/

ஒருமுறை செய்யவேண்டிய போர்: ச.பாலமுருகன்

அகரன்

அம்மம்மாவைப் பார்த்து பதினாறு  ஆண்டுகள் கடந்து போய்விட்டது. என் சிறு வயதுகளின் பறக்கும் தட்டு அவரின் சேலைத் தலைப்புத்தான்.  போர்வையாகவும் , வங்கியாகவும் ,  பாதுகாப்பு அரணாகவும் என் சிறு பியாயத்தை நிறைத்தது.  அம்மாவின் பாவாடை என்ற அ.மு இன் சிறுகதையயை படிக்கும் போதெல்லாம் அம்மம்மா என் கண் முன் வந்து நிற்பார். அவரிடம் பெரிய கதைகள் கேட்கும் காலத்தில் அவரைவிட்டு, இலங்கையை விட்டு வெகு தூரம் வந்து விட்டேன். இன்றும் யுத்தம் தின்று மீதி விட்ட சுவர்களை வீடாக்கி வாழ்ந்து வருகிறார்.

அண்மையில் கொற்றவை, சலாம் அலைக், டைகரிஸ் என்ற மூன்று வகையான நாவல்களை தொடர்ந்து படிக்க வாய்ப்பு வந்து சேர்ந்திருந்தது. டைகறிஸ் படித்ததும் அதில் இருந்து மனதை மீட்டெடுக்க முடியாது தவிக்கும் நிலைக்கு ஆளானேன். ஈழத்தில் போரில் எரிந்த சகபாடிகளும், ஊர் இழந்த என் மனிதர்களும் என  டைகரிஸ்  தன் அத்தியாயங்கள் எங்கும் ஈழ யுத்தத்தின் சத்தங்களை  மீட்டி என் இரவுகளைத் தின்றது.  வரலாற்று போர்ப்புனைவான இந்த நாவல் தமிழின் உலகப் புனைவாக வைக்கப்படக்கூடிய போர் நாவல் என்று என்னுள் அகம் பேசிக்கொண்டே இருந்தது.

1914- 1918 நடந்த உலக யுத்தத்திற்கு ஆங்கிலேயர்களுக்காக அவர்களின் ஆளுகைக்குள் இருந்த பல தேசத்தவர்கள் பட்டாளத்திற்காக திரட்டப்பட்டு தூர தேசங்களில் யுத்தம் புரிந்தனர். அவர்களில் தமிழ் நாட்டில் இருந்து சென்ற வில்லியம் என்ற இளைஞனை மையம் கொண்டு நகரும் கதை.

டைகறிஸ் நதியோரம் நடக்கும் யுத்தமும் வெற்றியும்,தோல்வியும்,அழிவும்,பசியும், ஒட்டமான் பேரரசின் கைதியாவதும், ஆர்மீனிய இன அழிப்பின் காட்சிகளுமென மனிதச்சேற்றில் மானிடத்தின் தோல்வியை நாவல் வலைவீசிக்காட்டுகிறது.  போர் எவ்வளவு கோரமானது என்பதை நாவல் சதைகளின் துண்டுகளால் எழுதிச்செல்கிறது.

போரை எழுதிய தமிழ் பதிவுகளாக 1985 இல் ஈழத்தில் எழுதப்பட்ட ‘விடியலுக்கு முந்திய மரணங்கள்’ ‘போருலா’ ‘அப்பால் ஓர் நிலம்’ என்பன போன்ற பதிவுகளே உள்ளன. போருக்கு அருகே நிகழும் கதைகள் அதிகமாக உள்ளன. ( நஞ்சுண்டகாடு, இச்சா, கொரில்லா, ம், பார்த்தீனியம், ஆறாவடு,…)

ஆனால் டைகறிஸ் நூறு ஆண்டுகளுக்கு முன் நடந்த உலக யுத்தத்தை கண்முன் முழுமையாகக் காட்டும் போர்பற்றிய முழுமையான நாவல் என்று துணிந்து கூறலாம்.

ஈழ யுத்தத்தில் ஈடுபட்ட பலர் இன்று உலகமெங்கும் இருந்தாலும். அதன் நேரடிப் பதிவுகளோ, நாவலாகவோ அதிகம் வெளிவராமல் இருப்பது தோல்வியின் வெறுப்பாகவும், இரகசியங்களை காக்கும் ‘நினைப்பாகவும்’ இருக்கலாம். வரலாற்றுக்கு இந்த யுத்தத்தின் இலக்கிய சாட்சியங்கள் கிடைக்காமல் போகும் அபாயம் ‘நினைப்புகளால்’ நிகழ வாய்ப்புண்டு.

‘டைகறிஸ்’ ச. பாலமுருகன் எழுதிய நாவல் என்பதில் வியப்பேதும் இல்லை. சோளகர் தொட்டி’ என்ற நாவலை வாசித்த எவராலும் மறந்துவிட முடியாது. அந்த நாவல் வெளியாகி  பதினேழு ஆண்டுகள் கடந்த பின்னர் 2021 இல் எதிர் வெளியீடாக வந்தடைந்த நாவல் டைகரிஸ்

நாவலைப் படித்துவிட்டு அம்மம்மாவிடம் ஒளிபேசியில் பேசினேன். அவர் இரண்டாம் உலகப்போர்காலத்தில் சிறுமியாக இருந்தவர். ஈழப்போரின் மொத்த நாட்களிலும் அருகில் வாழ்ந்தவர். நான்கு இராணுவங்களை எதிர்கொண்டவர். இரண்டாம் உலகப்போர் நடந்தபோது திருகோணமலையில் யப்பான் போட்ட குண்டுபற்றியும், பட்டாளத்துக்கு ஆட்களைத் பிடிக்க பிரிட்டிஷார் ஆபிரிக்க வீரர்களுடன் திரிந்தது பற்றியும், ஆண்கள் தங்களை காக்க ஓடி ஒழிந்தது பற்றியும் தன் சேலைத் தலைப்பில் ஒழித்து வைத்த கதைகளை கூறி எவ்வளவு காவு கொடுத்திட்டம் என்று பெருமூச்சு விட்டார். அந்த மூச்சு என் முகத்தில் அறைந்து இருட்டாக்கியது. நாம் மௌனமானோம்.

அதன்பின் ச.பாலமுருகனுடன் பேசவேண்டும் போல் இருந்தது. எப்படி முடியும்? எழுத்தாளர்களுடன் பேசுவதில் தயக்கம் இருக்கும். சரியான நேரம் பதில் வராது. முறையாகப் பேசவேண்டும்.நீ யார்?என்றால் என்னிடம் பதில் இல்லை. இப்படியான நடுக்கத்துடன் ச.பாலமுருகனை மின் கடிதம் மூலம் தொடர்பு கொண்டேன். அவர் எழுத்தாளர் மட்டும் இல்லை என்பதை அவருடனான உரையாடல்கள் உறுதிப்படுத்திற்று. நல்ல உரையாடல்களை எல்லோரும் படிக்கலாம். நீங்கள் அங்குதான் வந்திருக்கிறீர்கள். இங்கிருந்து நீங்களும் தொடரலாம்.

-அகரன்-

நீங்கள் மனித உரிமைப் போராளி, சட்டவாளர், எழுத்தாளர். இவற்றில் எதில் மனம் நிறைகிறது ?

 சட்டவாளர் (வழக்குரைஞர்,) மனித உரிமை செயல்பாட்டாளர் என்பது பொதுவில் பார்க்கும்போது வெவ்வேறு திசைகளில் பணிப்பதாக தெரியலாம். ஆனால் அவைகள் என்னையும் என் எழுத்தையும் பொருத்தி இனைந்து செயற்படுகிறது. எழுதும் எண்ணம் நான் சட்டக்கல்லூரியில் படிக்கும் காலத்திலிருந்து இருந்தது. எனது முதல் சிறுகதை நான் சட்டக்கல்லூரி மாணவனாய் இருந்த போது சாவி இதழில் வெளியானது. பொதுவாக ஆழ்ந்து வாசிக்கும் போது அந்த வாசிப்புக்கான எதிர்வினையே  சிலருக்கு எழுத்து. கல்லூரியில் நான் பல அரசியல் போக்குகளை உள்வாங்கும் சூழலில் இருந்தேன்.  பொதுவுடமைத் தத்துவம் ஈர்த்தது. அந்த தேடல் இறுதியில் நான் மனித உரிமை செயல்பாடுகளில் என்னை நிலைநிறுத்திக் கொள்ளும் நிலைக்கு வந்தது. பின்னர் மனித உரிமை சார்ந்த களப்பணிகளில், தொடர்ச்சியாக எழுதவேண்டிய அவசியமும் எழுந்தது. அது போலத்தான் வீரப்பன் தேடுதல் வேட்டையில் பாதிக்கப்பட்ட மக்களின் பாதிப்புக்களை தடுக்கவும், அவர்களின்  நியாயங்களைப் பேசவும் தொடர்ந்து பழங்குடி மக்களுடன் என்னைப்போன்ற கருத்துள்ளவர்களுடன் சேர்ந்து நீதிமன்றம், மக்கள் மன்றம், மனித உரிமை ஆணையம், அதற்காக அமைக்கப்பட்ட விசாரனை ஆணையம் என தொடர்ந்து இயங்கிய போது, அம்மக்களின் கதைகள் என்னை இடைவிடாது துன்புறுத்தியது. அவற்றை நான் மட்டுமே சொல்ல முடியும். நான்தான் அவர்களுக்கு மிக அண்மையில் இருந்தேன் எனக் கருதினேன். அதன் தொடர்ச்சியாக நான் ‘சோளகர் தொட்டி’ நாவலை எழுதினேன். அது துயரமான அனுபவம். நான் சுமந்த துயரை வாசகரின் முன் இறக்கி வைக்க  சுமைதாங்கிக் கல்லாய் எழுத்து அமைந்தது, அதை எழுதும் அச்சமின்மையை வழக்குரைஞர் பணி வழங்கியது. அந்த களத்திற்குள் வழி நடத்தியது எனது மனித உரிமை செயற்பாடு. ஆக நான் எல்லா நிலைகளிலும் இவற்றால் பயன் பெறுகின்றேன். ஆனால் எழுத்து உங்களையும் என்னையும் இணைக்கின்றது.  நம்மைக் காலங்களை கடந்து உயிர்ப்புடன் வைக்கின்றது. அது கூடுதல் சிறப்பானது.

‘சோழகர் தொட்டிஎன்ற மிருதுவான (எளிய) மக்களின் வாழ்க்கையை நாவலாக்கி 17 ஆண்டுகள் கடந்த பின்பு ‘டைகரிஸ்’ என்ற நாவலை எழுதியிருக்கிறீர்கள். யாரும் எழுதாத இடத்தில் உங்கள் எழுத்து இருக்க வேண்டும் என்று திட்டமிடுகிறீர்களா ?

‘சோளகர் தொட்டி’ எழுதியதன்  பின்னர் அது எங்களின் கோரிக்கைய தொடர்ந்து 
பேசியது. அதன் பின்னர் ஏனோ எழுதியாக வேண்டும் என்ற உணர்வு எனக்குள் எழவில்லை. அதற்கு ‘சோளகர் தொட்டி’ போன்ற வலி மிக்க எழுத்தை எழுதியது காரணமாக இருக்கலாம். என்னை இடையூறு  செய்யாத ஒரு களத்தை வலிந்து எழுதுவதை ஏனோ தவிர்த்தேன். ஒரு  வகையில் அது சரியான பார்வையில்லாமல் கூட இருக்கலாம். அதன் 
பின்னணியில்  நாவல் போன்ற 
பெரிய படைப்புக்கள் வரவில்லை. ஆனால் சிறுகதைகள், கட்டுரைகள் என எழுதினேன்.  

‘பெருங்காற்று’ என்ற சிறுகதை தொகுப்பு வந்தது. எனது எழுத்துக்கள் 
குறிப்பிட்ட  நில எல்லைகளைத் தாண்டிச் சென்றது. அந்த தொகுப்பில்  
அகதியாய் தமிழகம் வந்து முகாமில் மகனைப் பிரிந்து வாழும்  ஒரு தாய், பஞ்சாப் மாநிலத்தில் தனது  தொலைந்து போன மகனை தேடும் மற்ரொரு தாய், அதே போன்று காஷ்மீரில் அரச படைகளால்  காணாமல் போகச்செய்த மகனை தேடும் – தேயும், மனைவியும் என பல முகங்களை நான் கடந்தேன். அந்த முகங்களில் ஒரு 
ஒற்றுமையினைக்  கண்டேன். அரச வன்முறையால் உறவை பறிகொடுத்த அவர்கள் 
உலகமெங்கும் ஒரே முகசாடையில் , ஒரே மொழியில் பேசுவதாக 
கருதினேன். அவர்களின் குரலை உரக்க பேசுபவன் நான் என என் 
எழுத்துக்கள் நினைத்துக்கொள்கின்றன. எனவே பல சமயம் அது வேறு 
கதைகளைப் பேச மனமகிழ்வோடு முன் வருவதில்லை. ஆனால் இவை  
இயல்பாக அமைவது. வழிந்து திட்டமிடப்பட்டதல்ல. இது போன்ற 
பின்னணியில்தான் சோளகர் தொட்டிக்கு பின் 17 ஆண்டுகள் எழுத 
முடியாமல் போனது. ஆனால் இந்த  நீண்ட இடைவெளி எனக்கும் வருத்தமானதே. மன்னித்துக்கொள்ளுங்கள்.

 ஆனால்  ‘டைகரிஸ்’ நாவலின் மூலம் எனது நீண்ட இடைவெளியினை நான் ஏதோ ஒரு வகையில் நிரப்பி உள்ளதாக கருதுகிறேன்.  எழுத்து ஒரு புதிய வாழ்வியல்  அனுபவத்தை ஒரு சமூகத்திற்கு தரவேண்டிய அவசியம்  உள்ளது.  அது சவாலாக இருந்தாலும் இன்றைய நவீன தொழில்நுட்பம் நிறைந்த உலகில் அவற்றை  சாத்தியமாக்க வாய்ப்பு உள்ளது. நான் திட்டமிடாமலே எனது கதைக்களம் தமிழ் இலக்கிய சூழலில் புதிய ஒன்றாய் அமைந்து விடுகிறது. அந்த களம் எழுத தூண்டுகிறது

ஏன் நாவல் எனும் இலக்கிய வடிவை தேர்ந்தெடுத்தீர்கள்?

நாவல் அல்லது சிறுகதை என்ற வடிவத்தை கதையின் களம் தீர்மானிக்கின்றது.  ஒரு நெடுங்கதையினை முழுதாக சொல்ல நாவல் என்ற வடிவம் ஏற்பானது.  அது பலரின் வாழ்வியல் அனுபவத்தை சொல்ல உதவும். மேலும் கதையின்  காலம் என்பது மிக முக்கியமானது அதனை காட்சிப் படுத்த நாவல் ஒரு நல்ல வடிவமாக எனக்கு தோன்றுகிறது. எனது சில சிறுகதைகள் நான் நாவலாக மாற்றியிருந்திருக்க வேண்டும் என கருதுவதுண்டு. ஆனால்  சிறுகதையோ  அல்லது நாவலையோ  வாசகர் முடிக்க கூடாது என கருதும்  போது முடிந்து விடவேண்டும். மீதி கதைகள் வாசகர்களின் மனங்களுக்கானது. அவர்களிடம் விட்டுவிடுவது சிறப்பானது.

‘டைகரிஸ்’ தமிழில் எழுதப்பட்ட முழுமையான போர் நாவல் என்று கூற முடியுமா ?

வாசகர்களே இதற்கான பதிலை சொல்லக் கூடும். ஆனால் உலக போர்கள் என்பது உலகின் ஒரு மூலையில் அய்ரோப்பியர்கள், ஆங்கிலேயர்கள் நடத்திய யுத்தம் என்ற புரிதல்தான் பொது புத்தியில் திணிக்கப்பட்டுள்ளது. ஆங்கிலேயர்கள் மற்றும் ஏகாதிபத்தியம் இதனை தொடர்ந்து ஏதோ ஒரு வகையில் கலை வடிவங்களில்  அந்த கருத்தை மறு உருவாக்கம் செய்கின்றது.  நாவலின் முன்னுரையில் இதை குறிப்பிட்டுள்ளேன். முதல் உலகப்போர் என்ற பெரும் போரில் சுமார் பதிமூன்று இலட்சம் பேர்  முந்தைய ஒன்று பட்ட பிரிட்டிஷ் இந்தியாவிலிருந்து (பாக்கிஸ்தான், பங்களாதேஷ், இலங்கை, பர்மா) போருக்கு சென்றனர். அவர்கள் பிரான்ஸ், பெல்ஜியம், மெசபடோமியா (ஈராக்) எகிப்து, கல்லிபோலி, பாலஸ்தீனம்  என பல பகுதிகளில்  போரிட்டனர்.  முடிவில் அவர்களில் 74187 படைவீரர்கள் மரணமடைந்ததாகவும் பலர் காணாமல் போனதாகவும் அரசாங்கம் குறிப்பிட்டது. போரில் காணாமல் போனவர்களைப் பற்றி பெரிய குறிப்புகள் இல்லை. அவர்கள் தங்களுக்கு சொந்தமில்லாத ஒரு அந்நிய மண்ணில் விழுந்து மடிந்தனர். அவர்களில் பெரும்பாலானவர்களின் கல்லறைகளோ புதை மேடுகளோ எவருக்கும் தெரியாது. கல்லறைகளைக் கண்டு மறு புதைப்புச் செய்ய குழுக்கள் அமைக்கப்பட்டது. அதில்கூட நமது நிலங்களிலிருந்து சென்றவர்கள்  அடையாளம் பெரிதும் காணப்படவில்லை. போருக்கு, அன்றே 834 கோடி பணம்  ஒன்றுபட்ட இந்திய நாடு  வழங்கியது. 170000 கால்நடைகள் போருக்கு அனுப்பப்பட்டது. இந்த பங்களிப்பால் பிரிட்டன் வென்றது. ஆனால் அது உறுதி கொடுத்தது போல சுயராஜ்ஜியம் வழங்கவில்லை. மாறாக பயங்கரவாத தடுப்பு சட்டமான ‘ரெளலட்’ சட்டத்தைக் கொண்டு வந்தது. அதன் பின் பஞ்சாப் ‘ஜாலியன் வாலாபாக்’ படுகொலை நிகழ்த்தியது. பெரும் நம்பிக்கைத் துரோகத்தை நமது மக்கள் எதிர் கொண்டனர். இந்த போரில் பங்கெடுத்த ஒருவரான எனது தாயாரின் சின்ன பாட்டனாரின் குறிப்புகள் என்னை அந்தக் களத்தில் கொண்டு போய் நிறுத்தியது.  இந்த நாவல் அந்த போரின் எல்லா பரிமாணங்களையும், துயரங்களையும் பரந்து பேசுவதாகக் கருதுகிறேன்.   தமிழ் என்ற எல்லைக்கு அப்பாலும் பன்னாட்டு அளவில் அந்த மெசபடோமியா பகுதியில் நடந்த அன்றைய போர் குறித்து இதுவே விரிவான இலக்கியச் சாட்சியாகக் இருக்கக்கூடும்.

ஆர்மீனிய படுகொலைகள் குறித்து?

சுமார் நூறு ஆண்டுகளுக்கு முன்பு ஆர்மீனியர்களுக்கு நிகழ்ந்த அநீதி ஈழத்தில் நடந்ததாகவே பார்க்கிறேன். மனிதர்களை கொல்வது இனப்படுகொலையின் இறுதி கட்டம். ஆனால் இனத்தின் அடையாளங்களை அழிப்பதன் மூலம் எப்போதோ அது தொடங்கி  விடுகிறது. ஆர்மீனிய  பெண்களுக்கும்,குழந்தைகளுக்கும் நிகழ்ந்த அநீதிக்கு டைக்ரிஸ் நதி மெளனசாட்சி.  மானுட வரலாற்றில் துயரம் மிகுந்த பகுதி அது. ஆர்மீனியப் படுகொலைக்கான உரிய நீதி கிடைத்திருக்குமேயானால் இருபத்தி ஐந்து ஆண்டுகளுக்கு பின் இரண்டாம் உலகப்போரில் யூதர்களின் படுகொலை தடுக்கப்பட்டிருக்கும். அந்த படுகொலை படிப்பினைகளை உலகம் உணர்வுப்பூர்வமாக உள் வாங்கி இருந்திருந்தால் ஈழத்தமிழரின் அழிப்பு தடுக்கப்பட்டிருக்கலாம். எங்கு நிகழ்ந்த அநீதிக்கு  நீதி மறுக்கப்படுகின்றதோ அல்லது நீர்த்துபோக செய்யப்படுகின்றதோ அப்போது உலகின் ஒரு மூலையில் மீண்டும் ஒரு இன அழிப்பு எதிர்கொள்ள எதிர்காலத்தில் தயாராகிறது என்று பொருள். நீதி இல்லாமல் அமைதி ஒரு போதும் எழுவதில்லை.

உங்கள் பாட்டனார் பிரிட்டிஷ் அரசுக்கு எழுதிய கடிதங்கள் நாவலை எழுதத் தூண்டியது என்றீர்கள். எவ்வளவு காலம் இந்த நாவலுக்காக உழைத்தீர்கள் அந்த அனுபவங்களை பகிருங்கள்.

எனது தாயாரின் சின்ன  பாட்டனாரின் குறிப்புகள் அவருக்கு அந்த போரிலிருந்து திரும்பிய பின்னர்  அவருக்கு ஓய்வூதியம் மற்றும் சலுகைகள் கிடைக்காமல் போனதற்காக எழுதப்பட்டது. அந்தக் கடிதங்களுக்கு அரசு கொடுத்த பதில் அறிவிப்புகளில்  சில அசல் ஆவணங்கள் சிலவற்றை அலுவலகத்தில் தேடிக்கொண்டிருப்பதாகவும் அவைகள் கிடைத்ததும் பரிசீலிப்பதாக இருந்தது. ஆனால் பிரிட்டிஸ் அரசாங்கம் பின் இந்திய அரசாங்கம் என  தனது 82 ஆம் வயதுவரை அவர் தொடர்ந்து சுமார் ஜம்பதாண்டு காலம் தனக்கு அரசாங்கம்  முதல் உலக போரில் பங்கெடுத்ததற்கு உரிய அங்கீகாரம் தரும் என நம்பியே வாழ்ந்திருந்தார். இந்த கடிதங்கள் என்னை அவர் போரில் பங்கெடுத்ததாகச் சொன்ன  மெசபடோமியா யுத்தம், ‘குட்’ நகரப்போர் போன்றவற்றை அறிந்து கொள்ள வழிகாட்டியது. ஒரு அறையில் நுழைய சாவி தேவைப்படுவது போன்ற சாவிதான் அந்தக் குறிப்புகள். அதன் பின்னர் அந்த போர் தொடர்பான தொடர் வாசிப்பு மற்றும், களத்தில் நின்றவர்களின் குறிப்புகள்,  தொடர் ஆய்வுகள்,ஆவணக் காப்பக ஆய்வுகள், பல்கலைக்கழக ஆய்வுகள் என தொடர் செயற்பாடு அனைத்தும் எனக்குள் சென்ற அது குறித்த ஆய்வு வேறு ஒன்றாக  காட்சிதந்தது. பின் எனது நாவல் என்பது 1914 முதல் 1918 வரை நான்கு ஆண்டு கால வரையறை கொண்டது மட்டும் என முடிவு செய்தேன். முடிந்தவரை அந்த அசல் களத்தை வாசகருக்கு காட்சி படுத்த முயன்றேன். போர் வெறும் குண்டுகள், சாவுகள் மட்டுமல்ல. எல்லா இடங்களிலும் மனிதர்கள் இருக்கின்றனர். அவர்கள் சக போர் வீரர்களாக இருக்கலாம், எதிரிகளாக இருக்கலாம். கிராமவாசிகளாக இருக்கலாம், வழிப்போர்க்கர்கள், இறந்தவர்கள், கால்நடைகள் என எல்லாவற்றையும் கொண்டது போர். அதனை பன்முகதன்மையோடு காட்சிப்படுத்த விரும்பினேன்.  போர் சூழல் பன்முகதன்மை கொண்ட நுட்பமான அரசியலைக் கொண்டது.

தகவல்கள் நாவலை நகர்த்தியதா? நாவல் தகவல்களை தேடியதா?

 நாவலுக்கான களம், அதன் வரலற்றுக் களம், அதனை முழுதாக உணர மேற்கொள்ளும் வாசிப்பும், ஆய்வுகளும் துவக்கத்தில் நாவலுக்கான ஒரு ஒழுங்கற்ற பாதையை அமைக்கும். ஆனால்  அந்த பாதையில் பயணிக்கத் துவங்கிய உடன் நாவல் அதற்கான தேவைகளுக்கேற்ப செயற்படத் துவங்கும். நாம் துவக்கத்தில் நினைத்த பலவற்றை எழுத்து நிராகரித்து விடும்.  எழுதுபவனை எழுத்து இயக்கும்… அந்த நிலை வந்துவிட்டால் நாவல் கரை சேர்ந்துவிடும். இது எழுத்துக்கும் எழுத்தாளனுக்கும் இடையே நடக்கும் ஒரு தனியுரிமை (privacy)  சார்ந்த தனித்த அனுபவம். 

போர் நடைபெற்ற பகுதிகளையும் தரைத் தோற்றங்களையும் அக்கால ஆயுதங்களையும் மனிதர்களையும் மிக நெருக்கமாக எழுதியுள்ளீர்கள் அந்த இடங்களுக்கு நிஜமாகவே பயணம் செய்திருக்கிறீர்களா ?

ஆய்வுப் பயணம் இருந்தது. நேரடிப் பயணம் செய்யும் நிலை சாத்தியமல்ல.  ஏனெனில் இன்றைய ஈராக்கின் முழுப்பகுதி, சிரியா, துருக்கியின் ஒரு பகுதி என பரந்த நிலப்பரப்பில் நாவல் பயணிக்கின்றது. தொடர் ‘மெய்நிகர்’ பயணம் இருந்தது, ஆனால் நேரிடை பயணங்களை விட ‘மெய்நிகர்’ பயணம் அந்த பகுதிகளை மிக நெருக்கமாக்கியது.  அது இன்றைய நவீன  தொழில் நுட்பத்தால் சாத்தியமானது. அந்த  போர்  அரசின் சில விசாரணைகளின் மூலம் ஆவணப்படுத்தப்பட்ட ஒன்றுதான். ஆனால் அந்த ஆவணங்களைக் காண்பதற்கு தொடர் உழைப்பும் அதனூடான ஆய்வும் அவசியமாகின்றது.. அந்த நிலப்பரப்பை நுட்பமாக கவனிக்க வேண்டிய சவால் எனக்கு இருந்தது. இது போன்ற ஆய்வுகள் தொடர்புடைய படைப்புகளில் சிறிய தவறுகள் கூட படைப்பைச் சிறுமை படுத்த பயன்படும் என்பதால் எச்சரிக்கையும் கூர் நோக்கும் தேவைப்பட்டது. இந்த நாவல் வெளிவந்த பின் ஈராக்கில் செஞ்சிலுவை சங்கத்தில் பணி புரிந்து கொண்டிருக்கும் ‘மோகன சுந்தரம்’ என்ற நண்பர் என்னை அழைத்தார். அவர் ஈராக்கின் மொசூல் நகரில் பணி புரிந்து வருகின்றார். அய்.எஸ்.அய்.எஸ் அமைப்பினர் வசம் இருந்து மொசூல் மீட்ட பின்பு அங்கு சிதைக்கப்பட்ட கட்டுமானங்கள், குடிநீர் இணைப்புக்களை செஞ்சிலுவை சங்கம் புனரமைப்பு செய்து வருகிறது. தினமும் அவர் டைகரிஸ் நதியை கடந்து பணிக்கு செல்வதாகவும் அந்த நதியை கடக்கும் போது இந்த நாவலின் நினைவு வருவதாகவும். நான் நாவலில் குறிப்பிட்ட நிலவியல் சார்ந்த தரவுகள் சரியாக உள்ளதாகவும் குறிப்பிட்டு கூறினார். உண்மையில் களத்தில் நின்று கூறும் கூற்று  எனக்கு அது  பெரிய விருதுக்கு நிகரான அங்கீகாரம் எனக் கருதினேன். நான் சரியாகவே பயணித்ததாக நம்புகிறேன். இரண்டு ஆண்டுகள் முழு நேரத்தையும் நாவல் எடுத்துக்கொண்டது.

நாவலில் போர் பற்றிய காட்சிகள் யுத்தத்தில் நாம் இருக்கும் உணர்வைத் தந்தது. குறிப்பாக எம்டன் கப்பலின் வீர விளையாட்டும் -வீழ்ச்சியும் செறிந்த தகவல்களுடன் இருந்தது. எம்டன் கப்பலோடு திரு செம்பகராமனுக்கு தொடர்பு இருந்த தகவல் ஏதும் உங்களிடம் உண்டா ?

எம்டன் கப்பல்  22 செப்டம்பர் 1914 ஆண்டு இரவில் சென்னையின் மீது குண்டு வீசியது. அது தமிழ் சமூகத்தில் ஆழமாக பாதித்த ஒன்று. பெரும் அச்சுறுத்தலை தந்த நிகழ்வும் கூட. நமது சொல்லாடலில் எம்டன் நிரந்தரமாக தங்கி விட்டது.  ஆனால் அதனை தாண்டி எம்டன் கப்பல் வங்காளா விரிகுடா தாண்டி இந்துமகா பெருங்கடல் முழுதும் அதன் ஆதிக்கத்தை செலுத்தி அச்சுறுத்தியது. முதல் உலகப்போரில் அது தவிர்க்க முடியாத அடையாளம். ஆனால் அந்த கப்பலில் செம்பகராமன் இருந்ததாக சொல்வதற்கான தரவுகள் நான் அறிந்தவரை இல்லை.  சில நாட்களில்  அந்த கப்பலில் இருந்தவர்கள் ஒரு பகுதியினர் கொல்லப்பட்டனர். எஞ்சியவர்கள் கைதாகினர்.  

‘டைகரிஸ்’ நாவல் கட்டமைப்பு ஓர் முழுமையான நீண்ட திரைப்படத்துக்குரிய அம்சங்களோடு இருக்கிறது. தமிழ் திரை உலகு அதற்கான தகுதியோடு இருக்கிறதா ? அப்படி இந்த நாவலை திரைப்படமாக எடுக்க தகுதியானவர் என நீங்கள் கருதுவது யார் ?

தங்களின் கருத்து எனக்கு மகிழ்வாக உள்ளது. நாவல் என்பது பரந்த நிலப்பரப்பில் பயணிக்கின்றது. போரில் அந்தக் களத்தில் இருந்தவர்கள்  ஒரு சிலர் மட்டுமே தமிழர்கள். மலையாளி, மராட்டி, வங்காளி என பல தேசிய அடையாளம் கொண்ட மனிதர்கள் ஒரு சேர நண்பர்களாக பயணித்துள்ளனர். அதையும் தாண்டி பிரிட்டிஷ், பிரான்ஸ், ஆஸ்திரேலிய, நியூசிலாந்து என பல நாட்டுப் போர் வீரர்கள் இருந்தனர். நிகழ்வு நடக்கும் ஈராக்கியர்கள், அவர்களில் குர்து பழங்குடிகள், சிரியா, துருக்கி, ஆப்பிரிக்க மக்கள் என்பவர்களும் உண்டு. மேலும் பெரும் துயரங்களை சுமந்த ஆர்மீனிய பெண்கள், குழந்தைகள் என பெருங் கூட்டம் உண்டு. இவை அனைத்தும் சாத்தியப்படுவதற்கு  திரைப்படமும் நாவலை முழுமையாகக் காட்சிப் படுத்தும் என கருதுகிறேன். நாவல் தமிழகத்திலிருந்து போருக்கு சென்ற ஒரு இளைஞனை தொடர்ந்து பயணிக்கின்றது என்பதை தாண்டி அது பன்னாட்டு பண்பாட்டுத் தன்மையை உள்ளடக்கியதாக இருக்கின்றது.

ஒன்றாக போர் செய்பவர்கள் வீழ்ந்த போது வேறு வேறாக வெள்ளையர் கருப்பர் என்று புதைக்கப்பட்ட நிலை பற்றி….

போர் கைதிகளாக பிடிக்கப்பட்டு துருக்கி முகாமில் இருந்த நிலையில் பிரிட்டிஷ் இந்தியாவிலிருந்து சென்ற கைதிகளைப் பற்றி காலணிய அரசு பெரிதான கரிசனம் கொள்ளவில்லை. ஆனால் பிரிட்டிஷ், ஆஸ்திரேலிய, நியூசிலாந்து கைதிகள் அவர்களின் அரசுகளால் உதவிகள் முலம் சற்று மேம்பட்ட நிலையில் இருந்தது. பாகுபாடு குறித்த அந்த மனக்குறை மனிதர்களுக்கு வருவது இயல்புதான். சமமாக நடத்தப்பட வேண்டும் என எல்லா மனிதர்களும் எதிர்பார்க்கவே செய்வர்.

எனது நண்பர் ஒருவர் ஒரு மொழிபெயர்ப்பு நாவல் படிப்பது போல் இருக்கிறது என்றார். படித்து முடித்ததும் வியப்புடன் பேசினார். உங்கள் கருத்து?

தமிழ் மொழி ஒவ்வொரு பகுதியிலும் அதன் வட்டாரத் தன்மை கொண்டிருக்கின்றது. உரையாடல்கள் அந்த நிலப்பகுதியினை காட்சிப்படுத்துகின்றன. எனது ‘சோளகர் தொட்டி’ நாவலின் கதை மாந்தர்களான  பழங்குடி மக்கள் சோளகர் பழங்குடி மொழியை பேசுபவர்கள்  அவர்களிடம் தமிழ் வட்டாரம் சார்ந்த மொழியை ஏற்றுவது முறையற்றது. எனவே மொழிபெயர்ப்பு போன்று வட்டாரம் சாராத  தமிழ் உரையாடலை எழுத வேண்டி இருந்தது. வாசகர்கள் அவர்கள் சோளகர் மொழியை தாய்மொழியாய் கொண்டவர்கள் என்பதை உணரவேண்டியது அவசியம். அதே நிலைதான் டைகரிஸ் நாவலிலும் பல்வேறு மொழிசார்ந்த போர் வீரர்களிடம் உரையாடல் நடக்கின்றது. அதிகாரிகள் ஆங்கிலேயர்கள். கிராம மக்கள் அரேபியர்கள். கைது செய்து அழைத்து செல்பவன் துருக்கியன்.  கூடவே கதை களமும் நமக்கு சோவியத் இலக்கியம் போன்று போர் சார்ந்தது. இவை அனைத்தும் சேர்ந்து அது போன்ற ஒரு அனுபவத்தை கொடுத்திருக்கும்.

போர் வாழ்வை அனுபவித்த ஈழத்தவர்களிடம் இருந்து கூட இப்படிப்பட்ட முழுமையான போர் நாவல் வராததை எப்படி பார்க்கிறீர்கள் ?

போர் கொடுமையானது. போர் பற்றிய கனவுகள் கூட தவிர்க்கப்பட வேண்டியதே. எனவே போரின் கோரத்தை எதிர்கொண்ட மனிதர்கள் அதனை எழுதாமல் போவதற்கு அந்த எழுத்து தரும் வலி ஒரு வகையில் காரணமாக இருக்கலாம். சித்தைரவதைக்கு உள்ளானவன் பல நாள் கழித்து அதனை நினைக்கும் போது ஒரு கணம் அந்த வலியை உணர்ந்து கடப்பது நிகழும். வாழ்நாள் எல்லாம் அந்த வலி அவர்களுக்குள் இருக்கும். களத்தில் நின்றவர்கள்  முடிந்தால் நினைவுகள் பதிவு செய்யலாம். வெளியே நிற்கும் ஒருவர் அதனை இலக்கியமாகக் கூட மாற்றலாம். எல்லாம் ஒரே சமயத்திலோ அல்லது உடனடியாகவோ நடக்க வேண்டியதில்லை. ஈழத்தமிழர்கள் தங்களின் அடுத்த தலைமுறைக்கு அதனை சொல்லுவார்கள் என்றே கருதுகிறேன்.

காத்திரமான இரு நாவல்களை எழுதினாலும் அவை பற்றி அலட்டிக் கொள்வதில்லை. இலக்கிய நிகழ்வுகளில் பங்கு பெற்றதில்லை. போராட்டத் தளங்களில் நிற்கிறீர்கள். உங்கள் மனநிலையை சொல்லுங்கள்.

 இலக்கிய  நிகழ்வுகளில் பங்கெடுக்ககூடாது என்ற பிடிவாதம் எதுவுமில்லை.  குறைவாக பங்கெடுத்துள்ளேன். ஆனால் எனது செயற்பாடுகள் உரிமை சார்ந்த செயற்பாட்டு  அரங்கில்  கூடுதலாக இருக்கின்றது. நான் எனக்குள் இருந்த ஒரு கதையை வாசகனிடம் பகிர்கின்றேன். எழுதுவதற்காக அலட்டிக்கொள்வது அபத்தமானது. ஒரு படைப்பு வாசகனின் உள்ளத்தை தொடும்போது அதன் உயிர்ப்பு அதிகரித்துக்கொண்டே இருக்கின்றது. எழுதுபவனுக்கு மரியாதை மற்றும் அங்கீகாரத்தை தருகின்றது. அதற்காக எழுதுபவன் எல்லாம் தெரிந்த மனிதன் என கருதவேண்டியதில்லை. அவனுக்கு தெரியாத பல உலகம் உண்டு. எல்லாவற்றுக்குமான பதில்  ஒரு எழுத்தாளனிடம் இருக்கும் என கருதுவதே ஒரு வகையில் அறியாமை. அது  வாசகனுக்கு மட்டுமல்ல எழுத்தாளனுக்கும் சேர்த்தே. எனவே எளிமையாக இருப்பது சிறந்தது. படைப்புகளில் படைப்பாளி பேசுவது மற்றவற்றை விடச் சிறந்தது.

மற்றொரு படைப்புக்கு 17 வருடம் காத்திருக்க வேண்டுமா ?

அதற்காக நான்  முன்பே வருந்திவிட்டேன். மீண்டும்  அந்த 17 ஆண்டு மெளனம் என்ற தவறைச் செய்யக் கூடாது என்பதில் உறுதியாக உள்ளேன். ஆனால் ஒரு நாவலை முடித்த பின்பு  பல்வேறு கதாபாத்திரங்களால் ஆன அந்த விந்தை உலகத்திலிருந்து வெளியேறி அந்த களத்தையும், அதன் வெளியையும்  மறக்க கொஞ்சம் இடைவெளி எடுப்பது தேவையாக உள்ளது. நாம் நிச்சயம் மற்றொரு கதைக் களத்தில் சந்திப்போம்.  

உங்கள் அனைவருக்கும் நன்றி!

*

2023 தை மாதம் சென்னையில் சர்வதேச புத்தகக் கண்காட்சி நடைபெற்றது. அதன் கொண்டாட்டத்தை தூர இருந்து பார்த்தபோது வெஃகாமையாக இருந்தது. ஒவ்வொரு எழுத்தாளரும் பிரேரிக்கும் புத்தகங்களை வலை ஒளியில் பார்த்துக்கொண்டு இருந்தேன். ஒருவர் வாயில் இருந்தும் ‘டைகரிஸ்’  என்ற பெயர் வரவில்லை. 2021 வெளியான டைகரிஸ் யார் கண்ணிலும் படவில்லை.  போர் நாவலைப் படித்தால் போருக்கு போகவேண்டும் என்று பயந்திருக்கலாம். இது படிப்பதன் மூலம் செய்யவேண்டிய போர்.

அகரன்

பிரான்ஸில் வசித்துவரும் எழுத்தாளர். அரசியல் தத்துவ இறுக்கமில்லாத, அழகியல் கற்பனைத் திறன்கொண்ட படைப்பிலக்கியவாதியாக விமர்சகர்களால் மதிப்பிடப்படுகிறார்.

1 Comment

உரையாடலுக்கு

Your email address will not be published.