(1)

விதைகளை நான் விதைக்கச் செல்லவில்லை
குப்பையில் வீசச் சென்றேன்.
வீசு, வீசு என்றபடி என்முன்
குடத்தை ஒருத்தி பிடித்தாள்
அது  நிரம்பியது.
விதைகள் என்னிடம்
நிறைய இருந்தன
பின் இரண்டு பெண்கள் என்முன் வந்தனர்
நிறை, நிறை என்று குடங்களை நீட்டினர்
அன்று அங்கு வந்த பெண்களின் குடங்களை
நான் விதைகளால் நிரப்பினேன்
கடைசியில் ஓர் கிழவி ஓர் கிடாரத்துடன் வந்தாள்
நான் அதனை நிரப்பினேன்.
“இவை எந்த விதைகள்?” என அன்புடன் கேட்டாள்
“கவிதை விதைகள்” என்றேன்.
கிடாரத்தைப் புரட்டிவிட்டு
அவள் ஓட்டம் எடுத்தாள்…
நானும் அவள்பின் ஓடினேன்.

(2)

கத்தினாள் அவள் 
அவன் அவளைப் புணர்ந்தான் 
அவள் கத்தினாள் 
அவள் இரங்கினாள் 
அவள் தப்புவதற்காகக் கெஞ்சினாள் 
தான் மயங்குமுன்…
“நீ என் கணவன்தானே?”
“இல்லை.”
“பொய், நீ என்னைக் 
காதலித்தவன்தானே?”
“இல்லை.”
“பொய், நீ யார்?”
“நான் ஓர் இயந்திரம்.”

(3)

சுவைப்பும் சுவைப்பின்மையும் 
எனது பேனாவில் ஏறி 
அவைகளது  முனைகளை நான் உடைத்து 
எனது நூல்களில் நெருப்பை வைத்து 
நித்தியத்தைத் தேடியபோது …
குளிரில் நடுங்கிய காகம் வந்து 
எனது மடியில் இருந்தது 
அதனது கறுப்புச் சிறகில் 
மெதுமையான சூடு கொடுக்க   
சில நூல்களைத் தள்ளினேன் 
“இன்னும் குளிர்கிறது” என்றது காகம்.
என்னிடம் பல புத்தகங்கள் இல்லை.
ஓர் அகராதியைத் தூக்கி 
நெருப்பால் மூட்டினேன் …
“அது எந்த மொழி அகராதி?”
காகம் நடுங்கியபடி கேட்டது.
“சிங்கள மொழி அகராதி”
அது எரிந்தது.
“இன்னும் குளிர்கிறது” என்றது காகம்.
வேறு ஓர் அகராதியை எறிந்தேன் 
“அது எந்த மொழி அகராதி?”
காகம் மீண்டும்  நடுங்கியபடி கேட்டது.
“ஆங்கில மொழி அகராதி.”
“இன்னும் குளிர்கிறது” என்றது காகம்.
மீதியில் என்னிடம் ஒரு அகராதியே  இருந்தது 
அதை எறிந்தேன்
காகம் புன்னகைத்தது, கேள்வி எதுவும் இல்லை.
“எரிவது எந்த மொழி அகராதி என்பது உனக்குத் தெரியுமா?”
காகத்திடம் கேட்டேன்
“ஆம், தமிழ் மொழி அகராதி.”

(4)

எமது வீட்டில் அப்போது 
அப்பம் இருந்தது 
இப்போது 
எமக்கு வீடும் இல்லை
அப்பமும் இல்லை 
எமது வீட்டின் கதவுகளில் 
அப்போது கவிதைகள் 
ரகசியமாக வந்து தட்டின
எம்மை முத்தமிடும் 
சொல்கள் முற்றங்களில் 
எப்போதும் குவிந்தன  
எனது விழிகளின் 
மழை, சோக மழை 
வீதியில்… வீட்டில்… கட்டிலில் 
அப்போது இல்லை 
இவைகள்  இப்போது… 
வீதியில் வறுமையான ஆடுகள்…
என் விழி மழையைக் கண்டு 
அவைகளும் அழுகின்றன…
காயங்கள் தாங்கிய கவிதைகள் 
நான் நடந்த அனைத்து வீதிகளிலும் 
அவைகள் என் பின்னால் 
வருகை தந்து 
எனது காயங்களைக் கண்டு 
அழுகின்றன 
ஆம், அவை மழை 
நாளை தீ எனப் பூக்கலாம். 

(5)

நான் வானத்தைப் பார்த்தேன் 
அது அழுதது 
அதனது கண்ணீர்கள் 
எனது கண்களை நிரப்பின
நிலத்தில் எனது கால்கள் 
அதில் உடைவுகள் 
துவாரங்கள் 
அவைகளை நீக்க எனது விழிகள் காவிய கண்ணீர்களை விட்டேன் 
நிலமும் அழுதது 
குளிரைத் தேடிய என் உடலை 
வெய்யில் கவ்வியது 
நான் அழுதேன் 
வெய்யில் என்னை எரித்தது 
“நீ என்னை எரித்தாய்?”
நான் கேட்டேன்.
“நான் வெய்யில் 
நான் செயற்கை வெய்யில்” 
என அது அழுதது 
“வா, காற்று!”
நான் கத்தினேன்.
அது வரவில்லை 
எனது இயந்திர விசிறியின் 
பட்டனை அமத்தினேன் 
அதுவும் 
இறந்து 
என் கண் முன். 
மீண்டும் நான் வானத்தைப் பார்த்தேன் 
அது நடுங்கியது.
எனது பேனாவைத் தேடினேன் 
அது அப்போது ஓர் பூதத்தின் கையில் 
என்முன் அப்போது 
ஆயுதங்கள் காவிய சிறுவர்கள்…
அவர்களது மொழிகளில் 
இரத்தங்கள் 
நான் அவர்களது பின்னால் 
அடிமையாக நடந்தேன்.  

க. கலாமோகன்

இலங்கையில் இருந்து புலம்பெயர்ந்து பிரான்சில் வசித்து வரும் தமிழ் எழுத்தாளர். கவிதை, சிறுகதை, நாடகம், மொழிபெயர்ப்புகளில் தொடர்ந்து இயங்குகி வருகிறார். சிதறுண்ட தன்னிலைக் கூறில், எங்கேயும் தன்னைச் சரியாக பொருத்திக்கொள்ளாத இயல்பில் தத்தளிக்கும் மனங்களை கதைகளாக்கி வருகிறார்

2 Comments

  1. காத்திரமான கவிதைகள்.
    பூவின் மீது பூத்த கூழாங்கற்கள் போல் கவிதை பூத்துள்ளது. மூத்த புலமோடிக்கு வாழ்த்துக்கள்.
    அகரன்.

  2. 1) அகரத்துக்கு முன்தான் ஓர் வரும். ஓர் கிழவி ஓர் கிடாரத்துடன் என்பது பிழை. ஓரு கிழவி ஓரு கிடாரத்துடன் – என்று இருக்க வேண்டும்.
    2) எனது விழிகள் காவிய கண்ணீர்களை விட்டேன் – காவிய கண்ணீர் என்பதன் பொருள் என்ன?

உரையாடலுக்கு

Your email address will not be published.