/

A Search for Moorings: N Kalyan Raman

தமிழில்: பிரியதர்ஷினி சிவராஜா

பிணைப்புகளுக்கான தேடல்

அறம் நோக்கிய மனிதப் போராட்டம் பற்றிய சிறுகதைகள்

ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்ட ஜெயமோகனின் அறம் தொகுப்பிற்கு (Stories of the True) எழுதப்பட்ட திறனாய்வின் தமிழ் மொழிபெயர்ப்பு இது

இந்நூற்றாண்டில் வெளியான  இலக்கியப் புனைவுகளில் அறக்குழப்பம் பற்றிய இக்கட்டான சூழ்நிலைகளிலும்,  பரந்துபட்ட அவற்றின் கிளைகளிலும்   கவனம் செலுத்துகின்ற கதைகள் ஒப்பீட்டளவில் அரிதாகவே உள்ளன.  இலக்கியத்தின் இரண்டு நிரந்தரமான கருப்பொருட்களான காதலிலும் இறப்பிலும் அழிவுகளையும், நிகழ்காலத்தில் மீட்க முடியாத நரக நிலைகளையும் இணைத்திருப்பதனைக் காணக் கூடியதாக உள்ளது. அறநெறி வழுவுதல்  என்பது  தடுக்கமுடியாத  யதார்த்தமாக தோன்றக்கூடும். ஆனாலும், தனிநபர் மற்றும் கூட்டு செயற்பாட்டுக்கு வழிகாட்டியாக அமைகின்ற அறநெறி குறியீடு ஒன்றை  உருவாக்கும் தேவை முன்பு இன்றைய காலம் போல மிகவும்  அவசியமான ஒன்றாக இருந்ததில்லை.

கடந்த 150 ஆண்டுகளில்  நிகழ்ந்த மிக விரைவான மாற்றங்களினால் உலகில் அறப்பிணைப்பு பற்றிய மனிதர்களின் தேடலானது குறிப்பாக ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் இலக்கிய புனைகதைகள் அடங்கிய வளமான இலக்கியத்தொகுப்புகளை  விதைத்திருந்தது. கிறிஸ்தவ பாரம்பரியம் மிக்க ரஷ்ய படைப்பாளிகள் இதன் முன்னோடிகளாக இருந்தனர். பியோதர் தஸ்தாயெவ்ஸ்கியின் குற்றமும் தண்டனையும் மற்றும் கரமசோவ் சகோதர்கள் என்பன மனிதனாக இருப்பதன் அறம் பற்றிப் பேசும்  நிரந்தர ஆதாரங்களாக உள்ளன. 1940கள் மற்றும் 50களில் ஜீன் பால் சார்த்தர் மற்றும் ஆல்பர்ட் காம்யு ஆகியோர் பெரும் அரசியலின் நிச்சயமற்ற தன்மையிலும், பாரிய அளவிலான வன்முறை சகாப்தத்திலும் தனிநபரை பாதிக்கின்ற அறநெறி சார்ந்த அசௌகரியங்களை ஆய்வு செய்துள்ளனர்.  1950கள் தொடக்கம் சவுல் பெல்லோ தனது நான்கு தசாப்தங்களுக்கும் மேலான வாழ்க்கையின் தார்மீக மற்றும் அறம் சார்ந்த இடர் மிகுந்த வாழ்க்கையின் ஊடாக தன்னை அறிந்து கொண்டார். அவர் சலுகைகளைப் பெற்ற ஒரு யூத அறிவுஜீவியாக இருந்தாலும், கூலிப்படைக்கும் மதத்திற்கும் தன்னை முற்றிலும் அர்ப்பணித்துக்கொண்ட ஒரு அமெரிக்க சமூகத்தில்  வாழ்ந்தார்.

இந்தியாவும் கூட தனிநபர் மற்றும் கூட்டு அறவுணர்வை கையாளும் நவீன புனைகதைகளை உருவாக்கியுள்ளது. இருப்பினும் இவை தனிமனித ஒழுக்கத்தின் உவமைகளாகவோ அல்லது நமது காவியங்களில் இருக்கின்ற கதைகளின் சமகால பாதிப்புகளாகவோ அல்லது சராசரி தனிநபர் ஒருவர் எப்பொழுதும் சமூக ஒழுங்குமுறைகளால் தோற்கடிக்கப்படும் யதார்த்த கதைகளாவோ இருக்கின்றன. இத்தகைய கதைகளின் கலைப் பெறுமதியை மறுக்க முடியாவிட்டாலும், அவை அறம் சார்ந்து நிற்றல் என்ற விரிவான சாத்தியக்கூறினை சிறு பகுதியையே நமக்குச் சொல்கின்றன. இந்த சூழ்நிலை ஒருவேளை, சமகால உலகில் லட்சியவாதத்தின் பேரளவிலான வீழ்ச்சி நிலையைக் குறிப்பதாகவும் இருக்கலாம்‌.

இந்த சரிவுக்கான ஒரு எதிர்வினையாகவும், தன்னுடைய  ‘இலட்சியவாதம் பற்றிய பார்வை வரலாற்றின் வலிமை மிக்க நீரோட்டத்திற்கு எதிராக எவ்வாறு அளவிடப்படுகின்றது’ என்பதனை ஆராயவும், 2011ஆம் ஆண்டின் தொடக்கத்தில் புகழ்பெற்ற தமிழ் எழுத்தாளர் ஜெயமோகன்  அறம் என்ற தொகுப்பினை வெளியிட்டார். இப்போது இது (ஆங்கிலத்தில் Stories of the True என்ற பெயரில் மொழிப்பெயர்ப்பாக வந்துள்ளது). இக்கதைகள் உண்மை மனிதர்கள் மற்றும் அவர்களின் போரட்டத்தினை அடிப்படையாகக் கொண்டு புனையப்பட்டவை ‌. மேலும் வாழ்ந்த மனிதர்களைக் கொண்டு லட்சியவாதத்தின் கதைகள் பரிசோதிக்கப்படுகின்றன, நூலாசிரியர் தனது தமிழ் பதிப்பின் முன்னுரையில் கூறுவது போல். “இலட்சியவாதம் நிற்கும் சூழலின் இருட்டுடனும் குப்பையுடனும் அது கொள்ளும் உரையாடலையே இக்கதைகள் முன்வைக்கின்றன.இலட்சியவாதம் தன் ஆற்றலால் தானே ஒளிவிடக்கூடியது.பிறிதொன்றின் உதவியின்றி நிற்கக்கூடியது. எத்தனை பிரம்மாண்டமான எதிர்விசைகளாலும் அழித்துவிட முடியாதது.”

ஜெயமோகன் தனது உரை ஒன்றில்ல, “உலக இலக்கியம் என்று ஒன்று இருந்தாலும், நம்முடைய அழகுணர்வு ,அறம் மற்றும் ஒழுக்கம் பற்றிய நமது புரிதல  நமது சொந்த பாரம்பரியத்திலிருந்தும், உள்நாட்டிலிருந்தும் வரவேண்டும் (என்னுடைய எழுத்தில்) என்று கூறுகின்றார். அதன்படி இத்தொகுப்பில் உள்ள 12 கதைகளும் தமிழ்நாட்டின் தென் மற்றும் மேற்குப் பகுதிகளில், ஆசிரியருக்கு நன்கு பரிச்சயமான பகுதிகளில் வடிவமைக்கப்பட்டுள்ளன.  இக்கதைகள் அப்பகுதிகளின் ஆன்மாவில் வேரூன்றியவை.  மற்றும் தமிழ் நாட்டின் கலை, கலாசார  அறிவுசார்ந்த பாரம்பரியத்தை பின்னணியாகக் கொண்டுள்ளன.

இந்தக் கதைகள் ஒவ்வொன்றிலும், கதையின் மையக் கதாப்பாத்திரம் வஞ்சகம், அவமானம், இழப்பின் வேதனை, உயிர்க்கொல்லும் தொற்றுநோய் மற்றும் ஆணாதிக்கம் போன்ற கொடூரங்களை எதிர்கொள்ளும் போது, தங்களுடைய அகவளத்தினாலும் சுற்றத்தினாலும் மட்டும் தனிமனித அறத்துடன் வாழ்வதில்லை. வளமான மனிதநேயத்தின் சகாப்தமே அவர்களுடன் துணைநிற்கிறது.    பிரியம்வதா தனது மொழிப்பெயர்ப்பாளரின் குறிப்பில் கூறுவது போன்று, “இந்தக் கதைகள் நல்லொழுக்கத்தின் எளிமையான வெளிப்பாடுகள்  அல்ல. அறத்தினை இருமை உடையதாக, மாறா நடத்தைக் குறியீடுகளாகப் புரிந்துகொள்வதற்கு அப்பால், ஆழமான மற்றும் மிகவும் சிக்கலான  அகக்குழப்பங்களை  ஆராய்கின்றன.

முதலாவது  கதையான ‘அறம்- நீதியின் பாடல்’ தனது குடும்பப் பொறுப்புகளை நிறைவேற்றும் பொருட்டு வெளியீட்டாளரின் வியாபார நோக்கினை நிறைவேற்றும் ஒரு வரிய எழுத்தாளரின் துயரங்களை  விவரிக்கின்றது. அவரின் வெளியீட்டாளரான செட்டியாரால் அவர்  ஏமாற்றப்பட்டு வருமானத்தை இழக்கின்றார். இதனால் குடும்பத்தில் விரைவான பாதிப்பை எதிர்கொண்ட எழுத்தாளர், வெளியீட்டாளரின் வீட்டிற்கு விரைந்து சென்று ‘அறம் பாடுகின்றார்”, இதன் பாரம்பரிய அர்த்தம் என்னவெனில், ‘பிழையான கவிஞன் நீதியின் பாடலைப் பாடி, ஒரு எதிரியை நாசமாக்குகின்றான். “குடும்ப அதிகாரத்தை வைத்திருக்கும் வீட்டுத்தலைவி தன் கணவரிடம் உடனடியாக அவருக்குரிய பணத்தை செலுத்தும்படி கட்டளையிட்டு விட்டு பாதிக்கப்பட்ட எழுத்தாளரிடம் மன்னிப்பு கோருகின்றார்.

கதையை விவரித்த பிறகு, எழுத்தாளர் சொல்கிறார், “நாடாளறதுக்குதான் தர்மம்னு எவன் சொன்னான்? தர்மம் இருக்கிறது வீட்டிலே அய்யா.”

“யானை டாக்டரில்” விலங்குகளை அவற்றின் சொந்த மொழியில் நாம் புரிந்துகொண்டால் மட்டுமே அவற்றை அறத்துடன்  நடத்துவது சாத்தியம் என்பதை அறிகின்றோம். சர்வதேச அளவில் புகழ்பெற்ற கால்நடை அறுவை சிகிச்சை நிபுணரான கதாநாயகன்,  இந்திய சுற்றுலாப் பயணிகளின் கவனக்குறைவான நடத்தைகள் காரணமாக விலங்குகள் துஷ்பிரயோகப்படுத்தப்படுவதனை   தடுக்கவும், அவர்களின் இயற்கை வாழ்விடங்களில் பாதிக்கப்பட்டவர்களை மீட்பதற்காகவும் ஒவ்வொரு நாளும் அதிகமாகப் பேராடுகின்றார். 

நாடோடி பழங்குடியினத்தைச் சேர்ந்த ஒரு சிறுவன், கடின உழைப்பும் அர்ப்பணிப்பும்  காரணமாக, உயர் சாதியினர் ஆதிக்கம் செலுத்தும் சமூகத்தில்  உண்மையான அதிகாரங்களை  பயன்படுத்த எவரும் தம்மை அனுமதிக்க மாட்டார்கள் என்பதை உணர்ந்து ஒரு ஐ.ஏ.எஸ் அதிகாரியாகின்றார்.    தனக்கு எதிரான ஆழ்ந்த தப்பெண்ணம் கொண்ட ஒரு சூழலில் செயற்பட நேர்ந்த அனுபவத்தை அவர் இவ்வாறு விபரிக்கின்றார். “ஒரு நகரத்தின் நடுவில் கூண்டில் அடைக்கப்பட்ட  பெயரற்ற ஓர் காட்டு விலங்காக ஆனேன். நான் ஒரு ஆவேசப் போராட்டத்தை நடத்தியபோது, அது நாகரீகமற்றது  என கூறப்பட்டது. நான் எதிர்த்துப் போராடிய போது, அது கட்டுப்பாடற்ற  பேராசை நிலை என்று நிராகரிக்கப்பட்டது.  எனது நிலைப்பாட்டை ஒப்புக்கொண்டு, நான் மௌனமாக இருந்தால், அது எனது ஆண்மைக்குறைவு என விளக்கமளிக்கப்பட்டு அனுதாபத்துடன் அணுகப்பட்டது. என்னுடைய சுயபச்சாதமும் தனிமையும் உளவியல் பிரச்சினைகளாகக் கருதப்பட்டன:”

பழங்குடியினரின் பாரம்பரிய வழிமுறைகளைக் கைவிட மறுக்கும் இந்த இளைஞன் தனது தாயைப் பாதுகாக்கும் போராட்டமே “நூறு நாற்காலிகள்”.  அவனது தாயின் மீதான தியாக உணர்வு அவனது உயிரையே அழித்துவிடும் அளவுக்கு அச்சுறுத்தலாகின்றது.    இறுதியில், எந்த  அதிகாரமும் தனது தாய் மீதும்  அவரது இனத்தின் மீதும்  ஏற்படுத்திய வரலாற்றுக் காயங்களை ஈடு செய்யாது என்றும் குணப்படுத்தாது   என்பதையும் அவர் உணர்கின்றார்.

ஒவ்வொரு கதையும் வாசகர்களை  சிக்கலான நமது உலகத்தைப் பற்றி ஆழமாக சிந்திக்க அழைக்கின்றது. அறநெறி வாய்ந்த மனிதர்களாக வாழ நாம் முன்னெடுக்க வேண்டிய போராட்டத்தை நமக்கு அது நினைவுப்படுத்துகின்றது.   தடுமாற்றங்கள் அனைத்தும் மிகவும் உண்மையானவை, ஏனெனில் அவை உண்மையான மனிதர்களின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டவை மட்டுமல்லாமல் நூலாசிரியரின் கைத்திறமை ஒவ்வொரு கதாப்பாத்திரத்தையும்,  நிலப்பரப்பையும், சூழ்நிலையையும்  உணர்வையும் தெளிவாகவும் உணர்திறனுடனும் உருவாக்கி வழங்குகின்றது.

வறுமை, சாதி, இருப்பிடம், பாலினம், நோய், முதுமை, பிறழ்வு, தொழில், நம்பிக்கை எனப் பல்வேறு காரணங்களுக்காக இந்தக் கதைகளின் நாயகர்கள் உலகத்திலிருந்து வெகு தொலைவில் வாழ்கின்றனர். இந்த தனிமையே அவர்களின் இலட்சியவாத நிலையை ஒரே நேரத்தில் அத்தியவசியமாக்குகின்றது. மற்றும் இயங்க வைக்கின்றது.    தமக்கு அளிக்கப்பட்டுள்ள உலகின் பொது அறிவு கட்டமைப்பிற்கு அப்பாற்பட்ட ஒரு பெரிய உண்மையை அவர்களால் காணவும், அதற்கு பதிலளிக்கவும் முடியும்.  அறநெறியுடன் கூடிய வாழ்க்கை முறைக்காகக் ஒன்றிணைந்து எழும் துணிச்சலே  நமது எதிர்காலத்தில் ஏற்படப் போகும் காலநிலை பேரழிவின் நிச்சயமற்ற தன்மையிலிருந்து நம்மைக் காப்பாற்றும்.

உண்மையின் கதைகள்  ( Stories of the True) மொழிபெயப்பும் சிறப்பாக உள்ளது. மொழிபெயர்ப்பாளர் பிரியம்வதாவின்   ஈடுபாடு, நூலாசிரியரின் ‘குரலை’ ஆங்கிலத்தில் எவ்விதமான இடையூறும் இன்றி  மீள உருவாக்கம் செய்ய உதவுகின்றது.  மூல உரையின் தொனி  கலாசார இருப்பிடத்தைத் தூண்டும் அதேவேளை,  ஆங்கில மொழியை அவர் நம்பிக்கையுடன்  பயன்படுத்தியிருக்கும் விதம் காரணமாக தொகுப்பை வாசிக்கும் போது மகிழ்ச்சி உணர்வு ஏற்படுகின்றது.

தமிழ் எழுத்துலகில் ஜெயமோகனின் முதன்மை நிலை மற்றும் கடந்த 30 ஆண்டுகளில் அவர் மேற்கொண்ட செழுமையான பணிகள் என்பனவற்றுக்கு மத்தியில்  இந்த உண்மையின் கதைகள் வெளியாகும் முதல் ஆங்கில மொழிபெயர்ப்பு படைப்பாகும். மேலும் பல பணிகள் நடைபெற்று வருவதாகக் கூறப்படுகின்றது. தமிழ் நாட்டிலிருந்து வரும் இந்த முக்கியமான மற்றும் தனித்துவமான குரலை ஆங்கிலோஃபோன் தரப்புகள் எவ்வாறு அணுகப்போகின்றன  என்பதை  காண ஆவலாக இருக்கின்றது. 

பிரியதர்ஷினி சிவராஜா

சுயாதீன பத்திரிகையார். சரிநிகர், வீரகேசரி, சுடரொளி பத்திரிகைகளில் பணியாற்றியவர். பெண்கள் மற்றும் சிறுவர் உரிமைகள், மனித உரிமைகள், LGBTIQ சமூகம் சார்ந்த பிரச்சினைகள் தொடர்பில் பல்வேறு ஆக்கங்களை எழுதி வரும் இவர் சிங்கள மொழிப்பெயர்ப்புகள் மீதும் ஆர்வம் கொண்டவர்.

1 Comment

  1. சிறப்பான முயற்சி உங்களோடு இணைந்து கொள்ள விரும்புகிறேன்

உரையாடலுக்கு

Your email address will not be published.