அவள்
என்னைக் குறுக்காகக் கிழிப்பது
எனக்குப் பிடித்திருக்கிறது.
சிறிய நட்சத்திரத்தைக் கத்தரித்துக் கொண்டுவரும்
என் மகளை,
சிறு மலர்களை வெட்டிக்கொண்டு வரும்
இன்னொரு மகளை,
அப்படித்தான் என்னிலிருந்து தனியே எடுத்தார்கள்.
*
என்னை இரண்டாக மடித்து
வரவேற்பறையின் தொட்டியில் மிதக்கவிட்டனர்,
மீனின் செதில்களின் ஓயாத அசைவுகளைப் போல
என் ஞாபகத்தின் மீதியை
சிறுசிறு குமிழ்களாக வெளியேற்றிக்கொண்டேன்.
விருந்தினர்களை வரவேற்பதற்கும்
கண்ணாடி எல்லைக்குள் சிரித்து வாழ்வதற்கும்
ஞெகிழித்தாள் மீனைப்போல
வெகு சீக்கிரம் பழகிக்கொண்டேன்.
*
ஒரு நாளின் மொத்த அமைதியின்மையையும்
தூக்கிக்கொண்டு
மாலை திரும்பும் வாடிக்கையில்,
ஒரு மரத்திற்குக் கீழே புதிதாய் முளைத்திருந்த செடியிடம்
விசாரித்தேன்.
துயரத்தின் எந்தச் சொல்லை எனக்காகக்
கொண்டுவந்திருக்கிறாய்?
உனது மொத்த வலிகளின் சரிபாதியை
எனது சிறு இலைகளைத் தாங்கி நிற்கும்
மெல்லிய நரம்பில் ஏற்றிவிடு என்றதது.
எல்லா அன்புகளும்
பைத்தியத்தின் மெல்லிய சாயல் கொண்டது தானே!?
*
கடற்கரையில் உலர்ந்திருந்த சிறிய சிப்பியை
தனித்துக்கிடக்குமொரு இதயத்தின் வடிவமாக்கி
தொட்டுணர்வேன்.
ஒரு பேரலையின் கடைசிச் சொட்டில்
மீண்டுமதை கடலுக்குள் எறிவேன்.
எல்லாவற்றையும் தாண்டி
மீண்டும் கரை தொடும்
அதன் வாழ்வின் சாகசத்தை
நினைத்து நினைத்து மகிழ்வேன்.
*
என் எல்லா பிரார்த்தனைகளிலும்
அன்பின் தளர்ந்த ஒரு சொல்லை
ரகசியமாக வைத்திருந்தேன்.
நான் வாடி உதிர்ந்திடும் நாட்களில்
காய்ந்த அதன் வடிவத்தின் ஸ்பரிசத்தில்
மிகச்சொற்பமாக என்னை மீட்டெடுத்துக் கொள்வேன்.
*
கடைசியாக
என்னை இரண்டாகப் பிளந்து பார்த்தார்கள்.
எதையோ நிரூபிக்க முயன்ற போதும்,
உறவு முறியும் வலியில்
கைகளைப் பற்றியபடி
கெஞ்சிக்கொண்டிருந்த போதும்,
என்னைப் பிளந்து
எதையோ தேடிக்கொண்டிருந்தார்கள்.
சிறிய அணைப்பில் நிம்மதி அடைந்திடும்
எனது மனதின் சில்லொன்றையும்
அவர்களிடம் காட்டாமல் பாதுகாத்து விட்டேன்
நான்.
ஜீவன் பென்னி
ஜீவன் பென்னி, தேனி மாவட்டத்திலுள்ள உத்தமபாளையத்தைச் சேர்ந்தவர். சிற்றிதழ்கள், இணையை இதழ்களில் கவிதைகள் தொடர்ச்சியாக எழுதிவருகிறார்.