/

நியமம்: மயிலன் ஜி சின்னப்பன்

ஓவியம்: திண்டுக்கல் தமிழ்ப்பித்தன்

1

“யூ மென் ஆர் சிக்.. டோட்டலி சிக்.. நெஜமாவே..” இந்தப் பொதுமைப்படுத்தலை எதிர்ப்பார்த்தே இருந்தேன். இப்படித்தான் அந்த விவகாரம் வந்து நிற்கமுடியும். மறுதலித்து வாதிடவெல்லாம் மனமில்லை. சீண்டப்பட்டதாகக் காட்டிக்கொள்ள அது சரியான இடமாகவும் படவில்லை. மறுவார்த்தை பேச, எப்போதும் எடுத்துக்கொள்வதைவிடக் கூடுதல் அவகாசம் தேவைப்பட்டது.

அவள் நிறுத்தியிருக்கவில்லை. “வயசு கியசு எதுவும் கெடையாது… நீங்க பாட்டுக்கு நாக்க தொங்கப்போட்டுட்டு இஷ்ட மயிருக்கு போவீங்க… கூட இருக்க பொம்பளதான் பொறுத்துக்கிட்டுப் போவனும்… உன்கிட்ட போயி இத சொன்னம்பாரு..” அதைத் தொடர்ந்து அவள் முணுமுணுத்தது எதுவும் சரியாகக் கேட்கவில்லை.

சிகரெட்டைப் பற்ற வைத்துக்கொண்டேன். எதிரில் ஒருவன் கையில் தேநீருடன் அன்றைய தினசரியை வாசித்துக்கொண்டிருந்தான். நடுவாந்தர வயதுக்காரர்கள் இருவர் உரக்கப் பேசிக்கொண்டிருந்தார்கள். ஒருவர் பேச மற்றொருவர் மறுப்பதாகப் போய்க்கொண்டிருந்தது உரையாடல். முடிவில் கைக்கலப்பு எதுவும் வருமென எதிர்ப்பார்த்தேன்; ஒன்றும் நடக்கவில்லை. அவர்களிடம் வந்து ஒரு மூதாட்டி கையேந்தினாள்; இருவரும் அவளைச் சட்டை செய்யவேயில்லை. டீக்கடைக்காரர் அவளுக்கு ஒரு ரொட்டியை எடுத்துக்கொடுத்துவிட்டு வேலையைத் தொடர்ந்தார். பின்கட்டில் நின்றவாக்கில் கண்ணாடிக் குவளைகளைக் கழுவுவது அவரது மனைவியாக இருக்க வேண்டும். அடுத்துவந்த ஜடாமுடிப் பிச்சைக்காரனுக்கு அவர் எதுவும் தரவில்லை. எனக்குக் கங்கு கையைச் சுடுமளவிற்கு நெருங்கிவிட்டது. விட்டெறிந்த துண்டை எடுத்து அந்தப் பிச்சைக்காரன் இழுக்க ஆரம்பித்தான். எதிரிலிருந்த அனைவரையும் ஒரே அடைப்பிற்குள் வைத்துப் பார்த்தேன். அவர்கள் எல்லோருமே அந்தத் தருணத்தில் ரொம்பவே சந்தோஷமாக இருப்பதாகப் பட்டது. பொறாமையாக இருந்தது. மறுமுனையில் நந்தினி நிறுத்தியிருக்கவில்லை. கோபமும் அழுகையுமாகப் பேசிக்கொண்டிருந்தாள்.   

2

நான் அங்கு பணிக்குச் சேர்ந்திருந்த இரண்டாவது மாலையின் காட்சி அது. வாகனம் நிறுத்துமிடத்தில் தன் காருக்குள் அமர்ந்து நந்தினி அழுதுகொண்டிருந்தாள். ஒரு முறை என்னை நிமிர்ந்து பார்த்தும் பொருட்படுத்தியாகத் தெரியவில்லை. பொது இடத்தில் தன்னிரக்கத்தைக் கட்டுப்படுத்திக்கொள்ள முடியாத அந்தப் பலவீனத்தோடு அக்கணமே ஒரு பிணைப்பு உண்டாகிவிட்டது. இருந்தும், எங்கள் அணியினருள் சம்பிரதாய முகமன்களைக் கடந்து நெருங்கிப்பேச நான் அதிகக் காலம் எடுத்துக்கொண்டதும் அவளிடம்தான். வெறுமனே, அழகான பெண்களை அணுகுவதிலிருக்கும் தயக்கம் என்று அதைச் சுருக்கமாட்டேன்; நிறைவுக்கான பொறுமை எனவேணும் சொல்லலாம். மிகப் பூஞ்சையான குழந்தைமுகம் எனினும், திருமணமானவள் எனத் தெரியவந்தபோது ஆச்சரியமாகவெல்லாம் இல்லை. தன் கல்லூரி நண்பனான இலியாஸைக் காதலித்து மணந்திருப்பவள் – மதபேதத்திற்காக இருவரும் தமது குடும்பங்களைத் துறந்திருக்கிறார்கள். 

ரொம்பவே தொளதொளப்பான குர்த்தியில், வெளிறிப்போயிருக்கும் உதட்டுடன் அவளைப் பார்ப்பதற்குத் தொடர்பிணியிலிருந்து மீண்டவளைப்போலத் தெரிவாள். பிணியும் உண்டுதான்; ரத்தசோகையோ என்னவோ – கரு தங்காமலும் போயிருக்கிறது. அரைக்கை உடுப்பு அணிந்தால் கைகளிரண்டும் குச்சிக்குச்சியாய் நீண்டிருக்கும்; கொஞ்சம் மேற்கையை உயர்த்தினாலே அக்குள் தெரிந்துவிடும். தோற்றம் குறித்த தாழ்வெண்ணம், முன்னரெல்லாம் இருந்ததாகச் சொல்லியிருக்கிறாள். ‘கல்லூரி விடுதி அறைத்தோழி ‘ஃப்ளாட்ரான்’ என்றுதான் அழைப்பாள்’ எனச் சொல்லிச் சிரிப்பாள்; கருச்சிதைவுக்குப் பின்னான உளச்சிக்கல் குறித்தும் அதற்காக எடுத்துக்கொள்ளும் சிகிச்சை குறித்தும் சொல்லியிருக்கிறாள். பொருட்படுத்திப் பொத்திவைக்க வேண்டிய நிர்பந்தத்துடனெல்லாம் இவற்றைச் சொல்லமாட்டாள். அதுவோர் அசெளகரியமான அணுக்கம் என்றுதான் சொல்லுவேன். நெருக்கத்தில் வந்துவிழும் ரகசியங்களின் பெருஞ்சுமை.

எப்போதும் என்னைப் பிரத்யேகமானவனாக உணரச் செய்ய சிரத்தை எடுக்கிறாளோ எனத் தோன்றும். அதை வலிந்து செய்பவளாகவும் காட்டிக்கொள்ளமாட்டாள் – பெல்ட்டும் ஷூவும் ஒரே கலர்ல போடு; சாப்பாட எடுத்து வாய்ல வைக்கும்போது சுண்டுவிரல தனியா விடாத; காஃபி குடிக்கும்போது சத்தம் வராம சிப் பண்ணு.. போகிறப் போக்கில் சொல்லப்படும் வார்த்தைகளை மிக நிதானமாக அசைபோட்டுச் செரித்துக்கொள்வேன். மூன்றாம் நபர் இருக்கும்போது தன்சார்ந்த பேச்சுகள் எதுவும் வரவே வராது. உம்மனா மூஞ்சி என்றில்லை; சினிமா, புத்தகம் எனக் கதை போய்விடும். அலைவுகள் எல்லாம் என்னிடம் மட்டும்தான்.       

“இலியாஸூக்கு என்னமோ ஒரு வெறுப்பு எங்க அம்மாஅப்பா மேல.. என்ன பேஸிஸூன்னும் எனக்கு புரியல.. இவங்களும் அதுக்கு தகுந்தாப்புல இப்ப என்கிட்ட மட்டும் பேச ஆரம்பிச்சிருக்காங்க.. அவனப் பத்தி ஒரு வார்த்தைக்குக்கூட விசாரிக்கறதில்ல..”

கூடுமானவரை இலியாஸைப் பற்றி மட்டும் என்னிடம் சொல்வதைத் தவிர்க்கிறாள் என்பதைக் கவனித்திருக்கிறேன். முரண்கள் குறித்து மூச்சுக்கூட விடமாட்டாள். மடை உடைந்து எப்போதாவது ஏதேனும் அவளையும் மீறிச் சொல்லும்போது, வெறுமனே தலையை மட்டும் ஆட்டிக்கொள்வேன்.

“அபாஷன் ஆனப்பதான் இதுவும்… நல்லபடி பொறந்திருந்தால்லாம் வந்திருப்பாங்களா தெரியல… அப்டியே கருணை உருவமா காமிச்சுக்கனும் அவங்களுக்கு.. ஷோக்கேஸிங்…” சலிப்பாய் உதட்டைக் குவித்தாள். “இந்த பேரண்ட்டிங்கற கான்செப்ட் இருக்கே… மட்டமான டிராமா…”

இப்படியேதேனும் பேசும்போது, இடையிடையே நிறுத்தி உறுதிப்படுத்திக்கொள்வாள், “எதாச்சும் ஸ்டுப்பிடா பேசுறனா?” – ‘ஏன் எல்லோரையும் இத்தனை வெறுப்புடன் அணுகுகிறாய்’ என கேட்கத் தோன்றும் – இல்லையெனத் தலையசைப்பேன்.  விட்ட இடத்திலிருந்து அதே வீச்சுடன் பேச்சைத் தொடர்வாள்.

“சாவக் கெடக்குறான்னு பாவப்பட்டு வந்திருப்பாங்க…”

“பாவம் பாத்தோ இல்ல பாசமோ… இதெல்லாம் ஒரு சப்போட்தான..” இப்படி எதையேனும் இடையிடையே சொல்லவில்லையெனில், ‘சாரி..தேவயில்லாம என்னோட கஷ்டத்தெல்லாம் சொல்லி ஒன்ன இரிட்டேட் பண்ணிட்டு இருக்கேன்னு நெனைக்கிறேன்.. நீ பாரு..’ என்பாள். அது பாசாங்கைப் போலவும் இருக்காது. அதிலிருந்து அவளைத் தேற்றி மீட்பதிலிருக்கும் சிரமம் எனக்குத் தெரியும்.   

“ம்ம்.. பட் எங்கம்மாவுக்கு எம்மேல பாசமெல்லாம் இல்ல.. அவங்களுக்கொரு வெண்ட் அவுட் வேணும்.. கஷ்டத்த கொட்டணும்.. நா ஒரு குப்பத்தொட்டி அவங்களுக்கு.. அதுக்குதான் எங்கிட்ட பேச ஆரம்பிச்சிருக்காங்க..” எத்தனை தீவிரமான சேதியையும் மிகச் சாவதானமாகத்தான் அவளால் சொல்லமுடியும். முகக்குறிகள் எதுவும் விரயமாகாது. எடுத்துக்கொள்ளும் மருந்துகளின் பக்கவிளைவோவென யோசித்திருக்கிறேன்; கேட்டதில்லை.

“ச்ச.. ஏன் இப்படில்லாம் பேசுற..”

“அண்ணன் யுஎஸ்லேந்து பேசும்போது எதையுமே காட்டிக்க மாட்டாங்க.. அவங்க அளவுக்கு சந்தோஷமான லேடி யாருமே இல்லங்கற அளவுக்கு ஒரே ஜம்பமா இருக்கும் பேச்சு.. சேத்துவெச்சு பொண்ணுக்கிட்ட கொட்டணும்.. அழுது வடியணும்.. ஒரு மாதிரி சிக் மதர் சைக்காலஜி..” லேசாகச் சிரித்தாள்.

“சும்மா கத கேக்குற மாதிரி கேட்டுக்கோ.. திவ்யாவோட அம்மாவும் அப்டிதான்.. அப்பப்ப ஃபோன் பண்ணி எதாவது சொல்லிட்டு வெச்சிருவாங்க.. இவ யோசிச்சிட்டே இருப்பா..” அதைத் தொடர்ந்து ‘பாப்பாவோட வெளையாட ஆரம்பிச்சா அதெல்லாம் மறந்துடும் அவளுக்கு..’ என்பதைச் சொல்லவந்து மிகக் கவனமாக நிறுத்திக்கொள்வேன்.

எவ்வளவு தூரம் தயக்கமோ முன்யோசனையோ இன்றி அவளால் என்னுடன் பேச முடிந்ததோ அதே அளவிற்கு அவளைக் காயப்படுத்தாமல் பேசுவதற்கான சொற்களை மிகக் கவனமாக நான் தொடுக்க வேண்டும். அவளுக்கு அது புரியாமலில்லை. அப்படியான தருணங்களில் நான் தடுமாறும்போது, சில முறை சிரிப்பாள்; சில முறை, ‘என்ன ரொம்ப ஆக்வடா ஃபீல் பண்ண வைக்காத’ என்பாள். எந்தத் துருவத்தில் நிற்கப்போகிறாள் என்பதில் ஒரு குறுகுறுப்பு. எனக்கு அது பிடித்திருந்தது.

“டக்குன்னு கம்ப்பேர் பண்ணாத ப்ளீஸ்” முகம் சிவக்கவில்லையெனினும் கோபம்தான். “எல்லா வீடு மாதிரி இல்லேல்ல எனக்கு.. எல்லாத்தயும் கேட்டு உள்ளயே அடச்சு வெச்சிக்கனும்.. அவன்கிட்டயும் எதும் சொல்லமுடியாது..” மிகக் கூர்மையாக இந்த இடத்தில் நிறுத்துவாள். அதில் ‘அதனால் உன்னிடம்தான் என்னால் சொல்லமுடியும். எனக்கு எதுவும் உபதேசம் செய்யாமலும் மறுப்பு சொல்லாமலும் உன்னால் கேட்டுக்கொண்டிருக்க முடியுமா?’ என்ற கட்டாயப்படுத்தலோ இறைஞ்சலோ தொக்கி நிற்பதாகத் தெரியும். பிரதிவாதத்திற்கே இடமில்லை.

3

சமீப மாதங்களாகவே, தன் அம்மா ஒரு சந்தேகப்பிசாசாக மாறிக்கொண்டிருப்பதாக அடிக்கடி சொல்ல ஆரம்பித்தாள். மனோத்தத்துவம் குறித்து அதிகம் வாசிப்பதாலும் மருத்துவர்களிடம் ஆலோசிப்பதாலும் இப்படியெல்லாம் தோன்றுகிறதோ என்று நினைத்தேன். அதேவேளை, அவளுடன் இசைவதாக நினைத்துக்கொண்டு அவளது அம்மாவை விமர்சிக்க வாயெடுத்தால், அவளே அவருக்காக வாதாடவும் ஆரம்பிப்பாள்.

“அவங்களோட டெம்ப்பர் மேனேஜ்மெண்ட் ரொம்ப மோசமா இருக்கு.. எதுக்கா இருந்தாலும் அப்பாக்கிட்ட கத்துறாங்க.. கொஞ்ச நாளுக்கு அவர மட்டும் இங்க கூப்ட்டு தங்க சொல்லலாம்ன்னு இருக்கேன்..”

“அம்மா அங்க தனியா இருப்பாங்களா..?”

“இருக்கட்டும்..” உள்ளங்கையைப் பார்த்துக்கொண்டிருந்தாள். “ஆனா பாவம்..”, அவளேதான் இதையும் சொன்னாள், “கொஞ்சம் மனசளவுல சிக்கா இருக்காங்க.. அதான்..”

“ம்ம்”

“குடும்பமே இப்டியான்னு யோசிக்கிறியா?” முன்பற்கள் அத்தனையும் தெரியும் சிரிப்பு.

“ச்சீ.. லூசு..”

“ஆமா.. லூசுதான்..” புன்னகையில் கொஞ்சம் மிச்சமிருந்தது

அப்பாவைத் தன்னோடு அழைத்துக்கொள்ளும் செளகரியமெல்லாம் அவளுக்கில்லை என்பது கண்கூடு; நானறிந்த வரை, இருவருக்கிடையிலான மனப்பிளவைக் கணக்கிலெடுக்காத பட்சத்தில், அவரும் சரி, இலியாஸும் சரி, தனித்தனியே நல்ல நயமான மனிதர்கள்தான்.

அடுத்தடுத்த நாட்களில் உரையாடல் இதிலேயேதான் வட்டமிட்டது. என்னுடன் பேசுவதற்கு அவளுக்கு வேறெதுவுமேயில்லை எனுமளவிற்கு இந்த விஷயத்தில் ரொம்பவே பீடிக்கப்பட்டிருந்தாள்.

“அம்மா எதோ வர்ஸன் ஆயிட்டே இருக்கமாதிரி படுது.. எதாச்சும் ஹாம் பண்ணிப்பாங்களோன்னு பயமாவே இருக்கு..” இவளுக்குமே முன்பு அப்படியான எண்ணங்கள் இருந்ததெல்லாம் எனக்குத் தெரியும். 

“நீயாச்சும் ஒன்னு ரெண்டு நாள் ஊருக்குப் போயிட்டு வரலாம்ல.. ஒனக்கும் கொஞ்சம் ச்சேஞ்ச் கெடைக்கும்…”

சொல்லி நிறுத்தியிருக்கவில்லை. அதற்குள்..

“எனக்கென்ன ச்சேஞ்ச் வேணும் இப்போ? எதாச்சும் ஒளறிட்டு இருக்கனா இப்ப ஒன்கிட்ட..” என் சகஜபாவத்தைச் சிதைப்பது இப்படியான எதிர்வினைகள்தான்.

“நா அப்டியெல்லாம் எதும் சொல்லல.. ப்ளீஸ்.. ஒக்காந்து கேட்டுட்டு இருக்கவன இன்ஸல்ட் பண்ற மாதிரி பண்ணாத இப்டி..” அவளுடன் ஒத்திசைப்பதை இப்படி வெளிப்படையாகச் சொல்லிக்காட்டுவதே கூச்சமாகத்தான் இருந்தது.

“அவ்வளோ கஷ்டமா இருக்கா என்கிட்ட பேசுறதே ஒனக்கு? எனக்கே என்னப்பத்தி ஒரு கேவலமான இமேஜ உண்டாக்கனும் ஒனக்கு.. அதான?”

“நந்தினி.. ப்ளீஸ்.. இவ்வளோ எறங்கிப்போறதெல்லாம் என்னோட நேச்சரே கெடையாது.. ஒனக்காக மட்டும்தான்..” மறுபடியும் ஏதோ தியாகத் தோற்றத்தை உருவாக்க முனைவதைப்போலத் தோன்றச் சொல்லவந்ததை அப்படியே நிறுத்திவிட்டேன்.. “ப்ளீஸ் நந்தினி.. சாரி..” இப்படி எனக்குத் தவறென்று தோன்றாத பலவற்றிற்கு அவளிடம் மன்னிப்புக் கோரியிருக்கிறேன்.

“ம்ம்.. சாரி டூ..” சொல்லிவிட்டுச் சற்று அமைதியாக இருந்தாள். 

“இல்ல.. அப்பாவ ரொம்ப சந்தேகப்படுறாங்க..”, மீண்டுவிட்டதைப்போலத் தெரிந்தது. “அவருக்கிட்ட காசுக்குக் கணக்குக் கேக்குறாங்க.. எங்க போனீங்க.. எதுக்குப் போனீங்கன்னு போட்டுத் துருவுறாங்க.. நெஜமா அவர நெனச்சாதான்.. நிம்மதியா இருக்கவேண்டிய வயசுல.. ப்ச்..”

“சந்தேகம்ன்னா.. எந்த மாதிரி..”

“யாரோ ஒரு பொண்ணுக்கிட்ட பேசுறாராம்.. டெய்லி மொட்ட மாடிக்கு ஸ்மோக் பண்ணப் போறேன்னு சொல்லிட்டு போயி ஃபோன் பேசுறாருன்னு சொல்றாங்க..” ஒரு நொடி ஏதோ சுருக்கென்று தைத்தது. பேச்சை அவள் நிறுத்தியிருக்கவில்லை. வேறெங்கேயோ பார்ப்பதைப்போலக் கண்களை வைத்துக்கொண்டேன். திணறலைக் காட்டிக்கொள்கிறேனோ என்ற பதற்றம் ஒரு பக்கம். நிலையுணர்வதற்குள் ஏதோ பேசி முடித்துவிட்டுப் பதிலுக்காகக் காத்திருந்தாள்.

“அப்பாக்கிட்டயே நேரா கேட்றவேண்டிதான..” இட்டுக்கட்டுவதைப் போலத்தான் கேட்டேன்.

அவரை அப்படியான இடத்தில் வைத்து தன்னால் கற்பனைகூடச் செய்ய முடியாதென்றாள். ஆறுதலோ தீர்வோ சொல்வதை என்னையும் மீறி எதுவோ தடுத்தது. அவள் என்னிடம் இந்த விஷயத்தைப் பகிர்ந்திருக்க வேண்டாமெனத் தோன்றியது.

மெளனமாகவே இருந்தவளை ஏறிட்டபோது, வேறேதோ சொல்ல அவள் தயங்குவதாகத் தெரிந்தது.

“என்ன யோசிக்கிற.. சொல்லு..”  

மறுத்துத் தலையசைத்தாள். அவளது மனவோட்டங்களிலும் அதிலிருக்கும் அதீதங்களிலும் சிடுக்கான கற்பனைகளிலும் எதை ஏற்க வேண்டும், எதைத் தவிர்க்க வேண்டும், எதை மட்டும் மறுத்துப் பேசமுடியும் எனவெல்லாம் பகுப்பாய்வது ஒவ்வொரு முறையும் நெருப்பைக் கையாளுவதைப்போல இருந்தாலும் எதையேனும் அவள் மறைப்பதை மட்டும் என்னால் அனுமதிக்கவே முடிந்ததில்லை. மனம் கலவரப்படும். ஆழம்வரை தோண்டிப் பார்த்து அதில் மூச்சுத்திணறி நிற்க வேண்டும்.  

உதடுகளை உள்ளே மடக்கிக்கொண்டு கண்களை மூடியிருந்தாள். சில முறைகள் எச்சிலை விழுங்கிக்கொண்டாள். அழுதுவிடாமல் இருக்க முயற்சிக்கிறாள். சட்டமிட்டுச் சுவற்றில் மாட்டிவைக்கும் ஓவியத்தோற்றம். இரக்கமற்ற காலம் சற்று நேரமேனும் அப்படியே உறையலாம். விசும்பலை வலுக்கட்டாயமாக அடக்கிப் பிடித்திருந்தாள்.

“நந்தினீ..” 

திறந்தபோது கண்கள் பெருகியிருந்தன. சட்டென ஓர் உறுதிப்பாட்டிற்கு வந்துவிட்டதைப்போல, பேச ஆயத்தமானாள். தன் அம்மாவிற்குத்தான் மனச்சிதைவு ஏற்பட்டிருக்கிறதெனச் சொல்லி திடீரென குரலெடுத்து அழ ஆரம்பித்துவிட்டாள். எதிர்பார்த்திராத கணத்தில் வெடித்துவிட்ட அழுகை. கேண்டீனின் மற்ற மேசைகளை ஒரு முறை சுற்றிப் பார்த்தேன். சூழலின் அமைதிக்குப் பொருந்தாத கேவல். அங்கிருப்பவர்களுக்கும் அதைப் பொருட்படுத்தாததாய் காட்டிக்கொள்ளும் முதிர்ச்சியெல்லாம் இருப்பதாகத் தெரியவில்லை. தன்மானச் சிக்கலுக்குள் அகப்பட்டதன் பதற்றத்தில் வார்த்தைகள் மட்டுமீறி விழுந்துவிட்டன.

“எதுக்கா இருந்தாலும் அந்த எழவயே சொல்லாத மொதல்ல.. ஏன் எல்லாத்தையும் போட்டு இவ்வளோ காம்ப்ளிக்கேட் பண்ற?” குரலை இறுக்கிப் பற்களைக் கடித்துக்கொண்டு “சைக்கோ..” எனச் சொல்லி நிறுத்தினேன். நிலை உணர்வதற்குள் அச்சொல் உதிர்க்கப்பட்டுவிட்டது. ஒரு வினாடி மட்டும் காலத்தைப்  பின்நகர்த்த முடிந்தால் அள்ளிவிடலாம். காதுமடல்கள் சில்லிட்டத்தைப் போலிருந்தது.

பூரண நிசப்தம்.

ஏதோ சொல்ல ஆயத்தமாய் இருந்தவள் சட்டென நிறுத்திக்கொண்டாள். அழுகையும் அந்த வார்த்தையோடு அப்படியே நின்றுவிட்டது. 

அவளை நேருக்கு நேராகப் பார்க்கமுடியவில்லை. “சாரி நந்தினி”. அவள் புறப்படும்போது சொன்னது அவளுக்குக் கேட்டிருக்க வாய்ப்பில்லை.

நள்ளிரவு வரை அவளைத் தொடர்புகொள்ளத் துணிவில்லை. அவளை இதைவிட மோசமாக என்னால் காயப்படுத்தமுடியாதெனத் தெரியும். அவளேதான் குறுஞ்செய்தி அனுப்பினாள், “நீயும் கத்தாத ப்ளீஸ்.. குட் நைட்..”

 கண்ணெடுக்காமல் திரையையே பார்த்துக்கொண்டிருந்தேன். அவள் முகத்தின் பேரமைதிதான் அச்செய்தியில் நிறைந்திருந்தது. இன்ன காரணமென எதுவுமில்லை. கணநேரத்திற்கேணும் இலியாஸை முழுமையாக வெறுத்தேன்.

4

தொடர்ந்த நாட்களில் தன் அம்மாவைப்பற்றிப் பேசுவதை மட்டும் என்னிடம் வலுக்கட்டாயமாகத் தவிர்க்க ஆரம்பித்தாள். தன்னுடைய சிகிச்சைகள் குறித்தும் எதுவும் சொல்லிவிடக்கூடாது என்ற ஆணை மிகத் தெளிவாக தெரிந்தது. முன்சென்று நானே அதனைத் தகர்க்கவேண்டுமென நினைப்பேன் – செய்ததில்லை; அதமச் சேதிகள் தவிர்க்கப்படுவதன் சுகத்தை என்னையே அறியாமல் மிக அந்தரங்கமாக ரசித்துக்கொண்டிருந்திருக்க வேண்டும்.

“விட்டா போதும்ன்னு நிம்மதியா இருக்கியா?” கேட்டுவிட்டாள். இப்படித்தான் செய்துவிடுவாள். 

தடுமாறி இடவலமாகத் தலையசைத்தேன். “நீயே சொல்ல தயங்குறன்னு தோணுச்சு..” சால்ஜாப்பெல்லாம் புரியாதவளல்லள்.

“அப்பா ஃபோன்ல மெசேஜெல்லாம் அம்மா பாத்துருக்காங்க.. அவங்களுக்கு படிக்க வராது.. கண்டெண்ட் தெரியல.. எதோ ஹார்ட்டெல்லாம் அனுப்பிருக்காராம்..”  சொல்லிய நிதானத்தில் என்னிடமிருந்து பதிலோ தேற்றலோ எதுவுமே அவளுக்கு அவசியமில்லை எனத் தெரிந்தது. கிட்டத்தட்ட ஒரு வாரத்திற்கும் மேலாக அதில் அவள் உழன்று மீண்டு வந்திருக்க வேண்டும்.

“வெறும் எமோஜிய வெச்சு எதும் முடிவு பண்ணாத..” எதற்காக இப்படிச் சொன்னேன்? தற்காப்பு அறிக்கையைப்போல ஒலித்திருக்க வேண்டும். என் கண்களைப் பார்த்துப் புன்னகைத்தாள். எள்ளலான சிரிப்புதான்.

“இப்ப அப்பா சைடுக்கு லாயர் ஆயிட்டியா?” அதே புன்னகையுடன் கேட்டாள்.

ஆறுதலை எதிர்க்குரலாக மட்டுமே அவளால் கிரகிக்கமுடிகிறதெனத் தோன்றியது.

“போட்டோல பாக்க சின்ன வயசு பொண்ணு மாதிரித்தான் இருக்கான்னு சொன்னாங்க..”

“இல்ல நந்தினி.. இங்க இருந்துட்டு ரொம்ப கொழப்பிக்காத.. வீட்டுக்குப் போயிட்டு வா.. அம்மாவுக்கும் கொஞ்சம் சப்போட்டிவா இருக்கும்.. என்னன்னாலும் அதுக்கப்றம் பாத்துக்கலாம்..”

“ஆமா.. ஏற்கனவே டிக்கெட் போட்டேன்.. வியாழக்கெழம நைட்டுக்கு..”

பதிலுக்குப் புன்னகைத்தாலும், ஊருக்குப் போகத் திட்டமிட்டிருப்பதை என்னிடம் அதுவரை சொல்லாமல் இருந்ததன் இடைவெளி ரொம்பவே சலனப்படுத்தியது. பயணத் திட்டம் இல்லையெனில் இதையெல்லாம் பகிர்ந்திருக்கவே மாட்டாளாய் இருக்கும். அவளுக்கு இதுவெல்லாமும் சாத்தியம்தானா? அத்தனை நேரம் நான் பொருட்படுத்திச் சொல்லிக்கொண்டிருந்த பதில்களை நினைக்கவே அவமானமாக இருந்தது. சுற்றியிருப்பவர்களைப் பொருட்படுத்திக் குரலைத் தாழ்த்திக்கொண்டு அவள் பேசியதே மிக நுட்பமாக என்னைக் காயப்படுத்துவதற்குத்தான் என்பது விளங்கியது. புதிய விரிசலொன்றை அடிக்கோடிட்டுக் காட்டுவதற்கான பாவனைகளைத்தான் அவ்வளவு நேரம் அரங்கேற்றியிருக்கிறாள். முறிவை உண்டாக்கிய அந்தச் சொல் காதுக்குள் மிகத் துல்லியமாக ஒரு முறை ஒலித்து அடங்கியது.

5

“அப்பா நா வீட்டுக்கு வந்திருக்கறதுக்கே ரொம்ப சங்கடப் படறாரு.. அம்மாதான் சொல்லி வரவெச்சிருக்காங்கன்னு நெனைக்குறாரு போல..” ஊருக்கு போய் முதல் மூன்று நாட்கள் எதுவுமே பேசாதவள், ஏதோவொரு புழுக்கத்திலிருந்து மீள்வதற்காக இதை என்னிடம் சொல்லியதைப்போலத் தெரிந்தது.

“என்ன பேசுறாருன்னு எதும் கேட்டியா? மெசேஜ் எதுவும்.. பாத்தியா?” காத்திருந்ததைப்போல முழுமையாக ஒப்புக்கொடுத்துப் பேசினேன். அவளும் மனத்தாங்கலை மறந்து பேசுவதைப் போலத்தான் தெரிந்தது.

“இல்ல.. அதெல்லாம் பாக்கல..”

“முடிஞ்சா எடுத்து பாரு.. நாமளா ஒரு முடிவுக்கு வரவேணாம்ன்னு தோனுது” அவளது அப்பாவின் பக்கம் அனிச்சையாக நான் சார்பெடுப்பதாக அவளுக்குத் தோன்றிவிடுமோ என்ற தயக்கம் மறு பக்கம் அழுத்தியது.

“இது வேற என்னவா இருந்துட முடியும்..?” அவள் நிறுத்திய இடத்தைச் சட்டென என்னால் நிரப்ப முடியவில்லை. ‘ஓர் அப்பா – மகள் உறவைப் போல’ எனச் சொல்ல யோசித்தபோது அதன் அபத்தம் தடுத்தது.

“அம்மா என்ன சொல்றாங்க..” பேச்சை மடைமாற்றிவிட்டாலும் ‘அது என்னவாக இருக்க முடியும்?’ என்ற கேள்வி வதைத்தது. நான் துடித்துக்கொண்டிருப்பது அவளைத் தேற்றுவதற்காக மட்டும்தானா? மூத்த தம்பதியினருக்கிடையிலான சுமுகத்திற்காகவா பதற்றமடைகிறேன்?

“அவங்க முன்னவிட ரொம்ப மூர்க்கமா நடந்துக்குறாங்க.. கண்டுபுடிச்சத வெச்சு அவர ஒவ்வொண்ணுக்கும் குத்திக்குத்திப் பேசுறாங்க.. எனக்கு முன்னாடி அவர அசிங்கப்படுத்தணும்ன்னு ஜாஸ்தியா பண்ற மாதிரி இருக்கு.. நா வராமலே இருந்திருக்கலாம்.. ”

“ம்ம்..”

“அப்பா எப்போமே சப்மிஸிவ் டைப் தான்.. அவரு அடங்கிப் போகப்போக அம்மா கண்ட்ரோல் இல்லாம போறாங்க.. இந்த மாதிரி வார்த்தையெல்லாம் அவங்க பேசுவாங்கன்னே தெரியாது.. ரொம்ப கெட்ட வாத்தையெல்லாம் சொல்லி.. ப்ச்..” அவள் யார் பக்கம் நிற்க விரும்புகிறாள் என்பது அந்தக் கணத்தில் எனக்கு முக்கியமாகப் பட்டது. ஒவ்வொரு முறையும் அப்பாவின் பக்கம் அவள் சாயும்போதும் சற்று ஆசுவாசமாக உணர்ந்தேன்.

“நீ அப்பாக்கிட்ட எதுவும் கேக்கலயா? பேசிடேன் ஒரு வாட்டி.. பெட்டர்ல..”

“என்னன்னு கேக்குறது..?”

குறிப்பிட்டுச் சொல்லத் தெரியவில்லை. தன் அம்மா புலனாய்ந்த வேறுசில விஷயங்களைச் சொன்னாள். அப்பாவின் கணக்கிலிருந்து சிறிதெனினும் குறிப்பிடத்தக்க தொகை அடிக்கடி குறைந்திருக்கிறது. புதிய சிம் கார்டு இணைப்பொன்று வாங்கியதற்கான உறை கண்டெடுக்கப்பட்டிருக்கிறது. இவர்கள் வீட்டில் பூத்திருந்த ரோஜா செடியின் புகைப்படத்தை அந்தப் பெண் தனது வாட்ஸ்ப் முகப்புப் படமாக வைத்திருக்கிறாள். அப்பா உறங்கி எழும் நேரத்தை முழுமையாக மாற்றியிருக்கிறார். அதிகாலையில் சீக்கிரம் கண்விழித்து மொட்டைமாடிக்கு யோகா செய்வதாகப் போகிறாராம். அலைபேசியில் அவர் பேசிக்கொண்டிருக்கும்போது அம்மா அருகில் வந்துவிட்டால் ஒரே விதமான சமாளிப்புப் பேச்சையே கையாளுகிறார். விசாரிக்க முற்பட்டால் முற்றாக மறுக்கவோ அமைதியாக இருந்துகொள்ளவோ செய்கிறார்; எதையும் விளக்கிப் பேச முயற்சிப்பதில்லை.

“அப்பாக்கிட்ட போயி.. இந்த மாதிரில்லாம் அம்மா சொல்றாங்கப்பா.. நிதானமா ஒரு வாட்டி எக்ஸ்ப்ளைன் பண்ணவாச்சும் முயற்சி பண்ணுங்கன்னு சொல்லு.. நீ அங்க போனதுக்கு எதாச்சும் பர்ப்பஸ் இருக்கணும்ல..” எனக்குமே அவரது விளக்கங்கள் அவசியப்பட்டன. அவை என் தன்மதிப்புக்குக் கொஞ்சம் உரம் சேர்க்கும்.

“பாக்குறேன்..”

“ரொம்ப யோசிச்சு யோசிச்சுப் பேசாத.. டக்குன்னு தோனுறத சொல்லிடு.. அதுதான் சரியா இருக்கும்..”

“ம்ம்” அவள் என்ன உத்தேசிக்கிறாள் என்பதே விளங்கவில்லை. புரிதலைக் வெளிக்காட்டிக்கொள்ளாத இறுமாப்பை, தன் விசேஷத் தன்மையாக நினைத்துக்கொண்டிருப்பவள். இருவருக்கிடையில் ஏற்பட்டிருந்த கிலேசத்தைக் களையவும்தான் ஆலோசனைகளை அதீதமாகத் திணித்துக்கொண்டிருந்தேன் எனினும், இந்தப் பிரச்சனையிலிருந்து என்னால் இம்மியளவும் அந்நியப்பட்டு நிற்கமுடியவில்லை என்பதுதான் உண்மை.

6

‘இவதான் என் அப்பாவோட வெப்பாட்டி’ – பின்னிரவு இரண்டரை மணிக்கு அனுப்பியிருந்த புகைப்படத்தை, காலை அலாரத்தை அணைக்கும்போதுதான் பார்த்தேன். பதிவிறக்கத்தின் வெண்ணிற வட்டம் பூர்த்தியாவதற்குள் முளைத்திருந்த எதிர்ப்பார்ப்பை, முற்றிலுமாக பொய்யாக்கும் சொரூபம். மூன்றாம்தரச் சிங்காரிப்புடன் அப்பெண் முப்பதுகளின் துவக்கத்தை மறைக்க முயன்றிருந்தாள். அவலட்சணத்தை அதிகரித்துக் காட்டும் வெள்ளைச் சருமம் வேறு. நெற்றியிலும் கழுத்திலும் சிறுகீற்றுச் சந்தனம். மலையாளப் பெண்களைப் பிரதியெடுக்கும் முயற்சியாக இருக்க வேண்டும். தாட்டியான தங்கச் சங்கிலியொன்று கழுத்தில் மினுங்கியது – தாலியாக இருக்கமுடியாது – மணமாகாதவள் என ஏற்கெனவே அப்பெண்ணைப் பற்றி நந்தினி சொல்லியிருக்கிறாள்.

‘நீயும் அந்த அழகுல வழிஞ்சு ஊத்திட்டு இருக்கியா?’ நந்தினி ஆன்லைனில் இருந்தததை அப்போதுதான் கவனித்தேன். இத்தனை கொச்சையாகப் பேசுபவள் இல்லைதான். அவ்வெறுப்பு எனக்கானதல்ல, ஏதோ மனத்தளர்ச்சியில் பேசுகிறாள் என்றாலும் உடனடியாக தெளிநிலைக்கு வந்துவிட முடியவில்லை.

“எங்க கெடச்சிது இந்த ஃபோட்டோ..? பேசுனியா அவருக்கிட்ட”

“எல்லாமே தலகீழா இருக்கு.. அவர இப்புடியொரு இமேஜ்ல வெச்சு என்னால யோசிக்கவே முடியல.. ரொம்ப தோத்துப்போன மாதிரி இருக்கு..” எனக்குமே தோற்றுப்போனதைப்போலத்தான் இருந்தது.

“என்ன சொன்னாரு..? நேராவே கேட்டுட்டியா?”

“எதுமே கேக்கல.. கேலரி புல்லா அவ போட்டோதான் இருக்கு.. காலைல எந்திரிச்சதுல இருந்து நைட்டு தூங்கப் போறவரைக்கும் அத்தன ஃபோட்டோ அனுப்புறா ஒரு நாளுக்கு..” 

“எதுவும் ஹாஃப் ட்ரெஸ்டா.. அந்த மாதிரியா..?” தயங்கித்தான் இதைக் கேட்டேன். அவரிடம் தவறென்று சுட்டிக்காட்டி ஒன்று கிடைத்துவிட்டால், அவரை முழுமையான குற்றவாளியாக நிறுத்திவிட்டால் இந்தச் சுயவதையிலிருந்து என்னால் தப்பித்துக்கொள்ளமுடியுமெனத் தோன்றியது.

“இல்ல.. அப்டில்லாம் எதுமில்ல.. பொடவ.. நைட்டி.. அந்த மாதிரி.. டீச்சரா இருக்கா போல..”

“ம்ம்..”

“கால் லிஸ்ட் எடுத்துப்பாத்தா அத்தன வாட்டி கால் பண்ணிருக்காரு.. எல்லாம் ஒரு நிமிஷம் அர நிமிஷம் கால்.. அப்பாவா இதுங்கற மாதிரி.. ரொம்ப டிஸப்பாயிண்ட்டிங்கா இருக்கு.. ப்ச்..”

“விடு.. அம்மாக்கிட்ட இதெல்லாம் காமிச்சிட்டிருக்க வேணாம்..”

மெளனமாகவே இருந்தாள். இருபத்தெட்டு வருடப் பிம்பம் நொறுங்கிக் கிடக்கும் அதிர்ச்சி மட்டும்தான் அவளிடம் மிச்சமிருந்தது.

“டெக்ஸ்ட் எதுவும் பாத்தியா?”

“எல்லாம் தெளிவா டெலீட் பண்ணி வெச்சிருக்காரு மனுஷன்.. கடைசியா நேத்து நைட்டு அவ ஒரு ஃபோட்டோ அனுப்பிருக்கா.. பதிலுக்கு இவரு குட் நைட்ன்னு போட்டு ஹார்ட் அனுப்பிருக்காரு.. அது மட்டும்தான்..”

எனக்கு அது போதவில்லை.

அவள் மீள நாளாகும் என்று தோன்றியது. அத்தனையையும் மீறி மிச்சமிருந்த நம்பிக்கை இப்போது பொய்த்திருக்கிறது. அடுத்தடுத்த நாட்களில் அவரது குறுஞ்செய்திகளைத் தொடர்ந்து கவனித்து வந்திருக்கிறாள். புகைப்படங்கள் வருவதும் பதிலுக்கு இவர் அதே இதயத்தை அனுப்பவதுமாக இருந்திருக்கிறார்கள்.

சில முறை அப்பெண் ‘லவ் யூ’ என்று அனுப்பியிருக்கிறாள். ஒவ்வொரு முறையும் இவர் ‘தேன்க் யூ.. நானும்’ என்று அனுப்பியிருக்கிறார். உண்மையிலேயே இந்த உரையாடலை அவளால் குறைசொல்ல முடிகிறதா என்பதில்தான் நான் அக்கறையாக இருந்தேன். பின்னொட்டாக எந்தக் கருத்தையும் அவள் அதனுடன் சேர்க்கவில்லை என்பதே எனக்குப் போதுமாக இருந்தது.

“மத்தபடி உன்கிட்டல்லாம் எப்டி பேசுறாரு..”

“இத பத்தி நா பேசவே இல்லயே.. என்கிட்ட அவரு எப்பவும்போலத்தான் இருக்காரு.. எனக்குதான் ஏதோ பூச்சி ஊருர மாரி இருக்கு.. ஒருவாட்டி மட்டும் ஃபோன பாக்குறத பாத்துட்டாரு.. அன்னிக்குதான் கொஞ்சம் ரெஸ்ட்லெஸ்ஸா தெரிஞ்சாரு.. எதாச்சும் கேப்பேன்னு யோசிச்சிருப்பாரு போல..”

“ம்ம்..”

“என்ன எதுமே சொல்லாம இருக்க?”

“அவருக்கு என்ன வயசு இப்ப?”

“அறுவத்தி நாலு.. ஏன் கேக்குற..”

“ஒன்ன மாதிரியே அம்மாவும் எதுவும் கேட்டுக்காம இருந்துட்டா இது அப்டியே செட்டில் ஆயிடும்ன்னு தோனுது.. செட்டில்ன்னு கூட இல்ல.. இது ஒரு பிரச்சனையே ஆவாதுன்னு படுது” தயக்கமில்லாமல்தான் சொன்னேன் எனினும் எப்படி அத்தனை சீக்கிரத்தில் இந்த முடிவிற்கு வந்தேனெனத் தெரியவில்லை.

“ரப்பிஷ்.. எப்டி அவங்களால அப்டி இருக்க முடியும்..”

“மே பீ.. இவுங்க ரெஸிஸ்ட் பண்ணாம இருந்தா அவருக்கிட்டயே ஒரு சேஞ்ச் இருக்கும்ன்னு நெனைக்கிறேன்.. நோண்ட நோண்ட அவரு இன்னும் மோசமாதான் ஆவாரு.. ஒரு மாதிரி அடமன்ஸ் வந்துரும்.. அம்மாவ கொஞ்சம் அவர இரிட்டேட் பண்ணாம இருக்க சொல்லு..” இவைதான் சொல்லவிழைந்த சேதிக்குச் சரியான வார்த்தைகளாவெனத் தெரியவில்லை. சொல்லிவிட்டேன்.

“இதுக்கும் அம்மா மேலதான் பழியா..” என ஆரம்பித்துப் பொரிய ஆரம்பித்தவள் “யூ மென் ஆர் சிக்” என்று என்னையும் அதே வட்டத்திற்குள் கொண்டுவந்து நிறுத்தினாள். எனக்கு அந்தப் பகிரங்கம் சுர்றென்றிருந்தது.

சிகரெட் புகையின் காந்தலை இரு பக்க மாரிலும் இழுத்துப் பிடித்து நிறுத்தி யோசித்தேன். இத்தனை மனோபலமற்றவளை ஏன் எனக்குப் பிடித்திருக்கிறது? எனக்கு ஏன் இலியாஸ் மீது வெறுப்பு வருகிறது; அவர்கள் இருவருக்கிடையேயான அன்னியோன்னியம் குறித்து அடிக்கடி கேள்வி முளைக்கிறது? என்னளவிற்கு அவளை அவன் புரிந்துவைத்திருக்க மாட்டான் என்ற போட்டியுணர்ச்சியின் தாத்பரியம் என்னவாக இருக்கமுடியும்? எதற்காக அவளது பாரங்களைத் தூக்கிச் சுமக்கிறேன்? ஏன் அவளிடம் என் அன்பை நிரூபிக்க நான் கிடந்து இத்தனை அல்லாடுகிறேன்? ஸ்பரிசங்கள் துட்சமெனினும், அழுதுகொண்டிருந்தவளை ஒரு முறை கட்டி அணைத்துக்கொண்டது மட்டும் ஏன் துருத்திக்கொண்டு நினைவடுக்கில் தனித்து நிற்கிறது?

இவையெல்லாம் விட, எப்படி தப்பிக்க முயன்றாலும் விடாமல் துரத்திக்கொண்டு வரும் அந்தக் கடைசி ஒரு கேள்வி – இவையனைத்தையும் திவ்யாவிற்குத் தெரியாமல் மிக ரகசியமாக நான் அடைகாக்க முயற்சிக்கிறேன் என்பதெல்லாம் நந்தினிக்குத் தெரியும்தானே?

மறுமுனையில் அழ ஆரம்பித்திருந்தாள். திடமாகவே பேச ஆரம்பித்தேன்.

“இல்ல.. நீயே யோசி.. அவரு உங்கக்கிட்ட இருந்து எதுவும் வெலகிப்போகப் போறதில்ல.. சோஷியல் வேல்யூ உள்ள மனுஷன்..”

“மயிரு வேல்யூ.. எரிச்சல கெளப்பாத.. வாய்க்கு வந்தத பேசாம ஃபோன வை மொதல்ல..” அழுதுகொண்டே கத்தினாள்.

“ப்ளீஸ் நந்தினி.. கேளு கொஞ்சம்.. அவரு வயசுக்கு இது ஒரு.. ஒரு.. பச்சையாவே சொல்றேன்.. பெர்வெர்ஷன்னு வெச்சிக்கோ..”, அந்த வார்த்தையை உச்சரிக்கவே எனக்கு மனமில்லை; சரணடைந்தேனும் பணிய வைக்க வேண்டும். “இதப் போட்டு கெளறி என்ன ஆகப்போகுது இப்போ.. அவரு என்ன பண்ணிட போறாரு.. கல்யாணம் பண்ணப்போறாரா அவள? ஃபிஸிக்கல்? அவர மட்டும் வெச்சு யோசி.. எனக்கு இதெல்லாம் ஆவும்ன்னு தோனல.. காசு அனுப்புறாரு.. அதான.. அதுல என்ன கெட்டுப் போச்சு ஒங்களுக்கு..”

“என்னடா பேசிட்டிருக்க நீ? அம்மாக்கு இதெல்லாம் தெரிஞ்சும் அவங்க எப்புடி கண்டுக்காம இருக்க முடியும்? கல்யாணமோ செக்ஸோ இல்லேன்னா அவங்க இத மைண்ட் பண்ணவேணாமா?”

அவளது கேள்வியின் பிற்பகுதியை மிக அருகாமையிலிருக்கும் ஓர் உவமையை எடுத்துச் சொல்லப்போனால் உடைந்துபோவாள் என்பது திண்ணம். சிரமப்பட்டு நிறுத்திக்கொண்டேன்.

“நீ பேசுறதுலதான் இருக்கு நந்தினி.. நீ பாத்ததெல்லாம் அவங்கக்கிட்ட சொல்லாத.. அப்பாவோட இத பத்தி பேசிட்டதா அம்மாக்கிட்ட சொல்லு.. நீ அவங்களுக்காக பேசிருக்கன்னு தெரிஞ்சாலே கொஞ்சம் பெட்டரா ஃபீல் பண்ணுவாங்க..”

“இவர இப்டியே மேய விட்டு வரச் சொல்றியா?”

“இப்ப அவர விசாரிச்சு ஒடச்சு நிம்மதிய கெடுத்துக்கிட்டு என்ன சாதிக்க போற.. அல்டிமேட்டா இதுல ஒனக்கு என்ன கெடைக்கனும்ன்னு எதிர்ப்பாக்குற..”

அவள் செவிக்கொடுக்கிறாள் எனத் தெரிய தொடர்ந்து பேசினேன்.

“அங்கேருந்து கெளம்புறதுக்கு முன்னாடி என்கொயர் பண்ற மாதிரி இல்லாம அவரோட ஃபோன்ல நீ பாத்ததெல்லாம் அவருக்கிட்ட சொல்லிட்டு.. இதெல்லாம் அம்மாக்கிட்ட சொல்லல்லன்னு மட்டும் சொல்லிட்டு வா..”

மறுமுனையிலிருந்து எந்தப் பதிலும் இல்லை.

“லைன்ல இருக்கியா?”

“ம்ம்..”

“அவங்கல்லாம் வாழ்ந்து முடிச்சிட்டாங்க நந்தினி.. இப்ப இந்த விஷயத்த இப்படி டீல் பண்றதுதான் சரி.. வேற என்ன.. அம்மாவுக்கு டிவோர்ஸ் வாங்கி குடுக்கப்போறியா..? இல்ல.. ஒங்க அப்பாவ பத்தி பேப்பர்ல நியூஸ் குடுக்க போறியா..”

7

பணிக்கு மீண்டும் வர ஆரம்பித்த பின்னரும் அவ்வபோது அம்மாவின் புலம்பல்களைச் சொல்லிக்கொண்டுதான் இருந்தாள். ஆனால் அவளுக்கே அதன் ஆழ அகலங்கள் விளங்கியதைப் போலவும் எப்படி அதனைக் கையாளலாம் எனப் புரிந்துவிட்டதைப் போலவும் தெரிந்தாள். அம்மாவும் உளத்தொய்விலிருந்து சற்று மீண்டிருப்பதாகச் சொன்னாள். அப்பாவிடம் ஓரிரு முறை இடையில் இது குறித்துப் பேசியிருக்கிறாள்.

“பட்.. இதுல எங்க அம்மா இந்த மாதிரி யாருக்கூடவாச்சும் பேசிட்டிருந்தா நீ என்ன சொல்லிருப்ப?”

என்னைச் சிறுமைப்படுத்துவது அவளின் நோக்கமில்லையெனத் தெரியும். இருந்தும் இந்தத் திடீர் கேள்வியைச் சட்டென எதிர்கொள்ளமுடியவில்லை. இத்தனைக்கும் என்னிடம் மிகக் காத்திரமான பதிலொன்று கையிலேயேதான் இருந்தது.

“என்ன டைட் கார்னர்ஸ்லாம் வெய்க்கிற..?”

“பைத்தியக்காரக் கெழவிக்கு இது ஒன்னுதான் கேடுன்னு நெனைப்ப..” குறும்புத்தனமாகத்தான் கேட்டாள்.

“அப்படில்லாம் இல்ல..” நெற்றியிலிருந்த மிகச் சிறிய ஸ்டிக்கர் பொட்டைப் பார்த்தபடி சொன்னேன்.

மிதமாகச் சிரித்தாள். 

கேட்டிருந்த பழச்சாறுகள் வந்திருந்தன. எனக்கானதை எடுத்துக்கொண்டேன். அவள் ஏதோ சிந்தனையில் உறைந்திருந்தாள். முகக்களையில் இருள் தட்டியிருப்பதைப் போலிருந்தது. அவளது புறங்கையை ஆறுதலாகத் தொட்டேன்.

“சாரி” திரண்டுவந்த கண்ணீரைத் துடைத்துக்கொண்டாள்.

“என்ன திடீர்ன்னு..?” இயல்பாக இருப்பவனைப்போலக் காட்டிக்கொண்டேன்.

“என்னோட மூட் ஸ்விங்ஸ் எல்லாத்தையும் பொறுத்துக்கிறதுக்கு..”

“ச்ச.. லூசு..”

மயிலன் ஜி சின்னப்பன்

மயிலன் ஜி சின்னப்பன், பிரபாகரனின் போஸ்ட்மார்ட்டம் என்ற நாவலின் ஆசிரியர். சமகாலத்தில் தொடர்ச்சியாக சிறுகதைகள் எழுதிவருகிறார். இவரது ‘நூறு ரூபிள்கள்’ என்ற சிறுகதைத் தொகுதி பரவலான கவனத்தைப் பெற்றது. கூர்ந்த வாசிப்புக்குரிய படைப்பாளியாக மதிப்பிடப்படுகிறார்.

11 Comments

  1. உளவியல் சார்ந்து மனித மனங்களுக்குள் எவ்வளவு ஆழமாக பயணிக்கிறார் மயிலன்.

    இன்னும் இன்னும் என மனது வேகமாக உள்வாங்கி பிரிந்து நின்று உணர்வுகள் கொப்பளிக்க… ஒவ்வொருவரும் ஒளிந்து கொள்ள ஒரு பாதுகாப்பான இடத்தைத் தேடுகிறது.

    அதுசரி….”புரிதலைக் வெளிக்காட்டிக்கொள்ளாத இறுமாப்பை, தன் விசேஷத் தன்மையாக நினைத்துக்கொண்டிருப்பவள்.”

    நந்தினி மட்டும்தானா..!

    எதிர் கொள்ளல்

  2. Kannadi la nandhini theriyala pola thonuthu❤️

    Mood swings rombave azhaga soli irukeenga Dr❤️

  3. மனம் எத்தனை விசித்திரமானது?
    அப்பா வேறொரு பெண்ணிடம் பழகுவது குறித்து ஆத்திரப்படுகிற மகள் வேறொரு ஆணிடம் தன் சுமைகளை இறக்கி வைக்கிறாள்….
    அருமையான உளவியல் கதை

  4. “யூ மென் ஆர் சிக் டோட்டலி சிக்” எனும் பொருமலில் ஆரம்பித்து “மூட் ஸ்விங்ஸ்”ல கொண்டாந்து முடித்திருப்பதற்கிடையேயான வெகுநுணுக்கமான “உளச் சிக்கல்கள்”
    வெகுஅருமை.

  5. இப்படிப் புரிந்து கொள்ள வேண்டுமோ ?

    நந்தினி
    தன் கணவனைப் பற்றி ,

    தனது அய்யங்களை,

    தன் தந்தையின் மீது ஏற்றி,

    தன் ஆண் நண்பனிடம்,
    சொல்லுவது,
    புலம்புவது
    எளிதாக உள்ளது என்று.

  6. அருமையான கதை. நல்ல உளவியல் பார்வை.

  7. இக்கதை நந்தினி அப்பா அம்மா பற்றிய பிணக்கைச் சொல்லவில்லை. அவர்களுக்கான பிரச்னையைப் பேசுவது போல இருந்தாலும் , பிரச்னை அவர்களைப் பற்றி அல்ல. இது கதைசொல்லிக்கும் நத்தினிக்கும் இடையே நடக்கும் நுணுக்கமான உறவுப் போர்.

  8. உங்கள் நியமம் சிறுகதையைப் படித்தேன். இளவயது ஆண்-பெண் முதிய வயதில் ஆண்-பெண் உறவுச் சிக்கலை அலசி
    . இருக்கிறீர்கள். ஜெயகாந்தனின் அந்தரங்கம் புனிதமானது.பாலசந்தரின் அபூர்வ ராகங்கள் நினைவுக்கு வந்தன.சுரேஷ்குமார இந்திரஜித்தின் ஒரு சிறுகதையில் தன் தந்தை இறந்த பிறகு அவருடைய உடமைகளை அலசும்போது ஒரு பெண் எழுதிய கடிதங்கள் கிடைக்கப்பெற்று அதைத் தேடிச்சென்று ஆராய்ச்சி செய்யும் ஒரு மகனின் உளநிலை எல்லாம் ஞாபகப்படுத்தின. படுத்தின. சந்தேக உளநிலை இருபாலருக்கும் பொதுவானது.
    உலகம் முடிவுக்கு வரும்வரை இது ஒயாது
    திருமண பந்தத்திற்கு அப்பாற்பட்டு ஆண் பெண் உறவுகள் சிக்கலாகவே நம் நாட்டில்
    இருப்பதாகத் தோன்றுகிறது. நியமம் சிறு கதை ஓரளவுக்கு இந்த உளச்சிக்கலை அலசுவதாகவே உள்ளது. வாழ்த்துகள்
    மருத்துவர் Rஇஸ்தியாக் அகமது திருச்சி.

உரையாடலுக்கு

Your email address will not be published.