ப்ரெய்லில் ஒரு பிரார்த்தனை – கல்யாண்ஜி
கதிராடும் சோளத்தில்
காற்றாட, மார்கழியின்
பனிவிலகா இளவெயிலில்,
பாட்டெழுதும் மௌனத்தில்
ஆழ்ந்திருந்த சர்ச்சில்
ஆள்உயரச் சிலையில்லை
அலங்காரப் படமில்லை.
பாதிரியார் பைபிளுடன்-
பத்துவிரல் ஆர்கனுடன்
காத்திருக்க
– வந்தார்கள்
கைப் பிரம்பில்
கால் உணர்வில்
கண் படைத்த பாலகர்கள்.
அவர்கள்
பாட்டெல்லாம் சித்திரங்கள்.
ஆரோக்கிய மாதா ஆலயம் – சபரிநாதன்
எனக்கு கிராமத்து தேவாலயங்களைப் பிடிக்கும்.
முற்றத்தில் கோழிக்குஞ்சுகள் விளையாடித் திரிய,
படிகளில் பெண்பிள்ளைகள் பேன் பார்த்து பொழுதோட்ட,
உலரும் ரத்தச்சிவப்பான வற்றல்களின் திருமுன்னில்
அநேகமாய் பூட்டியே கிடக்கும் கூடங்கள்.
அசமந்தமாய் வாயிலில் சருகுக் குருத்தோலைத் தோரணம்
ஓட்டுச்சாய்ப்பில் குடித்தனம் செய்பவை போக்கிரி அணில்கள்.
போன வருடக் குடிலில் குட்டிகளைப் பத்திரப்படுத்திய வெள்ளைப்பூனை
நெட்டி முறிக்கும் நீலப்புள்ளிகள் சிதறிய மஞ்சள் நட்சத்திரம் நோக்கி.
வில்மாடம்,அலங்கார விளக்குகள்,நிலையிருக்கை,எதுவும் இல்லை
குளிர் செங்கற் தளத்தில் அங்கங்கே மிதக்கும் ஒளித்தீவுகள் மட்டுமே.
பழைய ஓடுகளை மாற்ற வேண்டும்.வாரம் ஒருமுறை தூத்துப் பெருக்கவேண்டும்.
மின்சாரம் அற்றுப்போன சாமங்களில் எல்லா வீடுகளையும் போலவே அங்கும்
ஓர் இளைத்த மெழுகுதிரி ஒளி வீசிக் கொண்டிருக்கும்.
அவ்விடம் எவரும் எழுந்தருளவில்லை. தந்தையின் வீட்டில்
வேலையில்லாப் பட்டதாரியென-அவ்வப்போது எடுபிடி வேலைகள் செய்துகொண்டு,
கட்டிக்கொடுக்க வேண்டிய வயதில் தங்கைகளுடன்-வசித்து வருகிறார் ஏசு.
காட்டு வேலை ஓய்ந்து வந்த மரியாள் குளித்து முடித்து
கங்கு வாங்கப் போகிறாள்.மழை வரும் போல் இருக்கிறது
மன்னிக்கவும் ஆனால் நன்றி – ஸ்ரீநேசன்
இறுதியாக இந்த முடிவுக்கு வந்தோம்
ஒரு மினி பால் பாக்கெட் வாங்கி
டீ போட்டுப் பருகினோம்
எங்கள் குழந்தையுடனும் பகிர்ந்து கொண்டோம்
நாங்கள் மௌனமாகக் கடைவீதிக்குச் சென்றோம்
ஆர்ப்பாட்டமான கடைவீதி இன்று
மிக அமைதிக்குள் இருப்பதாக உணர்ந்தோம்
ஆர்ப்பாட்டமான எங்கள் குழந்தைகூட இன்று
மிக அமைதியாக இருக்கிறான் ஒரு
துளி நேரமும் எங்களை விட்டு இறங்காமல் ஒருவர் மாற்றி ஒருவரைத்
தூக்கிக் கொள்ளச் சொன்னான்
மூன்று வயதாகும் அவன்
எங்களைக் கட்டிக் கொண்டேயிருந்தான்
கனமான நைலான் கயிறு
நான்கு மீட்டர்கள் வாங்கினோம்
அத்துடன் குழந்தைக்கு
ஒரு ஐஸ்கிரீம் வாங்கித் தந்தோம்
பின்பு மௌனமாகவே வீட்டிற்குத் திரும்பினோம்
ஒரு சிறிய கதையைச் சொல்லி முடித்தபோது
அவன் உறங்கிவிட்டிருந்தான்
கயிற்றை இரண்டாகத் துண்டித்தோம்
பின்பு நாங்கள் தூக்கிட்டுக் கொண்டோம்
இந்நிலைக்கு எங்களைத் தள்ளிய சமூகத்திடம்
காரணத்தைச் சொல்ல
எங்களுக்கு எந்த முகாந்திரமும் இல்லை
மன்னிக்கவும்
ஆனால்
குழந்தையிடம் சொன்ன கதையில்
அதற்கான காரணத்தைப் புதைத்து வைத்திருக்கிறோம்
முடிந்தால் போய் அவனை எழுப்பிக்
கண்டறிய முயலுங்கள்
நன்றி.
சாம்ராஜ்
சாம்ராஜ் (மே 26, 1972) தமிழில் கவிதைகள் கட்டுரைகள், சிறுகதைகள் மற்றும் சினிமா விமர்சனங்கள் எழுதிவரும் எழுத்தாளர். சென்னையில் வசிக்கிறார். திரைத்துறையில் உதவி இயக்குநராக பணியாற்றி வருகிறார். அங்கதமும் பகடியும் கொண்ட கதைகளையும் கவிதைகளையும் எழுதுபவர்.