/

சிங்களத்தில் ரூமியின் கவிதைகள்: தமிழில்: ஜிஃப்ரி ஹாசன்

பேராசிரியர் சசங்க பெரேரா உடன் ஓர் உரையாடல்: பராக்கிரம ஏக்கநாயக்க

சசங்க பெரேரா புது டெல்லியிலுள்ள தெற்காசியப் பல்கலைக்கழகத்தில் சமூகவியல் துறைப் பேராசிரியர். அதே பல்கலைக்கழகத்தின் சமூகவியல் துறையின் ஸ்தாபக ஆசிரிய உறுப்பினரும் கூட. இங்கு சமூகவியல் துறையின் தலைவராகவும் (2011-2014), சமூக அறிவியல் பீடத்தின் பீடாதிபதியாகவும் (2011-2018) பல்கலைக்கழகத்தின் துணைத் தலைவராகவும் (2016-2019) இவர் கடமையாற்றியுள்ளார். அதற்கு முன்னர், இலங்கையில் கொழும்பு பல்கலைக்கழகத்தில் சமூகவியல் துறையில் இருபது வருடங்கள் கடமையாற்றினார்.

கவிஞர் ஜலாலுத்-தீன் முகம்மது ரூமியின் கவிதைகளை ருஹுனு பல்கலைக்கழகத்தின் ஆங்கில மொழித்துறை விரிவுரையாளர் இந்து கமகே உடன் இணைந்து சிங்கள மொழிக்கு තුටින් පිරි ගිය එක් මොහොතක්  (மகிழ்ச்சி நிரம்பியதோர் பொழுது) என்கிற தலைப்பில்  கொண்டு சென்றுள்ளார். அவருடன் ஊடகவியலாளர் பராக்கிரம ஏக்கநாயக்க நிகழ்த்திய உரையாடல் இது.

கே: ஜலாலுத்-தீன் முகம்மது ரூமி எனும் இஸ்லாமியக் கவிஞரை சிங்கள வாசகர்கள் முதன்முதலில் படிக்கும் சந்தர்ப்பம் இதன் மூலம் கிடைக்கிறது. இந்நிலையில், அவரைப் பற்றிய ஒரு சிறு அறிமுகத்தைத் தர முடியுமா?

சசங்க பெரேரா: 13 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த, பாரசீக மொழியில் முதன்மையாக எழுதிய ஒரு கவிஞராக ரூமியை நாம் கருதலாம். அவரது சில கவிதைகள் துருக்கிய மொழியிலும் வேறு சில அவரது சமகால மொழிகளிலும் எழுதப்பட்டுள்ளன. ரூமி, இஸ்லாமிய நம்பிக்கைக் கட்டமைப்பின் சூஃபி கிளையைச் சேர்ந்த ஒரு மதத் தலைவர், இறையியலாளர், ஆசிரியர், அறிஞர் மற்றும் எழுத்தாளர் என நாம் அவரைப் புரிந்து கொள்ளலாம். ரூமி செப்டம்பர் 30, 1207 அன்று இன்றைய ஆப்கானிஸ்தானில் உள்ள பல்க் எனும் சிறிய நகரத்தில் பிறந்தார். அவர் டிசம்பர் 17, 1273 அன்று தனது 66 வயதில் இன்றைய துருக்கியில் உள்ள கோன்யா நகரில் இறந்தார்.

ரூமியும் அவரது குடும்பத்தினரும் தங்கள் கிராமத்தை விட்டு வெளியேறி பெர்சியாவிற்கு அல்லது இன்றைய ஈரான் மற்றும் துருக்கிக்கு குடிபெயர்ந்ததற்கு இரண்டு காரணங்களை வரலாற்றாசிரியர்கள் முன்வைக்கின்றனர். அதில் ஒன்று, இந்த குடிபெயர்வு அவரது தந்தை பஹா அல்-தீன் வாலாத் இற்கும் அந்த பகுதி ஆட்சியாளருக்கும் இடையே ஏற்பட்ட தகராறின் விளைவால் ஏற்பட்டது என்பது. இரண்டாவது செங்கிஸ்கான் தலைமையில் சீனாவிலிருந்து மேற்கு நோக்கி தங்கள் படைகளை வழிநடத்திச் சென்ற மங்கோலிய படையெடுப்பாளர்களிடமிருந்து தப்புவதாகும். இந்த இடப்பெயர்வுக்குப் பிறகு, ரூமி வாழ்ந்த பகுதி அவரது பிற்கால கவிதைகளுக்கு மிகவும் முக்கியத்துவமானதாக அமைந்தது. அவர் தனது வாழ்நாளின் பெரும்பகுதியை வாழ்ந்த கோன்யா நகரம் 13 ஆம் நூற்றாண்டில் பல கலாச்சாரங்கள் சந்தித்த இடமாக இருந்தது. கோன்யா “பட்டுப்பாதையின்’ மேற்கு முனையில் அமைந்திருந்தது, இது ஐரோப்பாவிற்கும் ஆசியாவிற்கும் இடையிலான கலாச்சார மற்றும் வர்த்தக உறவுகளுக்கான பாதையைத் திறந்தது. ஆய்வாளர்கள் இந்த பகுதியை கிறிஸ்தவ, இஸ்லாமிய, இந்து மற்றும் பௌத்த கலாச்சார உலகங்களை ஒன்றாக இணைக்கும் வழியாகக் கருதுகின்றனர். 13 ஆம் நூற்றாண்டு கோன்யா குறைந்தது மும்மொழி நகரமாக இருந்தது. துருக்கி அதன் முதன்மையான பிராந்திய மொழியாகும். பாரசீகம் இலக்கியத்தின் மொழியாக மாறியது. மத மொழியாக- குர்ஆனின் மொழியாகவும், மத நடைமுறைகளின் மொழியாகவும் அரபு இருந்தது. ரூமியைப் பொறுத்தவரை, இந்த இடம் மிக முக்கியமானது, ஏனெனில் ரூமி இந்நகரத்துடன் தொடர்புடைய பல கலாச்சார மற்றும் மொழியியல் தாக்கங்களையும் மரபுகளையும் தனது கவிதைகளில் ஒருங்கிணைத்து அவற்றை ஒரு கவிதை சொற்பொழிவாக மாற்றினார்.

ரூமி இன்று ஒரு கவிஞராக அறியப்பட்டாலும், அவர் முதன்மையாக ஒரு இறையியலாளர். இறையியல் பயிற்சி பெற்றவர். ஆரம்ப காலத்தில், சாதாரணமாக அவரைப் போன்ற ஒரு மதத் தலைவரிடமிருந்து சாமான்ய மக்கள் எதிர்பார்க்கும் வாழ்க்கை முறையைப் போலவே அவரது வாழ்க்கையும் இருந்தது. அவரது மதப் பயிற்சி, அறிவு மற்றும் குறிப்பாக சூஃபி நம்பிக்கைகள் அவரது பிற்கால கவிதைகளுக்கு அடிப்படையாக அமைந்தன. ரூமி தற்செயலாகவே கவிதையில் நுழைந்தார். அப்போது அவர் ஷம்ஸ் அல்-தின் அல்லது ஷம்ஸ் தப்ரீஸி என்கிற சூஃபி ஞானியைச் சந்தித்தார். ஷம்ஸ் அல்-தின் ‘டெர்விஷ்’ என்று அழைக்கப்படும் அலைந்து திரிந்த சூஃபி துறவி ஆவார். கிடைக்கப்பெற்ற தகவல்களின்படி, இந்த சந்திப்பு நவம்பர் 30, 1244 அன்று கோன்யாவில் நடந்தது. இந்த சந்திப்பு பற்றிய பல கதைகளை ரூமியின் வாழ்க்கை வரலாறு தொடர்பான எழுத்துக்களில் காணலாம். இந்த மரபுகள் அனைத்தும் காட்டும் முக்கிய அம்சங்களில் ஒன்று, புத்தகங்களிலிருந்து பெறக்கூடிய முறையான அறிவின் வரம்புகளை ஷம்ஸ் ரூமிக்கு எடுத்துக் காட்டினார். ரூமியின் இந்த காலகட்டம் மற்றும் பிற விவரங்கள் போன்றன ‘තුටින් පිරි ගිය එක් මොහොතක්’ புத்தகத்திற்காக நான் எழுதிய அறிமுகத்தில் விவரிக்கப்பட்டுள்ளன. நான் இங்கு வெளிப்படுத்தும் பெரும்பாலான கருத்துக்கள் அங்கிருந்து எடுக்கப்பட்டவை.

கே: அவரது கவிதைகளிலுள்ள தனித்தன்மைகள் என்று எவற்றைச் சொல்லலாம்?

சபெ: பல முக்கிய பண்புகள் இருப்பதாக நான் நினைக்கிறேன். ஒன்று அவர் பலதரப்பட்ட தலைப்புகளில் எழுதுகிறார். அவற்றில், இயற்கை மற்றும் அதன் மதிப்பு, வாழ்க்கை, இறப்பு, துக்கம் மற்றும் காதல் போன்ற கருப்பொருள்களில் அவர் எழுதி இருப்பது தெரிகிறது. இந்தக் கருப்பொருள் சார்ந்த பண்பு அவரது கவிதைகளுக்கு ஒரு உலகு தழுவிய அடையாளத்தைக் கொடுக்கிறது. ஆனால், அவர் இங்கு கடவுள் மனிதனிடம் காட்டும் அன்பையும், மக்கள் கடவுளிடம் காட்ட வேண்டிய அன்பையும் அடிக்கடி குறிப்பிடுகிறார். மற்றொன்று என்னவென்றால், ரூமியின் காலத்திலும் இப்போதும் கூட, இந்த கருப்பொருள்கள் கவிஞரின் மத நோக்குநிலையைத் தாண்டி, வெவ்வேறு கலாச்சார உலகங்களைச் சேர்ந்தவர்களாலும் ரசிக்கப்படும் தன்மையையும், அர்த்தத்தையும் கொண்டிருக்கிறது. இக்கவிதைகளில் ஒப்பீட்டளவில் எளிமையான மொழியையும், குறியீடுகளையும், படிமங்களையும் பயன்படுத்தியிருப்பது இன்னொரு விஷேசமாகும்.

கே: තුටින් පිරි ගිය එක් මොහොතක්(மகிழ்ச்சி நிரம்பியதோர் பொழுது) எனும் இக்கவிதைப்பிரதியின் உள்ளக ஒழுங்கைமைப்பைப் பற்றி விளக்கிச் சொல்வீர்களா?

சபெ: இந்நூலில் இந்து கமகேயும் நானும் ரூமியின் 150 கவிதைகளின் சிங்கள மொழிபெயர்ப்புகளை வழங்கியுள்ளோம். சில கவிதைகள் மிகக் குறுகியவை. மற்றவை நீளமானவை. இந்தக் கவிதைகள் அனைத்தையும் நான்கு பரந்த கருப்பொருள்களின் கீழ் வழங்கியுள்ளோம். இலங்கையில் ரூமி பற்றி ஆழமான விவாதம் நடக்காததால், அவரது கவிதைகளையும் சிந்தனைகளையும் புரிந்து கொள்ள ஓரளவு உதவும் வகையில் கொஞ்சம் நீண்ட அறிமுகத்தை இந்நூலில் சேர்த்துள்ளேன். சில விஷயங்களை இங்கு எடுத்துரைப்போம். அதாவது, ரூமியின் வாழ்க்கையைப் பற்றி சுருக்கமாகச் சொல்லுங்கள்; அவர் கவிதையில் எப்படி நுழைந்தார் என்பதை விவரிக்கவும்; ரூமியின் கவிதையில் இஸ்லாம் மற்றும் சூஃபித்துவத்தின் தாக்கத்தை புரிந்து கொள்ள முயற்சிக்கவும்; ரூமியின் நீண்ட கால இலக்கியச் செல்வாக்கை – (குறிப்பாக தெற்காசியப் பகுதியில்) சுருக்கமாக ஆராயுங்கள்; இறுதியாக, ரூமியின் கவிதையுடன் தொடர்புடைய மொழிபெயர்ப்பின் அரசியலைப் புரிந்துகொள்ள முயற்சியுங்கள்.

மேலும், இத்தொகுப்பில் உள்ள ரூமியின் கவிதைகளின் மைய உள்ளீடுகள் மற்றும் ஏனைய பண்புகளையும் முழுமையாக ஆராய்வதற்கான ஆரம்ப முயற்சியைக் கட்டியெழுப்ப ருஹுணு பல்கலைக்கழகத்தின் சிங்களத் துறையைச் சேர்ந்த கலாநிதி தர்ஷன லியனகேவினால் பின்னூட்டம் ஒன்றும் வழங்கப்பட்டுள்ளது. இப்படிப் பார்க்கும்போது, ​​மொத்தத்தில் நானும் இந்துவும் இந்த முயற்சியை, இலங்கையில் ரூமியின் கவிதைகள் பற்றிய உரையாடலைத் தொடங்குவதற்கான அழைப்பாகவே புரிந்துகொள்கிறோம்.

கே: இக்கவிதைத் தொகுப்பு இறப்பு, ஞானம், காதல், தியாகம் என நான்கு பகுதிகளைக் கொண்டது. இதில் என்ன விசேஷம்?

சபெ: முதலில் இந்தக் கவிதைத் தொகுப்பைத் தொகுக்கும் போது இன்னும் பல பிரிவுகளின் கீழ் இந்தக் கவிதைகளைச் சேகரித்து வைத்திருந்தோம். அப்படித் தொகுப்பதும் பிழை இல்லை என்றுதான் நான் இன்னமும் நினைக்கிறேன். ஆனால் பின்னர் எங்கள் வேலையை மிகவும் சிக்கலாக்காமல் நான்கு பரந்த பிரிவுகளின் கீழ் கவிதைகளை வழங்குவது மிகவும் வெற்றிகரமாக அமையும் என்று நினைத்தோம். குறிப்பாக இது ஒரு முதற்கட்டப் பணி மற்றும் ஒரு வரையறுக்கப்பட்ட முயற்சி என்ற உண்மையை கருத்தில் கொள்ள வேண்டும். ஆனால் இந்தப் பகுப்பு 100% சரி என்று இந்துவோ நானோ கருதவில்லை. சில பகுப்புகளில் உள்ள கவிதைகள் மற்ற பகுதிகளுடன் உள்ள கவிதைகளோடு ஓரளவிற்கு கருப்பொருள் சார்ந்து தொடர்புபட்டிருப்பதை நாம் அறிவோம். ரூமியின் கவிதைகள் சில சமயங்களில் ஒரே நேரத்தில் பல கருப்பொருள்களை எடுத்துரைப்பதும் இதற்கு ஒரு காரணமாகும்.

எல்லாவற்றிற்கும் மேலாக, பல விமர்சகர்கள் சுட்டிக்காட்டியபடி, ரூமியின் கவிதைகள் கருப்பொருள்சார்ந்து மிகவும் குழப்பமானவை (confused). அவர்களின் ஆரம்பஆய்வுகளைப் பார்க்கும் போது, ரூமி தன் கவிதைகளை பல்வேறு காலங்களிலும், பல்வேறு சூழ்நிலைகளிலும் எழுதியிருப்பதும், சிலவேளைகளில், அவர் குறியீடுகளை கவிதைக்குக் கவிதை, வெவ்வேறு அர்த்தங்களில் பயன்படுத்தி இருப்பதும் அதற்கு ஒரு காரணமாக இருக்கலாம் என்பது புலனாகிறது. அதுபற்றி எனது அறிமுகத்தில் விளக்கியுள்ளேன். இவ்வாறு, ரூமியின் கவிதைகளின் அமைப்பு அவரது வாழ்நாளிலும் அதற்குப் பின்னரும் முன்னோடித் தொகுப்பாளர்கள் மற்றும் மொழிபெயர்ப்பாளர்களால் செய்யப்பட்டது. அது ரூமியால் செய்யப்பட்டதல்ல. இந்த பிற்கால தொகுப்பாசிரியர்கள் கருப்பொருள் வரிசையில் எழுதப்பட்ட கவிதைகளை கருப்பொருள் அடிப்படையில் தொகுத்து தலைப்புகள் இல்லாத கவிதைகளுக்கு தலைப்புகளை வழங்கினர். இந்த சிங்களத் தொகுப்பிலும் இப்படித்தான் செய்தோம். இந்த அமைப்பை ஒரு சமகால உத்தியாக மட்டுமே நாங்கள் கருதினோம்.

கே: கவிஞர் ஜலால் அத்-தீன் முகம்மது ரூமி அவர்களின் கவிதைகளை நீங்களும் இந்து கமகேயும் இணைந்து சிங்களத்தில் மொழிபெயர்த்துள்ளீர்கள். இந்த மொழிபெயர்ப்பு அனுபவத்தைப் பகிரலாமா?

சபெ: இந்துவும் நானும் இரண்டு தொழில்முறை பின்னணியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பல்கலைக்கழக ஆசிரியர்கள். இந்து கமகே ஆங்கில மொழிப் பயிற்சியில் தேர்ச்சி கொண்டவர். நான் சமூகவியலின் இரு பரந்த பாடப் பகுதிகளைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறேன். ஆனால், இந்த இரண்டு வெவ்வேறு தொழில்முறை பின்னணியைத் தவிர, இந்த மொழிபெயர்ப்புப் பணியில் முக்கியமான பல விஷயங்கள் எங்களிடம் உள்ளன. ஒன்று, நாங்கள் சிங்கள மற்றும் ஆங்கில மொழித் திறன்களில் சமமான நிபுணத்துவம் கொண்டவர்களாக இருக்கிறோம்.  மற்றொன்று, வாசகர்களாகிய எங்களுக்கு கவிதையின் மீதான ஆர்வமும் ஈடுபாடும் அதிகமாக இருக்கிறது. இந்த ஒற்றுமைகள் மற்றும் வேறுபாடுகள் இரண்டும் மொழிபெயர்ப்புப் பணியில் எங்களை வழிநடத்தியது என்று நினைக்கிறேன்.

இந்து கமகேயின் முறையான மொழிப் பயிற்சியின் காரணமாக, அவர் மொழிநடையிலும் சொற்களிலும் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தார். மேலும், கவிதை மொழிபெயர்ப்பில் அவரது பிரதான பங்களிப்பு இந்த இரண்டு தளங்களிலேயே அதிகம் இருந்தது. இதற்கு நேர்மாறாக, முறையான மொழிப் பின்னணி இல்லாத எனது முதன்மை ஆர்வம், கவிதை அல்லது உரையின் அடிப்படை அர்த்தமே தவிர, சொல்வரிசையோ அல்லது ஏனைய மொழியியல் கூறுகளோ, கட்டமைப்பு விஷயங்களோ அல்ல. மேலும், மொழிபெயர்ப்பில் மற்ற ஒத்த சொற்களைக் கருத்தில் கொள்ளாமல் சில சிங்கள சொற்களைத் தேர்ந்தெடுப்பது குறித்து நாங்கள் இருவரும் வெவ்வேறு கருத்துக்களைக் கொண்டிருந்தோம். இதெல்லாம் மொழிமாற்றத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை ஆரம்பத்திலிருந்தே நாங்கள் அறிந்திருந்தோம். அது எங்களுக்கு ஒரு பிரச்சனையாக இருக்கவில்லை.

தவிர, இந்தப் பணி கொவிட் 19 லொக்டவுண் காலத்தில் இருவரும் வெவ்வேறு நகரங்களில் இருந்தபோதே தொடங்கப்பட்டது. இந்தக் காலப் பகுதியில் நான் பெரும்பாலும் புது டெல்லியில் இருந்தேன். இந்து மாத்தறையில் இருந்தாள். மொழிபெயர்ப்பின் போது நாங்கள் சந்தித்ததில்லை. அனைத்து பரிவர்த்தனைகளும் மின்னஞ்சல் அல்லது குறுஞ்செய்தி மூலமே செய்யப்பட்டன. இத்தகைய சந்தர்ப்பங்களில் ஒருவருக்கொருவர் தொலைதூர இடங்களில் வசித்தாலும் கூட இதுபோன்ற செயல்பாடுகளை எவ்வாறு வெற்றிகரமாக மேற்கொள்ளலாம் என்பது குறித்த சில வழிமுறைகள் மற்றும் யோசனைகள் இந்த திட்டத்தில் இருப்பதாக நான் நினைக்கிறேன். இதனை நான் எடுத்துக்காட்டாகவே சொல்கிறேன். இதைப் பற்றி நீங்கள் பின்னர் கவனமாக சிந்திக்க வேண்டும்.

கே: சிங்கள இலக்கிய சமூகம் තුටින් පිරි ගිය එක් මොහොතක්கவிதைகளைப் படிப்பதன் முக்கியத்துவம் பற்றி உங்கள் கருத்தை எங்களிடம் கூற முடியுமா?

சபெ: ரூமி 13ஆம் நூற்றாண்டிலிருந்து இன்று வரை பல்வேறு வழிகளில் உலகப் புகழ் பெற்ற கவிஞர். இவரது கவிதைகள் இதற்கு முன் உலகின் பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. ரூமியின் கவிதை முதன்முதலில் 18 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் ஐரோப்பிய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டது. முதலில் பிரெஞ்சு மற்றும் ஜெர்மன் போன்ற ஐரோப்பிய மொழிகளிலேயே மொழியாக்கம் செய்யப்பட்டன. பின்னர் ஆங்கிலத்தில் 19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் மொழிபெயர்க்கப்பட்டன. தெற்காசியாவில் 19 ஆம் நூற்றாண்டிலிருந்து உருது மொழியில் ரூமி பற்றிய அவதானங்களும், விவாதங்களும் கிளம்பின. (20பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியிலிருந்து தமிழிலும் ரூமி பரவலாகப் பேசப்படத் தொடங்கினார்-மொ.பெயர்ப்பாளர்) ஆனால் நம் நாட்டில் அப்படி எதுவும் நடக்கவில்லை.

உலகளாவிய கவிஞர்கள் மற்றும் படைப்பாளிகள் பற்றிய எந்த அறிவுமற்ற சமகால எழுத்தாளர்களை, இலக்கியவாதிகளை அறியாமை மற்றும் இலக்கிய ஊட்டச்சத்து குறைபாடு கொண்டவர்களாகவே நான் பார்க்கிறேன். இந்தச் சூழ்நிலையில், இயலுமானவரை, ரூமியை மட்டுமல்ல, உலகப் புகழ்பெற்ற ஏனைய படைப்பாளிகளினதும் மற்றும் சிங்கள எழுத்தாளர்களின் புத்தகங்களையும் படிப்பது மிகவும் முக்கியமானதாக நான் பார்க்கிறேன். இது போன்ற விஷயங்கள் பரவலாக நடக்கவில்லை என்றால் மொழியும் இலக்கியமும் வளர்வது கடினம்.

கே: இறுதியாக, இலங்கையின் சமகால மொழிபெயர்ப்பு இலக்கியத்தில் வந்து சேரும் மொழிபெயர்ப்புக் கவிதைகள்/ படைப்புகள் பற்றி உங்களிடம் எத்தகைய கருத்து உள்ளது?

சபெ: என்னிடம் ஒரு தனிப்பட்ட கருத்து உள்ளது. தற்போது சிங்கள மொழியில் பல மொழிபெயர்ப்புகள் வெளிவந்துள்ளதை நாம் அனைவரும் அறிவோம். இவை அடிப்படையில் ஆங்கிலத்திலிருந்து சிங்களத்திற்கு மொழிபெயர்க்கப்பட்டவைதான். ஆனால் இந்த மொழிபெயர்ப்புகளில் பெரும்பாலானவை மிகக் கவனமாக செய்யப்பட்டவையல்ல என்பது என் நம்பிக்கை. சந்தையில் கிடைக்கும் பல புத்தகங்களைப் படித்துவிட்டுத்தான் இந்த முடிவுக்கு வந்தேன். இவற்றைப் படிக்கும்போது, அவற்றில் கடுமையான தவறுகளைக் காணும் போது கூகுள் மொழிபெயர்ப்புச் செயலியைப் பயன்படுத்தியாவது திருத்தங்களைச் செய்திருக்கலாம் என்று எண்ணுவேன். அதேநேரம், மேம்பட்ட நல்ல மொழிபெயர்ப்புகளும் உள்ளன. அவற்றைப் படிக்கும்போது, ​​அந்த மொழிபெயர்ப்பாளர்களுக்குத் தேவையான மொழிப் பயிற்சியும் அனுபவமும் இருப்பது மிகத் தெளிவாகத் தெரிகிறது. ஆனால் ஒரு துறையாக மொழிபெயர்ப்புப் பயிற்சி, மொழிப் பயிற்சி, பதிப்பக வசதிகள் மற்றும் தேவையான நிதியுதவி ஆகியவற்றில் நம் நாடு இன்னும் முன்னேற வேண்டும் என்பது எனது நம்பிக்கை. நம் நாட்டில் தற்போது ஆங்கிலத்தில் இருந்து சிங்களம் அல்லது தமிழுக்கு பல மொழிபெயர்ப்புகள் செய்யப்படுகின்றன. நானும் இந்துவும் ரூமியை ஆங்கிலத்திலிருந்தே சிங்களத்திற்கு மொழிபெயர்த்தோம். அதற்குக் காரணம், இதற்குத் தேவையான பாரசீக மொழித் திறன் எங்களுக்கு இல்லை. ஆனால், சாத்தியமான போதெல்லாம், ஒரு படைப்பை மூல மொழியிலிருந்துதான் மொழிபெயர்க்க வேண்டும். அப்படிச் செய்ய முடியுமானால், மற்றொரு மொழிக்கு சென்று வரும் போது நிகழக்கூடிய அர்த்தம் இழப்பைக் குறைக்க முடியும் என்று நான் நம்புகிறேன். எனது அறிமுகத்தில் எங்களின் மொழிமாற்ற முயற்சியில் உள்ள சிக்கல்கள் குறித்தும் விளக்கியுள்ளேன். நமது நாட்டில் குறைந்த பட்சம் முக்கியமான சிங்களப் புத்தகங்களைத் தமிழில் மொழிபெயர்ப்பது அல்லது அதற்குச் சமமான முக்கியமான தமிழ்ப் படைப்புகளை சிங்களத்தில் மொழிபெயர்ப்பது சரியான முறையிலோ, தேவையான அளவிலோ இன்னமும் நடைபெறவில்லை. இது ஒரு பெரிய துரதிர்ஷ்டம்.

கே: ஒரு பல்கலைக்கழகப் பேராசிரியராக, இலங்கைப் பல்கலைக்கழகங்களில் மேற்கொள்ளப்படும் கவிதைகள் குறித்த ஆய்வுகள் பற்றி உங்களிடம் என்ன வகையான கருத்து உள்ளது?

சபெ: நமது பல்கலைக்கழகங்களில் கவிதை எப்படிக் கற்பிக்கப்படுகிறது, அதில் என்ன மாதிரியான ஆராய்ச்சிகள் செய்யப்படுகின்றன என்பதை நான் பார்க்கவில்லை. நான் முன்பே கூறியது போல், இது எனது முறையான கல்வித் துறை அல்ல. ஆனால் இயலும்போதெல்லாம் சிங்களத்தில் வெளியாகும் கவிதைகளை வாசிப்பேன். இலங்கையில் ஆங்கிலத்தில் எழுதப்படும் கவிதைகளையும் ஓரளவு படிக்கிறேன். ஆனால் கடந்த பத்தாண்டுகளாக, உலக அளவில் ஆங்கிலத்தில் அல்லது ஆங்கில மொழிபெயர்ப்பில் வெளிவந்த கவிஞர்களின் பெரும்பாலான கவிதைத் தொகுப்புகளை நான் படித்திருக்கிறேன். பாகிஸ்தானின் ஃபைஸ் அகமது ஃபைஸ், இந்தியாவின் குல்சார், போர்த்துக்கலின் பெர்னாண்டோ பெசோவா, சிலியின் பாப்லோ நெருடா போன்றோரின் கவிதைகளில் எனக்கு அதிக ஆர்வம் உண்டு.

ஜிஃப்ரி ஹாஸன்

கிழக்கு இலங்கையில் பாலைநகர் என்ற கிராமத்தில் பிறந்தவர். குறிப்பிடத்தக்க சிறுகதைகளையும் கவிதைகளையும் இலக்கிய மதிப்பீடுகளையும் எழுதியிருக்கிறார். இவருடைய இலங்கையில் போருக்குப் பின்னரான அரசியல்பற்றிப் பேசும் ‘அரசியல் பௌத்தம்’ என்ற புத்தகம் முக்கியமானது.

1 Comment

  1. சரளமான மொழிபெயர்ப்பு. வாழ்த்துக்கள்.

உரையாடலுக்கு

Your email address will not be published.