போலோனா, அவள்

அவளது நிறத்தையும் அவளது மொழியையும் நான் உங்களுக்குச் சொல்லமாட்டேன். அவள் கல்லூரியில் தத்துவம் படித்ததைச் சொன்னாள்.

உனக்குத் தத்துவம் விருப்பமா?” எனக் கேட்டேன்.

இல்லைஎன்றாள்.

நீ எந்தத் தத்துவஞானியைப் படித்தாய்?” எனக் கேட்டேன்.

நீட்ஷேஎனச் சொன்னாள்.

அவரை நீ விளங்கினாயா?” என அவளிடம் கேட்டேன்.

விளங்கவில்லைஎன்றாள்.

பின் அவள் கேட்டாள்நீ நீட்ஷேயைப் படித்தாயா?” என்று.

ஆம்என்றேன்.

விளங்கியதா?” என்றாள்.

விளங்கவில்லை.” என அவள் சொல்லியதைப் போலவே சொன்னேன்.

அவளதும் எனதும் முத்தக் கலவைகளில் தத்துவங்களே இல்லை.

இரண்டு பெண்களையும் எங்கே சந்திக்கவைப்பது என நான் முதலில் நினைத்தேன். பல இடங்களில் அவர்களைச் சந்திக்க வைக்கலாம். தோட்டத்தில், ஓர் பஸ்ஸில் , ஓர் மெத்ரோவில், ஓர் சினிமா அரங்கில், ஓர் டிஸ்கோ நடக்கும் இடத்தில், ஓர் வாகனத்தில்… ஆம் எவ்வளவோ இடங்கள் உள்ளன. 

ஆனால் நான் தெரிவு செய்ததோ செயற்கையான போர்ணோ உறுப்புகள் விற்கும் கடை. எனது கதைகள் போர்ணோ எனச் சொல்பவர்களை மகிழ்விக்க அல்ல. அந்தக் கடை எனக்குத் தெரிந்திருந்தது. அங்கு நான் சில ஆண்டுகள் வேலை செய்திருந்தேன் என்பதுதான் காரணம்.

அது மிகவும் பெரிய கடை. பல மாடிகள் கொண்டது. ஒவ்வொரு மாடியை வைத்தும் ஓர் கதை சொல்லலாம். அங்கு பிளாஸ்ட்டிக் உறுப்புகள் மட்டும்தாம் விற்பனைக்கு உள்ளன எனச் சொல்ல முடியாது. சுவையான பெண், ஆண்களது உடல்களும் பல இனங்களில், பல நிறங்களில் உள்ளன. செக்ஸ் பார்க்கலாம், செக்ஸும் செய்யலாம். பார்ப்பதற்கு சிறிது காசு, செய்வதற்கு அதிகம் காசு. ஓர் பெண்ணைத் தெரிவு செய்து அவளுடன் இருந்து அவளது தொடைகளைத் தழுவியபடி போர்ணோ படம் பார்க்கலாம். இன்னும் பல சந்தோசங்கள் அங்கு உள்ளன.

நான் அப்போது ஓர் அறையில் பல பேருடன் இருந்தேன். அவர்களில் சிலர் சமய வியாதி பிடித்தவர்கள். ஆனால் அவர்கள் தொழில்களில் இருந்தபோது நான் ஒரு தொழில் தேடிக்கொண்டிருந்தேன். சிலர் எனக்கு உதவி செய்ய நினைத்தாலும் “சில வாரங்களில் உனக்கு ஓர் வேலை கிடைக்கும்.” எனச் சொல்லிக்கொண்டே இருந்தனர். அவர்களால் எனக்கு ஒருபோதுமே தொழில் கிடைக்காது என நான் நினைத்துக் கொண்டேன்.

அப்போது நான் ஓர் தொழில் வெறியனாக இருக்கவில்லை. தொழில் இல்லாதவர்களுக்கான அரச உதவி, சிறிய உதவியாயினும் மாதாமாதம் கிடைத்ததே காரணம். எனது வீட்டில் நிதிச் சிக்கல்கள் இல்லாதபடியால், அங்கு பணம் அனுப்பும் பொறுப்பும் எனக்கு இருக்கவில்லை, நான் அகதிபோலவும் வாழவில்லை. ஆனால் சில வேளைகளில் நான் தொழில் தேடச் செல்வதுண்டு. நான் தேடும் தொழில்கள் எனக்கு எப்போதுமே கிடைப்பதில்லை. என்னோடு வசிப்பவர்கள் எனது போக்கைச் சில வேளைகளில் கிண்டல் அடிப்பார்கள். ரகசியமாக அவர்கள் என்னைச் “சோம்பேறி” என அழைப்பதையும் நான் கேட்டுள்ளேன்.

ஓர் சுடலையின் அருகில் பிறந்ததோ எனது இன்றைய இருப்பிற்குக் காரணம் என எனக்குள் சில வேளைகளில் கேள்வி எழும். நான் சிறுவனாக இருந்தபோது எனக்குப் பிடித்தமான விஷயம் வீதிகளில் உலாவி , அங்கே நடந்து திரியும் பெண்களை, அவர்கள் எந்த வயதில் இருந்தாலும் சரி… ரகசியமாகப் பார்ப்பதே. நான் பார்ப்பது அவள்களுக்குத் தெரியாததால்தான் எனக்கு ஒருபோதுமே காதலிகள் கிடைத்ததில்லை. ஆனால் அந்தப் பெண்கள் எனது கனவுகளில் வந்துகொண்டே இருந்தனர். நான் கண்ட கனவுகளை எண்ணவே முடியாது. விழித்த நிலையிலும் நான் நிறையக் கனவுகளைக் கண்டவன். 

எனக்குத் தரும் சிறிய அரச உதவித் தொகை, மீண்டும் சிறிதாகிய பின்னர்தான் ஓர் வேலை நிச்சயமாகத் தேவை என எனக்குத் தெரிந்தது. நிச்சயமாக அது எனது விருப்பு இல்லை. அப்போது 8 மணிநேரம்தான் ஓர் நாள் சட்டப்படி வேலை செய்யவேண்டும். எமது அறையில் இருந்த பலர் ஓர் வேலை செய்வதில்லை. ஓர் நாளில் இரண்டு வேலை செய்வர். சிலர் 3 வேலைகளும் செய்வதுண்டு. சுலபமான வழியில் பணக்காரராக வரும் வழி அவர்களுக்குத் தெரிந்திருந்தபோதும், அவர்கள் வயோதிகர்கள் போல நடப்பதையே கண்டுள்ளேன். அவர்கள் வேலை செய்பவர்கள் மட்டும் அல்ல சீட்டுகளும் நடத்துபவர்கள், கடன்களும் அறா வரிக்குக் கொடுப்பவர்கள். எனக்கு அவர்கள் எப்போதுமே ஆச்சரியத்தைத் தந்ததுண்டு.

வேலையை எப்படித் தேடுவது? ஆம், வேலையைத் தேட உதவும் அரச நிறுவனங்களுக்குச் செல்ல எனக்கு விருப்பமே இல்லை. சில வேளைகளில் நான் அங்கு சென்றதுண்டு. கட்டட வேலையையும், கழுவில் வேலையையும் மட்டுமே தருவதற்கு முந்துவார்கள். மேசை, கதிரையுடன் உள்ள வேலை ஒன்றைத் தருவார்களா? இல்லை, அதற்கு என்னைப் போன்றவர்களது நிறமும் காரணம். அட.. அங்கே சாதிகள் காரணம் போல, இங்கே நிறங்கள். 

ஒரு தடவை எனக்கு ஒரு வேலை கிடைத்தது. கதிரைகள் செய்யும் தொழில்சாலையைக் கழுவும் வேலை. சில நாள்கள் செய்து, பின்னர் வேலைக்குப் போகாது விடுவது எனும் தீர்மானத்துடன் அங்கு சென்றேன். முதலாளி என்னைக் கண்டு பெரிதாகச் சிரித்தபோது எனது இதயத்துக்குள் சந்தோச மலர்கள் பூத்தன. 

“வந்ததற்கு நன்றி. நாங்கள் ஒருவரைத் தெரிவு செய்து உள்ளோம். மன்னிக்கவும்.” 

அவரது செய்தி என்னை மிரட்டவில்லை. ஆனால் நான் சிறிது மிரண்டவன் போல காட்டிவிட்டு மனதுள் மகிழ்ந்து திரும்பினேன். 

அன்று உடனடியாக நான் வாழும் அறைக்குப் போகவில்லை. சில Heineken டின்களை வாங்கியபடி ஒரு தோட்டத்துக்குச் சென்றேன். அங்கே ஒரு நடுத்தர வயதுப் பெண் தனது குழந்தைக்கு முத்தம் வழங்கிக்கொண்டிருந்தாள். நான் அவளைப் பார்த்தபோதும் அவள் என்னைப் பார்க்கவில்லை. 

ஏன் நான் அன்று தோட்டத்துக்கு வந்தேன் என்பது எனக்குத் தெரியாமல் இருந்தது. சில வேளைகளில் எமது அறையில் வாழ்பவர்களோடு தோட்டங்களுக்குச் சென்றிருந்தாலும், செல்வதில் எனக்கு அதிகம் பிரியமே இருந்ததில்லை. இவைகளில் பூக்கள் இருக்கும், இலைகள் இருக்கும் அவைகள் மணக்காது. முழுமையான இயற்கையை இத் தோட்டங்கள் போலி வடிவில் காட்டுவதால் இவைகளில் எனக்கு ஓர் வெறுப்பு . 

இரண்டு Heineken உள்ளே சென்றபின் நான் தூங்கிவிட்டேன். எழுந்தபோது மாலை 5 மணியாக இருந்தது. அறைக்குள் நுழையும்போது 06.45. அங்கே இருந்தவர்கள் என்னை வியப்புடன் பார்த்தனர்.

“நீ களைத்துப்போய் வந்திருக்கிறாய். அது கடினமான வேலையா?”

களைப்பிற்கு Heineken தான் காரணமானாலும் அதை எப்படி அவர்களுக்குச் சொல்ல? நான் குடிப்பது அவர்களுக்குத் தெரியும். தொழில் செய்கின்றேன் என அவர்கள் கருதியதால் நான் குடித்தவன் என்று அவர்கள் உணராததைக் கண்டேன். சரி, Heineken, விஸ்கியா? 

“வேலை கிடைக்கவில்லை. அது வேறு ஒருவருக்குக் கிடைத்துவிட்டது” எனச் சொன்னபோது அவர்கள் விழுந்து விழுந்து சிரித்தார்கள். சிரித்த வேகத்தில் ஒருவரின் பொய்ப்பல் தரையில் விழுந்ததால் எனக்குள்ளும் சிரிப்பு வந்தது. அவர்களுக்கு மேலும் விளக்கங்கள் சொல்லாமல் நான் படுத்துவிட்டேன். 

மறுநாள் நான் வீதியில் இறங்கி நடக்கத் தொடங்கினேன். ஆம், எங்கே எனது கால்கள் போகின்றனவோ அங்கே போவதுதான் எனது இலக்கு. பாரிஸ் வீதிகளில் நடப்பது சுவாரசியமானது. பல வீதிகள் மயானங்கள் போலவே இருக்கும். வேறு வீதிகளில் சனங்கள், அதிகமாக எனச் சொல்லமுடியாது. சில மணித்தியாலங்களில் நான் பீகால் பகுதியில். அந்தப் பகுதி செக்ஸ் கடைகள் பலவற்றைக் கொண்டது. சில வேளைகளில் நான் அங்கு சென்று, அந்தக் கடைகளுள் நிர்வாணப் பெண்களைச் சிறு துவாரத்தால் கண்டு ரசித்ததுண்டு. பின்பு அந்த நாட்டம் என்னை விட்டு எப்படி மறைந்தது என்பதற்கு எனக்குக் காரணம் தெரியாது. 

நான் இப்போது ஓர் பெரிய கடையின் முன். பல மாடிகளைக் கொண்ட கடை அது. கடையின் முன் கண்ணாடியின் பின் சில அரை நிர்வாணப் பெண்களது பொம்மைகள், செக்ஸ் சுகம் தரும் சில பொருள்கள், வீடியோக்கள்… ஆம், அது செக்ஸ் விரும்பிகளை இழுக்கும் கடையாக இருந்தது. அங்கே நான் சில வேளைகளில் சென்று செக்ஸ் படங்களைத் தனி அறையில் இருந்து பார்த்துள்ளேன். ஓர் பெண்ணுடன் இருந்து பார்க்க அப்போது வசதி கிடைக்கவில்லை. அரச இலவச உதவிக் காசுடன் அது சரிவரவில்லை என்பதே உண்மை.

அந்தக் கடையில் ஒரு விளம்பரத்தைக் கண்டேன். 

“நாம் பொருள்களை அடுக்குபவரையும், விற்பனை செய்பவரையும் தேடுகின்றோம்.”

நான் உள்ளே சென்றேன். அந்தப் பெரிய கடைக்குள் ஓர் கடை இருந்தது. பின்புதான் தெரியும் வேறு கடைகளும் இருக்குமென்று. அந்தக் கடையில் ஓர் வயோதிபப் பெண் கவர்ச்சிகரமாக. நான் அவளின் முன் சென்றபோது…. “எது தேவை?” எனக் கேட்டாள். 

“வணக்கம், நான் இங்கே எதையும் வாங்க வரவில்லை. கடையின் முன் ஓர் வேலைக்கான விளம்பரம் உள்ளது. அதனால் வேலை தேடி வந்தேன்.”

என்னை ஓர் ரசிப்புடன் பார்த்தாள்.

“நீ அழகியவன். இளைஞன். உனது கறுப்பு மீசை அழகாக உள்ளது. நான் சில தினங்களில் இந்த வேலையை விட்டு ஓய்வில் செல்லவுள்ளேன். எனது இடத்துக்காகத்தான் முதலாளி ஒருவரைத் தேடுகின்றார்… “ என்றபடி போனில் “ஓர் அழகிய இளைஞன் வேலைதேடி வந்துள்ளார்” எனச் சொன்னபின் அவரது காரியாலயத்துக்குக் கூட்டிச் சென்றாள்.

“வணக்கம், நீங்கள் முன் செய்த வேலைகள் எவை?” என அவர் கேட்டபோது “சரி, எனக்கு இந்த வேலை கிடைக்காது” என நினைத்தாலும் அவரிடம் பொய் சொல்ல எனக்கு அப்போது விருப்பம் இல்லை.

“உங்களுக்கு ஓர் உண்மையைச் சொல்வேன். நான் ஒருபோதுமே ஒரு தொழிலும் செய்ததில்லை. அதனால்தான் தொழில் தேடி இங்கு வந்தேன்.”

சில கணங்கள் எனக்கும் அவருக்குமிடையே ஒரு மௌனம். 

“சரி, நீ பிரெஞ்சு மொழி பேசத் தெரியும் என்பதால் உன்னை இங்கு வேலைக்கு எடுக்கின்றேன். ஓய்வில் போகும் பெண் இங்கு ஒரு வாரம் வரை இருப்பதால், அவள் உனது வேலை எதுவென விளக்குவாள். அவள் விளக்குவதை நீ விளங்கினால் நான் உன்னை எடுப்பேன். இது செக்ஸ் கடை என்று வருகின்ற பெண்களையும், ஆண்களையும் நீ வசீகரிக்கலாம். அந்த வசீகரிப்பு ஒரு வியாபாரத்துக்காகவே. வாடிக்கையாளர்கள் முன் எப்போதுமே சிரிக்கவேண்டும்.” என ஓர் குறிப்பைத் தந்துவிட்டு அவர் மறைந்தார்.

அவளது பெயர் ஜூலியா. எவ்வளவு வயது என்று தெரியாது. முகத்தில் நிறையக் கவர்ச்சி. கறுப்பும் வெள்ளையும் கலந்த சின்னக் கூந்தல். அவள்தான் எனக்கு நான் செய்யப்போகும் வேலையைப் விளக்கினாள்.

“இங்கு நிறைய வீடியோக்களும், படப் புத்தகங்களும், பல செக்ஸ் திருப்தி தரும் பொருள்களும் உள்ளன. ஒவ்வொரு மாடியிலும் ஒவ்வொரு சிறப்பு உள்ளது. அதனை நீ பின்பு அறிந்துகொள்வாய். பல வாடிக்கையாளர்கள் வருவார்கள். சிலர் பயத்துடனும் வருவர். நாம் எப்போதும் இனிய சிரிப்பை அவர்களிடம் காட்டவேண்டும். செக்ஸில் எல்லோருக்கும் விருப்பம்தான். ஆனால் தமது விருப்பங்களை மனதில் ஒழித்தே வைத்திருப்பர்.”

எனப் பல வித கருத்துகளையும், சில ஆலோசனைகளையும் ஜூலியா எனக்குத் தந்தாள். 

“இங்கே நிறையப் பேர் வேலை செய்கின்றனர். தொழில் செய்யும் நாள்களில் அவர்களுடன் பழகி அவர்களை அறிந்துகொள்வாய்.”

அவளது ஆலோசனைகளை நினைத்த வண்ணம் அறைக்குச் சென்று, என்னை ஒரு சோம்பேறி எனப் பார்த்தவர்களிடம் “எனக்கு ஓர் தொழில் கிடைத்துவிட்டது” எனச் சொன்னேன்.

“ஒரு நாளைக்கா அல்லது இரண்டு நாள்களுக்காகவா?” என அவர்கள் என்னிடம் விசித்திரமாகக் கேட்டார்கள். 

“ஒவ்வொரு நாளும்.”

“என்ன தொழில்?”

“செக்ஸ் கடையில் பொருள்களை ஏற்பதும், பரிசோதிப்பதும், அடுக்குவதும், விற்பதும்…”

மீண்டும் விழுந்து விழுந்து சிரித்தார்கள்.

“சரி, நீ சொல்வது உண்மையா?”

“நாளை கடையில் வந்து என்னைப் பார்க்கவும்.” என்று முகவரியைச் சொன்னபோது அவர்கள் அதிர்ந்ததை முகங்களில் கண்டேன். 

ஜூலியா ஒரு வெள்ளிக்கிழமையில் போவது உறுதி. அந்தத் தினத்தில் பல வாடிக்கையாளர்கள் அவளை வந்து சந்தித்தனர். அன்று அவள் தனது உடைகளது பாரத்தைக் குறைத்ததால் மிகவும் கவர்ச்சியாகவே இருந்தாள். அவளது வயது எனது தாயின் வயதாக இருக்கும். ஆனாலும் அன்றுதான் அவள் மீது எனக்கு ஓர் பிடிப்பு வந்தது. அவள் யாருடன் வாழ்கின்றாள் என எனக்குள் ஒரு கேள்வி வந்தபோது ஓர் இளம்பெண் அங்கு நுழைந்து அவளது உதட்டை சில கணங்கள் முத்தமிட்டாள். 

“ஒரு கிழமையில் உனக்கு உனது தொழிலைச் சொல்லித் தந்தேன். எனது வாழ்வையும் சொல்லவேண்டும் போல இருந்தது. முடியவில்லை. எனக்கு முத்தம் கொடுத்த அவள் சின்னவள். நான் இப்போது அவளுடன்தான்.” எனச் சொல்லியபின் தனது போன் இலக்கத்தைத் தந்தாள்.

சிறியவளின் முகத்தை நான் முழுமையாகப் பார்க்கவில்லை. நிச்சயமாக அவள், அவளது மகளைப் போல இருந்தாள். இது எனக்கு ஆச்சரியமும் தரவில்லை. 

அந்தக் கடை காலையில் திறபடும் கடை அல்ல. காலை 10 மணிவரை தூங்கலாம். நான் முதல் தினத்தில் தூங்கியபோது, அங்கு இருந்த சிலர் “உண்மையிலேயே உனக்கு வேலை கிடைத்து விட்டதா?” எனக் கத்தியபடி என்னை எழுப்பினர்.

“ஏன், எனக்கு வேலை கிடைக்கவில்லையா? கிடைத்ததை நீங்கள் நம்பவில்லையா?” என்று எரிச்சலோடு விழிகளைத் திறந்தேன். 

“எனது வேலை 12 மணிக்குத்தான் தொடங்கும். நான் வேலை செய்வது உணவகத்தில் அல்ல. ஓர் செக்ஸ் கடையில்…” எனச் சொல்லியதும் அவர்களது முகத்தில் ஒரு சிறிய அமைதி தெரிந்தது. 

அந்தக் கடையில் யாவும் அழகாக அடுக்கப்பட்டிருந்தன. நிறைய வீடியோக்கள் பிரெஞ்சு மொழியிலும், சில ஆங்கில மொழியிலும், வேறு மொழிகளிலும் உள்ளதைக் கண்டேன். அனைத்துப் பொருள்களும் கணினியில் பதிவு செய்யப்பட்டதால் அவைகளைத் தேடி எடுப்பது இலகுவாக இருந்தது. காலையில் வாடிக்கையாளர்கள் இல்லை. சில பெண்களும் சில ஆண்களும் எனக்கு “வணக்கம்” தந்துவிட்டு மேலே ஏறினர். அவர்களது அசைவுகளை வைத்து, அவர்கள் வாடிக்கையாளர்கள் அல்ல, அங்கு வேலை செய்பவர்கள் என்பதைப் புரிந்து கொண்டேன். 

சில நிமிடங்களில் முதலாளி என்முன் வந்து “இன்று அதிகம் பொருள்கள் வராது. நீ மாடிகளில் ஏறிப் பார்த்துவிட்டு வா, நான் இங்கே நிற்பேன்.” எனச் சொன்னார். 

அங்கே நான்கு மாடிகள் இருந்தன. முதலாவது மாடியும் ஒரு பெரிய கடைபோல இருந்தது. அங்கு பல ஆண் குறிகளும், பெண் குறிகளும் அனைத்து சைஸ்களில். பல நிறப் பெண்களும், ஆண்களும் பிளாஸ்ட்டிக் வடிவில் அங்கு இருந்தனர். சில நடிகைகளையும் நான் பொம்மைகளாகக் கண்டேன். அங்கேயுள்ள பிளாஸ்ட்டிக் நிர்வாணப் பெண்களை ஒரு சிறிய பிரெஞ்சு இளைஞன் துடைத்துக் கொண்டிருந்தான். பின் ஓர் பிளாஸ்ட்டிக்கை எடுத்து ஊத வெளிக்கிட்டபோது….

“வணக்கம், நான் சோமு. இங்கேயுள்ள கீழ் கடையில் வேலை செய்ய வந்துள்ளேன்.”

“வணக்கம், நான் அலன். இரண்டு வருடங்கள் தொழிலில்.”

நான் முன்பு இணையத்தில் பிளாஸ்ட்டிக் பெண்களைப் பார்த்திருந்தபோதும், இப்போதுதான் நேரடியாகப் பார்க்கின்றேன். அந்தப் பெண்களின் விழிகளில் ஒளி தெரிந்தது, உதடுகள் கவர்ச்சியாக, முலைகள் பெரியதும் சிறியதுமாக, கூந்தல்கள் நீளமாகவும், கட்டையாகவும், சில பெண்கள் மொட்டையாகவும். சில ஆண்களும் பிளாஸ்டிக்கில் இருந்தனர். வில்லன்கள்போல அவர்களைக் கண்டேன். ஆனால் விலைகள் பெண்களின் முன்னும், ஆண்களின் முன்னும் குறிப்பிடப்படவில்லை.

“ஏன் விலைகள் குறிப்பிடப்படவில்லை?” என அலனிடம் கேட்டேன். 

“அது அப்படித்தான். வாடிக்கையாளன் ஒரு பெண்ணையோ அல்லது ஆணையோ தெரிவு செய்தால் நான் அவனுக்கு விலையைச் சொல்வேன். இவைகள் குறைவான விலையில் உள்ள பொருள்கள் அல்ல. அதிக விலை. இவைகள் உண்மையான மனிதர்களைப் போல பேசும், கத்தும், இடைகளைத் தூக்கும், கண்களைச் சிமிட்டும், நிறைய இன்பம் தரும்…”

“சரி, நீ ஒரு பிளாஸ்ட்டிக் பெண்ணுடன் அல்லது ஆணுடன் கிடந்துள்ளாயா?”

“நான் வாழ்வதே ஒரு பிளாஸ்ட்டிக் பெண்ணுடன்தான்.” எனச் சொன்னபோது ஒரு வயோதிபர் அவன் முன் வந்தார்.

“நேற்றுத்தான் வந்தது… “ என அவரை வரவேற்றான். எது நேற்று வந்தது என எனக்குத் தெரியாது. அதனை நான் அலனிடம் அப்போது கேட்கவில்லை. 

இரண்டாவது மாடியில் ஏறும்போது “அங்குதான் அடக்குமுறைச் (Domination) செக்ஸ் நடக்கின்றது.” என்று அலன் சொன்னான். அந்த மாடியுள் நுழைந்தபோது என் முன் ஒரு நடுத்தர வயதுப் பெண் வந்தாள். 48 வயது இருக்கும் என நினைத்தேன். நிறம் மஞ்சளாக இருந்தது. கலைந்துபோன வெண் கூந்தல். 

“வணக்கம்…” அவளது சிரிப்பின் பின் வந்த நாக்கு எனது உடலை நனைக்கும்போல பட்டது. 

“உள்ளே வாருங்கள்…” என அறையைக் காட்டினாள்.

“ஏன் உள்ளே?”

“நீ என் அடிமை, உள்ளே வா?”

“மன்னிக்கவும், நான் உங்களது அடிமை அல்ல. நான் இங்கேயுள்ள கீழ் கடையில் வேலைக்கு வந்தவன்.”

“மன்னிக்கவும், கீழே இருந்து ஓர் அடிமை மேலே வருவதாக அறிவிப்பு வந்தது, அது நீங்கள் என நினைத்துவிட்டேன். நான் திமேயா, ஹங்கேரி ஒரிஜின்.”

“நான் சோமு. இலங்கை.”

“அங்கு நான் கடந்த வருடம் எனது பழைய காதலனுடன் சென்றேன்.” எனும் போது ஒருவர் ஏறினார். 

அவர் மிகவும் வாட்ட சாட்டமாக இருந்தார். பொக்ஸர் போலவும் கோலம். திமேயா அவருக்கு முன் சென்றதும் அவருக்கு அவள்தான் என விளங்கிவிட்டது. எமது கடையின் அல்பத்தில் அவளைப் பார்த்திருக்கலாம். 

வாழ்வின் கோலங்கள், வாழ்வின் விதங்கள் பல என நான் நினைத்தபோது போன் நைசாக அலறியது. முதலாளியின் குரல். நான் கீழே இறங்கினேன். 

சில பெட்டிகளுடன் ஒருவர் என்னைக் காத்துக்கொண்டு நின்றார். ஆம், கடைக்குத் தேவையான பெட்டிகள். அவைகளை எண்ணத் தொடங்கினேன். 7 பெட்டிகள். இரண்டு பெட்டிகள் நீளமாக இருந்தன. ரிஸீட்டில் கையழுத்து வைத்தபின்னர் எனது முதலாவது தின வேலையைத் தொடங்கினேன். 

மேசையில் இருந்த வாங்கும் பொருள்கள் பதிவு செய்த தாளில் எனது விழிகள் சென்றன. இரண்டு நீளமான பெட்டிகளில் ஆண்களும், பெண்களும் இருக்கவேண்டும். முதலாவது பெட்டியைத் திறந்தேன். அதனுள் 5 பெண்களும் 2 ஆண்களும் இருந்தனர். சரி, பிளாஸ்டிக்கில்தான். பதிவின்படி ஒரு பிழையும் இல்லை. இரண்டாவது பெட்டியைத் திறந்தேன். அங்கே மூன்று ஆண்களும் இரண்டு ஆமைகளும் இருந்தன. பதிவின் படி 5 ஆண்களே இருக்கவேண்டும். 

ஓடர் செய்தது முதலாளிதான். 

“நீங்கள் இரண்டு ஆமைகளுக்கு ஓடர் கொடுத்தீர்களா?” எனப் போனில் கேட்டபோது “இல்லை, வருகின்றேன்” என்றார்.

ஆண், பெண்களது பொம்மைகளைப்போல ஆமைகளது பொம்மைகளும் இருப்பதை இப்போதுதான் முதலாவதாக அறிந்தேன். குதிரைகள், நாய்கள், ஆடுகள், மாடுகள் பொம்மைகள் இருப்பது எனக்குத் தெரியும். மனிதர்களுக்கு செக்ஸ் என்றால் எல்லாம்தான் தேவைதான். ஆணும், பெண்ணும், பொம்மைகளும், மரங்களும், மலர்களும், மிருகங்களும்….. எவைகள் தேவையோ அவைகளை எண்ணவே முடியாது. 

வந்ததும் “ ஒரு தவறு நடந்துள்ளது” எனச் சொல்லிவிட்டு முதலாளி சில கணங்கள் யோசிப்பதைக் கண்டேன். பின் என் முன் வந்து “சரி, இவைகளைத் திருப்பி அனுப்பத் தேவையில்லை. ஆமைகளை விரும்புபவர்களும் இருக்கலாம். அலனிடம் கொடு” என்றார். 

இரண்டு ஆமைகளும் பாரமானவை அல்ல. அவைகளது பிளாஸ்ட்டிக் விழிகள் எனக்கு அச்சத்தைத் தந்தன. நான் யாழ்ப்பாணத்திலே கண்ட பெரிய ஆமைகளது விழிகளும், சிறிய ஆமைகளது விழிகளும் வித்தியாசமானவை, கருணையான விழிகளைக் கொண்டவை. அவைகளை அலனிடம் கொடுத்தபோது “ஆமைகளை வாங்குவதாக முதலாளி எனக்குச் சொல்லவே இல்லை” என்று சொல்லியபடி “அவருக்கு எல்லாம் தெரியும்…” என்றபடி பெற்றுக்கொண்டான்.

சில தினங்களின் பின் இந்தத் தொழில் எனக்குப் பிடித்துவிட்டது. நிறையப் பேர் வந்தனர். அங்கு வேலை செய்கின்ற ஆண்களும் பெண்களும் எனக்கு நெருக்கமானவர்களாக வருவதை அறிந்தேன். எனது ஆலோசனைகளை முதலாளி விரும்பினார். சிலவேளைகளில் அவரது வீட்டிலும் சென்று சாப்பிட்டு உள்ளேன். அவரது வயதுபோன தாய் என்னுடன் உரையாடுவதை விரும்பினாள்.

“இப்போதுதான் உனது தேசம் ஸ்ரீலங்கா, அப்போது சிலோன், சிலோன் … “ என்று பலதடவைகள் அவள் சொன்ன வேளைகளில் எனது தலையை ஆட்டினேன். ஆனால் முதலாளியின் மனைவியோடு எப்போதும் எரிச்சலையே காட்டினாள். ஆம், நான் ஓர் குடும்ப நண்பனாகினேன். சம்பளமும் கூடியது. 

என்னோடு வாழ்ந்தவர்கள் என்னிடம் சொல்லும் கிண்டல்களும் குறைந்ததுவிட்டன. ஆனால், எப்போது என்னைக் கண்டாலும் “இன்று எவளோடு கிடந்தாய்?” எனக் கேட்கத் தவறுவதில்லை. செக்ஸ் கடையில் வேலை செய்தால் நான் எப்போதும் செக்ஸ் செய்வது என்பது அவர்களது நினைப்பாம். அந்தக் கடையில் நான் பொருள்களை மட்டும் விற்கவில்லை, கணக்கு வேலைகளையும் பார்க்கின்றேன் என்பது அவர்களுக்குத் தெரியாது. ஆம், அங்கே வேலை செய்யும் ஆண்களும், பெண்களும் செக்ஸ் வெறியர்கள் என்பது அவர்களது நினைப்பு… இல்லை, இல்லை … அங்கே அவர்கள் செய்வது வேலைதான். 

அங்கு ஓர் இளம் பெண் வேலை சென்கின்றாள். அவளது பெயர் லீலா. அவளைத் தமிழ்ப்பெண் என நினைக்கவேண்டாம். ஓர் ஆபிரிக்கப் பெண். சோமாலியா நாடு. அவள் தனது பெயரை என்னிடம் சொல்லியபோது நான் ஆச்சரியப்பட்டேன்.

“உனது அப்பா அல்லது அம்மா தமிழா?” எனக் கேட்டபோது “தமிழ் என்றால் என்ன?” என்ன என என்னிடம் கேட்டாள். ஆம், நான் இந்த மொழியின் மீது சிலவற்றைச் சொல்லியபின் “லீலா எனும் பெயர் எனக்கு உள்ளது. இது ஆபிரிக்கப் பெயரே.” என்றாள். நான் அவளிடம் அப்போது மொழிகள் மீது பேச விரும்பாமல் அவளது விழிகளை ரகசியமாக ரசித்தேன். 

தனியாக இன்னும் சில காலங்கள் வாழவேண்டும் என நினைத்த எனக்கு லீலாவின் மீது காதல் வந்தது. எப்படி அதனை அவளுக்குச் சொல்வது என்பது தெரியவில்லை. எனது கூச்ச குணத்தை நான் எப்போதும் திட்டிக்கொள்வதுண்டு. இந்தக் குணம் எமது பல விருப்புகளை அழிக்கும் எனவும் எண்ணினேன். அவ்வப்போது நான் மூன்றாம் மாடியில் ஏறுவேன். அங்குதான் அவள் வேலை செய்பவள். படங்கள் பார்க்கத் தெரிவு செய்யும் பெண்களில் அவளும் ஒருத்தி. எவ்வளவு ஆண்களும் எவ்வளவு பெண்களும் அவளது தொடைகளைத் தடவினார்களோ என்பது எனக்குத் தெரியாது. 

ஆனால் நிச்சயமாக அவளது தொடைகளை நான் காணவில்லை. அவள் வேலைக்கு வரும்போது அவைகள் மூடப்பட்டே இருக்கும். திறபடுவது அவள் தொழில் செய்யும்போதுதான் என்பது எனது நம்பிக்கை. அவளது முகம் வெள்ளையும் கறுப்பும் கலந்ததுபோல. தொடைகள் வெள்ளையா அல்லது கறுப்பா என்பது எனக்குத் தெரியாது. தெரிதல் இல்லாது விட்டாலும் அவைகள் கவர்ச்சியே என நான் நினைத்தேன். அவளது தொடைகளை ஏங்கி ஏங்கி எனக்குள் காம விருப்பு அவள் மேல் வந்தது. 

சில வேளைகளில் அவள் மீது நான் பொறாமைப்பட்டேன். நான் அவளைக் காதல் செய்கின்றேன் என்பது அவளுக்குத் தெரியாதபோதிலும் ஏன் எனக்குள் பொறாமை எழவேண்டும்? காதலுக்கும், காமத்துக்கும் கண் இல்லை என்று எழுதியவனை வைத்து ஸும் நடத்தவேண்டும் என்று நினைத்துக் கொண்டேன்.

இப்போது எனது அறையில் உள்ளவர்கள் எனக்கு இனிமையானவர்களாக மாறினார்கள். தொடக்கத்தில் அவர்கள் வீடியோ கொண்டுவருமாறு சொன்னபோது “கடைக்கு வாருங்கள். அங்கே விலைக்கும் வாங்கலாம், சந்தா கட்டியும் வாங்கலாம்” என்றேன். அது அவர்களுக்குப் பிடிக்கவில்லை. “நீ வேலை செய்யும் கடையில் இலவசமாக எடுத்து வரலாம்தானே!” என்று கத்தினர். “நான் செய்வது வேலை. இலவசமாக எடுத்தால் எனது தொழில் போய்விடும்.” என்று பொய்யைச் சொன்னேன். நான் எடுக்கலாம். அவைகளை நான் எடுக்க விரும்புவதில்லை. கடையில் உள்ள வீடியோவில் சில வேளைகளில் பார்ப்பேன்.

“சரி, நாங்கள் சந்தா கட்டுவோம். நாங்கள் சொல்லும் படங்களை நீதான் எடுத்துவரவேண்டும்.” என்று கட்டளை போடும் விதத்தில் அவர்கள் சொல்லினர். 

“நீங்கள் வரலாம்தானே…” 

“பின்பு வருவோம்.” எனச் சொல்லினர். 

“தமிழ்ப் பெண்களது படங்களும் உள்ளதோ?” 

இன்னொருவர் “தமிழ் ஆண்கள் தமிழ் ஆண்களுக்கு விளையாடும் படமும் உள்ளதோ?” எனப் பெண் குரலில் கேட்டார். அவர் ஆணாக இருந்தாலும் அவரிடம் இருந்து வருவது பெண் குரலே. 

“தமிழன் சிங்களப் பெண்ணுக்கு விளையாடும் படமும் இருக்கோ?” என எமது வயோதிப அறையாளி கேட்டார். 

ஆயிரம் கேள்விகள். 

“அங்கே எல்லாம் உள்ளது.” என்றபோது சந்தாக்காசை உடனடியாகவே தந்தனர்.

எல்லாம், எல்லாம்… இந்த எல்லாவற்றையும் ரகசியமாக ரசிப்பது எமது உயிரின் ஆசையாக இல்லையா? 

அங்கே லீலா எனும் பெண் தொழில் செய்வதாகச் சொல்லியிருப்பின், அவள் தமிழ்பெண்தான் என நினைத்து மறுநாளே கியூவில் வந்திருப்பார்கள். 

சரி, செக்ஸில்தான் ஊர்வது எமது பூகோளம் என நினைத்து லீலாவை என் முன் நிறுத்தினேன். அவள் அங்கு காலை 11 மணியளவில் வருவாள். ஆனால் நான் போனபின்தான் அவள் வேலை முடிந்து போவதால் அவளது போகும் நேரம் எனக்குத் தெரியாது. கவர்ச்சியாக இருப்பதால், தொடைகளை மூடுவதுபோல அவள் தனது உடலின் ஏனைய பகுதிகளையும் மூடியே வருவாள். வாடிக்கையாளர்களுக்கு அவைகளைத் திறப்பாள் என்பது எனக்குத் தெரியும். ஆம், அது அவளின் தொழில்… சரி… இந்தப் பூகோளத்தில் எல்லாமே தொழில் எனப் பலவேளைகளில் சொல்லிக்கொள்வேன்.

எனது முதலாளிக்கு என்னிடம் நிறைய விருப்பம் ஏற்பட்டதிற்கு என் தொழில் நுட்பத்தால் பல வாடிக்கையாளர் கூடினர் என்பதுதான் காரணம். அடிக்கடி வரும் வாடிக்கையாளர்கள் பலர் எனக்கு முத்தமும் இட்டனர். அந்த முத்தங்களில் எனக்கு அதிகம் பிடிப்பில்லாமல் இருந்தாலும், தொழில் காரணத்திற்காகப் புன்னகையுடன் வாங்கிக்கொண்டேன். எனது அறையில் இருந்தவரும் ஒரு வாடிக்கையாளர். “சரி, நான் இங்கு வருகிறது உனக்குத் தெரியும். அதை ஒருவரிடம் சொல்லிவிடாதே.” என்று என்னிடம் சத்தியமும் வாங்கிக் கொண்டார். 

அவர் அங்கு திரைப்படம்தான் பார்ப்பதுண்டு. மலிவு. அவரது சம்பளத்துக்கு அதுதான் அப்போது போதுமானது. பலர் எனக்கு முத்தமிடுவதைப் பார்த்து அவர் நடுங்கியதைக் கண்டிருக்கின்றேன். 

பல முத்தங்களை நான் விரும்பாது விட்டாலும் சில முத்தங்களை நான் எடுக்கவும் கொடுக்கவும் காத்துக்கொண்டிருந்தேன். ஆம், லீலாவிடம் இருந்துதான். ஆனால், அவளது மூடப்பட்ட தொடைகள், எனது விழிகளால் காணாமல் விடப்பட்ட தொடைகள் எனது நினைப்புகளில் எப்போதும் இருந்தன. கனவுகளில் அந்தத் தொடைகளே, மொத்தமாகி எனது கட்டிலாக. அவள்… ஓர் மங்கல் நிறம். ஆனால் அவளது தொடைகளும் மங்கலாக இருக்குமா? எனும் கேள்வி எனக்குள் பல வேளைகளில் ஏன் வந்தது என்பது எனக்குப் புரியவில்லை. 

நான் பிரான்ஸ் வந்தபோது ஒரு வெள்ளைப் பெண்ணுடன் உடல் உறவு செய்ய விரும்பினேன். பாஷை தெரியாமல் பல வெள்ளைகளைக் கண்டு சிரித்தாலும் அந்தப் பெண்கள் முத்தங்களை அல்ல சிரிப்புகளையே தந்துவிட்டுச் சென்றனர். அப்போதுதான் என்னுடன் இருந்தவர் என்னை பாரிஸில் ஒரு பகுதிக்கு அழைத்துச் சென்றார்.

“எனக்கு அங்கு மனைவி இருக்கின்றாள். இங்கு இல்லை. சில வேளைகளில் இங்குவந்தால் ஆத்ம திருப்தி கிடைக்கும்.” என அவர் அங்குள்ள பெண்களைப் பார்க்கத் தொடங்கினார். அவர் ஒரு வெள்ளைப் பெண்ணுடன் ஏறியபோது “நீ உனக்குப் பிடித்ததைப் பார். இங்கு மலிவு.” எனச் சொல்லியபின் அவரது தலையைக் காணவில்லை. 

அவர் போனபின் நான் ஒரு வெள்ளைப் பெண்ணைத் தேடினேன். அந்த நேரம் இரவின் அருகில் இருந்ததால் பல பெண்கள் போய் வெள்ளைப் பெண்ணே, கதவில் தனது முதுகைத் தேய்த்துக்கொண்டிருந்தாள். அவளை எனது ஆச்சி போலவும் சொல்லலாம். ஆனால் கவர்ச்சிப் பூக்களை அவளது கூந்தலில் கண்டேன். பாஷை அப்போது தெரியாது. அவள் முன் நின்றபோது “50 பிராங்க்” என்றாள். அது விளங்கியது. அன்று அவளுடன் நான் செக்ஸ் செய்யவில்லை. எனது ஆச்சியை நிர்வாணமாகக் கண்டேன் போல இருந்தது.

நான் இறங்கினேன்.

“வாங்கு.” அவள் கத்தினாள்.

அவளது கரங்களில் 50 பிராங். 

அது அவளுக்கே. நான் விரைவில் ஓடி மறைந்தேன்.

இப்போது லீலா. அவளது தொடைகள். காலையில் விழித்தாலும் அவள் தொடைகள் என் முன். ஆம், நான் காணத் துடிக்கும் தொடைகள்.

ஞாயிறு எனக்கு லீவு நாள். ஆம் எனது கடைக்கு ஒருபோதும் லீவு இல்லை. அன்று லீலாவும் தொழில் செய்பவள் என்பது எனக்குத் தெரியும். 

அன்று…நான் கடைக்குச் சென்றேன். ஆம், லீலாவைத் தனியாக ஓர் அறைக்குள் சந்தித்து அவளது தொடைகளைத் தியானிப்பதற்காகவே, ருசிப்பதற்காகவே. ஆம், அன்று நான் அவளது வாடிக்கையாளனாகும் திட்டம். 

“சோமு, ஏன் இங்கே? இன்று உனது லீவு நாள்தானே?” என்று கீழ் மாடியில் வாடிக்கையாளர்களைப் பெண்களுக்காக அனுப்புபவன் கேட்டான்.

“எனக்கு லீலா தேவை. எவ்வளவு?” 

“அவளா? உனக்கு இலவசம். அவளுக்காக இரண்டு பெண்கள் வருவார்கள். அவர்கள் அவளுடன் இருந்தபின் நீ செல்.”

நான் அவளைக் காணச் செல்வது, காதல் விருப்பினால்தான். அவள் எப்போதும் அறைக்குள் இருப்பதால் எப்படி எனது காதலைச் சொல்வதாம்? அதனால்தான் நான் வாடிக்கையாளன் ஆகும் நிலைமை வந்தது.

சில கணங்களின் பின் இரண்டு பெண்கள் வாசலில். ஒருத்தி வெள்ளை, இன்னொருத்தி கறுப்பி. நடுத்தர வயது. 

“வங்கி மூலம் பணம் செலுத்திவிட்டார்கள். பல தடவைகள் வந்ததால் அவள்களுக்கு இடம் தெரியும்.” எனப் பொறுப்பாளன் சொன்னான். 

அவள்கள் ஏறினார்கள். எனக்கு அவள்களில் எரிச்சல் வந்தது. லீலாவின் தொடைகளை அவள்கள் பார்ப்பதால், தழுவுவதால் என்பதால்தான். சரி, லீலா எனது காதலியாக எனது மனதில் இருந்தாலும் அவள் எனது காதலியா? மனைவியா? பதுமமான எனது மனம் லீலாவின் நினைப்பால் பொறாமை மனமாகியது. 

நான் கீழே. 30 நிமிடங்கள். இரண்டு பெண்களும் இறங்கிவரவில்லை. லீலாவை அவள்களது வீட்டுக்குக் கொண்டு செல்வாள்களோ? இப்போது எனக்கு ஒரு வீரம் வந்தது. நான் ஏறினேன். அவளது அறை எனக்குத் தெரியும்.

அந்த அறையின் கதவு எனக்குப் பிடித்தமானது. அதில் அனைத்து நிறங்களும் உள்ளன. அது ஓர் இனவாதக் கதவு அல்ல. அங்கு யாவரும் போகலாம். அது எங்களது ஆலயங்கள் போல அல்ல. எமது சில ஆலயங்களுக்குப் போக அந்த நாட்டில் பிறக்கவேண்டும்… சரி… உயர் சாதிகளுக்கு ஓர் ஆலயம், தாழ்ந்தோருக்கு ஓர் ஆலயம்.

நான் அறையின் முன். 

ஆச்சரியம். காம சுகம் அவள்களுக்குப் பெரிதாகக் கடித்ததால் கதவு பெரிதாக மூடப்படவில்லை. அது பலருக்கும் தெரியாது. எனக்குத் தெரிந்தது. 

எனது விழிகள் கதவை அமைதியாகத் தடவின.

பின் அவைகள் அறையின் உள்.

லீலாவின் முகம் மங்கலாக. ஆனால் அவளது தொடைகள் வெள்ளையாக இரு பெண்களின் கைகளிலும் முத்தங்களிலும். 

“நேரம் முடிந்துவிட்டது. தாருங்கள் தொடைகளை.” என்றாள் லீலா.

அவள்கள் அவளது தொடைகளைக் கொடுத்தனர். ஆம்…. அவைகளை தனது கால்களில் பொருத்தி அவள் எழுந்தாள். 

00h32 22/08/2021 

க. கலாமோகன்

இலங்கையில் இருந்து புலம்பெயர்ந்து பிரான்சில் வசித்து வரும் தமிழ் எழுத்தாளர். கவிதை, சிறுகதை, நாடகம், மொழிபெயர்ப்புகளில் தொடர்ந்து இயங்குகி வருகிறார். சிதறுண்ட தன்னிலைக் கூறில், எங்கேயும் தன்னைச் சரியாக பொருத்திக்கொள்ளாத இயல்பில் தத்தளிக்கும் மனங்களை கதைகளாக்கி வருகிறார்

2 Comments

  1. ” அங்கு சாதி, இங்கு நிறம்” ‘அவள் உடையின் பாரத்தை குறைத்திருந்தாள்’ ‘ போன்ற இருண்ட வானத்தில் நட்சத்திரங்கள் தெரிகின்றன.

    புதுவகை கதையாடல், புது இடம், ஆனால் ஆதி மனதின் ஆழ விருப்பின் நியம்.

உரையாடலுக்கு

Your email address will not be published.