/

சாம்ராஜின் “அரிவாள் சுத்தியல்” நாவலில் இருந்து ஓர் அத்தியாயம்

மக்களிடம் சென்றடைவது எப்படி? எப்படி? எப்படி? என நீண்டகாலமாக இந்திய பொதுவுடைமைக் கட்சி மார்க்சிஸ்ட் – லெனினிஸ்ட் (செஞ்சீனம்) (இந்தியாவில் உள்ள 82 மா-லெ குழுக்களில் இது செஞ்சீனம். RED CHINA என்று வேறு ஒரு அமைப்பும் உள்ளது) விவாதித்து விவாதித்து மக்களிடம் இன்னும் நெருக்கமாக போவதற்கான வழிமுறைகள் என்ன  என்று தீவிரமாக யோசித்துத் தமிழர் கலைகளை உள்ளடக்கிய ஒரு கலை நிகழ்ச்சியை நடத்துவது என செஞ்சீனம் அமைப்பு தீர்மானித்தது. 

அடுத்த கட்டமாக எது தமிழர் கலை என்று கேள்வி எழ

“தமிழர் கலை என்று சொன்னால் அதில் பாகுபாடு வருகிறது, எனவே மக்கள் கலை என்று சொல்வோம்” என ”நாட்டுப்புறக் கலை விழா” என்று பெயர் சூட்டப்பட்டு  அதற்கான பட்டியல் தயார் ஆனது.

  1. கரகாட்டம் 
  2. காவடியாட்டம் 
  3. சிலம்பு 
  4. பறையாட்டம் 
  5. கும்மி 
  6. புலியாட்டம் 
  7. தேவராட்டம் 
  8. பொய்க்கால் குதிரையாட்டம் 
  9. மயிலாட்டம் 
  10. ஒயிலாட்டம் 
  11. வில்லுப்பாட்டு 

எனப் பட்டியல் இடப்பட்டு அதை இ.பொ.க.மா.லெ  (செஞ்சீனம்)-ன் வெகுஜன அமைப்பான செஞ்சேனை முன்னெடுத்தது.

தோழர்கள் நாடகக்காரத் தெருவிலும், மைனா தெப்பக்குளம் பக்கமும் அலைந்தார்கள். கலைக்குழுவைக் கண்டுபிடிப்பது பெரிய சிரமமாக இருந்தது. இவ்வளவு கலைகளும், அதற்கென குழுக்களும் அதை அணுகுவதற்கு இத்தனை அலைச்சலும் உண்டென்பதை புரட்சிகர செஞ்சேனை முதல் முறையாக  எதிர் கொண்டது. “தப்பை” வைத்தே புரட்சியை நடத்தி விடலாம் என்று நினைத்தவர்களுக்குக் கடும் அதிர்ச்சி காத்திருந்தது. 

வரிச்சியூர் பழனியப்பன் வில்லுப்பாட்டில் பெரிய விற்பனர் எனக் கேள்விப்பட்டு அவரைத் தேடி வரிச்சியூர் போக அவர் இறந்து பதின்மூன்று வருடம் ஆகி இருந்தது. 

கண்டுபிடித்த குழுக்களும் இவர்களுடைய “புரட்சிகர ஒழுங்கு”க்கு உட்பட்டவர்களா என்ற சந்தேகம் செஞ்சேனை தோழர்களுக்குப் பெரிதாய் இருந்தது. 

பொய்க்கால் குதிரை ஆட்டக்காரர் தெய்வ சிகாமணி நல்ல போதையில் இருந்தார். ஆனால் தெளிவாய்ப் பேசினார். இவர்கள் தோழர் என்று எல்லோரையும் கூப்பிட பதிலுக்கு யாரும் அவர்களை தோழர் என்று கூப்பிடவில்லை. “வாங்க தம்பி, போங்க தம்பி” என்றார்கள். சமயத்தில் “ வா தம்பி” என்றார்கள். 

“எதுக்காக தம்பி இத நடத்துறீங்க?”

தோழர் வெங்கடேஷ்தான் விளக்கினார்

“ எங்களோடது சமூக மாற்றத்திற்கான அமைப்பு, இப்படி நிகழ்ச்சி நடத்தினால் பொது மக்கள் அதப் பார்க்க வருவாங்கள்ள, அதுல இருந்து கொஞ்ச பேரு அமைப்புக்கு வருவாய்ங்கள்ள”

“ஓ இத வெச்சு உங்க கூட்டத்த கூட்ட பாக்குறீங்க”.

“கொஞ்சம்”

“என்னைக்கு தம்பி?”

“மார்ச் 11”

“அட்வான்ஸ் கொடுக்குறீங்களா ?”

வெங்கடேஷ் பையை எடுக்க. தெய்வசிகாமணி பாய்ந்து தடுத்து

“தம்பி! மந்தைல எங்க குலதெய்வம் பத்திரகாளியம்மன் கோயில் இருக்கு, அது முன்னாடி வெச்சு தான் நாங்க எப்பவும் அட்வான்ஸ் வாங்குவோம்”. 

தோழர்களுக்கு இதை எப்படி எதிர் கொள்வது என்று குழப்பம். எழிலன் தோழர் தான் போவோம் என்றார். 

கோயில் அடைத்திருந்தது திண்ணையில் இரண்டு பேர் படுத்திருந்தார்கள். எழிலன் தோழர் அட்வான்ஸைக் கொடுக்க. 

“தம்பி கிழக்கு பக்கமா நின்னு கொடுங்க தம்பி”.

எழிலன் கிழக்கு எது என்று தெரியாமல் தடுமாற தெய்வசிகாமணியே அவரைத் திருப்பி நிறுத்தி வாங்கிக் கொண்டவர், கோயிலின் கம்பி கதவின் இடுக்கிற்குள் கையை விட்டு குங்குமத்தை எடுத்து எல்லோர்  நெற்றியிலும் பூசி விட்டார். பூசும் பொழுது வெங்கடேஷ் தலையை பின்னால் இழுக்க,

“நீங்க பாயா  தம்பி?”.

வெங்கடேஷ் இல்லை எனத் தலையாட்ட.

“அப்போ பூசுங்க”

சந்து முனை திரும்பியவுடன் எல்லோரும் சொல்லி வைத்தாற் போல்  நெற்றியில் இருக்கும் குங்குமத்தை அழித்தார்கள். 

கும்மி அடிக்கும் பெண்கள் கறாராய்ப்  பேசினார்கள். “போக வர ஆட்டோ, பாடுறதுக்கு முன்னாடி சாப்பாடு கொடுத்திடனும். 12 மணிக்கு மேல ஆச்சுன்னா ஆளாளுக்கு நூறு ரூவா எக்ஸ்ட்ரா அஞ்சு  பேர்னா  அஞ்சு பேர் தான் வருவோம். அப்பறோம் அங்க வந்து வேற குரூப்புகளுக்கு ஒத்தாசை செய்ய எங்கள கூப்பிடக்கூடாது. நாங்க கும்மி அடிச்சு முடிச்ச உடனே எங்கள  ஒரு ஆட்டோல ஏத்தி விட்ரனும். இதுக்கு உங்க குரூப்ல யாரோ ஒருத்தர் ஜவாப்தாரியா இருக்கணும்”. பிச்சையம்மாள் இப்படிப் பேச, பாட்டாளி வர்க்கக் கலைஞர்கள் இவ்வளவு கறாராக பேசுவார்கள் என முதல் முறையாக கேட்ட தோழர்களுக்கு “பண்பாட்டு புரட்சி” நடத்துவது ரொம்ப கஷ்டமோ எனத்  தோன்ற ஆரம்பித்தது.  

சிலம்பாட்டக்காரர்கள் பெரிய வம்பு தும்பு பண்ணவில்லை,

“அப்பவே வருகிறேன்” என்றார்கள்.

கரகாட்டக்காரர்கள் அமைப்பின் பட்ஜெட்டுக்கு அடங்காத தொகையைக் கேட்டார்கள். நான்கைந்து குழுக்களைப்  பார்த்து இருப்பதிலேயே குறைவாய் கேட்கும் குழுவை புக் செய்து, பத்து மணிக்கெல்லாம் அவர்களை அனுப்பி விடுவோம் என்ற உத்திரவாதத்துடன் அவர்களை ஒத்துக் கொள்ள வைப்பதற்குள் தோழர்களுக்குப் போதும் போதும் என்றாகி விட்டது. 

தேவராட்டத்திற்கும், புலியாட்டத்திற்கும் எவ்வளவு தேடியும் ஆட்களைக் கண்டு பிடிக்க முடியவில்லை.

வில்லுப்பாட்டிற்கு சிறுகூடல் பட்டி ராமநாதனைப்  பேச அவர் தன்  காரில்தான் மொத்த குழுவுடன் வருவார் என்றும் மண்டபத்தில் அவர்களுக்கென ஒரு அறை  தந்துவிட வேண்டுமென நிபந்தனையிட்டார். இரண்டு மாதங்களுக்கு முன்னால் சன்  டி.வி-யின் வணக்கம் தமிழகத்தில் அவர் நேர்காணல் வந்து இருந்தது. ராமநாதன் இன்னும் “வணக்கம் தமிழகம்” செட்டிலேயே இருந்தார். தோழர்கள் புறப்படும் பொழுது “ரொம்ப பிற்போக்கான பாடல்கள், கடவுள் நம்பிக்கை பாடல்கள் இல்லாம பாத்துக்கங்க அய்யா”.

நிஷ்டையிலிருப்பவரைப்  போல கண்ணை  மூடி இருந்த ராமநாதன் கண்ணைத் திறக்காமலே “ம்ம்ம்ம்” “ம்ம்ம்” என்றார். 

தப்பாட்டத்திற்கு வாடிப்பட்டி குழுவை அழைத்திருந்தார்கள். பறைக்கு திண்டுக்கல் சக்தி கலைக்குழு. காவடியாட்டத்தை அமைப்பே வேண்டாமென முடிவு செய்திருந்தது. (செஞ்சீனத்தின் எதிரி அமைப்பான மென்ஷ்விக்குகள் எப்பொழுதும் செஞ்சீனத்தைத் தாக்கி எழுதும்பொழுது சந்தர்ப்பவாதத்திற்கு காவடியெடுப்பதே செஞ்சீனத்தின் வேலையென எப்பொழுதும் எழுதுவார்கள். அதனால் செஞ்சீனம் அமைப்பிற்குக் காவடி என்ற சொல்லே பிடிப்பதில்லை.

கோலாட்டத்திற்கு ஜெய்ஹிந்துபுரத்தில்  ஒரு குழுவை புக் செய்ய அந்த குழுவினர் இவர்கள் சொல்வதற்கு எதற்கும் மறுப்பு சொல்லாமல் “சரி சரி”  எனத்  தலையாட்டினார்கள்.

“தொகை?”

“நீங்க பார்த்து கொடுக்கறத  கொடுங்க” 

ஐநூறு ருபாய் அட்வான்ஸ் கொடுத்தார்கள், அட்வான்ஸ் வாங்கிய தண்டட்டி கிழவியின் முகத்தைப் பார்த்தபொழுது எழிலனுக்கும் சைமனுக்கும் சந்தேகம் வந்தது.

“இவ்வளவு பணிவு இந்த முகத்துக்கு சேரலையே” 

எழிலன் சைமனிடம் ஏன் இவ்வளவு பம்முகிறார்கள் என விசாரிக்கச் சொல்ல, சமீபத்தில் இந்த குழு பட்டிவீரன் பட்டியில் நிகழ்ச்சி நடத்திய பொழுது மேடை சரிந்து கீழே இருந்த பார்வையாளர்கள் நான்கைந்து பேருக்குக் காயம். அதை ஒரு அபசகுனமாக கருதி யாரும் அவர்களை அழைக்காமல் இருக்க, அதுவே நிபந்தனையற்ற சரணகதியின் பின்னணி.

மயிலாட்டத்திற்கு ஒரு குழுவை கஷ்டப்பட்டு கண்டுபிடித்தார்கள். அந்தக் குழு வருமென்ற நம்பிக்கை யாருக்கும் இல்லை. 

…………………………..

குருவிக்காரன் சாலை ஏற்றத்தில் இருக்கும் கண்மணி கல்யாண மண்டபம் நாலு மணிக்கே கலைகட்டி இருந்தது. நிகழ்ச்சியை ஆறு மணிக்குத் தொடங்கி பன்னிரெண்டு மணிக்கு முடிப்பதாய் திட்டம். 

குழுக்கள் ஒவ்வொன்றாக வரத் தொடங்கின. வில்லுப்பாட்டு ராமநாதன் தனது குழுவோடு தனக்கு ஒதுக்கப்பட்ட அறையை ஆக்கிரமித்தார், முதல் குழப்பம் தொடங்கியது.

கரகாட்டக்காரர்கள் ”எங்களுக்கு எல்லாம் ரூம் கொடுக்க மாட்டிங்க ? உட்கார்ந்து பாடுறவன் ஒசந்தவன். நின்னுட்டு பாடுறவன் தாழ்ந்தவன்”

என்று புறுபுறுக்க தோழர்கள் தாமஸும் வெங்கடேசும் ஏதேதோ சொல்லி சமாளிக்க அவர்கள் கொதித்துக்கொண்டிருக்கையில் ராமநாதன் அறையில் இருந்து வெளிவந்த ஒருவர்

“அய்யா பாத்துரூம்ல வென்னி வரலன்னு சொல்ல சொன்னார்”.

கரகாட்டக்காரர்

“ஆன்ன்ன்… வென்னீ .. நல்லா வாயில வருது …” என்று சொல்ல வெங்கடேஷும், ரகுவும் ராமநாதன் அறையை நோக்கி ஓடினார்கள். 

அஞ்சு மணிக்கே அரங்கம் பாதி நிரம்பியிருந்தது.முதல் முறையாக    இ.பொ.க.மா-லெ வரலாற்றில் இப்படி ஒரு கலைநிகழ்ச்சி நடக்கிறது என்பதால் மற்ற மா-லெ குழு தோழர்கள் முன்னமே அரங்கிற்கு வந்து விமர்சிக்கக் காத்திருந்தார்கள். 

தோழர் பகலவன் எழிலன் பின்னால் பம்மி பம்மி வர, எழிலன் “என்ன தோழர் சொல்லுங்க?”

“தோழர் இந்த வாயில ஊதுனா  நெருப்பா வருமே அந்த குழுல இருந்து ரெண்டு இளைஞர்கள் வாய்ப்பு கேக்குறாங்க பத்து நிமிஷம் கொடுத்தா போதும் தோழர் எதிர்காலத்துல அமைப்போடு ஆதரவு சக்தியா மாறுறதுக்கு வாய்ப்பு இருக்கு” மறுத்தால் கமிட்டியில் அதை பிரச்னை ஆக்குவார். எழிலன், பகலவனைப் பார்த்தபடி யோசித்தார். பகலவன் சைக்கிளில் வந்தால் ஹாண்ட்பாரில் பிரச்சனை உட்கார்ந்திருக்கும்.

“பத்து நிமிஷம் தான் தோழர் கூடுதலா ஒரு நிமிஷம் கூட கிடையாது”

பகலவன் “ரொம்ப நன்றி தோழர்”

என்றபடி சற்று தள்ளி நின்ற இரு இளைஞர்களை பார்த்து வெற்றி என்பது போல் கையை உயர்த்தினார்.

அரங்கத்திற்குப் பின்னால் உள்ள வெட்டவெளியில் குழுக்கள் தங்களுக்கான பயிற்சியில் ஈடுபட்டிருக்க, பாண்டிய மன்னன் நெடுஞ்செழியன் வந்தால் தனது ஆட்சிக் காலம் தான் நடக்கிறதா என சந்தேகப்பட்டிருப்பார். கும்மி குழுவை கடந்த பொழுது எழிலனிடம்

“தம்பி பத்து  மணிக்கெல்லாம் அனுப்பிடுங்க” என்றது.

ஒரு பக்கம் சிலம்பம் சுழற்ற மறுபக்கம் கரகாட்டகாரர்கள் தங்கள் பொருட்களை பரப்பி வைத்திருக்க, வரமாட்டார்கள் என்று கருதிய மயிலாட்டகாரர்கள் ஒருபக்கத்தில் வந்து நிற்க, வாடிப்பட்டி குழு இடை இடையே டிரம்ஸ்களை உசுப்ப, கோலாட்ட குழுவின் கோல்கள் மோதி மோதி சிணுங்கின.

 எழிலனிடம் புரட்சிகர செஞ்சேனையின் தலைமை பொறுப்பாளர் மார்ட்டின்

“தோழர் எல்லா மாற்று அமைப்புக்காரங்களும் வந்து இருக்காய்ங்க.. ரொம்ப கவனமா நிகழ்ச்சியை நடத்தணும். ஏதாவது குளறுபடி ஆச்சுன்னா அவைங்க அவைங்க பத்திரிக்கைல எழுதிக் கிழிச்சுருவாய்ங்க.” 

ஆட்டோவில் வந்து இறங்கும் பொய்க்கால் குதிரைக் குழுவைப் பார்த்தவாறு “ம்ம்.. ம்ம்” என்று பதில் சொல்ல 

“என்ன தோழர் நான் இவ்வளவு தீவிரமா சொல்றேன் நீங்கி அலட்சியமா பதில் சொல்றீங்க…” 

எழிலன் சற்று எரிச்சலாய்  

“பாத்தீங்கள்ள தோழர்.. ஒவ்வொரு டீமும் ஒவ்வொரு ரகம் அவ்வளவு பேரையும் சமாளிக்கனும்”

பின்னணி இசைபோல வாடிப்பட்டி டிரம்முகள் அதிர்ந்து கொண்டிருந்தன.

ராஜா காலத்து படங்களில் மன்னர்  “பராக் பராக்” என்று சொல்லும் பொழுது ஊதப்படும் பெரிய கொம்பு வாத்தியம் திடீரென வெட்டவெளியில் முளைத்து ஓசை எழுப்பத் தொடங்க தோழர் எழிலன் ஒரு கணம் பயந்து போனார். இது பட்டியலிலே இல்லையே என்று கண்ணால் வெங்கடேஷைத் தேட. வெங்கடேஷ் அவரை நோக்கி ஓடிவந்தான்.

”தோழர் பகலவன்  ரெண்டு பேத்த கூட்டிட்டு  வந்து இருக்கார்ல நெருப்பு ஊதுறவைங்க, அவைங்களோட வந்திருக்காய்ங்க. கேட்டா  பாக்க  பந்தாவா இருக்குன்றாய்ங்க”.

மண்டப வாசலுக்குள் பரபரப்பாய்  நுழைந்த தோழர் நாகேந்திரன், எழிலனை நோக்கி வேக  வேகமாய் வந்தார்

“தோழர் ஒரு பிரச்சன”.

அவர் என்ன என்பது போல் பார்க்க, எழிலனை ஓரமாக அழைத்துப் போய்,

“நம்ம பார்ட்டி செகரட்ரி நிகழ்ச்சிக்கு வர்றாரு”. 

“அவரு UG (under  ground )-ல தோழர். இப்படி பொது நிகழ்ச்சிக்கு எல்லாம் வரமாட்டாரே”

“இல்ல தோழர் மதுரையில ஏதோ கமிட்டி கூட்டமாம், அதுக்கு வந்தவர் இதையும் பார்க்கப் பிரியப்படுறார்”.

எழிலனுக்கு பதக் என்றது.

 நிகழ்ச்சியில் Q -BRANCH  போலீசும் சி.பி. சி.ஐ.டி போலீசும் தூணுக்கு ஒருவராய் உட்கார்ந்து இருப்பார்கள். இவர்களுக்கு நடுவே அவரைப் பாதுகாத்து கலை  நிகழ்ச்சி பார்த்து வைத்து பத்திரமாக அனுப்பி வைப்பது என்று யோசிக்கும் பொழுது எழிலனுக்கு மலைப்பாக இருந்தது உறுதியாக  இந்த நாள் நல்ல விதமாக முடியப் போவதில்லை என்று தோன்றியது. 

“தோழர் அவரை வரவேணாம்னு சொல்ல முடியாதா?”

“இல்ல தோழர், நம்ம சிங்கராயர் தோழர் வீட்ல தான் கமிட்டி கூட்டம், இன்னேரம் அங்க இருந்து கிளம்பி இருப்பாங்க. சிங்கராயர் வீட்ல போனும் கெடையாது”

எழிலனின் கண்கள் அங்கும் இங்கும் அலைந்தன. சந்தேகத்திற்கு இடமான முகங்கள் தென்பட்டன.

“சரி தோழர் பாத்துக்கலாம்” 

 பலவித வாத்தியங்களின்  ஓசை கலவையாய் வந்தது. ஆறுமணிக்கு முன்பே அரங்கு நிறைந்து விட்டது.

முதல் நிகழ்வாக எழிலனும் தோழர்களும் சிலம்பாட்டக்காரர்களை மேடை ஏற்றினார்கள். தனிப்பட்ட முறையில் எழிலனுக்கு அவர்கள் மீது பிரியம் இருந்தது. அவர்களை எந்த வகையிலும் படுத்தாத குழுக்களில் ஒன்று. 

சிலம்பாட்டக்காரர்கள் இருவரும் கம்பை  பிரமாதமாகச் சுற்றினார்கள். முன் வரிசை பின் வரிசை என சினிமாவில் பார்த்த சிலம்பை விட அபாரமாய்  சுழன்றார்கள். தாமஸிடம் பள்ளத்தூர் தோழர் ரவி

“தோழர் சிலம்புச் செல்வர்னு ஒருத்தர சொல்வார்களே அவரு  அவ்வளவு பிரமாதமா கம்பு சுத்துவாரா தோழர்?.”

தாமஸ் “தோழர் அவரு சிலப்பதிகாரத்தைப் பத்தி பேசுறதால வந்த பேரு”

“ஓஹோ அப்படியா? நான் இதுவரைக்கும் நல்ல கம்பு சண்ட போடுறவர்னு நெனச்சுட்டு இருந்தேன்”.

சிலம்பாட்டக்கார்கள் சுழற்றி முடிக்க அரங்கத்தில் விசில் பறந்தது. பணிந்து வணக்கம் சொல்லிவிட்டுப் போனார்கள் சிலம்புச்செல்வர்கள். 

தோழர் பகலவனின் சிபாரிசில் வந்தவர்கள் கொம்பூ ஊத மேடையேறினார்கள். கண்மணி கல்யாண மண்டபம். கல்யாணம், காதுகுத்து, போன்றவற்றிக்காக வடிவமைக்கப்பட்டது. கலை  நிகழ்ச்சிகளை அது பார்த்ததே கிடையாது. கலை  நிகழ்ச்சிகளுக்கு வேண்டிய நல்ல அகலமான மேடையும் இரண்டு மூன்று மடிப்புகள் கொண்ட ஏற்பாடுகள் எதுவும் அங்கு கிடையாது.

“தாலி கட்டுனாய்ங்களா , பந்திக்குள்ள புகுந்தமா”

என மதுரைக்காரர்களை மனதில்  வைத்து கட்டப்பட்ட மண்டபம்.

கலை நிகழ்ச்சிகளுக்கும் அதற்கும் வெகு தூரம். “ப” வடிவத்தில் அரங்கமும், மேடையை ஒட்டி தெய்வப் படங்களும, அரங்க உரிமையாளரின் அம்மா,  அப்பா, தாத்தா, பாட்டிகள் தோற்றம் மறைவோடு வரிசையாக ஒரே திசையில் பார்த்து கொண்டிருந்தனர். சிவப்பு மையில் மணமகன் அறையும் மணமகள் அறையும் எழுதப்பட்டிருந்தது. 

வெற்று உடம்புடன், ட்ராக் சூட் மட்டும் அணிந்தவர்களாய் மேடையில் குறுக்கும் மறுக்குமாய் நடந்தார்கள். கையில் மண்ணெண்ணெய் பாட்டில் இரும்பு வளையம் போன்றவை வைத்திருந்தார்கள். அரங்கத்தைப் பார்த்து வணக்கம் சொல்லி விட்டு ஒருவன் வளையத்தில் நெருப்பு பற்ற வைத்து ஒரு கம்பியால் அவனில் இருந்து சற்று தள்ளி பிடித்தான். கோள வடிவத்தில் அது எரிய ஆரம்பிக்க மற்றவன் அதன் வழியாக பாய்ந்து அந்த பக்கம் விழுந்தான், மறுபடி மறுபடி தாவினான். கூட்டத்த்தில் இருந்து விசிலும் சிரிப்பும் எழுந்தது. கொம்பூதுபவர்கள் இடையிடையே ஊதிக்கொண்டிருந்தார்கள்.

“ஏய் வித்த காமிக்குற ஹிந்தி காரங்களோட பிள்ளைங்க இதவிட நல்லா தாவும் பா”

அடுத்து இருவரும் சிறிய தீப்பந்தத்துடன் மேடையில் நடந்த வண்ணம் வாயிலிருக்கும் பெட்ரோலை ஊத, தீ குபீர் குபீரென பதறி பதறி எரிந்தது. நடந்து கொண்டே செய்தவர்கள் இன்னும் ஆவேசமாக மேல பார்த்து ஊத தீப்பொறி ஒன்று பறந்து மேடைக்கு சற்று தள்ளிமேலே தொங்கி கொண்டிருக்கும் சோடியம் வேப்பர் லாம்ப்பின் மீது பட, அது படார் என வெடித்தது. அதன் நேர் கீழே உட்கார்ந்திருந்த கும்மி குழுவின் தலைவி பிச்சையம்மாள் மீது கண்ணாடித்துகள்கள் பட, அவள் “ஐயோ ” என கத்திக் கொண்டு ஓட, அவளை துரத்திக் கொண்டு அவளது குழு ஓடியது. அரங்கத்தில் காச் மூச் என சத்தம் எழ நெருப்பு இரட்டையர்கள் எழிலனைப் பார்த்து

“சாரி பாஸ், ஒரு சின்ன மிஸ்டேக் ஆகிருச்சு”.

எழிலன் மெதுவாக ரகுவிடம்

“தோழர் இவைங்க மண்டபத்தை கொளுத்தி விட்ருவாங்க தோழர். இறக்கி விட்ருவோம்.”

என்று அவர்களை இறக்கி விட ஆயுத்தமாகி, வெண்ணிற ஆடை மூர்த்தி போல தோழர் வெங்கடேஷ் சப்தம் எழுப்ப, அவர்கள் அதையெல்லாம் பொருட்படுத்தவேயில்லை.  அதற்குள் நெருப்பு இரட்டையர்கள் அடுத்த சாகசத்திற்கு ஆயத்தமாயிருந்தனர். ஒருவன் நெருப்புப் பந்தத்தை மேலே வீச மற்றவன் அதை லாவகமாக பிடித்தான். ஒரு பந்தம் இரண்டு பந்தம் ஆக பிடிப்பவன் திணறினான். ஒரு பந்தம் கீழே  வருவதற்குள் அடுத்த பந்தம் வீசப்பட்ட இரண்டும் மோதி மேடையின் பின் புறம் இருக்கும் சுவர் ஓரமாய் விழுந்தது. ரகு சைகையில் அவர்களை இறங்கச் சொன்னான். அதைப் பொருட்படுத்தாத நெருப்பு இரட்டையர்கள் பெரிய கயிறு ஒன்றை ஆளுக்கொரு பக்கமாய்ப் பிடிக்க அரங்கத்தில் இருந்து விசில் சத்தம் கூடுதலாய்  எழுந்தது. “மார்க்ஸ் மார்க்ஸ்” என்று யாரோ கத்தினார்கள். தீப்பந்தம் கீழே விழும்பொழுது மேடைக்குப் பின்னால் கட்டப்பட்டிருக்கும் மார்க்சிய மூலவர்களை விசாரித்துக் கொண்டு வர மார்க்ஸின் தாடிபக்கம் லேசாக புகைய தொடங்க பாய்ந்து அணைத்தார்கள். மார்க்ஸின் தாடி கொஞ்சம் கருகி இருந்தது. நெருப்பு இரட்டையர்கள் வலுக்கட்டாயமாக இறக்கப்பட்டார்கள். 

தோழர் நாகேந்திரனுடன் பொதுச் செயலாளர் உள்ளே  வருவதை எழிலன் கவனித்தார். அரங்கத்தில் இருக்கும் பெரும்பான்மையினருக்கு அவரைத் தெரியாது. ஆனால்  Q BRANCH-சிற்கு தெரியும். எழிலன் அவரைப் பார்த்து மூன்று வருடங்கள் இருக்கும். ஆள் வேறொரு தோற்றத்தில் வந்திருந்தார். சட்டென்று அவரைத் தெரிந்த ஒருவரே அவரை அடையாளம் கண்டு பிடிக்க முடியாது. மூன்றாவது வரிசையில் ஓர  இருக்கையில் நாகேந்திரன் அவரை உட்கார வைத்தார் எப்பொழுது வேண்டுமானாலும் எழுந்து போவதற்கு வசதியாக.

“அடுத்தபடியாக அடுத்தபடியாக சிறுகூடல் பட்டி புகழ் ராமநாதன் குழுவினரின் வில்லுப்பாட்டு..வில்லுப்பாட்டு”

என்று ஆர்கெஸ்ட்ரா பாணியில் அறிவிப்பு வர, எழிலன் யார் என்று பார்த்தார்.

‘ஆனந்த் பாபு’ அசோக் கையில் மைக்கோடு நின்று கொண்டிருந்தார். ஆனந்த் பாபு அசோக் முன்பு மதுரையில் சைதன்யா ஆடல் பாடல் குழுவில் மிகப் பிரபலம். ஆனந்த் பாபுவாய் ஆடித்தீர்த்தவர். ஆனந்த் பாபுவின் திரைப்பட வாய்ப்புகள் குறைய குறைய இவருக்கான மேடை வாய்ப்புகளும் குறைந்து. சைதன்யா குழுவில் அறிவிப்பாளராக கீழிறக்கம் செய்யப்பட்டார் . 

இளம் பிரபு தேவாக்கள் துள்ளி மேடையில் ஆடிக்கொண்டிருக்க, பக்கவாட்டில் நின்று தோற்ற முகத்தோடு

 ”அடுத்தபடியாக, அடுத்தபடியாக. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த, ரஜினிகாந்த் நடித்த. “நான் சிகப்பு மனிதன்” திரைப்படத்திலிருந்து, திரைப்படத்திலிருந்து. மலேசியா வாசுதேவன் பாடிய, பாடிய. “ஆசை நூறு வகை” பாடல் பாடல்” 

என அசோக் அறிவித்துக் கொண்டிருப்பார்.  ஒருநாள் மேடை ஆடுவதற்கு நின்ற “பிரபு தேவா” சங்கிலி இவரை விரல் சுண்டி கூப்பிட்டு குடிக்க தண்ணிர் கொண்டு வரச் சொல்ல, அப்படியே மைக்கை ஆம்பிளிபையர் மேல் வைத்துவிட்டு புறப்பட்டவர் தான் அதன் பின் சைதன்யா ஆடல் பாடல் குழு பக்கம் திரும்பிக் கூட பார்க்கவில்லை. எப்படியோ புரட்சிகர செஞ்சேனையின் தொடர்பு கிடைத்து அதோடு தொற்றிக் கொண்டார். 

சைதன்யாக் காரர்கள் எப்பொழுதாவது இவரைப் பார்த்தால்

“அண்ணே நாகேஷ் மணி சம்போ சிவசம்போ டீமுக்கு போயிட்டான். அந்த இடத்திற்கு வந்துர்றீங்களா?”

என்று நக்கல் அடிப்பார்கள், காது கேட்காதது போல் அங்கிருந்து நகர்ந்து விடுவார் ஆனந்த்பாபு அசோக்.

எப்பொழுதாவது தனியாக இருக்கும் பொழுது எழிலனிடம் கேட்பார்

“தோழர், ஏன் தோழர் நாம ஆடல்பாடலெல்லாம் நடத்தறதில்ல?”.

எழிலனுக்கு அவர் பின்ணணி தெரியுமென்பதால்

“தோழர் நம்ம அமைப்புல இன்னும் N.S கிருஷ்ணனே சேரல, அவருக்கு அப்புறம் தான் டீ.ஆர்.ராமச்சந்திரன், தங்கவேலு, நாகேஷு , சுருளிலாம் பிறகு தான் ஆனந்த் பாபு வருவாரு புரியுதா தோழர்…”

புரிந்த மாதிரி தலையாட்டுவார் ஆனந்த்பாபு அசோக்.

வில்லுப்பாட்டு ராமநாதன் தன் குழுவினருடன் சமப்பிரமமாக மேடையில் உட்கார்ந்து, மைக்கைப் பார்த்து செருமி, சின்ன சில்வர் டம்ளரில் இருந்து வாயில் அதக்கிக் கொண்டு பாட ஆரம்பித்தார். பின்னால் இருக்கும் குழுவினர் கயிற்றைத் தட்ட 

“சபையோருக்கு வணக்கம்! 

சான்றோருக்கு வணக்கம்!

நாம் விநாயகர் அகவலை சொல்லி வில்லு பாட்டைத் தொடங்குவோம் 

பிள்ளையார் சுழி போட்டு செயல் எதையும் தொடங்கு – பிள்ளையார்
சுழி போட்டு செயல் எதையும் தொடங்கு
அதன் துணையாலே சுகம் கூடும் தொடர்ந்து
அதன் துணையாலே சுகம் கூடும் தொடர்ந்து – பிள்ளையார்
சுழி போட்டு செயல் எதையும் தொடங்கு 

அவர்பாட செஞ்சேனை தோழர்கள் திகைத்தார்கள். மாற்று அமைப்பினர்

“பிள்ளையார் சுழிபோட்டு புரட்சியத் தொடங்கு”

“பிள்ளையார் சுழிபோட்டு புரட்சியத் தொடங்கு”

என்று கூடவே பாடினார்கள். வேறு பாடல் பாடும் படி துண்டு சீட்டு மேடைக்கு போக ராமநாதன் துண்டு சீட்டை வாங்கி அப்படியே சில்வர் டம்ளருக்குள் போட்டவர். அரிச்சந்திர புராணத்தை மனமுருகி பாடத் தொடங்கினார். 

புன்கணுற் றரம்பை மாதர் வருந்தவும் புந்தி செய்யா
வன்கண னிரக்க மில்லான் மடித்தவாய் வெடித்த சொல்லான்
றன்கணன் பில்லான் பொல்லான் றறுகணன் விலைகொண்
                                        டாள்வோன்
இன்கணில் லாதாள் பாரி யிவனிலும் கொடிய பாவி.

அடியினால் அஞ்சி மைந்தன் அனந்தலைப் பயமு ணர்த்த
விடியுமுன் னெழுந்தி ருந்து விளைபுலங் களைப றித்துக்
கடிவனத் தடகு கொய்து காட்டமும் சமிதை யும்பொன்
முடிபுனை தலையில் வைத்து முறைமுறை வருமந் நாளில்.

கூட்டம் “ஓ ஓ” வென்று கூக்குரல் இட்டது. லோகிதாசனைச் சிதையில் கிடத்தி சந்திரமதி அரிச்சந்திரனிடம் கதற செஞ்சேனைத் தோழர்கள் செய்வதறியாது நின்றார்கள். எழிலன் பொதுச் செயலாளர் முகத்தை பார்த்தார், அவர் முகம் எந்த சலனமும் இல்லாமல் இருந்தது. யார் எவ்வளவு கத்தினாலும் முப்பத்தைந்து நிமிடம் பாடிவிட்டுத்தான் ராமநாதன் கீழே இறங்கினார்.

எழிலனுக்கு சிறுகூடல் பட்டி ராமநாதன் தன்னை கமிட்டிக் கூடத்தில் சிலுவையில் ஏற்றுவதற்கான எல்லா ஏற்பாட்டையும் செய்து விட்டார் என்று தெளிவாகத் தெரிந்தது. மத்திய கமிட்டி வரை பிரச்சனை போகும்.

எழிலன் கூட்டத்தில் கடைசியில் நின்றிருந்தவரைக் கூர்ந்து பார்த்தான். பரிட்சயமான முகமாய் இருந்தது. ஞாபகத்தில் பொருத்திப் பொருத்திப் பார்க்க, சட்டென பிடி கிட்டியது. Q- BRANCH டி.எஸ்.பி சண்முகம் பழைய ஆள். நிச்சயம் அவருக்குப் பொதுச்செயலாளரைத் தெரியும். எல்லாவற்றையும் கூர்ந்து பார்த்தவாறு நின்றிருந்தார். எழிலனுக்குப் பதற்றமாய் இருந்தது. 

கோலாட்டக்காரர்கள் நிகழ்வில் பாட்டு ஏதும் இல்லாததால் பிற்போக்கு, நிலப் பிரபுத்துவம், முதலாளித்துவம், என்று சிக்காமல் கோலாட்டமாடி கீழிறங்கினார்கள்.

எழிலன் தாமஸிடம்

“நம்ம தப்புறதுக்கு ஒரேவழிதான் தோழர். மொத்த நிகழ்ச்சியும் பாட்டே இல்லாமல் வெறும் மியூசிக்னா தப்பிப்போம்” 

அடுத்து மேடையேறிய வாடிப்பட்டி குழு அதிர விட்டார்கள். எழிலனுக்கு கொஞ்சம் ஆசுவாசமாய் இருந்தது. வாடிப்பட்டி குழு முடிக்கும் தருவாயில் இருக்க மேடைக்கு பின்னால்  இருந்து “டேய்” என்று ஆங்காரமான  கூச்சல் கேட்க வாடிப்பட்டிக்காரர்கள் அடிப்பதை நிறுத்த பின்புறம் இருந்து கும்மி குழுவின் தலைவி பிச்சையம்மாள் உக்கிரமாய் மேடையை நோக்கி ஓடிவந்தாள். பின்னாலேயே அவள் குழு அவளைத் துரத்திக்க்கொண்டு ஓடி வர

“டேய் ஆத்தாளுக்கு மரியாதை இல்லாம என்னடா செய்றீங்க ? எனக்குப் படையல் இல்ல, சாராயம் இல்ல, மால மருவாதி இல்ல… நீ வாட்டுக்கு  நடத்திக்கிட்டு இருக்க”.

பிச்சையம்மாளை 4 பேர் பிடித்திருந்தாலும் ஆங்காரமாய்த்  திமிறினாள். சின்னப்பிள்ளை போல் துள்ளினாள். வாடிப்பட்டிக்காரர்களைப் பார்த்து அடிங்கடா என்று அதிகாரமாய்  கட்டளையிட அவர்கள் பவ்யமாய் பணிந்து  அடிக்க ஆரம்பித்தார்கள்.

கும்மிக்குழுக்காரர்கள்  “ஆத்தா  மலையேறு ஆத்தா , மலையேறாத்தா.. உனக்கு என்ன வேணும்னாலும் சொல்லு பரிகாரம் செய்யுறோம்”.

பிச்சையம்மாள் அங்கும் இங்கும் ஓடினாள், நாக்கைக் கடித்தாள், உறுமினாள் அதற்குள் யாரோ சூடத் தட்டும் திருநீறும் கொண்டு வந்தார்கள். பிச்சையம்மாள் கீழே இறங்கி ஓட  ஆரம்பித்தாள்.

மாற்று அமைப்புக் காரர்கள்  “வாழிய வாழிய பாட்டாளி வர்க்கமே” என்று கோரஸாய் பாடினார்கள்.

சூடத்தைக் காட்டி பிச்சையம்மாளை மலையேற்ற முயற்சிக்க அவள் பக்க வாட்டில் ஒரு தினுசாய்  எகிறி எகிறி குதித்தாள். பொதுச்செயலாளர் கழிப்பறைக்கு போவதற்காக எழ அவள் அவர்மீது திருநீறையும் குங்குமத்தையும் வீசியபடியே

“ஆத்தா வந்திருக்கேன் நீ எங்கடா போற”

பொதுச் செயலாளர் முகத்தில் திருநீறும் குங்குமம் அப்பியது. அவரைத் தடுப்பது போல் பிச்சையம்மாள் நின்று கொண்டிருந்தாள். அவர் அதைத் துடைக்க முற்பட

“டேய் ஆத்தா துன்நூறயே நீ துடைப்பியாடா”

பொதுச்செயலாளர் அப்படியே அமர்ந்தார்.

பிச்சையம்மாளின் சன்னதம் கோலாட்டக் குழுவிற்கும் தொற்ற அங்கிருந்து இரண்டு பெண்கள் “ம்ம்ம்ம் “என்ற அங்காரா கூச்சலோடு முறுக்கிக் கொண்டு ஒருவரை ஒருவர் கடித்துக் குதறுவது போல, பக்கத்தில் வருவதும் விலகுவதுமாய் இருந்தனர்.

கோலாட்டக் குழுவில்  இருந்து வந்த சாமி சூடத் தட்டை பிடுங்கி  வீசியது. கோலாட்டக் குழு சுப்பு பிச்சையம்மாள் முன் பணிந்து “ஆத்தா  ஆத்தா” என்று அரற்றியபடி அவள் முகத்தில் தண்ணீரைத் தெளித்தபடி

“ஆத்தா என்ன கொறைனு சொல்லு ஆத்தா செஞ்சறோம் , சொல்லாத்தா ” 

கூட்டத்திலிருந்து ஒரு குரல்

“அப்படியே ஏக இந்திய புரட்சி எப்போ நடக்கும்னு ஆத்தாகிட்ட கேளுங்க”

எழிலன் குரல் வந்த திசையைக் கவனித்தான். அது யாரென்று அவனுக்குத் தெரியும். தமிழ் தேசிய அமைப்பான “தமிழர் ஒற்றுமை” ஆட்கள்தான் அந்தக் குரலுக்குச் சொந்தக்காரர்கள். இவர்கள் எழிலனின் அமைப்பான செஞ்சேனை “நாட்டுப்புற கலைவிழா என்று அறிவித்தவுடனே

“நாட்டுப்புற கலைவிழான்னா அது என்னது? தமிழர் கலைவிழான்னு சொல்லு. அகில இந்திய புரட்சி பேசினா கேரளா, ஆந்திரா, கர்நாடகான்னு எல்லா மொழியையும் கலை நிகழ்ச்சி நடத்து. புரட்சி நடத்த தமிழன் வேணும் தமிழ் வேணும் ஆனா தமிழர் கலைவிழான்னு சொல்ல மட்டும் வாய் வராது. தமிழும், தமிழனும் என்ன  கக்கூஸ் வாளியா? நீங்க நெனைச்ச  நேரத்துல எடுக்கறதுக்கும் வைக்கறதுக்கும்”.

இப்படி சரமாரியான கேள்விகள் எல்லா அமைப்பு தோழர்களும் கூடும் செல்லூர் அறுபதடி சாலையிலிருக்கும் பாண்டியன் டீ  ஸ்டாலில் கேட்கப்பட்டன. 

கழிப்பறைக்குப் போன, பொதுச்செயலாளர் பக்கவாட்டு வழியாக குங்குமம் திருநீறை அழித்த முகத்தோடு வெளியே வந்தார். டி.எஸ்.பி சண்முகம் அவரைக் கூர்ந்து பார்த்தவாறு பக்கத்தில் வர, எழிலன் எதோ நடக்கப் போகிறதென பதட்டமாய் வாசலை நோக்கிப் போகவும், தோழர் சிக்கந்தர் ஆட்டோ வரவும் சரியாக இருந்தது. பொதுச்செயலாளர் அதில் ஏறிப் போக, டி.எஸ்.பி யோசனையோடு போகும் ஆட்டோவையே சிகரெட் பிடித்தபடி பார்த்துக்கொண்டிருந்தார்.

பொதுச்செயலாளர் எழிலனுக்கு ஒரு துண்டு சீட்டு மாத்திரம் அனுப்பி இருந்தார்.

“நிகழ்ச்சியை உடனே முடித்து கொள்ளவும்”. 

சாமியாடிகள் அடங்க ஒன்பது மணியாகிவிட்டது. செஞ்சேனை அமைப்பு தோழர்கள் காரல் மார்க்ஸ் காலத்தில் இருந்து பாடும் பாடலை பாடத்  தொடங்கினார்கள்.

“பாரடா பாட்டாளியே 

விண்ணில் பறக்குது  செங்கொடியே”

 பிச்சையம்மாள் அடங்கி ஓய்ந்து ஓரமாக டீ  குடித்து கொண்டிருந்தாள். இந்தப் பாட்டை கேட்டவுடன்

“இந்த பாட்ட நான் சினிமாவுல கேட்டிருக்கேனே”

என்று சொல்ல, தாமஸ்

“கிழவிக்குக் கொஞ்சம் சுகர் கூடிருச்சுனு நினைக்குறேன் அதான் பிரச்சனனு நினைக்குறேன் தோழர்”.

எழிலன் “இல்ல தோழர் நம்ம  கொஞ்சம் உப்பு கொறவா சாப்பிடுறோமோனு சந்தேகமா இருக்கு”.

தோழர்களின் பாடலோடு கலை  விழா  முடிந்தது என அறிவித்தார்கள். 

மாற்று அமைப்புகள் மென்ஷ்விக், விடுதலைப் பாதை, தங்கள் பத்திரிகைகளில் இந்த நிகழ்ச்சியை கேலி செய்து, “செஞ்சேனை எனும் சிவப்பு சாமியாடிகள்” “புரட்சி எப்பவரும் ஆத்தா?” எனக் கட்டுரைகள் எழுதினார்கள்.  

செஞ்சேனை தோழர்கள் பாண்டியன் டீ ஸ்டால் வரும்பொழுது இந்த கட்டுரைகள் உரத்த குரலில் அவர்கள் முதுகுக்குப் பின்னால் வாசிக்கப்பட்டது.

தலைமைக் கமிட்டி கூடி எழிலன் மற்றும் தோழர்களை சுய விமர்சனம் செய்து கொள்ளச் சொன்னது. இறுதியாக நிலப்பிரபுத்துவ மதிப்பீடுகள் கொண்ட குழுக்களைச் சேர்த்தது தான் பிரச்சனை என்றும், பாட்டாளி வர்க்க பண்பாட்டோடு கூடிய குழுக்களைக் கண்டுபிடித்து அழைத்து வராததுதான் நிகழ்ச்சியின் தோல்விக்குக் காரணம் என்று வலியுறுத்தப்பட்டது.

எழிலன் “அப்படியொரு குழு எங்கேயிருக்குனு சொல்லியிருந்தீங்கனா உடனே பார்த்து அட்வான்ஸ் கொடுத்திருப்போம்”.

கமிட்டி அதைப் பொருட்படுத்தாமல் அடுத்த பிரச்சனையை பேசத் தொடங்கியது.

தேநீர் இடைவேளையில் தாமஸிடம் தோழர் எழிலன்

“தோழர் அன்னைக்கு சாமி வந்த கிழவிதான் பொதுச்செயலாளர காப்பாத்தி விட்டுச்சு தெரியுமா”.

“எப்படி தோழர்”

“பொதுச் செயலாளர் திருநீறையும் குங்குமத்தையும் அழிக்கிறேன்னு முகமெல்லாம் கழுவி விட்டுக்கிட்டு வர, Q -BRANCH டி.எஸ்.பி சண்முகத்துக்கு அடையாளம் தெரியல, அவரு சந்தேகப் பட்டு கேட்கிறதுக்குள்ள பொதுச்செயலாளர் போயிட்டாரு.”

“அப்ப புரட்சிக்கு சாமி ஆதரவாத்தான் இருக்கு”

“அதனாலதான் புரட்சி வராமயும் பார்த்துக்கிருது போல”

இருவரும் உரக்க சிரிக்க, கமிட்டி கூட்டம் நடக்கும் அறையிலிருந்து யாரோ ”உஷ், உஷ்” என்று குரல் எழுப்பினார்கள். 

சாம்ராஜ்

சாம்ராஜ் (மே 26, 1972) தமிழில் கவிதைகள் கட்டுரைகள், சிறுகதைகள் மற்றும் சினிமா விமர்சனங்கள் எழுதிவரும் எழுத்தாளர். சென்னையில் வசிக்கிறார். திரைத்துறையில் உதவி இயக்குநராக பணியாற்றி வருகிறார். அங்கதமும் பகடியும் கொண்ட கதைகளையும் கவிதைகளையும் எழுதுபவர்.

தமிழ் விக்கியில்

உரையாடலுக்கு

Your email address will not be published.