/

தமிழ் இலக்கியம் ஒரு முழுமையான அறிவியக்கம்

அகழ் மே இதழில் மீண்டும் சந்திக்கிறோம். வருடத்தின் ஐந்தாவது இதழை கொண்டுவருவதில்  மிகுந்த மனநிறைவை அடைகிறோம். தொடர்ந்து எமக்கு கிடைக்கும் வாசக எதிர்வினைகளே தொடர்ச்சியாக இதழைக் கொண்டுவரவேண்டும் என்ற உந்துதலை எமக்குத் தருகிறது. எமக்கு கிடைக்கும் ஆக்கங்களைத் தேர்வு செய்து உரிய ஆசிரியர்களுடன் உரையாடி செம்மைப்படும் இடங்களில் மேலதிக திருத்தங்களை கோரி பெற்று மிகுந்த பொறுப்புணர்வுடன் ஆக்கங்களை வெளியிடுகிறோம். அதனால் மாத இதழாக கொண்டுவருவதில் காலதாமதத்தையும் சந்திக்க நேர்கிறது.

0

இந்த இதழில் எழுத்தாளர் மாஜிதாவின் நேர்காணல் வெளியாகியுள்ளது. தன்னுடைய புனைவுகள் கட்டுரைகள்  வழியாக பேச விரும்பும் மாஜிதா ‘அகழ் ‘ இதழுக்கு நேர்காணல் வழங்க சந்மதித்து இருந்தமை எமக்கு மகிழ்ச்சியைத் தருகிறது. அவருக்கு எம் நன்றிகள்.

0

கடந்தமாதம் எழுத்தாளர் குப்பிழான் ஐ.சண்முகன் மறைந்தார். அவர் சிறுகதை, கவிதை, கட்டுரை மற்றும் மொழிபெயர்ப்பு என இலக்கியத்தில் பன்முகப் பங்களிப்பு செய்த ஈழத்து ஆளுமைகளில் ஒருவர். எழுபதுகளில் யாழ்ப்பாணத்திலிருந்து வெளியான ‘அலை’ சஞ்சிகையின் ஆசிரியர் குழுவினருள் ஒருவராக இருந்தவர். ‘கோடுகளும், கோலங்களும்’ மற்றும் ‘சாதாரணங்களும், அசாதாரணங்களும்’ ஆகிய தொகுப்புக்களின் வழியே நன்கு அறியப்பட்டவர். அவர் இதொகுப்புகளின் வழியேயும் வருங்காலத்திலும் நினைவுகூறப்படுவார். அவருக்கு அகழின் அஞ்சலிகள்.

0

தமிழ் இலக்கியம் என்பது ஒரு முழுமையான அறிவியக்கம். ஆனால் பொதுவாக வாசகர் மனதில் இலக்கியம் என்றால் புனைவிலக்கியம் என்றே பதிந்துள்ளது. இந்த முன் முடிவினை கேள்விக்கு உட்படுத்தும் விதத்தில் ஜா.ராஜகோபாலன் எழுதிய ‘நிலத்தொடு நீரே…’ கட்டுரை அமைந்துள்ளது. தமிழின் சூழலியல் சார் போதத்தை வெளிக்கொணருவதாக அமைந்துள்ளது. இக்கட்டுரையை தலைப்பு கட்டுரையாக வெளியிடுகிறோம்.

0

எழுத்தாளர் சாம்ராஜ் அர்த்தமண்டபம் பகுதியில் கல்யாண்ஜி, சபரிநாதன் , ஸ்ரீநேசன் ஆகியோரது கவிதைகளை தேர்ந்தெடுத்து வாசித்துள்ளார். அத்துடன் அக்கவிதைகளுக்கு இடையிலான தன்னுடைய உணர்வுகள் குறித்தும் பகிர்ந்துள்ளார். வாசகர்கள் இங்கே செவிமடுக்க முடியும். சாம்ராஜிக்கு மிக்க நன்றி.

0

இவ்விதழில் பங்களித்த எழுத்தாளர்கள் ஜா.ராஜகோபாலன்,  ஞானக்கூத்தன், தேவதச்சன், கா.சிவா, க.மோகனரங்கன், ஷங்கர்ராமசுப்பிரமணியன், வாலஸ் ஸ்டீவென்ஸ், ஜனார்த்தனன் இளங்கோ, தினாவ் மெங்கேஸ்டு, நரேன், மற்றும் மாஜிதா ஆகியோருக்கு நன்றிகள்.

உரையாடலுக்கு

Your email address will not be published.