/

அதிகாரம்: லாவண்யா சுந்தரராஜன்

“என்னது?!! வேலையை ராஜினாமா செய்வதற்கு மேலிடம் காரணமா? மேலிடம் என்றால் உங்கள் மேலாளரா?”

“இல்லை. அதற்கும் மேலிடம்.”

அந்தக் கண்ணாடி அறை வெளிப்புறத்து வெளிச்சத்தால், விளக்கு எதுவும் தேவையில்லாத அளவுக்குப் பளீர் என்றிருந்தது. மொத்த நிறுவனத்தில் இந்த அறையில் மட்டுமே பகல் நேரத்தில் விளக்கு எரிவதில்லை. இந்த அறை எனக்குப் பிடித்தமானது. என்னுடைய குழுவுடன் நான் முன்னெடுக்கும் பல சந்திப்புகளை இதில்தான் நடத்துவேன். பலருக்கு இந்த அறையின் நிஜ வெளிச்சம் கண்களை உறுத்துவதாகச் சொல்வார்கள். இன்னும் சிலர், வெளியுலகில் நிகழ்வதைத் தொலைக்காட்சித் திரைபோலக் காட்டும் இதன் கண்ணாடிச் சுவர்கள் தங்களின் கவனத்தைச் சிதறடிப்பதாகச் சொல்வார்கள். அவர்களிடம், இந்த அறையை உபயோகிப்பதன் மூலம் ஒரே ஒரு விளக்கைப் பகலில் ஒளிர விடாமல் தடுக்கலாம் என்பேன். குழல் விளக்குகள் கொடுக்கும் வெப்பத்தைப் பிறைநுனி அளவுக்குக் குறைக்க முடியும் என்றும், அதுவே நம்மால் உருவாக்கப்பட்ட வெப்ப மயமாதலுக்குப் பரிகாரமாய் உலகத்துக்கு நாம் செய்யும் சின்ன உதவி என்றும் சொல்வேன். முதிர் இளம் பெண்மணி பாடம் எடுக்க ஆரம்பித்துவிட்டார் என்று குழுவினர் எல்லோரும் மனத்துக்குள் சிரிப்பார்கள். அந்த அறையில் இந்த நேர்காணல் நிகழ்வது சற்று ஆசுவாசமாக இருந்தது. எனது நிறுவனத்திலிருந்து பணிவிலகல் பெற இருக்கிறேன். அதற்கான சம்பிரதாயங்கள் தினம் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன. அதிலொன்றுதான் இதுவும். அந்த அறையின் அதீதக் குளுமை என் உடலை ஊடுருவியது. நேர்காணல் பதிவு செய்யப்பட்டுக் கொண்டிருந்தது. அது எனக்குக் கடும் மன உலைச்சலைக் கொடுத்தது. நான் பேசுவது எனக்கு ஏதாவது ஆபத்தையும் கொண்டு வந்துவிடுமோ என்று பயமாகவும் இருந்தது.

கடந்த இரண்டு ஆண்டுகளாக இந்தச் சந்தர்ப்பத்திற்குத்தான் நான் காத்துக்கொண்டிருந்தேன். தலைமைப் பொறுப்பில் ஒரு சர்வாதிகாரி வந்தால் மிகத் திறமை வாய்ந்த குழுகூட சர்வநாசம் ஆகிவிடும் என்பதற்கு எங்கள் குழுவே சாட்சி. இந்த ஆறு ஆண்டுகளில் குழு ஒற்றுமையை மெல்ல மெல்லக் குலைத்தார். முன்பெல்லாம் உற்பத்தித் தொடரில் எந்தப் பிரச்சினை என்றாலும் எளிதாகக் குழுவுக்குள்ளேயே பேசி முடிவெடுத்துக்கொள்வோம். அவர் வந்த பின்னர் ஒவ்வொரு முடிவுக்கும் அவரை அணுக வேண்டியுள்ளது. முன்பெல்லாம் இரண்டாண்டுகளுக்கு ஒருமுறை புதுக் கைப்பேசிகளைச் சந்தைக்கு அனுப்பிக்கொண்டிருந்தோம். சந்தைக்குச் சென்ற பின்னர் பயனாளர்கள் எந்தப் புகாரையும் சொல்ல முடியாத அளவுக்குக் குறைகளே இல்லாத கைப்பேசிகளைத் தயாரித்திருக்கிறோம். பலமுறை பரிசோதனைகளைச் செய்வதன் மூலம் அந்தத் தரத்தை எங்களால் எட்ட முடிந்தது. அப்போதெல்லாம் எங்கள் நிறுவனரையே நேரில் சந்தித்துப் பேசமுடியும். ஆனால் அப்போது எந்தப் புகாருமில்லை. வரதன் ஆமை போல் எப்போது எங்கள் நிறுவனத்தில் காலடி எடுத்து வைத்தாரோ அப்போது பிடித்தது கண்டகச் சனி. வந்ததும் முதல் வெடிகுண்டாக ஒவ்வோர் ஆறு மாதத்துக்கும் ஒருமுறை புதுப்புது கைப்பேசிகளாகத் தயாரிக்கப் போகிறோம் என்று விளம்பரப்படுத்திவிட்டார். அதைச் செயல்படுத்த உழைப்பும் அதிகம் போட வேண்டியிருந்தது. பரிசோதனைகளை முழு அளவு செய்ய முடியவில்லை. பார்க்க கைப்பேசி போலொரு டப்பா இருந்தால் போதும், சந்தைக்கு அனுப்பி விடுங்கள் என்றும் இன்று பொருளைச் சந்தைக்கு அனுப்ப வேண்டுமென்றால் என்ன செய்வீர்களோ அதைத் தினம் செய்யுங்கள் என்றும் கட்டளை போட்டார். சில நாட்கள் வேலைப்பளு ஆளை அழுத்தத் தொடங்க, நிறுவன அடையாளப் பட்டையை மாட்டிக் கொண்டவுடன் மனம் இயந்திரம் போல் ஆகி, செய்யும் எல்லாச் செயல்பாடுகளும் கடமை போல ஆகிவிட்டன. அப்படி கடமைக்கு வேலைசெய்யும்போது பழுதுகள் இருந்தால் சரிசெய்யும்முன்னரே சந்தைப் படுத்த வேண்டியிருந்தது. உழைப்புக்குண்டான திருப்தியோ மகிழ்ச்சியோ கிடைக்கவில்லை. குழுவில் யாருக்கும் அதை வெளியே சொல்லக்கூட அனுமதியில்லை. அதை எதிர்த்தவர் அனைவரையும் ஒட்டுமொத்தமாய்ப் பணிநீக்கம் செய்தார்.

“அதற்கும் மேலிடமென்றால்?” மறுபடி கேட்டாள் மனிதவள மேலாளர். “வர . . . சாரி மேலிடமே காரணம்.”

“வரதனா?” மனிதவள அதிகாரியின் அதிர்ச்சி அவர் கண்களில் தெரிந்தது “என்ன காரணமென்று சொல்ல முடியுமா?” என்று அவர் தொடர்ந்தார்.

“நீங்கள் இந்த நேர்காணலின் பதிவை . . .” பயந்துகொண்டே கேட்டேன்.

“பயப்பட வேண்டாம். சம்பந்தப்பட்டவரிடம் நிச்சயம் காட்ட மாட்டோம். எங்கள்மேல் நம்பிக்கைவைத்துப் பிரச்சினைகளைச் சொல்லுங்கள்.”

“இப்போதெல்லாம் சக பணியாளர் யாரையும் நம்ப முடிவதில்லை.” ஒருவினாடி யோசித்துப் பின்னர் தொடர்ந்தேன். “ஒருவர் நமது நிறுவனத்துக்குப் புதிதாக வரும்போது முந்தைய நிறுவனத்திலிருந்து எப்படி வெளியேற்றப்பட்டார் என்று விசாரிப்பீர்களா?”

“அது எங்கள் அறமல்ல. வேலைக்கு விண்ணப்பித்தவர் தனக்கு ஒப்படைக்கப்பட்ட பொறுப்பைச் சரியாகப் பார்ப்பவரா என்று மட்டுமே எந்த நிறுவனமும் ஆய்வு செய்யும்.”

“பணியாளர்களின் டாப் மேனேஜ்மெண்டில் முறையிடப்பட்டு ஒருவர் துரத்தப்பட்டு இருக்கலாம்.”

“இருக்கட்டுமே, அதனால் என்ன?”

“அப்படிப் பிற நிறுவனத்திலிருந்து துரத்தப்பட்டு நம் நிறுவனத்தில் நுழைபவர் முதலில் பயம்கொள்வது தன் தலைமையின் கீழ் பணிபுரியும் குழுவின் ஒற்றுமைக்காக இருக்கலாம்.”

“சரி, அப்படியே வைத்துக் கொண்டாலும் அது உங்களை எந்தவிதத்தில் பாதிக்கிறது?”

இந்தக் கேள்விக்கு எப்படி பதில் சொல்வது? எதையெல்லாம் பதிலாகச் சொல்வது? அறையில் மாட்டியிருந்த வண்ணமயமான நவீன ஓவியம் வழக்கம்போல கண்ணில் தென்பட்டது. ஒவ்வொரு நாளும் வெவ்வேறு உருவங்களை அதில் தரிசித்திருக்கிறேன். இன்று அதில் ஆக்ரோஷமான யானை காலைத் தூக்கிய வண்ணம் நின்றிருந்ததுபோல வளைவுகள் தெரிந்தன. வெவ்வேறு நிறங்களில் கலவையால் நிரப்பப்பட்டிருப்பவை அந்த வளைவுகள். அது யானையா அல்லது கண்கள் அப்படி கற்பனை செய்கின்றவனா என்று எனக்குப் புரியவில்லை. அருகே நீரோடை போலொன்று பல வண்ணங்களில் ஓடிக்கொண்டிருந்தது. ஓவியத்திலிருந்து யானையைப் போல் தெரிந்த உருவம் அந்த நீரோடையிலிருந்து நீரள்ளியிருக்க வேண்டும். வளைந்த தும்பிக்கை வண்ண நீரூற்றுக்களைப் பீறிட்டபடி இருந்தது. தரையில் தன்பாட்டுக்கு ஒரு நத்தை தன் வழியில் ஊர்ந்துசெல்ல முயற்சி செய்து கொண்டிருந்தது. யானை கோபமாகக் காலை உயர்த்தி நிற்பது தன் அதிகாரத்தைக் காட்ட. நத்தையே உன்னை நசுக்கிக் கொன்று விடுவேன் என்று அந்த யானை என்னிடம் சொல்வது போலிருந்தது. சட்டெனத் தலையைக் குலுக்கிக்கொண்டேன். மனிதவள அதிகாரி என்ன ஆயிற்று என்றாள். அருகிலிருந்த நீர்க் குவளையை எடுத்துக் கையில் கொடுத்துக் குடிக்கச் சொன்னாள்.

“எனக்குச் சாதாரண பொறியாளர் நேரடியாக எப்படி மடல் எழுதலாம்? அதுவும் எனக்கே அறிவுரை வழங்குவது போல எப்படி எழுத முடியும்? ஒருமுறை மறுத்து எழுதிய பின்னரும், எப்படி அதிகாரம் தொனிக்கும் மொழியில் பதில் மடல் அனுப்ப முடியும்? யார் கொடுக்கும் தைரியம்? யூனியன் பின்னணி எதுவும் உண்டா?” என்று மனிதவளத் துறை வழியே வரதன் விடுத்த மிரட்டலும் கூடவே கிடைத்த மெமோவும் நினைவுக்கு வந்தன. அதுதானே இப்போது என்னைச் சுற்றி எழுப்பப்படும் சுவர்களுக்கான அஸ்திவாரம்? அப்படியொரு நிகழ்வு நடக்கும் முன்னர் நிறுவனத்தில் புதிதாகச் சேர்ந்தவர்கள் கூட நிறுவனத்தின் முதலாளியிடம் நேரடியாகத் தொடர்புகொண்டு பேசும் நிலை இருந்தது. உற்பத்தியைப் பாதிக்கும் விஷயங்களைச் சார்ந்து உடனடியாக மேலிடத்துக்கு அறிவிப்பது குறைந்தபட்ச அறமாக இருந்தது. இந்த அதிகார மையம் நிறுவனத்துக்குள் நுழைந்த வேளை தெளிந்த நீரோட்டம் யானை கலக்கிய நீரோடையாய்ப் பரிதவித்தது. வரதனைத் தாண்டி அடுத்த அதிகாரிகளை யாரும் தொடர்பு கொள்ள முடியாத மாயவலையை அவர் வந்த நாளிலிருந்தே பின்னத் தொடங்கிவிட்டது என்னைத் தவிர யாருக்கும் தெரியாது.

“ஆசுவாசம் அடைந்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன். நாம் தொடரலாமா” என்றாள் மனிதவள அதிகாரி.

“ம்” என்றேன். “அது உங்களை எப்படிப் பாதித்தது என்று கேட்டேன்.”

“உற்பத்தி பாதித்தது” என் குரல் தடுமாறியது.

“உற்பத்தி சரியாகத்தானே இருக்கிறது! ஆறுமாதத்துக்கு ஒருமுறை உங்கள் குழுவுக்கு நாங்கள் விருது, பணப்பரிசு எல்லாம் அளிக்கிறோமே.”

வெளியே Come innovate with us. We take care of your dreams என்று ஒரு பதாகை கண்ணுக்குத் தென்பட்டது. இது வேறு ஒரு நிறுவனத்தில் பொறியாளர்கள் வந்து பணிக்குச் சேரச் சொல்லி அழைக்கும் விளம்பரப் பதாகை. அந்தப் பதாகை காற்றில் படபடத்துக்கொண்டிருந்தது. நிறுவனங்கள் எல்லாம் உள்ளே நுழையும்வரை பகட்டைக் காட்டும் கண்ணாடி மாளிகைகள். நுழைந்தபின்னர் மூச்சைத் திணறடிக்கும் கண்ணாடிச் சிறைகள். சில நிறுவனங்கள் மனித வளங்களைப் பொக்கிஷமாக நினைக்கின்றன. அவற்றின் முன்னேற்றங்களைத் தமது முன்னேற்றம் போல் கொண்டாடுகின்றன. எங்கள் நிறுவனமும் ஒரு காலத்தில் அப்படித்தான் இருந்தது. ஆனால் எல்லாமே கல்லெறிந்த கண்ணாடிக் கூடுபோல ஆகிவிட்டது. உடைந்த சில்லுகள் தங்களைப் பாதுகாத்துக்கொள்ள யாரைக் கிழிக்கிறோம் என்றே தெரியாமல் அடுத்தவரைக் கிழித்துக் காயப்படுத்திக் கொண்டிருந்தன. காயம்பட்டவர்களில் எவருமே வலிக்கிறது என்று எவரிடமும் பகிர முடியாமல் தவித்துத் தங்களுக்குள்ளேயே புழுங்கிக் கொண்டார்கள். பிறகு என்ன செய்ய முடியும் மேலிடத்தை ஒவ்வொருவராய்ச் சரணடையத் தொடங்கினார்கள். நான் மட்டுமென்ன விதிவிலக்கா, என் சரணாகதி நேரத்துக்காகக் காத்திருந்தேன். ஆனால் அது நிகழாமல் மறைமுகப் போர் என் முதுகுக்குப் பின்னே நடந்துகொண்டிருந்ததை நான் உணரச் சில காலம் பிடித்தது.

சில சமயம் வார இறுதிகளில் என்னுடன் முன்னால் பணிபுரிந்தவர்களுடன் சந்தித்து உரையாடும்போது அவர்கள் எங்களது நிறுவனத்தில் என்னுடைய வேலை சார்ந்தும், அதில் நான் செய்யும் சாதனை சார்ந்தும் வியக்காமல் இருப்பதில்லை. அவர்களின் நிறுவனங்களில் அவர்களுக்கு வழங்கப்பட்ட வேலையை மட்டும் நேர்மையாய் செய்தால் போதும். அதற்கே தலையில் தூக்கிவைத்துக்கொண்டு கொண்டாடுவார்களாம். எங்கள் நிறுவனத்தில் பணிக்கு வெளியே பல விஷயங்கள் செய்தாக வேண்டும். மாற்றுச்செய்யும் வழக்கமான பணிகளில் புதுமைகளைப் புகுத்தல். மாற்றுச் செயலாக்கத்தில் குழுவில் முன்னோடியாக நான் இருப்பது வழக்கம். பலமுறை நிறுவனத்தில் புதுமை செய்வோம் போட்டிகளில் பரிசு வென்றிருக்கிறேன். இதுவும் நாய்க்கு பிஸ்கட் காட்டி உழைப்பைச் சுரண்டும் அதிகாரமையத்தின் திட்டம்தான். ஆனாலும் நிறுவனத்தின் மொத்தப் பணியாளர்கள் முன்னர் பரிசை வென்று புகழ்ச்சி ஒளியில் சில நாட்கள் மிதக்கலாம். வெறும் வார்த்தைகளாலான பீடிகைப் பாராட்டுகள், பெரிய அதிகாரிகளுடன் கைகுலுக்கும் வாய்ப்பு இப்படிப் பல பிஸ்கட் துண்டுகள் வீசி எறியப்படும். அதற்காகவோ அல்லது எங்கள் திறமையை நாங்களே மதிப்பிடும் பொருட்டோ நாங்கள் அந்தப் போட்டிகளில் பங்கேற்பதுண்டு. நான் பங்கேற்கும் குழு அனேகமாக ஏதேனும் ஒரு பரிசைக் கண்டிப்பாக வெல்லும். வரதன் எங்கள் நிறுவனத்துக்கு வரும் முன்னர் இருந்தே இது வழக்கம்.

கடந்தமுறை போட்டியில் என்னோடு இணைந்து கலந்துகொள்ள இருந்தவர்கள் எல்லோரும் தனித்தனியாக அழைக்கப்பட்டு, வேறு குழுவில் இணைந்துகொள்ளச் சொல்லி வலியுறுத்தப்பட்டார்கள் என்று போட்டி முடிந்த பின்னர் அறிந்து கொண்டேன். இருப்பினும் இரண்டு பேர் மட்டும் என்னோடு இணைந்து எங்கள் கைப்பேசியின் மின்சாரச் சேமிப்பைச் சிலமடங்கு உயர்த்தும் தீர்வைச் செயல் விளக்கம் செய்துகாட்டினோம். நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் போட்டியின்போது இந்தத் தீர்வு அவசியம் என்று பாராட்டினார். ‘Wow it is fantabulous solution. It is going to help our device rock in market’ என்று நிறுவனர் வாயிலிருந்தே வார்த்தைகள் வெளிப்பட்டன. அதைத் தொடர்ந்து வியாபாரத்தைப் பெருக்கக் கண்டிப்பாக உதவும் என்று விற்பனைக் குழுவும் கொண்டாடியது. பாராட்டு பல பக்கமிருந்தும் குவிந்தது. ஆனால் பரிசு மட்டும் கிடைக்கவில்லை. வரதனுடன் தொடர்ந்து உரையாடலில் இருக்கும் – குறிப்பாகக் குழுக்கள் பற்றி உளவு சொல்லும் ஒருவருக்குப் பரிசு வழங்கப்பட்டது. ஆனால் மேலிடம் தந்த அழுத்தத்தால் எங்கள் செயல் விளக்கம் செய்த தீர்வை மென்பொருளில் இணைத்துக்கொண்டது. இதை எனது மேலாளரிடம் கேட்டபோது, “உங்கள் தீர்வு இப்போது பயனாளர்களின் செயல்பாட்டில் இருக்கிறதே, இது விருதையும் மீறிய பரிசுதானே” என்று சமாதானம் சொன்னார்.

“எங்கேயும் எப்போதும் விருதெல்லாம் கண்துடைப்பு.”

“ஏன் உங்களுக்கும் பரிசுகள் கிடைத்திருக்கிறதே?”

“அதெல்லாம் ஒரு காலம். இப்போது மேலிடத்துக்கு வேண்டியவர்களுக்கு மட்டுமே அந்தக் கொண்டாட்டங்கள்.”

“சமீபமாக நடந்த போட்டியில் பரிசு கிடைக்கவில்லை என்பதே உங்களின் பணி விலகலுக்கு . . .”

“இல்லை. பணிமீதான என் காதல் அவ்வளவு குழந்தைத்தனமானதல்ல.”

“அப்படி என்னதான் பாதிப்பை அவர் உங்களுக்கு ஏற்படுத்தினார்?”

“குழுவுக்குள் உலவும் பிரித்தாளும் அரசியல் எல்லாச் செயல்பாடுகளையும் பாதிக்கிறது.”

“மறுபடியும் குழுவுக்கு என்றே சொல்கின்றீர்கள். உங்களுக்கு என்ன பாதிப்பைக் கொடுத்தார்?”

“பணியில் குழுவின்றித் தனியாக இயங்க முடியுமா?”

“சரி, மற்றவர்கள் ஏன் எந்தப் புகாரும் அளிக்கவில்லை?”

“எல்லோரும் பயந்திருக்கிறார்கள்” என்றேன். வேலையை விட்டு அடுத்த நிறுவனம் போனால்கூடச் சில தொடர்புகள் மூலம் புது நிறுவனத்தின் மேலதிகாரிகளிடம் பேசி சம்பந்தப்பட்டவர் மீது நம்பிக்கையின்மைப் பிம்பத்தை ஏற்படுத்திவிடுகிறார்கள் அல்லது இங்கே அவர்களின் பணி அனுபவம்சார்ந்த விசாரிப்புகள் வந்தால் ஏடாகூடமாய் ஏதேனும் சொல்லிவைக்கிறார்கள் என்பதைச் சொல்வதா வேண்டாமா என்று யோசித்துக் கொண்டிருந்தேன்.

“எதைக் கண்டு பயம்” நான் மௌனமாக இருப்பதைப் பார்த்து அவரே தொடர்ந்தார்.

“உங்களிடம் ஆதாரம் என்ன இருக்கிறது?”

“பணிநீக்கம் செய்யப்பட்டவர்களைத் தேடிப் பேசிப் பார்க்க வேண்டிய விஷயம்.”

“அது கொஞ்சம் கடினம். அவர் குழுவுக்குள் குழப்பத்தை உண்டாக்கிப் பிரித்தாளும் மனப்போக்கு கொண்டவராய் இருந்ததற்கு ஏதேனும் ஆதாரம் இருக்கிறதா?”

“கடந்த இரண்டாண்டுகளாக எங்கள் குழுவில் பணிச் சலுகை, பணி உயர்வு, அயல் பயணம் கிடைக்கப்பெற்றவர்கள் பட்டியலை எடுத்துப் பாருங்கள்.”

“பணி உயர்வு எல்லாம் பாரபட்சமின்றி நடக்கிறது. சம்பந்தப்பட்ட அனைவரிடமும் ஓட்டெடுப்பு நடத்தித் தெரிவை வெளிப்படையாக வெளியிடுகிறோம்.”

“எனக்கான பணி உயர்வு ஓட்டெடுப்பில் மிக அதிக மதிப்பெண் வந்தது.”

“அது பல நிர்வாகக் காரணங்களால் கூட இருக்கலாமல்லவா, தகுதியுள்ள பலருக்கும் ஒரே நேரத்தில் பணி உயர்வு வழங்க முடியாது போவதும் உங்களுக்குத் தெரியும்தானே?”

“ஆனால் பணி உயர்வு ஓட்டெடுப்புக் குழுவில் மிகக் குறைவாக ஓட்டு கிடைத்த சிலருக்குப் பணி உயர்வு கிடைத்துள்ளது.”

“அப்படிப்பட்ட புள்ளிவிவரம் இருந்தால் இதையெல்லாம் நீங்கள் முன்னரே மனிதவள மேம்பாட்டு நிர்வாகிகளிடம் ஏன் எடுத்துச் சொல்லவில்லை?”

என்னுடைய எவ்வித நல்ல முன்னெடுப்புகளுக்கும் முட்டுக்கட்டைகளைப் போடுவது, முதலில் மேலாளரும் அதன் பின்னர் தீர்க்கமான அறிவுரையும் வழங்குவது மனிதவளத் துறைதான் என்கிற விசயத்தையெல்லாம் இப்போது சொன்னால் சரி வருமா? எவ்வளவு பெரிய புரிந்துணர்வு ஒப்பந்தம் என்னுடைய முன்னெடுப்பால் நடந்தது? அது நிறைவேறியிருந்தால் எங்கள் கைப்பேசிகளை முன்னணி நிறுவனங்களின் கருவிகளோடு பரிசோதனை நடத்தியிருக்கலாம். அப்படிப்பட்ட சோதனைகளைச் செய்ய வேண்டுமென்றால் பல லட்சம் செலவளிக்க வேண்டியிருக்கும். என்னுடைய நண்பர் வீட்டுக்கு வந்திருந்தபோது அவர் பெண் கேட்ட கேள்விக்குக் கைப்பேசியின் சில செயல்பாடுகளைக் கொண்டு விளக்கினேன். அதைப் பார்த்தவர் தன் பெண்ணுக்கும் அவளோடு பயிலும் பிற குழந்தைகளுக்கும் சில தொழில்நுட்பங்களைத் தொடர் வகுப்புகள் நடத்திச் சொல்லித்தர வேண்டும் என்று விண்ணப்பம் வைத்தார். குழந்தைகளுக்குத் தொழில்நுட்பத்தை அவர்களுக்குப் புரியும் மொழியில் சொல்லிக் கொடுத்தது மிகவும் சுவாரசியமாக இருந்தது. அப்படி நடந்த பயிற்சி வகுப்புக்கு வந்த ஒருவர் மூலம் எனது நிறுவனத்தில் நான் செய்யும் பணிகளைக் கேட்டறிந்தார். பூரிப்படைந்து தனது நிறுவனத்தின் வழியே புரிந்துணர்வு ஒப்பந்தத்தை எங்கள் நிறுவனத்துடன் செய்துகொள்ள நினைத்தார். அதனால் வரும் லாபத்தை யோசிக்காமல் நீங்கள் எப்படி அந்தப் பெரிய நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஏற்படுத்தும் அளவுக்குத் தொடர்பு ஏற்படுத்திக்கொண்டீர்கள், இதன் பின்னணி என்ன என்று குடைச்சல் கொடுக்கத் தொடங்கியது மேலிடம்.

அப்போதுதான் இனி இங்கே பணியைத் தொடர்வதால் எனக்கு எந்தப் பலனும் ஏற்படப் போவதில்லை என்ற முடிவுக்கு வந்தேன். மேலிடத்தில் இருக்கும் ஒருவர் தன்னுடைய இருக்கையைத் தக்கவைத்துக்கொள்ள தன் தலைமையில் இயங்கும் குழு உறுப்பினர்களின் எல்லா அடிகளையும் மோப்பம் பிடித்து அது நிறுவனத்துக்கு லாபம் ஈட்டும் என்று தெரிந்தால்கூட தடுப்பது எவ்வளவு கீழ்நிலை மனப்பான்மை? கட்டுக்கோப்பாக வைத்திருக்கும் குழுவிடம் நன்மதிப்பையும் நம்பிக்கையையும் அந்தக் குழுவின் உறுப்பினர் யாருமே பெற்றுவிடக்கூடாது என்ற விசயத்தில் எவ்வளவு கவனமாக இருக்கிறார்கள் என்று யோசிக்கும்போது எனக்குச் சோர்வு ஏற்பட்டது. அதனால் மேலிடத்தின் சில செயல்பாடுகளுக்குச் சிக்கல் வருமென்ற மனோபாவம் எல்லா அதிகாரிகளுக்கும் இருக்குமோ என்று குழப்பமாக இருந்தது. முக்கியமாக மேலிடத்தின் மீது குழுவுக்கு இருக்கும் பயம் விட்டுப் போய்விடலாம் என்ற நினைப்பு இருக்கலாம். அதனால்தான் சில நல்ல திட்டங்களை முளைவிடும் முன்னர் கிள்ளியெறியும் குணத்தைப் பார்த்து எனக்குப் பாவமாக இருந்தது. இப்படி ஒவ்வொருவரையும் கண்காணித்துக்கொண்டே இருக்க வேண்டுமென்றால் சம்பந்தப்பட்டவருக்கு இரத்தத்தின் கொதிநிலை எப்படி இருக்கும், நிம்மதியான உறக்கம் வருமா?

“எடுத்துச் சென்றாலும் எந்தத் தீர்வும் கிடைக்கப் போவதில்லை. இங்கே அதிகாரம் இருக்கும் பக்கம்தான் மனிதவள மேலாளர்களும் சாய்வுகொள்கிறார்கள்.”

“எதைவைத்து அப்படிச் சொல்கின்றீர்கள்? நான் இந்தப் புகாரை மேலிடத்துக்கு அனுப்பலாமா?”

“உங்கள் இஷ்டம்.”

“உங்களுக்கான நியாயமான பதிலைப் பெற்றுத் தருவேன்.”

“ஆனால் எப்படியும் என் பணி விலகல் நிச்சயம்.”

“கொஞ்சம் கசப்பானதுதான். ஆயினும் நான் என் கடமையைச் செய்வேன்.”

இருவரும் கைகுலுக்கி விடைபெற்றோம். மனிதவள அதிகாரி காப்பிக்கு அழைத்தார். இறுக்கமான முகத்தோடு ஓர் இயந்திரம் போல அவரோடு நடந்தேன். காப்பிடேரியா அடையும் முன்னரே காபியின் மணம் ஈர்த்தது. காப்பிடேரியா, அலங்கரித்த மணப்பெண் போல பலவிதமான வண்ணத் தோரணங்கள், பலூன்கள், பல வண்ணங்களில் மின்னும் விளக்குகள் என உற்சாகமாய்ச் சுழன்று கொண்டிருந்தன. நிறுவனத்தில் யாரோ ஒருவருக்கு இன்று மாலை பிறந்த நாள் கொண்டாட்டம். மொத்த நிறுவனமும் கூடிக் கொண்டாடும், கேக் விநியோகம் நடக்கும். ஆனால் ஒருவர்கூட பிறந்தநாள் வாழ்த்தை மனப்பூர்வமாகச் சொல்ல மாட்டார்கள். மென்மையான கை கொடுப்பு, உதடுகூட பிரியாமல் முணுமுணுக்கும் வாழ்த்தொலி என எல்லாமும் கடனே என்று இயங்கும் இந்தக் கொண்டாட்டங்கள் எத்தனை போலித்தனமானவை?

நாளையோடு இந்த நிறுவனத்தின் போலித்தனம் எதையும் சகிக்க வேண்டியதில்லை என்று நினைக்கும்போது மூளையில் ரத்த ஓட்டம் உற்சாமாய்ப் பாய்ந்தது. ஆனால் மனமெல்லாம் அடர் இருண்மை. காப்பிடேரியாவின் உணவுப்பண்டங்களைக் கொறித்தபடிக் குழுக்குழுவாய்ச் சக பணியாளர்கள் உற்சாகமாக எதையெதையோ பேசிக்கொண்டிருந்தார்கள். என் காதுகளில் அது மாபெரும் இரைச்சலாகக் கேட்டது. அந்த இடத்துக்குப் பொருந்தாமல் இருந்த தொட்டிச் செடிகளும் அதில் மலர்ந்திருந்த பூக்களும் என்னைப் போலவே குழம்பியிருப்பதைப் போலிருந்தன. காப்பியைக் குடித்துக் கொண்டிருக்கும்போதே மனிதவள அதிகாரி யாரையோ அழைத்துப் பேசினார். என்னிடம் வந்து அவசர வேலை இருப்பதாகவும் அதற்காக மன்னிக்கவேண்டும் என்றும் சொல்லிவிட்டுக் கிளம்பினார். நானும் பாதி காப்பிக்கு மேல் குடிக்க மனமின்றி அதனைக் கீழே கொட்டிவிட்டு எனது இருக்கையை நோக்கி நகர்ந்தேன். அவர் செயற்கை ஒளியூட்டப்பட்ட இன்னொரு கண்ணாடி அறையில் அவசரமாக நுழையும்போது அவரது துப்பட்டா கதவுகளுக்கு வெளியே மாட்டிக் கொண்டது. கதவைச் சிறிது திறந்து அவர் துப்பட்டாவை உள்ளே இழுக்கும் நொடி நேரத்து உரையாடலில் என்னுடைய நேர்காணல் சார்ந்த விவாதம் நடந்துகொண்டிருப்பதை ஊகிக்க முடிந்தது. என் இருக்கையை அடைந்து, கிளம்பும்வரை என்ன செய்வது என்று யோசித்துக்கொண்டிருந்தேன்.

வீடடைந்த பின்னும் இன்று நடந்த பேச்சுவார்த்தை மனத்திலிருந்து நீங்கவில்லை. அது கிளறிவிட்ட பழைய நினைவுகள் இன்னுமின்னும் சோர்வூட்டின. வரதனின் பதவியை ஒப்பிட்டால் என் நிலை மிகவும் குறைவானது. எனக்கு அவர் ஏன் இவ்வளவு தொந்தரவுகளைத் தரவேண்டும்? மனம் ஒருநிலைப்படாமல் தவித்தது. எவ்வளவு நல்ல வேலை? இவர் பொருட்டு நான் இப்படி ஒரு முடிவெடுக்க வேண்டியிருந்தது. எப்படியோ இதிலிருந்து வெளியேற வேண்டிய கட்டம் வந்துவிட்டது கொஞ்சம் ஆசுவாசமாகவும் தோன்றியது. ஒருவேளை நான் இந்த முடிவை நோக்கி நகர வேண்டும் என்றுதான் வரதன் தனது காய்களை நகர்த்தினாரா? என்ன நடந்தென்ன, நாளை பணி விலக இருக்கும் இந்த நேரத்தில் எதற்குத் தேவையற்ற குழப்பம்? வீட்டுக்கு எதிரே இருக்கும் பெரிய வேப்பமரம் தன்பாட்டுக்கு அசைந்து கொண்டிருந்தது. அங்கிருந்து கிளம்பிவரும் தென்றலால் கூட தவித்துப் பாயும் என் நினைவுகளைச் சமாதானம் செய்ய முடியவில்லை. வேப்ப முத்துக்கள் அழகான மணிகள்போல அசைந்துகொண்டிருந்தன. குயில் ஒன்று எங்கோ மறைந்திருந்து குரல் கொடுத்தது. நானும் ராஜினாமா என்ற போர்வைக்குள் ஒளிந்துகொண்டுதானே இப்போது குரல் எழுப்பியிருக்கிறேன். எனக்குப் பதவிமீதான பயம் இதுவரை துரத்திக்கொண்டிருந்தது. ஆனால் குயிலுக்கு யார்மீது பயம்? சை . . . இந்த நினைவுகள் . . . எதை நினைத்தாலும் இறுதியில் இந்தப் பிரச்சினைக்குள்ளேயே வந்து முடிக்கிறேன் என்று எல்லோரும் சொல்வதைப்போல எனக்கு ஆழ்மனப் பிரச்சினைகள் வந்துவிட்டனவா?

மாலை இறங்கி இரவு எட்டிப்பார்த்தது. இரவு உணவு தயாரித்துக்கொண்டிருந்தேன். அலுவலகத்திலிருந்து அழைப்பு வந்தது, என்னுடன் உடனடியாக பேச வேண்டும் என்று மனிதவள துறையின் உயர் அதிகாரி அழைத்திருந்தார். “நாளை பேசலாமே” என்று பதில் சொன்னபோது கைப்பேசித் திரையில் அவர் முகம் கொஞ்சம் வாட்டமடைந்தது. “உங்கள் புகார்களைப் பார்த்தேன். இதுவரை வரதன் மீதிருந்த எல்லா நல் பிம்பங்களையும் நீங்கள் கொடுத்திருக்கும் தகவல் உடைக்கிறது. நீங்கள் சொன்னது சரிதான். அவர் இதுவரை பணிபுரிந்த அனைத்து அலுவலகங்களிலிருந்தும் மனிதவள நடவடிக்கையினால் துரத்தப்பட்டிருக்கிறார். அவர் மிக அருமையாகத் திட்டமிடுபவர், அதனை அருமையாகத் நிறைவேற்றுவார் என்று பெரிய நம்பிக்கை இருந்தது. ஆனால் அவருக்கு இப்படி ஒரு முகம் இருப்பது இன்றுதான் தெரியவருகிறது. நீங்கள் சொன்னபடிப் பணிச் சலுகை, பணி உயர்வு பெற்றோர் பட்டியலையும் ஆராய்ந்தேன். நீங்கள் சொல்லும் விஷயங்களில் உண்மை இருப்பதுபோலவே தோன்றுகிறது. இது மிகவும் ஆபத்தானது. அதனால்தான் நான் உடனடியாக அழைத்தேன்” என்று அதிக பதற்றத்தோடு பேசினார். இதனை உடனே சரி செய்ய வேண்டும் என்றும் சொன்னார். “உங்களுக்கு உதவ நினைக்கிறோம். ஆனால் ஒரே ஒரு கேள்வி, நியாயமாகப் பார்த்தால் நீங்கள் உங்கள் மேலாளர்மீதுதானே இந்தப் புகார்களை அடுக்க வேண்டும். எதற்காகத் தலைமை அதிகாரி மீது புகார் செய்கின்றீர்கள்” என்றும் கேட்டார்.

“நமக்கு நன்மை செய்ய வேண்டியவர் எதற்கோ பயந்து நம்மைக் கைவிடுகிறார் என்றால் என்ன செய்ய வேண்டும்?” என்றேன்.

“புரியவில்லையே. நினைத்ததைவிடச் சிக்கலாகத் தோன்றுகிறதே. வரதனுக்கு உங்களிடம் என்னதான் பிரச்சினை?”

“அதை நீங்கள்தான் கண்டுபிடிக்க வேண்டும்.”

லாவண்யா சுந்தரராஜன்

லாவண்யா சுந்தரராஜன், அறிதலின் தீ, நீர்கோல வாழ்வை நச்சி, இரவைப் பருகும் பறவை, புறாக்களை எனக்குப் படிப்பதில்லை புத்தகங்களின் ஆசிரியர். கவிதைகள் சிறுகதைகள் தொடர்ச்சியாக எழுதிவருகிறார். சிற்றில் இலக்கிய குழுமத்தின் முதன்மையான ஒருங்கிணைப்பாளர்.

1 Comment

  1. லாவண்யா குறிப்பிடும் ஒவ்வொரு வார்த்தையும் அட்சரலட்சம் பெறும். எனது நிறுவனத்தில் இதேபோன்ற அநீதியை நான் சந்தித்திருக்கிறேன். ஓரளவுக்குமேல் மனிதவளத்துறையால் கீழ்மட்ட ஊழியர்களுக்கு உதவமுடிவதில்லை என்பதோடு, சிஇஓ -வுக்கு எதிராகச் சிறுவிரலையும் நீட்ட அத் துறையினர் துணிவு கொள்வதில்லை என்பதும் நிரூபிக்கப்பட்ட உண்மையாகும்.

உரையாடலுக்கு

Your email address will not be published.