொரு ஈழத்துக் கவிஞர்கள் தொகுப்பில் வந்த கவிதைகளும் முக்கியமானவை என்று சொல்ல முடியும்.

அன்றைய காலகட்டத்தில் புதுக் கவிதை எழுதியவர்களில் தா.இராமலிங்கம் வேறுபடக் காரணமே அவர் கவிதைக்காக எடுத்துக் கொண்ட கச்சாப் பொருட்கள் தான். சமூக வேட்கை பற்றியும் விடுதலை பற்றியும் இவரது பிற்காலக் கவிதைகள் விரிந்த தளமொன்றில் நின்று பேசுவன. சிங்களப் பேரினவாதத்தையும் அடக்குமுறையையும் மிகத் தீவிரமாக கவிதைகளில் எதிர்ப்புணர்வோடும் பிரக்ஞையோடும் கொண்டு வந்தன.

புதுக்கவிதை தமிழில் தோன்றிய காலகட்டத்தை பாரதியோடு துவங்கலாம். ந.பிச்சமூர்த்தியோடு துவங்குவோரும் இருக்கிறார்கள். பாரதி சொல்வதைப் போல சோதிமிக்க நவகவிதைகள் யாப்புத் தளைகளுக்கும் சொல்லடுக்குகளுக்கும் முக்கியம் தருபவனவாக இல்லாமல், விடயதானத்திற்கு முக்கியம் தருபவனவாக இருக்க வேண்டும். வால்ட் விட்மேனின் கவிதைகளை முன் வைத்து பாரதி எழுதிய கட்டுரையை அதற்குச் சான்றாக சொல்லலாம். அதற்குப் பிறகு புதுக்கவிதையை தீவிரமாக முயன்று பார்த்தவரென்றால் ந.பிச்சமூர்த்தி என்றே சொல்ல முடியும்.

அந்தக் காலப்பகுதியில் சூறாவளி இதழில் புதுக்கவிதை பற்றி நிகழ்ந்த காரசாரமான விவாதங்கள் யாவரும் அறிந்ததே. (இந்த விவாதம் மயன் என்ற பெயரில் க.நா.சு எழுதிய கவிதைக்கு மஹாராஜ் என்பவர் எழுதிய பதில் கட்டுரையிலிருந்து உருவானது தான்.) தா.இராமலிங்கம் கவிதைகள் எழுதிய அறுபதுகளில் எழுதியவர்கள் என்று பார்த்தால் ந.பி, தி.சோ.வேனுகோபால், சி.சு.செல்லப்பா, கு.ப.ரா போன்றோரைச் சொல்லலாம். இவர்கள் எழுத்து காலாண்டிதழில் எழுதியவர்கள். எழுத்து இதழுடன் முரண்பட்டு சில நண்பர்கள் ‘நடை’ என்ற இதழை துவங்கியிருந்தனர். இதில் எழுதியவர்களென்று ந.முத்துசாமி, சி மணி, எஸ் வைத்தீஸ்வரன் போன்றோரைச் சொல்லலாம். (ஞானக்கூத்தன், நகுலன் போன்றோர் பிற்காலத்தில் சேர்ந்தவர்கள். கைலாசபதி அவர்களும் மார்க்சிய முற்போக்கு விமர்சனம் சார்ந்த கட்டுரைகளை எழுதி வந்தார்).  எழுத்து சஞ்சிகையின் தாக்கம் ஈழத்தில் பலருக்கும் இருந்திருப்பதை பார்க்க முடியும். ஆனால் அவர்களில் தா.இராமலிங்கம், அகவுணர்வு சார்ந்து எழுதிய விடயத்தில் வேறுபடுகிறார். இதற்குச் சான்றாக க.கைலாசபதியின் மேற்பார்வையோடு செ.யோகராசா எழுதிய கட்டுரையில் வருகிற பகுதியை சொல்ல முடியும்.

“ஏறத்தாழ, கடந்த பதினைந்தாண்டுக்கால ஈழத்துப் புதுக்கவிதை வளர்ச்சியில் அவதானிக்கத்தக்க சில பண்புகளுள், இவற்றை  மதிப்பீடு செய்யும் போது தமிழ்நாட்டுப் புதுக்கவிதைப் போக்கிலிருந்து வேறுபட்ட சில பண்புகளையும்,தனித்துவப்போக்குகளையும் இனங்காண முடிகிறது.

இன்றைய ஈழத்துப் புதுக்கவிதையாளருள் பெரும்பாலானோர் எழுத்து சஞ்சிகையின் தாக்கத்தினால் எழுதத் துவங்கியவர்களே. எழுத்து சஞ்சிகை தான் புதுக் கவிதை எழுதும் உந்துதலையும் ஏற்படுத்தின. எனினும், ‘எழுத்து’ காட்டிய வழியில் இவர்கள் செல்லவில்லை. எழுத்தில் பெரும்பாலானோர் எழுதியது போன்றோ, அல்லது இன்னும் எழுத்துப் பரம்பரையினர் சிலர் எழுதுவது போன்றோ, தனிமனித அக உளைச்சல்கள், கனவுகள், ஏமாற்றங்கள், மரணம், விரக்தி, காமம், போன்ற விஷயங்கள் ஈழத்துப் புதுக்கவிதையின் உள்ளடக்கமாக அமையவில்லை. மாறாக, சமுதாயநோக்குடைய ஏதோ ஒருவிதத்தில் சமுதாயக் குறைபாடுகளைப் பிரதிபலிக்கிற புதுக்கவிதைகளே இங்கு மிகுதியாக வெளி வருகின்றன. ஈழத்து நாவல், சிறுகதை என்பவற்றில் காணப்படும் Seriousness தன்மை ஈழத்துப் புதுக்கவிதைகளிலும் அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்க அம்சமாகும்.” என்கிறார் செ. யோகராசா.

தா.இராமலிங்கம் மரபிலிருந்து விலகி புதிய வடிவத்தைத் தேர்ந்தெடுத்தவர்.  ஆரம்பத்தில் அவர் எழுதிய கவிதைகளில் காமஞ் சார்ந்த வெளிப்பாடுகள் அதிகம் இருந்தன. காமத்தை அறஞ் சார்ந்து, களவியல் சார்ந்து வேறு வேறு அகநிலை சார்ந்து அதிகமாக எழுதியிருப்பார்.  இயற்கையின் மீதான அருட்டுணர்வை கவிதையாக கொணர்ந்ததாகட்டும், தத்துவ விசாரமான கவிதைகளை எழுதியதாகட்டும், தா இராமலிங்கம் ஆரம்பத்திலே செ.யோகராசாவின் கூற்றுக்கு முரணாகத் தான் இருந்திருக்கிறார்.

“கழுவு! தெரியும்!

இருள் அகம் நீங்கும்

பலகணி ஆடி

படி கறை கறை கழுவு எனக்

கழுவினேன்

ஒளி அகம் பொழியுது!

உள்ளுள்,

சிலந்தி வலை பின்னி இரை பிடிக்க

பூனை ஒலி அஞ்சி எலி ஒடுங்க

சீறித் தலை விரித்து நாகம் குடியிருக்குது!”  என அக நிலையை விபரித்திருப்பார்.

உள்ளம் பொழிமழை

உவருடல் தேங்கினால்

உப்பு விளையாமல்

வேறென்ன ஆகும்

ஒளிகூரக் கூர

சூடேற ஏற

நன்று திறனோடு

குஞ்சு திரளுது..”. 

என காமத்தை பேசியிருக்கிற அவரது கூறுமுறை வித்தியாசமானது. 

“சிந்தையோடு

காமம் புணர்ந்து

கருவுறும் செந்நா

நொடிக்கு நொடி

நூறாயிரம் குஞ்சு பொரிக்குது..” என காமம் விரவுவதை பேசியிருப்பார்.

ஒரு மனிதன் பிறந்து முதலில் அனுபவிக்கிற காமம் தாயிடம் முலையருந்துவது தான் என்கிறது உளவியல். அதையே தாய்-சேய் உறவை இன்பத்திற்கும் துன்பத்திற்குமிடையில்  பதகளிப்பதாக வார்த்திருப்பார்.

இன்பமும் துன்பமும்

அரும்புமொழிக் குழந்தை

தாய் மடியில் வீற்றிருந்து

மார்பைப் பிஞ்சுவிரலாற் பினைஞ்சு

பால் பருக,

வயிறு முட்டி

வாய் வழிய,

பல்முளையால்

முலைக்காம்பு சப்பிவிட,

மிகநொந்து

சுட்டு விரல்

கன்னம்

சுண்ட எழ,

பால் தோய்ஞ்ச பழச் சிரிப்பைக்

குழந்தை

தாய் நோக்கி வழங்கிவிட,

கை அடங்கித்

தாய்,

பொழிகின்ற முத்தத்தில்

முக்குளிச்சுக்

குழந்தை அழும்! “

தா.இராமலிங்கத்தின் கவிதைகளில் யாழ் வட்டார வழக்கை வெறுமனே ஓசை நயத்துக்காகவல்லாது தேவையான மட்டில் கனகச்சிதமாக பயன்படுத்தப் பட்டிருப்பதைக் காண முடியும்.

“கூழ்முட்டையாகிப் பாழ்பட்டுப் போகாமல்
குஞ்சு திரள்கின்ற மெய்யுடல் ஆக்கேனோ?”

என வருகிற கவிதையில் அதனைக் காண முடியும். நிலாவரையில் நீர் மட்டம் இறங்கூது! ‘இறங்கூது’ என வருகிற கவிதையில் அடிக் குறிப்போடு அந்த பொருள் சுட்டப் பட்டிருக்கும். மரணாய் தான் என்ற இடமாகட்டும், வாருங்கோ ஓடுவோம், சீவியம் போன்ற கவிதைகளாகட்டும் யாழ் வழக்கிலிருந்து ஒலிப்பன.

தா.இராமலிங்கம் காமத்தை கையாண்ட விதம் தனியான ஒரு ஆய்வுக்குத் தகுதியானது. காமத்தை எள்ளலாக, காமத்தை வெஞ்சினமாக, ஆற்றாமையாக பல வடிவங்களில் பேசியிருப்பார்.

‘குனிந்து காமத்திரியில் தீக்குச்சி தட்டினாளென்றும்’ படிமங்கள் வாயிலாகவும் காமத்தை விபரிக்கிற இடங்களாகட்டும், இக்கவிதைகள் வெளிவந்த காலப்பகுதியோடு பார்க்கிற போது தா.இராமலிங்கம் வடிவத்தினால் மட்டுமல்ல பேசுபொருளாலும் பெரும் பாய்ச்சலை நிகழ்த்தியவர் என்றே தோன்றுகிறது. காட்டு வாத்து, புதுக்குரல், வழித்துணை என வரிசையாக வந்த ந.பிச்சமூர்த்தியின் தொகுப்புகளுக்கு பிறகு தி.சு.வேனுகோபாலின் கோடைவயலுக்குப் பிறகு காணிக்கையைத் தான் ஆரம்ப கால புதுக்கவிதைகள் பட்டியலில் வல்லிக் கண்ணன் பட்டியலிட்டிருக்கிறார்.

மூன்றாம் தலைமுறையில் புதுக்கவிதை எழுதியவரென்று சொல்லப் பட்டாலும் முழுமையாக புதுக்கவிதையை உள்வாங்கிய முதல் தலைமுறை கவிஞர்கள் வரிசையில் தா.இராமலிங்கத்தை தயங்காமல் சொல்லலாம்.

அவரது பிற்காலக் கவிதைகள் தீவிரத் தன்மையோடு சமூக அக்கறையோடு, வலிகளை, வேட்கையை முதன்நிறுத்தி வெளிவந்தன.

அங்கு

இந்துக் கல்லூரி என்ற எழிலுறு வாசகம்

வீதி எங்கும் விளம்பரப்படுத்த

இடிந்து கிடந்தது ஒரு ஏழுமாடிக் கட்டடம்

வெடிவைத்துத் தகர்ந்துபோன

வகுப்பறைத் தளங்கள் எல்லாம்

சீமெந்துச் சில்லியோட்டுக் குவியல்கள்

தாண்டிச் சென்றால்

நிறைகுடம் வைப்பதற்கு மெழுகிய நிலம் அளவு

சிதைபடாதிருந்த சீமெந்து நிலத்தில்

குந்தியொரு பேய் இருப்பதைக் கண்டு

கூர்ந்து நோக்கினேன்

என்ன அதிசயம்

எனக்கு ஏடெழுதிக் கற்கண்டு தந்த ஆசிரியர் அது!

அருகு சென்றேன்

என்ன மாயம்

என்னை எடுக்கித்திரிந்த சகோதரி அது!

கையைப் பிடித்து உலுப்பி

யார் நீ என்றேன்.

கண்ணீர் வடிந்தொழுக என்னை

உற்று நோக்கினாள்.

என்னைப் பத்துமாதம் சுமந்து

பெற்ற தாய் அது..”

கவிதையின் தீவிரத்தை அதன் தன்மையிலிருந்தே நாம்

கண்டடைய முடியும். கவிதையாக மாறும் புள்ளி என்பது இந்தக் கவிதையில் பேயை முன்னிறுத்திய குறியீட்டு விபரிப்பெனச் சொல்லலாம். தா.இராமலிங்கத்திற்கு அந்த தெளிவு இருந்திருக்கிறது. கவிதைக்கு தேவையானது வரை கவிதைக்கு நியாயம் செய்கிற புரிதல் செம்மையாக அவருக்கு வாய்த்திருக்கிறது.

‘தூக்கட்டும் தூக்கட்டும்’ என்கிற அவரது கவிதை முக்கியமானதொன்று. அது பேசுகிற பெண் ஒரு புதிய பெண். களவில் இன்பத்தையல்ல அவள் தேடியது.  நீடிய சிறையினில் பட்ட துன்பம் ஈடு செய் இன்பம் தந்த உயிர் போன்றவனுக்காக துணிந்து நின்ற பெண்.

கற்பென்றும் ஒழுக்கமென்றும் இங்கு கற்பிதம் செய்கிற பொதுப் புத்தியை தகர்ப்பதாக இருக்கிற அவரது பார்வை விசாலமானது.  கூடலாய்க் கொப்பெறிஞ்சு பச்சைப் பந்தலிட்ட ஆலமரம் குறுக்காலே முறிஞ்சு போச்சே என அவரது படிமங்கள் எளிமையானவை. ஆனால் ஆழமானவை. புகையை இருளை அவர் குறியீட்டு வடிவமாகக் கொண்டு எழுப்புகிற சித்திரங்கள் சொல்நேர்த்தியோடு லாவகமாக மறைபொருளை உணர்த்தி நிற்பன.

சிறுவரம்பு

பெய்த மழைவெள்ளம்

சிறுவரம்பு மீறிக்

குளப்பள்ளம் வழிந்தோட

மூளும் வெயிலினிலே

வயலில்.

நீர் காய்ந்து

நிலம் வறண்டு

பயிர் சுருண்டு

சாகிறது! “

என இந்த கவிதை குறிப்புணர்த்தும் தத்துவம் விசாலமான ஒன்று. சிறுவரம்பைப் போல அல்லாது நம் காரியங்கள் தூர நோக்கோடு இருக்க வேண்டுமென்பதையே அவர் சொல்ல விளைகிறார்.

“வரம்புநடை தடுக்க

வீழ்வதும் எழுவதுமாய்

வெளி கடந்துவிட்டேன் நான்

ஆனால் தொடுவானம்………..?

இங்கில்லை; எங்கோ தெரிகிறது.

அங்கே நான் போகின்றேன். “ என வாழ்வின் தத்துவத்தை அதன் நீட்சியை  ஆன்ம விசாரத்தோடு படையலிட்டிருப்பார். என்.கே.மகாலிங்கம் கூட ஆன்ம விசாரமான கவிதைகள் அதிகம் தா.இராமலிங்கம் எழுதியிருக்கலாமென குறை பட்டிருப்பார். அதற்குரிய potential அவருக்கு இருந்திருக்கிறதென்பதை சில கவிதைகள் வழிமொழிகின்றன.

“நீறு பூத்த குறங் கொள்ளிக் கட்டைகள்

காற்று ஊத கண் முழித்துப் பார்க்கிறது” போன்ற காட்சி வெளிப்பாடுகள் அவரது கவிதைகளில் நிரம்ப காணமுடியும். தமிழகம் ஈழமென்ற வேறுபாடின்றி புதுக்கவிதைகள் எதிர்ப்பைச் சந்தித்தன. இதற்கு தா.இராமலிங்கம் கூட விதிவிலக்கு அல்ல. 

இவரது கவிதைகள் பற்றி இ.முருகையன் சொல்லும் போது “புதுமெய்க் கவிதையின் யாப்பைப்பற்றியும் சில சொல்லவேண்டும். வழமையான யாப்பு புறக்கணிக்கப்பட்டுள்ளது. கையாளப்பட்ட சொற்கள் தமிழ் மொழியைச் சேர்ந்தனவாகையால், எழுதப்பட்டுள்ளது தமிழ்க் கவிதையாதலால், அச்சொற்களின் இயல்பான ஒலிகள் இசைந்து பல்வேறு ஓசை ஓவியங்களை ஆக்குகின்றன. எனினும் அந்த ஓவியங்கள் போதிய அளவுக்கு நெறிப்படுத்தப்படவில்லை என்று நினைக்கிறேன். சங்கமருவிய காலத்துக்குப் பின்னர் தமிழ்க்கவிதையே எழுதப்படாமலிருந்து, அந்தப் பெருத்த இடைவெளிக்குப் பின்னர் திரு.இராமலிங்கம் எழுதியுள்ள கவிதைகள் வெளிவருகின்ற ஒரு நிலைமையைக் கற்பனை செய்து பார்த்தால், இப்புதுமெய்க் கவிதைகளின் யாப்பு பொருத்தமான ஒன்றாகத்தான் இருந்திருக்கும். ஆனால் உண்மை அவ்வாறில்லையே! சங்கமருவியகாலத்தின் பின்னரும் தமிழ்க் கவிதை யாப்பிலே எண்ணிறந்த பல மாற்றங்கள், வளர்ச்சிகள் நிகழ்ந்திருக்கின்றன. இவற்றின் பயனான ஓசைக் கோலங்கள் நமது மொழியின் முதுசொத்தாகவும், மூலவளமாகவும் திரண்டிருக்கின்றன. இவை தேவையில்லை என்று விட்டுவிடலாமாயினும், இவை இல்லை என்று ஒதுக்கிவிட முடியாது. நம்மிடையே புதிதியற்ற முனைகிறவர்கள், தாம் உழைத்து ஈட்டியவற்றோடு கூட முதுசொத்திலிருந்தும் ஏற்ற அளவுக்கு எடுத்துச்சேர்த்துப் பயன்படுத்த வேண்டும். அவ்வாறு பயன்படுத்தும் போக்கு, நாட்டம் புதுமெய்க் கவிதைகளில் அறவே இல்லை என்று நான் சொல்ல வரவில்லை.” என குறைபட்டிருப்பார்.  ஆனால் அறுபது ஆண்டுகள் தாண்டி முருகையன் குறைபட்டுக் கொண்ட விடயங்களே தா.இராமலிங்கத்தின் சிறப்பாக எனக்குத் தோன்றுகிறது.  அந்த மீறலையும் விடுபடலையும் ஏற்றுக் கொள்வதில் இ.முருகையனுக்கு இருந்த தயக்கமே தா. இராமலிங்கத்தின் சிறப்பு எனப்படுகிறது. இராமலிங்கம் கவிதையை வடிவமாகவன்றி மனநிலையாக யோசித்திருக்கிறார். அகவயமான போராட்டங்களை எண்ணவோட்டங்களை கவிதையினூடே விதைத்திருக்கிறார். ஆரம்ப காலத்திலேயே எழுத வந்தாலும் அம்மணக் கவிதைகள் யாப்புக் குறைபாடுகள் என்ற விமர்சனங்கள் எழுந்த போதும் தான் நம்பியதில் தனக்கு இருந்த புரிதலில் உறுதியாக இருந்திருக்கிறார்.

மு.தளையசிங்கம் குறிப்பிட்டதை இங்கே குறிப்பிடுவது மிகவும் பொருத்தமாக இருக்கும். “தா. இராமலிங்கத்தின் கவிதைகளிலே முழுக்க முழுக்க அவரிடமிருக்கும் தன் காலம், சூழல் பற்றிய உணர்வும், அந்த உணர்வு பிறப்பிக்கும் திருப்தியின்மையும், அந்தத் திருப்தியின்மை கோரும் மாற்றமுந்தான் முத்திரை பதித்து நிற்கின்றன. மஹாகவியின் `சடங்கு’ விலும் முருகையனின் `துழாவிடும் தொண்டு’விலும் வெளிக்காட்டப்படும் அந்தத் திருப்தியின்மையும், மாற்றம் பற்றிய கோரிக்கையும், இராமலிங்கத்தின் கவிதைகளில், அவர் எழுத ஆரம்பித்துள்ள காலத்துக்கு ஏற்ற வகையில் தர்க்க ரீதியாக வளர்க்கப்பட்டு புரட்சிக்குரல் எழுப்புகின்றன. அவைதான் கவிதைகளின் உள்ளடக்கத்துக்கு மட்டுமல்ல, உருவ அமைப்புக்கும் வித்திடுகின்றன. காலமும் சூழலும் அவரிடம் எழுப்பும் தீவிர உணர்வும் திருப்தியின்மையும், கவிதைகளின் உருவ அமைப்பிலும் யாப்பு முறைகளிலும் ஒரு புதிய உடைப்பையும், அதனால் ஒரு புதிய வளர்ச்சியையும் ஏற்படுத்துவதோடு அத்தகைய உடைப்பையும் மாற்றங்களையும் தவிர்க்க முடியாதவைகளாகவும் ஆக்கிவிடுகின்றன.

படிப்பவர்களிடம் அதை ஏற்றுக்கொள்ளும் நம்பிக்கையும் ஏற்பட்டு விடுகிறது. புதுக்கவிதைகள் வெறும் தரமற்ற விடுகதைகளாய் இருக்காமல், தரமான கவிதைகளாய் இருக்கவேண்டுமானால், கவிஞனுக்குத் தன்னையும் தன் சூழலையும் பற்றிய பூரண உணர்வும், அது எழுப்பும் உத்வேகமும் எந்தளவுக்கு அத்தியாவசியமானவை என்பது இராமலிங்கத்தின் கவிதைகள் சிலவற்றைப் படிக்கும்போது தெரிய வருகின்றது.” என தளையசிங்கம் கூறியிருப்பது மீள நினைவு கூறுவதற்கு பொருத்தமான ஒன்று.

சப்னாஸ் ஹாசிம்

சப்னாஸ் ஹாசிம், அக்கரைப்பற்றைச் சேர்ந்தவர். ‘நிணக் கவிதைகளில் அப்பிய சொற்கள்’ என்ற கவிதைப் புத்தகத்தின் ஆசிரியர்.

உரையாடலுக்கு

Your email address will not be published.