சூப்புக்குள் நட்சத்திரங்களை வீழ்த்தியவன் : அகரன்

‘ஒந்துவான் து சோன் எக்சுபெரி காணாமல் போய் எண்பது ஆண்டுகள்’ என்று தலைப்பிடப்பட்ட பிரெஞ்சு கட்டுரை Antoine masset என்பவரால் எழுதப்பட்டு LH என்ற மின்னிதழில் வந்திருந்தது. அதை படிக்க ஆரம்பித்தால், இடையில் முழுவதும் படிக்க மறித்துப் பணம் கேட்டார்கள். அதை கட்டுவதற்கான வேலைகளில் ஈடுபட்டிருந்தபோது ஊரில் இருந்து அழைப்பு வந்தது. அந்தக் குரலில் அலைச்சல் தெரிந்தது. தன்னம்பிக்கையும் , உழைப்பும் கூடிய அந்தப் பெண்ணின் மொழி கரைந்து கொண்டிருந்தது. வைத்திய சாலையில் இருந்து அவர் பேசினார். அவரை நீண்ட காலமாக எனக்குத் தெரியும்.

தனது இருபது வயதில் கணவன் கடலில் காணாமல் போய்விட இரண்டு பிள்ளைகளுக்காக தன் வாழ்வை ஒப்புக்கொடுத்தவர். காணாமல் போன தன் கணவன் மீண்டும் வருவான் என்ற மாய நம்பிக்கையில் வாழ்பவர்.  இரண்டு பிள்ளைகளுடன் சேர்த்து தனது சித்தியுடன் இலங்கையில் வாழ்கிறார். அவரது சித்திக்கும் கணவர் இல்லை. இருவரும் தனிமை, முதுமையின் கைகளில் அவர்கள் நசிந்தபடி வாழ்கிறார்கள்.

திடீரென தனக்கு ஏற்பட்ட உடல் செயல் இழப்பை ‘நான் இறந்தால் எவற்றை செய்யவேண்டும் என்று தன் சித்திக்கு சொல்லிவிட்டு தானே வைத்தியசாலை சென்றிருக்கிறார். அங்கு  வைத்தியர் ‘உங்கள் கணவன் எங்கே?’ என்றபோது தனது கண்ணில் தண்ணீர் வந்தது. ‘என்னை தனியே விட்டு விட்டு போய்விட்டீர்களே.. நான்படும் பாட்டை பாருங்கள் என்று அழுதேன்’ என்று அவர் சொன்ன வார்த்தை என்னை அறுத்துச்சென்றது.  

உலகின் மகத்தான படைப்பு ‘குட்டி இளவரசன்’. இதுவரை 300 மில்லியனுக்கும் அதிகமான பிரதிகள் விற்றிருக்கிறது.  253 மொழிகளில் வெளியான ஒரே படைப்பு.  மத நூல்களை தவிர்த்து உலகில் அதிகம் வாசிக்கப்பட்ட இந்த நூலை எழுதிய எக்சுபெரி அடுத்த ஆண்டே ஜேர்மனால் கைப்பற்றப்பட்டிருந்த தனது தாயகமான பிரான்ஸ் வானத்தில் அமெரிக்க தயாரிப்பான P-38 விமானத்தில் பறந்து கொண்டிருந்தபோது 31/07/1944  காலை 11 மணிக்கு காணாமல் போனார்.

சொன்-எக்சுபெரி காணாமல் போய் ஒருவருடம் கழித்து, எந்தத் தகவலும் இல்லாமல் அவரது தாயார் 1945 ஏப்ரலில் எழுதிய கவிதை காணாமல் போனவர்கள் பற்றிய சர்வதேச தாய்மையின் வரிகள்.

எங்கெல்லாம் தேடுகிறேன் என் குழந்தையை ?

அவனை இந்த உலகுக்கு அளித்த நாளன்று நான் கத்தி இருக்கிறேன்.

அவனைப்பற்றி தகவல் ஏதுமின்றி, கல்லறை கூட இல்லாமல் அழுது கொண்டிருக்கிறேன்.

அவனோ, அளவுகடந்த ஒளிப்பசியினால் மேல்நோக்கி பயணித்து விட்டான்.

நட்சத்திர மண்டல யாத்திரீகனாய்,

விண்வெளியின் யாத்திரீகனாய்,

ஆண்டவரின் ஜோதியை அடைந்திருப்பானோ?

ஆ, அது மட்டும் தெரிந்தால் போதும்.

முகத்திரைக்குள் என் அழுகை குறையும்.

சொன்-எக்சுபரி 44 ஆண்டுகளே வாழ்ந்தவர். தனது வாழ்நாளில் அவர் மாபெரும் வெற்றிபெற்ற எழுத்தாளர், பிரான்சின் முன்னோடி விமானி, விமானப்பாதைகளை கண்டுபிடிக்கும் தற்கொலைப் பயணங்களை மேற்கொண்டவர், மிகச்சிறந்த கடட்டுரையாளர் மற்றும் பத்திரிகையாளர். 1935 இல் சோவியத் யூனியன் புரட்சி வெற்றி விழா கொண்டாடிய போது அங்குசென்று செய்தியாளராக கடமையாற்றியவர்.  ஜோன் குலுட் என்ற வரலாறு ஆசிரியர் ‘அவர் வாழ்ந்த காலத்தில் மிகச்சிறந்த மனிதன். ஆகச் சிறந்த செயல்களின் உருவம்’ என்று வியக்கிறார்.

1900 ஆண்டு ஜுன் மாதம் 29 திகதி பிரான்சின் லியோன் என்ற நகரில் ஓர் மன்னர் வழிவந்த குடும்பத்தில் பிறந்தார். அவரின் நினைவாக இந்த வருடம் உலகெங்கும் அவர் உருவாக்கிய குட்டி இளவரசன் கொண்டாட்டங்கள் நடைபெறுகின்றன. அவர் இறுதியாக புறப்பட்ட இடமான கோர்சிகா தீவில் அவர் நினைவாக ஓலீவ் மரம் நடும்  நிகழ்வு இடம்பெற இருக்கிறது.

Interstellar Lab ஆராட்சியகமும் Starship de SpaceX விண்வெளி பறப்பகமும் இணைந்து அவர் பிறந்த நாளானா 29 ஜுன் ‘குட்டி இளவரசன் சர்வதேச நாளை’ கொண்டாடுகின்றன. 2027 நிலவில் அவர் நினைவாக ரோஜா செடி நட்டு வளர்ப்பதை அறிவித்திருக்கிறார்கள்.

வரும் 28,29 தினங்களில் அவர் பிறந்த நகரத்தில் 500 குழந்தைகள் ‘குட்டி இளவரசன்’ நூலை வாசிக்கும் விழாவை நிகழ்த்துகிறார்கள்.

வரும் இரண்டு மாதங்களுக்கு விமானிகளின் வரலாற்றில் அதிசயங்களை செய்தவர் என்ற வகையில் விண்ணியல் கண்காட்சி அமைப்பு (musée de l’air et de l’espace, au Bourge ‌‌) சொந் -எக்சுபரி பற்றிய கண்காட்சியை நடத்துகிறது. அதில் அவர் இறுதியாக பயணம் செய்த P-38 விமானத்தின் பாகங்கள் காட்சிப்படுத்தப்படுகிறது.

பிரான்சில் மட்டுமன்றி சிங்கப்பூர், சீனா , கனடா என்று உலகெங்கும் அவரை கொண்டாடுகிறது.

நாம் எதிர்கொள்ளும் காலத்தில் ஓர் எழுத்தாளருக்கு கிடைக்கும் உச்சபட்ச மரியாதைகள் இவை. அதற்கு அவரது சொற்களின் ஆகச் சிறந்த மனிதமும், இயற்கையும்‌ நிறைந்த அறத்தோடு வெளிப்பட்டதே காரணம்.

தனது 29 வது வயதில் (1929) முதல் நூலான தென்பகுதிக்கான அஞ்சல்  (Courrier Sud) வெளியானது.

இரண்டாவது நூல் ‘இரவுப் பறப்பு’ (Vol de nuit‌) இந்நூல் வெளியாகி புகழ்பெற்ற பெமினா விருதை பெற்றது. 1939 இல் ‘மனிதர்களின் ‌உலகம்’ (Teerre des hommes) வெளியானது. இந்த நூலை தென் அமெரிக்கா நோக்கி பறந்தபோது ஏற்பட்ட விபத்தில் ஓய்வில் இருந்தபோது எழுதினார். இந்த நூலே 1943 இல் குட்டி இளவரசன் என்ற அற்புத உலகை எழுத உற்றுக் கண்ணாக இருந்தது.

அதற்கிடையில் 1942 இல் ‘யுத்த விமானி’ (pilote de guerre) வெளியாகியது. இதற்கிடையில் பல தடவைகள் விமான விபத்துகளில் சிக்கினார். சகாரா பாலைவனத்தில் அவரும் இயந்திரகோளாறாகிய விமானமும் தனித்திருந்தபோது மூர் என்ற பழங்குடிகள் அவரை கடத்திச் சென்றனர். அவர்களின் சிறையில் ஒருவருட காலம் இருந்தபோது அராப் மொழியை கற்றுக்கொண்டார். பின்பு அவர்களுக்கும் பிரெஞ்சு அரசாங்கத்துகக்கும் தூதுவராகி அங்கிருந்த பல பிரெஞ்சு பிரஜைகள் விடுதலை பெற உதவினார். இதற்காக பிரெஞ்சு அரசின் ‘உயர்ந்த மனிதன்’ என்ற விருது வழங்கப்பட்டது.

சிறு வயதில் இருந்தே வானத்திலும், நட்சத்திரங்களிலும், மேகங்களின் சித்திரங்களிலும் மனதை பறிகொடுத்தார். தனது 12 வயதில் முதல் பறப்பை மேற்கொண்டது அவருக்கு பெரும் ஆர்வத்தையும் உற்சாகத்தையும் சாகச உணர்வையும் ஏற்படுத்தியது. அன்றய கால இளைஞர்களின் கனவுகளில் வானத்தில் பறத்தல் ஆபத்தான கனவாக இருந்தது. இன்றைய காலம் போல் தொழில்நுட்ப பொறிகள் இல்லாத காலம். புவி காட்டிகளோ, தொடர்பாடல் தொழில்நுட்பமோ இல்லாத நிலையில் விமானத்தை ஓட்டவேண்டும். முகில் மலைகள் மூடிவிட்டால் கீழே இறங்கி எப்போதும் தரை தெரியும்படி பார்த்துக்கொள்ளவேண்டும். இல்லாவிடில் முகில்களின் முடிவற்ற ஈர்ப்பில் புதைய நேரிடும். பறந்து கொண்டிருக்கும்போதே விமானத்தில் இருந்து தலையை வெளியே நீட்டி பார்க்கவேண்டும். காற்றும், குளிரும், வெப்பமும், தமது உயர்ந்த குணத்தை காட்டும்போது அவற்றுக்கு தாக்குப்பிடிக்க வேண்டும்.

முதல் விமானப் பறப்பதை தனியே 26 வயதில் மேற்கொள்வதற்கு முதல் நாள் ஏரோ போஸ்டல் தலைவர் திதியெ தோரா அவரை அழைத்துச்சென்று இப்படிக் கூறுகிறார் ‘’திசைமானியை பார்த்தபடி மேகங்களுக்கு மேலே விமானத்தை ஓட்டிச்செல்வது நன்றாகத்தான் இருக்கும், ஆனால் நினைவில் கொள் அதன் கீழே இருப்பது முடிவின்மை’’

ஆர்யன்ரீனாவில் ஏரோ போஸ்டல் இல் பணியாற்றிக் கொண்டிருந்தபோது ஆண்டிஸ் மலைத்தொடருக்குள் விமானத்துடன் காணாமல் போன தன்னுடைய முன்னோடியும் நண்பருமான கியூமை தேடி ஆபத்தான ஐந்து நாட்கள் மரணத்திற்க்கு இணையான பறப்பதை மேற்கொண்டவர். கியூமின் இழப்பால் அவர் இதயம் பட்ட வலிகளை Terre des hommes இல் ஓர் அத்தியாயத்தில் எழுதியுள்ளார். அன்றைய நாளில் கிட்டத்தட்ட 120 விமானிகள் காணாமல் போயும், உயிரை இழந்தும் இருந்தனர். வானை நோக்கி கிளம்பும்போதே மீண்டும் நிலத்தை தொடுவதில் நிச்சயமற்ற காலத்தில் ஓந்துவான் பறவையின் உணர்வில் பறந்த மனிதன்.

ஸ்பானிய உள்நாட்டுப்போர் தீவிரமாக இருந்த காலத்தில் பாரிஸ் – ஸ்வார் பத்திரிகையின் நிருபராக ஸ்பெயின் நாட்டுக்கு சென்றார். போரின் கொடுமைகளுக்கு இடையே போராளிகளுக்கிடையில் இருந்த தோழமை, ஒற்றுமை, கடமையுணர்வு ,அர்ப்பணிப்பை மனிதநேயத்தை கட்டுரைகளில் சித்தரித்தார். அது அவரினுள் இருந்த குணங்களின் வடிவமாகவே வெளிவந்தது. அப்போது அவர் தங்கியிருந்த விடுதியில் மற்றொரு அமெரிக்க எழுத்தாளர்‌ இதளாளராக செயற்பட்டுக்கொண்டிருந்தார் அவர்தான் பின்பு நோபல் பரிசை வென்ற எர்னெஸ்ட் ஹெமிங்வே.

சொன் – எக்சுபெரி தனது நாற்பதாவது வயது நெருங்கிய போது முழுவதுமாக இலக்கியத்துறையில் இயங்கவேண்டும் என்ற மன உந்துதலில் இருந்தார். அவரின் தத்துவமும் ‌உலகுபற்றியபார்வையையும் தனது அனுபவத்தில் உருவாக்கியவர். அத்தகைய உந்துதலில் இருந்தபோது இரண்டாம் உலகப்போர் கட்டுக்கடங்காத அழிவுகளையும், வெறுப்பையும் பூமியில் நிறைத்தபடி இருந்தது.

தனது இறுதி விமானப்பறப்புக்கு முந்தய தினம் அன்றய தற்காலிக பிரெஞ்சு தகவல் துறை அமைச்சராக இருந்த ஜெனரல் ஷாம்புக்கு அவர் எழுதி அனுப்பப்படாமல் இருந்த கடிதம் பின்பு வெளியாகியது. ‘இன்றைய தலைமுறையின் இன்னல்களில் இருந்து நான் ஒதுங்கி இருக்க முடியாது. போரில் ஈடுபடும் விமான சாகசங்களில் இருந்து மன நிறைவை தேட முடியாது. மனிதத்தன்மை ஏதுமின்றி வெறுமையாகிவிட்ட இன்றைய தலைமுறை எனக்கு ஆழ்ந்த வருத்தமளிக்கிறது. ஜெனரல் அவர்களே ! இன்று இருப்பது ஒரே பிரச்சினைதான் மனிதர்களுக்கு ஆன்மீக அர்த்தத்தை, அக்கறையை திரும்பத் தரவேண்டும். குளிர்சாதனப்பெட்டியும், அரசியலும், குறுக்கெழுத்துப்போட்டிகளும் மட்டுமே வாழ்க்கை அல்ல ; கவிதையும் , வண்ணங்களும் , நேசமும் இல்லாமல் மனிதன் வாழமுடியாது…’’ என்ற அவர் வரிகள் அவர் மனம் முழு உலகையும் பற்றுதலோடு எப்படி கட்டி அணைக்கிறது என்பதை காட்டுகிறது.

‘’கண் பார்வையில் இருந்து கடற்கரை மறைவதைப் பார்க்க தைரியம் இல்லாதவர்களால் புதிய கடல்களை கண்டுபிடிக்க முடியாது’’ என்று எழுதிய  1947 நோபல் பரிசை வென்ற எழுதத்தாளர்  André Gide,  இவரின் கவித்துவமும் ஆன்மாவும் நிறைந்த வரிகளில் நனைந்தவர். எக்சுபெரி பற்றி கூறும்போது ‘’சாகசச்செயல்களின் மூலம் சில மனிதர்கள் தங்களை அறிந்து கொள்வதிலும், இனம் கண்டு கொள்வதிலும் வெற்றி பெறுகிறார்கள்’ என்றார்.

பிரபல பிரெஞ்சு கவிஞர் Paul Claude, ‘’ கவித்துவமான பிரஞ்சு மொழியின் சிகரமாக இருக்கிறது இவரது உரைநடை’’ என்றார். இவருடைய நண்பர் Leon–poul Farge, ‘நாங்கள் குடிக்கும் சூப்பில் நட்சத்திரங்களை விழச்செய்கிறீர்கள்’ என்றார்.

1944 ஜுலை 31 காலை 8 மணி25 நிமிடத்தில் கோர்சிகா தீவில் இருந்து கிட்லரின் படையெடுப்பில் ஆக்கிரமிகக்ப்பட்டிருந்த தனது பிறந்த நகரமான லியோனை நோக்கிய இரகசிய பறப்பை அன்றய நவீன விமானமான P-38 இல் மேற்கொண்டார். காலை 11 மணி 15 நிமிடத்தின் பின்பு P-38 இருந்து எந்த தகவலும் வரவில்லை. மூன்று நாட்களின் பின்பு ஓந்துவான் து சொன்-  எக்சுபெரி காணாமல் போய்விட்டதை உறுதிப்படுத்தினார்கள்.

குட்டி இளவரசனை நினைத்து உலகம் நீண்ட காலம் ஏங்கிய படி இருந்தது. 07/09/1998 இல் பிரான்சின் தென் கடற்கரை நகரைச் சேர்ந்த Jean Claude Bianco என்ற மீனவரின் வலையில் ஓர் காப்பு சிக்கியது. அதை அவர் சுத்தப்படுத்தியபோது பித்தளை தகட்டில் எழுதி இருந்த எக்சுபெரியின் பெயரை கண்டதும் அவரது உடல் சிலிர்த்தது. அவர் அரசுக்கு கொடுத்த தகவலின் படி மீண்டும் நவீன முறையில் கடலில் தேடல் நடைபெற்றது. அதில் தோல்விதான் கிடைத்து. எக்சுபெரியின் எழுத்துக்களில் கவரப்பட்ட சுழியோடிகளின் தொடர் போராட்டத்தில் 27/08/2003 இல் எக்சுபெரி பயணித்த விமானத்தின் பாகம் ஆழ்கடலில் கண்டெடுக்கப்பட்டு அதில் பொறிக்கப்பட்ட 2734 என்ற எண் மூலம் உறுதிப்படுத்தப்பட்டது.

இந்த தேடலைத் தொடர்ந்து வரலாற்றாசிரியர்கள், ஆராய்ச்சியாளர்கள் அவருக்கு என்ன நடந்தது என்று தேடலை ஆரம்பித்தனர். அதற்கான விடையையும் பிரெஞ்சு ஆராய்ச்சி உலகம் கண்டுபிடித்து தமது பெரு மனிதனின் அர்ப்பணிப்புக்கு மரியாதை செய்தார்கள்.

அந்த ஆராய்ச்சியின் படி வட ஜேர்மனி வரலாற்றாசிரியர் Lino von gartzen, 1944 ஜீலை 31 இல் தென் பிரெஞ்சு பகுதியில் கடமையில் இருந்த Horst Rippont என்ற விமானியை கண்டுபிடித்து உண்மையை அறிந்து பிரெஞ்சு பத்திரிகையாளர் Jacques Pradel என்பவருக்கும் ஆழ்கடல் சுழியோடி  Luc vanrell ஆகியோருக்கு இறுதி நிமிடத்தில் நடந்ததை அறிவித்தார்.

‘அன்றய நாள் நேசப்படைகளின் இரகசிய விமானம் பறப்பதை அறிந்து தாக்குவதற்கு எனக்கு கட்டளை வந்திருந்தது. பிரெஞ்சு தென் வானத்தில் நான் அலைந்தேன். எந்தத் தடயமும் இல்லை. மத்திய தரைக்கடலுக்கு மேல் நான் அலைந்து கொண்டிருந்தபோது எனக்கு கீழே 3000 அடியில் ஓர் விமானம் பறந்தது. அதை கீழே பதிந்து தாக்கினேன். அது எரிந்த படி கீழே வீழ்ந்தது. அதற்குள் யார் இருக்கிறார்கள் என்று எனக்கு தெரியாது. எக்சுபெரிதான் என்று தெரிந்திருந்தால் அந்த தாக்குதலை நான் நிகழ்த்தி இருக்கமாட்டேன்’’ இந்த ஒப்புதல் வாக்குமூலம் அளித்த சில நாட்களில் Horst Rippont இறந்துபோனார்.

ஒந்துவான் து சொன் – எக்சுபெரியின் சாதனைகள் அனைத்தும் அவரின் 44 வயதில் நிகழ்த்தி முடிக்கப்பட்டது. ‘நாங்கள் எவ்வளவு மேலே பறந்தாலும் ஒரு நேர உணவுக்காக இந்த பூமிக்குத்தான் நாம் வந்தாக வேண்டும்’’ என்ற அவரின் புகழ்மிக்க வரி ஆழ்ந்த அசைவை, திறப்பை மனிதர்களிடம் நிகழ்த்த வல்லது.

எனது நண்பனின் காணாமல்போன கணவனை நினைத்து வாழும் தாய்க்கு இந்த மகத்தான சாகசன் பற்றி தொலைபேசியில் நான்‌சொல்லி இருக்கக்கூடாது. எல்லாவற்றையும் ஆழ்ந்து கேட்ட அந்தத்தாய் ‘அவருக்கு ஏதும் நடந்திருக்குமோ?’ என்றாள். அவர் காணாமல் போய் 38 வருடங்கள் கடலுக்குள் வாழமுடியாது என்று எப்படிச் சொல்வது? யுத்தமும், வெறுப்பும் அற்புதங்களை தொலைத்த படியே இருக்கிறது.

அகரன்

பிரான்ஸில் வசித்துவரும் எழுத்தாளர். அரசியல் தத்துவ இறுக்கமில்லாத, அழகியல் கற்பனைத் திறன்கொண்ட படைப்பிலக்கியவாதியாக விமர்சகர்களால் மதிப்பிடப்படுகிறார்.

2 Comments

  1. ம் நீங்கள் அந்தத் தாய்க்கு அந்த அற்புதக் காரனைப் பற்றிய கதையை சொல்லலியிருக்க கூடாதுதான்! ஆனாலும நீங்கள அந்தச் சாகசக் காரனின் அம்மாவின் கவிதையை – அவளுக்கு வாசித்துக் காட்டியிருக்கலாம் ! ஆனாலும் அவள் இதை அவள் ஏன் எழுதினாளென்று கேட்பாளே? அப்படி அவள் கேட்டால்! நீங்கள் அந்தச் சாகசக் காரனைப் பற்றி அவளுக்குச் சொல்ல வேண்டியிருக்கும்! அப்படி அவளுக்கு அவனின் கதையைச் சொல்லியது ஓரளவுக்கு சரியானதுதான்! அக் கதை அவளுக்கு ஓர் ஆறுதலாக்க்கூட இருந்திருக்கும். ஏனெனில் இந்த இயலாத நேரத்தில் இந்த மகன் எனக்காக அதன் தேடுகின்றவனைப் போல இன்னோர் அன்னையும் ஏன் உலகமும் மகத்தான தங்களது குழந்தைகளை இந்தப் பூமியிலும்,வானத்திலும்,ஏன் உயிருள்ள,உயிரற்ற எல்லாவற்றிலும் தேடிக்கொண்டே இருக்கிறார்கள்!
    அந்த சாகசக் காரனைப் பற்றி எழுதிய உங்களுக்கு எனது நன்றியும் பாராட்டுதல்களும்..
    உங்கள் எழுத்துக்கள் சிறப்பானவைதான் என்று எத்தனை முறைதான் எழுதுவது…

உரையாடலுக்கு

Your email address will not be published.