தாண்டிச் சென்றதும் பாலத்தைத் தகர்க்க
தங்கள் ஆணையை என் ரத்தத்தில்
எழுதிக் கொண்டிருக்கிறேன்
மேன்மை தங்கியவரே
குதிரைகளின் புட்டங்களில்
குதிரைகளின் முகங்கள் உரச
தாண்டிக் கொண்டிருக்கிறோம்
கடைசிக் குதிரை தாண்டியதும்
பாலம் பறந்து நதியில் மூழ்கும்.
தாண்டாமல் காத்திருக்கிறான் ஒரு வீரன்
தங்களிடம் சேதி சொல்ல
எப்படி மீண்டும் சேர்ந்து கொள்வேன்
என்று அவன் கேட்கவில்லை.
தான் செல்லப் பாலங்கள் இருக்குமா
செய்தி சொன்ன பின் நான் இருப்பேனா
என்று அவன் கேட்கவில்லை
தன் குதிரை இருக்குமா
என்று அவன் கேட்கவில்லை
தாங்கள் இருப்பீர்களா
என்று அவன் கேட்கவில்லை
-சுந்தரராமசாமி
”உள்ளூர் வரலாறு எழுதப்படாமல் ஒருபொழுதும் ஒரு தேசிய வரலாறு முழுமையடையாது”
-மலையாள வரலாற்று ஆசிரியர் கே.எம். பணிக்கர்
வரலாற்றை எப்பொழுதுமே அறிஞர்கள் எழுதுகிறார்கள் அல்லது சமயவாதிகள் எழுதுகிறார்கள், வலதுசாரிகள் எழுதுகிறார்கள், இடதுசாரிகள் எழுதுகிறார்கள். வரலாறு எப்பொழுதும் இவர்களால் தான் எழுதப்படுகிறது.
எப்பொழுதாவது கலைஞர்கள் வரலாற்றை எழுதியிருக்கிறார்களா என்றால் அது கலைஞர்களுடைய வேலை இல்லை தான். ஆனால் எப்பொழுதாவது அவர்கள் தங்களுடைய பால்யத்தை தங்களுடைய வாழ்வை எழுதும் பொழுது, அது எதோ ஒரு வகையில் வரலாற்றின் பாகமாக மாறுகிறது.
தமிழில் கலாப்பிரியாவினுடைய ”நினைவின் தாழ்வாரங்களை” இதற்கு ஆதாரமாக முன் வைக்கலாம். நினைவின் தாழ்வாரங்களினுடைய முக்கியத்துவம் என்னவென்றால். அது கலாப்பிரியாவினுடைய பால்யம் முதல் இளமை, அவர் கல்லூரி முடிந்து வேலைக்கு போகின்ற காலகட்டம் வரை. 1950 களில் தொடங்கி 1970-களின் நடுப்பகுதியில் அது முடிகிறது.
ஆனால் அது வெறும் கலாப்பிரியாவினுடைய வாழ்க்கை மாத்திரம் அல்ல. அன்றைய நெல்லை டவுனினுடைய ஒரு குறுக்குவெட்டு தோற்றத்தைதான் நினைவின் தாழ்வாரங்களின் வழியாக கலாப்பிரியா சொல்கிறார். அதை ஒரு கவிஞன் எழுதும் பொழுது, தமிழினுடைய மகத்தான ஒரு கவிஞன் எழுதும்பொழுது அது ஒரு மகத்தான, அபூர்வமான கண்டுபிடிப்புகளை, அபூர்வமான விஷயங்களை நமக்கு ஒளியூட்டி காட்டுவதாக மாறுகிறது.
அந்தப் புத்தகத்திற்கு நிகராக, நிச்சயமாக காலம் செல்வத்தினுடைய பனிவிழும் பனைவனத்தை நான் சொல்வேன். ஏனென்றால் கலாப்பிரியாவிற்கும் காலம் செல்வத்திற்கும் வேறொரு ஒற்றுமையும் இருக்கிறது.
உமர் முக்தார் திரைப்படத்தில் ஒரு காட்சி. உமர் முத்தார் லிபியாவில் இத்தாலியை எதிர்த்து போராடிய போராளி. யுத்தம் நடக்கும் பொழுது போர் முனையில் ஒருபக்கத்தில் உமர் முக்தார் நிற்பார், மறு பக்கத்தில் முசோலினியினுடைய தளபதி நிற்பார். அவர் அந்தப்பக்கமிருக்கும் உமர் முக்தாரை காண்பித்து கேட்பார். “WHAT IS THE PAST OF MUKHTAR” அவரின் கீழ் நிலை அதிகாரி “HE WAS A TEACHER” என்று சொல்ல, உடனே அந்த தளபதி “ME ALSO ONCE UPON A TIME WAS A TEACHER” என்று சொல்வார். அதுபோல செல்வமும் கவிஞராகத்தான் துவங்குகிறார். ஒரு கவிஞன் அல்லது கலைஞன் தன் பால்யத்தை எழுதிப் பார்க்கும் பொழுது நாம் காண மறந்த கவனிக்க மறந்த பல விஷயங்களை நமக்கு புதிதாக எடுத்துக் காண்பிக்கிறார்கள். அதுதான் ஒரு வரலாற்றை ஒரு வரலாற்று ஆசிரியன் எழுதுவதற்கும், ஒரு கலைஞன் வரலாற்றை எழுதுவதற்குமான வேறுபாடு. வரலாற்று ஆசிரியன் தேர்ச் சக்கரத்தின் பிரம்மாண்டத்தை எழுதுகையில், கலைஞன் அதன் கீழ் நசுங்கும் உயிர்களைப் பற்றி எழுதுவான்.
இது காலம் செல்வத்தினுடைய மூன்றாவது புத்தகம். அவருடைய முதல் புத்தகம் எழுதித்தீராத பக்கங்கள், இரண்டாவது புத்தகம் சொற்களில் சுழலும் உலகம், மூன்றாவது புத்தகம் பனிவிழும் பனைவனம். கால வரிசைப்படி இந்த புத்தகங்களை அடுக்கினால் TRILOGY-யாக முதலில் படிக்க வேண்டிய புத்தகம் பனிவிழும் பனைவனம், அடுத்தாக எழுதித்தீராத பக்கங்கள், மூன்றாவதாக சொற்களில் சுழலும் உலகம். இந்த பனிவிழும் பனைவனம் 1970-களிலிருந்து 1980-கள் வரையிலான ஒரு ஈழத்தை காண்பிக்க கூடியதாக இருக்கிறது. அடுத்ததாக வரக்கூடிய எழுதித்தீராத பக்கங்கள், ஈழத்திலிருந்து பிரான்ஸிற்கு முதல் முறையாக அகதிக் குழுவாக போனவர்கள். அவர்கள் பிரான்ஸில் என்ன மாதிரியான வாழ்க்கை சிக்கல்களை எதிர்கொண்டார்கள் என்பதை சொல்கிறது. அதற்கு பின்னதான காலங்கள் இன்னும் இறுதி யுத்தங்களை பற்றி, இறுதி யுத்த காலம் அல்லது போராளிகள் குழுக்களைப் பற்றி மிக பலம் பெற்ற காலங்களைப் பற்றி பேசுவதாக சொற்களில் சுழலும் உலகம் இருக்கிறது.
புனைவிலக்கியத்தின் மீது மோகம் கொண்ட ஒருவனாகவும், அதே நேரத்தில் வரலாற்றை வாசிப்பதில் ஒரு பெரும் ஆர்வம் கொண்ட வாசகனான எனக்கு. வரலாற்றின் இடைச் சந்துகளில் என்ன நடந்ததென்று அறிந்துகொள்வதில் எப்பொழுதுமே ஒரு ஆர்வம் உண்டு. ஏனென்றால் அதனை வரலாற்று ஆசிரியர்கள் சொல்லப்போவதேயில்லை. அவர்களுக்கு எப்பொழுதும் பெரு வீதிகளும் பெருங் கதையாடல்களும் தான் முக்கியம். வரலாற்றின் ஒரு மாபெரும் சம்பவம் நடக்கும் பொழுது அவர்கள் வரலாற்றின் தலைசிறந்த தனி நபர்களை மட்டும் தான் பேசுவார்கள். அன்றைக்கு ஒரு சாமானியன் என்னவாக இருந்தான் என்பதைப் பற்றி அவர்களுக்கு அக்கறையே கிடையாது. சாமானியர்கள் என்னவாக இருந்தார்கள், சாமானியர்களுக்கு என்ன நடந்தது என்பதை பற்றி வரலாற்று ஆசிரியர்களுக்கு அக்கறையே கிடையாது.
அனந்தரங்கம் பிள்ளையினுடைய நாட்குறிப்பில், மூன்றாவது தொகுதியில் வந்தவாசி யுத்தம் குறித்து எழுதும் பொழுது, ஒரு யுத்தம் என்பது உண்மையாகவே எப்படித்தான் நடக்கும்?, அந்த யுத்தத்திற்கு முன்னதாக மனிதர்கள் என்னமாதிரியெல்லாம் இருப்பார்கள். அந்த ஊர் என்னவாக இருக்கும் என்பது பற்றி ஒரு துல்லியமான சித்திரம் கொடுப்பார்.
யுத்தம் அறிவிக்கப்பட்டவுடன் அந்த ஊரிலிருந்து மக்கள் எல்லோரும் கிளம்புகிறார்கள். அப்போது பிரெஞ்ச் அரசாங்கம் சண்டைக்கு ஆட்கள் தேவைப்படுவார்கள் என்று கருதி யாரும் ஊரைவிட்டு போகக்கூடாது என்கிறது. ஆனாலும் தப்பித்து போகிறார்கள். நான் அனந்தரங்கம் பிள்ளை நாட்குறிப்பை வாசிக்கும் பொழுது தான் ஒரு யுத்தத்திற்கு முன்னதாக, ஒரு இடத்தில் யுத்தம் அறிவிக்கப்பட்டால் அல்லது ஒரு யுத்தம் நடக்கும் பொழுது என்னவாக இருக்கும் என்பதைப் பற்றியான ஒரு சித்திரத்தை முதல் முறையாக அறிகிறேன்.
ஏன்?
அனந்தரங்கம் பிள்ளை வரலாற்று ஆசிரியர் கிடையாது. அவர் அன்றாடம் அவருக்கு தெரிந்த விஷயங்களை எழுதுகிறார். ”வஜ்ரா வஜ்ரம் இல்லாமல், சித்திரகுப்தனுடைய நாட்குறிப்பை போல அன்றாடம் நடந்தவற்றை விஸ்தாரமாக நல்ல மொழியில் எழுதியிருக்கிறார்” என்று அனந்தரங்கம்பிள்ளை நாட்குறிப்பை பற்றி பாரதியார் சொல்கிறார்.
ஆம் அனந்தரங்கம்பிள்ளைக்கு எதைப்பற்றியும் எந்த விலக்கமும் கிடையாது. என்ன நிகழ்கிறதோ, என்ன பார்க்கிறாரோ அதைப்பற்றி எழுதிக்கொண்டு வருகிறார். அதன் வழி நமக்கு ஒரு பெரும் கலைச்செல்வத்தை அருளிச்செல்கிறார். காலம் செல்வத்தினுடைய இந்தப் புத்தகம் வரலாற்றில் பெரும் பாய்ச்சல் நிகழும் பொழுது அன்றைக்கு இருக்கக் கூடிய சாமானியர்களின் வாழ்வு என்னவாக இருந்தது என்பது குறித்த சித்திரத்தை இந்த புத்தகம் நமக்கு கொடுக்கிறது.
ஒரு இனம் ஒடுக்கப்படும் பொழுது அவர்கள் விரட்டப்படும் பொழுது, சாமானியர்கள் என்ன ஆனார்கள், எப்படி அல்லல் பட்டார்கள் என்பதில் தொடங்குகிறது.
1970-களின் நடுப்பகுதியில் தமிழ்நாடு மிகவும் உற்சாகமாக இலங்கை வானொலியைத்தான் கேட்டுக்கொண்டிருந்தது. நானும் இலங்கை வானொலியை கேட்டு வளர்ந்தவன் தான். என்னுடைய குழந்தைப் பருவத்தின் காலை, ”பொங்கும் பூம்புனல்” இல்லாமல் விடிந்ததேயில்லை. என் தலைமுறையின் சினிமாசார்ந்த, பாடல்கள் சார்ந்த ரசனையை வளர்த்ததில் இலங்கை வானொலிக்கு ஒரு பெரும் பங்கு உண்டு.
அன்றைக்கு நாங்களெல்லாம் ரேடியோவில் இந்தப்பக்கம் பாடலை கேட்டுக்கொண்டிருக்கும் பொழுது மறுமுனையில் அந்தப் பாடலை ஒலிபரப்பக்கூடிய பிரதேசத்தில் என்ன நடந்துகொண்டிருந்தது என்பதை அறியும் பொழுது அது பயமுறுத்தக்கூடியதாக இருக்கிறது.
நாங்கள் இந்தப்பக்கத்தில் வெறும் பாடலை மட்டுமே கேட்டுக் கொண்டிருக்கிறோம். அந்தப் பாடல் ஒலிபரப்பக்கூடிய அந்தப் பக்கத்தில் வேறெதோ நடந்துகொண்டிருக்கிறது. அந்த வேறெதோவை செல்வம் கழுத்தில் கர்சீப் கட்டிய, ஒரு துடுக்குத்தனமான ஒரு இளைஞனின் மொழியில் முன்வைக்கிறார்.
இந்த பனிவிழும் பனைவனம் நூலில் தெய்வமகன் திரைப்படத்தில் வரும் சிவாஜி போல மூன்றுவகையான செல்வங்கள் உண்டு.
ஒரு செல்வம் இளமைக் கால சிவாஜி மாதிரி நகத்தை கடித்துக்கொண்டு போக்கிரித்தனமாக பேசுவாரே அந்தமாதிரியான ஒரு செல்வம், பொப்பிசை பாடல்கள் கேட்டுக்கொண்டு பத்மினியை தீவிரமாக காதலிக்கக்கூடிய ஒரு செல்வம். இரண்டாவது செல்வம் கொஞ்சம் முதிர்ந்து நாடுவிட்டு போகலாமா என்று நினைக்கக்கூடிய செல்வம். மூன்றாவது செல்வம் இன்றிலிருந்து அன்றைய காலத்தை பார்க்கக்கூடிய செல்வம். இந்த மூன்றுபேருமே அந்த புத்தகத்தில் இருக்கிறார்கள். சமயத்தில் இந்த மூன்று செல்வங்களுமே ஒரே இடத்தில் சந்திக்க, தெய்வமகன் காட்சி போலவே மூத்த சிவாஜி நடு வயது சிவாஜியை கெஞ்சி கொஞ்சம் மறைந்துகொள்ளச்சொல்லி துடுக்குத்தனமான சிவாஜியோடு உரையாற்றுகிறார்.
பைபிளை தோய்ந்து வாசிப்பவர்களுக்கு கர்த்தரினுடைய அருள் கிட்டுமா என்று எனக்கு உறுதியாகத் தெரியாது. ஆனால் பைபிளை தோய்ந்து வாசிக்கின்றவர்களுக்கு ஒரு அனுகூலம் உண்டு. பைபிளை வாசிக்கின்றவர்களாகவும் அவர்கள் எழுதுகின்றவர்களாகவும் இருந்தால் அவர்களுக்கு அந்த பைபிளினுடைய உரைநடை அல்லது அதன் மொழி அவர்களினுடைய எழுத்தில் இறங்குவதற்கான சாத்தியங்கள் உண்டு.
தமிழில் ஒரு மூன்றுபேரை அதற்கு உதாரணமாக சொல்லலாம். ஒன்று வண்ணநிலவனைச் சொல்லலாம். அவருடைய கடல்புரம், ரெயீனீஸ் அய்யர் தெரு இந்த இரண்டு நாவல்களிலும் பைபிளில் தோய்ந்த நடையை நம்மால் உணரமுடியும். அதுவும் ரெயீனீஸ் அய்யர் தெருவில் இன்னும் கூடுதலாகவே. இன்னொருவர் இரண்டு மூன்று வருடங்களுக்கு முன்பு இறந்துபோன கவிஞர் இளவேனில். அவருடைய கவிதைகளில் பைபிளின் தாக்கம் இருக்கும்.
“நான் சிரிக்கிறேன் என்பதால்
எனக்குக் கவலைகளே இல்லை
என்று நினைக்கிறாய்?
நான் பாடுகிறேன் என்பதால்
ஆனந்த அலைகள்
உதடுகிழித்து ஒழுகுவதாகவா
நீயும் எண்ணுகிறாய்?
இது—
அழமுடியாத
அடிமையின் சிரிப்பு!
அதரம் முழுவதும்
அக்கினிப் பிளம்பு
எனது
புன்னகை ஒவ்வொன்றும்
ஆத்மாவின் மரணம்
ஒரே முறைதான்
மரணம் என்றால்
எனக்கேன் இத்தனை கோப்பை விஷம்?”
தமிழில் கொஞ்சம்பேருக்குத்தான் இது கிடைத்திருக்கிறது. பிரான்ஸிஸ் கிருபாவின் கவிதைகளிளும் அவரது கன்னி நாவலிலும் பைபிளின் வாசம் உண்டு. சமகாலத்தில் சபரிநாதனுக்கும் அது கிட்டியிருக்கிறது. கர்த்தனே மயங்கும் மொழி அவருக்கு உண்டு. காலம் செல்வத்திற்கும் அந்த மொழி கிடைத்திருக்கிறது. அதை சிக்கனமான பைபிளின் நெடி என்று சொல்வேன்.
பனிவிழும் பனைவனத்தில் அன்றைக்கு இருக்கக்கூடிய வாழ்வு, அன்றைக்கு இருக்கக்கூடிய மகிழ்ச்சி, நெருக்கடி, ஒடுக்குதல், போராளி குழுக்களினுடைய துவக்கங்கள். துயர்மிகு புலம்பெயர் வாழ்வினுடைய துவக்கத்தை கோட்டுச் சித்திரமாக செல்வம் தீட்டிக்கொண்டே போகிறார். யாழ்பாணத்தின் அன்றைய கலாச்சாரம். யாழ்பாணத்தின் தூஷனம் என்று சொல்லக்கூடிய அதன் கெட்டவார்த்தைகள். அன்று நிலவிய சாதிய மேட்டின்மைவாதங்கள். வர்க்க வேறுபாடுகள். அன்றைக்கு அவர்களிடமிருந்த கனவுகளும், பொசுக்கப்பட்ட கனவுகளும் என்று எல்லாமே இந்த புத்தகத்தில் விரிகிறது. இதன் பின் அட்டைக்குறிப்பில் அனுபவப் புனைவு என்று ஒரு வார்த்தை கையாளப்படுகிறது. ஒருவகையில் அது சரியே.
இந்த அனுபவப் புனைவில் பழந்தமிழ் பாட்டு, பைபிள், அரசியல், இனப் பிரச்சனை, பகடி, அகதிகள், தொலைந்து போனவர்கள், இனப் பிரச்சனை, ஆயுதக் கனவுகள் என அத்தனையையும், அத்தனை பேரையும் நாம் சந்திக்கிறோம். இப்படியான அடர்த்தியான அனுபவம் தோய்ந்த புத்தகங்கள் தமிழில் மிகமிகக் குறைவு.
இந்த புத்தகத்தில் இரண்டு முக்கியமான சம்பவங்கள் இருக்கிறது. இந்த இரண்டு சம்பவங்களை சொல்வதன் வழியாக, இந்த புத்தகத்தைப் பற்றி வேறுவகையான ஒரு புரிதலை அல்லது இந்த புத்தகம் காத்திரமாக என்ன முன்வைக்கிறது என்பது பற்றி புரிந்து கொள்ள முயல்கிறேன். இந்தப் புத்தகத்தினுடைய ஒரு அத்தியாயத்தில் செல்வம் இரண்டுபேரை பற்றி சொல்லிக்கொண்டு போகிறார்.
ஏமிசர், ஜோசப் என்று இரண்டு பேர். ஏமிசர் என்பவர் சாதியாக ஜோசப்பை விட தாழ்ந்தவர். ஒரு சாதாரண வேலையில் இருப்பவர். ஜோசப் சாதியால் உயர்ந்தவர். அரசு மருத்துவமனையில் பணி. இந்த ஜோசப்பிற்கும் ஏமிசருக்கும் ஒருவிதமான ஏற்றத்தாழ்வான ஒரு நட்பு உண்டு. ஏமிசர் ஜோசப்பிடம் ஆலோசனைகள் கேட்பார். ஜோசப் வழிகாட்டுவார். ஆனால் எல்லாம் அந்த சாதிய இடைவெளியோடு தான். ஏமிசரை எவ்வளவு தூரத்தில் நிறுத்த வேண்டுமென்று அவருக்குத் தெரியும். ஜோசப் சாதி வெறியில் மூழ்கி திளைக்கக்கூடிய ஒருவர்.
இந்த ஏமிசருடைய ஊரில் நிக்கோலஸ் என்ற தலித் இளைஞருக்கு போலீஸில் வேலை கிடைப்பதற்கான முதல் சுற்று முடிந்திருக்கிறது. அப்பொழுது ஜோசப் ஒரு காரியம் செய்கிறார். ஒரு தலித் இந்த ஊரில் இன்ஸ்பெக்டராக வந்தால் உயர் சாதியினர் எல்லோரும் அவர் முன்னால் கைகட்டி நிற்கவேண்டும் என்று சொல்லி கொழும்புவிற்கு பெட்டிஷன் ஒன்றை அனுப்புகிறார். அந்த பெட்டிஷனில் நிக்கோலஸின் குடும்பம் ஒரு கிரிமினல் குடும்பம் என்று எழுதப்பட்டிருக்க, நிக்கோலஸிற்கு அந்த வேலை கிடைக்காமல் போய், அவர் வேறொரு அலுவலகத்தில் பியூனாக பணிக்கு சேர்ந்து, ”எனதருமை யாழ்பாணமே” என்று கவிதை எழுதுகின்றவராக வாழ்வை கழிக்கிறார்.
ஒருநாள் ஜோசப்பிடம் தனது பையனுக்காக யுனிவர்சிட்டி சீட்டிற்காக உதவுமாறு ஏமிசர் கேட்க, கடுமையாக ஜோசப் கோபப்படுகிறார். ”எங்க பையன்களே படித்துவிட்டு வேலையில்லாமல் இருக்கிறார்கள், நீ எப்படி இதை பற்றி கேட்கலாம்” என்று கோபப்படுகிறார். ஏமிசர் தனது மூத்த மகனை எப்படியாவது படிக்க வைக்க வேண்டுமென்ற விஷயத்தில் உறுதியாக இருக்கிறார். அவரது மூத்த மகனுக்கு பல்கலைக் கழகத்தில் பரிந்துரை இல்லாமலே இடம் கிடைக்கிறது. அவரை பல்கலைக் கழகத்திற்கு அனுப்புகிறார். பல்கலைக்கழகத்தில் அவர் நன்றாகவே படிக்கிறார். அங்கு அவர் மகன் ஒரு இக்கட்டான தருணத்தில் தங்களை விட தாழ்ந்த சமூகத்தை சேர்ந்த ஒரு பெண்ணை திருமணம் செய்துகொள்கிறார். அதில் ஏமிசருக்கு கடுமையான கோபம் ஏற்படுகிறது. தன் மகனை வீட்டோடு சேர்த்துக்கொள்ளவே இல்லை. அதை அவர் ஜோசப்பிடம் சொல்லும் பொழுது ஜோசப் அவரிடம் ” நான் அப்பொழுதே சொன்னேன். உன் மகனை பல்கலைக்கழகத்தில் படிக்க வைக்காதே என்று, அதை கேட்காமல் படிக்க வைத்தாய், அவன் உன் பேச்சை கேட்காமல் வேறொரு சமுக்க பெண்ணை திருமணம் செய்துவிட்டான் ” என்று சொல்கிறார். ஆனால் அவருடைய மூத்த மகன் நல்ல வேலையில் சேருகிறார். அவருடைய மனைவியியும் கணவரின் குடும்பத்திற்கு உதவும் மனநிலையில் இருக்கிறார்.
ஏமிசரின் மூத்தமகன் தனது தம்பியை மருத்துவம் படிக்க வைக்க முயற்சி செய்கிறார். அது ஏமிசருக்கு தெரியாது. அச்சமயத்தில் ஏமிசர் திரும்பவும் ஜோசப்பிடம் ஒரு உதவி கேட்கிறார். தன் இளைய மகனுக்கு உள்ளூரில் ஒரு ஆசிரியர் பயிற்சி சார்ந்த ஒரு வேலைக்கு பரிந்துரை செய்யுமாறு கேட்கிறார். ஜோசப் கடுமையாக அந்த உதவியெல்லாம் செய்ய முடியாது என்று சொல்லி மறுத்துவிடுகிறார். இதற்கிடையில் ஏமிசரினுடைய மூத்த மகன் தனது தம்பிக்கு வேலூரில் சி.எம்.சி-யில் மருத்துவ படிப்பிற்கான சீட்டை வாங்கிவிடுகிறார். இந்த விஷயம் ஊரில் எல்லோருக்கும் தெரிந்துவிட அனைவரும் சந்தோசப்படுகிறார்கள். இது ஜோசப்பிற்கு தெரிந்தவுடன் அவர் அதிர்ச்சிக்குள்ளாகிறார். அவர் ஏமிசரை கூப்பிட்டு ” உன் மகனை டாக்டருக்கு படிக்க வைத்தால் அவனும் உனது மூத்த மகனை போல யாரையாவது திருமனம் செய்துகொண்டு உன் பேச்சை கேட்காமல் போய்விடுவான். நான் அவனுக்கு உள்ளூரிலேயே ஆசிரியர் பயிற்சி வேலை வாங்கித்தருகிறேன் ” என்று சொல்கிறார். இப்போது ஒருவிதமாக ஜோசப் என்ன செய்கிறார் என்று ஏமிசருக்கு புரிந்துவிட்டது. வெறுமனே சரி என்று சொல்லிவிட்டு வந்துவிடுகிறார்.
ஏமிசரின் இரண்டாவது மகனுக்கு கல்லூரிக்கு ஆசிரியர் பயிற்சி பணிக்காக, முன்பு அந்தப்பகுதி அமைச்சராக இருந்தவர் மூலம் கோட்டாவில் சீட் வாங்கித்தருவதாக ஜோசப் சொல்லிவிடுகிறார். அவர்கள் ஜோசப்பை போய் சந்திக்கவே இல்லை. ஜோசப்பினுடைய மருமகனே இரண்டு நாள் கழித்து காரில் ஏமிசரின் வீட்டுக்கே வந்து, ” எங்கள் மாமா உங்களுக்காக சொல்லி ஏற்பாடு செய்திருக்கிறார், அமைச்சரைப் போய் பாருங்கள் ” என்று கூப்பிடுகிறார். ஏமிசரின் மகன் நான் வரலில்லை என்று மறுக்கிறார். அப்போது ஜோசப்பின் மருமகன் குரலை உயர்த்தாமல் பேசுகிறார். ”அப்போ நீ அங்கு போய் டாக்ட்டருக்கு படித்துவிட்டு வந்த பிறகு, நீ மருத்துவர் என்று போர்டு போட்டுக்கொண்ட பின் நாங்கள் உன் வீட்டு படியேறி வந்து உன்னிடம் மருத்துவம் பார்க்க வேண்டும் தானே”. என்று சொல்லிவிட்டு போவார்.
அன்றைக்கு இருக்கக்கூடிய சாதியை, யாழ்பாணத்திலிருக்கக்கூடிய சாதிய ஏற்றத்தாழ்வை எவ்வளவு நுட்பமாக அது இயங்கியது என்பதைப் பற்றி அப்பட்டமாய்ச் சொல்கிறது. இதற்கு நேர் மாறாக வேறொருவர் இருக்கிறார். அவர் குட்டியண்ணன் என்ற ராஜேந்திரன். அவரும் இதே புத்தகத்தில் தான் இருக்கிறார். அவர் 1954-ல் பைக்கிலேயே யாழ்பாணம் டவுனிலிருந்து பிரிட்டனுக்கு கிளம்புகிறார். உலகமெல்லாம் அலைந்து ஒன்றரை வருடம் கழித்து லண்டன் போய்ச் சேருகிறார். அங்கு போய்ச் சேர்ந்த குட்டியண்ணனுக்கு ஒருவிஷயம் புரியவருகிறது. பிரிட்டனை விட நார்வே தான் யாழ்பாணத்திற்கு ரொம்பவும் நெருக்கமான நாடென. கடலும் கடல்சார்ந்த தொழிலும், மீன்பிடி வாணிபம் சார்ந்த விஷயங்களில் யாழ்பாணத்திற்கும் நார்வேவிற்கும் நிறைய ஒற்றுமை இருப்பதை கண்டறிந்து நார்வேக்கு போகிறார்.
அங்கு போனபின் ஒருவிதமாக அங்கு வாழப்பழகி அங்கிருக்கக் கூடிய விஷயங்களை எல்லாம் கற்றறிந்து, மீண்டும் அங்கிருந்து தனது பைக்கிலேயே ஒன்பது மாதம் பயணப்பட்டு, உலகமெல்லாம் தொடர்புகளை ஏற்படுத்தி மீண்டும் யாழ்பாணத்திற்கு வருகிறார். அவர் தன்னுடன் ஒரு இருபது நார்வேகாரர்களையும் கூட்டிக் கொண்டு வருகிறார். அவர்கள் இங்கு வந்து நிறைய வேலைகள் பார்க்கிறார்கள். யாழ்பாணத்திலேயே கம்பெனி ஒன்றை தொடங்குகிறார்கள். உன்மையாகவே குட்டியண்ணன் சாதிமதம் பாராமல் அங்கிருக்கக்கூடிய ஆட்களை நார்வேக்கு அனுப்பக்கூடிய பணிகளை செய்கிறார். அப்பொழுது யாழ்பாணத்தில் இரண்டு சாதிகளுக்கு இடையே மோதல் ஏற்பட, குட்டியண்ணனை ஒரு குறிப்பிட்ட சாதிக்கு ஆதரவாக இருக்கச்சொல்கிறார்கள். அதை குட்டியண்ணன் கடுமையாக மறுக்கிறார். குட்டியண்ணனை பயன்படுத்தி ஏராளமான ஆட்கள் நார்வேக்கு போகிறார்கள். அந்த சாதிச்சண்டையின் போது குட்டியண்ணன் “ நான் ஒரு சாதிக்கு ஆதரவாக இருக்க மாட்டேன், இந்த சாதியெல்லாம் இருக்க கூடாது, இந்த சாதிக்கெதிராக போராடவேண்டும் என்று சொல்லித்தான் நார்வேக்கு போய் திரும்பிவந்து இங்கு சில காரியமெல்லாம் செய்யவேண்டுமென்று நினைக்கிறேன். என்னை ஏன் திரும்பவும் அதற்கு ஆதரவாக மாற்றுகிறீர்கள் ” என்று சொல்லி கடுமையாக அதை மறுக்கிறார். அவர்களோடு அவர் ஒருபொழுதும் நிற்கவேயில்லை. இப்படி இரண்டு துருவங்களான சித்திரங்களை காலம் செல்வம் நமக்கு காட்டுவதன் வழி வேறொன்றை நமக்கு சொல்லாமல் சொல்கிறார்.
இப்படிப்பட்ட மனிதர்களும் அன்றைக்கு இருந்தார்கள், இவர்களோடும் சேர்ந்து தான் அன்றைய மேன்மையும், கீழ்மையும் இயங்கின. மதுரையில் எனது தாய்மாமா இருந்தார். அவர் ஒரு பெரும் குடிகாரர். ஒவ்வொரு வாரமும் அவர் என் பாட்டியிடம் வந்து நான் ஒருபொழுதும் குடிக்க மாட்டேன் என்று சத்தியம் செய்வார். அதுபோல இந்த தொடரை எழுதும் பொழுது காலம் செல்வம் ஒவ்வொரு மாதமும் இந்த தொடரை நிறுத்திவிடப் போவதாக என்னை பயமுறுத்திக்கொண்டே இருப்பார். நான் அவரிடம் எழுதுங்கள் எழுதுவதற்கு நிறைய இருக்கிறது என்று சொல்வேன். ஒருவேளை இந்த புத்தகத்தை காலம் செல்வம் எழுதவில்லையெனில், இந்த புத்தகத்தில் சொல்லியிருக்கக்கூடிய ஏராளமான விஷயங்கள் எதுவுமே நமக்குத் தெரியாமலே போயிருக்கும்.
அங்கு அப்பொழுது தான் இனப்போராட்டம் தொடங்குகிறது. இந்த இனப்போராட்டம் தொடங்கும் பொழுது ஒரு சிறிய குழு ஆயுதம் கேட்கிறார்கள். அந்த ஆயுதத்தை கொடுக்கிறவர் அன்றைக்கு சொல்கிறார். “ சாதிப்போராட்டத்திற்காக வாங்கியது, இப்போது இனப் போராட்டத்திற்காக கொடுக்கிறோம், என்ன ஆகப்போகிறதோ ” என்று ஒரு தீர்க்க தரிசனத்தோடு ஆயுதத்தை கொடுக்கிறார்.
ஒரு சுயவரலாற்றை எழுதும் பொழுது என்னவெல்லாம் சொல்லலாம் என்பதற்கு தடைகளை நீக்கக்கூடியவராக, தாண்டக்கூடியவராக காலம் செல்வம் இருக்கிறார்.
இதில் தந்தை செல்வா இருக்கிறார். தங்கமணி இருக்கிறார், குட்டிமணி இருக்கிறார், போராளிகள் இருக்கிறார்கள், ஜே.ஆர். ஜெயவர்த்தனே இருக்கிறார், சில்வா இருக்கிறார், அமிர்தலிங்கம் இருக்கிறார். வரலாற்றின் தலைவிதியை தீர்மானிக்கும் மாந்தர்கள் குறுக்கும் நெடுக்குமாக போய்க்கொண்டிருக்கிறார்கள்.
இதற்குள் அரசியல் இருக்கிறது, வரலாறு இருக்கிறது, புவியல் இருக்கிறது அவர்களுடைய பண்பாடு இருக்கிறது, கலாச்சாரம் இருக்கிறது, துயரம் இருக்கிறது. இப்படி எல்லா விஷயங்களையும் அடுக்கி அடுக்கி வைப்பதன் வழியாக இந்த பனிவிழும் பனைவனம் புத்தகம் தமிழில் ஒரு முன் பின் சொல்லமுடியாத ஒரு புத்தகமாக மாறுகிறது. இதை ஒரு தேர்ந்த பகடியை ரசிக்கக்கூடிய, நுன்னிய எழுத்தை விரும்பக்கூடியவர்கள் அல்லது அரசியலூடாக சேர்ந்த ஒரு எழுத்தை விரும்பக் கூடியவர்களுக்கு இதனுடைய ஒவ்வொரு வரியிலும் காத்திரமானவைகள் ஒளிந்திருக்கின்றன.
காலம் செல்வத்தினுடைய பனிவிழும் பனைவனம் என்பது ஒரே நேரத்தில் ஒரு தனிமனிதனுடைய வாழ்வையும், அன்றைக்கு அந்த சமூகம் என்னவாக இருந்தது என்பதைப்பற்றியான மிக நேர்த்தியான கலாபூர்வமான ஒரு தேர்ந்த மொழியில் ஒரு சித்திரத்தை முன்வைக்கிறது. இந்த புத்தகத்தை தமிழின் ஒரு மகத்தான அனுபவப் பதிவு என்றே நான் அடையாளமிட விரும்புவேன்.
பனி பெய்கிறது. எங்கு,எப்போது, யார் மீது, எப்படி பெய்கிறது என்பதை பொறுத்துத்தான் அது மகிழ்ச்சிக்குரியதா துன்புறுத்தக்கூடியதா என்று தீர்மானிக்க இயலும். இந்த பனி விழும் பனைவனத்தின் ஊடாக நீங்கள் கோட், குல்லாவோடு போகலாம். ஆனால் அதையும் தாண்டி செல்வம் உங்களை தீண்டுவார். அதுவே இப்புத்தகத்தின் வெற்றி.
சாம்ராஜ்
சாம்ராஜ் (மே 26, 1972) தமிழில் கவிதைகள் கட்டுரைகள், சிறுகதைகள் மற்றும் சினிமா விமர்சனங்கள் எழுதிவரும் எழுத்தாளர். சென்னையில் வசிக்கிறார். திரைத்துறையில் உதவி இயக்குநராக பணியாற்றி வருகிறார். அங்கதமும் பகடியும் கொண்ட கதைகளையும் கவிதைகளையும் எழுதுபவர்.