1)
மண் கொறித்தபடி
நின்றயிடத்தில் நீந்தும்
சதுப்புநில உளுவைகளின்
ராத்திரிகளை யோசித்து
தூக்கமில்லை.
தாமரைமுத்துகளின்
சுத்த கறுப்பு சூழ
உறங்க வேண்டும்.
2)
அகழ்தரை ஈமத்தாழிக்குள்
பதுங்கி வாழ்கிறது இருட்டுநெல்.
வளர்ப்பு மரத்தின் வேர்
நெற்தோலைத் தீண்டியது பற்றி
என்னிடம் எதுவும் சொல்லவில்லை.
சொந்த மரக்கா இல்லாத எனக்கு
நெல்லின் கருங்கதை
பகுமானமென
மரமறியும்.
3)
வறட்சி செழிக்கும் நிலத்தில்
சேமித்து வைத்த குடிதண்ணீரை
தவிட்டோடு பிசைந்து
மரப்பாச்சிகளுக்கு ஊட்டினேன்.
தண்ணீர் சுமக்கும் விரல்கள்
தண்டனைக் கொடுத்தன.
ஒரு விழியின் கோவக்கண்ணீரால்
மரப்பாச்சிகளின் சிரிப்பையும்
இன்னொன்றால்
காலநிலையின் பிறழ்வையும்
திட்டினேன்.
4)
மட்டைகளை உரித்து உரித்து
கைரேகைகளை இழந்த
மகத்தான தேங்காய் உரியாளன்
தன்னுடைய
ஒரு கோடியாவது தேங்காயை
கடப்பாரையின் தாயான
கழுமரத்திலேறி
உரிக்கிறான்.
5)
கறுஞ்சிவப்பேறிய பானைச்சில்லின் மண்சுவை ருசிக்கும் பிள்ளையே
கொடுக்குப் பூச்சியோடு
பயமில்லாமல்
எப்படி விளையாடுகிறாய்.
தன் குட்டி நெஞ்சால்
கடுங்காற்றை எதிர்த்து தரையிறங்கும்
நாரையின் நரம்பை
எனக்குள்
கோர்த்திருக்கிறேன்.
முத்துராசா குமார்
மதுரை மாவட்டம், சோழவந்தானுக்கு அருகேயுள்ள தென்கரை கிராமத்தில் பிறந்து தற்சமயம் சென்னையில் வசிக்கிறார். . அச்சு மற்றும் இணைய இலக்கிய இதழ்களில் கவிதைகள் மற்றும் சிறுகதைகள் எழுதிவருகிறார் . இதுவரை 'பிடிமண்' (2019), 'நீர்ச்சுழி' (2020), ‘கழுமரம்’ (2023) ஆகிய கவிதைத் தொகுப்புகளையும் 'ஈத்து' (2021) என்ற சிறுகதைத் தொகுப்பையும் வெளியிட்டிருக்கிறார்.