பிளாக்பெர்ரி பழங்களைப் பறித்தல்
ஆகஸ்ட் மாத இறுதியில், கடும் மழையும் சூரியனும்
ஒரு வாரம் முழுக்கத் தொடர, பிளாக்பெர்ரிகள் பழுக்க ஆரம்பிக்கும்.
இறுகிய முடிச்சுப் போன்ற, சிவப்பு மற்றும் பச்சை நிறக் காய்கள் நடுவே
முதலில் ஒரேயொரு ஊதா நிறத் திட்டு தெரியும்.
நீ அந்த முதல் பழத்தை உண்டாய். அதன் சதை இனித்தது
கெட்டியான வைன் போல: அதனுள்ளிருந்த கோடையின் ரத்தம்
நாக்கில் கறையாய் படிந்து ஆசையை தூண்டியது
மேலும் பறிப்பதற்கு.பிறகு, சிவப்பு பழங்களிலும் மைநிறம் ஊற அந்த பசி
நம்மை பால் கலன்கள், பட்டாணி டப்பாக்கள், ஜாம் குடுவை இவற்றோடு
காட்டு ரோஜாக்களின் முட்கள் தோலைக் கீறும், ஈரப்புற்கள் நம் காலணிகளை அழுக்காக்கும் இடங்களுக்கு அனுப்பியது
வட்டமான வைக்கற்புல் வெளிகள், சோளக்காடுகள் மற்றும் உருளைக்கிழங்கு வயல்கள்தோறும்
நாம் சுற்றி அலைந்தோம். உலோகக் களன்கள் நிறைகிறவரையில் பழங்கள் பறித்தோம்.
க்ளிங்கென்று ஒலியெழுப்பிய கீழ்பகுதி பச்சைப் பழங்களால் நிறைய
மேற்பகுதியில் பெரிய கருத்த உருண்டை பழங்கள் குவிந்தன,
ஓரு தட்டு முழுக்க கண்களை அடுக்கி வைத்தது போல. நம் கைகள் எரிச்சலில் காந்தலெடுத்தன,
முட்கள் குத்தி.நம் உள்ளங்கைகள் பிசுபிசுப்பேறின,நீலத்தாடிக்காரனின் உள்ளங்கைகளைப் போல.
புதிய பெர்ரி பழங்களை நாம் தொழுவத்தில் பதுக்கினோம்.
ஆனால் தண்ணீர்தொட்டி நிறைந்ததுமே, நம் கண்களில் பட்டுவிட்டது, ஒரு ரோமம்,
ஓர் எலியின் வண்ணத்தில் பூஞ்சை. நம் சேகரிப்பை ஒட்டி அரிக்கத் தொடங்கிற்று.
பழச்சாறிலும் வாடையடிக்கத் துவங்கியது. புதர்ச்செடிகளிலினின்று பிரித்து கொண்டு வந்ததுமே,
பழம் நொதிக்கலாகிற்று.இனிப்பான சதை புளிக்கத் தொடங்கியது.
எனக்கு உடனடியாக அழத் தோன்றிவிடும். இது நியாயம் அல்ல.
அழகிய கொள்கலன்கள் முழுக்க அழுகல் நாற்றம் எழுவது.
ஒவ்வொரு வருடமும் அப்படி நடக்கக்கூடாது என விரும்புவேன், அப்படித்தான் நடக்கும் என்று அறிந்தே.
*நீலதாடிக்காரன் – பிரெஞ்சு நாட்டுப்புறக் கதைகளில் வரும் கதாபாத்திரம். மனைவிகளை கொலை செய்பவன்.
பாடல்
குறுக்குச் சாலைக்கும் மையச் சாலைக்கும் நடுவே
உதட்டுச் சாயம் பூசிய பெண் போல ஒரு ரோவன் செடி.
நாணற்புதர்களின் மத்தியில்
நீர் சொட்டும் ஈரமான தொலைவில் ஆல்டர் மரங்கள்.
அந்த வட்டாரத்தின் சேற்று பூக்களும் அங்கே இருக்கின்றன
கூடவே, துல்லியமான சுருதியில் அழிவற்ற சூரியகாந்தி மலர்களும்.
உடனே, அந்த தருணத்தில் பறவை பாடத் தொடங்குகிறது
சுற்றி நிகழ்பவையின் இசைக்கு மிக நெருக்கமாக.
1.1.87
ஆபத்தான நடைபாதைகள்.
ஆனால் இந்த வருடத்துப் பனியை நான் எதிர்கொள்வது,
என் தந்தையின் கைத்தடியினால்.
தீபகற்பம்
இதற்கு மேல் சொல்வதற்கு ஒன்றுமேயில்லாதபோது, வெளியேறி வெறுமனே வாகனத்தை ஓட்டிச் செல்லுங்கள்
தீபகற்பம் முழுக்க ஒரு நாளில் சுற்றுங்கள்.
வானம் உயரமாக இருக்கிறது , ஓடுபாதைக்கு மேலே இருப்பது போல
நிலத்திலோ அடையாளச் சின்னங்களே இல்லை. எனவே, நீங்கள் எங்கும் போய் சேர முடியாது
எனினும் கடந்து செல்லுங்கள், சறுக்கும் நிலச்சரிவின் பாதைகளில்.
அந்திவேளையில், தொடுவான் கோடுகள் கடலையும் மலைக்குன்றையும் விழுங்குகின்றன.
உழப்பட்ட நிலம் வெள்ளையடித்த வீட்டுக் கூரையை மூடுகிறது.
உடனே, நீங்கள் மீண்டும் இருட்டில் விழுகிறீர்கள். இப்போது நினைவில் மீட்டுங்கள்.
ஒளியில் மின்னும் கடற்கரை. மரத்துண்டின் நிழல்.
கந்தலாய் துண்டுப்படும்படி அலைகள் திரும்பத் திரும்ப மோதும் பாறை.
செயற்கைக் கால்கள் போல தம் கால்களையே பகட்டாக ஒடித்து நிற்கும் பறவைகள்.
பனிமூட்டத்துக்குத் தம்மை உயர்த்தி நகர்த்தும் தீவுகள்.
கடைசியில், இன்னமும் சொல்வதற்கு ஒன்றுமேயில்லாமலேயே,வாகனத்தை வீடு நோக்கி ஓட்டுங்கள்.
ஒரேயொரு வித்தியாசம். அனைத்து நிலக்காட்சிகளையும் நீங்கள் புரிந்து கொள்ள ஆரம்பிப்பீர்கள்
இதன்வழியே: பொருட்கள் தம் சொந்த வடிவில் களங்கமில்லாமல் காணக் கிடைக்கும்,
நீரும் நிலமும் தொலைதூர முடிவில் இருக்க.
இன்றிரவு விக்லோவிலும் ஒரு நாய் அழுது கொண்டிருந்தது
மனிதர்கள் மரணத்தை பற்றி அறிந்துகொண்டதும்
அவர்கள் ஒரு செய்தியோடு அந்த நாயை சுக்வுவிடம் அனுப்பி வைத்தார்கள்:
மீண்டும் ஜீவிதத்தின் வீட்டுக்குத் திரும்ப அவர்கள் அனுமதி கோரினார்கள்
எரிந்த மரக்கட்டை புகையாய் மறைவது போலவோ அல்லது
சாம்பல் காற்றில் கரைந்து ஒன்றுமில்லாமல் ஆவது போலவோ
என்றென்றைக்குமாய் தொலைந்துபோக அவர்கள் விரும்பவில்லை
மாறாக, தங்கள் ஆன்மாக்கள் அந்திக்கருக்கலில் மந்தையாய் அலைவதைப் பார்த்தார்கள்
கூவியபடி அவைச் சென்றன, அதே பழைய சேவல்கள் நோக்கியும்
ஒவ்வொரு நாளும் தோன்றும் அதே பழைய சிறகு நீட்டல்கள் மற்றும் வெளிச்சக் காற்றை நோக்கியும்
மரணம் என்பது காட்டில் செலவழிக்கும் ஓர் இரவை போல இருக்க வேண்டும்
முதல் வெளிச்சத்திலேயே அவர்கள் ஜீவிதத்தின் வீட்டுக்கு திரும்ப வேண்டும்
(இவை எல்லாவற்றையும் அந்த நாய் சுக்வுவிடம் சொல்ல வேண்டும்)
ஆனால் நடுவே மரணமும் மனிதர்களும் அந்த நாய்க்கு இரண்டாம்பட்சமாகிவிட்டது
பட்டப்பகலில் நதியின் தொலைதூரக் கரையில் நின்று
தன்னை பார்த்து குரைத்த இன்னொரு நாயை நோக்கி
அது குரைக்கத் தொடங்கி வழி மாறிவிட்டது
இப்படியாகத்தான் சுக்வுவை முதலில் வந்தடைந்தது, தேரை
அந்த நாய் சொல்ல வேண்டியது
ஆரம்பத்திலேயே தேரையின் காதில் விழுந்திருந்தது. “மனிதர்கள்”, என்றது தேரை
(இவ்விடத்தில் தேரை முழுமையாக நம்பப்பட்டது)
“மனிதர்கள், மரணம் என்றென்றைக்குமாய் நிலைத்திருக்க விரும்புகிறார்கள்”
பறவைகள் உடலில் மனித ஆன்மாக்கள் தன்னை நோக்கி
சூரிய அஸ்தமனத்தில் எழும் கரும்புள்ளிகள் போல வருவதை சுக்வு கண்டார்
ஜீவிதத்தின் வீட்டுக்குத் திரும்ப முடியாத பாதையில்
மரங்களோ பறவைகளோ இல்லாத இடத்துக்கு அவை சென்றன
சுக்வுவின் மனம் ஒரே நேரத்தில் ஒளியில் சிவந்தும் இருட்டாகவும் மாறியது
அந்த நாய் மீண்டும் வந்து சொல்லக்கூடிய எந்த விஷயமும்
சுக்வுவின் அப்பார்வையை மாற்ற முடியாது.
மகத்தான உயிர்களையும் மகத்தான காதல்களையும் மறையச் செய்தது பேரொளி.
தேரை சேற்றில் இருக்க, சவத்தின் வீட்டுக்குப் பின்னால் அந்த நாய் இரவெல்லாம் ஓலமிடுகிறது.
*நைஜீரியா நாட்டின் இனக்குழுகளில் ஒன்றான இக்போவின் (Igbo) கடவுள் சுக்வு(Chukwu). சூரிய வடிவான அக்கடவுள் பற்றிய தொன்மத்தின் மறுஉருவாக்கம் இக்கவிதை. விக்லோ என்பது ஐயர்லாந்தில் ஒரு மாவட்டம்
கிராப்பிகளுக்கு ஓர் இரங்கற்பாடல்
எங்கள் கனத்த மேலங்கிகளின் பாக்கெட்டுகள் முழுக்க பார்லி விதைகள் நிறைந்திருந்தன.
எங்கள் சொந்த நாட்டிலேயே நாங்கள் திடீரென்று அவசரமாக இடம்பெயர வேண்டியிருந்தது.
இடப்பெயர்விலோ சமையற்கட்டுகள் கிடையாது. ஓய்வு முகாம்கள் கிடையாது.
பாதிரியாரும் விலைமகளோடு புதரில் ஒளிந்திருக்க வேண்டும்.
அணிவகுப்புகளில் பரிச்சயமில்லாத மக்கள் –பயணத்தில்
ஓவ்வொரு நாளும் புதுப்புது சூழ்ச்சிகள் நிகழ்வதைக் கண்டுபிடித்தோம்
ஈட்டிகளால் குதிரை கடிவாளங்களையும் சிப்பாய்களையும் குத்தித் தள்ளிவிட்டு முன்னேறினோம்
கால்நடைகளை காலாட்படைக்குள் துரத்திவிட்டு
குதிரைப்படைகளை வீழ்த்துவதற்காக வேலிகளூடே பின்வாங்கினோம்
அதுவரை, வினிகர் மலையில் விதியின் கடைசிச் சந்திப்பு எங்களுக்காய் காத்திருந்தது
பீரங்கிகள் நோக்கி கதிர் அரிவாள்களை வீசியபடி ஆயிரக்கணக்கானோர் மடிந்தனர்
மலைக்குன்று சிவப்பாய் மினுங்கியது, உடைந்த மனித அலையில் மூழ்கி.
மூடுதுணியோ சவப்பெட்டியோ இல்லாமல் எங்களை அவர்கள் புதைத்தார்கள்
பிறகு ஆகஸ்ட் மாதம் எங்கள் கல்லறையிலிருந்து பார்லி விதைகள் முளைத்தெழுந்தன.
* பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிராக ஐரிஷ் போராளிகள் 1798ல் முன்னெடுத்த கிளர்ச்சியையும் அதில் இறந்தவர்களையும் பற்றியது இக்கவிதை. உயர்குடிகளின் செயற்கை தலைமுடி அணியும் வழக்கத்திற்கு எதிராக பதினெட்டாம் நூற்றாண்டில் ஐரிஷ் தேசியவாதிகள் கிராப் முடி வெட்டிக் கொண்டார்கள். அதனால் அவர்களுக்கு “கிராப்பி” (Croppy) என்று பட்டப் பெயர் வந்தது.
போர் கவிதை
மனிதர்கள் துயருறுகிறார்கள்.
ஒருவரையொருவர் கொடுமைக்குள்ளாக்குகிறார்கள்.
மனிதர்கள் காயப்படுகிறார்கள். கடினமாகிறார்கள்.
ஒரு கவிதையோ அல்லது ஒரு நாடகமோ அல்லது ஒரு பாடலோ
நிகழ்த்தப்பட்ட, அனுபவிக்கப்பட்ட
ஒரு தவறை முழுமையாக சரி செய்துவிடமுடியாது
வரலாறு சொல்கிறது,
கல்லறையின் இந்தப் பக்கம் நின்று நம்பிக்கை கொள்ளாதீர்கள்
ஆனால், வாழ்விலே ஒருமுறை
நீண்ட காலம் ஏங்கிக் காத்திருந்த
நீதியின் அலை உயரே எழும்
அப்போது வரலாறும் நம்பிக்கையும் இசைந்து செல்லும்
எனவே பழிவாங்குதலின் தூரத்து எல்லையில் இருந்து
அந்த மாபெரும் கடல் மாற்றத்திற்காக நம்பிக்கை கொள்ளுங்கள்
தொலைதூரக் கரையை
இங்கிருந்து அடைந்துவிட முடியும் என நம்புங்கள்
அற்புதங்களில் நம்பிக்கை கொள்ளுங்கள்
தீர்வுகளிலும் மாயக் கிணறுகளிலும் நம்பிக்கை கொள்ளுங்கள்
அற்புதத்தை சுய-சிகிச்சை என்று அழையுங்கள்
உச்சரிப்போ சுய-வெளிப்பாடு
உணர்ச்சியையோ இரண்டு தடவை பார்க்க வேண்டும்.
தீ, மலை மேல் நிற்குமெனில்,
மின்னலும் புயலும் நிகழுமெனில்,
வானிலிருந்து கடவுள் பேசுகிறாரெனில்,
அதன் அர்த்தம், புதிய வாழ்க்கை தன் பருவத்தில் எழுப்பும்
பிறப்பின் அழுகையையும் கூக்குரலையும்
யாரோ ஒருவர் கேட்டுக் கொண்டிருக்கிறார் என்பதே
அதன் அர்த்தம், வாழ்விலே ஒருமுறை
நீதி உயரே எழும் என்பதே
அப்போது வரலாறும் நம்பிக்கையும் இசைந்துச் செல்லும்
சீமஸ் ஹீனி
(Seamus Heaney 1939-2013)
ஐயர்லாந்து நாட்டைச் சேர்ந்த, சீமஸ் ஹீனி, 1995ம் வருடம் இலக்கியத்துக்கான நோபல் பரிசை வென்றவர். ஐயர்லாந்து நாட்டின் கலாச்சார அடையாளங்களில் ஒருவரான திரு.ஹீனி, ஐயர்லாந்தில் வில்லியம்.பி.யீட்ஸ்க்கு பிறகு தோன்றிய மிக முக்கியமான கவிஞர் என்று விமர்சகர்களால் பாராட்டப்பட்டவர். அமெரிக்க அதிபர் ஜோ பைடனால் அடிக்கடி மேற்கோள் காட்டப்படும் அளவுக்கு சீமஸ் ஹீனியின் பிரபலம் இருக்கிறது.
மிகவும் அருமையான மொழி பெயர்ப்புக்கவிதை வாழ்த்துகள்……