லாவண்யா சுந்தரராஜன் கவிதைகள்

பட்டாம்பிக்கு செல்லும் போது

மங்களாதேவியின் மூக்குத்தி ஒளியை
தன்னோடு பொத்தி எடுத்துக்கொண்டு
விடியலில் ஓடத்தொடங்கிறது பரசுராம் விரைவுவண்டி
இரா பொழுதுக்கு முன்னர் அவ்வொளியை
கன்னியாகுமரியின் மூக்குத்தியில் சேர்க்க

பட்டாம்பிக்கு தன் கவிதைகளையும்
தீராத உரையாடல்களையும் எடுத்துக் கொண்டு
செல்லும் ஒருத்தி
வைகாசி பௌர்ணமியன்று பயணம் போனாள்

மழை வேண்டி முகத்தை ஜன்னலில் தேய்த்தவள்
வடகரைக்கு வண்டி சேரும் முன்
பொழிந்த மழையை
ஜன்னலுக்கு வெளியே நிறுத்தி
கண்ணாடி திரை வழி
மழையும் பதுமையும் கூடிக்களிக்கும் காட்சியை
கண்டு ரசித்தாள்

தாளாத பசுமையூடே நின்றதிருந்தது
யாருமற்ற சிவப்பு குதிரை
அது பக்கவாட்டில் சாய்ந்து நின்றிருந்த கோலம்
காட்டிக்கொடுத்தது அதில் பயணித்தவன்
யாரோ ஒருத்தியின் அசைந்த கை
கோதிய கூந்தலழகுக்கு
தாவி ரயிலேறி இருக்க கூடும்

நான் பார்க்கிறேன்
சொல்கிறேன்
ஏ சிவப்பு குதிரையே!
நீ தனியாகத் தவித்து நிற்கிறாய்,
நான் உன் மேல் ஏறி உன் விரட்டி செலுத்தவோ
அதில் ஏறி வந்த கண்காண அற்புத ராஜகுமாரனவன்
பின்னால் அமர்ந்து செல்லவோ முடியாது,
நான் பட்டாம்பி செல்கிறேன்
சிலர் அங்கே எனக்காகக் காத்திருக்கின்றார்கள்.

வெற்றுப்படகு

ஓடும் நதியில்
தினம் தண்ணீர் அள்ள
தன் குடத்தோடு
இருமுறை வருவாள் அவள்

அவள் காலையில் வரும்போது
அங்கே ஒரு ஞானி மின்னும்
கண்களோடு
“இன்று நிச்சயம் வரும்”
என்பார்

சாயங்காலம் அவள் நீரள்ள வரும் போது
“இன்று போய்விட்டது நாளை நிச்சயம் வரும்” என்பார் அந் ஞானி
அப்போது அவர் கண்கள் மட்டுமல்ல
முழு முகமும் நிலவு போலவே ஜோலிக்கும்

“அய்யா தினம்
இன்று வரும் நாளை வரும் என்கின்றீர்களே
என்ன வரும்?”

“முற்றிலும் காற்றால் மட்டுமே நிரம்பிய
எனக்கான படகு விரைவில் வரும்
அதன் படகோட்டி நான்
அது என்னைத் தேடிக் கொண்டிருக்கிறது”

தலைக்காவேரி கவிதைகள்

தலைக்காவேரிக்கு மழையோடு செல்வது
நீராலானவள் நீரை திறந்து
நீரால் நிறப்புவது போலன்றோ

காவேரி மங்கை மனம் நிறைய மலர் தூவ நினைத்தேன்
அது சுமை என்றாள்
அவள் மேனியை மறைக்கப் புத்தம் புது பட்டாடை எடுத்துச் சென்றேன்
என் மேனியின் பொட்டு பகுதியை மறைக்குமா இது என்றாள்
காசு தூவி வரவா என்றேன்
எனக்கேது செலவு என்றாள்

நடந்த வழியில் பொழிந்த மாமழையை
குடை கம்பிகளில் சேகரித்து
சுனையாய் பொங்குபவளிடம் சேர்த்தேன்
சிலர்ந்து மகிழ்ந்து மணம் பொங்கினாள்
அப்படியொரு நறுமணம்
இதுவரை அந்த நல்மணத்தை
எங்கே ஒளித்து வைத்திருந்தது
காவிரியின் உடல்?

லாவண்யா சுந்தரராஜன்

லாவண்யா சுந்தரராஜன், அறிதலின் தீ, நீர்கோல வாழ்வை நச்சி, இரவைப் பருகும் பறவை, புறாக்களை எனக்குப் படிப்பதில்லை புத்தகங்களின் ஆசிரியர். கவிதைகள் சிறுகதைகள் தொடர்ச்சியாக எழுதிவருகிறார். சிற்றில் இலக்கிய குழுமத்தின் முதன்மையான ஒருங்கிணைப்பாளர்.

4 Comments

  1. மழையோடு செல்வது
    நீராலானவள் நீரை திறந்து
    நீரால் நிறப்புவது சிறப்பான கவிதை நன்றியுடன்

  2. அருமை. . முற்றிலும் காற்றால் மட்டுமே நிரம்பிய
    எனக்கான படகு விரைவில் வரும்
    அதன் படகோட்டி நான்
    அது என்னைத் தேடிக் கொண்டிருக்கிறது”

    • மிகச் சிறப்பாக உள்ளது.. மூன்று கவிதைகளும்,ஒவ்வொரு விதமான மன நுட்பங்கள்.

  3. தாளாத பசுமையூடே நின்றதிருந்தது
    யாருமற்ற சிவப்பு குதிரை
    அது பக்கவாட்டில் சாய்ந்து நின்றிருந்த கோலம்
    காட்டிக்கொடுத்தது அதில் பயணித்தவன்
    யாரோ ஒருத்தியின் அசைந்த கை
    கோதிய கூந்தலழகுக்கு
    தாவி ரயிலேறி இருக்க கூடும்!

உரையாடலுக்கு

Your email address will not be published.