வெட்கம் கெட்ட தாமரைகள்
கிடைத்த பள்ளத்தில்
மல்லாந்து கிடந்தது குளம்
சற்றுமுன் பொழிந்த மழைக்கு
பூரித்து சிரித்தன
வெட்கம் கெட்ட தாமரைகள்
என்றோ பெய்த மழைக்கு
நெடுநெடுவென்று வளர்ந்திருந்த பனை
மழை நினைவில்
ஊற்று ஒன்றைத் தேடி
உச்சியில் கசிந்து கொண்டிருந்தது
இரண்டு காட்சியையும் கண்டு கடந்த ரயில் பெட்டியொன்று
தன் கதவை திறந்து திறந்து மூடுகிது
ஒவ்வொரு முறை கதவு திறக்கும் போது
உள்ளிருந்து யாரோ ஒருத்தி
பைத்தியம் பிடித்து வெளியில் குதித்து ஓடுகிறாள்
பெய்யாத மழையை தேடி
துரத்தும் வெளிச்சம்
கருப்பு குகை வீட்டின்
விதானம்
பதினாறு துளை சாளரம்
வெளிச்சக் கீற்றுகளை அனுப்பி அழைத்தது
அதை நோக்கி
அடியடியாய் ஊர்ந்து நகர்ந்து
ஒரு நாள் அடைந்தேன்
அம் மாபெரும் ஒளி வெளியை
எங்கும் பிரகாசம்
பசிய மஞ்சள் கிழங்கின் நிறத்திலொரு பிளாஸ்டிக் வாளி
அதன் கருப்பு கைப்பிடி வளைவுகளில்
பவளமல்லிகளென பூத்திருந்தது
பகலில் ஒளிரும் விளக்குகள்
இருளின் துகள் எதனையும் காணவேயில்லை
இத்தனை வெளிச்சத்தை
என்னால் தாங்க முடியவில்லை
கண்கள் குருடாகி விட
கறுத்த மெலிந்த உடலை
குறுக்கிக் அசைந்தேன்
வந்த வாசல் தேடினேன்
கருணைகொண்டுஅவள்
தண்ணீரால் என்னை
முழுக்காட்டினாள்
அந் நீரோடு வெளியேறினேன்
பாதாள இருளுக்கு
காமம்
தீக்குச்சியின் கந்தகத் தலை
எத்தனை வேகமாய் பற்றுகிறதோ
எவ்வளவு சீக்கிரம் பந்தாய்க் கனல்கிறதோ
அதே தீவிரத்தோடு
தன் தீத்தலையை இழக்கவும் செய்கிறது
சிறிதே கவனம் குறைந்தாலும்
நம் கைவிரல்களையும் பதம் பார்க்கிறது
அந்த மீச்சிறு தீப்பந்து
எஞ்சுவதோ
முனையில் கருமை பூசிய
மரகுச்சி மட்டுமே
லாவண்யா சுந்தரராஜன்
லாவண்யா சுந்தரராஜன், அறிதலின் தீ, நீர்கோல வாழ்வை நச்சி, இரவைப் பருகும் பறவை, புறாக்களை எனக்குப் படிப்பதில்லை புத்தகங்களின் ஆசிரியர். கவிதைகள் சிறுகதைகள் தொடர்ச்சியாக எழுதிவருகிறார். சிற்றில் இலக்கிய குழுமத்தின் முதன்மை ஒருங்கிணைப்பாளர்.