/

நிலைவிழி: அஜிதன்

இமையின் வடிவில் பிளந்திருந்த அந்த மேகம் பௌர்ணமிக்கு முந்தைய நிலவைக் கடந்து சென்றபோது ஒரு கணம் வானின் வெண்விழியொன்று அடர்காட்டை மருண்டு பார்ப்பது போலத் தோன்றி உடல் உலுக்கிக்கொண்டது. என் அறையின் கம்பிகளற்ற ஜன்னல் வழியாக விழித்து பார்த்தது அது. வனவிலங்கொன்றின் கருணையற்ற பார்வை. ஜன்னலுக்கு நேர்முன்னால் நின்றிருந்த பலா மரத்தின் இலைகள் எல்லாம் அதன் பிசுபிசுப்பை தாங்கி நின்றன, சற்றும் அசைவில்லாமல்.

நான் இங்கு வந்து மூன்று வாரங்கள் ஆகின்றன. ஆனைக்கட்டியிலிருந்து பன்னிரெண்டு கிலோமீட்டர் தொலைவில் அடர்காட்டுக்குள் அமைந்திருக்கிறது இந்த ஆயுர்வேத காப்பகம். மிகப் பழைய பிரிட்டிஷ் கட்டிடம் ஒன்றை வாங்கி இதை அமைத்திருக்கின்றனர். ஆயுர்வேத காப்பகமென்று பெயரென்றாலும் இங்கு நாங்கள் பெரும்பகுதி இறப்புக்காக காத்திருப்பவர்கள் தான். சிகிழ்ச்சை என பெரிதாக ஏதுமில்லை. வெளிநாட்டில் ’ஹாஸ்பிஸ்’ எனப்படும் இதுபோன்ற காப்பகங்கள் சாதாரணம். வருண் தான் இங்கு இதை கண்டுபிடித்தான். என்னால் இனிமேலும் வீட்டில் படுத்தபடி அதை காத்திருக்க முடியாது என அவனிடம் சொன்னேன். சந்தியாவுக்கு வெறும் ஆறு வயதுதான், ஒன்றையும் புரிந்துகொள்ளும் பக்குவம் அவளுக்கு வரவில்லை. அவளது துடிப்பை காணும் ஒவ்வொரு கணமும் என் உள்ளம் திடுக்கிட்டெழுந்து அவள் கைப்பற்றியது. மாபெரும் பள்ளத்தாக்கின் விளிம்பில் புறம்காட்டியமர்ந்து அவள் களிப்பது போலத் தோன்றியது.

வருண் ஒருமுறை அவனையும் மீறி கடும் கோபம் கொண்டான் ”நீ அழுது அழுது அவள வாழவிடாம ஆக்கிடாத திவ்யா. அவ கொழந்த. கெஞ்சி கேக்குறேன்”.

இங்கு வந்த முதல் நாள் பகலிலேயே இந்த அறையை அணுக்கமாக உணர்ந்தேன். எதிரில் தெரிந்த பலா மரத்தின் ஒரு தடித்த கிளை நேராக ஜன்னல் நோக்கி நீண்டு வந்தது, என்னை எங்கோ ரகசியமாக அழைப்பது போல. என் பார்வைக்கு நேரே அதன் அடிமரத்தில் இரு பலாக்காய்கள் தொங்கின. ஒன்று பெரியது, மற்றொன்று சின்னஞ்சிறியது. அவைதான் நானும் சந்தியாக்குட்டியும் என நினைத்துக்கொண்டேன். நல்ல மலைக்காற்றும், சிறு சிறு பறவைகளின் ஓசையும் என அன்று பகல் முழுக்க என்னை புதிதாக உணர்ந்தேன்.

வருண் மீண்டும் மீண்டும் கேட்டபடி இருந்தான் “உன்னால இங்க இருந்திர முடியுமாடீ? இல்லன்னா சொல்லு, இப்பவே போயிடலாம்.”

“இல்ல வருண், இதுதான் சரியான இடம். இங்க தான் அது நடக்கனும்னு தோணுது” நான் அவனை பார்த்து புன்னகைத்தேன்.

அவன் ஒன்றும் சொல்லாமல் என் கண்களையே பார்த்தபடி அமர்ந்திருந்தான். ஆனால் உண்மையில் எனக்கு அன்று இரவு வரும்வரை அப்படித்தான் தோன்றியது. இங்கேயே இறந்து இந்த காட்டின் ஆன்மாவுடன் கரைந்து விடலாம் என. வருண் வழக்கமாக இத்தகைய பேச்சையெல்லாம் முட்டாள்தனம் என்று சிரிப்பான். இந்த இரண்டு வருடங்களில் அவனிடம் இருந்த நகைச்சுவையும் எள்ளலும் அனைத்தையும் நான் உறிஞ்சி எடுத்துக்கொண்டேன் எனத் தோன்றும். சில சமயம் அடையாளமே தெரியாத வண்ணம் அவன் மாறிவிட்டிருந்தான். பெரும்பாலும் தாழ்ந்த குரலில் பேசினான், கண்கள் வெறிச்சோடிப் போயிருந்தன. என்னிலிருந்து அவனுக்கு சீக்கிரம் விடுதலை வேண்டும் என நான் அடிக்கடி நினைத்துக்கொள்வேன்.

வருண் விடைபெற்று சென்ற அந்த முதல்நாள் இரவு தான் நான் இத்தனிமையை முழுமையாக உணர்ந்தேன். இக்காப்பகத்தை நடுக்காட்டில் கொண்டுவந்து அமைத்தவர்கள் இங்கே பகலின் பலவித நிறங்களையும் வாசங்களையும் மட்டுமே எண்ணியிருக்க வேண்டும். இரவில் இங்கு சூழும் தனிமையைப் போல மனம் திகைக்க செய்வது ஏதுமில்லை. மாலையில் சட்டென்று கனலில் தூபம் போட்டது போல ஒவ்வொரு மரவுச்சிகளிலும் நீராவிப்புகையெழ காட்டின் ஒளி மங்கத் துவங்கும். ஒலிகள் ஒவ்வொன்றாக விடைபெற ஏழு மணிக்கெல்லாம் முற்றமைதி கவிந்து காடு நிலைக்கும். சீவிடுகளின் ஓலம் மட்டும் சுவற்றில், என் கட்டிலின் கம்பிப் பிடிகளில் என அறையெங்கும் ரீங்கரிக்க நான் ஜன்னலை பார்த்தபடி படுக்கையில் சரிந்திருப்பேன். ஏழரை மணிக்கு கடைசியாக இரவுணவு முடிந்தவுடன் காப்பகம் அடங்கிவிடும். விளக்குகள் ஒவ்வொன்றாக அணைய அனைத்தும் காட்டின் இருள் சுழிக்குள் அமிழத்துவங்கும். ஆம். இந்த காப்பகம் இக்காட்டின் பிறவிச்சுழிப்பு, அல்லது ஓர் ஆறா வடு. நிலைத்த மூச்சுடன் காட்டின் பல லட்சம் மரங்கள் இதை சூழ்ந்திருக்கின்றன, காலமற்ற ஓர் காத்திருப்பில். கம்பியில் மின்சாரம் என இங்கு அறையெங்கும் மரணம் சூழ்ந்திருப்பதாக தோன்றும், எல்லா பொருட்களின் மீதும் ஒரு படலம் போல.

ஒவ்வொரு இரவும் நான் என் மகளை எண்ணி விம்மினேன். எண்ணங்கள் எல்லாம் அவளில் சென்றே இயல்பாக படிந்தன. என் செல்லமே, என் உயிரே என இரவெல்லாம் வாய்க்குள் அரற்றினேன். அப்போது அடிவயிற்றில் ஏதோ ஒன்று பற்றி இழுப்பது போல உடல் கேவியெழும். அவளின் சிற்றுடலை தழுவிக்கொள்ள, அவள் குளிர்ந்த கன்னச்சதையை வாயால் கவ்வியெடுக்க, முகமெங்கும் முத்தம் வைத்து தலை நுகர என் உடல் துடித்தது. இருளில் சில சமயம் அவள் இருப்பை மிக அருகில் என உணர்வேன், அவளை என்னோடு சேர்த்து அணைத்துக்கொண்டு உறங்கிய எண்ணற்ற நாட்கள் உடலில் அந்நினைவை விட்டுசென்றிருந்தன. நானில்லாத ஓருலகில் எப்படி அவளால் வாழமுடியும். என் உடலின் ஒரு பகுதியல்லவா அவள். எனது நீட்சி. என் ஆன்மா.

இரவின் குளிர் கொஞ்சம் கொஞ்சமாக ஏறத் துவங்கும்போது ஒவ்வொரு நாளும் மெல்ல நினைவிழந்து உறக்கத்தில் ஆழ்ந்தேன்.

***

காலையின் முதற்குரல் எப்போதும் உற்சாகம் ஊட்டுவது. பெரும்பாலும் அது பிரேமா என்கிற எங்கள் செவிலிப் பெண்ணுடையதாக இருக்கும். அதிகாலையிலிருந்தே ஓசையில்லாமல் காப்பகத்தைத் துடைத்து பெருக்கத் துவங்கியிருக்கும் வேலைப்பெண்களிடம் பேச்சு கொடுத்தபடி நடைபாதை வழி அவள் நடந்து வருவது கேட்கும், சற்றே கீச்சுக் குரலும், சிரிப்புமாக. உண்மையில் மனிதக்குரல் போல இனியது ஏதுமில்லை. அக்கறை கொண்டது, பதிலுக்காக நிரந்தரம் எத்தனிப்பது. பிரேமா கோட்டயத்துக்காரி, அவளது குரலின் குழைவில் அப்படியே உடல்குறுக்கி படுத்துக்கொள்ளலாம் என தோன்றும். அவள் என்னை விட ஐந்தாறு வயது இளையவள். மாநிறமும், கனத்த புருவமும், சுருள்முடியும் என அழகிய பெண். அவளது மையிட்ட விரிந்த கண்களை பார்ப்பது எனக்கு பிடித்தமான ஒன்று.

”திவ்யா மேடம், எப்படி இருக்கரேங்க?” என்று பயிற்சியளிக்கப்பட்டதோ என தோன்றும் அளவுக்கு இனிமையாக கேட்டபடி அவள் அறையினுள் நுழைவாள். ஆனால் அவள் கண்களில் உண்மையான கனிவு தோன்றும். இந்த காப்பகத்தில் என்னைத்தான் அவளுக்கு மிகவும் பிடிக்கும் என நான் நினைத்துக்கொள்வேன்.

இன்று சந்தியாவும் வருணும் என்னைக் காணவருகிறார்கள் என அவளுக்கு தெரியும். அவளும் அதேபோல சற்றே கூடுதல் மகிழ்ச்சியுடன் நலம் விசாரித்தபடி அன்று அறைக்குள் நுழைந்தாள். வந்த வேகத்தில் சடசடவென ட்ரிப்ஸை மாற்றிவிட்டு, துளிகள் சொட்டும் வேகத்தை சற்று கூட்டியபடி “இன்னைக்கு வீட்டுலேருந்து வர்ராங்கல்ல மேடம்?” என்றாள் உற்சாகமாக.

”ஆமாப்பா, பிரேமா, என்னை கொஞ்சம் தொடச்சு விடறியாடா?”. நான் மெல்ல படுக்கையில் எழுந்தமர்ந்தேன்.

“ஆம் மேடம். ரெக்கார்ட் போட்டுட்டு ஒன்பதரைக்கு வரேன்”

“ம்ம்ம் சரி… என் சமத்து”

அவள் புன்னகையுடன் வெளியேறினாள். அவளது செண்டின் வாசம் மட்டும் அறையில் சற்று நேரம் தங்கிச் சுழன்றது. பலாமரம் வழக்கம் போல உற்சாகமாக காலைச் சூரியனை பிரதிபலித்து சிலிர்த்தது. தளிர்களெல்லாம் தேன்போல. அடிமரத்தில் அந்த பெரிய பலாக்காயும் இப்போது சற்று மஞ்சளடிக்க துவங்கியிருந்தது. சந்தியாவை நான் கடைசியாக கண்டு மூன்று வாரங்கள் ஆகிவிட்டன. இங்கு வந்தபிறகு வருண் மட்டுமாக ஐந்தாறு முறை வந்துசென்று விட்டான். கோவையிலிருந்து காரில் வந்துசேர எப்படியும் மூன்று மணிநேரம் ஆகிவிடுகிறது. வீட்டில் என் அம்மா உண்டென்றாலும் இன்று சந்தியாவை கிளப்பியெடுத்து கொண்டுவர அவனுக்கு மதியம் பன்னிரண்டு மணி ஆகிவிடும்.

ஒன்பதரைக்கு சரியாக பிரேமா வந்துவிட்டாள். அறைவிளக்கை போட்டுவிட்டு கதவையும் ஜன்னலையும் அடைத்து தாழிட்டாள். பின் என் காப்பக உடையை முழுமையாக கழற்றிவிட்டு ஒரு தேங்காய்ப்பூ துண்டை கிருமிநாசினி ஊற்றிய வெதுநீரில் முக்கிப்பிழிந்து துடைக்கத் துவங்கினாள். முதலில் கைகளை அழுத்தித் தேய்த்து எடுத்தாள். அதுவரை சுரணையில்லாதது போல இருந்த கைகள் சிவந்து, எறும்புகள் ஊர்வது போல தோன்றி உணர்ச்சி பெற்றன. என் உடலே வயிற்றிலும் தொடைகளிலும் எல்லாம் வெளிறிப்போயிருந்தது. அங்கங்கே தேமல்களை போல தோன்றியிருந்தது. அவ்வுடல் என்னுடையது என்றே எனக்கு பிரக்ஞை ஏற்படவில்லை. விருப்பமில்லாது அளிக்கப்பட்ட ஒன்றை போல அது என் முன் கிடந்தது. கால்களுக்கிடையே மயிர்கள் செறிந்து முளைத்து கோரமாக காட்சியளித்தது.

நான் அவள் முகத்தில் ஏதாவது அருவருப்புணர்வு தெரிகின்றதா என பார்த்தேன். கவனமில்லாத ஒரு புன்னகை மட்டுமே இருந்தது. ஏதோ தொலைதூர இசையை கேட்பது போல அவள் கண்கள் கனவிலாழ்ந்திருந்தன. எவ்வளவு அழகி! என நினைத்துக்கொண்டேன், கள்ளமற்ற இளமையும் கனிவும். இவளை மணப்பவன் எத்தனை கொடுத்துவைத்தவன். இவள் மெல்லுடலை தன்னுடன் சேர்த்து தழுவிக்கொள்பவன். நான் பார்வையை திருப்பிக்கொண்டேன். விட்டத்தின் காற்றாடிச் சுழற்சியை பார்த்திருக்க அவள் கொஞ்சம் கொஞ்சமாக என்னுடலை எனக்கு மீட்டளித்து கொண்டிருந்தாள். கடைசியாக உலர்ந்த துண்டால் உடல் முழுக்கத் துடைத்து, பவுடர் இட்டு, அவள் கொண்டு வந்திருந்த இறகு போன்ற புதிய காட்டன் துணியை உடுத்தச்செய்தாள்.

“மேடம் போதுமா?” மிக தாழ்ந்த குரலில் ஒரு ரகசியம் போல அவள் கேட்டாள்.

“ம்ம்ம்” நான் அவள் நீங்கும் முன் கையை இறுகப்பற்றி புறங்கையில் முத்தமிட்டேன்.

புன்னகையுடன் எழுந்து சென்று ஜன்னலை திறந்துவிட்டாள். காலை ஒளி பளிச்சென்று என் முகத்தில் வந்து அறைந்தது. வெட்கமின்றி மீண்டும் ஓர் அரங்குக்குள் நுழைவதைப் போல எண்ணினேன்.

***

சந்தியாவின் கிளிக்குரல் தான் முதலில் கேட்டது. ”அப்ப்பா” என்று உச்சஸ்தாயியில் அழுத்திநீட்டினாள். அந்த இழுப்பிலேயே தெரிந்தது அது நூற்றியிருபத்திரெண்டாவது முறையாக அவள் அழைப்பது என்று. அந்த அழைப்பே காப்பகத்தை சட்டென உயிரூட்டியதாக உணர்ந்தேன், பின் மதியத்தின் துயில்வெம்மையை உலுக்கிக்கொண்டு எழுந்தது அது. உடன் பிரேமாவின் குரலும் உற்சாகத்துடன் கேட்டது. அவள் அழைத்துவர வருண் சந்தியாவை கையிலேந்தி சிரித்தபடி நடைபாதையில் வருவது அறைக்கதவின் விலகல் வழியே தெரிந்தது. ஒரு கணம் உடல் சொடுக்கியெழுந்தது ஒரு ஆற்றாமை. தொண்டையில் ஏதோ ஒன்று அடைத்தது போல உணர்ந்து, அவன் முதல் பார்வையை தன்னியல்பாக தவிர்த்தேன். சிறு ஏமாற்றம் என என்னுள் நிறைந்தது அந்தக் கணம். பிரேமா அறைவாசலில் விடைபெறுவது கேட்டது.

நான் ஜன்னலையே பார்த்து படுத்திருந்தேன். அவன் காலடி சத்தம் மட்டும் நெருங்கி வந்தது. குளிர்ந்த கையை மெல்ல என் நெற்றியில் வைத்து “நல்லா ரெஸ்ட் எடுத்தியாடி?” என்றான் மென்மையாக.

நான் இயல்பான புன்னகையை தவிர்க்க எண்ணினேன். சந்தியாவின் முகத்தில் ஒரு சுழிப்பு மட்டும் நிலைத்திருந்தது. கைகளை நீட்டி அவளை வாங்கிக்கொண்டேன். கட்டியணைத்து முத்தமிட்டபோது உதட்டில் அவளது உப்புச்சுவை தங்கியது.

“என்ன வருண், பிள்ளைக்கு இப்படி வேர்த்திருக்கு? வர்ர வழியெல்லாம் ஆட்டமா?” என்றேன் என் படுக்கை துணியால் அவள் தலையை துவட்டியபடி.

“அது வேற, அம்மா கிளம்பும் போது ஆனைக்கட்டி போயி தானெ போகனும்னு எதோ சொல்றத கேட்டுட்டா. வர்ர நேரம் பூரா யானைக்குட்டி எங்கே? யானைக்குட்டி எங்கேனு ஒரே அழுகை.” வருண் சிரித்தான். வெகுநாட்களுக்கு பிறகு அவன் முகத்தின் பழைய மலர்ச்சியை நினைவுகூர்ந்தேன்.

“அப்பறம்?”

“அப்பறம் என்ன? இப்பவும் அதான் கேட்டுட்டிருக்கா, எப்ப ஆனக்குட்டி காட்டப்போறனு. வர வழில இங்க கிட்ட எதோ புலிய பாத்தாளாம். நான் சொன்னேன் அது எதாவது காட்டுப்பூனையா இருக்கும் பாப்பானு”

“அது புலிதான்” என்றாள் சந்தியா புருவங்களை நெரித்து தீர்க்கமாக.

“நீ சொல்லுடா, புலி என்ன பண்ணுச்சு” என்று அவளை நெஞ்சோடு அணைத்து கொண்டேன்.

“ஒரு பெரிய மஞ்சக்கலர் பூ வச்சி விளையாடிட்டு இருந்துச்சு” என்றாள் கண்கள் விரிய. தீவிரமாக எதாவது சொல்லும்போது அவளது சிறுவிரல்கள் முறுக்கி வளைந்துக்கொள்ளும்.

”அப்பிடியாடா செல்லக்குட்டீ” என அவள் காது மடல்களை கடித்தேன். வாயில் எச்சிலூற என் உள்ளம் பொங்கி பொங்கி அமைந்தது. அவள் தலையை அருகில் பற்றி நெடுமூச்சுகள் எடுத்தேன். என் உயிர் என் உயிர் என்றது மனம்.

கொஞ்ச நேரத்திலேயே சந்தியாவுக்கு அறைப்பேச்சு சலித்துவிட்டது. ஜன்னலருகே சென்று பலாமரத்தை எட்டிப்பார்த்தாள். ”அம்மா, அங்க பாரு, ஒரு பலாப்பழம் பழுத்துருக்கு…” என்றபடி ஓடி வந்து கட்டிலுக்கு தாவினாள். பின் பாய்ந்து எழுந்து மறுபுற அறைக்கு சென்று அங்கு படுத்திருந்த முதியவரை கூவியழைத்து அவர் திரும்பிப் பார்த்ததும் பினஃபோரை தூக்கி முகம் மறைத்தாள். பின் நெடு நேரம் அவளைக் காணவில்லை. சின்ன கொலுசின் சத்தம் மட்டும் காப்பகம் முழுவதும் எதிரொலித்தது. தொலைவில் செவிலிப்பெண்கள் அவளிடம் மலையாளத்தில் ஏதோ விசாரிப்பது கேட்டது.

வருண் என் அருகே அமர்ந்து கையைப்பற்றியபடி பேசிக்கொண்டிருந்தான். வீட்டு நடப்புகளும் ஆபீஸ் நிகழ்வுகளும். எனக்கு ஒன்றும் பெரிதாக பொருள்படவில்லை. ஆனால் ஒவ்வொரு மனிதர்களும் கற்பனையில் புன்னகையுடன் எழுந்து மறைந்தனர். பின் சட்டென்று அவன் குனிந்து என் இரு கன்னங்களிலும் முத்தம் கொடுத்தான்.

கூச்சம் மறைத்து “ஏய், அந்த பொண்ணு வந்துரப்போறா” என்றேன்.

“ம்ம்” அவன் எச்சரிக்கை அடைந்து வாசலை திரும்பி பார்த்துக் கொண்டான்.

சிறிது நேரம் கழித்து உறங்கும் சந்தியாவை தோளில் போட்டுக்கொண்டு பிரேமா வந்தாள். முகத்தில் சற்று பெருமித்துடன் “உறங்ஙிப்பிச்சு” என்றாள் மெல்ல. என்னருகே அவளை ஒரு பூ போல கிடத்திவிட்டு சத்தமில்லாமல் அறை நீங்கினாள். அப்போது மாலையின் வெளிச்சம் பலாமரத்தின் உச்சிக்கிளைகளில் படிந்திருந்தது. காப்பகத்தின் நிழல் மரத்தின் மேலேறி ஏறி அதை எட்டிப்பிடிக்க சென்று கொண்டிருப்பது போல தோன்றியது. பலாமரத்தின் பின்புறம் தெரிந்த கிழக்கின் வானில் ஒரு தீற்றலென நிலவு தோன்றியது. ஏனோ அது சற்று நிலைகொள்ளாமையை அளித்தது.

”நீங்க நேரத்தோட கிளம்பணும் இல்ல?” சந்தியாவின் தலையை கோதியபடி அவனிடம் கேட்டேன். அவள் முகம் தீவிரமான பாவத்தில் ஏதோ சொல்ல விழைவது போல உறைந்திருந்தது.

”ஆமா, போகும்போது இருட்டிரும்” வருண் படுக்கையிலிருந்து மெல்ல எழுந்தான். “நீ குணமாயிடுவ திவ்யா, டாக்டர் கிட்ட நான் பேசினேன்” அவன் பார்வை என் வற்றிய உடலை தீண்டிச்சென்றது.

சட்டென்று விம்மல் போல எழுந்தது ஒர் உணர்ச்சி. “வருண், நானும் உங்க கூட வந்துருரேன்” என அவன் கைப்பற்றினேன்.

அவன் சற்று நேரம் அமைதியாக என்னைப்பார்த்தபடி நின்றான். அவன் கண்களில் ஒரு படலமாக கண்ணீர் நிறைந்தது. அவனுள்ளே பெருகிய நடுக்கத்தை பற்றிய கையில் உணர்ந்தேன்.

தொண்டை ஏறி இறங்க “நான் நாளைக்கு வரேன் திவ்யா, இன்னைக்கு நைட்டே டாக்டர் கிட்ட பேசிடுறேன். நாளைக்கு வந்து உன்னகூட்டிட்டு போறேன். ம்ம்ம்?” என்றான். அவன் கண்ணீரின் ஒரு துளி ததும்பி சொட்டியது.

***

அன்றிரவு காப்பகத்தின் விளக்குகள் எல்லாம் அணைந்தபோது திடுக்கிட்டு எழுந்தேன். எதிரே ஜன்னலுக்கு நடுவில் பௌர்ணமி நிலவு செந்நிறத்தில் ஒரு மாபெரும் திலகம் போல கரிய வானில் வீற்றிருந்தது. வெளிச்சத்தையெல்லாம் தனக்குள் உறிந்துகொண்ட சிறு சூரியனைப்போல. ஆனால் காட்டின் ஒவ்வொறு இலையையும் எங்கும் பரவிய செவ்வொளியில் தனித்தனியாக காண முடிந்தது. கிரணங்களற்ற அத்தகைய ஒளியைக்காண்பது திகைப்பூட்டுவது. எங்கிருக்கிறது அவ்வொளி. காடு முழுவதும் அதில் நனைந்தபடி உறைந்து நின்றது.

திடீரென்று பலாமரத்தில் ஒர் அசைவை கண்டேன். ஒரு வாளின் சுழற்சியை போல முதலில் அது கிளை தொற்றியேறியது. பின் புள்ளிகள் எழுந்தமைய மெல்ல அது கிளைமேல் நடந்து வருவது தெரிந்தது, கனத்த பாதங்களை ஓசையின்றி பதித்தபடி. இலைகளின் நிழலினூடே அது வரும்போது செம்மஞ்சள் உடலில் கரிய புள்ளிகள் சில அசைந்தும் சில அசையாமலும் நிலைத்தன. சற்றும் ஒலியில்லாமல் அது என் சாளரத்தை நோக்கி ஒவ்வொரு அடியாக கவனமாக எடுத்து வைத்து நெருங்கியது. என் உடல் மெல்ல அதிர்ந்தது. இக்கணம் ஒரே தாவலில் அது என் அறைக்குள் நுழைந்துவிட முடியும் என தோன்றியது. அதன் செம்பழுப்புக்கண்களில் இரு கரிய புள்ளிகள் என்மீது நிலைத்திருந்தன, இரு வாசல்கள் என. அப்போதுதான் கண்டேன், அதன் வாயில் கவ்வியிருந்த புலிக்குருளையை. சிறுமொட்டு பாதங்கள் தொங்க, சிறுவால் சுருண்டு அடிவயிற்றில் படிந்திருக்க, கண்களை இறுகமூடி அன்னையின் பிடியில் உறங்கியது அது. அக்கணம் என் உடலில் தாளமுடியாத இனிமையொன்று படர்ந்தேறுவதை உணர்ந்தேன். அதன் எடையில் என் உடல் அமிழ்ந்தது, எங்கோ உதிர்வது போல. பிரார்த்தனை ஒன்று முடிந்ததை போல மற்றுமொரு முறை ஆழ்ந்த நெடுமூச்செடுத்து கண்களை மூடினேன். கன்னத்தின் இருபுறமும் வழிந்த கண்ணீர் காதுகளில் சென்று படிவதை கடைசியாக உணர்ந்தேன்.

அஜிதன்

அஜிதன் தமிழில் எழுதிவரும் எழுத்தாளர், நாவலாசிரியர், உதவி இயக்குனர். ’மைத்ரி’ என்ற நாவலை எழுதியுள்ளார்.
தமிழ் விக்கியில்

5 Comments

  1. திவ்யாவின் உலகம் இருளால் ஆனது. இருள் மட்டுமே அறிந்தது அவள் வாழ்க்கை. திவ்யா பகலை ஒரு வெற்று நாடகமாகவே பார்க்கிறாள். “காலை ஒளி பளிச்சென்று என் முகத்தில் வந்து அறைந்தது. வெட்கமின்றி மீண்டும் ஓர் அரங்குக்குள் நுழைவதைப் போல எண்ணினேன்.” அவள் வாழ்வில் ஒளி ஒரு இடையூறு மட்டுமே. ஒவ்வொரு நாளும் பகலை, ஒளியை கடந்துச் செல்லும் போராட்டமே அவளுள் நிகழ்த்துக் கொண்டிருக்கிறது.

    பௌர்ணமி நிலவின் ஒளிக் கூட அவள் வாழும் காட்டில் திகைப்பூட்டும் அனுபவமே. ஆனால் அவ்வொளி அவளின் இருளுக்கான தரிசனத்தை வழங்கிச் செல்கிறது. அவள் வாழ்வின் அர்த்தத்தை ஒரு கணத் தீற்றலில் காட்டிச் செல்கிறது.

    எளிமையாக கதைச் சொல்லும் பாணி அஜிதனுடையது. அவரது மைத்ரி நாவலும், முதல் சிறுகதையும் அவ்வாறே. ஆனால் அதிலிருந்து நம் அன்றாட வாழ்க்கை சென்றடையாத ஒரு அக/ஆன்மீக தரிசனத்தை நோக்கி அவர் கதை விரிந்துச் செல்லும். இக்கதையும் அவ்விசையின் தொடர்ச்சியாகவே அமைந்ததுள்ளது. சூழலின் விவரணைகள் மூலம் மட்டும் வாழ்வின் நிலையின்மையையும், அதில் திகழும் உறவுகளின் அர்த்தங்களையும், பிணைப்புகளையும் காட்டிச் செல்லும் சிறுகதை நிலைவிழி. இருள் கொள்ளும் ஒளியின் தரிசனத்தில் நிறைவு கொள்கிறது கதை. நல்ல சிறுகதை தந்த ஆசிரியருக்கு என் வணக்கங்கள்.

  2. நிலைவிழி கதையில் திவ்யாவின் மரணத்தை நோக்கிய பயணத்தில் தொடங்கி மரணத்தை கண்டடைவதில் முடிகிறது. ஆனால் இது தனிமனித கதையாக நிகழவில்லை மாறாக உயிரின் ஆன்ம சஞ்சலம் என்றே வாசிக்க முடிகிறது. முதலில் கதை தொடுவது மனதின் ஊடாட்டம், காட்டை பார்க்கையில் காட்டின் ஆன்மாவுடன் கலக்க நினைக்கும் அவள் காட்டின் தனிமையில் தன்னுடலின் நீட்சியாக தனது மகளை எண்ணி ஏங்குகிறாள். காடு வெறுமையையும் அங்கு காணும் பலா தனது மகளையும் நினைவு படுத்துகிறது.

    மறுநாள் பிரேமா தன்னை குளிப்பிக்கையில் அவளது இனிமை மட்டும் நிறைந்த தன்மை முதல் வெளிச்சத்தை அவளுக்கு தருகிறது. அடுத்து சந்தியாவில் கிழிக்குரல் மரணம் என்னும் போர்வையை விலக்கி விடுதியை உயிர்ப்பிக்கிறது. அவள் ஆனைக்குட்டியை கேட்டு அடம்பிடிக்கிறாள், பூ வைத்து விளையாடும் புலியை காண்கிறாள், துயரத்தின் எடைகொண்ட பலாப்பழம் சந்தியாவுக்கு பலாப்பழமாக தெரிகிறது, தனக்கு மரணம் படலம் நிறைந்திருந்த விடுதியில் சந்தியா மகிழ்ச்சியை மட்டுமே காண்கிறாள்.

    உள்ளத்தின் ஊடாட்டம் முடியும் தருணத்தை ஆசிரியர் பலாமரத்தை மூடும் விடுதி நிழல் அதன் பின்னால் தூரத்தில் தெரியும் நிலவின் தீற்றல் என சொல்லி கடத்துகிறார். இரவு நிலவொளியில் முழுக்காட்டையும் காண்கிறாள் அங்கேயே அவளது விடுதலையை நம்மால் உணர முடிகிறது. விடுதலை உணர்வடைந்ததும் சந்தியாவின் பகல் செய்கைகளில் எண்ணம் அலைகிறது இயல்பாக.

    கதையின் இறுதியில் ஒரு பலக்கோணம் காட்டி விரியும் ஒரு படிமம் புலிவடிவில் வருகிறது. இங்கே திவ்யா, சந்தியா யாரும் இல்லை, கதையிலிருந்து வெளிவந்து வாழ்வு மரணம் என மட்டுமே சிந்திக்க முடிகிறது. வாழ்க்கை அளிக்கும் மரணத்தின் மீதான அந்நியத்தன்மை இல்லாமலாகி இனிமையென நிக்ழ்கிறது மரணம். கனமான கால்களுடன் உடலெங்கும் கரும்புள்ளிகளுடன் நிலைத்த பார்வையுடன் நிற்கும் தாய்புலியின் வாயில் கவ்வியபடி துயிலும் புலிக்குருளை என்னும் படிமம் மரணத்தை பேருரு கொண்டெழச்செய்து ஓர் பேரிருப்பை உணரச்செய்து எடையை கூட்டுகிறது. தற்காலிக இளைப்பாறுதலுக்காக இயற்கை என்றோ அதனை பிரம்மம் என்றோ வார்த்தைகளை இட்டு நிரப்பி கொள்ளலாம். சிந்திக்கையில் அவ்வார்த்தைகளும் எடைகூடவே செய்கிறது.

    நான் வாசித்த மிக சிறந்த கதைகளில் ஓன்று.

  3. திரும்பத் திரும்ப திவ்யாவைச் சென்று பார்ப்பதாக… அவளைத் துடைத்துவிட்டு, பிள்ளையைத் தோளிலிட்டு, ‘உறங்ஙிப்பிச்சு’ என்று சொல்வதாக.. பின்னஃபோர் கொண்டு முகம் மறைப்பதாக.. மாறி மாறி இந்த ‘நிலை விழி’யை வாசிக்கிறேன்..
    ‘புலி வச்சு விளையாடும் மஞ்சக்கலர்’ பூக்கள் வாழ்க!
    அந்தப் பலாப்பழங்களை வரைந்த ஓவியருக்கு வாழ்த்துகள்!
    ஒரு பேலியேட்டிவ் கேர் சென்டர் பேரேட்டில் இதுவே கடைசிக் கையெழுத்து என்று தெரிந்து இடும்போது விரல்களில் தோன்றிய நடுக்கம் ஒவ்வொரு முறை வாசிக்கும்போதும் எழுகிறது.. இதனை எழுதும்போதும் கூட..
    நன்றி அஜிதன்! மனம் நிறைந்த வாழ்த்துகள்! வாழ்தல் இனிது!

  4. சபாஷ் அஜிதன்….
    வாசகன் மரணத்தை உணரும் வகையில் நிறைவைதரும் சிறுகதை.திவ்யாவுக்கு நிறைவை தந்த மரணம்.வாசகனை கண்கலங்க வைக்க சிலரால்தான் முடியும்.நீங்கள் செய்திருக்கிறீர்கள்.வாழ்த்துக்கள்.

  5. ஒரு பெண்ணின் நிலையில் இருந்து இந்த கதையை எழுதியவிதம் பாராட்டத்தக்கது தொடர்ந்து அதிகம் எழுதுங்கள் வாழ்த்துக்கள்

உரையாடலுக்கு

Your email address will not be published.